மழைவர பூமி மறுத்திடுமா? – 5

செஞ்சேரிமலையில் வீற்றிருக்கும் அருள்மிகு மந்திரகிரி வேலாயுத சுவாமி சன்னிதானத்தில் மிகவும் நெருங்கிய சொந்தங்களின் முன்னிலையில் அருள்மித்ரன், வேதிகாவின் திருமணம் நல்லபடியாக நடைபெற்றது.

அசோகன், யமுனா இருவருக்கும் மகளை மணக்கோலத்தில் பார்த்ததும் கண்கள் தழும்பி, மனம் நிறைந்து போனது. இப்படியொரு பாக்கியம் தங்களுக்குக் கிடைக்கவே கிட்டாது என்று எண்ணியிருந்தவர்களின் கவலையை அவர்கள் வணங்கும் வேலாயுத சுவாமி போக்கியிருந்தார். தங்கள் மகளும், மருமகனும், மழலைச் செல்வங்களோடு இணைந்து சீரும் சிறப்புமாக மகிழ்வானதொரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டனர்.

கவிதாவிற்கு அண்ணன் வாழ்க்கை இனி நன்றாகி விடும் என்கிற நம்பிக்கை வந்து விட்டது. இந்த திருமணம் நடைபெற்றதில் அவள் மிகவும் சந்தோசமாக இருந்தாள்.

மணமக்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது, அந்தச் சிறிய ஊரில் பெரும் பேசுபொருளானது. இருவரின் தனிப்பட்ட வலிகளையும் அறிந்த சிலர், ‘இனியாவது அவர்கள் வாழ்வு சிறக்கட்டும்’ என மனதார வாழ்த்தினர்.

ஆனால், பெரும்பாலானோர்களோ, ‘இந்த வாழ்க்கையாவது இவர்களின் அதிர்ஷ்டத்திற்கு நிலைக்கிறதா என்று பார்ப்போம்’ என எள்ளலாக எண்ணிக் கொண்டனர். வேதிகாவின் திருமணமாகாத பிள்ளைப்பேற்றைப் பிடிக்காத சிலரோ, ‘இவளைக் கட்டிக்கவும் ஒருத்தன் கிடைச்சுட்டானே!’ என அவளை கேலியும் கிண்டலுமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

கல்யாணியின் முகம் மகனின் திருமணம் பிடிக்காமல் கடுகடுவென இருந்தது. அருளின் மூத்த தங்கை மாலதிக்கும் பெரும் கோபமே! அம்மாவோடு ஒதுங்கி அமர வழியில்லாமல், அவளின் கணவன் முரளியின் கோபத்திற்குப் பயந்து, திருமணத்தில் வேலைகளைச் செய்வது போலக் காட்டிக் கொண்டாள்.

இந்த எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் அருள்பாலிக்கும் கடவுளின் முன்னிலையில் எடுபடாமல் போயின.

மணமக்கள் இருவரும், ‘இந்த வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டும்’ என்கிற எண்ணத்தோடு இருந்தார்கள். கடந்து வந்த பாதையில் சிந்திய கண்ணீரும், அனுபவித்த வலிகளும் நிழலாகக் கூடத் தொடரக் கூடாது என்ற வேண்டுதல் இருவர் மனதிலும் ஆழமாக நிறைந்திருந்தது.

அன்று அசோகன் மாப்பிள்ளை என்று அழைத்ததற்கு, தான் தடுமாறி லஜ்ஜையோடு நின்று விட்டோமோ என அருள்மித்ரன் அந்த சம்பவத்தை எண்ணி எண்ணிப் பல நாட்கள் தன்னையே நொந்து கொண்டான். இன்று அது அர்த்தமற்றது என யோசிக்க வைக்குமளவில், தன்னருகில் மணக்கோலத்தில் வேதிகா அமர்ந்திருப்பதை அவன் நம்பமாட்டாமல் பார்த்திருந்தான்.

‘எதுக்கு இப்ப என்னைத் திரும்பித் திரும்பி பார்க்கிறாங்க’ வேதிகாவிற்கு கணவனின் பார்வை தன்னை அடிக்கடி தழுவி செல்வதில் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. அவஸ்தையுடன் தன் முகத்தில் அரும்பிய வியர்வையை கைக்குட்டையால் ஒற்றி எடுத்துக் கொண்டிருந்தாள்.

“ஹோம புகையில இருக்கிறது கஷ்டமா இருக்காங்க, இன்னும் கொஞ்சம் நேரம் தான். பொறுத்துக்கங்க” அவள் அவஸ்தை எதற்கென்று புரியாமல் சன்ன குரலில் விளக்கம் சொன்னவனைப் பார்த்து வேதிகாவுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. அவனின் மரியாதை விகுதியுடன் கூடிய அழைப்பில் தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.

