19
இரண்டு நாட்களுக்கு மேலாகி விட்டது. முதல் ஊடல் இருவருக்குமே மன சஞ்சலத்தை அளவுக்கு அதிகமாக கொடுத்தது. இதனிடையே சசி துணை இயக்குனராக பணிபுரியும் படத்திற்கு பூஜை  போட்டு அனைத்து ஊடகங்களிலும் செய்தி தீயாய் பரவியது..

சசி மித்ரன் பேசாதது  ஒரு வகையில் மன அழுத்தத்தை கொடுத்தது என்றால், அப்பா அம்மா வயதுக்கு வந்த தங்கை இவர்களெல்லாம் எங்கே சென்றிருப்பார்கள் என்று யோசிக்கும் போது தலை வின் வின்னென்று தெரித்தது..

உண்மையில் சசிக்கு தென்றல் மீது இருந்த கோபம் அன்று இரவோடு முடிந்து விட்டது.. யோசித்துப் பார்க்கும் போது தப்பு முழுதும் அவன் பெயரில் புரிந்தது. யார் மீதோ இருந்த கோபத்தில் அவளை கத்தி விட்டோமே பரிதாபம் தோன்றியது.

அவளிடம் பேச தான் அவன் நினைத்தான். காலையில் கண்விழிக்கும் போதே தென்றல் அவனுக்கு முன்பாக எழுந்தவள் வீட்டு வேலையில் மும்மரமாக இருந்தாள். அவளைத் தேடிச் சென்று சமாதானப்படுத்தி கொஞ்சி குலாவ அவனுக்கு நேரமில்லை. உடனடியாக ஆபீஸ் செல்ல வேண்டும். அதன் பிறகு அவன் நேரம் அவனுடையதாக இல்லை. இரண்டு நாட்களும் அவனும் எவ்வளவோ முயற்சிகள் செய்தான் தென்றலிடம் பேச.. இரவு மிக தாமதமாக தான் வீட்டிற்கு சென்றான்.. அவன் வீட்டிற்கு செல்லும் நேரம் எல்லாம் தென்றல் உறங்கி விட்டிருந்தாள்.

காலையில் எழுந்து பார்க்கும் போது அவள் வீட்டு வேலையில் கவனமாக இருப்பாள்.அவளுக்கு அழைத்து பேசக்கூட நேரமில்லாமல்  அவனது வேலை புதைக் குழியாக அவனை உள்ளே இழுத்தது..

முதல் இரண்டு நாட்கள் மொத்தமாய் அவனது நேரத்தை வேலை விழுங்கி விட, மூன்றாவது நாள் சற்று விரைவாகவே வீடு திரும்ப வேண்டும் என்று எண்ணியவன் நினைத்ததை போலவே வந்து விட்டான்.

அறைக்குள் வந்து பார்க்கும் போது தென்றல் அவள் குடும்ப புகைப்படத்தை கையில் வைத்து கண்ணீர் விட்டு கொண்டிருந்தாள். அதனை பார்க்கும் போதே சசிக்கு என்னவோ போல் ஆகியது. ஒருபக்கம் தன்னுடைய  மௌனம் அவளை பாதிக்கவில்லை என்பது மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும், அவளை அவள் குடும்பத்திலிருந்து பிரித்தது  அவனின் குற்றவுணர்ச்சியை கிளறியது..

கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் அவனை திரும்பிப் பார்த்தவள் கண்களை துடைத்துக் கொண்டாள். புகைப்படத்தை பத்திரமாக அலமாரிக்குள் வைத்தாள்..

அவளை நெருங்கியவன் கைகடிகாரத்தை கழற்றிக்கொண்டு ” சாப்டியா செல்லமா”.. என்றான். இரண்டு நாட்களுக்குப் பிறகான அவனின் நெருக்கமான அழைப்பு அனாதையாக தவித்துக் கொண்டிருந்த இதயத்திற்கு மிகுந்த வலியை அளித்தது.

