முதலில் சசி தன்னை ஆக்கிரமித்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தாள் தென்றல்.. அதற்கான வயதோ பக்குவமோ அவளுக்கு சுத்தமாக கிடையாது.. அனைத்தையும் விட மனநிலை? அவள் என்ன மாதிரி உணர்ந்து கொண்டிருக்கிறாள் என்று அவளுக்கே புரியாத போது இந்த நிகழ்வு அவளுக்கு பெரிய வேதனையை கொடுத்தது.
ஆனால் சசியைப் பொறுத்தவரை அவன் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டான்.. அவன் தென்றலை காதலிக்கிறான். கைவிட்டுச் சென்று விடுவாளோ என்கிற பயத்தை மீறி அவளை திருமணம் செய்து விட்டான். இப்பொழுது அவளோடு ஒன்றாக கலந்தும் விட்டான்..
கனவு வாழ்க்கை அவனை சுற்றலில் விட்டாலும் காதல் வாழ்க்கை அவனை ஆகாயத்தில் மிதக்க வைத்தது. தென்றலின் முகச்சுழிப்பை கண்டபோது மனதில் லேசாக குறுகுறுப்பு ஏற்பட்டது.. மறுநாள் காலை அவள் முகத்தில் விழிக்க முடியாமல் திண்டாடினான்.
தென்றல் அவனிடம் பேசுவதை தவிர்த்தாள். அதற்கு ஏற்றார் போல் அன்று முழுவதும் அவளுக்கு வேலை வைத்து முதுகெலும்பை உடைத்தார் விசாலாட்சி.
காலை முழுதும் வீட்டில் குட்டி போட்ட பூனை போல சுற்றி வந்த சசி, ஒரு அழைப்பு வந்ததும் வெளியே கிளம்பி விட்டான்..
இரவு சற்று தாமதமாக வீட்டிற்கு வந்தவன் நேராக அறைக்கு செல்ல அங்கே உறங்குவது போல பாசாங்கு செய்து கொண்டிருந்தாள் தென்றல். நேற்று போல இன்றும் ஆகி விட்டால் என்ன செய்வது என்ற பயம்..
அவள் உண்மையாக உறங்கி விட்டாள் என்று எண்ணிய சசி தென்றலின் கால் மாட்டில் அமர்ந்தான். அவளின் செக்கச் சிவந்த பாதத்தை தூக்கி மடியில் வைத்துக் கொண்டவன் மென்மையாக பாதத்தை பிடித்து விட்டான்..
அவளின் கால் விரல்களுக்கு சொடுக்கு இழுத்து விட்டான். அதற்கு மேல் உறங்குவது போல நடிக்க முடியாமல் எழுந்து அமர்ந்தாள் தென்றல்.
” நீ தூங்கலையா” ஆசையாக அவள் முகத்தை பார்த்தான்.
“ம்ஹும்” கவனமாக அவன் முகத்தை பார்ப்பதை தவிர்த்தாள் தென்றல்.
அவளின் விலகல் சசிக்கு புரிந்தது.. மெல்ல தென்றல் என் கரத்தை தன் கைபிடிக்குள் கொண்டு வந்தவன்
” ஸாரி.. இந்த நேரத்துல நான் அப்படி நடந்து இருக்க கூடாது. ஏற்கனவே உன் குடும்பம் உன் கூட பேசாத கஷ்டம். இதுல எங்க அம்மா வேற உன்னை பாடா படுத்துறாங்க. நீ என்ன மாதிரி சிட்டுவேஷன்ல இருக்கேன் எனக்கு புரியுது. எல்லாமே புரிஞ்சி நடந்துக்க வேண்டிய நானே” சசியின் குரலில் உண்மையான வருத்தம் எட்டிப் பார்த்தது.
அவன்பால் தென்றலின் மனம் உருக ஆரம்பித்தது..
“ஸாரி செல்லம்மா”.. திருமணம் என்று ஆனதோ அன்றிலிருந்து குடும்பத்தின் பாசத்தை மொத்தமாக இழந்துவிட்ட தென்றலுக்கு சசியின் வார்த்தைகள் பெரிய ஆறுதலை கொடுத்தன..
அவனின் செல்லம்மா என்ற காயப்பட்ட அவளின் இதயத்திற்கு புதிய தெம்பை வாரி வழங்கியது.. நேற்றைய இரவை பற்றிய அவளின் கோணம் இப்பொழுது முற்றிலும் வேறு மாதிரி மாறியது.. இது என்ன சினிமாவா? திருமணமாகி வாழ்க்கையில் ஜெயிக்கும் வரை கணவன் மனைவி தனித்தனியாக பிரிந்திருக்க.. நிதர்சனம் புரிய சசி மீது அவளுக்கு இருந்த கோபமும் கரைந்து போனது.
