*19*

“வர வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் வருது ரத்தினம். விரதம் இருந்து வீட்ல ஒரு பூஜை போட்டா எல்லாம் சரியா வரும். நாங்க அங்க வரோம் அன்னைக்கு வீட்ல இருக்குற மாதிரி பாத்துக்கோ.” 

“என்ன ம்மா புதுசா?” இதுபோன்ற பழக்கங்கள் தங்கள் வீட்டில் இல்லையே என்ற குழப்பத்தில் ரத்னதீபன் கேட்க,

“திவ்யா மாமியார் சொன்னாங்க ரத்தினம். செஞ்சிதான் பாப்போமே.” என்றதற்கு,

“செண்பாட்ட சொல்லிட்டியா?” முன்பென்றால் கேட்டிருக்க மாட்டான். எப்படியும் செண்பா வந்துவிடுவாள், வரவைத்து விடுவார்கள் என இறுமாப்புடன் இருந்துவிடுவான். இப்போது அவர்கள் கூப்பிட்டாலும் செண்பகா வருவாளா என்பது சந்தேகமே, அதனால் வாய்விட்டு கேட்டுவிட்டான்.  

“உன் வீட்டுக்கு பூஜை பண்ண நாங்க வரோம். அப்போ அங்க இருந்து வரவேற்க வேண்டியது யாரு?” என மகனிடம் திருப்பிவிட்டார் அபிராமி.

“ம்மா…”

“இதுவரைக்கும் எங்களால முடிஞ்ச அளவுக்கு அவளை இழுத்தாச்சு. இனி எங்களால முடியாது, உன் சாமர்த்தியம் பாத்துக்கோ.” என்று கழன்று கொள்ள, ஐயோ என்றானது அவனுக்கு. பேச வைப்பதற்கே தலையால் தண்ணி குடிக்க வைக்கிறாள், அவளை தொடர்புகொள்ளும் பாதைகளை அடைத்து விடுகிறாள். இதில் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரவேண்டுமா? வருவாளா? பார்க்கும் நேரங்களில் முட்டிகொள்கிறது இல்லையா முட்டிக்கொள்ளவே பார்க்கும்படி ஆகிறது. அடுத்த சோதனையா? என தலையை பிடித்துவிட்டான்.

“புதுசுபுதுசா ஏன்ம்மா இம்சையை கூட்டுற.” 

“வேணாம்னா போடா. நானே வந்து பூஜை பண்ணிட்டு கிளம்பிடுறேன் உன் பொண்டாட்டியை கூப்பிட வேணாம்.” என்று அபிராமியும் கைவிரித்துவிட, இந்த சாக்கிலாவது மனைவியை இங்கேயே தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என அமைதியாகிவிட்டான்.

அன்று ஞாற்றுக்கிழமை. விடுதியில்தான் இருப்பாள். சென்று பார்த்துவிட்டு பூஜை பற்றியும் சொல்லிவிட்டு வருவோமா என்ற யோசனை எழுந்தாலும் இன்னும் நான்கு நாட்கள் இருப்பதால் அதற்குள் ஏதாவது யோசித்து முரடு பிடிப்பாள். கடைசி நேரத்தில் மனதை மாற்றி கூட்டி வந்துவிடலாம் என்று கணக்கு போட, இவன் மனைவியோ எந்நேரம் அலுவலகத்திற்கும் விடுதிக்கும் வந்து நிற்பான், மாமியார் எப்போது அழைப்பார் என்ற யோசனையுடன் இருந்தாள். பூஜை என்று சொல்லி உனக்கு அழைப்பு வரும், வாய்ப்பை பிடித்துக்கொள் என வளவன் சொல்லியிருந்தான். புதன் வரை அவர்களிடமிருந்து எந்த தகவலும் வராததால் கடுப்பானவள் என்னவும் செய்யட்டும், இங்கிருந்தால்தானே மிரட்டி பணிய வைத்து கூட்டிச் செல்ல முயல்வான். நம் வீட்டிற்கு சென்றுவிடுவோம் என்று வியாழன் விடுப்பு எடுத்துக்கொண்டு புதனே கிளம்பி விழுப்புரம் சென்றுவிட்டாள். அவள் எதிர்பார்த்தது போல் வியாழன் அன்று அலுவலகம் வந்து பார்த்தவன் அவள் விடுப்பு என அங்கு சொல்லவும் வளவனுக்கு அழைத்தான். மனைவிதான் இவன் எண்ணை தடுத்துவைத்திருக்கிறாளே.

