“என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி ரியாக்ட் பண்ற மொழி?” என்றான் புரியாமல்.
“ஒண்ணுமில்லை” என்பதைப் போல் தலையை ஆட்டியவள் மீண்டும் அமைதியாய் சென்று அமர்ந்து கொள்ள, அவனுக்கு ஏதோ புரிவதைப் போல் இருந்தது. அமைதியாய் சென்று குளித்து முடித்து வந்தவன், அவளையும் அழைத்துக் கொண்டு பிரகதியின் அறையை நோக்கி சென்றிருந்தான்.
அங்கு சஞ்சய் எவ்வளவு முயற்சி செய்தும் பிரகதி நிமிர்ந்து கூட அவனைப் பார்க்கவில்லை.
“பிரகதி?” என்று அவன் வம்பாய் அவள் முகத்தை நிமிர்த்த, முகமெல்லாம் கன்றி சிவந்திருந்தது. அவளின் தவிப்பும் மன நிலையும் அவனுக்குத் தெரியாமல் இருக்குமா? அவளுக்கு கொஞ்சமும் குறையாத தவிப்புடன் தானே அவனும் இருந்தான்.
“சொல்லக் கூடிய சூழ்நிலையில் இல்லைமா. இந்த கேஸ் முடிஞ்சதும் சொல்லலாம்னு இருந்தேன். ஆனா அக்யூஸ்ட் உன் வீட்லயே இருப்பான்னு எங்களுக்கும் சத்தியமா தெரியாதுடி” என்றான் சஞ்சய்.
அவர்கள் அறையை சுற்றும் முற்றும் பார்த்தவள்,
“இந்த ரூம்ல கேமரா இருக்கா? அப்போ அவன் தினமும்?” என்று கேட்க வந்தவளின் குரல் நடுங்க,
“இங்க அப்படி எதுவும் இல்லைடி. என்னை நம்பு” என்றான் சஞ்சய்.
“அப்பறம் எப்படி?” என்றாள் அமைதியான குரலில்.
“அது..அன்னைக்கு” என்று அவன் ஆரம்பிக்கும் முன்னரே வந்திருந்தான் தீரன்.
“உள்ள வரலாமா?” என்றவனின் குரலில் பிரகதி பட்டென்று கணவனிடமிருந்து விலக முற்பட, அவனோ அவளை விடாது கை வளைவிலேயே இருத்திக் கொண்டான்.
உள்ளே வந்த தீரன் நண்பனை தீர்க்கமாய் ஒரு முறை பார்த்துவிட்டு,
“இங்க பாருங்க பிரகதி..! அந்த நாய் சொன்ன மாதிரியெல்லாம் எதுவுமில்லை. அது மொழியை மிரட்டுறதுக்காக அவன் பொய்யா ஏற்பாடு பண்ண வீடியோ தான் அது. ஐ மீன் மார்பிங் பண்ண வீடியோ அது. இது தான் நிஜம். நீங்க தேவையில்லாம மனசைப் போட்டுக் குழப்பிக்காதிங்க. இப்போ தான் மார்பிங் எல்லாம் அசால்ட்டா நடக்குதே. உங்க தங்கச்சி தான் இதை நம்பி இத்தனை நாள் அவன் சொல்றதை எல்லாம் கேட்டான்னா.. நீங்களுமா? உங்க அப்பா பிஸ்னஸ ரன் பண்றிங்க. சொசைட்டில எத்தனை விஷயத்தை பேஸ் பண்ண வேண்டி வந்திருக்கும். இதெல்லாம் ஒரு விஷயம்னு மூலையில உட்கார போறிங்களா? அன்ட் அந்த மார்பிங் பண்ண வீடியோஸ் கூட இப்போ இல்லை. நாங்க எல்லாத்தையும் ரெக்கவர் பண்ணி டெஸ்ட்ராய் பண்ணிட்டோம். சோ பிளீஸ்..! நீங்களும் இந்த அளவுக்கு பீல் பண்ணாதிங்க” என்று தெளிவாய் உரைத்தவனைக் கண்டு சஞ்சையும் மொழியும் அதிர்ந்து பார்த்திருக்க, அவர்கள் இருவரையும் பார்வையால் மிரட்டியிருந்தான் தீரன்.
“ம்ம் தீரன். அன்ட் தேங்க்ஸ்” என்றவளின் முகம் சற்று தெளிந்திருந்தது.
“சாரி மொழி” என்று தங்கையை அணைத்துக் கொள்ள, தீரன் புரியாமல் பார்த்தான்.
“அது மொழி என்கிட்ட பேச வந்தா. நான் கோபத்துல பேசாம கதவை அடைச்சுட்டேன்” என்றாள் உள்ளே போன குரலில்.