கண்களில் மீண்டும் நீர் பெருக்கெடுக்க தலை குனிந்து கொண்டாள்.. அவளின் அமைதியை கோபம் என்றெண்ணியவன்  தென்றலின் பக்கத்தில் அமர்ந்து  அவளின் கரத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.

” நான் அன்னைக்கு அப்படி பேசி இருக்க கூடாது. ஏதோ டென்ஷன்ல. ஸாரிடா.. ” அவள் முகத்தை நிமிர்த்த தென்றலின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

அதனை கண்டதும் சசி பதறி விட்டான்.

“என்னடி ஏன் அழற.. வீட்டு ஞாபகம் வந்துருச்சா” தென்றல் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். அவன் கேட்ட கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை.கேவல் மட்டும் பெரிதாக வந்தது.

“என்னமா” அவளின் முதுகை தடவி ஆசுவாசப்படுத்தினான் சசி மித்ரன்..

” ரெண்டு நாள் ஆச்சா என்கிட்ட பேச..” அவள் அவனைத் தேடிருக்கிறாள்.. நினைக்கும் போதே மனதிற்கு இதமாக இருந்தது..

” நான் என்னடி பண்ணுவேன்.. காலையில எனக்கு முன்னாடி நீ எந்திரிச்சிடுற.. உன்கிட்ட பேசலாம்னு பார்த்தா என் அம்மா குட்டி போட்ட பூனை மாதிரி உன் பின்னாடியே சுத்திட்டுருக்காங்க. தனியா எங்கேயாச்சும் சிக்குவான்னு பார்த்தா  நீ கிச்சனை விட்டு வெளியே வரவே மாட்ற.. எனக்கும் இந்த படத்தோட வேலை  நிக்க முடியல. ஓடிக்கிட்டே இருக்கேன்..

ராத்திரி பார்த்தா எனக்கு முன்னாடியே நீ தூங்கிடுற. எனக்கு மட்டும் உன்கிட்ட பேச ஆசை இல்லையா. இன்னிக்கு எவ்ளோ வேலை இருக்கு தெரியுமா எல்லாத்தையும் விட்டுட்டு நான் ஏன் சீக்கிரம் வீட்டுக்கு வந்தேன். உன்கிட்ட பேச தான். உன்கிட்ட பேசாம நான் வேற யாரு கிட்ட பேச போறேன்.. ” தென்றல் அவனை முறைத்தபடி நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

” ஒரு மெசேஜ் பண்ண கூட உங்களுக்கு நேரம் இல்லையா” அவளின் கோபம் புரிந்தது.

” சத்தியமா இல்லடி. நீயே என் ஃபோனை பாரு.. ” வேலை சம்பந்தப்பட்ட அழைப்புகளை தவிர வேறு எதுவும் அவனின் கைபேசியில் இல்லை.

” செல்லம்மா.. இந்த ரெண்டு நாள் நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்ண தெரியுமா. உன்னை எவ்வளவு லவ் பண்றேன்னு உன்கிட்ட பேசாதப்ப தான் எனக்கு புரியுது.. இனிமே அந்த மாதிரி நான் பேசமாட்டேன் இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சிடு..” தென்றலை இழுத்து தன் அணைப்புக்குள் கொண்டு வந்தான்..

சிறிது நேரம் இருவரும் அந்த மோன நிலையில் அமர்ந்திருந்தார்கள்.

“சசி..”

“ம்ம்ம்”

” என்னோட ஸ்டடிஸ் பாதில நிக்குது. என்ன படிக்க வைங்கன்னு கேட்க ரொம்ப தயக்கமா இருக்கு. படிக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு.. ” படிப்பு மீது அவளுக்கு இருந்த ஆர்வத்தை எண்ணி அவன் சிலாகித்தான். பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் பெயருக்கு ஒரு டிகிரி வைத்திருப்பவன் அவன்.

படிப்பை காதலித்து படிப்பவள் அவள்..

