கந்தசாமியின் அக்கா சந்திராவும், தங்கை புவனாவும் தான் வேதிகாவோடு இருந்தார்கள். அவர்கள் கல்யாணிக்குத் துளியும் சலித்தவர்கள் இல்லை.

“நீ கூடத்தான் எங்க அண்ணனை முழுசா முழுங்கிட்டு பட்டும் பவுனுமா சுத்தற. எங்க அண்ணனை உறிஞ்சு குடிச்சது பத்தாம என் மருமகன் இரத்தத்தையும் உறிஞ்சு குடிச்சிட்டு இருக்க, நாங்க அதுக்கெல்லாம் எதுவும் கேட்கிறோமா என்ன?” என்று இங்கிதம் பாராமல் புவனா பேச,

வேதிகாவிற்கு சண்டை வந்து விடுமோ என்று பயம் வந்துவிட்டது. அச்சத்தோடு அவள் பார்த்திருக்க, கல்யாணி என்ன சொல்வது என தெரியாமல் தடுமாறி நின்றிருந்தார். என்னதான் தன் நாத்தனார்களோடு தனக்கு ஆகாது என்றாலும், இப்படி இன்று வந்த மருமகள் முன்பு விட்டுக்கொடுத்து எதுவும் பேசிவிட மாட்டார்கள் என்று நம்பி வாயை திறந்திருக்க, அவர்கள் அந்த நம்பிக்கையைச் சுக்கு நூறாக உடைத்திருந்தார்கள்.

பின்வாங்க மனம் வராமல், “ஆமாம் உங்க மருமகன்…” என கல்யாணி தொடங்கியது தான் தாமதம்,

“ஒரு வார்த்தை என் மருமகனைப் பத்தி பேசின, இத்தனை வருஷத்துக்கப்பறம் இங்கே நாத்தனார் சண்டையைச் சமாளிக்க வேண்டியதா போயிடும் உனக்கு, நினைப்புல வெச்சுக்க” என்று சந்திரா விரல் நீட்டி எச்சரித்தார்.

“அந்த மனுஷனே போய் சேர்ந்துட்டாரு, இன்னும் அவரோட அக்கா, தங்கச்சிங்க என்னை நாட்டாமை பண்ணுதுங்க. இந்த கொடுமையை நான் எங்கேன்னு சொல்லறது” என புலம்பியபடியே கல்யாணி அகன்று விட்டார்.

“அவ கூட்டிட்டு வந்த மருமகளால தான், அருளு அவஸ்தைப் பட்டான், அவன் நிம்மதியே போயிடுச்சு. இப்ப கடவுளா ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுத்திருக்காரு. அந்த புள்ள வந்த முதல் நாளே நோகடிக்கக் கிளம்பி வந்துட்டா பாருடி” என சந்திரா பொருமியபடி சொல்ல,

ஆமோதிப்பாக தலையசைத்த புவனா வேதிகாவிடம், “இங்கே பாரு வேதா, எங்க அண்ணி லேசுப்பட்டது இல்லை. இங்கே அது வெச்சது தான் சட்டம்ன்னு எல்லாரையும் ஆட்டி வைக்கும். கவிதாவும், அருளும் புள்ளைபூச்சிங்க. அவ்வளவு சீக்கிரம் அவங்க அம்மாவை எதிர்த்து பேசிட மாட்டாங்க, ஏன்னா எங்க அண்ணி ராங்கிக்காரி. இந்த தெருவுக்கே கேட்கிற மாதிரி கூவி மானத்தை வாங்கிடுவா. அவங்க இருந்த மாதிரி நீயும் இருந்துடாத, அப்பறம் ஏறி மிதிச்சிட்டு போயிட்டே இருக்கும்” என்று சொல்ல,

சந்திராவும், “ஆமா அவ ஒரு வார்த்தை சொல்லறதுக்கு முன்ன, நீ கண்ணுல தண்ணியை வெச்சுட்டு நின்னா எல்லாம் அவகிட்ட காலத்தைத் தள்ள முடியாது. ஆனது ஆகட்டும்ன்னு சண்டை போடு, அருளு அதுக்கெல்லாம் உன்னை ஒன்னும் சொல்ல மாட்டான். நீ தான் சூதானமா பிழைச்சுக்கப் பார்க்கணும். இல்லையா அப்பறம் உனக்கு தான் கஷ்டம்” என்று புத்திமதி சொன்னார்.

‘என்னது எதிர்த்து பேசணும்? சண்டை போடணுமா?’ என்று அவள் பேய் முழி முழித்தாள்.

“இவ முழிக்கிற முழியே சரியில்லைக்கா. இப்படி அப்பிராணியா இருந்தா எங்கே இருந்து அண்ணியை சமாளிப்பாளோ” என புவனா அவளுக்காகப் பரிதாபப்பட்டாள்.

