மழைவர பூமி மறுத்திடுமா? – 2

எப்பொழுதும் வீட்டில் அருள்மித்ரனின் சத்தம் ஓங்கி இருக்காது. ஆனால், அன்று பேசினான். “அம்மா… என் மக என் கூட இருக்கட்டும், பார்க்க விருப்பம் இல்லைன்னு சொல்லறவங்க கிட்ட ஏன் இப்படியெல்லாம் பேசிட்டு இருக்கீங்க” என்றான் நிதானமான குரலிலேயே! ஆனால், அவன் பேச்சில் இருந்த அழுத்தம், புறக்கணிப்பு அனைவருக்கும் புதிது!

அம்மாவின் மீதும் அவனுக்கு மனத்தாங்கல் இருக்கிறது தான்! அதைவிடவும் பிரீத்தியின் பெற்றோரை இங்கிருந்து அனுப்ப வேண்டும், இந்த வாக்குவாதம் தொடர்வதைத் தடுக்க வேண்டும் என்கிற எண்ணம் தான் பிரதானமாக இருந்தது. இதற்கு மேலும் இந்த பேச்சுக்களை கேட்டு நிற்கத் தந்தையாக அவனால் முடியாது.

“மாப்பிள்ளை நீங்க எங்க சூழ்நிலையை புரிஞ்சுக்கணும். காவ்யாவும் கல்யாணத்துக்கு நிற்கிறா. வீட்டுல கைக்குழந்தை இருந்தா அவளுக்கு எப்படி வரன் தகைஞ்சு வரும்?” என சாமியண்ணன் மருமகனின் கோபம் புரிந்து தயவாகவே சொல்ல, கல்யாணிக்கு ஆத்திரம் உச்சிக்கு ஏறியது.

“ஓ… அதுதானா சங்கதி? ஓட்டை பாத்திரத்துக்கு ஈடா நல்ல பாத்திரத்தை கேட்டுடுவோம்ன்னு அவசரமா உங்க மகளை வேற இடத்துல கட்டி தரீங்க. ஏன் இங்கே உங்க மூத்த பொண்ணை கட்டிக்கிட்டதால என் மகன் ஒத்தையில நிற்கிறான், அவன் பெத்த பொண்ணு அம்மா இல்லாம அனாதையா இருக்கா, அதெல்லாம் உங்களுக்கோ உங்க மகளுக்கோ கண்ணுக்கு தெரியலையா?” என்றதும் அருள் அதிர்ந்து போனான். அவனுக்கு சுத்தமாக இந்த பேச்சு பிடிக்கவில்லை.

செல்வி ஏதோ கோபமாகச் சொல்ல வரும் முன்பே, “நிறுத்துங்கம்மா” என்று தன் நிதானத்தை மொத்தமாக இழந்து கத்தியிருந்தான் அருள்மித்ரன்.

‘ச்சே! என்ன மனிதர்கள் இவர்கள் எல்லாம்?’ என்று மனம் மொத்தமாக வெறுத்துப் போனது. அவனுக்கு இன்னொரு திருமணம் செய்யும் எண்ணமே இல்லை.

மனைவியாக பிரீத்தி வந்து அவனின் மொத்த நிம்மதியையும் பறித்து, அவனின் தன்மானத்தை சோதித்து என போதும் போதும் என்கிற அளவில் அவனைப் படுத்தியிருந்தாள். அந்த அனுபவம் வாழ்நாள் முழுவதற்கும் போதாதா? இனியும் திருமணம் என்ற ஒன்றை அவன் யோசிப்பானா?

இன்றைய நிலையில், மகளை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கி விட்டால் மட்டும் அவனுக்கு போதும்! அது அவனால் தனியாக முடியாது என்பது தான் இங்கே அவனுடைய தலையாய பிரச்சனையே! அதற்குத் தீர்வாக மீண்டும் ஒரு புதைகுழியா என அவனின் மனம் கசந்தது.

மகனின் அதீத சத்தத்தில் கல்யாணி அதிர்ந்து போய் பார்த்திருக்க, அருள் தன் கையிலிருந்த மகளைத் தங்கை கவிதாவிடம் கொடுத்துவிட்டு, பிரீத்தியின் பெற்றவர்களைப் பார்த்து, “இத்தனை நாளும் என் பொண்ணை பார்த்துக்கிட்டதுக்கு நன்றி, நீங்க இப்ப கிளம்பலாம்” என்றான் கையெடுத்துக் கும்பிட்டு. மாமா, அத்தை என்று எந்த அடைமொழியிலும் அவர்களை அழைக்கவில்லை, அவனால் இனியும் அவர்களை அப்படி நினைக்கவோ அழைக்கவோ முடியாது. சொந்த பேத்தியிடம் இத்தனை கறார் காட்டுபவர்கள் அவன் மனதிலும் அந்நியமாகத்தான் பதிந்தார்கள்.

