அத்தியாயம் – 3

மகனின் விவாகரத்து முடிவைச் சரியான தருணத்தில் கணவனுக்குத் தெரியப்படுத்தி விட வேண்டுமென்று காத்துக் கொண்டிருந்த ராஜம் அவருக்கு சாதகமாகப் பல சந்தர்ப்பங்கள் அமைந்தாலும் அதை உபயோகித்துக் கொள்ளவில்லை. கத்திரிக்காய் முற்றினால் கடைத்தெருவிற்கு வந்துதானே ஆக வேண்டும். கணவனின் கத்தலில் கத்திரிக்காய் கடைத்தெருவிற்கு வந்து விட்டதை அறிந்த கொண்டு ராஜம், பார்வையைக் கணவனின் புறம் திருப்பி,

“முதல்ல அதைச் செய்யுங்க..புத்திசாலி அப்பனுக்கும் தற்குறி அம்மாக்கும் மகனா பிறந்ததாலே தான் வினய்யோட வாழ்க்கை பாழாகிடுச்சு..ஒரு களவாணியை என் புள்ளைக்கு கட்டி வைச்சிருக்கீங்க.” என்று அழுகையோடு சொல்ல,

காதில் விழுந்ததை நம்பமுடியாமல்,”என்ன சொல்ற?” என்று கேட்க,

அதுவரை அடக்கி வைத்திருந்ததை கதறியபடி வெளியேற்றினார் ராஜம். மனைவி சொன்னதைக் கேட்க கேட்க செந்திலின் கண்களும் ராஜத்திற்குப் போட்டியாக கண்ணீரைச் சொரிந்தன. அவரது இதயமானது தாறுமாறாக செயல்பட, பலகீனமாக உணர்ந்தவர் அப்படியே மனைவியின் அருகே அமர்ந்து கொண்டார். எப்படி இத்தனை பெரிய துரோகத்தைத் தாங்கிக் கொண்டு அவருடைய மகன் உயிர் வாழ்கிறான் என்று செந்திலுக்கு தெரியவில்லை. ‘அய்யோ’ என்று மார்பில் அடித்துக் கொண்ட அழ தோன்றினாலும் அந்த உணர்வை அப்படியே அடக்கம் செய்தவர்,

”எல்லாம் என்னாலே தான் ராஜம்..நான் தான் சரியா விசாரிக்கலை..உண்மைக்கும் பொய்க்கும் எனக்கு வித்தியாசம் கண்டுபிடிக்கத் தெரியலை..நான் அவங்களைச் சும்மா விடப் போறதில்லை..கதறடிக்கப் போறேன்.”என்று வெகுண்டவர், கைப்பேசியை கையில் எடுத்து,”செய்யறது எல்லாத்தையும் செய்திட்டு நஷ்டஈடு வேற கேட்கறாளா..விவாகரத்து கொடுக்காத..ஓட ஓட விரட்டு..நாறடின்னு வினய்க்கிட்டே சொல்லப் போறேன்..உன் பேச்சை கேட்டுக்கிட்டா எல்லாத்தையும் தூக்கி கொடுத்திட்டு இளிச்சவாயனா நிப்பான் வினய்.” என்று பேசியபடி மகனுக்கு அழைத்தவரின் கைப்பேசியை பறித்து படுக்கை மீது எறிந்தார் ராஜம்.

“ஜீவனாம்சம் கேட்டவ இப்போ வெறும் நஷ்டஈடு தான் கேட்கறா..அவ கேட்கறதைக் கொடுத்து மொத்தமா கை கழுவிடுன்னு சொன்னதில்லே என்ன தப்பு.” என்றார் ராஜம்.

“எதுக்கு? எதுக்கு கொடுக்கணும்..இங்கே நம்மகூட ஒரு நாள் தங்கினதில்லை..நமக்காக நேரம் செலவழிச்சதில்லை..அவளோட ஒரு சாமான் நம்மகிட்டே கிடையாது… ஒத்த ரூபா சம்பாதிச்சு வினய்க்கு கொடுக்கலை..அவனோட பணத்திலே தான் அவ இருந்தா..அவளுக்கு ஒரு பைசா கூட கொடுக்கக் கூடாது..கொடுக்க விட மாட்டேன்.” என்று கோபமாகக் கத்தினார்.

