பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்து மரியாதை செய்த ரத்னதீபனின் தோள் தட்டிய வேலுச்சாமி தன் இருக்கையில் அமர்ந்து அவனையும் அமரச்சொன்னார்.
“கூப்பிட்டிருந்தீங்கன்னு சொன்னாங்க தலைவரே.” என ஆரம்பித்தான் ரத்னதீபன்.
“உன் பேர் அடிக்கடி நம்ம டெஸ்குக்கு வருதயா.” என்றார் அவர்.
நல்லவிதமாக சொல்கிறாரா இல்லை குதர்க்கமாக சொல்கிறாரா என்று ரத்னதீபன் ஆராய்ச்சிப் பார்வை பார்க்க, சுற்றி வளைத்து விஷயத்திற்கு வந்தார் வேலுச்சாமி.
“சின்ன வயசுல நானும் நல்லது பண்ணனும்னுதான் அரசியலுக்கு வந்தேன். என்ன பண்றது நல்லது பண்ணா அதிகாரத்துல நிலைக்க முடியாதுங்குற நிலைமை வந்துடுச்சு. நாம மட்டும் சேவை தொண்டுனு இருந்தோம்னா போதாது நமக்கு மேல இருக்கறவன் நினைக்கணும். நான் துடிப்பா இருந்தப்போ லஞ்சம் வாங்காம ரெண்டு ப்ராஜெக்ட் முடிச்சி கொடுத்தேன், பலன் என்ன தெரியுமா? கட்சிக்கு வருமானம் கொண்டு வரமாட்டேங்குறேன்னு என்னை அமைச்சர் பதவிலேந்து தூக்கிட்டாங்க. இப்போ உள்ள பசங்க எல்லாம் ரொம்ப விவரம்னு நினைக்குறேன்.” என பெரிதாக சிரிக்க, அவர் என்ன சொல்ல வருகிறார் என புரிந்து போனது ரத்னதீபனுக்கு. லஞ்சம் வாங்காமல் நேர்மையாக வேலை செய்தால் அதிகாரம் உன் கையில் இல்லை என்றவரின் கூற்றை ஏற்பவன் போல்,
“அதான் நான் எந்த பிராஜெக்ட்லையும் கை வைக்குறதில்லைங்க தலைவரே.” என் வரையில் சரியாக இருக்கிறேன் உங்களுக்கு வருகின்ற கிம்பளத்தில் நான் கை வைக்கவில்லை என்றான் இவனும்.
“அப்புறம் ஏன்யா உன் தொகுதிக்கு கொண்டு வர திட்டம் எல்லாத்துக்கும் தலையாட்டாம நீயா ஒரு கணக்கு சொல்ற? உனக்கு வேணாம்னா அதை எங்க பக்கம் அனுப்புறதை விட்டுட்டு மெட்டீரியல்ஸ் எல்லாம் இப்படி இருக்கணும்னு அப்படி இருக்கணும்னு கண்டிஷன் போடுறியாம்? அந்தந்த வேலையில இருக்குறவங்களுக்குதான் எதை எங்க போட்டா சரியா இருக்கும்னு தெரியும். நீ என்னமோ உனக்குன்னு தனியா டீம் வச்சிக்கிட்டு செயல்படுறேனு தகவல் வருது? கட்சி மேலிடம் வரைக்கும் தகவல் போயிடுச்சு.” இவன் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என்பது போல் பேச, பல்லைக் கடித்தவன்,
“என்னோட வசதியை மட்டும்தான் தலைவரே நான் சுருக்கிக்கிட்டேன். மத்தபடி திட்டங்கள் சரியா போய் சேருதான்னு கவனிக்குறேன், எல்லாம் எதிர்கால ஓட்டுக்காக பண்றது. அதோட ரிசல்ட்டை நீங்க அடுத்த எலெக்ஷன்ல பாப்பீங்க.” என்றான் ரத்னதீபனும் கொஞ்சம் நிமிர்வாய்.
“இப்போதான் எலெக்ஷன் முடிஞ்சிருக்கு. அடுத்தது வர இன்னும் அஞ்சு வருஷம் இருக்கு. பொறுமையா ஓட்டுக்கு வேலை பாக்கலாம். நீ எல்லாத்துலயும் தலையிடாத. அதுவும் ஹோட்டல் கட்டக்கூடாது ஸ்கூல் கட்டணும்னு எல்லாம் நீ சொல்லக்கூடாது. அவன் அவன் ஆயிரம் பிரச்சனையை சந்திச்சி அவன் பொழப்பை பாக்கலாம்னு இருந்தா நீ சுலபமா மண் அள்ளி போடலாம்னு பாக்குற.”