“அதெல்லாம் பழகிக்குவா. இப்பதான் புகுந்த வீட்டுக்கு வந்திருக்கா, போகப்போக எல்லாம் சரியாயிடும்” என்று தங்கையிடம் சொன்ன சந்திரா, வேதாவிடம் திரும்பி, “நீ அதெல்லாம் எதையும் போட்டு மனசை குழப்பிக்காத வேதா. தீபாலி அம்மா இல்லாம கஷ்டப்படற குழந்தை, கவின் அப்பா பாசம் இல்லாம வளர்ந்த குழந்தை. இப்ப அவங்க ரெண்டு பேருக்கும் நீங்க ரெண்டு பேரும் நல்ல அப்பா, அம்மாவா இருங்க.

அருள் ரொம்ப நல்ல பையன். முதல் வாழ்க்கை அவனுக்கு நல்லபடியா அமையலை. ரொம்ப கஷ்டப்பட்டுட்டான். எங்க அண்ணனுக்கு ஆக்சிடெண்ட் ஆனதுல இருந்தே இந்த குடும்ப பொறுப்பை சுமந்துட்டு இருக்கிறவனுக்கு துணையா பக்கபலமா நீ தான் இருக்கணும். உழைக்க அஞ்ச மாட்டான். ஆனா, எங்க அண்ணி பணப்பிசாசு அவன்கிட்ட இருந்து அவன் வருமானத்தை பிடிங்கிட்டே இருக்கும். நாங்களும் எத்தனையோ தடவை எடுத்து சொல்லிட்டோம் அவனை மாத்த முடியலை. நீ வந்த நேரமாச்சும் அவன் மாறறான பார்க்கலாம். அவன்கிட்ட மட்டும் அனுசரணையா இருந்துக்கம்மா. இனியாச்சும் அவன் வாழ்க்கை செழிக்கட்டும்” என்று சந்திரா சொல்ல,

திருமணமான முதல் நாளே கிடைத்த போதனைகளில் அவள் கொஞ்சம் அரண்டு தான் போனாள். “நீ அருளை கட்டி இழுத்து பிடிச்சுப்பேன்னு பார்த்தா நீ முழிக்கிற முழியே சரியில்லையே” என்று சந்திரா சொன்னதற்கும் பதில் சொல்லாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.

புவனாவுக்கு அவளின் பாவனையில் சிரிப்பே வந்து விட்டது. “அப்ப அருளு தான் எங்க அண்ணிகிட்ட இருந்து உன்னை பார்த்துக்கணுமா?” என்க, வேதிகாவிடமும் சங்கடமான சிரிப்பு.

அதோடு மென்குரலில், “நீங்களும் இருக்கீங்க தானே பெரியம்மா” என்க,

“விவரத்தை பார்த்தியா புவனா, ஏதோ ஒரு நாள் நம்ம இவளை காப்பாத்தினா நீங்க தான் இருக்கீங்களேன்னு நம்மளை கூட்டு சேர்க்கிறா…” என்று கேலியாக சொன்னாலும் வேதாவின் சாந்தம் அவரை ரொம்பவும் வசீகரித்தது. அவர்கள் பக்கத்து பெண் பிள்ளைகள் எல்லாம் ஏழு ஊருக்கு வாயடிக்கும். சண்டை போடத் தெரியாத பொடுசுகளும் வாய் பேச்சில் பெரும் வீரம் தான். இவளானால் இருக்கும் இடமே தெரியாமல் இருப்பாள் போல! சின்னதாகக் கூட அதிர்ந்து பேச வரவில்லை.

‘இந்த பிள்ளைகள் நல்லா இருக்கணும்’ என சந்திரா மனதார நினைத்துக் கொண்டார்.

கல்யாணியின் பேச்சை நினைக்க முடியாதபடி சந்திராவும் புவனாவும் அவளை ரொம்பவும் இலகுவாக்கித் தான் அருள்மித்ரனின் அறையில் விட்டார்கள். அதுவரையிலும் எல்லாம் சரிதான், ஆனால், பிள்ளைகளை நாங்கள் வைத்துக் கொள்கிறோம் என்று அவர்கள் சொன்னதுதான் அவளுக்கு மிகுந்த கஷ்டமாக இருந்தது.

மகன் பிறந்ததிலிருந்து அவனில்லாமல் அவள் உறங்கியதில்லை. பகலில் அவள் அருகில் வராமல் விளையாட்டிலேயே கழித்து விட்டான் தான், ஆனால், இரவுக்கு அன்னையின் கதகதப்பைத் தேடுவானே என்று இருந்தது. அதோடு அவனுக்கு இன்னும் பால்குடியை வேறு நிறுத்தவில்லை. தீபாலிக்கும் இத்தனை நாட்கள் கிடைத்த தந்தையின் அருகாமை இல்லாமல் குழந்தை ஏங்காதா என்று கவலையாக இருந்தது.

