அத்தியாயம் 20:

தன் அறையில் அமர்ந்து தீரன் எடுத்த புகைப்படங்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள் வெண்மொழி. புகைப்படங்களைப் பார்த்து உறைந்து போயிருந்தாள். ஆம், அத்தனை தத்ரூபமாக அழகாக எடுத்திருந்தான் அவளை. கடல் அலைகளின் பின்புலமும் முழுநிலவின் பௌர்ணமி ஒளியும் அவளை பேரழகியாய் காட்டியிருந்தது. கேமராவைப் பயன்படுத்தத் தெரியுமா? என்று அவனைப் பார்த்து தான் கேட்ட முட்டாள் தனமான கேள்வியை எண்ணி தன்னைத் தானே தலையில் அடித்துக் கொண்டாள்.

‘உனக்கு உண்மையாவே இதுல இன்ட்ரஸ்ட் இருந்தா.. நான் எடுத்த போட்டோஸ்ல இருந்தே என் மனசு புரியும்’ என்று சொல்லிச் சென்றவனின் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் அசை போட்டுக் கொண்டிருந்தாள். ஆம், அவன் புகைப்படங்களின் மூலமே தன் மனதை அவ்வளவு அழகாக சொல்லியிருந்தான். வார்த்தைகளால் விளக்க வேண்டிய அவசியமே இல்லை அவ்விடத்தில். அவள் மீதான அவனின் ஒவ்வொரு ரசனைகளும் கேமராவில் அணி வகுத்து நின்றது. காதலிக்கப்படுதலின் முழு உணர்வையும் அவள் உடலின் ஓவ்வொரு அணுவும் உணர்ந்து கொண்டிருந்தது.

ஒவ்வொன்றையும் தள்ளிக் கொண்டு சென்றவள், அப்போதுதான் அவள் தீரனை எடுத்த புகைப்படத்தைப் பார்த்தாள். ஆம், அவனுக்கு சற்றும் குறைவில்லாமல் அவனை கேண்டிட் ஸ்டில்லாக அவ்வளவு அழகாக எடுத்திருந்தாள் மொழி. இதழ் விரியா மென் சிரிப்புடன் சிகை கோதியபடி நின்றிருந்தவனின் புகைப்படத்தை விட்டு கண்ணை எடுக்க முடியவில்லை அவளால்.

‘புகைப்படம் பேசும்னு சொல்லிட்டு போனானே? அப்போ தீரனை நீ இப்படி எடுத்ததுக்கு என்ன அர்த்தம்? இது எதைப் பேசுது மொழி?’ என்ற மனதின் கேள்வியில் உறைந்தவள்,

‘இல்ல என் மனசுல அப்படி ஒரு எண்ணமில்லை. இது சரியாவும் வராது’ என்று எண்ணியவளாய் அந்த புகைப் படத்தை அழிக்கப் பார்க்க, எவ்வளவு முயன்றும் அதை அவளால் செய்ய முடியவில்லை.

‘இதெல்லாம் தேவையில்லாத ஆசை மொழி. எப்படியும் இது நடக்கப் போறதில்லை’ என்ற மனதின் அறைகூவலில் அவளுக்குக் கண்களை கரித்துக் கொண்டு வந்தது.

“ஏன் நடக்காது?” என்று மனம் கேட்க,

“எல்லாம் தெரிஞ்ச நீயே இப்படி கேட்கலாமா? நான் என்ன சூழ்நிலையில இருக்கேன்னு அவருக்குத் தான் தெரியாது. உனக்குக் கூடவா தெரியாது?” என்று மனதை அடக்கினாள்.

“இருந்தாலும் தீரன் கேட்ட கேள்விக்கு நீ உண்மையை சொல்லியிருக்கலாம். இப்படி பொய் சொல்லிட்டு வந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இன்னும் எத்தனை நாளைக்குத் தான் பயந்து சாகப் போற?” என்றது மனம்.

“அதான் உண்மையா சாகவும் விட மாட்டேன்றாங்களே?” என்று யோசித்தபடி வேதனையுடன் அமர்ந்திருந்தாள்.

தீரனை சந்தித்த தினம் முதற்கொண்டு இப்போது வரை அனைத்தும் நினைவுகளாய் அவள் கண் வந்து போக, கண்களை கரித்துக் கொண்டு வந்தது மொழிக்கு.

ஒரு மனம் தீரனிடம் அனைத்தையும் சொல்லி ஆறுதல் தேட சொல்லியது. இன்னொரு மனமோ எதையும் செய்ய விடாமல் அவளை பயத்திலேயே வைத்திருந்தது.

அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் பார்த்துக் கொண்டிருந்தான் தீரன் தன் அலைபேசி மூலமாக.