ஆச்சர்யத்துடன் எடுத்த வளவனுக்கு தன்னை விட்டே தங்கையை அழைத்து வரசொல்வானோ என்ற தயக்கம் இருந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை.  

“உங்க தங்கச்சி லீவாம் இன்னைக்கு? என்னாச்சு?”

“ஒன்னுமாகல. இங்கதான் இருக்கா.” கடையில் வேலையாட்கள் இருக்க, கொஞ்சம் தள்ளி வந்து பேசினான். 

சென்னையிலிருந்தாலே வரமாட்டாள் இப்போது அங்கு போய் உக்கார்ந்துவிட்டாளா என்ற கடுப்பை அப்படியே காண்பித்தான் ரத்னதீபன், “இப்போ எதுக்கு அங்க வந்தா?” 

“இங்க வராம எங்க போவா? வீட்டு நியாபகம் வந்துடுச்சாம்.” 

“ஏன் இங்க இல்லையா வீடு. அங்கதான் வரணுமா?” ஒருவேகத்தில் வார்த்தையாடியவன், “சரி அவகிட்ட போன் கொடுங்க.”

“நான் கடையில இருக்கேன்.”

“உடனே வீட்டுக்கு கிளம்புங்க.” ரத்னதீபன் அவசரப்படுத்த, இவங்களை வச்சிக்கிட்டு மனதிற்குள் வறுத்தெடுத்த வளவன், “இப்போ என்னால போக முடியாது மாப்பிள்ளை. நீங்க அவளுக்கே கூப்பிட்டு பேசுங்க.”

‘அவளுக்கு போன் போச்சுன்னா நான் ஏன்யா உனக்கு கூப்பிட்டு கெஞ்சிட்டு இருக்கேன்.’ எரிச்சலான ரத்னதீபனின் அகம் புரிந்தவன் போல், 

“அவசரத்துக்கு போன் போட்டா கூட நீங்க எடுக்க மாட்டேங்குறீங்க. வீட்டுக்கு புது நம்பர் வாங்கிக்கலாம்ல, அதுலேந்து கூப்பிடுங்க செண்பா எடுக்காம இருக்காது.” என யோசனையும் கொடுத்தான். 

“அதெல்லாம் நான் பாத்துக்குறேன். அம்மா ஏதோ பூஜைக்கு ஏற்பாடு பண்றாங்க. வந்துடுங்க.” என்றான் தன் கர்வத்தை விட்டுக்கொடுக்காது. அது வளவனுக்கு புரிய, எப்படியோ நல்லா இருந்தா சரி என்று வேலையை கவனிக்க சென்றுவிட்டான்.

மச்சான் துணை இருந்தா மலையேறலாம்னு சரியாதான் சொல்லிவச்சிருக்காங்க என மனதில் மச்சினனுக்கு பாராட்டு வாசித்து பெரிதாக உபயோகப்படுத்தாமல் வைத்திருந்த மற்றொரு சிம்கார்டை உயிர்ப்பித்து பணம் போட்டவன் அதிலிருந்து மனைவிக்கு அழைக்க, எடுத்துவிட்டாள் செண்பகா.

“யாரு?”

“பேசுறது எம்.எல்.ஏ பொண்டாட்டியா?” என்னவோ அவளிடம் நக்கல் வந்துவிடுகிறது என பேசியபின் தன் வாயிலே போட்டுக்கொண்டான்.

