அஹ.. நம் வீட்டில்தான் கூட்டம் என்றால்.. இங்கே அதற்கு மேல்.. மது குடும்பத்தோடு வந்துவிட்டார்.. தர்ஷன் குடும்பம் என.. எல்லோரும் இருந்தனர்.
ஹாலில்தான் வர்ஷினி சர்வேஷ் இருவரும் தனியாக பேசிக் கொண்டனர்.
வர்ஷினியை வெளியே அனுப்பமாட்டோம் என முன்பே சொல்லிவிட்டனர். அவள் வேலையையும் இங்கே ரிசைன் செய்துவிட்டால்.. அதனால், ஹாலிலேயே ஆதி, ஹரிணி, வைகுந்த் என பிள்ளைகள் துணையிருக்க.. சர்வேஷ் வர்ஷினியை பார்த்து பேசி சென்றான்.
திருமணநாள்..
அதிகாலை நேரத்தில் பெண் அழைப்பு.. அதன்பின் திருமணம்.. அதன்பின் மதிய விருந்தோடு வரவேற்பு.
சர்வேஷ் வீடு..
துர்க்கா சரவணன் தம்பதி தயாராகி மண்டபம் சென்றனர் முதல் ஆட்களாக.
அங்கே வர்ஷினியின் அத்தையும் மாமாவும் வந்து சேர்ந்தனர்.. அந்த அதிகாலையிலேயே.
அடுத்தடுத்து உறவுகள் வந்தனர். சர்வேஷ் வந்து சேர்ந்தான் சொந்தகளோடு மண்டபத்திற்கு.
சர்வேஷ் வர்ஷினியின் நண்பர்கள் எல்லோரும் சரியான நேரத்திற்கு மண்டபம் வந்தனர் குடும்பத்தோடு. ஆறுமாதம் முன்பே திருமண தேதி சொல்லிவிட்டதால்.. எல்லோரும் தப்பாமல் ஆஜர். குறிப்பாக உமர்.. ராக்கி இருவரும் எந்த காரணமும் சொல்லாமல் வெளிநாட்டிலிருந்து தன் மனைவியரோடு வந்துவிட்டனர்.
ஷர்மியும் அவளின் கணவரோடு நேற்றே வந்துவிட்டாள். அவர்கள் குடும்பமாக வர்ஷினி வீட்டில்தான் தங்கிக் கொண்டனர்.
சீரோடு நல்ல நேரத்தில் பெண் வந்தாள் அதிகாலையில்.. மண்டபத்திற்கு. சர்வேஷ் வீட்டார் பெண் அழைப்பு தொடங்கினர். அப்படியே பெண்ணுக்கான சீர்கள் பரப்பட்டது. பெண்ணிற்கு நலங்கு வைத்தினர். மாப்பிள்ளையோடு சேர்த்து அமர வைத்தனர். தர்ஷன் மாலை போட்டு.. மாப்பிள்ளைக்கு மரியாதை செய்தான்.
சிவகுமார் பெண்ணின் அருகில் அமர்ந்துக் கொண்டிருந்தார். மாப்பிளையை ஆதூரமாக பார்த்தார். தன் பெண்ணோடு நிமிர்வாக.. செய்கையில் கவனம் வைத்து.. புன்னகை முகமாக அமர்திருந்தவன் மேல் மரியாதை வந்தது.
சிவகுமார் திருப்தியானார்.. ‘பொறுத்திருந்து கைபிடிக்கிறான்.. நன்றாக பார்த்துக் கொள்வான் என் மகளை’ என நம்பினார் இப்போது. இந்த ஒரு வருடமும் அவர்களின் அன்பு வளர்ந்த விதத்தினை பார்த்திருந்தார். காதல் எதையும் யோசிக்காது.. வேகமும் வெறியும் மட்டுமே இருக்கும் என சிலநேரம் எண்ணியிருந்தவரின் மனம் தளர்ந்தது, இந்த ஒரு வருடத்தில். இந்த நேரம் அவரின் மன தடை அகன்றது.. நிறைந்து போனது. எழுந்து மணமக்கள் எதிரில் நின்றார். தன் மனையாளை கைபிடித்து தன்னோடு இருத்திக் கொண்டார். பெண்ணின் தந்தையாக திருநீறு பூசினார். விஜயா பெண்ணிற்கு குங்குமம் வைத்தார். மணமக்கள் எழுந்து நின்றனர். சிவகுமார் “பதினாரு செல்வமும் சேர.. பெருவாழ்வு வாழனும்” என்றார் நிறைந்த மனதோடு.
