அத்தியாயம் 24 :

தாரிக்கை பற்றி எந்த உண்மையும் இது வரை அவளுக்குத் தெரியாது. தன்னைப் போல் அவனையும் யாரோ மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று தான் நினைத்தாள். அதாவது ரூபன் விஷயத்தில் நடந்ததைப் போன்று.

“என்ன ஷாக்கிங்கா இருக்கா?” என்றான் தீரன் அவளிடம். அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க,

“இப்ப என்ன பண்ற? உன் அண்ணனை என்கிட்ட பேசச் சொல்ற” என்றான் தாரிக்கிடம்.

“ம்ம் இந்தா கால் பண்ணு” என்றவுடன் வேகமாய் அழைத்திருந்தான் தாரிக்.

“என்னடா என்ன சொல்றான் அந்த ஏசிபி?” என்றான் எதிர் முனையில் ஜித்தேஷ்.

“மாமனார் வீட்டுக்கு அனுப்பி வச்ச உன் தம்பியை சிறப்பா கவனிச்சுட்டு இருக்கேன்டா பொறம்போக்கு” என்றான் தீரன்.

“என்கிட்ட இப்படி பேசக் கூடாது ஏசிபி. அப்பறம் என்ன நடக்கும்னு உனக்குத் தெரியாமையா இருக்கும்” என்றான் ஜித்தேஷ்.

“தெரியாம இருக்குமா மிஸ்டர் பொறம்போக்கு. உன் தம்பியை என்கிட்ட அனுப்பி வச்சு ஹீரோயிசம் காட்டுறியோ? அதான் உன் தம்பிக்கு காட்டு காட்டுன்னு காட்டிருக்கேன். இன்னும் ஒரு அடி அடிச்சா செத்துடுவானே என்ன பண்ணலாம்?” என்றான் தீரன்.

விவேக் கலவரத்துடன் தீரனைப் பார்த்திருக்க, மொழியோ அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஆள் தெரியாம பேசிட்டு இருக்க ஏசிபி. ஒண்ணுல்ல ரெண்டுல்ல ஆயிரக்கணக்குல இருக்கு வீடியோ. எல்லாருமே ஸ்டூடண்ட்ஸ். மொத்தமா லீக் பண்ணேன்னு வை, நாளைக்கு தமிழ்நாடே கதி கலங்கிப் போகும்” என்று எதிர்முனையில் ஜித்தேஷ் எகிறினான்.

“டேய் பண்ணிக்கடா..!” என்றான் தீரன் அசால்ட்டாய்.

“அதி” என்று விவேக் வேகமாய் அவன் கைகளைப் பிடிக்க,

“பின்ன என்ன விவேக்? ஓவரா பூச்சாண்டி காட்டுறான்?  நம்மளைப் பார்த்தா சொம்பப் பய மாதிரி தெரியுதா இவனுக்கு. கிரிமினல் இவனுக்கே மூளை வேலை செய்யும் போது, இவனுங்க கூடவே குடித்தனம் நடத்திட்டு இருக்கோமே? அப்போ நம்ம மூளையும் கிரிமினலா யோசிக்காது?” என்றான்.

கேட்டுக் கொண்டிருந்த ஜித்தேஷ் முகம் ஆத்திரத்தில் அவசரமாய் யோசிக்க,

விவேக்கின் அழுத்தத்தில் நிதானமான தீரன்,

“டேய் பொறம்போக்கு, நீதான் இதுக்கெல்லாம் காரணம்னு எனக்குத் தெரியும். எல்லாத்துக்கும் மூளையா இருந்ததே நீதான்னு தெரியும். இப்ப என்ன செய்யற? சும்மா என்கிட்ட ஏசிபி ஏசிபின்னு பொங்காம பொத்திகிட்டு வீடியோ கால் வந்து உன் தம்பி நிலைமையை பார்க்குற” என்றவன் தாரிக்கை வீடியோவில் காட்ட, தாரிக்கின் நிலை கண்டு கொதித்து எழுந்தான் ஜித்தேஷ்.