மனைவியின் மனநிலைக்கான காரணம் புரிந்தது இப்போது தீரனுக்கு.
“இங்க பாருங்க பிரகதி..! உங்களுக்கு விஷயம் தெரிஞ்ச ஒரு நாளே தாங்க முடியலை. அவ, கிட்டத் தட்ட ஆறுமாசமா இந்த மனநிலையில இருந்திருக்கா. அவன் ஆறுமாசமா இதை வச்சே பிளாக்மெயில் பண்ணியிருக்கான். அவளைச் சுத்தி நடந்த எல்லா விஷயத்துக்கும் காரணம் இது தான். உங்ககிட்ட சொன்னா இப்படி தாங்க மாட்டிங்கன்னு தான் அமைதியா இருந்திருக்கா. அன்ட் உங்க பேமிலி பத்தியும் கண்டிப்பா யோசிச்சிருப்பா. ஏன்னா அந்த சுகந்தன் அவ்வளவு மோசமானவன் தான். இவ வெளிய சொல்லியிருந்தா கண்டிப்பா இந்நேரம் அவன் சொன்னதை செஞ்சிருப்பான். சோ இதுல நீங்க மொழி மேல கோபப்படுறதுல எந்த அர்த்தமும் இல்லை. ஒரு மார்பிங் செய்யப்பட்ட வீடியோவுக்கு இவ்வளவு ரெஸ்பான்ஸ் தேவையில்லை” என்றவன் சஞ்சய்க்கு கண்களை காட்டி விட்டு மொழியை அழைத்துக் கொண்டு வந்துவிட்டான்.
அறைக்குள் வந்தவனை பிடித்துக் கொண்டாள் மொழி.
“அது மார்பிங் செஞ்ச வீடியோ இல்லை ஏசிபி” என்றாள் உள்ளே சென்ற குரலில்.
“தெரியும்” என்றான் பெருமூச்சுடன்.
“அப்பறம் ஏன் அப்படி சொன்னிங்க?” என்றாள் புரியாமல்.
“அப்படி சொல்லாம, அவங்களையும் உன்னை மாதிரி மூலையில உட்கார வச்சு அழ சொல்றியா. அப்படித்தான காலையில இருந்து இருந்தாங்க. ஒரு நல்லதுக்காக பொய் சொல்றது தப்பில்லை. நீயும் அதையே மெயின்டெயின் பண்ணிக்கோ” என்றான் அழுத்தமாய்.
மொழி அவனை விழி எடுக்காமல் பார்க்க,
“என்னடி அப்படி பார்க்குற?” என்றான்.
“நீங்க என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்றிங்க ஏசிபி” என்றாள்.
“பாருங்கப்பா..! பொறுக்கின்னு சொன்ன பொண்டாட்டி வாயால இப்படி பட்ட வார்த்தைகளை கேட்கும் போது அது கூட கிக்கா தான் இருக்கு” என்று இலகுவாய் சிரித்தவனை இமைக்காமல்பார்த்திருந்தாள்.
சொல்லப் போனால் அன்று அவனால் வீட்டிற்கு வந்திருக்கவே முடியாது. விவேக்கிடம் அனைத்தையும் ஒப்படைத்தவன் வீட்டில் இருப்பவர்களின் நிலை கருதி வந்துவிட்டான். வீட்டில் அன்று இரவு அனைவரையும் அதட்டி உருட்டி சாப்பிட வைத்தவன் தீரனே. விஹானை சமாளிப்பது தான் அவனுக்கு பெரும்பாடாய் இருந்தது. ஒரு வழியாக அனைவரையும் சமாளித்து மனைவியை அழைத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு வந்துவிட்டான்.
“இதுக்குத்தான் அவசர அவசரமா எல்லாத்தையும் பண்ணியா அதி?” என்ற தாயின் கேள்விக்கு அவன் அமைதியாக இருக்க,
“அதான் போன வேலை முடிஞ்சதே. சீக்கிரம் மொழியை கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு வர்ற வழியைப் பாரு” என்றவுடன் தீரனின் முகம் கனிந்தது.
“உங்களுக்கு வருத்தமில்லையே?” என்ற மகனின் குரலில் இருந்து அவனின் மனநிலையை உணர்ந்த வானதி,
“யார் எப்படி இருந்தா என்ன அதி? எனக்கு நீ சந்தோஷமா இருந்தா சரித்தான்” என்று நடந்த பிரச்சனை எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பதைப் போல் பேசிவிட்டு வைத்திருந்தார்.
பக்கத்து வீட்டை வெறித்துக் கொண்டு நின்றவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டவன்,
“மேடம் எதுக்கு அந்த வீட்டையே பார்த்துட்டு இருக்கீங்க?” என்றான்.