” நான் மறந்தே போயிட்டேன்டி.. என் பிரச்சினையே தலைக்கு மேல இருந்துச்சா..நீயாவது ஒரு வார்த்தை சொல்லி இருக்கக் கூடாது..” கண்களில் எதிர்பார்ப்போடு அவனை நிமிர்ந்து பார்த்தவள்

” அப்போ”

“ம்ம்ம் அப்போ என் பொண்டாட்டிய மேல படிக்க வைக்கிறது என் பொறுப்பு” அவள் மூக்கை பிடித்து ஆட்டியபடியே கூறினான் சசி மித்ரன்..

தென்றலின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அனைத்துமே அவள் கைவிட்டுப் போன நிலையில்  தவித்துக் கொண்டிருந்தவளுக்கு  அவள் நேசித்த படிப்பாவது கிடைக்க வழி கிடைத்து விட்டதே..

” இந்த செமஸ்டர் பணம் கட்டணும்.. ” தயங்கியபடியே அவனிடம் கூறினாள் தென்றல்.. சசி யோசனையில் ஆழ்ந்தான்..

கோடீஸ்வரன் அவன். ஆனால் ஒரு ரூபாயை கூட அவனால் சட்டென்று புரட்ட முடியாது.

அவனின் தயக்கம் தென்றலுக்கு புரிந்தது. விசாலாட்சி வார்த்தைகளால் விலாசும் போது மகனின் வெட்டி வீராப்பை பற்றியும் மருமகளிடம் குத்தி காட்டியதுண்டு. இன்று வரையிலும்  தென்றல் அவனுக்குமான சாப்பாட்டு  காசினை விசாலாட்சியிடம் வார இறுதியில் கொடுத்து விடுவான்.

சோமசுந்தரம் கூட ஜாடை மாடையாக ” உனக்கு மட்டும் பணம் கொடுத்தா போதும் வீட்டுக்கு வந்த மருமகளுக்கு ஒரு வாய் சோறு போட கூட வக்கில்லாம இந்த குடும்பம் போயிடல.”என்றார்.

” நான் வேற என் பொண்டாட்டி வேறயா.. என் காசுல என் பொண்டாட்டி சாப்பிட்டா சாப்பிடட்டும் இல்லாட்டி பட்டினி இருக்கட்டும்.. ” இருவருக்குமான பணத்தை தாயிடம் கொடுத்து விடுவான்.

சொந்த வீட்டிலேயே அவன் அந்நியனாக இருப்பது அவளுக்கு புரிந்தது. செமஸ்டர் பணத்தை அவன் எப்படி தேடுவான்? இருந்தாலும் படிக்க வேண்டும்..

” ஆல்ரெடி லாஸ் எக்ஸாம் எழுதல.. இப்ப போனா ஏதும் சொல்ல மாட்டாங்களா..”

” அதெல்லாம் நான் பேசிக்கிறேன்.. “

“சரி.. இன்னும் ஒரு ரெண்டு வாரம் பொறுத்துக்கோ. எப்படியாவது பணத்தை புரட்டிர்றேன்..” தயங்கியபடியே கூறினான் சசி..

தென்றலுக்கு அவன் கஷ்டம் புரிந்தாலும் எதுவும் செய்ய முடியாத  நிலையில் அவள் இருந்தாள்..

அன்று இருவரும் ஒன்றாக ஒரே கட்டிலில் படுத்திருந்தாலும் அவர்களிடையே காதல் தான் காமத்தை தாண்டி மேலோங்கி நின்றது.

காற்று புகா வண்ணம் அவளை கட்டிப்பிடித்து ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்றிருந்தான் சசி.. தென்றலுக்கு உறக்கம் வரவில்லை. விசாலாட்சி ஐந்து மணிக்கு எல்லாம் எழுந்து விடுவார். முதல் நாளை மருமகளிடம் நேரடியாக கூறி விட்டார்  தனக்கு முன்பாக தென்றல் எழுந்து விட வேண்டுமென்று..

ஐந்து மணிக்குள் எப்போது வேண்டுமானாலும் எழ சுதந்திரம் இருந்தது அவளுக்கு.. விசாலாட்சி எப்படி இருந்தாலும் சசி தன் மீது காதலோடு இருப்பது  தென்றலுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.