“டேய்” என்று அவன் போனிலேயே கத்த,

“அடங்குடா” என்றான் தீரன்.

“தேவையில்லாம அவன் மேல கையை வச்சுட்ட தீரன்” என்றான் கோபமாய்.

“உன் தம்பி மேல மட்டுமா கையை வச்சேன்?” என்று யோசிப்பவன் போல் பாவனை செய்தவன்,

“இப்போ என்ன பண்ற? நான் சொல்ற வரைக்கும் வரைக்கும் அமைதியா இருக்குற. ஒரு வீடியோ லீக் ஆகக் கூடாது. மீறி ஆச்சு?” என்றான் தீரன்.

“என்னடா செய்ய முடியும் உன்னால. என் தம்பி மேல கையை வச்சிருக்க. இதுக்கு மேலயும் நான் சும்மா இருப்பேனா?” என்றான் ஜித்தேஷ்.

“இருந்துதான் ஆகணும்டா வென்று.  சரக்கு சரக்கு.. ஐநூறு கோடி ரூபா சரக்கு..அந்தமான் கடலு…கண்டெயினர் புல்லா என் கண்ட்ரோல்ல தான் இருக்குடா டுபுக்கு. ஒரு வீடியோ லீக் ஆனாலும் உன் சரக்கு மொத்தமும் புஸ்சு தான். அப்பறம் என்ன? நான் ஒன்னும் செய்ய வேண்டியது இல்லை, தாய்லாந்து டீலர் அவனே உன்னை தேடி வந்து போடுவான். எனக்கு வேலை மிச்சம் பாரு” என்றான் சொடக்கெடுத்தபடி.

“ஹேய்..! அப்படில்லாம் எதுவும் பண்ணிடாத” என்று ஜித்தேஷ் அலற,

“நிம்மதியா ஒருத்தனை கல்யாணம் பண்ண விடுறிங்களாடா? ரெண்டு நாள் கழிச்சு உங்களை டீல் பண்ணலாம்னு நினைச்சேன். ஆனா இப்பவே பண்ணியாகனும்னு அடம் பிடிச்சது நீயா இல்லை நானா?” என்ற தீரனின் பேச்சில் விவேக்கிற்கு சிரிப்பு வர, ஜித்தேஷ் மிரண்ட முகத்துடன் இருந்தான்.

“இப்ப ஒரு டீலுக்கு வருவோமா? உன்கிட்ட இருக்குற மொத்த வீடியோஸ் ஹார்ட் காப்பிஸ் எல்லாமே எனக்கு வேணும். அப்பறம் மொழி விஷயத்துல இனி தலையிடக் கூடாது. உன்கிட்ட இருக்குற ஸ்டூடன்ட்ஸ் பைல் புல்லா எனக்கு வேணும். அப்படி எனக்குத் தேவையானதை நீ செஞ்சுட்டா, உனக்குத் தேவையானதை நான் பண்றேன். ஐ மீன், உன்னோட சரக்கு சேப்ட்டியா போகும். அப்பறம் இந்த கேஸ்ல உன் பேரை இழுக்காமையே பைலை குளோஸ் பண்ணிடுறேன். என்ன டீலுக்கு ஓகேவா?” என்றவனை ஜித்தேஷ் நம்பாமல் பார்க்க, விவேக் அதிர்ச்சியுடன் பார்த்தான்.

“உன்னை எப்படி நம்புறது?” என்றான்.

“எப்படியும் உன்னை பிடிச்சு உள்ள போட்டாலும் புதுசா இன்னொருத்தன் வருவான். உன்னை டீலரா பிடிச்ச மாதிரி இன்னொருத்தனை பிடிக்கத் தெரியாதா அவனுகளுக்கு? எதுக்கு ரிஸ்க் எடுப்பானேன். பட் ஒன் கண்டிஷன் இனி ஸ்கூல் காலேஜ்க்கு சப்ளை பண்றதை நீ நிறுத்திக்கணும்” என்றான் தீரன்.

