காதல் வைபோகமே….. நாள் – 6

அத்தியாயம் 19

விக்ரம் கோபமான மனநிலையோடே வீடு வந்து சேர்ந்தான் .  

வழக்கம் போல் மனநிலையைச் சமன்படுத்துவதற்கு செல்வத்திடம் டீ சொல்லி விட்டு,  தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்தான். 

செல்வம் டீயை கொண்டு வந்து கொடுக்க, தோட்டத்தில் டீ குடித்தபடி அமர்ந்திருந்தான். தாத்தாவும் நடைபயிற்சி முடித்து, அவன் அருகில் வந்து அமர்ந்தார்.

தாத்தாவை பார்த்துப் புன்னகை சிந்த, “என்னாச்சு? குழப்பமாக இருக்கிறாய்….” 

“ ஒன்றும் இல்லை…  நான் பார்த்துக் கொள்கிறேன் தாத்தா”

“நீ நன்றாக ஹேண்டில் செய்வாய் என்று எனக்குத் தெரியும். ஆனால் சில நேரம் யாரிடமாவது பேசினால் மனசு தெளிவாகும் . மேலும் நம் மாதிரி ஸ்டேட்டஸில் இருப்பவர்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது. அதனால் தான் சொல்கிறேன், டாக் டு மி….”

சற்று யோசித்து விட்டு, “தாத்தா, எனக்கு ஒரு பெண்னணப் பிடிச்சிருக்கு.” 

“வாவ்! இன்டரஸ்டிங்… அதில் என்ன பிரச்சனை?”

சற்று தயங்கியவாறு, “அந்தப் பெண்ணுக்கு என்னைப் பிடிச்சிருக்கான்னு தெரியவில்லை…?” 

“அதெப்படிடா ஒரு பொண்ணுக்கு உன்னைப் பிடிக்காமல் போகும்? நீ தேவையில்லாமல் யோசிக்கிறாய் என நினைக்கிறேன்…” 

“இல்லை தாத்தா,  அவள் என்னைப் பார்க்கும்பொழு

து, அவள் கண்களில் பரவசமோ,  விருப்பமோ கொஞ்சம் கூட தெரியவில்லை , ஏன் ஒரு சுவாரசியம் கூட இல்லை…” 

“எத்தனை தடவை பார்த்திருப்பாய்?”

“ஒரு சில நிகழ்வுகள் தான் தாத்தா,  மேலும் நான் ஆழ்ந்து பார்க்க நினைத்தால் கண்களைத் தாழ்த்தி விடுவாள், இல்லை நகர்ந்து விடுவாள்…” என மொழிந்தான்.

“அப்ப இன்னும் நிறைய வாய்ப்பு இருக்குடா  பையா…” 

“எப்படிச் சொல்கிறீர்கள் தாத்தா?”

“உன்னைப் பார்க்கும் பொழுது வெறுப்போ, கோபமோ இருந்தால் தான் கவலைப்பட வேண்டும். நீ சொல்வதைப் பார்த்தால் காதல் பற்றிய யோசனையே அவளுக்கு இல்லை என நினைக்கிறேன்டா….” 

“அப்படியும் இருக்குமோ…?” என யோசித்தான். சற்றுத் தெளிந்தான்.

பின் மேலும்,  “எப்படித் தாத்தா? நான் பிடிச்சிருக்கு என்று சொன்னவுடன்,  யார்? என்ன? என எந்தக் கேள்வியும் கேட்காமல் ஒத்துக் கொண்டீர்கள்?” 

அவன் தோளைத் தட்டியபடி, “ நீயொன்றும் சின்னப் பையன் இல்லை.  எத்தனையோ பெண்களைக் கடந்து வந்திருக்கிறாய். அத்தனையும் தாண்டி நீ இந்த முடிவுக்கு வரும் முன் பலமுறை யோசித்து இருப்பாய் என்பது நிச்சயம்….” 

“பெண்ணைப் பற்றிய விவரம் சொல்லவா தாத்தா?” 

“வேண்டாம் ராஜா, வெற்றி பெற்றவுடன் கூட்டிக் கொண்டு வா…” எனச் சிரித்தார்.

பின், “உன் முடிவு சரியாகத்தான் இருக்கும். கவலைப்படாதே, எல்லாம் நல்லபடியாக நடக்கும்…” என  ஆசிர்வதிப்பது போல் விக்ரம் தலையைத் தடவிச் சென்றார்.

தாத்தாவுடன் பேசிய பிறகு, உற்சாக மூடிற்கு மாறினான் விக்ரம்.