“இவன் பணத்திலே எல்லாம் செய்துகிட்டு அவ வேறொருத்தனோட செட்டிலாகிட்டா..அவ கேட்கற பணத்தை விட்டெறிஞ்சு அவளை விரட்டியடிக்கறது தான் நம்ம பையனுக்கு நல்லது.” என்று கணவனுக்கு புரிய வைக்க முயன்றார் ராஜம்.

சில நிமிடங்களுக்கு யோசித்த செந்தில்,”விவாகரத்து கொடுக்கட்டும் ஆனா பணம் எதுவும் கொடுக்கக் கூடாது.” என்றார்.

“பணம் கொடுத்தா தான் அவனுக்கு விடுதலை கிடைக்கும்..இல்லைன்னா விவாகரத்துக்கு ஒத்துக்க மாட்டா.” என்றார் ராஜம்.

“எதுக்கு பணம்..அவளோட பணத்தையா என் பையன் சுருட்டிக்கிட்டான்..நோ…மாட்டேன்..என் பையன் கஷ்டப்பட்டு சம்பாதிச்சதை கொடுக்க நான் ஒத்துக்கவே மாட்டேன்..என்னோட பையன் ரொம்ப நல்ல பையன்னு இந்த ஊர்லேயே எத்தனை பேர் கல்யாணத்துக்கு கேட்டாங்க தெரியுமா?..கண்ணு முன்னாடி இருந்த நல்லது எல்லாத்தையும் ஒதுக்கிட்டு நல்லவங்கண்ணு நம்பி..” என்றவருக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை.

மகனிற்கு நடந்த அநியாயத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல், மனத்தில் ஏறியிருந்த பாரத்தை தாங்க முடியாமல்,”வினய்க்கு விவாகரத்து ஆகிடிச்சுன்னு தெரிஞ்சா என்னாலே வெளிலே தலை காட்ட முடியாது.. ஊரே நம்மளைப் பார்த்து சிரிக்கும்..நம்ம உறவுக்காரங்க..தர்ஷினி வீடு..” என்று தடுமாறிய செந்தில், நொடியில் கோப நிலைக்கு மாறி,”என் பையன் வாழ்க்கையைப் பாழ் பண்ணிட்டு அவனோட பணத்தையும் கொள்ளையடிக்கப் பார்க்கறா..மனசாட்சி இல்லையா அவளுக்கு? ” என்று கத்தினார்.

அவரது கரங்களைப் பற்றிய ராஜம்,”நம்ம பையன் நல்லவன்..அதான் ரெடியில்லை, ரெடியில்லைன்னு அவ சொன்னதை உண்மைன்னு நம்பிட்டு இருந்திருக்கான்..கணவன்னு அவளைக் கட்டாயப்படுத்தலை…வேற ஒருத்தனுக்கு மனைவியா வாழ்ந்திட்டு இருக்காண்ணு கண்டுபிடிக்க தெரியலை..நல்லவனா இருந்தவன் கொஞ்சம் புத்திசாலியாவும் இருந்திருக்கலாம்..வெள்ளைக்காரியெல்லாம் வேணாம்னு நான் அவன்கிட்டே சத்தியம் வாங்காம இருந்திருக்கலாம்..அரைக் கிலோ காயை பலமணி நேரம் அலசி ஆராய்ஞ்சு வாங்கற நீங்க ஆயுசு முழுக்க வரப் போற பந்தத்தை அவசரமா முடிவு செய்யாம ஆறப் போட்டிருக்கலாம்..இப்படி செய்திருக்கலாம், அப்படி நடந்திருக்கலாம் இப்போ ஆராய்ச்சி செய்து ஒரு புண்ணியமுமில்லை..

அவ கேட்கறதைக் கொடுத்த தான் இதிலிருந்து வினய்யை மீட்க முடியும்..அவ மனசாட்சி இல்லாதவ தான்..அவளுக்கு தேவையானது கிடைக்கறவரை விடமாட்டா..இப்போ வயித்தை தள்ளிட்டு வர்றவ அப்புறம் பிறந்த குழதையை கைலே தூக்கிட்டு வருவா, இடுப்புலே உட்கார்த்தி வைச்சிட்டு வருவா, கை பிடிச்சு நடத்தி அழைச்சிட்டு வருவா..எத்தனை வருஷமானாலும் அவ கேட்கறது கிடைக்கறவரை கோர்ட்டுக்கு வந்திட்டு தான் இருப்பா.” என்றவரை இடையிட்டு,

“வரட்டும்..குழந்தை வினய்யோடது இல்லை நிரூபணும் செய்தா அவளுக்கு தான் அசிங்கம்.” என்றார் செந்தில்.