இப்போது இன்னும் தெளிவாக விளங்கிவிட்டது ரத்னதீபனுக்கு. தானமாக பள்ளி கட்ட கொடுத்த இடத்தில் சொகுசு விடுதி கட்டப்போவது பற்றி இவன் விசாரிக்கவும் இவர் வரவழைத்திருக்கிறார். சமீபகாலமான நகரத்தின் அபிரிதமான வளர்ச்சியில் சிறிய பஞ்சாயத்து பகுதிகள் சில மக்கள் நெரிசல் அதிகமாகும் இடமாக மாறிக்கொண்டிருக்கிறது. அப்படியான ஒரு இடம்தான் அது. இன்னும் நான்கைந்து ஆண்டுகளில் கோடிகளில் இருக்கும் அப்பகுதியின் விலை. சொகுசு விடுதி கட்டி தன் தலைமுறையை வளர்த்துவிட முயல்கிறார் வேலுச்சாமி. அவரை நேரடியாக பகைத்துக் கொள்வது தன் அரசியல் வாழ்க்கைக்கு உகந்தது அல்ல என்ற தெளிவு இருந்தது ரத்னதீபனுக்கு.
“நீங்க சொன்னா சரியா இருக்கும் தலைவரே.” என்று தலையாட்டிக்கொண்டான். இதற்கு மட்டும் உன்னை வரவழைக்கவில்லை என்பது போல் சென்றது அடுத்த பேச்சு. அவனுக்கு சுத்தமாய் ஒவ்வாதது.
“ஒருத்தர் உன்னை மீட் பண்ணனும்னு சொன்னாரு. வந்துட்டு இருக்காரு, அவர் வந்ததும் பேசலாம்.” என அவனுக்கு பழச்சாறு வரவழைத்து குடிக்க வைத்தார்.
சொன்னதை விட அந்த நபர் வர கொஞ்சம் தாமதமாக, இவனை காத்திருக்க சொல்லிவிட்டு உள்ளே சென்றார் வேலுச்சாமி. அலுப்புடன் பிரபுவைப் பார்த்து தலையசைத்தான் ரத்னதீபன். சமாதானமாய் பிரபு என்னவோ வாயசைக்க இவனும் ஏதோ முணுமுணுக்க என நேரங்கள் ஓடியது. சில மணி நேரங்கள் இவர்கள் பொறுமையை சோதித்துவிட்டு வந்து சேர்ந்தார் அந்த நபர். பார்த்ததும் அவரை மட்டுமல்ல அவர் தன்னை சந்திக்க வந்திருப்பது எதற்காக இருக்கும் என்ற யூகம் பிறந்தது. அகம் இறுக எதுவும் சொல்ல முடியாமல் பார்த்தான்.
ஆர்ப்பாட்டமாக அவரை வரவேற்று அமர வைத்த வேலுச்சாமி ரத்னதீபன் புறம் திரும்பினார், “சார் யாருனு தெரியும்ல? நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவர். சொல்லபோனா நம்ம கட்சிக்கே இவர் வேண்டப்பட்டவர்தான். நமக்கு ஃபண்ட் பண்றாரு. இவர் எதுக்கு இங்க வந்திருக்காருனு உனக்கே புரிஞ்சிருக்கும்யா. பார்த்து முடிச்சி கொடு.”
“தலைவரே என்னால என்ன பண்ண முடியும்? நான் அவ்ளோ பெரிய ஆள் இல்லை.” என்ன செய்வது பம்ம வேண்டுமே என பணிந்தான் ரத்னதீபன்.
“நீ யாருனு தமிழ்நாடு மொத்தத்துக்கும் தெரியும்யா. நீ சொன்னா மந்த்ரா பொண்ணு கேக்கும்யா. சார் படத்துல மந்த்ரா நடிக்கணும்னு விருப்பப்படுறாரு. அந்த பொண்ணு ஏதோ தப்பா புரிஞ்சிகிட்டு புடி கொடுக்க மாட்டேங்குது. நீதான் சம்மதிக்க வைக்கணும்.” உன்னை விடமாட்டேன் என்பது போல் வேலுச்சாமி அவனுக்கு அழுத்தம் கொடுத்தார்.
“அவங்களுக்காவே எழுதுன கேரக்டர் வச்சிருக்காரு டைரக்டர். ஆனா மந்த்ரா நடக்க மாட்டேன்னு அடம் பிடிக்குறாங்க. இப்போ மார்க்கெட்ல நல்ல ஃபேம் இருக்கு அவங்களுக்கு.” என அந்த தயாரிப்பாளரே பேசினார். முன்னர் அவளை தூற்ற முயன்று தோல்வி கண்டவர் இப்போது அவளுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் கண்டு இறங்கி வந்தார்.
“நான் எப்படி சார்? எனக்கும் அவங்களுக்கும் நட்பு ரீதியான பழக்கம்தான். நடிக்குறதும் நடிக்காததும் அவங்கவங்க விருப்பம்.”