“எனக்கு யோசிக்க டைம் வேணும்” என்றான் ஜித்தேஷ்.

“தாராளமா யோசி. நாளைக்கு நான் கொஞ்சம் பிசி. நீ ஆற அமர யோசிச்சுட்டு சொல்லு. வேற பிளான் ஏதாவது பண்ண, அப்பறம் லங்காவி தீவுல நிறுத்தி வச்சிருக்கியே அந்த சரக்கையும் டோட்டலா முடிச்சு விட்ருவேன் ஜாக்கிறதை. இப்ப வந்து உன் தம்பியை அள்ளிட்டு போ. இவனை வச்சு நான் என்ன பண்ண?” என்றவன்,

“விவேக் சாரை போய் வழியனுப்பி வச்சுட்டு வா. செத்து கித்து போய்ட்டான்னா லாக்கப் டெத்துன்னு அதுக்கு வேற உசுர வாங்குவானுக” என்றவன் ஆசுவாசமாய் அமர்ந்தான். விவேக் தாரிக்கை இழுத்துக் கொண்டு போக, நடந்த அனைத்தையும் பார்த்து பிரம்மை பிடித்தவள் போல் நின்றிருந்தாள் வெண்மொழி.

சற்று நேரம் கழித்து வந்த விவேக்,

“ஏன் அதி இப்படி ஒரு டீல்? அவன் இதுக்கு ஒத்துக்குவானா?” என்றான்.

“பர்ஸ்ட் அவன்தான் இங்க ஹெட்ன்னு நாம நம்பிட்டு இருக்கோம்னு அவனுக்குத் தெரியனும். அப்பத்தான் அவனுக்கு  மேல இருக்குறவன் இப்போதைக்கு நம்ம வம்புக்கும் வர மாட்டான். நமக்கும் கேஸ்ல மூவ் பண்ண ஈசியா இருக்கும். எப்படியும் டீலுக்கு ஓகே சொல்லிடுவான்” என்றான் தீரன்.

“அந்த சரக்கு இருக்குற இடத்துல எல்லாம் அவன் கன்பார்ம் பண்ணா உண்மை தெரிஞ்சுடுமே?” என்று விவேக் புரியாமல் கேட்க,

“நான் பொய் சொன்னேன்னா நினைக்குற? எல்லாம் நம்ம கண்ட்ரோல்ல தான் இருக்கு விவேக்” என்றான்.

“எப்படி மச்சான்? நானும் உன்கூடவே தான் இருக்கேன்” என்றான் ஆதங்கத்துடன்.

“நம்ம என்ன மத்தவங்க மாதிரி லவ்வர் கூட கப்பல்ல சுற்றுப் பயணமா போனோம். போன வேலையை சிறப்பா முடிக்க வேண்டாம்?” என்றான் மொழியைப் பார்த்துக் கொண்டே.

“அதி போதும். பாவம் அவங்க முகமே வாடிப் போயிருக்கு” என்றான் விவேக் மெதுவான குரலில்.

“அது என்னைக்கு சிரிச்ச மாதிரி இருந்திருக்கு?” என்றான் கடுப்புடன்.

“அதி ஓவரா பண்ணாத. அவங்களே பயந்து போயிருக்காங்க. நீயும் சேர்ந்து பயப்படுத்தாத?” என்றான்.

“விவேக்! இனி ஒவ்வொரு மூவ்மெண்ட்டும் ரொம்ப கவனமா இருக்கணும். எந்த இடத்துலையும் பிசகக் கூடாது. எவிடென்ஸ் ஒன்னு கூட மிஸ்ஸாகிடக் கூடாது” என்றவன் அலைபேசியில் ராஜன் அழைப்பில் வர,

“நிம்மதியா தூங்குங்க சார். உங்க பொண்ணை இங்க யாரும் எதுவும் பண்ணிட மாட்டோம். அவங்க சேப் தான். நான் என் கூடவே கூட்டிட்டு வந்திடுறேன்” என்றவனின் பேச்சில் தான் ராஜன் நிம்மதி அடைந்தார்.

