அவ நல்ல குணத்தை புரிஞ்சுக்கிட்ட கொஞ்ச பேரு அவளை நம்பினாங்க அருளு. ஆனா, எல்லாரும் ஒரே மாதிரி இருப்பாங்களா, என் குழந்தையை வார்த்தையாலேயே குத்தி கிழிச்சாங்க. ஏற்கனவே ஏன் சுமக்கறோம்ன்னு தெரியாம ஒரு குழந்தையை அவ சுமக்கிறா. அதுனால அவ படிப்பை இழந்து, மானம், மரியாதையை இழந்து, எதிர்கால வாழ்க்கையை இழந்து நிற்கிறா. இதுல எல்லாரும் கண்டபடி பேசவும், வீட்டுக்குள்ளேயே முடங்கி போயிட்டா. கிட்டத்தட்ட ரெண்டரை வருஷம் ஆயிடுச்சு. வெளிய வரதே இல்லை.

படிப்பை முடிக்க சொன்னோம் மாட்டவே மாட்டேன்னு சொல்லிட்டா. எப்படியாவது என் மக நிலைமையைப் புரிய வெச்சு ஒரு நல்லவனுக்கு அவளை கட்டி வைக்கணும்ன்னு தான் எங்களுக்கு ஆசை. எங்களுக்கு அப்பறம் அவளுக்கு ஒரு துணை வேணுமே! அதுக்கு தான் உள்ளே அடைஞ்சு இருக்கிறவளை வெளிய வர வைக்கப் போராடி அன்னைக்கு கல்யாணத்துக்கு கூட்டிட்டு வந்தோம். அங்கேயும் அவளை எல்லாரும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மோசமா பேசிட்டாங்க. எனக்கும் என் பொண்டாட்டிக்கும் இந்த ஊரை விட்டு எங்கேயாச்சும் போயிடலாம் போல இருக்குப்பா. என்ன பண்ணறதுன்னே தெரியலை” என்று தன் மனபாரத்தை அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

கேட்டவனின் மனம் கனத்து போனது. அவருக்கு ஆறுதலாகக் கூட எதையும் அவனால் சொல்ல முடியவில்லை. எப்பேர்ப்பட்ட துயரத்தை அவர்களின் குடும்பம் கடந்து வந்திருக்கிறது! இரு பெண்களைக் கரையேற்றும் இடத்திலிருந்த அண்ணனாக அவனாலும் அவரின் வலியை வேதனையைப் புரிந்து கொள்ள முடிந்தது.

“இத்தனை காலம் வாழ்ந்த ஊரை விட்டு எங்கே போவீங்க சார்? யாரு என்ன பேசினா என்ன? உங்க மகளைப் பத்தி உங்களுக்குத் தெரியும். நீங்க அவங்களை நம்பறீங்க. அப்பறமும் என்ன சார்? மனசு விட்டுடாதீங்க. இப்ப தானே அவங்க வெளிய வர தொடங்கியிருக்காங்க, அதுல இத்தனை நாள் பார்க்காதவங்க அவங்க வன்மத்தை கொட்டத்தான் செய்வாங்க. இனி கொஞ்ச கொஞ்சமா எல்லாம் சரியாயிடும்” என்று அவரிடம் ஆறுதலாகச் சொல்லிவிட்டு வந்திருந்தான்.

இப்பொழுது அந்த பேச்சுக்கள் தான் அவனுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. அவன் மணக்க விரும்புவதும் குழந்தையோடு தனியாக இருக்கும் பெண்ணைத்தான். என்ன இந்த பெண் திருமணமாகாமலேயே ஒரு பிள்ளைக்கு அம்மாவாக நிற்கிறாள் என்றவாறு யோசனை பயணித்ததுமே அவனுக்குத் திடுக்கிடலில் நெஞ்சுவலியே வரும் போல ஆகிவிட்டது. வேகமாகப் படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்து தன் நெஞ்சினை நீவி விட்டுக்கொண்டான்.

அந்த பெண்ணின் அழகென்ன, லட்சணமென்ன? அதிலும் நன்றாகப் படிக்கும் பெண் என்று அசோகன் சார் கூறினார். இவனுக்கும் அவள் எவ்வளவு நன்றாக படிப்பாள் என்று நன்றாகவே தெரியும். அவளை எங்கோ பார்த்ததாக மனதில் குடைந்து கொண்டே இருந்த கேள்விக்கு என்றோ விடை கிடைத்திருந்தது. அன்றிலிருந்து அந்த பெண்ணுக்கா இப்படி ஒரு சூழ்நிலை என்று யோசித்து அவன் வருந்தாதே நாளே இல்லை எனலாம்.

அப்படிப்பட்டவளை மணந்து கொள்ளும் அளவிற்கு இவனிடம் என்ன தகுதி இருக்கிறது?

பார்வைக்கு சுமார் ரகம், படிப்பும் இல்லை, வருமானமும் பெரிதாகச் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அதுதான் கடனுக்கும் அம்மாவின் கைக்குமே நிறைய போகிறதே! ஒரு தங்கையின் பொறுப்பு வேறு! மகளின் எதிர்காலத்தையும் பார்க்க வேண்டும்.