“உனக்கும் நல்லா நடிக்க வருதே.” கிண்டல் போல் சொல்லிய வேலுச்சாமி, “இங்க பாருயா தெரிஞ்சோ தெரியாமலோ இவரால நீ லாபமடஞ்சிருக்க. அன்னைக்கு இவர் போட்டோ விடலைன்னா உனக்கு மந்த்ராவோட அறிமுகம் கிடைச்சிருக்குமா இல்லை நீதான் இப்போ என் முன்னாடி உக்காந்து பேசிட்டு இருப்பியா? வந்த வழியையும் அதை காமிச்சு குடுத்தவங்களையும் மறக்கக்கூடாது.” என சொல்ல, உள்ளுக்குள் இறுக்கம் உண்டானது ரத்னதீபனுக்கு. மந்த்ராவையும் இவனையும் இணைத்து கீழிறக்கப்பார்த்த தயாரிப்பாளர் ஏதோ தனக்கு நல்லது செய்துவிட்டது போல் வேலுச்சாமி பேசியதை சகிக்க முடியவில்லை ரத்னதீபனுக்கு. நோக்கம் சரியாக இருப்பினும் அதனை அடைய உபயோகப்படுத்திய கீர்த்தி நேர்த்தியில்லையே. அது புரிந்தாலும் ஏற்றுக்கொள்ள விழையவில்லை அவன்..
“அவருக்கு என்ன பகையோ அந்த போட்டோவை திரிச்சி விட்டுட்டாரு. அது முழுக்க முழுக்க அவரோட முடிவு எனக்காக நான்தான் உழைச்சி மேல வந்திருக்கேன்.”
“இப்போ என்னதான் சொல்ல வர?”
“என்னால இதுல எதுவும் செய்ய முடியாதுங்க தலைவரே. அதோட மந்த்ரா எனக்கு பிரென்ட் அவ்ளோதான். நான் சொல்லி எல்லாம் அவங்க கேக்க மாட்டாங்க.”
“என்னவோ நல்லவன் மாதிரி பேசுறியே. சரி விடு. எப்படி பாக்கணுமோ அப்படி பாத்துக்குறேன்.” என்ற வேலுச்சாமி அவனை கிளம்பச் சொல்லி தலையசைக்க, உடனே எழுந்துவிட்டான் ரத்னதீபன்.
பெயருக்கு அந்த தயாரிப்பாளரிடம் தலையசைத்து கிளம்பினான். பின்னோடு பிரபு தொற்றிக்கொள்ள, ரத்னதீபன் கோபத்தின் அளவு அவன் வண்டியில் தெரிந்தது.
“அண்ணே பொறுமை பொறுமை.” என பிரபு கத்திவிட, கொஞ்சம் நிதானித்தான்.
அலுவலகம் வந்ததும் விறுவிறுவென அறைக்குள் சென்று அமர்ந்தவன் அங்கிருந்த பெல் அழுத்த உதவியாளன் வந்தான்.
“ஏ.சி கூட போட்டு வைக்க முடியாதா உங்களால? மனுஷன் வெயில்ல காஞ்சி போய் வந்திருக்கேன். எனக்குன்னு வந்து சேர்ந்திருக்கீங்க பாரு.” வள்ளென்று அவனிடம் விழ, அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“இதோ இதோ போடுறேன் அண்ணே.” என சொல்லிக்கொண்டே அவசரமாக ஏ.சி போட்டுவிட்டு வேறெதுவும் வேண்டுமா என்று கேட்க அதற்கும் கத்தினான். பிரபு உள்நுழைந்து அவனை போக சொல்லிவிட்டு எதிரே அமர்ந்தான்.
“ஜுஸ் சொல்லியிருக்கேன். கொஞ்சம் கூல் ஆகுங்க.”
“எதுக்கு எல்லாம் ரெகமெண்டேஷன் வரானுங்க பாரு.” இன்னுமின்னும் கோபத்தில் முகம் சிவக்க நாற்காலியில் இங்குமங்கும் அசைந்துகொண்டே இருந்தான்.
“விடுங்க. சொல்றவங்க ஏதாவது சொல்லிட்டே தான் இருப்பாங்க. பாத்துக்கலாம் அண்ணே.” கொஞ்சம் கொஞ்சமாய் பேசிப்பேசி ரத்னதீபனை அமைதிப்படுத்தினான் பிரபு.
“நீயும் பாத்தீல்ல. பேசுற அவ்வளவும் விஷம். எங்க எதுவும் பண்ணி நாம மேல வந்துடுவோம்னு பழைய கதை பேசுறாரு. இடையில மட்டம் தட்ட அந்த பிரடியூசர். ஊர்ல இருக்குற எல்லா பெரிய தலையும் அந்த ஆளு தெரிஞ்சி வச்சிருக்காரு.”