“திடீர்ன்னு அந்த பையன் வரவும் நான் பயந்தது உண்மை தான் தீரன். ஆனா அவனுக்கு எங்க இருந்து அவ்வளவு தைரியம் வந்துச்சுன்னு தான் தெரியலை. என்னைக் கண்டாலே என்கிட்ட பேசக் கூட பயப்படுவான்” என்றார்.

‘வேறென்ன எல்லாமே நடிப்பு தான்’ என்று எண்ணியவன்,

“ஒரு அசட்டு தைரியம் தான் சார். வேறென்ன இருக்கப் போகுது?” என்று பேசி விட்டு மொழியைப் பார்க்க, அவளோ இன்னமும் நின்று கொண்டு தான் இருந்தாள்.

“என்ன வேண்டுதலா? வந்து உட்கார்” என்றான் கடுப்புடன்.

“நான் வீட்டுக்குப் போகணும்” என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.

“அடிங்க..! நான் என்ன ட்ரான்ஸ்போர்ட் சர்வீஸா நடத்துறேன். ஏன் அவன் கூட வரும் போது தெரியலையா? வீட்டை விட்டுத் தான் வர்றோம்னு” என்றான்.

“மச்சான் பொறுமையா பேசு. நீ வேணும்னா அவங்களை கூட்டிட்டு கிளம்பு. நான் இங்க பார்த்துக்கிறேன்” என்றான் விவேக்.

“இல்ல விவேக்! என்ன இருந்தாலும் அந்த ஜித்தேஷை நம்ப முடியாது. நான் இங்க இருக்குறது தான் சரி. நீ போய் ரெஸ்ட் எடு. நான் பார்த்துக்கிறேன்” என்றான் தீரன்.

விவேக் அவனின் அறைக்கு சென்று விட,

அவளை முறைத்தவன் “அங்க நான் ரெஸ்ட் எடுக்குற ரூம் இருக்கு. தூங்குறதுன்னா போய் தூங்கு” என்றான் தகவலாய்.

அவள் சுற்றும் முற்றும் பார்க்க,

“அது என் பர்சனல் ரூம். இந்த ரூமைத் தாண்டி யாரும் அங்க வரமாட்டாங்க. சோ போய் ரெஸ்ட் எடு” என்றான் மீண்டும்.

“எனக்கு பசிக்குது” என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.

“ஏன் லவ்வர் கூட ஓடி வரும் போது சாப்பிட்டு வரலையா? அவ்வளவு அவசரம் ம்ம்” என்றவனை முறைத்தவள்,

“என்னை வேற என்ன பண்ண சொல்றிங்க? நீங்க தான சொல்லிட்டு வந்திங்க, நான் பார்த்துக்கிறேன். நீ இப்ப இருக்குற மாதிரியே மெயின்டெயின் பண்ணுன்னு. அதான் வந்தேன்” என்று வேகமாய் ஆரம்பித்து மெதுவாய் பேச்சை முடித்தாள்.

“மெயின்டெயின் பண்ணத் தான் சொன்னேன். அதுக்காக இப்படி பயந்து அவன் பின்னாடி வர சொல்லலை. போன் பண்ணி எவன் மிரட்டியிருந்தாலும் செய்ய முடியாதுடான்னு தைரியாமா சொல்லிட்டு போனை வச்சிருக்கணும். இல்லையா எனக்கு இன்பார்ம் பண்ணியிருக்கணும். அதை விட்டுட்டு ஆட்டுக்குட்டி மாதிரி அவன் பின்னாடி வந்து நிக்கிற?” என்றான் கொஞ்சமும் கோபம் குறையாமல்.

“அப்படி தைரியமா சொல்ற இடத்துல நான் இல்லை” என்றவள் தன் முகத்தை அவனிடமிருந்து மறைக்க முற்பட,

“உன்னை எதை வச்சு மிரட்றான்னு எனக்கும் தெரியும்” என்றவனை அதிர்ந்து போய் பார்த்தவள்,

“உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றவளுக்கு பேச்சே வரவில்லை.