அயர்வாக அமர்ந்திருந்தவள் கதவைத் திறக்கும் சத்தத்தில் தான் தன்னிலை மீண்டு எழுந்து நின்றாள். உள்ளே நுழைந்ததோ மகனை தூக்கிக்கொண்டு சந்திராவும், மகளைத் தூக்கிக் கொண்டு புவனாவும். அவர்களுக்கு பின்புறம் கையைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தான் அவளின் கணவன்.

விழிகள் விரிந்தது ஒருபுறம் என்றால், சிரிப்பு மறுபுறம். அவளைப் பேசவே விடாமல் அனுப்பி விட்டது போல அவனை அனுப்பி வைக்க முடியவில்லை போல! அமைதியானவன், யாரையும் எதிர்த்துப் பேச மாட்டான் என்றெல்லாம் இவர்கள் இத்தனை நேரம் சொன்ன பிம்பத்திற்கு எதிராக இருந்தது கணவனின் இப்போதைய தோரணை.

அவர்கள் சொன்னது உண்மையாக இருக்குமாக இருக்கும். ஆனால், தனக்கு ஒன்று வேண்டும் என்று நினைத்தால், அதனை சாதித்துக் கொள்ளும் ரகம் என்றும் அவனின் இந்த செய்கையில் அவளுக்குப் புரிய வைத்திருந்தான்.

தங்களைக் கண்டதும் முகம் மலர நின்றிருந்தவளைப் பார்த்து, “புருஷனும் பொண்டாட்டியும் ஒரே மாதிரி தான் இருக்கீங்க” என அலுப்பான குரலில் சந்திரா முணுமுணுத்தார். இவளுக்கு அதற்கும் சிரிப்பு தான் வந்தது. சிரித்தால் முறைப்பார் என்று தோன்றவே அமைதியாகத் தலையைக் குனிந்து கொண்டாள்.

அவர்கள் இருவரும் குழந்தைகளைக் கட்டிலில் கிடத்தினார். பிள்ளைகள் இருவருக்கும் அயர்வில் நல்ல உறக்கம். வேதிகா வீட்டிலிருந்து பெரிய கட்டிலாகத் தான் சீர்வரிசையாகக் கொடுத்திருந்தனர்.

சந்திராவும் புவனாவும் வெளியே போன பிறகு அருள்மித்ரன் அறையினுள் வந்து கதவடைத்தான். இவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நின்று கொண்டே இருந்தாள்.

பயமோ பதற்றமோ இல்லாமல் அவள் நின்றிருப்பது அவனுக்கும் கொஞ்சம் இதமாக இருந்தது. மகளைக் கூட தன்னருகே வைத்து உறங்க அருளுக்கு இத்தனை நாட்களும் கொடுத்து வைத்திருக்கவில்லை. இன்றோ அவன் அறை மகன், மகள், மனைவி என நிறைந்திருந்து, தன்னுடைய அறை தங்களுடைய அறையென மாறியிருந்தது.

அறையினுள் வந்தவனுக்கும் என்ன சொல்ல என்று தெரியவில்லை. மிகவும் அமைதியாகத் தான் நின்றிருந்தான். மகளைப் பார்த்துக்கொள்ள ஒரு துணை என அவனும், அவளுக்கும் மகனுக்கும் காவலாய் ஒரு துணை என அவளும் என்று இணைந்திருக்கும் இந்த பந்தத்தை வெறும் தாம்பத்தியம் பூர்த்தியாக்கும் என்று அவனுக்கு தோன்றவில்லை. நால்வர் மனதிலும் நாங்கள் அனைவரும் ஒரே குடும்பம் என்ற எண்ணம் வேரூன்றினால் மட்டுமே தங்களின் உறவு பூர்த்தியாகும் என்று தோன்றியது.

அருள் என்ன நினைக்கிறான் என அவளால் கொஞ்சமும் அனுமானிக்க முடியவில்லை. எத்தனை நேரம் இப்படியே நிற்பது என்று அவன் முகத்தை முகத்தைப் பார்த்தாள்.

அவள் பார்வை உணர்ந்து, “அ… அது… தூங்கலாம் தானேங்க…” என பெரும் தயக்கத்துடன் கேட்டான். “ம்ம்” என்று உடனே தலையை ஆட்டி விட்டாள். குழந்தைகளின் அருகே அவள் படுக்க, விளக்கை அணைத்துவிட்டு அவளுக்கு சங்கடம் தரக்கூடாது என்று அவளுக்கு முதுகு காட்டி இவன் படுத்துக் கொண்டான்.

வேதிகா இவர் என்ன தன்னை வாங்க, போங்க என அழைக்கிறார் என்று யோசித்தபடியே உறங்கிப் போனாள்.