“சரி இப்பவே போய் பேசலாம். சும்மா உன் வீட்டுக்கு வர மாதிரி வரேன். அப்படியே பிட்டாக போடலாம். சரியா?”, என்று கேட்க “சரி”, என்று சந்தோஷமாக தலையசைத்தான்.

இருவரும் அவன் வீட்டுக்கு செல்ல “வா பா தாமரை, எப்படி இருக்க? மீனா எப்படி இருக்கா?”, என்று கேட்டாள் ராஜனின் அன்னை.

“நல்லா இருக்கா மா. இங்க ஒரு வேலையா வந்தேன். இவனையும் பாத்தேன். அப்படியே வீட்டுக்கு இழுத்துட்டு வந்துட்டான்”

“அவன் கூப்பிட்டா தான் வருவியா? சரி என்ன விஷயமா பா இங்க?”

“தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணலாம்னு நினைக்கிறோம் மா. எனக்கு முடிஞ்சிருச்சு பாத்தீங்களா? இன்னொரு தங்கச்சி வேற இருக்காளே? அதான்”

“அப்ப அவ படிப்பு?”

“கல்யாணம் முடிச்சிட்டு படிக்க வைக்க வேண்டியது தான். இப்ப உள்ள பசங்க அதைக் கூட செய்ய மாட்டாங்களா என்ன?”, என்று சொல்ல அவர் கண்கள் மின்னியது. நண்பன் பேச்சு ராஜனுக்குள் சந்தோஷ அலைகளை ஏற்படுத்தியது. அன்னையை கவிழ்த்தே விட்டான் என்று எண்ணிக் கொண்டான்.

“எப்பா நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுக்க மாட்டியே?”

“என்ன மா? சொல்லுங்க மா”

“ராஜனுக்கும் பொண்ணு சரியா அமையலை? உன் தங்கச்சிக்கு அவனை..”, என்று அவர் ஆரம்பிக்க “அம்மா, என்ன பேசுற?”, என்று மறுப்பது போல சொன்னான் ராஜன்.

“என்ன டா? நான் சும்மா கேக்க தானே செஞ்சேன்?”, என்று அவன் அன்னை சொல்ல “அதானே டா? பொண்ணுன்னு இருந்தா கேக்க தான் செய்வாங்க. எனக்கு நல்ல மாப்பிள்ளை வேணும்னு எண்ணம் மட்டும் தான். அது என் நண்பனே வந்தா எனக்கு சந்தோஷம் தான் மா. ராஜன் மாப்பிள்ளையா வந்தா அம்மா அப்பாவுக்கும் சந்தோஷமா தான் இருக்கும். ஜாதகம் அது இதுன்னு நீங்க பாப்பீங்களா மா?”, என்று கேட்டான் தாமரை.

“இப்ப பாக்குறது இல்லை பா. முதல் ரெண்டு வருஷம் பல பாத்தோம். ஜாதகம் சரியா இருக்குன்னு சொல்லுவாங்க. போய் பாத்தா பொண்ணு மாப்பிள்ளையை பிடிக்கலைன்னு சொல்லும். அப்புறம் மீனா வாழ்க்கை ஜாதகம் பாக்காததுனால தானே உன் கூட சேந்து நல்லா இருக்கு. நம்ம நல்லது நினைச்சு பண்ணுவோம். நல்லா இருப்பாங்க”, என்றார்.

“நிறைய எதிர் பாப்பீங்களா மா? எங்களால அவ்வளவு முடியுமானு தெரியலையே?”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை பா. என் மருமகளுக்கும் மகளுக்கும் பாதி பாதி என்னோட நகைகளை கொடுக்கணும்னு நான் முடிவு பண்ணிட்டேன். நீ பொண்ணை மட்டும் கொடு. அவளை கண்ணுகுள்ள வச்சு பாக்க வேண்டியது என்னோட பொறுப்பு. வீடு கூட மாடில தனியா இவனுக்கு கட்டியாச்சு. எங்க காலம் வரைக்கும் அவங்க மாடில இருக்கட்டும். இந்த வீடு அப்புறம் காடு, வேற இடத்தையும் அவங்க அப்பா பேர்ல இருந்து இவன் பேருக்கு மாத்திட்டோம். என் பொண்ணும் எதுவும் கேக்க மாட்டா. அவ கேக்குற நிலைமைல இல்லை. அந்த அளவுக்கு அவ வீட்டுல வசதி. இவனுக்கு ஒரு கல்யாணம் முடிஞ்சா அவளும் சந்தோஷம் தான் படுவா”

“சரிங்க மா, சொத்து பத்து எல்லாம் பெருசு இல்லை. வதனா கொஞ்சம் சின்ன பொண்ணு….”