மறுநாளிலிருந்து சசியின் வேலை இன்னும் கடினமானது. அலுவலகத்திலேயே இருந்தான்..ஆர்ட் டிபார்ட்மென்ட் வேறு.. இடையில் இரண்டு நாட்கள் அலுவலகத்திலேயே தங்கி விட்டான் வேலைப் பளுக் காரணமாய்..

தென்றலுக்கு அவன் இல்லாத தனிமை சற்று சோதனையாக இருந்தாலும் கணவனின் முன்னேற்றத்தில் அவளும் தடையாக இருக்க விரும்பவில்லை.. என்ன வேலையாக இருந்தாலும் அவளிடம் பேசுவதை அதி அவசியமாக்கிக் கொண்டான்.. தண்ணீர் குடிக்கும் இடைவெளியில், பாத்ரூம் போகும்போது இப்படி ஒரு நிமிடமாவது அவளிடம் அழைத்து பேசி விடுவான்.

முடிந்த அளவு அவள் தனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தினான்.. இப்படியே இரண்டு வாரங்கள் முடிந்து மூன்றாவது வாரமும் ஆரம்பித்தது. கலைத்து ஓய்ந்த தோற்றத்தோடு வீட்டிற்கு வரும் கணவனிடம் தன்னுடைய படிப்பை பற்றி பேச வாய் திறக்க இயலவில்லை.

வந்ததும் உறங்கி விடுவான். சில நேரம் தென்றல் அவனை மல்லுக்கட்டி சாப்பிட வைப்பாள்.. காலையிலேயே எழுந்து சாப்பிடாமல் கூட அலுவலகத்திற்கு ஓடி விடுவான். சோமசுந்தரத்திற்கு அவனின் ஆர்வமும் துடிப்பையும் கண்டு உண்மையாகவே உள்ளுக்குள் பூரிப்பு ஏற்பட்டது.

” இந்தப் பையனுக்கு எப்போ இருந்து சினிமா பைத்தியம் பிடிச்சது? இவன் எந்த வேலையையும் இவ்வளவு துடிப்பா செஞ்சு நான் பார்த்ததே இல்லை? ” தனிமையில் விசாலாட்சியிடம் சொல்லி சிலாகித்தார்.

“ம்க்கும் உங்க கண்ணுக்கு அவன் எது செஞ்சாலும் குத்தமா தான் படும்.. அவன் என் பையன்.. எங்க குடும்ப ரத்தம் உடம்புல ஓடுது.. என் அப்பா மாதிரி உழைச்சு முன்னுக்கு வருவான். யாரோட தயவும் அவனுக்கு தேவை இல்லை.” கணவன் மகனை கை தூக்கி விடாத ஆத்திரத்தில் குட்டு வைத்தார் விசாலாட்சி.

“நீ என்ன குந்தி தேவியா? நான் பார்த்த உடனே புள்ள வந்துருச்சா.. என் ரத்தமும் உடம்புல ஓடுது. ஏன்டி நான் மட்டும் என்ன உக்காந்தா திங்கறேன்.. உங்க அப்பா கொடுத்தது ஒன்னுக்கு ரெண்டா நான் பெருக்கி வைக்கல..” விசாலாட்சி கழுத்தை நொடித்தார்.

சில நிமிடங்கள் கழித்து ” என்னதான் சொல்லு இத்தனை நாள் முட்டி மோதி என்னென்னமோ பண்ணிப் பார்த்தான்.. அந்த பொண்ணு வந்த நேரம் அவனுக்கு ஒரு நல்லது வருது பாத்தியா.. “

சோமசுந்தரம் எதார்த்தமாக சொல்ல விசாலாட்சி பொங்கி விட்டார்.

” என்ன திடீர்னு காத்து மருமக பக்கம் வீசுது? என் மகன் நாய் பாடு பேய் பாடு பட்டு  அரும்பாடா அலைஞ்சு ஒரு வழியை கண்டுபிடிச்சா உடனே நேத்து வந்தவ அதுக்கு காரணமாயிடுவாளா.. ஏதோ அவளோட சாப்பாட்ட பாராட்டுறீங்கன்னு பாத்தா கொஞ்சம் கொஞ்சமா அவளை இந்த வீட்டு எஜமானி ஆகிடுவீங்க போல..”..