அவனை அவள் விசித்திரமாக நோக்க, “என்னாச்சுங்க? என்ன பண்ணுதுன்னு சொன்னா தானே தெரியும்” என அவன் புரியாமல் கேட்க, அதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாமல், “எல்லாரும் நம்மளைத்தான் கவனிப்பாங்க, கொஞ்சம் அமைதியா இருங்களேன்” என்று பாவமாக மொழிந்தாள்.

அவனின் அனுசரணையை அனுபவிக்கும் மனநிலையில் கூட அவள் இல்லை. பெற்றோரின் சந்தோசத்திற்காகவும், தாயில்லாமல் வளரும் சின்னச்சிட்டு தீபாலிக்காகவும் தான் இந்த திருமணத்திற்கு ஒப்புதல் தந்திருந்தாள். ஒற்றை நாளிலேயே தன் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த தீபாலியின் நினைவுகள், அவள் மனதை அரித்துக் கொண்டே இருந்தது. முத்தாய்ப்பாய் தன்னைப்பற்றி எதுவுமே தெரியாத போதும், தன் மீது முழு நம்பிக்கை வைத்துப் பேசிய அருளின் வார்த்தைகள், அவளுள் இருந்த சஞ்சலங்களை விரட்டி, தந்தை திருமணத்திற்காகக் கேட்டபோது ‘சரி’ என்று சொல்ல வைத்திருந்தது.

அருளோ மனைவி சொன்னதற்கு, “ஆமாங்க, எல்லாரும் நம்மளைத்தான் கவனிக்கிறாங்க. நீங்களும் கொஞ்சம் சிரிச்ச மாதிரி இருங்களேன்” என தீவிரமான குரலில் சொல்ல, ‘அடேய்!’ என்கிற அலறலோடு வேதிகா அவனை ஏறிட்டுப் பார்த்தாள். பாவம், அதை அவன் உணர்ந்து தான் சொல்லியிருக்கிறான் போலும், கொஞ்சம் அவஸ்தையுடன் தான் இந்த கோரிக்கையை மனைவியிடம் கொண்டு வந்திருக்கிறான் என்று அவனின் முகபாவனையே சொன்னது.

“அது…” என்று தயக்கமாகத் தொடங்கியவள், “கையில குழந்தையோட மணப்பொண்ணு கோலத்துல நிற்கிறேன். கொஞ்சம் சங்கடமா இருக்குங்க. சிரிக்க முயற்சி பண்ணினா அது இதைவிட மோசமா செயற்கையா தெரியும். நான் இப்படியே இருந்துக்கவா?” என அவனிடமே பதிலுக்குக் கோரிக்கையாகக் கேட்டவள், “நீங்க சொன்னதை மறுக்கணும்ன்னு இதை சொல்லலைங்க. நிஜமாவே சிரிக்க வரலை” என்றாள் முகம் சுருங்க.

ஏற்கனவே சின்னஞ்சிறு முகம் பெண்ணவளுக்கு. அதில் சுருக்கி வேறு வைக்கவும் இன்னமும் சிறியதாகத் தெரிந்தது. அது அவனது மனதைப் பிசைய வேகமாக, “அதுனால என்னங்க, பரவாயில்லை” என்று சொல்லி விட்டான்.

சிறு யோசனையுமின்றி அவன் உடனடியாக ஏற்றுக்கொண்டதில் அவள் ஆசுவாசப்பட்டாள். அவளின் முகத்தில் படர்ந்த நிம்மதியை அவன் பார்வை உள்வாங்கியது.

அவனுக்கும் இது குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு ஒரு திருமணம் தான்! அதிலும் மனைவி இறந்து ஓர் ஆண்டு கூட முடியாத நிலையில்! ஆனால், அவன் இயல்பாக இருக்கலாம். அவள் இருக்கக்கூடாது என்றால், அதை என்னவென்று சொல்வது?

அவள் ஏன் இப்படி இருக்கிறாள் என்பது அவனுக்கு இப்பொழுது முழுமையாகப் புரிந்தது. அங்கே இருப்பவர்களில் பெரும்பாலானோர்கள் அவளை நல்லவிதமாக நினைக்கப் போவதில்லை. அவளை ஆயிரம் குறை சொல்பவர்களின் மத்தியில், செயற்கையாகப் புன்னகை பூக்க அவளாலும் எப்படி முடியும்?

பெருமூச்சை வெளியிட்டவனுக்கு, அவளின் உள்ளார்ந்த சிரிப்பைக் காண வேண்டும் என மனம் ஏக்கம் கொண்டது. வேலாயுத சுவாமியிடம் தான் தன் கோரிக்கையை வைத்தான்.

அதன் பிறகான சடங்குகளும் சம்பிரதாயங்களும் நல்லபடியாக நடந்தேற, மணமகன், மணமகள் இருவரையும் அருளின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்கள். புகுந்த வீட்டில், அருளின் தங்கைகள் இருவரும் ஆரத்தி எடுக்க வர, அருள் தன் அத்தைகளிடம் இருந்த குழந்தைகளை தங்களிடம் வாங்கி வைத்துக் கொண்டான்.

