மழைவர பூமி மறுத்திடுமா? – 4

காவ்யாவின் திருமணத்திற்குச் சென்று வந்ததிலிருந்து, கல்யாணி முன்பைவிட அதிகமாகப் பேயாட்டம் ஆடத் தொடங்கிவிட்டார்.

எந்த நிலையிலும் தன்னை எதிர்த்துப் பேசாத மகன், ஏதோ ஒரு பெண்ணிற்காக எதிர்த்துப் பேசினால் அவரின் தன்னகங்காரம் சும்மா இருக்குமா? அதோடு அவர் அத்தனை மறுத்தும் பிரீத்தியின் நகைகள் மொத்தத்தையும் கல்யாணத்திற்கு சீராக செய்துவிட்டானே என்ற கோபம் அவரின் ஆத்திரத்தை பலமடங்காக்கி இருந்தது.

அவர் பேசிய ஜாடை மாடை பேச்சுக்களில் கவிதாவுக்கும் வேதிகாவின் நிலை புரிந்து விட்டது. அண்ணனைப் போலவே அவளும் வேதிகாவிற்கு பாவம் தான் பார்த்தாள். அந்த குடும்பத்தினரோடு மிகவும் சில நிமிடங்களையே கழித்திருந்தாலும், அவர்களின் பண்பும் சாந்தமும் பேசும் விதமும் அவர்களைக் குற்றமற்றவர்கள் என அவளை முழுமனதோடு நம்ப வைத்தது.

அன்றும் அருள்மித்ரன் வேலையிலிருந்து வந்ததும் கல்யாணி தொடங்கி விட்டார். “இங்கே பாரு அருளு, முதல்ல இந்த குழந்தையைக் கொண்டு போயி பிரீத்தி வீட்டுல விட்டுட்டு வா… இல்லையா அம்மா இல்லாத குழந்தைன்னு கோயம்புத்தூரு பக்கம் எங்கேயாச்சும் ஹோம்ல சேர்த்து விட்டுடு, இந்த குழந்தை இங்கே இருந்தா கரிசட்டி மாதிரி என் வயித்துல வந்து பிறந்திருக்கே ஒரு தண்டம் அதுக்கு என்னைக்கும் கல்யாணமே நடக்காது” என்று கத்த, அவன் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தன் கண்களை இறுக மூடிக் கொண்டான்.

பெற்ற அம்மாவின் வரைமுறையற்ற பேச்சை அவன் பொறுத்துப் போகிறான் என்பதற்காகத் தினம் தினம் அவன் பெற்ற குழந்தையை அனாதை போல நடத்துவதும், கவிதாவை மட்டமாகப் பேசுவதுமாக இருப்பவரை அவனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.

எதிர்த்து ஒரு நாள் பேசினாலும் அவன் நிம்மதி, வீட்டில் இருக்கும் தங்கையின் நிம்மதி என மொத்தத்தையும் குழி தோண்டி புதைத்து விடுவார். இப்படி மிகவும் மட்டமாக தெருமுனை வரை கேட்குமளவிற்கு நாராசமாகப் பேசுவதைத்தான் அவர் தன் பலமாக கருதுகிறார். கூடவே இன்னும் ஒரு கூர்மையான ஆயுதமாக வீட்டை விட்டு வெளியே போகிறேன் என்றோ, ஆற்றிலோ குளத்திலோ விழுந்து உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என்றோ சொல்லி அவர்களின் நிம்மதியை மொத்தமாகப் பறிப்பதையும் தான்!

அம்மாவின் குரல் ஓங்கும் போதெல்லாம் கவிதா தீபாலியோடு ஓரமாக நின்று கண்ணீர் வடிப்பாள். இவன் அவர் பேசுவதைக் காதில் போட்டுக் கொண்டு எந்த பதிலும் சொல்ல முடியாதவனாய் மெளனமாக உணவை உண்பான்.

இன்றும் அதுவே நடக்க, “உன்கிட்ட தான் கேட்கிறேன், உன் குழந்தைக்கு ஆயா வேலை பார்க்கிற என்னோட மகளுக்கு என்ன வழி?” என, எதுவுமே பதில் பேசாமல் அமைதியாக உண்டு முடித்தவனிடம் மீண்டும் கத்தினார்.