சர்வேஷ் நிறைந்து போனான்.. அவரின் காலில் சாஷ்ட்டாங்கமாக விழுந்தான். உச்சிகோதி ஆசிர்வாதம் செய்தார் மாமனார்.
அதனை தொடர்ந்து திருமண சடங்குகள் தொடங்கியது.
சர்வேஷ், சடங்குகளை எல்லாம் ஸ்ரத்தையாக செய்தான். ‘செய்வன திருந்த செய்’ என்பது போல.. எல்லாவற்றுக்கும் ஓதுவார் சொன்ன விளக்கத்தினை கேட்டு.. அர்பணிப்போடு அந்த சடங்குகளை செய்தான்.
வர்ஷினி மூகூர்த்தபுடவை அணிந்து.. துர்கா லக்ஷ்மி மஞ்சரி என முப்பெரும் தேவியர் சூழ வந்து அமர்ந்தாள் சர்வேஷ் அருகில்.. அவனின் கவனம் இப்போதுதான் அவளிடம் வந்தது.. ஓதுவார் “அம்பி ஆத்துகாரியை அப்புறம் பார்க்கலாம்.. முதலில் பூ போடுங்கோ” என்றார்.
சர்வேஷ் புன்னகையோடு தன் வேலையை தொடர்ந்தான்.
நல்ல நேரத்தில் சர்வேஷ்வரன் கமல்வர்ஷினியின் கழுத்தில் மாங்கல்யம் சூடி தன்னவளாக்கிக் கொண்டான். பெண்ணவள் மாங்கல்யத்தில் குங்குமம் வைத்து.. அவள் நெற்றியிலும் குங்குமம் வைத்தான்.. இருவரின் பார்வைகளும் சந்தித்துக் கொண்டது.. காதலோடு.. இனி ‘நாம்’ என இருவரும் சொல்லிக் கொண்டனர் தங்களுக்குள்.
சடங்குகள் எல்லாம் இனிதாக முடிந்தது. பெற்றோர் பெரியவர்களிடம் ஆசி வாங்கிக் கொண்டனர் மணமக்கள்.
வரவேற்பு தொடங்கியது. நட்புகள் வர்ஷினியோடு வேலை செய்தவர்கள் என எல்லோரும் வந்திருந்தனர்.
மீண்டும் ஒரு நண்பர்களோடான புகைப்படம்.. உமர் திருமணத்தில்.. சர்வேஷ்ஷோடு தயங்கி தயங்கி நின்றவள்.. இன்று உடமைபட்டவளாக கை கோர்த்து நின்றாள் வர்ஷினி.
நண்பர்கள் எல்லோரும் “முதலில் நடந்திருக்க வேண்டியது உங்கள் கல்யாணம் தாண்டா.. அப்போவே எங்களுக்கு தெரியும்.. ஆனால், காதினை சுற்றி மூக்கை தொட்டிருக்கீங்க ரெண்டு பேரும்” என கிண்டல் செய்தனர்.
வர்ஷினி சர்வேஷ் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
நண்பர்கள் எல்லோரும் தங்களின் குடும்பத்தோடு நிற்க.. சபை நிறைந்து நின்றது.
மாலை நல்ல நேரத்தில் வர்ஷினி சர்வேஷ் இல்லம் வந்தாள். வீட்டில் முறையாக விளக்கேற்றி.. வணங்கினர் தம்பதி. முத்துநாயகி, தன் கணவரின் புகைப்படத்தின் முன் வந்து நின்றார். சர்வேஷ் தன்னவளோடு தன் தந்தையிடம் சென்றான்.. “எங்களை ஆசீர்வாதம் செய்ங்க பா” என சொல்லி நமஸ்கரித்தான். அவனின் அன்னை கண்களை துடைத்துக் கொண்டு “எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழனும்” என வாழ்த்தினார்.