“பரவாயில்ல” அவனிடம் முகம் கொடுத்து பேச சசிக்கு மகிழ்ச்சி.
” உனக்கு ஒரு ஹாப்பி நியூஸ் சொல்ல போறேன்..”
“என்ன”
“அதுக்கு முன்னாடி.. ஒரு சின்ன கிப்ட்டு என் பொண்டாட்டிக்கு”.. தென்றல் அவனை குறுகுறுவென்று பார்க்க
” கண்ண மூடு..”
“என்ன சொல்லுங்க”
” கண்ண மூடுடி” அதீதமான அவனின் நெருக்கம் தென்றலின் மனதை ஆட்டுவித்தது. அவன் சொல்லுக்கு கீழ்ப்படிய செய்தது.
தென்றல் கண்களை இறுக்கமாக மூடிக்கொள்ள தான் வாங்கி வந்த பரிசினை அவள் கரத்தில் வைத்தான் சசி. இப்பொழுது தென்றல் கண் திறந்து பரிசையும் பார்த்தாள் அவனையும் பார்த்தாள்.
“என்ன திடிர்னு கிபிட்டு எல்லாம்”
“ப்ச் சொல்றேன் ஓபன் பண்ணு மொத”.. தென்றலும் சிரிப்போடு அந்த சிறிய பார்ச்சலை திறந்து பார்க்க உள்ளே மணி வைத்த வெள்ளி மெட்டி இரண்டு அவளை பார்த்து சிரித்தன.
தென்றல் அவனை ஆச்சரியத்தோடு பார்க்க ” தங்கத்துல தாலி வாங்கி போடற அளவுக்கு இப்ப எனக்கு வசதி இல்ல.. ஆனா கண்டிப்பா சீக்கிரத்துல காசு சேர்த்து வாங்கிடுவேன்.. இப்ப இருக்கிற காசுக்கு என்னால இதுதான் வாங்க முடிஞ்சது.. ” என்றவன் அவள் பாதத்தை எடுத்து மடியில் வைத்து மெட்டியை அணிவித்து விட்டான்.
இரண்டு கால் விரல்களிலும் வெற்றியை போட்டவன் ஒற்றைப் பாதத்தை ஆட்டி பார்த்து மணியின் சத்தத்தில் மகிழ்ந்தான்..
” பிடிச்சிருக்கா”
” சூப்பரா இருக்கு” உண்மையாகவே தென்றல் என் மனது சற்று அமைதி அடைந்திருந்தது..
” சரி சொல்லுங்க என்ன குட் நியூஸ்.. ” சட்டென்று அவளைத் தாவி அணைத்து கொண்டவன் அதிரடியாக தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்டான்..
“என்னங்க..” தென்றல் அதிர்ந்து அவன் மடியிலிருந்து இறங்க போக அவளை அழுத்தமாய் பற்றியவன் இறங்கவிடவில்லை.
“சும்மா இரு.. ஹாங் என்ன குட் நியூஸ் தெரியுமா.. எனக்கு அசிஸ்டன்ட் டைரக்டரா வொர்க் பண்றதுக்கு ஒரு படத்துல சான்ஸ் கிடைச்சிருக்கு..” அவன் சொன்ன செய்தியை கேட்டதும் தென்றலின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
“ஹேய் சூப்பர்ங்க.. என்ன படம்.. யாரு டைரக்டர்.. யார் ஹீரோ”
தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர் ஒருவரின் பெயரை சொன்னவன், கதாநாயகன் புதுமுகம் என்றும் இன்னும் இரண்டு நாட்களில் பட பூஜை ஆரம்பித்து விடும் என்றும் மனைவியிடம் கூறினான்.
” உனக்கு தெரியுமா.. கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம்.. நாயா பேயா சுத்தி, ஏதாச்சும் ஒரு சான்ஸ் கிடைச்சுராதானு.. கடைசியா நீ வந்த நேரம் என்னோட கனவும் என்னை தேடி வருது.. இந்தப் படம் கண்டிப்பா ஹிட் ஆகும். எனக்கும் நல்ல ப்ரொபைல் கிடைக்கும். இத வச்சி அடுத்து நான் படம் பண்ணுவேன்..” தன்னுடைய கனவுகளை விரிவாக தென்றலிடம் சொல்லிக் கொண்டிருந்தான் சசி.