‘இந்த மனுஷனுக்கு இருக்குற லொள்ளுக்கு… கதறுடா மவனே.’ மனதில் கருவிக்கொண்டவள், “எம்.எல்.ஏவோட எக்ஸ் பொண்டாட்டிங்க. தப்பான ஆளுக்கு கூப்பிட்டுடீங்க.” 

“அடிங்க… பிச்சிருவேன்டி உன்னை.”

“ஓ… பேசுறது எம்.எல்.ஏ சாரா? நம்பர் மாத்தி கூப்பிட்டுடீங்க சார். நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நபர் நானில்லை.” வேண்டுமென்றே வெறுப்பேற்றினாள். அதில் தூண்டப்பட்டாலும் அனாவசியமாக வார்த்தை விட்டு கெடுத்துக்கொள்ள வேண்டாமென அமைதியானவன், 

“விளையாடாத செண்பா. இப்போ எதுக்கு அங்க போய் உக்காந்திருக்க?” 

“இது என் வீடு. நான் எப்போ வேணாலும் வருவேன் போவேன் அதெதுக்கு உங்களுக்கு?” 

அவன் அமைதியாக போனாலும் அவள் வார்த்தைகள் உசுப்பிவிட, எரிச்சலுற்றவன், “அப்போ இங்க பாத்து வச்சிருக்கேனே அது யார் வீடுடி?”

“என்னை கேட்டா பாத்தீங்க?” என்றாள் பட்டென.

“கேட்டுட்டா மட்டும் சொல்லிடுவ…”

“கேக்காமலேயே நீங்களே நினைச்சிகிட்டா நான் ஒன்னும் பண்ண முடியாது.” வார்த்தைக்கு வார்த்தை செண்பகா மல்லுக்கு நிற்க, உரையாடலை சட்டென தன் போக்கிற்கு மாற்றிக்கொண்டான் ரத்னதீபன். 

“இப்போ கேக்குறேன் நாளைக்கு வீட்ல பூஜை இருக்கு. நீதான் வந்து செய்யணும். வரியா?”

“இது கேக்குற மாதிரி இல்லை தகவல் சொல்ற மாதிரி இருக்கு.” என்று இவளும் விடாமல் வாதாட, சலிப்பு தட்டிவிட்டது ஆடவனுக்கு. 

“எனக்கே தகவல்தான்டி வந்துச்சு. என்ன பண்ணணுங்குற இப்போ?”

“என்னை எதுக்கு கூப்பிடுறீங்க? உங்க வீட்டு பங்ஷனுக்கெல்லாம் யார் யாரோ வராங்க. அவங்களை வச்சி செஞ்சிக்க வேண்டியதுதானே?” மந்த்ராவை குறிப்பிடாமல் அவள் வருகையை பற்றி செண்பகா கேட்க, அவளை ஒத்தே பதில் கொடுத்தான் ரத்னதீபன். 

“நான் யாரையும் கூப்பிடல. கூப்பிட்ட நீயும் விட்டுட்டு போறதுலதான் குறியா இருக்க. அழையா விருந்தாளியா வர்றவங்களை துரத்துற அளவுக்கு நாம இன்னும் கீழிறங்கி போகலைனு நினைக்குறேன்.” 

அவன் பேச்சிலேயே மந்த்ராவை அவன் அழைக்கவில்லை என்று தெரிந்துவிட, அமைதியாகிவிட்டது பெண். சுயலாபத்திற்கென வெளியே என்ன செய்தாலும் தான் கேட்டால் உண்மையை மறைக்காது சொல்லிவிடுவான் என்பதில் அத்தனை திருப்தி பெண்ணிற்கு. அந்தமட்டில் நம்பிக்கையை பெற்றிருந்தான் மனைவியிடம். 

“நானே நைட் வந்து கூட்டிக்குறேன் என்ன? நம்ம வீடுடி.” மனைவி அமைதியாக இருக்கவும் அப்படியே பேசி அவளை அழைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பு அவனை தணிந்து போக வைத்தது. அதுவும் சின்ன மாமனார் மாப்பிள்ளை தேடுகிறார் என்றதில் கொஞ்சம் அரண்டுவிட்டது என்னவோ உண்மை. மனைவி கொஞ்சம் இளக்கம் கொடுத்தால் நம்பிக்கையாக இருக்கலாம், அவளே இறுகிப் போயிருக்கையில் மனைவி கைவிட்டு போய்விடுவாளோ என்ற கலக்கம் அவன் அகந்தையை பின்தள்ளிவிட்டது. 