“அவ தவறிட்டான்னு நாம நிரூபிச்சாலும் அவ கலங்க மாட்டா..பல வருஷமாப் பொண்டாட்டியா ஒரே வீட்லே இருந்தும் அவளைத் தொடாம இருந்தது யாரோட தவறுன்னு கேள்வி எழுப்புவா..வினய் ஆம்பளை இல்லை அதான் அடுத்தவன்கிட்டே போனேன் சொல்லுவா..அது பொய்னு நாம நிரூபிச்சாலும்” என்ற மனைவியின் வாயைக் கை வைத்து மூடியவர்,”ராஜம், போதும்.” என்று கத்த, அவரது கரத்தை விலக்கி,”ஒரு பொண்ணா இன்னொரு பொண்ணைப் பற்றி கேவலமா பேச எனக்கு அசிங்கமா தான் இருக்கு..வினய் பற்றி அப்படி ஓர் அவதூறு வந்த பிறகு இன்னொரு வாழ்க்கை பற்றி அவன் யோசிக்கக் கூட முடியாதுங்க.” என்றார்.

அடுத்த சில நொடிகள் அமைதியில் கழிய அதன் முடிவில் படுக்கை மீதிருந்த கைப்பேசியை எடுத்து வினய்க்கு அழைப்பு விடுத்து ஸ்பீக்கரில் போட்டார் செந்தில். அப்பாவுடன் இயல்பாக உரையாடி பல மாதங்களாகி இருந்தததால் அழைப்பை ஏற்காமல் யோசனையாக அமர்ந்திருந்த வினய், தயக்கத்துடன் அந்த அழைப்பை எற்றவுடன்,”தப்பெல்லாம் என்னோடது டா..அப்பாவை மன்னிச்சிடு டா.” என்றார் செந்தில்.

உடனே,”உங்க தப்பில்லை ப்பா…புனிதமான உறவுன்னு நினைச்சேன் ப்பா..தவறா போகுதுன்னு என்னாலே கண்டுபிடிக்க  முடியலை..என் பார்வைலே தான் கோளாறு.” என்றான் சொன்னவனின் குரல் தழுதழுத்தது.

செந்திலின் அகராதியில் ஆறுதல் வார்த்தைகளே கிடையாது. இப்படியொரு சுழ்நிலை வருமென்று அவர் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. என்ன சொல்லி மகனைத் தேற்றுவது? இனி அவனது எதிர்காலம் என்னவாகப் போகிறது? மீண்டுமொருமுறை திருமணம் செய்து கொள்வானா? குடும்ப வாழ்க்கையை எதிர்கொள்ள முடியுமா? முதலில் எப்படி அவனை இதிலிருந்து சேதாரமில்லாமல் மீட்டெடுப்பது? என்று பல கேள்விகள் செந்திலினுள்ளே எழும்ப, எதற்கும் விடை கிடைக்காமல் ஊமையாகிப் போனார் புத்திசாலி செந்தில்.

அவருக்கு நேர்மாறாக,“அந்த உறவுக்கு உண்மையா நேர்மையா இருந்தது தப்பில்லை டா.. இனியும் இந்த விஷயத்திலே அப்படி இருக்கறது தான் தவறு..இரண்டகத்துக்கு தண்டனை கிடைக்கும்னு எதிர்பார்க்காத..அதுக்காக காத்திருந்தா உன்னோட வாழ்க்கை தான் பாழாகும்..உனக்கு தான் பாதகமா முடியும்…தவறு செய்தவளை ஜெயிக்க விடு..அப்போ தான் நீ வாழ முடியும்.” என்று மகனுக்கு அறிவுரை அளித்தார் தற்குறி ராஜம்.

“முடியாது ம்மா..என் மேலே எந்தப் பிழையும் இல்லைன்னு நிரூபிச்சா தான் எனக்கு நிம்மதி கிடைக்கும்..என் வாழ்க்கை பாழானாலும் பரவாயில்லை.” என்றான் வினய்.