தென்றலும் ஆசையாக அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டே அவன் மீது சாய்ந்திருந்தாள்..
” இனிமே உனக்கு எப்ப தோணுதோ அப்ப தான் மத்தது.. என்ன நீ தப்பா நினைக்கலையே.. ” தவிப்போடு தென்றலின் முகத்தை பார்த்து சசி கேட்க
“இல்லங்க”..
“தென்றல்.. உனக்கு இங்க எல்லாம் செட் ஆயிருச்சா.. அம்மா எப்பவுமே இப்படித்தான் மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுவாங்க. அவங்களுக்கு மத்தவங்கள கண்டா இளக்காராம். அவங்க குணமே அதுதான். தயவுசெஞ்சு அதெல்லாம் நீ பெருசா எடுத்துக்காதே. நான் மட்டும் படம் பண்ணிட்டேன்.. எல்லாமே சரியாகும். உனக்கு பிடிச்சிருந்தா இதே வீட்ல இருக்கும் இல்ல வேற வீடு பார்த்துட்டு போயிடலாம்.. இப்ப கூட இங்க ஏதாச்சும் கஷ்டம்னா சொல்லு..”
சசி வீட்டில் இல்லாத நேரம் தென்றலை விசாலாட்சி படுத்தும் பாடுகளை கனவனிடம் சொல்லத்தான் தென்றலின் இதயம் பரபரத்தது. ஆனால் இப்பொழுது தான் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளான்.. அத்தோடு தான் வந்த நேரம் குடும்பம் இரண்டாக உடைவதை அவள் விரும்பவில்லை.. எனவே
” அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க.. அவங்க என் அத்தை தானே நான் மேனேஜ் பண்ணிட்டேன்..நீங்க போய் பிரஷ் ஆயிட்டு வாங்க நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்..” சசி சாப்பிடாததால் தென்றலும் இன்னும் சாப்பிட அமரவில்லை.. கணவன் மேல் உள்ள பக்தியால் அல்ல விசாலாட்சியின் வாய்க்கு பயந்து.
சசி தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்ததும் கணவன் மனைவி இருவரும் சாப்பிட்டு வந்து படுத்தார்கள். சசி வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் விசாலாட்சியின் வாய் மூடியே இருக்கும். சொத்து பற்றிய அவன் வாய் திறந்ததிலிருந்து விசாலாட்சி மகனிடம் பேசும் போது மிகுந்த கவனத்தோடு இருக்கிறார்.
மறுநாள் காலையிலேயே வெளியே சென்று விட்டான் சசி. விசாலாட்சிக்கு மகனின் திருமணம் பிடிக்கவில்லை என்றாலும் இப்பொழுது அவர் முழு ஓய்வில் இருப்பது என்னவோ உண்மை.
தென்றல் சமைத்த உணவை முதன் முதலில் வேண்டா வெறுப்பாக வாயில் வைத்தவருக்கு உடனே அதன் சுவை பிடித்து போக அவரையும் அறியாமல் முகத்தில் மலர்ச்சி தோன்றியது. நொடியில் அதனை துடைத்து எறிந்தவர் முகத்தை கடுமையாக்கி கொண்டார்.
” ஐயோ மனுஷன் தின்பானா உப்பே இல்ல.. எங்களுக்கெல்லாம் சூடு சொரணை ஜாஸ்தி. உப்பே இல்லாம திங்கிறதுக்கு நாங்க என்ன உன்ன மாதிரி சொரணை கட்ட ஜென்மமா.. “
“ச்சி த்தூ ஒரே ஒரப்பு.. நாக்கு பொத்துறும் போல.. உன்னால முடிஞ்சா சமை.. இல்லனா கைய கால வச்சுக்கிட்டு சும்மா உட்காரு. தின்னது செரிக்குறதுக்கு நானும் சமைக்கிறேன்னு பேர் பண்ணி எல்லாரையும் ஒரேடியா மேல அனுப்பிடாத..” என்னதான் தென்றல் பார்த்து பார்த்து சமைத்துக் கொடுத்தாலும் அனைத்திலும் குறை சொல்லி அவளின் மனதை உடைத்தார் விசாலாட்சி..
சோமசுந்தரம் கூட தென்றலின் சமையலை சாப்பிட்டுவிட்டு மனைவியின் அபாண்டமான குற்றச்சாட்டை தனிமையில் கண்டித்தார்..