“இல்லை தீரா. அந்த வீட்ல இருந்து யாரோ என்னை பார்த்துட்டே இருக்குற மாதிரி தோணும். ஏன் அப்படி தோணுச்சுன்னு இப்போ தான் புரியுது” என்றாள்.
“அதுசரி” என்றவனை முறைத்தவள்,
“பலே ஆள் நீங்க..! சாதாரணமா பேசுற மாதிரி அந்த வீட்டை பத்தி எத்தனை கேள்வி கேட்டிங்க என்கிட்ட?” என்றவளைப் பார்த்து சிரித்தவன்,
“அந்த சுகந்தன் சொன்ன மாதிரி அவன் பொண்ணு கேட்டப்பவே அங்கிள் அவனுக்கு உன்னை கட்டி வச்சிருந்தா என்ன பண்ணியிருப்ப?” என்றான்.
“அதென்னவோ தெரியலை தீரா. டாடிக்கு எப்பவுமே சித்தியோட தம்பியை பிடிக்காது. என்னை விட பத்து வருஷத்துக்கு மூத்தவன். அவனுக்கு எப்படி ஓகே சொல்லுவார்? அதுமட்டுமில்லை, அவன் குணமும் முன்னமே அப்படி ஒன்னும் சரியில்லை. அந்த ஆள் பார்க்குற பார்வையே நமக்கு கூசும். ஆனா அப்படி பட்ட ஒருத்தன் கூட சித்தப்பா எப்படி சேர்ந்தாருன்னு தான் தெரியலை” என்றாள்.
“உன் சித்தப்பா வெறும் அல்லக்கை மட்டும் தான். அவன் மிரட்டி தான் எல்லாம் பண்ணியிருக்கான். அவனுக்கு பின்னாடி இருக்குற நெட்வொர்க்கே வேற” என்றான் தீரன்.
“சித்தப்பாவை அப்படி என்ன சொல்லி மிரட்டியிருப்பான்?” என்றாள் மொழி.
“உன் சித்தப்பாவுக்கு என்ன வீடியோ ரெடி பண்ணான்னு யாருக்குத் தெரியும்? அவருக்கு இன்னொரு குடும்பம் கூட இருக்கலாம். அதுல அவருக்கு ஒரு பையன் கூட இருக்கலாம்” என்றான் போகிற போக்கில்.
“ஏசிபி” என்று அதிர்ந்து பார்த்தாள் மொழி.
அவள் பார்த்தவுடன் சட்டென்று முகத்தை மாற்றிக் கொண்டவன்,
“ஒரு யூகம் தான்மா. உனக்கு எந்த சந்தேகம்னாலும் ஜெயில்ல உன் சித்தப்பா கிட்ட தான் கேட்கணும்” என்றான்.
“எப்படி அவன்தான்னு கண்டு பிடிச்சிங்க?” என்றவளை போலியாய் முறைத்தவன்,
“அட்லீஸ்ட் அவன் தான்னு எப்படி கெஸ் பண்ணிங்க. அதையாவது சொல்லுங்களேன்” என்றாள்.
“எல்லாம் உன் மூலமாத்தான்” என்றான்.
“புரியலை”
“ஹால்ல ஒரு பேமிலி போட்டோ இருந்ததே?” என்றான்.
“ம்ம்..! அக்கா மேரேஜ் அப்போ எடுத்த போட்டோ” என்றாள் புரியாமல்.
“அதுல தான் பர்ஸ்ட் டவுட் வந்தது. உன் ரூம்லயும் அதே போட்டோ இருந்தது. ஆனா அதுல அவன் இல்லை. ஆனா ஹால்ல இருந்த போட்டோல அவன் இருந்தான். அதுல இருந்தவன் கொஞ்சமும் உன் குடும்பத்துல ஒட்டாத தன்மையோட இருந்தான். அவனை அதுவரை நாங்க எங்க சந்தேக வட்டத்துக்குள்ள கொண்டு வரவே இல்லை. அப்பறம் தான் தெரிஞ்சது சார் ஷிப்ல உன்கிட்ட சில்மிஷம் பண்ண ஆளுன்னு” என்றான்.