“செண்பா என்னமாச்சும் பேசு. இங்க நிறைய வேலை கிடக்குடி, உன்கிட்ட பேசிட்டு அதை பாக்க போகணும். நீ எதுவும் பண்ண வேணாம். நான் வேலை முடிச்சிட்டு நைட் ட்ரைன்ல வரேன், நீ ரெடியா இரு.” என்றதற்கும் பதிலில்லை என்கவும் அவளின் கோபம் கொஞ்சம் தணிந்திருக்கிறது, வந்துவிடுவாள் என்ற நம்பிக்கை வந்தது அவனுக்கு. 

“நான் வைக்கட்டுமா?” 

அதற்கு பதிலாய் அழைப்பு துண்டிக்கப்பட்டது. அவன் அழைக்க வேண்டும் என எதிர்பார்த்தவளுக்கு அவனே அழைக்க வருகிறேன் என்றது மென்சாரலாய் மனதை வருடி வெட்கையை குறைக்க, மனது இலகுவானது போலானது. நிர்மலமான முகத்தோடு வலம் வரும் மகளைக் கண்டு நிம்மதியுற்ற அமுதாவுக்கோ தங்கள் பேச்சைக் கேட்டு மகள் தெளிந்துவிட்டாள், பிரிவுதான் சரியான தீர்வு போலும் என நினைத்து நிம்மதி கொண்டார். 

“எப்போ பாப்பா கிளம்புற? குழம்பு, ஊறுகாய் எதுவும் செஞ்சு வைக்கவா?” என்ற அன்னையின் கேள்விக்கு, எதுவும் வேண்டாம் என்றாளே ஒழிய, எப்போது கிளம்புகிறேன் என்று சொல்லவில்லை. காலை நேரமே கிளம்புகிறாள் என அவராகவே நினைத்துக்கொண்டார். மாலை ஒருமுறை வீடு வந்த வளவன் விசாரிக்கவும் ரத்னதீபன் வரும் விஷயத்தை பகிர்ந்துகொள்ள, அவனே வீட்டில் சொல்லிவிட்டான். அதிர்ந்து போன பெற்றவர்களுக்கு எப்படியோ சரியானால் சரி என்ற சிறு நிம்மதி. முன்னாடியே சொன்னா என்னடி என்று மகளை கடிந்துகொண்டவர் மாப்பிள்ளைக்கு சிறு விருந்தே செய்துவிட்டார். 

இரவு எட்டு மணி போல மாமனார் வீட்டிற்கு வந்திறங்கினான் ரத்னதீபன். திருமணமான புதிதில் வந்தது. அதன்பின் சண்டை சச்சரவு என்றாகிவிட, இன்று வரவேற்பு பலமாய் கிடைத்தது. 

“சும்மா வீட்லையே பண்றதால அம்மா மட்டும் வராங்க.” என்றவன் அவர்களுக்கு அழைப்பு கொடுக்காத காரணத்தை பட்டும்படாமல் சொல்ல, அதுவா முக்கியம். நீங்க நன்றாக இருந்தால் போதுமென்றுவிட்டனர். 

அவர்களிடம் சொல்லிக்கொண்டு மனைவியை அழைத்துக்கொண்டு கிளம்பியவன் ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுத்துவிட்டு அவளருகில் வந்தமர, அவனை முறைத்துவிட்டு தள்ளி அமர்ந்தாள் செண்பகா.

“என்னடி இப்போ எல்லாம் ஓகே தான?” புரியாது பார்த்தான் ரத்னதீபன். 