வீடு என்று பார்த்தாலும் பெரிதாகவோ அமைப்பாகவோ இல்லை. இதை வேறு அம்மாவின் காலத்துக்குப் பிறகு மூன்று பிள்ளைகளுக்கும் மூன்று பாகங்களாகப் பிரிக்க வேண்டுமாம்! அதுவரையாவது அவன் உரிமையோடு எதையாவது செய்யலாமா என்றால், இது அவரின் வீடாம்! அவர் கணவர் அவருக்கு வாங்கியதாம்! ஏற்கனவே கணவனின் தொழிலை இவன் அபகரித்து விட்டானாம், அப்படி வீட்டையும் இனமாகத் தூக்கித் தந்துவிட மாட்டாராம். இதெல்லாம் அவனின் தாயின் வசை மொழிகள்.

தனக்கென எதுவுமே இல்லாதவன், எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவரிடம் பெண் கேட்பானாம்?

இயலாமையுடன் கூடிய பெருமூச்சோடு கண்களை மூடிக் கொண்டான். பதினேழு வயதில் அனாதரவாக குடும்ப பாரம் மொத்தத்தையும் தோளில் சுமக்க வேண்டிய கட்டாயத்திலிருந்த இளம் வயது அருள்மித்ரன் அவனுடைய மனக்கண்ணில் தோன்றினான். புத்தகப்பையை தூரமாகப் போட்டுவிட்டு, அவனுடைய கைகள் அன்று ஸ்பேனரை பிடித்திருந்தன. விடுமுறையில் அவன் விரும்பி கற்றுக் கொண்ட வேலை அவனுக்கு வாழ்வாதாரமாகிப் போனது.

இன்று பார்த்தால், உழைப்பைத் தவிர அவனிடம் எதுவுமே இல்லை.

மேலும் ஒரு வாரம் சென்றிருந்தது. மீண்டும் அசோகன் அவனை சந்தித்தார். தயங்கித் தயங்கி, “உங்க தங்கச்சியையும் பொண்ணையும் வேணும்ன்னா வீட்டுக்கு அனுப்பி விடுப்பா, என் பொண்ணுக்கும் மாறுதலா இருக்கும்” என கேட்டுப் பார்த்தார்.

அவரின் கோரிக்கை மனதை என்னவோ செய்ய, “கண்டிப்பா ஒரு நாள் அனுப்பி வைக்கறேன் சார்” என்றான்.

“கேட்கிறேன்னு தப்பா எடுத்த்துக்காதீங்க தம்பி, எத்தனை நாள் இப்படியே இருப்பீங்க, உங்க பொண்ணுக்காகவாவது ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கலாமே” என்றார் மனதில் ஒன்றை நினைத்துக் கொண்டு.

ஆம், அசோகனுக்கும் யமுனாவிற்கும் தன் மகளுக்கு அருளைப் பேசி முடித்தால் என்ன என்ற எண்ணம், அதனால் தான் இவனை பார்த்தபோது கூட அசோகன் மகளைப்பற்றி உண்மை நிலையை எடுத்துக் கூறினார். ஆனால், அவனிடம் நேரடியாக அவரால் கேட்க முடியவில்லை. தவறாக எடுத்துக் கொள்வானோ என்று வெகுவாக தயங்கினார்.

அசோகன் கேட்டதும் தன் நிலை இன்னும் பூதாகாரமாகத் தோன்றியது. அதில் விரக்தியுடன், “படிப்பு இல்லை, நிரந்தர வருமானம் தரும் வேலை இல்லை, சொத்துன்னு எதுவும் சேர்த்து வைக்கலை, ஏற்கனவே ஒரு கல்யாணமாகி கையில ஒரு பெண் குழந்தை வேற… எனக்கு கல்யாணமா? விளையாடாதீங்க சார்” என்றான். முகத்தில் அத்தனை சலிப்பு!

“அருள், உன் உழைப்புக்கு குடும்பத்தை நல்லபடியா நடத்தற அளவுக்கு வருமானம் வரும், அதோட எந்தவிதமான கெட்ட பழக்கங்களும் இல்லாத நல்ல பையன் நீ. சின்ன வயசுலேயே குடும்பத்துப் பொறுப்பை ஏத்துக்கிட்டு எந்த நிலையிலேயும் விட்டு கொடுக்காம இருக்க. படிப்பும், வருமானமும் மட்டும் ஒரு மனுஷனோட தகுதியை தீர்மானிக்காதுப்பா. உன்னை மாதிரி ஒருத்தனை கட்டிக்க ஒரு பொண்ணு கொடுத்து வெச்சிருக்கணும்” என்றார்.

சும்மா என்றால் கேட்டிருப்பானோ என்னவோ, அவனை அவர் உசத்தியாகப் பேசவும், “அப்படின்னா நீங்க உங்க மகளை எனக்கு கட்டி கொடுப்பீங்களா சார்?” என்று மேல் பூச்சு எதுவுமின்றி தன்னைமீறி நேரடியாக கேட்டிருந்தான்.