“கல்யாணம் பண்ணும்போதே குடும்பத்தோட இருக்கிறது உங்க அண்ணன் மட்டும் தான்” கல்யாணி முகம் சுளிக்க, மாலதிக்கும் அதே எண்ணம் தான். கவிதா அம்மா பேசுவது யார் காதிலாவது விழுந்து விடப்போகிறது என்று தவிப்போடு நின்றிருந்தாள்.

“ரெண்டு பேரும் வந்து ஆரத்தி எடுங்க என் மருமகனுக்கு” அவர்களின் அத்தை புவனா கூற, மாலதியும் கவிதாவும் ஆரத்தி எடுத்து அவர்களை வரவேற்றார்கள்.

அருள்மித்ரனுடையது சின்னஞ்சிறு வீடு தான், சின்ன வரவேற்பறை, அதை ஒட்டி சமையலறை, அதுபோக இரண்டு அறைகள் தெரிந்தது.

அங்கிருந்த சாமி படம் முன்பிருந்த தீபத்தை வேதிகாவிடம் ஏற்ற சொன்னார்கள். தீபம் ஏற்றி கணவனோடு சேர்ந்து கடவுளை வணங்கினாள். பிறகு, மணமக்கள் இருவரையும் அமர வைத்து பாலும் பழமும் கொடுத்தார்கள். பெரியவர்கள் சொல்லித் தந்ததை எல்லாம் வேதிகா கிளிப்பிள்ளையாய் செய்து கொண்டிருந்தாள்.

சடங்குகளை முடித்ததும் வேதிகாவை சிறிது நேரம் ஓய்வெடுக்க கவிதாவுடன் ஒரு அறைக்கு அனுப்பி வைத்தார்கள். அது கவிதாவும், அவளின் அன்னையும் தங்கும் அறை என்று அவள் விளக்கம் தந்தாள்.

“நான் உங்ககிட்ட நிறைய பேசணும் அண்ணி. ஆனா, பாவம் ரொம்ப டையர்டா இருப்பீங்க. கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க, கவினையும் தீபாலியையும் நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் போனாள் அவள். அவளின் அனுசரணையை உள்வாங்கியபடி அமைதியாகப் படுக்கையில் அமர்ந்திருந்தாள். என்னவோ உறக்கம் வரவில்லை. யார் பார்வையும் துளைக்காமல், இப்படி அமர்ந்திருப்பதே இப்போதைக்கு அவளுக்கு போதுமானதாக இருந்தது.

கவினுக்கு தீபாலி, கவிதாவுடன் நல்ல விளையாட்டு. அம்மாவிடம் வர வேண்டும் என்கிற சிந்தனையே இல்லாமல் இருக்கிறான் என்று அவனைப்பற்றி சிறிது நேரம் யோசித்தாள். பிறகு அவளின் யோசனை தீபாலி, கவிதா, தன்னை முறைத்துக் கொண்டே திரியும் மாமியார் என பயணித்தது. அவரை சமாளிப்பது தான் பெரிய வேலையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள்.

ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தவள், தன்னையும் மறந்து உறங்கியிருந்தாள். மாலையில் உறவுப் பெண்கள் அவளை எழுப்பி, குளித்து விட்டு உடையை மாற்றச் சொன்னார்கள்.

மனம் படபடத்தாலும், கணவனின் அனுசரணையான பேச்சுக்கள் நினைவிற்கு வர, தன்னை புரிந்து கொள்வான் என்று நம்பினாள். அதன்பிறகு தான் கொஞ்சம் ஆசுவாசமானது. அவர்கள் சொன்னதை எல்லாம் அலட்டலின்றி செய்தாள்.

பெரிதாக அலங்காரங்கள் வேண்டாம் என்று சொல்லி விட்டாள். புடவையும் ரொம்பவும் சாதாரணமாக இருந்ததைத்தான் கட்டிக் கொண்டிருந்தாள். மலர் சூட வந்த போதும், “இவ்வளவு வேணாங்க பெரியம்மா” என்று மறுத்துக் கொண்டிருக்க,

“இப்ப எதுக்கு இப்படி இவளை சீவி சிங்காரிச்சிட்டு இருக்கீங்க, இப்பதான் இதெல்லாம் புதுசா பார்க்கிறாளா இவ?” மனதிற்குள் வெகு நேரமாக பொருமிக் கொண்டிருந்த கல்யாணி, சமயம் கிடைத்ததும் விஷத்தைக் கக்கிவிட, கண்கள் கலங்கி விட்டது வேதிகாவிற்கு. நடுங்கும் கீழுதட்டைப் பற்களால் இறுகப் பற்றிக் கொண்டு தலையைக் குனிந்து கொண்டாள்.