” என்ன விசாலம்.. அந்த பொண்ணு நல்லா தானே சமைக்கிறது. அது கையாலேயே சமைச்சு சாப்பிட்டு அந்த பொண்ண குறை சொன்னா என்ன அர்த்தம் கேக்குறேன். நீ பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல.. ” சுயநலமாக தென்றலை வீட்டுக்குள் அனுமதித்தாலும் விசாலாட்சி மருமகளிடம் நடந்து கொள்ளும் முறையை காண்கையில் சோமசுந்தரத்திற்கு வருத்தமாக இருந்தது.
” என்ன மருமகளுக்கு வக்காலத்து வாங்கிட்டு பாய்ஞ்சுகிட்டு வரீங்க.. இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம். உங்க வேலை என்னமோ அதோட நிறுத்திக்கோங்க. வீட்டு விஷயத்துல தல விட்டீங்க பொல்லாதவளாயிருவேன்.. ” விசாலாட்சி கணவனுக்கு வேப்பிலை அடிக்க அதோடு சோமசுந்தரத்தின் வாய் மூடிக்கொண்டது.
சசிக்கு இந்த பாராட்டு பத்திரம் வாசிப்பது எல்லாம் சுட்டு போட்டாலும் வராது. அவங்களின் முகத்தை தென்றல் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க தன்னுடைய கதையைப் பற்றி யோசித்துக் கொண்டே சாப்பிட்டு முடித்து விடுவான். அவனுக்கு தெரிந்ததெல்லாம் தென்றல் சாப்பிட்டாளா இல்லையா என்பது மட்டுமே.
” தென்றல் உன் வீட்டுக்கு கால் பண்ணி பேசுனியா.. ” ஒரு நாள் தென்றலிடம் வினவினான் சசி. இதயம் எக்கத்தப்பாய் துடிக்க ஆரம்பித்தது அவளுக்கு.
” கண்டிப்பா நாம செஞ்சதும் தப்புதான். அவங்களுக்கும் கோபம் இருக்கிறது நியாயம் தானே.. ஒரு தடவை நீயே இறங்கி பேசறதுல எந்த தப்பும் கிடையாது.. உன்னால முடியலன்னா நான் பேசவா”.. தென்றலுக்கு எங்கே தன் வீட்டினர் சசியை அவமதித்து விடுவார்களோ என்கிற பயம்..
விசாலாட்சி தினமும் தன்னை வார்த்தைகளால் கொத்தி பிடுங்குவதை கூட சமாளித்துக் கொண்டவளுக்கு கணவன் தன்னால் அவமானப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. மெல்ல மெல்ல சசி மித்ரன் தென்றலின் இதயத்தில் மிக ஆழமாக இறங்கி கொண்டிருந்தான்..
வேலையெல்லாம் முடித்த பிறகு தைரியத்தை திரட்டிய தென்றல் வாசுகிக்கு அழைத்தாள். வாசுகியின் எண்ணுக்கு செல்லவில்லை. படபடப்போடு தந்தைக்கு அழைக்க அவரது எண்ணுக்கும் செல்லவில்லை.. யோசனையோடு அமர்ந்திருந்தவள் பின்பு ஒருவாராக பக்கத்து வீட்டு தோழிக்கு அழைத்தாள்.
முதலில் வாய்க்கு வந்தபடி எல்லாம் தென்றலைத் திட்டிய தோழி பிறகு நடந்ததை அறிந்து கொண்டாள்.
” ஏய் தென்றல் நீ இப்படி பண்ணதும் தெருவுல உங்க அப்பா அம்மாவால இருக்க முடியல. ரொம்ப அவமானமா போச்சு. திடீர்னு ஒரு நாள் சாமா எல்லாம் எடுத்துக்கிட்டு உங்க பேமிலியே எங்கேயோ போயிட்டாங்க.. இந்த வீட்ட கூட விக்கிற பிளேன்ல தான் இருக்குறதா எங்க அப்பா சொல்லிட்டுருந்தாரு.. ” தென்றலுக்கு காலுக்கடியில் பூமி நழுவியது.
தன்னால் தன்னுடைய குடும்பம் அனுபவித்துக் கொண்டிருக்கும் வேதனையை எண்ணி அவளது இதயம் சுக்கு நூறாக வெடித்து சிதறியதைப் போல உணர்ந்தாள். அழுகையில் கரைந்தாள். படவேலை ஆரம்பித்த பிறகு சசி இரவு மிக தாமதமாக தான் வீட்டிற்கு வருவான். அன்றும் அப்படி தாமதமாக வீட்டிற்கு வந்து சேர்ந்தவன் அறைக்குள் நுழைய தென்றலின் கேவல் சத்தம் கேட்டதும் பதறி விட்டான்.