“அவளுக்கு தேவையானது நான் பாத்துக்குறேன். தெரியாததை நான் சொல்லிக் கொடுத்துக்குறேன். ஆனா அவளை என் பொண்ணுன்னு தான் சொல்லிருக்கேன். அதனால என் பொண்ணு கிட்ட எப்படி இருப்பேனோ அப்படி தான் அவ கிட்டயும் இருப்பேன். எந்நேரமும் கொஞ்சிக்கிட்டு இருக்க மாட்டேன். அப்ப அப்ப குட்டவும் செய்வேன்”, என்று சொல்ல ராஜனும் தாமரையும் சிரித்தார்கள்.

“சரிங்க மா. அம்மா அப்பா கிட்ட பேசிட்டு சொல்றேன். நீங்க ஒரு நல்ல நாள் பாத்து பொண்ணு பாக்க வாங்க”

“விட்டா அவளை தூக்கிட்டே வந்துருவேன். உன் கல்யாணத்துலே எனக்கு தோணுச்சு. ஆனா கொடுக்க மாட்டீங்களோன்னு தான் கேக்கலை?”, என்று சொல்ல நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.

“சரி மாப்பிள்ளை வரேன்”, என்றான் தாமரை.

“சரி மச்சான்”, என்று புன்னகைத்தான் ராஜன்.

“சிரிக்கிறது சரி, என் தங்கச்சி கண்ணுல ஆனந்த கண்ணீரைத் தவிர வேற எதுவும் வரக் கூடாது. அப்படி வந்துச்சு உன்னை கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிருவேன் டா”

“அவளுக்கு வெங்காயம் உரிக்கிற வேலை கூட தர மாட்டேன் போதுமா?”, என்று ராஜன் கேட்க தாமரையும் சிரித்த படி அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.

வீட்டுக்கு சென்றதும் தாமரை அனைவரிடமும் விஷயத்தைச் சொல்ல அனைவருக்கும் சம்மதம் தான். வதனாவிடம் விஷயத்தைச் சொல்ல “அப்ப என் படிப்பு?”, என்று மட்டும் கேட்டாள்.

“அதுக்கு நான் கேரண்டி”, என்று சொல்ல “உங்க எல்லாருக்கும் சம்மதம்னா எனக்கும் சம்மதம்”, என்றாள் வதனா. அவனை அவளுக்கும் பிடிக்குமே? மறுப்பாளா என்ன?

அடுத்த ஒரு மாதத்தில் வதனா ராஜன் திருமணம் மிகச் சிறப்பாக பெரிய அளவிலே நடந்தது. வீட்டின் மருமகளாக தாமரையின் மனைவியாக அனைத்தையும் முழு ஈடுபாட்டுடன் அவ்வளவு சந்தோஷத்தில் மீனா செய்ய அவளைப் பற்றி தவறாக பேசிய வாய் கூட அவளை வியப்பாக பார்த்தது நிஜம்.

“உன் மருமக நல்ல குணமா தான் டி வசந்தா இருக்கா”, என்று சொல்லிச் செல்ல வசந்தா நிறைவாக மருமகளைப் பார்த்தாள்.

வதனா ராஜன் வீட்டுக்கு மருமகளாக சென்றதும் “மேடம் இப்ப என் கூட வண்டில வருவீங்க தானே?”, என்று கேட்டு வம்பிழுத்தான்.

அவனைப் பார்த்து வெட்கமாக சிரித்தவள் “அதுக்காகவா கல்யாணம் பணனுனீங்க? என்னை பிடிச்சு பொண்ணு கேட்டீங்கன்னுல நினைச்சேன்”, என்றாள்.

“உன்னை யாருக்கு பிடிக்காம போகும்? கேட்டா தர மாட்டாங்களோன்னு தான் கேக்கல? ஆனா இப்ப எனக்கே கிடைச்சிட்ட?”