அவருக்கு கண்கள் கலங்கிப் போனது. “அதுக்கு நான் புண்ணியம் செஞ்சிருக்கணும் பா” என்று எந்த மழுப்பலும் இல்லாமல் உடனேயே தனது சம்மதத்தை சொல்லி விட்டார்.

கேட்ட அவனுக்கு அவனுடைய காதுகளையே நம்ப முடியவில்லை. ஆனாலும், நிதர்சனம் என ஒன்று இருக்கிறதே! “அதெல்லாம் வேணாம் சார், உங்க பொண்ணு குத்துவிளக்கு மாதிரி. அதை கோயில்ல தீபமா ஏத்தினா தான் அழகு. அதுல கொஞ்சம் கரை படிஞ்சதுக்காக நான் சொந்தமாக்கிக்க நினைக்கிறது தப்பு சார்” என்றான் கரகரத்த குரலில். அவளை ஏற்றுக்கொள்ளும் பாக்கியம் தனக்கு இல்லை என்பது அவனது எண்ணம். ஏனோ அது அவனது மனதில் பெரும் வலியை உண்டாக்கியது. அவளுக்குத் தகுதியானவனாகத் தான் இல்லாமல் போனோமே என்று கலங்கினான்.

“அவ கோயிலுக்கு ஏத்த குத்துவிளக்குன்னு நினைக்கிற உன்னைவிட நல்ல மாப்பிள்ளை அவளுக்கு எங்கே கிடைப்பான்னு நீ நினைக்கிறப்பா? என் மகளையும் பேரனையும் உன் கையில ஒப்படைச்சா அதைவிட பெரிய சந்தோசம் எனக்கும் என் மனைவிக்கும் இல்லை” என்று அவர் முழு மனதோடு கூறவும், அவன் லேசாகத் தடுமாறினான். ஆனால், அப்பொழுதும் ஒரு அச்சம் அவனுள் இருக்கத்தான் செய்தது.

தயங்கிய குரலில், “ஆனா, உங்க பொண்ணு? அவங்க சம்மதிப்பாங்களா? ஏற்கனவே அவங்க வாழ்க்கையில நிறைய அனுபவிச்சுட்டாங்க சார், இதுல அவங்க கனவுக்கும் கற்பனைக்கும் சுத்தமா பொருத்தம் இல்லாத என்னை எப்படி அவங்களால ஏத்துக்க முடியும்?” என்று கேட்டான். மனம் மட்டும் மத்தளமாய் கொட்டிக் கொண்டிருந்தது.

“உன் சம்மதத்தை சொன்னா, நான் அவகிட்டயும் கேட்க போறேன். எனக்கென்னவோ அவ மறுக்க மாட்டான்னு தான் தோணுது, ஏன்னா உன் மகளை பார்க்கணும்ன்னு என்கிட்ட இதோட நாலைஞ்சு முறை கேட்டுட்டா” என்று அவர் சொல்லவும், அப்படியொன்றும் அன்று தன் மகளை அவள் ரசித்துப் பார்த்தது போலவோ, அவளை அள்ளி கொஞ்சியது போலவோ அவனது நினைவடுக்கில் எதுவும் இல்லாததால் குழம்பினான்.

ஒருவேளை மனதிற்குள் அதுபோல தோன்றி தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டிருப்பாளோ என்று அவனின் எண்ணம் பயணித்தது. அவன் தான் கவனித்தானே சிறு சிரிப்பைச் சிந்தக் கூட அவளால் அத்தனை இலகுவாக முடியவில்லை. இதற்கும் மிகவும் சின்ன வயது பெண் தான்! மனம் எத்தனை மரத்துப் போயிருந்தால், தவம் போல சிறு உணர்வுகளையும் முகத்தில் காட்டாமல் வலம் வருவாள் என்று அவளுக்காக வருந்தினான்.

“எனக்கு முழு சம்மதம் தான் சார், ஆனா, என் வீடு அவ்வளவா வசதி படுமா தெரியலை, எங்க அம்மா எதுவும் உங்க பொண்ணை நோகடிச்சிடுவாங்களோன்னு வேற பயமா இருக்கு. எல்லாத்தை விடவும் உங்க பொண்ணு கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்களான்னு எனக்கு இன்னும் சந்தேகமா தான் இருக்கு” என்று அவன் அடுக்க,

“கடவுள் மேல பாரத்தை போட்டு இன்னைக்கே இந்த விஷயத்தை தொடங்கறேன், சீக்கிரம் உன்னை… ம்ம் ஹ்ம்ம்… உங்களை மாப்பிள்ளைன்னு கூப்பிடணும் நான்” என்று அசோகன் சொன்னதும், அவரின் மரியாதை விகுதி பேச்சிலும், மாப்பிள்ளை என்ற குறிப்பிடலிலும் அவனுக்கு லஜ்ஜையாகிப் போயிற்று.

மாப்பிள்ளை என்ற அழைப்பிற்கே தடுமாறி நின்ற அந்த ஆண்மகனை அவர் மனநிறைவோடு பார்த்தார்.