“இப்ப அது தான் முக்கியமா?” என்றான்.

“நீங்க அதைப் பார்த்திங்களா?” என்றவளுக்கு அழுகையே வந்துவிடும் போல் இருந்தது.

“ஆமாடி! ஹாலிவுட் படம் ரிலீஸ் ஆகியிருக்கு பாரு. ஆர்வமா பார்க்குறதுக்கு? வந்துட்டா” என்று வார்த்தைகளை கடித்துத் துப்பினான்.

“நீங்க என்ன இவ்வளவு கோபப்படுறிங்க?” என்றவள் அவனின் முறைப்பில் சட்டென்று வாயை மூடிக் கொண்டாள்.

“சாப்பிட என்ன வேணும்? ஆர்டர் பண்றேன்” என்றான்.

“இப்படி கோபத்தோட ஒன்னும்  எனக்கு வாங்கித் தர வேண்டாம். கேப் புக் பண்ணி குடுங்க. நான் வீட்டுக்கு கிளம்புறேன்” என்றாள்.

“என்னடி ஏதோ பிக்னிக் வந்த மாதிரி அசால்ட்டா கிளம்புறேன்னு சொல்ற?” என்றான் வந்த எரிச்சலை மறைத்துக் கொண்டு.

“இப்போ என்னை என்ன செய்ய சொல்றிங்க தீரா. அதான் உங்களுக்கே தெரிஞ்சிருக்கு தான. நான் ஏன் அமைதியா இருக்கேன்னு. அப்பறம் நீங்க தான சொல்லிட்டு வந்திங்க, எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்குறேன்னு. எப்படியும் டாடி உங்களுக்கு போன் பண்ணுவார், நீங்க ஏதாவது பண்ணுவிங்கன்னு தெரியும். அப்பறம் நிஜமாவே தாரிக் நல்லவன்னு தான் நினைச்சேன். அவனையும் என்னை மாதிரி மிரட்டியிருப்பாங்கன்னு நினைச்சேன். ஏன்னா? அவன் ஓவ்வொரு தடவை என்னை மிரட்டும் போதும், நான் சொல்ற படி தான் செய்யணும். உன் அப்பன் மானத்தை வாங்காம விட மாட்டேன். அதான் உன் பின்னாடி ஒருத்தன் சுத்துறானே அவனுக்கு ஓகே சொல்லு. அவன்கூட அங்க போ, இங்க போன்னு அவன் சொன்னதை எல்லாம் செய்ய வச்சான். ஆனா தாரிக் இப்படி இருப்பான்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணலை” என்றாள் சோர்ந்த குரலில்.

“கொஞ்சம் மூளையை கசக்கி யோசிச்சிருந்தா புரிஞ்சிருக்கும். எங்க உனக்குத் தான் அதை யூஸ் பண்ணவே பிடிக்காதே” என்றவனை இப்போது மொழி முறைத்தாள்.

“நல்ல முன்னேற்றம் தான்” என்றான்.

“என்ன?”

“ம்ம் முகத்தை பார்க்க யோசிச்ச பொண்ணு, முறைக்கிற அளவுக்கு முன்னேறியிருக்குறியே? அதை சொன்னேன்” என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே உணவும் வந்து விட்டிருந்தது.

“எப்போ ஆர்டர் போட்டிங்க ஏசிபி?” என்றவளை இழுத்துக் கொண்டு போனவன்,“பேசாம உட்கார்ந்து சாப்பிடு” என்றான்.

அந்த அறையை சுற்றிப் பார்த்தவள்,

“வொர்க்கிங் பிளேஸ்ல இப்படி ஒரு ரூமா. பேஷ் பேஷ்.. அப்போ வீட்டுக்கு போகலைன்னா இங்கயே தூங்கிடுவிங்களா?” என்றாள்.