ஆம், வீட்டிற்கு சென்று உறங்க முற்பட்டவனுக்கு உறக்கம் துளியும் வரவில்லை. கண்களை மூடினால் பக்கத்து வீட்டிற்குள் நுழைந்த காரே அவன் கண் முன் வந்து சென்றது. ஒரு கட்டத்தில் உறக்கம் பிடிக்காமல் எழுந்து விட்டான். எழுந்தவன் காரை எடுத்துக் கொண்டு வந்து மீண்டும் மொழி வீட்டின் அருகில் வந்து மறைவாய் நின்று நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான். உடன் விவேக்கையும் இப்போது அழைத்து வந்திருந்தான். அவனோ தூக்கக் கலக்கத்தில் அவனை முறைத்துக் கொண்டிருந்தான்.

“மச்சான் எதுவா இருந்தாலும் காலையில பார்த்துக்கலாம். ஒரு நாள் ரெஸ்ட் கேட்டேன். அது உனக்கு பொறுக்கலையா?” என்றான் கடுப்புடன்.

“இல்ல விவேக்! கண்ணை மூடுனாலே இந்த கார் தான் கண் முன்னாடி வருது. இந்த காரை இதுக்கு முன்னாடி எங்கையோ பார்த்திருக்கேன். அது எங்கன்னு தான் சட்டுன்னு ஞாபகம் வரலை” என்றான்.

“அப்போ ஞாபகம் வந்த உடனே சொல்லு அதி. அது வரைக்கும் நான் கார்லயாவது தூங்குறேன்” என்றவன் சீட்டில் தலை சாய்த்து படுத்துவிட்டான்.

யோசித்துக் கொண்டிருந்த தீரனுக்கோ, ஏதோ ஒரு உந்துதல். மொழி என்ன செய்கிறாள் என்று பார்ப்பதற்காக அலைபேசியை எடுத்திருந்தான்.

அவள் புகைப்படங்களைப் பார்ப்பதும் பின் ஆழ்ந்து சிந்திப்பதும், சில இடங்களில் கண் கலங்குவதுமென்று அனைத்தையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தான் தீரன்.

மொழி, அவனை எடுத்த புகைப்படத்தை கேமராவில் ஏற்கனவே அவன் தான் பார்த்திருந்தானே. பார்த்தவனின் மனம் அவ்வளவு இலகுவாய் உணர்ந்தது. அதனால் தான் அவளையும் பார்க்கும் படி சொல்லி விட்டு சென்றிருந்தான்.

“மென்டல்..! அவளுக்கும் என்னை பிடிச்சிருக்கு. ஆனா அது அவளுக்குத் தெரியலையா? இல்லை தெரியாத மாதிரி நடிக்கிறாளா?” என்றவன் யோசிக்க,

“எது எப்படியோ மேரேஜ் முடியட்டும் கவனிச்சுக்கிறேன்” என்று எண்ணியவனாய் கேமரா திரையை அணைக்கப் போக, எதார்த்தமாய் பார்த்தவனின் விழிகள் சட்டென்று கூர்மை பெற்றது.

அவள் அறையின் கட்டிலுக்கு கீழ் யாரோ இருப்பதைப் போன்று தோன்றியது தீரனுக்கு. சரியாகத் தெரியாவிட்டாலும் ஒரு உள்ளுணர்வு உணர்த்த மீண்டும் மீண்டும் முடிந்த அளவு கூர்மையுடன் பார்த்தான். ஆள் இருப்பதைப் போன்று தான் தெரிந்தது.

சட்டென்று பதட்டமடைந்தவன், என்ன செய்வதென்று யோசிக்க… உடனே சிந்தனைக்கு எதுவும் வரவில்லை.

‘மொழி இல்லாத சமயம் தான் ரூம்க்குள்ள போயிருக்கனும்” என்று எண்ணியவன், மொழி தன்னுடன் இருந்த நேரத்தில் அவள் அறையின் பதிவுகளை பார்க்க, யாரும் அறைக்குள் வந்ததைப் போலவே தெரியவில்லை. யோசித்தவனுக்கு தலையே வெடித்தது.

“ஷிட்” என்று தன்னைத் தானே நொந்து கொண்டவன்,

‘முட்டாள் முட்டாள்! பால்கனியை போக்கஸ் பண்ணி ஒரு கேமராவை செட் பண்ணியிருந்திருக்கனும். அன்னைக்கு விஹான் கூட, தன்னோட ரூம் பால்கனியில இருந்து மொழி ரூம் பால்கனிக்கு  போய் அவளை காப்பாத்தினதா சொன்னானே..’ என்று எண்ணியவன் முதன் முறையாக நிதானமின்றி பதட்டமானான்.