வர்ஷினியும் புன்னகைத்தாள். சர்வேஷ் “ம்மா.. வா வா.. எனக்கு காபி கொடு” என்றான், அதட்டலாக.
லக்ஷிமி “கொஞ்சம் கூட செண்டிமெண்ட் இல்லாதவன்.. காபி வேனுமாம்” என சொல்லிக் கொண்டே காபி கலந்தால் எல்லோருக்கும். அந்த இடம் கொஞ்சம் சகஜமானது.
வர்ஷினியையும் அவர்களின் உறவுகளையும் கவனித்தனர். முத்துநாயகியின் அறை கொடுத்து.. “ஒய்வு எடுத்துகோங்க” என்றாள் துர்கா.
இரவு விருந்து மேலே மொட்டைமாடியில் ஏற்பாடு செய்திருந்தனர். ஆண்கள் எல்லோரும் மேலே சென்றனர் வேலைகளை கவனிக்க.
குறிப்பிட்ட உறவுகள் நண்பர்கள் மட்டும். அதனால், சர்வேஷ் மாடிக்கு வந்தான்.. நண்பர்களை பார்க்க. வர்ஷினி ஷர்மி இருவரும் வந்து சேர்ந்தனர் மேலே. ஒன்றாக அமர்ந்து களைப்பு தீர.. பேசிக் கொண்டிருந்தனர். நிறைய பழைய கதைகள்.. வசந்தகாலத்து பூக்களின் வாசம் அதில் நிறைந்து இருந்தது.
டிபன் முடித்துக் கொண்டு.. ஒவ்வொரு குடும்பமாக கிளம்பினர்.
உமர் ராக்கி இருவரும் ஹோட்டலில் தங்கியிருந்தனர். அதனால் இங்கே இருப்பார்கள். மற்றவர்கள் எல்லோரையும் வழியனுப்பி வைத்தனர் இவர்கள் எல்லோரும்.
சாமி கும்பிட்டு.. பெரியவர்களிடம் ஆசி வாங்கிக் கொண்டு.. என தங்களின் இல்வாழ்கை பயணத்தை தொடங்கினர் வர்ஷினி சர்வேஷ்.
முதலில் இருவருக்கும் தங்களின் நிலையை உணரவே நேரம் எடுத்தது.. வர்ஷினி “உண்மையாக மேரேஜ் ஆகிடுச்சி சர்வா” என்றாள்.
சர்வா எந்த தயக்கமும் இல்லாமல் அவளின் இதழ்களை சிறை செய்தான் காதலாக. நிதானத்தில் மலர்ந்த காதல் அச்சாரத்தில் தொடங்கியது அவர்களின் இல்லறம். காதல் ஒரே நாளில் வந்திடும்.. ஆனால், தீரா காதல்தானே அழகானதாகும். இவர்களின் தேடல்களும் தொட்டும் தொடாத நெடுவானம் போல நீண்டு அகண்டு ஓங்கி வளரட்டும்.
திருமணம் முடிந்த இரண்டாம் வாரத்தில் தம்பதி இருவரும் ஸ்வீடன் கிளம்பினர்.
புது வாழ்க்கை பயணம்.. இருவரும் ஒரே மாதிரி ஜீன் டி-ஷர்ட் அணிந்துக் கொண்டு.. கைகோர்த்துக் கொண்டு.. தங்களின் கூடு தேடி பறந்தனர்.
வர்ஷினிக்கு அங்கே வேலை கிடைத்திருந்தது. அடுத்த வாரம் அவள் அங்கே ஜாயின் செய்ய வேண்டும். திட்டமிட்டு கிளம்பினர்.
எல்லோருக்கும் எல்லாம் நடக்கும்.. மனங்கள் மெருகேரும்.. காலங்கள் மாறும்.. தடைகள் தகரும்.. நொந்துக் கொண்ட இடங்களும்.. உறவுகளுமே கூட அர்த்தமுள்ளதாகி.. அன்புகாட்டும். வாழ்க்கை பிடிபடும்.. குணமும் வளமும் நிறைந்து நிற்கும். எல்லோருக்கும் காலம் வரும்!