அத்தியாயம் 20

மறுநாள் புதன்கிழமை அலுவலகம் சென்றான். மனமோ அவளைப் பார்க்க முரண்டியது. மீண்டும் செல்லமே செட்டுக்குச் செல்வது நன்றாக இருக்காது என்பதை உணர்ந்திருந்தான். அதனால்  ‘ருசிக்க ரசிக்க’ செட்டில் அவளைப் பார்த்துக் கொள்ளலாம் என வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.

சேனலில் புதிய டான்ஸ் ஷோவிற்கான ஏற்பாடுகள்  ஆரம்பித்திருந்தது. அதே நேரம் ‘ருசிக்க ரசிக்க’ என இனியா இருக்கும் சமையல் நிகழ்ச்சிக்கான லான்ச்,  ப்ரோமோ எனச் சேனல் பரபரத்துக் கொண்டிருந்தது.

சனிக்கிழமை அன்று இனியா கார்த்திக்கோடு ஜோடி சேர்க்கபட்டிருந்தாள். இதை அறிந்தவுடன் டென்ஷனான் விக்ரம் . 

கடைசி நேரத்தில் செல்ல வேண்டும் என நினைத்திருந்திருந்தவன்,  படப்பிடிப்பு தொடங்கும் நேரத்திற்கே சென்று விட்டான்.

வழக்கம் போல் அனைவரின் வணக்கத்தைப் பெற்றுக் கொண்டு அமர,  ரோஜா வலிய வந்து அவனுடன் பேச்சுக் கொடுத்தாள்.

இனியா அதை ஓரப் பார்வைப் பார்த்தபடி, மற்ற பங்கேற்பாளர்களோடு பேசிக்கொண்டிருந்தாள். 

இதைக் கவனித்த விக்ரமிற்கு,  மனம் துள்ளியது. வேண்டுமென்றே ரோஜாவுடன் பேச்சை வளர்த்தான்.

அப்போது செட்டிற்குள் பரத் நுழைய,  அவனைப் பார்த்த இனியா , ரோஜாவின் அருகில் வந்து வேகமாக அழைத்தாள்.

முதலில் புரியாத ரோஜா,  பின் இனியாவின் கண் ஜாடையைப் பார்த்துப் புரிந்து கொண்டாள். உடனே விக்ரமிடம் விடைபெற்று நகர்ந்தாள்.

தன்னிடம் விடைபெற்ற ரோஜாவைக் குழப்பத்துடன் விக்ரம் பார்க்க,

 

ரோஜா நேராகச் சென்று, அப்போது உள்ளே நுழைந்த புதியவனுடன் கை கோர்த்தபடி பேசுவதைக் கவனித்தான். புரிந்து கொண்டான்.

ஷுட்டிங் ஆரம்பித்து, அனைவரும் அவர்களுக்குகான ஜோடியோடு போய் நின்று கொண்டார்கள். 

பரத்தும் செட்டில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

நான்கு வாரங்களாக சேர்ந்து பணியாற்றுவதால்,  டீமில் நல்ல நட்பு நிலவியது. ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டு வேலை செய்தனர். 

கார்த்திக் கேட்ட பொருட்களைக் கொண்டு வந்து இனியா கொடுக்க, “திராட்சை எடுத்து வந்த போது உன் கண்கள் போல் உள்ளது, மாதுளை உன் பற்கள், ஆரஞ்சு உன்..…” என ஜொள்ளினான் . ஆனால் பேசுவதோடு நிறுத்திக் கொண்டான். தொட்டுப் பேசுவது, கை பிடிப்பது போன்ற செய்கைகளைச் செய்யாமல் கவனத்துடனே கார்த்திக் இருந்தான்.  அவன், அர்ஜுனின் கோபத்திற்கு ஆளாக விரும்பவில்லை.

இனியாவும் பேச்சில் எல்லை மீறும் பொழுது நன்றாக சிரித்துக் கொண்டே நோஸ்கட் செய்தாள். சேணைக்கிழங்கைப் பார்த்து, “உங்கள் மண்டை மாதிரி உள்ளது… இதில் களிமண் வேறு ஒட்டியிருக்கிறது பார்…” எனப் பதில் கொடுத்தாள்.

கார்த்திக்கின் முகம் அஷ்ட கோணலாகியது.

 

இவை அனைத்தையும் பார்த்தும் பார்க்காத மாதிரி கவனித்துக் கொண்டிருந்தான் விக்ரம்.

 இனியா தைரியமாகச் சமாளிப்பதைப் பார்த்து மகிழ்ந்தான். தன்னுடைய டென்ஷன் தேவையற்றது என்பதை உணர்ந்தான். ஆனாலும் கார்த்திக் மீது ஏதோ இனம் புரியாத கோபம் எட்டிப் பார்த்தது.