“ஹேய் தென்றலு.. என்னடி ஆச்சு” விளக்கை கூட போடாமல் இருட்டில் படுத்து கதறிக் கொண்டிருந்தவளை பிடித்து உலுக்கி கேட்க திக்கி திணறி நடந்ததை கூறினாள் தென்றல். அவனுக்கு கஷ்டமாக இருந்தது.
” எல்லாம் என்னால தானே.. ” அவன் தன் மீது பழியை போட்டுக்கொள்ள தென்றலுக்கு ஆத்திரம் வந்தது. அவள் மீது எழுந்த கோபம் அவன் மீது விடிந்தது.
” அதான் தெரியுதுல என்ன உங்களால தானே அப்புறம் எதுக்கு சும்மா சும்மா அதையே சொல்லிட்டு இருக்கீங்க. நீங்க பீல் பண்றதுனால எல்லாம் சரியாயிடுமா.. இன்னைக்கு என் குடும்பமே இந்த நிலைமையில இருக்குறதுக்கு காரணம் நான். அப்படி என்ன சுயநலமான முடிவு எடுக்க வேண்டிருக்கு.. என் அப்பா எது செஞ்சாலும் நல்லதுக்கு தான் செய்வார்னு கண்ண மூடிகிட்டு இருந்திருந்தா இன்னிக்கி என் குடும்பத்துக்கு இந்த அவமானம் வந்திருக்குமா.. பெரிய தப்பு பண்ணிட்டேன்.. என்னோட சந்தோஷம் என்னோட வாழ்க்கைனு சுயநலமா முடிவு பண்ணி இன்னைக்கு இவ்வளவு பெரிய தல குனிவை என் குடும்பத்துக்கு கொடுத்துட்டேன்..
அந்த வீடு கட்ட என் அப்பா எவ்ளோ கஷ்டப்பட்டாரு தெரியுமா.. ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செஞ்சாரு. இன்னிக்கு எல்லாத்தையும் விட்டுட்டு போற நிலைமைக்கு நான் அவரை தள்ளிட்டேன்.. எல்லாத்துக்கும் காரணம் என் குடும்பத்தை மறந்து உங்களை நான் பார்த்தது தான்.. ” விரக்தியிலும் வேதனையிலும் தென்றல் புலம்ப சசிக்கு அவளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஈட்டியாய் மாறி இதயத்தை குத்தி கிழித்தன..
அவனுடைய குற்றவுணர்வு கோபமாக மாறியது. அது எப்படி தன்னால்தான் அவள் குடும்பமே சிதறி போனது என்று சொல்ல முடியும்? அவளைப் பிடித்திருந்தது காதலித்தான்.. அதனை அவளிடம் கூறிய போது கூட தன் குடும்பம் தானே பெரிது என்று போனாள். பிறகு அவளாக அழைக்கப் போய் தானே இவ்வளவு தூரம் வந்துவிட்டது.. அனைத்து தப்பையும் அவள் தன் மீது போடுவதாக சசி நினைத்துக் கொண்டான்.
வேலை அலைச்சல் வேறு அவனை நிதானமாக யோசிக்கவிடவில்லை..
” ஆமா கடைசில எல்லா தப்பையும் தூக்கி என் தலையில போடு.. நீ வேணான்னு சொல்லிட்டு போன பின்னாடி நான் உன்கிட்ட வந்து நின்னேன்னா.. நீ தானடி எனக்கு ஃபோன் போட்ட.. இன்னிக்கு நான் எதுக்கு ஆசிஸ்ட்டன் டைரக்டரா கண்டவன் கிட்ட வேலைக்கு போக போறேன்.நானே இந்நேரம் படம் பண்ண ஸ்டார்ட் பண்ணிருப்பேன்.. என்ன அவமானம்..
என் குடும்பத்துக்கு மட்டும் அவமானம் இல்லையா.. என்னமோ உன் குடும்பத்தை பத்தி மட்டும் பேசிட்டு இருக்க.. ச்சை”.. கத்தி விட்டு தன்னை சுத்தப்படுத்தி வந்தவன் அவள் அழுவதை கண்டுக் கொள்ளாமல் ஆத்திரத்துடன் உறங்க சென்றான்.