“ம்ம் ஆமா! எங்களுக்கு வேலையெல்லாம் இருக்காது. ரெஸ்ட்டோ ரெஸ்ட்டு தான். ஆபீஸ் வந்த உடனே இங்க வந்து நீட்டி முழக்கி படுத்துடுவேன்” என்று கடுப்புடன் கூறியவனைப் பார்த்து சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

“நீங்க சாப்பிடலையா?” என்றாள்.

“கொலைவெறில இருக்கேன். பேசாம சாப்பிட்டு தூங்கு. வீட்டுக்கு போகும் போது டிராப் பண்றேன். இல்லைன்னா அங்கிளை கார் அனுப்ப சொல்றேன்” என்றான்.

“இல்ல, உங்க கூடவே வரேன்” என்றாள் வேகமாக.

“ம்ம் ஓகே” என்றவன் நகரப் போக, அவனின் கையைப் பிடித்திருந்தாள் மொழி.

தீரன் அவளைப் புரியாமல் பார்க்க,

“இந்த ரூம்ல கேமரா இருக்கா?” என்றாள்.

“இல்லை” என்று அவன் சொல்லி முடிக்கவில்லை. அவனை தாவி அணைத்துக் கொண்டாள் மொழி.

“ஹேய் நான் யூனிபார்ம்ல இருக்கேன்டி” என்றவன் கரங்கள் தாமாக வளைந்து அவளை அணைத்துக் கொள்ள,

“தேங்க்ஸ் ஏசிபி” என்றாள் கமறிய குரலில்.

“எதுக்கு உன் லவ்வர்கிட்ட இருந்து பிரிச்சதுக்கா?” என்றான் கடுப்புடன்.

“அப்படியும் வச்சுக்கலாம்” என்றவள் விலகப் போக,

“இல்ல கொஞ்ச நேரம் அப்படியே இரு” என்றவன் மீண்டும் தனக்குள் இழுத்துக் கொண்டான்.

“அந்த வீடியோஸ் எல்லாம் கண்டிப்பா வெளிய வராதுல தீரா” என்றவளின் பயத்தில் அவனுக்கு என்னவோ போல் ஆனது. இன்னமும் அந்த வீடியோவை நினைத்து தான் பயப்படுகிறாள் என்று எண்ணியவனுக்கு உண்மை தெரிந்தால் என்ன ஆவாளோ என்ற பயம் வேறு. அவளைச் சுற்றி நடப்பதை அறிந்து கொள்ளாமல் இருக்கும் வரை அவள் இந்த பயத்துடன் மட்டும் இருக்கட்டும் என்று எண்ணியவனாய்,

“கண்டிப்பா வராது. நான் தான் சொல்றேன்ல. நான் பார்த்துக்கிறேன். நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு மொழி” என்றான்.

“நீங்களும் சாப்பிடுங்க” என்றவள் அவனையும் வற்புறுத்தி சாப்பிட வைத்திருந்தாள்.

அனைத்தையும் முடித்து அவன் கிளம்ப நடு இரவிற்கு மேல் ஆனது. அவனுக்கு அன்று வீட்டிற்கு செல்லும் எண்ணமே இல்லை. ஆனால் மொழி இருப்பதால் கிளம்பிவிட்டான்.

அவளை வீட்டில் விட்டவன்,”உன்னோட போன் என்கிட்டையே இருக்கட்டும். இனி இந்த போனை யூஸ் பண்ணு” என்று புத்தம் புதிய ஐ போனை அவள் கையில் திணித்தவன், கிளம்பிவிட்டான். ஏற்கனவே அவன் ராஜனுக்கு அழைத்து பேசியிருந்தபடியால், சங்கரி அவளுக்காக காத்துக் கொண்டிருந்தார்.

வீட்டிற்குள் நுழைந்தவளை சங்கரி முறைக்க, மொழியோ விட்டால் போதும் என்று சென்று விட்டாள்.

“நடக்குறது எதுவும் சரியா படலை” என்று கணவரிடம் முனுமுனுக்க, ராஜன் பார்த்த பார்வையில் அடங்கிப் போனார் சங்கரி.