இன்னொரு பக்கம் பரத்,  ஆண்களிடம் ரோஜா பேசினால், அவளைக் கோபமாகப் முறைத்துக் கொண்டிருந்தான்.

அடுத்த பகுதிக்கு எடுப்பதற்கு முன் பிரேக் விடப்பட்டது. ரோஜா பரத்தைச் சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தாள். 

 

அர்ஜுன் அடுத்த ஷாட்டிற்காக மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருக்க,  இனியாவும் இணைந்து கொண்டாள்.

 மற்றவர்கள் ஆங்காங்கே நின்று டீ, ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள்.

இங்கிருந்து அர்ஜுனை அழைத்தால் இனியாவுடன் பேச முடியாது என்பதை யூகித்து,  விக்ரமே அவர்கள் அருகில் சென்று, “அர்ஜுன்…” என்று அழைக்க, 

மற்றவர்கள் விக்ரமைப் பார்த்து நகர,  இனியா நெஞ்சம் படபடக்க நின்றாள் . 

பின் சுதாரித்து இனியாவும் நகர முற்பட, “நீ இருக்கலாம்..” என்றான் விக்ரம்.

“நான் கிளம்புகிறேன் அர்ஜுன், திங்கட்கிழமை நிகழ்ச்சியோட ப்ரோமோஸை முடிவு செய்து விடலாம், காலை 11மணிக்கு என் ரூமில் மீட் பண்ணுங்கள்…” என்று பேசியபடி இனியாவைக் கூர்ந்து கவனித்தான். விக்ரம் கண்ணாடி அணிந்திருந்ததால், இனியாவிற்கும் அர்ஜுனுக்கும்,  விக்ரம் கவனிப்பது தெரியவில்லை.  

அவள் கண்கள் படபடப்பதை,  அலைப்புறுவதைக் கவனிக்க முடிந்தது. மனதிற்குள் சந்தோஷம் வந்து ஒட்டிக் கொண்டது. பின் மெதுவாக,“வெல்டன் இனியா” என்றான்.

என்னவென்று புரியாமல் இனியா திகைத்துப் பார்க்க, “கார்த்திகைப்  பலமாகக் கவனித்து விட்டாய்…” என்று சிரித்தான் .

 இனியாவிற்கு வழக்கமான துடுக்குத்தனம் முன்னே வர, “ நான் எப்போதும் ஸ்மார்ட் தான்” என்று இல்லாத காலரைத் தூக்கினாள். மேலும், “இந்த மாதிரி விசயங்களை சமாளிக்கிற தைரியமும்  எனக்கு உண்டு…” என்றாள் வேகமாக .

இதைக் கேட்டவுடன் விக்ரமின் முகத்தில் புன்னகை விரிய, 

 “என்ன இனியா?” என்று அர்ஜுன் படபடக்க, 

“கார்த்திக் கொஞ்சம் வழிந்தான்…” எனக் கிசுகிசுத்தாள்.

“எப்படிக் கவனிக்காமல் போனேன், ஸாரி இனியா…” என்று அர்ஜுன் வருத்தப்பட,

இடைபுகுந்த விக்ரம், “எந்தக் குற்றவுணர்வும் வேண்டாம் அர்ஜூன்… உங்கள் வேலைப்பளு, எதையும் கவனிக்க விடவில்லை” என்று அவன் வருந்துவதை மாற்றினான். 

அர்ஜுன் சமாதனமானான் .

“இப்போது ஒத்துக்கிறாயா இனியா?” எனக் கேட்டான் விக்ரம்.

‘இவன் வேற…. ,  புரியாத மாதிரியே பேசுவான்…’ என மனதில் வசை பாடியவாறு அவனைப் பார்த்தாள். 

ஒரு குறும்புப் புன்னகையுடன், “அவள் முகத்தில் வந்து போன பாவங்களை ரசித்துக்கொண்டு, “ஸ்மார்ட் என்றாயே…., புரியவில்லையா?” என அவனும் விடாக்கொண்டனாகக் கேட்க,

கடுப்பான இனியா, “ நாங்க ஸ்மார்ட் தான், ஆனால் பேசறவங்க புரிகிற மாதிரி தெளிவாகப் பேசணும் ஸார்….” என ஸாரில் ஒரு அழுத்தத்துடன் முடித்தாள்.

அவன் புன்னகை  சிரிப்பாக மாற,  இடையில் புகுந்து அர்ஜுன், “ஸாரி ஸார்,  இனியா தெரியாமல் பேசிவிட்டாள்…” என அவளுக்கு வக்கீலாக ஆஜாரானான்.