“என்னை படிக்க வைப்பீங்க தானே?”

“லூசு? நீ எவ்வளவு வேணும்னாலும் படி. நான் படிக்க வைக்கிறேன். உனக்கு காலேஜ் முடிச்சிட்டு என்ன படிக்க ஆசை?”

            “பிஎட் பண்ணனும்”

            “பிஎட் முடிச்சிட்டு பிஜி கூட படி. நான் உன்னை படிக்க வைக்கிறேன். வேலைக்கு கூட போ. உன் கனவுக்கு இங்க யாரும் தடை சொல்ல மாட்டாங்க. ஆனா அப்ப அப்ப மச்சானையும் கவனிச்சிக்கோ”, என்று சொன்னவன் அவளை காதலாக அணைக்க விருப்பத்துடன் அவளும் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

அடுத்த இரண்டு மாதம் கழிந்திருந்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக நாட்கள் கடந்திருந்தது. தாமரை வீட்டில் அனைவரும் சந்தோஷமாக இருந்தார்கள். மீனா வீட்டில் இருந்து எப்போதாவது அவளது தாய் தந்தை பார்க்க வருவார்கள். ஆனால் இவன் அவர்களை அங்கே அழைத்துச் செல்ல மாட்டான். மீனாவும் கேட்டதில்லை. வசுந்தரா ஒருத்தி இருப்பதைக் கூட அவர்கள் மறந்தே விட்டார்கள். மீனாவுக்கு கிடைத்த வாழ்க்கையை பற்றி அடிக்கடி வடிவுவிடம் கேட்டு வயிறு எரிந்து கொள்வாள். சில பேரை எப்போதும் மாற்ற முடியாது அல்லவா?

அதே நேரம் “எப்ப நம்ம வீட்டுக்கு போறோம்?”, என்று மகேஷிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் ஆர்த்தி.

மகேஷ் மற்றும் ஆர்த்திக்கு திருமணம் முடிந்து நான்கு நாட்கள் ஆகி இருந்தது.  எப்போது மீனாவுக்கும் தாமரைக்கும் திருமணம் முடிந்ததை இன்ஸ்டாகிராமில் பார்த்தானோ அப்போது இருந்து கல்யாணியை நச்சரிக்க ஆரம்பித்தான்.

“நான் சொல்றதைக் கேளு டா மகேஷ், அவ உனக்கு வேண்டாம் டா. இப்பவே உன்னை எங்க கிட்ட இருந்து பிரிக்க பாக்குறா”

“எனக்கு அவ ஆசை தப்பா தெரியலை மா. ஏற்கனவே ஒரு வாழ்க்கைல கஷ்ட பட்டிருக்கா. அதான் பயப்படுறா? அப்புறம் நம்மளை யார் பிரிக்க போறா? இங்க தானே இருக்க போறேன்? தினமும் வந்து பாத்துக்குறேன்”

“அம்மா உனக்கு வேற பொண்ணு பாக்குறேன் டா மகேஷ்”

“எனக்கு இப்ப தான் மா சந்தேகமா இருக்கு நான் உன் பையன் தானான்னு?”

“மகேஷ்”

“ஆமா மா, சின்னவனுக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சு. அவன் அவனோட பொண்டாட்டி கூட சந்தோஷமா தானே இருக்கான்? நீ என்னை மீனா கூடவும் வாழ விடலை. அவளைப் பத்தி தப்பு தப்பா சொல்லி அவளை பிடிக்காம ஆக்குன? இப்ப இவளையும் கல்யாணம் பண்ணக் கூடாதுன்னு சொல்ற?”

“நீ எனக்கு மூத்த பையன் டா. உன்னை எப்படி விட்டுக் கொடுக்க முடியும்?”

“ஒருத்தங்களை பிடிக்கும்னா அவங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்னு தான் நினைக்கணும். ஆனா நீ என்னை வாழ விடாம பண்ணுற? அந்த மீனாவை பாரு கல்யாணம் முடிஞ்சு சந்தோஷமா இருக்கா. நான் மட்டும் தனியா கிடக்கணுமா? நீ பேசுறியா? இல்லை நானே போய் பேசட்டுமா?”, என்று கேட்க பேசுறேன் என்று சொல்வதைத் தவிர கல்யாணிக்கு வேறு வழி இல்லாமல் போனது.