சட்டென்று அவளுக்கு அழைக்கப் போனவன், நிதானித்தான்.

“அதி! வீணா டென்ஷன் ஆகி அவளையும் டென்ஷன் படுத்திடாத’ என்று எண்ணியவன் மூச்சை இழுத்து விட்டபடி அவளுக்கு அழைத்தான். ஏற்கனவே குழப்பத்தில் இருந்தவள் அந்த நேரத்தில் அவனிடமிருந்து அழைப்பு வரவும், யோசனையுடன் தான் எடுத்தாள்.

“இந்நேரம் வரைக்கும் தூங்காம என்ன பண்ற மொழி” என்றவனின் குரலில் புரியாமல் திகைத்தவள்,

“உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றாள்.

“அது..!அதான்  டக்குன்னு என் கால் அட்டெர்ன் பண்ணிட்டியே அதான் கேட்டேன்” என்றான்.

“தூக்கம் வரலை” என்றாள்.

‘எப்படி வரும்? இருக்குறவன் தூக்கத்தையெல்லாம் கெடுத்தா உனக்கு மட்டும் எப்படி தூக்கம் வரும்?’ என்று நொந்து கொண்டவன்,

“எதுவும் குடிச்சியா?” என்றான் சந்தேகமாய்.

“இல்லையே ஏன் கேட்குறிங்க?” என்றாள் புரியாமல்.

“இல்ல, இன்னும் தூங்காம இருக்க. பசிக்குதுன்னு எதுவும் குடிச்சிருப்பியோன்னு கேட்டேன்” என்றாள்.

“பிரியாணி சாப்பிட்டதே ஒரு மாதிரி இருக்கு. பசியெல்லாம் இல்லை” என்றாள்.

“ஓகே ஓகே..!” என்றவனுக்குள் ஒரு ஆசுவாசம்.

“தூக்கம் வரலைன்னா அப்படியே பேசிட்டே மொட்டை மாடிக்கு வாயேன்” என்றான் தீரன்.

“இந்த நேரத்துலையா?” என்று மேற்கொண்டு பேசப் போனவளை தடுத்தவன்,

“சும்மா பேசிட்டே இருக்காத மொழி. சொன்னதை செய்” என்றான் அழுத்தத்துடன்.

போனை மியூட் செய்தவன்,

“விவேக்..!” என்று தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்ப,

“நான் தூங்கவே இல்ல மச்சான்” என்றவன் வேகமாய் தண்ணீர் பாட்டிலை எடுத்து முகத்தைக் கழுவிக் கொண்டான்.

வந்த சிரிப்பை அடக்கிய தீரன்,”தட்ஸ் குட். இப்போ என்ன பண்ற? நான் வர்ற வரைக்கும் அலெர்ட்டா இருக்க” என்றவன், ராஜ ராஜன் வீட்டிற்குள் சென்றான். கேட்டில் பாதுகாப்பிற்காக இருந்த போலீஸ் அவனைக் கண்டு சல்யூட் அடிக்க,

“எல்லாம் ஆல் ஓகே தானே. ஸ்ட்ரேஞ்சர்ஸ் யாரும் வந்தாங்களா?” என்றான்.

“நோ சார்”

“ஓகே! அலெர்ட்டா இருங்க” என்று வீட்டிற்குள் நுழையப் போனவன் பின் யோசித்தவனாய் வீட்டின் பின் பக்கம் சென்று பைப் வழியாக மொட்டை மாடி சென்றிருந்தான்.

மொட்டை மாடி இருளை கண்களுக்கு பழக்கப்படுத்தியவன் பக்கத்து வீட்டைப் பார்க்க, ஒரு அறையில் மட்டும் மங்கிய வெளிச்சம் தெரிந்தது. வீடு இருளில் இருந்தாலும் வீட்டிற்குள் ஆட்கள் நடமாட்டம் இருப்பதைப் போன்றே தெரிந்தது அவனுக்கு.

“சம்திங் ராங்” என்று எண்ணியவன், இன்னும் மொழி வராததைக் கண்டு கடுப்படைந்தான்.

அவள் அறையை கேமராவில் பார்க்க அவளோ இன்னமும் அறையில் தான் இருந்தாள். அவள் ஏதோ பயந்தவள் போல் இருந்தாள். தீரனுக்கு புருவம் நெரிபட, கட்டிலுக்கு அடியில் பார்த்தான். அந்த உருவம் அங்கேயே இருப்பதைப் போன்று தான் இருந்தது அவனுக்கு. மொழியின் பார்வை அவ்வப்போது பால்கனி பக்கம் சென்று வருவதை தெளிவாக உணர்ந்து கொண்டான் தீரன்.