“லீவ் இட் அர்ஜுன்,  அவங்களுக்குப் புரியவில்லை,  அதான் கேட்கிறார்கள்…” எனச் சிரிப்புடன் முடித்தான்.

அர்ஜுனை முறைத்தபடி இனியா நிற்க, 

“பெண்களிடம் தவறாக நடப்பவர்களை வெளிப்படுத்த தயங்கக் கூடாது என்று அன்று சொன்னேன் இல்லையா? நீ அதை முழு மனதோடு ஏற்றுக்கொள்ளவில்லை,  இல்லையா?”

“ஆம்…” என்பது போல் இனியா பார்க்க,

“இப்போது பார், நீ அர்ஜுனோட பெஸ்டி என்று கார்த்திக்கிற்கு நன்றாகத் தெரியும். மேலும் அன்று நான் வேறு தலையிட்டுக்  கேட்டேன்..அப்படியிருந்தும் அவன் சும்மா இருக்கிறானா?  பிஸிக்கல் அபியூஸ் இல்லையே தவிர வார்த்தைகளில் செய்து கொண்டிருந்தான், இல்லையா?”

“ஆம்…” என்பது போல் தலையையாட்ட,

“அதற்குத்தான் படக்கென்று தைரியமாக வெளியே சொல்லி விட வேண்டும்” 

மேலும், “இன்று அவன் பேசுவதைச் சிரித்துக் கொண்டு கேட்காமல்,  நகர்ந்து செல்லாமல், தைரியமாகப் பதில் கொடுத்தாய் பார், அதற்குத்தான் இந்தப் பாராட்டு. ஆனால் இது பத்தாது இனியா, உன்னை இம்சை செய்தால்,  பட்டென்று இந்தப் பேச்சுகள் பிடிக்காது என்றும், தொடர்ந்தால் மேலிடத்தில் சொல்ல நேரிடும் என்று எச்சரித்து விடு” என்றான் விக்ரம் தெளிவாக .

“இந்தச் சேனல் இந்த மாதிரி நடவடிக்கைகளை அனுமதிக்காது என்று அவனுக்குத் தெரியும். அதனால் அடங்கி விடுவான். புரிகிறதா?”

‘புரிகிறது’ என்பது போல் இனியா தலையாட்ட,

 “நீ பேசுவதில் தான்,  இங்கிருக்கும் மற்ற தைரியமில்லாத பெண்களுக்கும், உதவிக்கு ஆளு இல்லாதவர்களுக்கும் தைரியம் வரும், பேச முனைவார்கள்,  பாதுகாப்புக் கிடைக்கும்….“ என்று நீண்ட உரையாற்றினான்.

 இனியாவும் அர்ஜுனும் உரைந்து நின்றனர்.

 

பின் தன்னைச் சமன் செய்து கொண்ட இனியா, அவன்  பேசியதிலிருந்த நியாயத்தைப் புரிந்து கொண்டு, “கண்டிப்பாகச்  செய்கிறேன் ஸார்…” என்றாள்.

“குட்..” என்றான் சின்னச் சிரிப்போடு  அங்கிருந்து கிளம்பினான்.

“ஆ…” எனக் கத்தலுடன்,  கையைத் தடவியபடி விக்ரம் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தவள் திரும்பினாள், 

“ஏன் பாஸ் , கிள்ளினீங்க ?” என்று கடுப்புடன் கேட்க,

“நடப்பதெல்லாம் உண்மை தானா? நிஜம் தானா?” என்று தெரிந்து கொள்வதற்காகத் தான்…” எனச் சிரிக்க ,

“பாஸ்…” என இனியா சிணுங்க,

 “உடனே ஒத்துக்கொண்டாயே அதான்….” என்று கலாய்த்தான்

“மறுக்க முடியாத உண்மை என்றால், அந்தக் கருத்து யாரிடம் இருந்து வந்தாலும் , அதை ஏற்றுக் கொள்ளத் தானே வேண்டும்” என்று கெத்துக் காட்டினாள்.

“தத்துவம் எல்லாம் பேசாதே, வேண்டாம்மா… நான் அழுதுவிடுவேன்…” என இவனும் வடிவேல் பாணியில் செய்ய,

“பாஸ்…” என இனியா சிரித்தாள் .

“விக்ரம் ஸார் எல்லாவற்றையும் கவனிக்கிறார் பார், வெற்றி சும்மா வந்து விடுமா…?” என வழக்கம் போல் அர்ஜுன் புகழ் பாட, 

இனியாவும் மறுக்க முடியாமல் அமைதி காத்தாள். பின் இருவரும் இணைந்து சாப்பிடச் சென்றனர்.

தொடரும்…..