மறுநாள் குறித்த நேரத்தில் ரிஜிஸ்டர் ஆபீசில் வைத்து, குடும்பத்தினர் முன்னிலையில் அவளை சட்டப்படி மனைவியாக்கி இருந்தான் அதி தீரன்.

நடந்தது அனைத்தும் கனவு போல் இருக்க, அந்த சூழ்நிலையின் கனத்தைத் தாங்க முடியாமல் அழுதவளைத் தேற்றியவன்,

“இன்னைக்காவது இந்த வாட்டர் டேங்கை கொஞ்சம் குளோஸ் பண்ணி வைக்கலாம்” என்று சிரிப்புடன் கூறியவனை முறைத்தவள் சற்று சிரித்திருந்தாள்.

“இப்போ தான் பொண்ணு மாதிரி இருக்க?” என்றான் சிரிப்பை அடக்கி.

“அப்போ இத்தனை நாள் எப்படி இருந்தேன்?” என்றாள் கடுப்புடன்.

“உண்மையை சொல்லிடுவேன், ஆனா நீதான் வருத்தபடுவ” என்று சொல்லி சிரித்தவனுடன் தானும் சேர்ந்து சிரிக்க, ராஜ ராஜன் இப்போது தான் சற்று நிம்மதியாக உணர்ந்தார்.

“மேரேஜ்க்கு ஏன் எல்லாரும் புடவை மட்டும் ப்ரிபர் பண்றிங்கன்னு இப்போ தான் தெரியுது” என்றான் அவள் காதருகில் குனிந்து.

“என்ன தெரியுது?” என்றாள்.

“எல்லாமே தெரியுது” என்றான் நமட்டு சிரிப்புடன்.

“ஏசிபி” என்றவள் அவனை முறைக்க,

“மாப்பிள்ளையோட பார்வை பொண்ணை விட்டு எங்கயும் நகர்ந்துடக் கூடாதுன்னு தான் புடவை கட்ட சொல்றாங்க போல” என்றான் ஒரு மார்க்கமாய்.

“ஏன் அப்படி சொல்றிங்க?”

“பின்னே! சுமாரான பிகர் நீ கூட புடவை கட்டவும் சூப்பர் பிகர் ஆகிட்டியே. நீ சுமாரா இருக்கும் போதே என் பார்வை எங்கயும் நகராது. இப்போ சூப்பர் பிகரா வேற இருக்க, சொல்லவா வேணும்?” என்றவனை பொய் கோபத்துடன் பார்த்தவள்,,

“உங்களுக்கு நான் சுமாரான பிகரா?” என்றவள்,”அப்பறம் ஏன் இந்த பெட்டர்மாஸ் லைட்டே தான் வேணும்னிங்க?” என்றாள் கடுப்புடன்.

“அதுவா, கோணலா இருந்தாலும் என்னுடையதாக்கும் அப்படின்ற மாதிரி தான், சுமாரா இருந்தாலும் என்னுடையதாக்கும்” என்றவன் வாய் விட்டு சிரிக்க, அவனைப் பார்த்த விவேக்கின் முகத்தில் அரும்பிய புன்னகை அங்கு நின்றிருந்தவளைக் கண்டதும் துணி கொண்டு துடைத்தார் போல் அப்படியே நின்று போனது. சட்டென்று திரும்பிக் கொண்டான்.

“ரொம்ப நன்றி தீரன். நான் இன்னைக்குத்தான் நிம்மதியா தூங்குவேன்” என்ற ராஜ ராஜன்,

“இன்னொரு விஷயம் கேட்பேன், நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது” என்றார்.

“சொல்லுங்க அங்கிள்” என்றான்.

“இல்ல, ரிஷப்ஷன் முடியற வரைக்கும் மொழி எங்க வீட்லயே இருக்கட்டுமே” என்றார்.

“என்னண்ணா சொல்றிங்க? மொழி அங்கயே இருக்குறதுக்கு எதுக்கு இவ்வளவு அவசரமா கல்யாணம் பண்ணனும்?” என்றார் வானதி.