“நீ பேசறது முட்டாள்தனமா இருக்கு டா..நடந்து போனதை மாற்ற முடியாது..கடந்து தான் வரணும்..அதைப் படிப்பினையா எடுத்திட்டு சுதாரிப்பா இருந்து நல்லபடியா வாழ்ந்து காட்டறது தான் புத்திசாலித்தனம்..நீ தாண்டி வரணும் டா..தேங்கி நிற்கக் கூடாது.” என்று வாழ்க்கையின் பேரிடர்களைக் கடக்க மகனுக்குப் பாடம் எடுத்தார் பன்னிரெண்டாம் வகுப்பைத் தாண்டாத ராஜம்.

ராஜம், செந்தில் இருவரும் கணவன் மனைவியாக இருந்தாலும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும், வாழ்க்கை ஒரே திசையை நோக்கி பயணம் செய்தாலும், இருவரும் ஒரே பாதையில் பயணம் செய்யவில்லை.  எந்த இடையூறும் இல்லாமல் அவர் வகுத்த பாதையில் அவருக்கு சௌகர்யமான வேகத்தில் செந்திலின் வாழ்க்கைப் பயணம் சென்று கொண்டிருந்ததால் மகனின் வாழ்க்கைப் பாதையில் தோன்றியிருந்த கிண்ணக்குழியை (crater) எப்படிக் கடப்பது என்று அவருக்குத் தெரியவில்லை. ராஜத்திற்கு அப்படியில்லை. திருமணமாகி வந்த நாளிருந்து கணவன் அமைத்த பாதையில், மாமனார், மாமியார், நாத்தனார், மச்சினர் என்று குடும்ப உறுப்பினர்கள் எழுப்பிய தடைகளைச் சமாளித்து, குழந்தைகள் ஏற்படுத்திய குண்டு குழிகளைக் கடந்து, கரடு முரடனா பாதையில் கணவனின் கையைப் பற்றாமல் தனியாக பயணம் செய்கிறார். அவரது அனுபவ அறிவை மகனுடன் பகிர்ந்து கொண்டு அவனுக்கு உதவிக்கரம் நீட்டினார்.

சமீபக் காலமாக, வாழ்க்கை படிப்பித்துக் கொண்டிருக்கும் பாடத்தினால் ராஜத்தைப் புதுக் கோணத்தில் பார்க்க கற்றுக் கொண்டிருந்த வினய்யின் அலட்சியப் பார்வை ஆச்சர்யப் பார்வையாக மாறியிருந்தது. ‘எல்லாம் எனக்குத் தெரியும்..நான் சொல்றதைச் செய்’ என்று ஆர்ப்பரிக்கும் அப்பா இப்போது அமைதியாக இருக்க, திருமணமானதிலிருந்து வீட்டுப் பறவையாக அடைப்பட்டிருந்த அம்மா, வானத்தில் சிறகடித்துப் பறக்க கற்றுக் கொடுக்க,

“புரியுது ம்மா..தேங்கி நிற்க மாட்டேன்..புது வாழ்க்கை தேடிப்பேன் ம்மா.” என்று ராஜத்திற்கு வாக்குறுதி அளித்தான் வினய்.

*********************

பிழைமணம் – Illegal marriage or union; ஒழுங்கற்ற விவாகம் அல்லது சேர்க்கை.

பிழை – குற்றம், தவறு

******************

மாறி வரும் வாழ்வியல், சமூகவியல் முறைகளாலே குடும்ப அமைப்புக்களின் வரையறைகள் மங்கி தனிமனித விழுமங்கள் மழுங்குவதால் காலம் காலமாக கடைப்பிடிச்சிட்டு வர்ற சரி, தவறோட இலக்கணம் காலாவதியாகிட்டு வருதுன்னு தோணுது. அதோட வெளிப்பாடு தான் இந்தக் கதை.

அநிருத்தன், மிகுகாதல் இரண்டையும் முடிக்கணும் முயற்சி செய்திட்டு தான் இருக்கேன் என்னவோ அந்த முயற்சி சித்தியாகலை. இடையிலே இந்தக் கருத்து மனசுலே வந்ததாலே சிறுகதையா எழுதிட்டேன்.

Stay blessed readers.