“என்ன சொல்றிங்க ஏசிபி? அப்போ அன்னைக்கு” என்று அவள் நிறுத்த,
“எஸ்..! அவன் தான். வீடியோ புட்டேஜ்ல சிக்குனான். சோ அவனோட தேவை நீதான்னு தெரிஞ்சது. அதான் எல்லா இடத்துலையும் உன்னை வச்சே அவனை வெளியே வர வச்சேன். கடைசியில பார்த்தா பக்கத்து வீட்லயே இருந்திருக்கான். அதுக்கப்பறம் நடந்தது தான் உனக்கே தெரியுமே. ஆனா அவன் உன்னை லவ் மட்டும் பண்ணலை. உன் மேல அவ்வளவு வெறியா இருந்திருக்கான். அந்த வீட்ல அந்த ரூம் முழுக்க உன் போட்டோஸ் தான்டி. அன்னைக்கு கோயம்புத்தூர் ஹோட்டல்ல உன் அப்பா பேர்ல உன் சித்தப்பாவை வச்சு ரூம் புக் பண்ணது அவன் தான். அன்னைக்கு அவனும் அங்க தான் தங்கியிருக்கான். இன்பேக்ட் ரூபனை வச்சு வீடியோ எடுத்துட்டு, அன்னைக்கு உன்னை அடையறது தான் அவன் திட்டம். அந்த ஹோட்டல்ல அன்னைக்கு ரூம் புக் பண்ணியிருந்த மத்தவங்க டீடெயில்ஸ் செக் பண்ணப்போ இவன் பேரும் இருந்தது. இவ்வளவு பண்ணிட்டு அவனுக்கு அவன் பேர்லயே ரூம் புக் பண்ணது அவன் பண்ண தப்பு. இப்படி சரியா செய்றதா நினைச்சு நிறைய இடத்துல அவனே விட்டுட்டு போன க்ளு தான் இன்னைக்கு அவனை கூண்டோட பிடிக்க ஹெல்ப் பண்ணியிருக்கு” என்றான் தீரன்.
“அப்பறம்” என்று ஆரம்பித்தவளை முறைத்தவன்..”அடிப் போடி” என்று ஆயாசமாய் படுத்தவனின் மேல் விழுந்தவள்,
“தேங்க்ஸ் ஏசிபி”
“இப்போ இது எதுக்கு?”
“என்னை காப்பாத்தி,எனக்கு தைரியம் குடுத்து,அன்பைக் குடுத்து,நம்பிக்கை குடுத்து என்னை எனக்கே திருப்பிக் குடுத்து, தோள் சாய்க்க உங்க தோளையும் குடுத்ததுக்கு” என்றாள் அவன் கண் நோக்கி.
“போடி மக்கு.யாருக்கு வேணும் உன் தேங்க்ஸ்”
“ஏசிபி”
“தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம். நீதான் வேணும்” என்றவனின் கண்களில் தெரிந்த உணர்வில் கட்டுண்டவள்,
“ஆரம்பத்துல எப்படி என் முகத்தை வச்சே சில விஷயங்களை புரிஞ்சுகிட்டிங்க?” என்றாள். அவளுக்கு நெடுநாளாய் உறுத்திக் கொண்டிருந்த விஷயம் இது.
“புரிதல் தான் தேவையே தவிர புரிய வைக்கத் தேவையில்லைடி என் மக்குப் பொண்டாட்டியே”
“சும்மா சும்மா மக்குன்னு சொல்லாதிங்க ஏசிபி”
“ஒன்னும் தெரியாதவளை மக்குன்னு தான் சொல்லுவாங்க” என்றான் நமட்டு சிரிப்புடன்.
“நீங்க பார்த்திங்களா எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு. எனக்கு எல்லாம் தெரியும்” என்றாள் ரோஷத்துடன்.
“நிஜமாவா? பேச்சு மாறமாட்டியே?” என்று அவளின் காதோரத்தில் அவன் சொன்ன செய்தியில் அவள் முகம் அந்திவானமாய் சிவக்க,
“என்ன மேடம்? இப்போதான் வீர வசனம் பேசுனிங்க?” என்றவனை முறைக்க முயன்று தோற்றவள் அவனுக்குள்ளேயே அடைக்கலம் புக, அடைக்கலம் புகுந்தவளின் ஆவிக்குள் கலந்திருந்தான் தீரன். வார்த்தைகளின்றி உணர்வைக் காட்டி, அவள் மறைத்த விஷயங்களை அவளுக்கே மொழிபெயர்த்துக் கொண்டிருந்தான். ஒற்றை முத்தத்தில் உயிரை உருக்கி, நரம்புகளில் மின்சாரம் பாய்ச்சி,மனதில் பூட்டியிருந்த காதலின் கவி பாடியவன், மூச்சுக் காற்றை முற்றுகையிட்டு பெண்மையை களவாடி மொழியின் இதழ்களாகவே மாறியிருந்தான். தாம்பத்தியத்தில் தவறுகள் தானே அழகு!!! வார்த்தைகளில் வடிக்க முடியாத ஒரு பேரானந்த நிறைவு.