“நான் அப்படி சொல்ல வரலைமா. தீரனும் அது வரைக்கும் நம்ம வீட்ல இருக்கட்டுமே. ரிஷப்ஷன் முடிஞ்சதுக்கு அப்பறம் ரெண்டு பேரையும் அங்க அனுப்பி வைக்கிறேன்” என்றார்.

“கண்ணா லட்டுத் தின்ன ஆசையா?” என்றான் விவேக், தீரன் காதருகில்.

“அச்சோ அண்ணா, அதிக்கு அதெல்லாம் பிடிக்காது. வீட்டோட மாப்பிள்ளையா ஒரு நாள் கூட இருக்க மாட்டான், இல்லையா அதி” என்றார் வானதி.

“யார் சொன்ன? எனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லை அங்கிள். சட்டுன்னு மேரேஜ் முடிஞ்சதால உங்களுக்கு மொழியை பிரியறது கஷ்ட்டமா இருக்கும். ஒரு பத்து நாள் அர்ஜஸ் பண்றதுல எனக்கொரு பிரச்சனையும் இல்லை” என்றவனை வானதி முறைத்திருந்தார்.

“என்னங்க இவன் ஒரே நாள்ல இப்படி அந்தர் பல்டி அடிச்சுட்டான்” என்று நரேந்திரனிடம் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தார்.

“நம்ம வீட்டுக்காவது வந்துட்டு போவியா? இல்லை அப்படியே அங்கேயே போயிடுவியா?” என்றார் வானதி ஆற்றாமையுடன்.

வானதியின் தோளில் கையைப் போட்டபடி அவரை தனியே அழைத்து சென்றவன்,

“நிஜமா என்மேல நம்பிக்கை இல்லையா வானதி?” என்றான்.

“அதெல்லாம் நிறைய இருக்கு அதி. ஆனா எலி ஏன் எஸ்கலேட்டர்ல போகுதுன்னு தான் யோசிக்கிறேன்” என்றார் வானதி.

“இப்படி யோசிச்சு அப்பப்போ என் அம்மான்னு ப்ரூவ் பண்ணிட்டே இருங்க, ஓகே வா” என்றவனை ஆதுரமாய் பார்த்தவர்,

“இப்போ உனக்கு சந்தோசம் தான அதி?” என்றார் கண்கள் கலங்க,

“டவுட் வேறைய உங்களுக்கு?” என்றான்.

“வெளிய சொல்லலைன்னாலும் நீ எவ்வளவு பீல் பண்ணன்னு எங்களுத்தான் தெரியுமே” என்றார்.

“அதெல்லாம் பாஸ்ட்மா. இனி நடக்கப் போறதை பத்தி மட்டும் யோசிப்போம்”  என்று முகம் முழுவதும் சிரிப்புடன், அன்னையை வம்பிழுத்தபடி பேசிக் கொண்டு வந்தவன் மொழிக்கு முற்றிலும் புதிதானவன்.

“என்னடி பிடிக்கலை பிடிக்கலைன்னு சொல்லிட்டு ஓவரா சைட் அடிச்சுட்டு இருக்க?” என்று பிரகதி தங்கையை தோளில் இடிக்க,

“அதானே, நான் சொன்னப்ப எல்லாம் என்னைய எப்படி முறைச்ச மொழி” என்றான் விஹானும் தன் பங்கிற்கு.

“அப்பல்லாம் அறிவைக் கடன் குடுத்திருந்தேன்” என்றவளின் பதிலில் அவர்கள் சிரிக்க,

“ஏன் சிரிக்கிறிங்க?”

“இல்ல, அதெப்ப உனக்கு இருந்துச்சு, கடன் குடுக்க?” என்று விஹான் கேட்க,

“உனக்கு அக்காவா இருந்தா அதெல்லாம் எப்படி தம்பி இருக்கும்?” என்றாள்.

“ங்கான்..! பழைய மொழி மீண்டும் திரும்புறாங்கப்போ” என்றான் விஹான்.

“இல்ல இது புது மொழி.. அதாவது தீரனின் மொழி” என்றபடி வந்து அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டான் தீரன்.