“கூட வந்துட்டா எல்லாம் சரியாகிடுமா? எப்படியும் நாளைக்கு வேலைக்கு போக சென்னை வரணும் அதுதான் கிளம்பி வந்தேன்.” இவளும் கெத்தை விடவில்லை. 

முறைத்துப் பார்த்தவன், “அப்போ நீ வீட்டுக்கு வரல?” 

“வரல.” என்றாள் வேண்டுமென்றே. கொஞ்ச நஞ்சமா படுத்தியிருக்கிறான். தானும் பதிலுக்கு கொஞ்சம் செய்வோம் என்ற நினைப்பு செண்பகாவிற்கு. இன்னும் அவன் மீது கோபமும் இருக்க, முரண்டுபிடிக்க பெரிதாக சிரமப்பட தேவையிருக்கவில்லை. எல்லாம் இயல்பாக வந்தது. 

பல்லைக்கடித்து கடுப்புடன் அவளை பார்த்தவன் முகம் திருப்பிக்கொள்ள, இவளும் தண்டவாளத்தை வெறித்தவண்ணம் பார்வை பதித்தாள். சில நொடிகள் இடைவெளியில் தன்னை கட்டுப்படுத்தியவனாய், “உனக்கு எப்படி வீடு பாக்கணும்னு சொல்லு. அதுக்கேத்த மாதிரி எல்லாம் பண்ணிடலாம், அப்புறம் இந்த பூஜை எல்லாம் வச்சிக்கலாம்.” முதலிலிருந்து ஆரம்பிக்கலாம் என்பது போல் அவன் பார்க்க, முறைத்துப் பார்த்தாளே ஒழிய ஒன்றும் சொல்லவில்லை.

“என்ன செண்பா? நீதான என்னை கேட்டா வீடு பாத்தேன்னு கேட்ட, இப்போ உன்னை கேக்குறேன் எதுவும் சொல்ல மாட்டேங்கிற.” 

செண்பகாவிற்கோ இதற்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. தனக்காக அவன் பார்க்கவில்லை என்ற கோபம்தான் பிரிவிற்கு முதன்மை வகித்திருக்க, தற்போது தன் வார்த்தைகளை கருத்தில் கொண்டு அதன்படி செயல்பட உடன்படுகிறானே என மனம் அசைந்து கொடுத்தது. கோபத்தை பிடித்து வைத்துக்கொள்ளும் வித்தை கூட அந்நொடி தோற்றுப்போனது. அவனையும் அறியாமல் அவளை புரிந்துக்கொள்ள ஓரடி முன்னே எடுத்து வைத்திருந்தான் ரத்னதீபன். `

அவள் எதுவும் சொல்வாளா என்பது போல் அவள் முகத்தையே பார்த்தவன் இரயில் வரவும் எழுந்துகொண்டு பார்க்க, அவனுடன் ரயிலில் ஏறிக்கொண்டாள் செண்பகா. 

இரவு நேரம் கூட்டம் குறைவாகவே இருந்தது. எங்கு அமரலாம் என அவன் இருக்கையை தேடும் சமயம் செண்பகா காலியாக இருந்த ஜன்னலோரம் சென்று அமர்ந்துகொள்ள, இவனும் தொடர்ந்து சென்று அவள் தோள் உரச அமர்ந்தான்.

“இன்னும் ஒரு மூணு மாசத்துல சின்ன கார் வாங்கிடலாம். அடிக்கடி இது மாதிரி பப்லிக் ட்ராஸ்ன்போர்ட்ல வர்றது சரிவராது.” என்றான் அவனாகவே. செண்பகா எதுவும் சொல்லாமல் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வர, இவனுக்கு சப்பென்று ஆனது. எதிர்த்து எதிர்த்து பேசும் மனைவியிடம் வார்த்தைக்கு வார்த்தை அனாசியமாக வாயாடியவனுக்கு மெளனமாக இருக்கும் மனைவியை கையாளத் தெரியவில்லை. அவனும் வாய்ப்பூட்டு போட்டுகொண்டு அலைபேசியை எடுத்து நோண்ட ஆரம்பித்துவிட்டான்.