சாமியண்ணன் தலை குனிந்தார். மகளின் குணத்தைப் பொறுத்துப் போன மருமகன், அவள் எத்தனையோ பிரச்சனைகள் செய்தபோது கூட சிறு குறை கூறியதில்லை, அவளை அனுசரித்துப் போக அரும்பாடுபட்டவர். இன்று அவர் இருக்கும் நிலைக்கு உதவி செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் தாங்கள், தங்களின் சுயநலத்திற்காகக் கடமையை கை கழுவி விடுகிறோமே என்று நினைத்தாலே அவரது மனதிற்குத் துளியும் ஒப்பவில்லை.

ஆனால், மருமகன் நல்லவன் என்பதற்காக மட்டும் அவரால் எதையும் செய்ய முடியாதே! மூத்த மகளையே வேறு வழியில்லாமல் தான் அருளிற்குக் கட்டிக் கொடுத்தார். அப்படியிருக்க அழகு, படிப்பு, வசதி வாய்ப்பு என்று எந்த குறையும் இல்லாத இளைய மகளுக்கு அருள் பொருத்தமில்லை என்று தெரிந்திருந்தும் எப்படி அவரால் அவனுக்கு மணமுடித்துத் தர முடியும்? அதுவும் ரெண்டாம் தாரமாக வாழ்க்கைப்படும் அளவிற்கு எல்லாம் இறங்கி வரவே முடியாது. என்னதான் அருள் நல்லவன் என்றாலும் வசதி வாய்ப்பும் இல்லை, படிப்பும் இல்லை, சொல்லிக்கொள்ளும்படி உத்தியோகமும் இல்லை. பேத்தியைக் காரணம் காட்டி மகளின் வாழ்க்கையைப் பாழாக்க அவருக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?

செல்விக்கு அருள் தங்களை அவமானப்படுத்துவதாகத் தோன்றியது. கல்யாணி பேசியதில் வேறு கோபம் பொங்கிக் கொண்டிருக்க, “ஆசைப்படறதுக்கும் ஒரு அளவு வேணாமா? உங்க மகனுக்கெல்லாம் ஒருமுறை கல்யாணம் ஆனதே பெருசு… அவனும், அவன் படிப்பும், வேலையும்” என்று மரியாதை துளியுமின்றி கடுமையான வார்த்தைகளை விட, அவர் விட்ட வார்த்தைகளின் வீரியத்தில் அருளின் முகம் கோபத்தில் சிவந்து விட்டது.

வேகமாகத் திரும்பி அவரின் முகத்தை நேருக்கு நேர் பார்த்தவன், “பிரீத்தியை எனக்கு கட்டி வையுங்கன்னு நான் வந்து உங்ககிட்ட கேட்டனா?” என்றான் அடக்கப்பட்ட ஆத்திரத்துடன்.

பாறையென இறுகிய முகம், கடித்த பற்களுக்கிடையில் வார்த்தைகளைத் துப்பியது என புது அவதாரமாக நின்றவனுக்குச் செல்வியால் சில நொடிகள் எந்த பதிலையும் சொல்லவே முடியவில்லை.

சாமியண்ணன் தான் பிரச்சனை தீவிரமாவதை உணர்ந்து, “செல்வி… முதல்ல வெளிய நட நீ…” என்று மனைவியிடம் கடுமையாகச் சொன்னார், செல்விக்கும் அருளின் தோரணையிலும் பேச்சிலும் என்னவோ வம்பை வளர்த்து விட்டோம் என்றளவில் புரிய கணவரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அமைதியாகவே வாயிலின் அருகே சென்று விட்டார்.

சாமியண்ணன் தணிந்த குரலில் மன்னிப்பு கேட்கும் விதமாக, “அவ பேசினதை மனசுல வெச்சுக்காதீங்க மாப்பிள்ளை” என்றார் அருளிடம்.

அவன் இறுகியபடியே நின்றிருக்க, மேற்கொண்டு என்ன பேசுவது என தெரியாமல், “நாங்க வரோம் மாப்பிள்ளை” என்றார் தயங்கியபடி.

“ஒரு நிமிஷம்!” என அவரை தடுத்து நிறுத்தியவன், “தீபாலி உங்களுக்குப் பேத்தி. அதுக்கான எந்த கடமையையும் நீங்க ஏத்துக்க வேண்டியதில்லை. இப்பவும் எப்பவும். ஆனா, பாசம்ன்னு எப்பவாவது வந்து, அவளை பார்க்கணும்ன்னு உங்களுக்கு தோணினா அந்த உரிமையை எப்பவும் நான் பறிக்க மாட்டேன். எனக்கு உங்ககிட்ட ஒரே ஒரு வேண்டுகோள் தான்… இன்னொருமுறை என்னை மாப்பிள்ளைன்னு மட்டும் கூப்பிடாதீங்க, கேட்கவே பிடிக்கலை” என்று வெறுப்போடு சொல்ல, அவனை திகைத்துப் பார்த்தவர், மேற்கொண்டு எதுவும் பேச வழியில்லாமல் தலையை குனிந்தபடி அமைதியாக அந்த வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

பிள்ளை வளர்ப்பில் உதவுவார்கள் என்று எண்ணியிருந்த பிரீத்தியின் பெற்றோர் தான் இவ்வாறு செய்தார்கள் என்றால், அவனைப் பெற்ற அன்னையோ அவர்களே மேல் என்று எண்ணும் அளவிற்கு நடந்து கொண்டார்.