“இதுக்கு மேல இவளை விட்டு வச்சா இந்த கேஸ் இந்த ஜென்மத்துல முடியாது” என்று எரிச்சலடைந்தவன், மீண்டும் அவளுக்கு அழைக்க, இந்த முறை அவன் அழைப்பின் ஒலி வெளியே கேட்கும் முன்னரே போனை அணைத்திருந்தாள் மொழி.

போனை அணைத்தவள், எதார்த்தமாய் எழுந்து வெளியே வருவதைப் வர, புரியாமல் குழம்பிப் போயிருந்தான் தீரன்.

மொட்டை மாடி வரை வந்து விட்டவள் லைட்டைப் போட பயந்தவளாய் அந்த இருளை வெறித்துக் கொண்டு நிற்க, மாடியின் இன்னொரு புறம் இருந்த தீரன் இப்போது அவள் அறையை நோட்டம் விட்டான். கட்டிலின் அடியில் இருந்த உருவம் வெளியே வருவதைப் போல் தெரியவில்லை. சட்டென்று போனை அணைத்து விட்டான்.

அவன் செல்போன் வெளிச்சம் மின்னி மறைந்ததில் திடுக்கிட்ட மொழி,

“யா..யார் இருக்கீங்க இங்க?” என்றாள் நடுங்கிய குரலில். நல்ல நாளிலேயே அவளுக்கு இருட்டு என்றால் பயம்.

“கேட்குறேன்ல” என்றாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டவளாய்.

தீரன் அவளின் பின்னால் வந்து சட்டென்று கையைப் பிடித்து இழுக்க, பயத்தில் “ஆஆ” என்று கத்தப் போனவளின் வாயை மூடியிருந்தான் தீரன்.

“கத்தாதடி..! நான் தான்” என்றவனின் குரல் அவளுக்குத் தெரிந்தாலும், ஏனோ உடல் நடுக்கத்தை நிறுத்தவில்லை.

“மொழி!ரிலாக்ஸ் நான் தான்”  என்றவன் மீண்டும் சொல்ல, அவன் குரலில் மீண்டவள் ஒரு பெரும் கேவலுடன் அவனை இறுக அணைத்துக் கொண்டாள். தானாய் வந்து அணைத்தவளின் அணைப்பில் உறைந்து நின்றான் தீரன்.

“மொழி வாட் ஹேப்பன்?” அவள் முகத்தை நிமிர்த்த பார்க்க, அவளோ நிமிர்ந்தாள் இல்லை.அவனுடைய கரங்களும் தாமாகவே அவளை இறுக்கிக் கொண்டது. அவன் உணர்வுகளைத் தூண்டி விட்டுக் கொண்டிருப்பதை அறியாதவளோ அவனுக்குள் மேலும் புதைந்து கொள்ள, அவள் கண்ணீரோ அவன் மார்புச் சட்டையை நனைத்துக் கொண்டிருந்தது.

வலுக்கட்டாயமாய் அவளின் முகத்தை நிமிர்த்தியவன்,

“அழுகையை நிறுத்தப் போறியா இல்லையா?” என்று ஒரு அதட்டலுடன் அவள் கண்ணீரைத் துடைத்திருக்க, அதுவோ நிற்பேனா என்றபடி துடைக்கத் துடைக்க வந்து கொண்டே இருந்தது.

“என்னன்னு சொன்னா தானடி தெரியும்” என்றான் தவிப்புடன்.

“நீங்க இங்க இருந்து போய்டுங்க ஏசிபி. நீங்க நினைக்கிற எதுவும் நடக்காது. நான் உங்களுக்கு வேண்டாம்..பிளீஸ் இங்க இருந்து போய்டுங்க” என்றவளுக்கு மேற்கொண்டு வார்த்தைகளுக்கு பதில் மீண்டும் அழுகை வர,

“என்னாச்சு?” என்றான் கோபமாய்.  அவள் எதுவும் பேசாமல் இருக்க, சட்டென்று அவள் கையிலிருந்த  செல்போனை அவன் பிடுங்க, அதிர்ந்தவள் வேகமாய் கையை இழுத்துக் கொண்டாள்.

“உன்னோட மொபைலைக் குடு” என்றான் அதட்டலாய்.

“இல்ல வேண்டாம்” என்றாள் பயத்துடன்.

“குடுடி” என்றவனின் குரல் அழுத்தத்தில் மிரண்டவள்,

“அதுல எதுவும் இல்லை” என்றாள்.

“அதான் நீயே சொல்லிட்டியே? எதுவும் இல்லைன்னு. அப்பறம் ஏன் தயங்குற?” என்றான் கேள்வியாய்.

“பிளீஸ்” என்றவளை அவன் சட்டையே செய்யவில்லை. சட்டென்று அவள் போனை பிடுங்கியிருந்தான்.