வேறு வழியே இல்லாமல் அவருக்குப் பதில் கூறினான். “சீக்கிரம் இந்த வீட்டுக்கு ஒரு மருமக வருவா, நானும் அவளும் அம்மா, அப்பா ஸ்தானத்துல நின்னு என் தங்கச்சிக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சு தருவோம். உங்களுக்கு இதுக்கும் மேல விளக்கம் வேணும், இல்லை என் குழந்தை கண்டிப்பா வெளியே போகணும்ன்னு நினைச்சீங்கன்னா நானும் என் மகளும் வாடகைக்கு ஒரு வீட்டைப் பார்த்து தனியா போயிடறோம். எனக்கு தெரிஞ்ச மாதிரி நான் என் மகளை வளர்த்துக்கிறேன்” என்றான் நிதானமாக.

“நீ பார்க்கிற மெக்கானிக் வேலைக்கு ஒரு குழந்தையோட இருக்கிற உன்னை கட்டிக்க எவ வருவான்னு நினைக்கிற? எங்க நீ அப்படி கேட்டுடுவியோன்னு தான் விழுந்தடிச்சுட்டு, தன் சொந்த பேத்தியவே வளர்க்காம உன்கிட்டே கொண்டு வந்து திருப்பி கொடுத்துட்டு போயிருக்காங்க” என்று ஏளனமாக அவர் சொல்ல, அவன் முகம் அவமானத்தில் கறுத்துப் போனது.

அவரோ மேலும் தொடர்ந்து “கல்யாணத்தை எல்லாம் சமாதானத்துக்கு ஒரு காரணமா சொல்லிட்டு இருக்க, என்னவோ உனக்கு இன்னொரு கல்யாணம் நடக்கப் போற மாதிரி? போதாததுக்கு தனியா வேற போவானாம். எப்படா குடும்பத்தைக் கைகழுவி விட்டுட்டு, பொறுப்பை எல்லாம் உதறிட்டு போலாம்ன்னு சுயநலமா நினைக்க வேண்டியது” என்று அதற்கும் கத்த, அவன் அவரை வெறித்த பார்வை பார்த்தான்.

அவன் சுயநலக்காரனாம், அவன் குடும்பத்தின் பொறுப்பைக் கைகழுவி விட நினைப்பவனாம்! மனம் முழுக்க கசந்தது. அவன் பச்சிளம் குழந்தையோடு தனியாக போய் விடுவேன் என்று சொன்னதைப் பற்றி அவனைப் பெற்றவளுக்குக் கொஞ்சம் கூட கவலைப்படத் தோன்றவில்லை. இதில் அவனை கட்டிக்க வேறு யாருமே வர மாட்டார்கள் என்று நையாண்டி செய்கிறார்!

உள்ளத்தின் உச்சபட்ச கசப்பை முகத்தில் காட்டாமல், “எனக்கு ஏத்த மாதிரி பொண்ணு அமைஞ்சா நான் கல்யாணம் செஞ்சுக்கிறேன், நீங்க ரொம்ப கவலைப்படாதீங்க” என்றான் உணர்வுகளைத் துடைத்த முகத்துடன்.

“பொண்ணு அமைஞ்சா தானே? உன்னை எல்லாம் எவளும் கட்டிக்க மாட்டா, வீணா பகல் கனவு காணாம இந்த குழந்தையைத் தலை முழுகிற வேலையை பாரு” சொந்த பேத்தி என்கிற எண்ணமின்றி கல்யாணி பேசினார். ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பையும் தடவும் சில மோசமான தாய்மார்களில் தானும் ஒருவர் என நிரூபித்துக் கொண்டிருந்தார்.

வெறுப்பில் முகத்தை சுளித்தவன், “சரி கல்யாணத்துக்கு பொண்ணு அமைஞ்சிட்டா, அது யாரா இருந்தாலும் என் கல்யாணத்துக்குத் தடை சொல்லக்கூடாது நீங்க?” என்றான் அழுத்தமாக. அப்பொழுதும் கல்யாணிக்கு அலட்சியம் தான்! இவனை எல்லாம் யாரும் கட்டிக்கொள்ள மாட்டார்கள் என்பது போல!

“அதுதான் பகல் கனவுன்னு சொல்லிட்டேனே” என்று அவர் விட்டேற்றியாகப் பதில் சொல்ல, தன் அறைக்கு சென்று அமைதியாகப் படுத்துக் கொண்டான். அவன் மனதில் இன்று மாலையில் சந்தித்த அசோகனின் பேச்சுக்கள் தான் ஓடிக் கொண்டிருந்தது.