பிரீத்தியின் பெற்றவர்களாவது ஐந்து மாதங்கள் தீபாலியை பார்த்துக்கொண்ட பிறகு பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள, கல்யாணியோ ஒரு நாள் கூட குழந்தையின் பொறுப்பை ஏற்கவில்லை.

“எனக்கென்ன பிள்ளை வளர்க்கிற வயசா?” என்று மகளைக் கையில் கூட வாங்காமல் கேட்ட அன்னையிடம், கெஞ்சிக் கேட்டோ, போராடியோ தன் மகளின் பொறுப்பை விட அவனுக்குத் துளியும் மனமில்லை. இதே அன்னை தான் மூத்த தங்கை மாலதியின் பிள்ளைகளை உறக்கம் கெட்டுப் பார்த்துக் கொண்டார். இன்றும் அவர்கள் வீட்டிற்கு வந்தால் அம்மாவின் வயது பத்து வயது குறைந்து விடும். ஆனால், அவனின் பிள்ளையை அவரால் வளர்க்க முடியாதாம்! இந்த கொடுமையை அவன் காதுகொடுத்து கேட்கும் நிலை!

எந்த விவரமும் தெரியாத கடைக்குட்டி கவிதா தான் தீபாலியின் பொறுப்பை எடுத்துக் கொண்டாள். ஏற்கனவே அக்கா இரு பிள்ளைபேறுக்கும் இங்கே வந்து தங்கியிருந்தால், அவளின் மகள்களை பார்த்துக்கொண்ட பழக்கம் இருந்தது. ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், அம்மா தரும் வீட்டு வேலைகளோடு தீபாலியை பார்த்துக் கொள்வது சிரமமாக இருந்தபோதிலும் அண்ணன் மகளின் பொறுப்பை அவள் ஒருநாளும் உதறியதில்லை.

அவள் பார்த்துக் கொள்கிறாள் என்று தெரிந்ததிலிருந்து கல்யாணி அவளை இன்னும் அதிகமாக கரித்துக் கொட்டத் தொடங்கி விட்டார். ஏற்கனவே அவளின் கார்மேக வண்ணம் அவர் வாயில் கண்டபடி அரைபடும், இப்பொழுது சின்னவளின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட குற்றமும் அவள்மீது சேர்ந்து கொண்டது. இன்றிரவு அருளிடமும் கடும் வாக்குவாதம் நடந்திருக்க அதில் மொத்தமாக மனம் உடைந்து போனான்.

தீபாலியை எங்காவது விடுதியில் சேர்த்துவிட்டு இவன் இன்னொரு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்த அன்னையை மனம் வெறுத்துப் போய் பார்த்தான். தன்னைப்போன்ற நாதியற்றவர்கள் யார் தயவுமின்றி வாழ வேண்டுமென்றால் ஒரு துணை வேண்டும் என்று அவனின் அன்னை அவனுக்குப் பொட்டில் அடித்தாற்போல புரிய வைத்துவிட்டார்.

முன்பு அனுபவித்த வேதனைகளால் திருமணத்தை வெறுத்துக் கொண்டிருந்தவனை, திருமணம் செய்வதைத்தவிர உனக்கு வேறு வழியே இல்லை என்று நினைக்க வைத்து விட்டிருந்தது கல்யாணியின் பேச்சும் செய்கைகளும்.

திருமணம் செய்துகொள்வது என்று முடிவெடுத்து விட்டவனுக்கு, முன்பு செய்த பிழையை இப்பொழுது செய்ய முடியாது! அம்மாவை நம்பி தன் வாழ்க்கையின் முக்கிய முடிவை ஒப்படைத்துவிட்டு அவன் ஏற்கனவே அனுபவித்த வேதனைகள் போதும்! இனி திருமணம் என்றால், அந்த பெண் நிச்சயம் அவனின் தேர்வாகத்தான் இருக்க வேண்டும். கண்டிப்பாக அந்த பெண்ணும் அவனைப்போலவே துணையை இழந்து குழந்தையோடு இருக்க வேண்டும்.

தனக்குள் இப்படியொரு உறுதியான முடிவை எடுத்தபிறகே அவனது விழிகள் உறக்கத்தைத் தழுவியது.