“டேய் பிரபு, அந்த வேலுச்சாமியோட மொத்த ஆக்டிவிட்டியும் கண்காணிக்கணும்டா. கட்சிக்குள்ள அவர் மேல நிறைய பேருக்கு அதிருப்தி இருக்கு. அவர் சமூகத்தோட ஓட்டு வங்கியை காமிச்சு நம்ம கட்சியில மேல வந்துட்டாரு. எதுலையாச்சும் பெருசா சிக்குவாரு. ஆதாரத்தோட லாக் பண்ணி நமக்கு சாதகமா யூஸ் பண்ணிக்கணும்.” எனத் தீவிரமாக சொன்ன ரத்னதீபனை சற்று அதிர்ச்சியுடன் பார்த்தான் பிரபு.
“அண்ணே அவர் பெரிய இடம். நம்மாள அவரை நெருங்க முடியாது.”
“ரெண்டு வருஷம் முன்னாடி இப்போ உக்காந்திருக்குற இந்த சீட்டே பெரிய இடம் தான்டா நமக்கு. இவ்ளோ தூரம் வரலை. துணிஞ்சி இறங்கல? மடியில கனம் இருந்தாதான் பயப்படணும். நம்ம பைனாஸ் கரெக்ட்டா மேனேஜ் பண்ணிட்டா போதும். சொல்லிவச்சி பதவியை அடிச்சிடலாம்.” என்றவன் முகத்தில்தான் அத்தனை கனவுகள்.
“ஆனாலும் கொஞ்சம் பயமாதான் இருக்கு.” என்ற பிரபுவிற்கு இது பேராசையாய் தோன்றியது.
“உடனே பண்ணனும்னு சொல்லல. ஆட்சி அதிகாரம் நம்ம பக்கம் இருக்குனு அந்த ஆளு ஆடுவார். எவிடென்ஸ் கலெக்ட் பண்ணி வச்சிட்டு சமயம் பாத்து அடிச்சிடனும். அந்த ஹோட்டல் கட்டுற மேட்டர்ல நாம நேரடியா இறங்க வேண்டாம். நம்ம ஐ.டி டீம் வச்சி மேட்டரை வெளிய கசிய விடச்சொல்லு. படிக்குற பள்ளிக்கூடத்தை இடிச்சிட்டு சொகுசு பங்களா கட்டும் அமைச்சர்னு ட்ரெண்ட் ஆகட்டும். அவர் முன்னாடி பண்ண ஊழலும் வெளிய வரும். மக்கள் அதிகமா பேசுவாங்க, மனுஷன் கொஞ்சம் அடங்குவார். அந்த பண்ணையார் சைட் பேசி கோர்ட் மூலமா நாம மூவ் பண்ண வைக்கலாம்.” என யோசனைகளை வழங்கியவன்,
“மந்த்ராகிட்ட அந்த பிரடியூசர் பத்தி சொல்லணும்டா. அந்த ஆளை நம்ப முடியாது.” என்று சேர்த்துச் சொல்ல, யோசனையுடன் பார்த்தான் பிரபு.
“அவங்க பக்கம் பர்சனலா போக வேண்டாம்னு சொன்னீங்களே அண்ணே?”
“இப்போவும் பர்சனலா சொல்லல வேலை சம்மந்தமா தான் சொல்றோம். என்ன இருந்தாலும் நமக்கு நிறைய ஹெல்ப் பண்ணி இருக்காங்க. இப்படினு வார்ன் பண்ணிடலாம். அதுக்கு அப்புறம் அவங்க பிரச்சனை அது.”
மேற்கொண்டு செய்ய வேண்டியதெல்லாம் பேசிவிட்டு தொகுதிக்கு புறப்பட்டனர். அங்கு பார்வையிட வேண்டியவற்றை பார்வையிட்டு மீண்டும் அலுவலகம் வந்து மந்த்ராவிற்கு அழைத்து விஷயம் சொல்ல,
“நீங்கி ரொம்ப பிசியா? எப்போ கூப்பிட்டாலும் அவைலபில் இல்லைனு உங்க பி.ஏ சொல்றாரு? லாஸ்ட் மன்ந்த் அம்மாவுக்கு முடியல, ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருந்தோம். நீங்க வருவீங்கன்னு நினைச்சேன்.” என்று இயல்பாக மந்த்ரா கேட்க, இவன் முகம் கோணியது.
“என் வொய்ப்வோட வெளில போயிருந்தேன் மேடம்.”
“ஹான்… அன்னைக்கு பாத்தேன் தீபன். உங்ககூடவே வந்துட்டாங்களா?” என்று கேட்டவளின் குரலில் என்னவோ இருப்பது போல் தோன்றியது ரத்னதீபனுக்கு.