காவ்யா திருமணம் முடிந்து இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில் இன்று தான் அவரை சந்தித்திருந்தான். அவனைப் பார்த்ததும் சின்னவளின் நலத்தைத் தான் முதலில் விசாரித்தார். தாயில்லாத குழந்தை என்ற இயல்பான வாஞ்சையோடு அவர் விசாரிக்க, அவனுக்கு மனம் நெகிழ்ந்து போனது. இப்படியொரு உறவு இரத்த சொந்தத்தில் அமைய அவளுக்குக் கொடுப்பினை இல்லாமல் போய்விட்டதே என்று தனக்குள் வருந்தினான்.

அசோகனிடம் தன் மகளின் நலத்தைச் சொன்னவன், அவரிடமும் அவரின் குடும்பத்தைப் பற்றி விசாரித்தான். பேச்சுக்கள் கொஞ்சம் வளர்ந்ததும், அன்று திருமணத்திற்கு ஏன் வந்தார் என்பதை மனபாரத்துடன் கூறினார்.

“ஒரே பொண்ணு அருளு எனக்கு, அதுக்கப்பறம் அவங்க அம்மாவுக்கு குழந்தைங்க தங்கலை. ஆனாலும் ஒரே பொண்ணுன்னு ரொம்ப செல்லமா வளர்த்துட கூடாதுன்னு கண்டிப்போட தான் என் சம்சாரம் அவளை வளர்த்தா. என் பொண்ணும் தங்கம்ப்பா, நல்லா படிப்பா. ரொம்ப நல்ல குணம். படிப்பு வராத புள்ளைங்களுக்கு கூட இவ சொல்லிக் கொடுப்பா. எனக்கும் அவங்க அம்மாவுக்கும் இவளை நினைச்சு ரொம்ப பெருமை, நல்ல மார்க்ஸ் எடுத்து காலேஜுல கூட பீஸ் கம்மியா சேர்த்துப்பாங்களே அப்படி சேர்ந்து தான் படிச்சா. அவளுக்கு பேங்க் ஆபிஸர் ஆகணும்ன்னு ஆசை.

யாரு கண்ணு பட்டுச்சுன்னு தெரியலை, இல்லை பெத்தவங்க கண்ணே என் புள்ளைக்கு பட்டிருக்குமோ என்னவோ… ரெண்டாவது வருஷம் அவ காலேஜ் படிச்சிட்டு இருந்தப்ப அங்கே ஒரு பயர் ஆக்சிடெண்ட் நடந்துச்சு. கூட்டத்துல நசுங்கி அடி பட்டு மயங்கி விழுந்திருக்கா, அங்கங்க காயம் வேற, கீழே விழுந்ததுல அடியும் அதிகம். எப்படியோ அவளை ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டாங்க. அவ சுயநினைவே இல்லாம ரெண்டு நாளு ஆஸ்பத்திரியில இருந்தா. அவ குணமாகித் திரும்பி வீட்டுக்கு வரதுக்கு ஒரு வாரத்துக்கும் மேல ஆயிடுச்சு. அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா தேறி காலேஜுக்கும் போயிட்டு தான் இருந்தா.

அவ சுயநினைவில்லாம இருந்தப்ப, யாரு அதைப் பயன்படுத்தி அவளை என்ன செஞ்சாங்கன்னு தெரியலை, ஒரு நாள் அவ கர்ப்பமா இருக்கான்னு தெரிய வரவும் எங்களுக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. எங்க பொண்ணு மேல சந்தேகப்பட்டா நான் வணங்குற சாமியவே நான் குத்தம் சொல்லற மாதிரி. அவ மேல எங்களுக்கு கொஞ்சமும் சந்தேகம் இல்லை. அவளும் எனக்கு இதுக்கு காரணம் யாருன்னு கூட தெரியலைப்பான்னு ஒரே அழுகை. டாக்டரை பார்த்தோம், நடந்த விபத்துல அவ ரொம்ப பலவீனமா இருந்ததால குழந்தையைக் கலைக்க முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. யாரு காரணம் என்னன்னு தெரியாம ஒரு குழந்தையை அவ சுமக்க வேண்டிய கட்டாயம்.