” பின்ன அந்த பொண்ண துரத்தி விடுவா முடியும்.. ஒரு பொண்ணா இருந்து நீயே இப்படி பேசறது உனக்கு வெட்கமா இல்ல? நம்ம பையன் கிட்ட என்ன இருக்கு? அவனெல்லாம் நம்பி யாராச்சும் வருவாங்களா.. இந்த பொண்ணு வந்துருக்கு. அதும் இந்த காலத்து பொண்ணு.. வந்த வேகத்துல நீ பண்றதெல்லாம் அவன் கிட்ட வத்தி வச்சி சொத்த பிரிச்சு தனியா கூட்டிட்டு போக அந்த பொண்ணுக்கு தெரியாதா..

அந்த பொண்ணோட குடும்பத்தை பத்தி விசாரிச்சேன். நம்ம அளவுக்கு இல்லனாலும் அவங்களும் நல்லா கௌரவமான குடும்பம் தான். திடீர்னு இப்படியானதுனால அவங்க வாழ்ந்த வீட்டை விட்டு எங்கேயோ  மாறி போய்ட்டாங்களாம்.. ” சோமசுந்தரம் சற்று வருத்தத்தோடு கூறினார்.

“அட இதெல்லாம் எப்ப விசாரிச்சீங்க சொல்லவே இல்ல.. அந்தாளு மானஸ்தன்.. உங்கள மாதிரியா”.. எதை பேசினாலும் ஏட்டிக்கு போட்டியாக பேசும் மனைவியிடம் இதனால்தான் சோமசுந்தரம் அளவுக்கு மீறி எதையும் வைத்துக்கொள்ள மாட்டார்.

” இந்தப் படத்தோட வேலை முடிஞ்சதும் சசிக்கும் அந்த பொண்ணுக்கும் சின்னதா நம்ம சொந்தக்காரங்களை கூப்பிட்டு ரிசப்ஷன் வச்சிரலாம்னு இருக்கேன்.. “

“என்ன” கொதித்து விட்டார் விசாலாட்சி.

” ஏற்கனவே ஊர் பெரு தெரியாதவள கூட்டிட்டு வந்து சந்தி சிரிக்கிறது பத்தாதா. இதுல சொந்த பந்தத்தை கூட்டி வச்சு இன்னொரு தடவை காரி துப்பனுமா மூஞ்சில..”

“விசாலம் எதுக்கு நீ தேவை இல்லாம கத்துற.. அந்த பொண்ணு மேல மட்டும் தப்பு இல்ல உன் பையன் மேலயும் தப்பு தான்.. அதுங்க சின்னஞ்சிறுசுங்க எதோ அவசரப்பட்டு முடிவு எடுத்திருச்சுங்க. நாமளும் அப்படியே விட்ற முடியுமா.. சின்னதா வீட்டோட சொந்த பந்தத்தை கூப்பிட்டு இப்படி ஆகிப்போச்சுன்னு.. நாள பின்ன எவனும்  ஒரு வார்த்தை பேச முடியாது..”

” எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்கல”

” உனக்கு என்னைக்கு நல்லது பிடிச்சிருக்கு.. இது என்னோட முடிவு உன்னோட விருப்பத்தை நான் கேட்கல” சோமசுந்தரம் உறுதியில் விசாலாட்சியின் வாய் மூடி கொண்டது..

சசியின் படவேலை முடிந்ததும்  உறவுகளைக் கூட்டி சின்னதாக திருமண விருந்து கொடுக்க வேண்டும் என்பது சோமசுந்தரத்தின் விருப்பம். ஆனால் அந்த விருப்பம் மாறி மருமகளின் வளைகாப்பிற்கு தான் உறவுகளை அழைத்தார் சோமசுந்தரம்..