சற்று நேரத்தில் செண்பகா உறக்கத்தில் தள்ளாட, அவள் கன்னத்தைப் பிடித்து தன் தோளில் சாய்த்துக்கொண்டு, இருக்கையில் தளர்ந்து அமர்ந்துகொண்டான் ரத்னதீபன். அவன் தொடுதலில் விழித்துப் பார்த்தவள் தோளிலிருந்து தலையை விலக்கி நேராக அமர முயல, கட்டாயமாக அவளை தன்மீது சாய்த்துக்கொண்டவன், “என்ன இப்போ? தூங்கு செண்பா. கூட்டம் கூட இல்லை.” என்ற மென்குரலின் கடினத்திற்கு கட்டுப்பட்டு கண்களை மூடிய செண்பகாவின் உறக்கம் தூரப்போனது. 

எத்தனையோ பயணங்களில் கொண்டவனின் எண்ணங்கள் கோபமும் ஏக்கமும் ஆதங்கமுமாய் அவளின் நிம்மதியை களவாடியிருக்க, இந்த பயணம் அது அத்தனையும் துடைக்கும் விதமாய். இனம்புரியா உணர்வுகள் மனதை ஆக்கிரமித்து மென்சாரலின் குளுமையை உணரவைத்து இதம் பரப்பியது. இரயிலின் வேகத்தில் ஜன்னலோரம் வீசிய தென்றலும் இனிமைக்கு இனிமை கூட்டுவதாய் அவளை இனிய தாலாட்டிற்குள் அழைத்துச் செல்ல, மனதின் கவலைகள் எல்லாம் ஒரு ஓரம் சென்று பதுங்கிக்கொண்டு அவனின் இருப்பில் இயைவு கொள்ள வழிவகுத்தது. 

நடுசாமத்தில் இறங்க வேண்டிய இரயில் நிலையம் வந்திறங்கி வீட்டிற்கு செல்ல கார் பதிவு செய்துகொண்டே மனைவியைப் பார்த்தவன், “இந்நேரம் நீ பி.ஜிக்கு போக முடியாது. நம்ம வீட்டுக்கு போயிடலாம்.” எங்கே என்னை விடுதியில் கொண்டு விடு என சொல்லிவிடுவாளோ என்ற யோசனையில் அவனே முந்திக்கொள்ள, பெரிய மனதாய் ஒத்துக்கொண்டது போல் தலையசைத்தாள் செண்பகா.

அமைதியுடன் வீடு வந்து சேர்ந்தவர்கள் அறையில் படுக்க ஆயத்தமாக செண்பாவிற்கு குறுகுறுப்பு. வருடம் கழித்து கணவனுடன் அறை பகிர்கிறாள். இன்னும் முழுமையாக நீங்காத மனத்தாங்கல் இருக்கையில் அவனை வெளியே படுக்கச் சொல்லிவிடலாமா என்ற எண்ணம் கூட எழுந்தது. அதற்கு வாய்ப்பே கொடுக்காமல் உடை மாற்றி கட்டிலின் ஓரம் படுத்துவிட்டவன், “காலையில அம்மா வந்துடுவாங்க செண்பா. நேரமே எழும்பணும். செம்ம டயர்ட் நீயும் சீக்கிரம் தூங்கு.” என சொன்ன மாத்திரம் உறங்கிவிட்டான். அத்தனை அலைச்சல் அவனுக்கு. மனைவி உடன் இருக்கிறாள் என்ற உவப்பை கூட அனுபவிக்கவிடாமல் உடல் அனத்திவிட, படுத்துவிட்டான். அவனையே பார்த்துக்கொண்டு நின்றிருந்த செண்பாவுக்கு புதிதாய் திருமணமான பெண் கணவனுடன் தனித்து விடப்பட்ட உணர்வு. தயங்கி நின்றவள் துணிந்து அவனருகில் சென்று படுத்துவிட்டாள். அவன்தான் என்று முடிவான பின்பு என்ன யோசனை என அறிவு இடித்துரைக்க, அதற்கு மேல் யோசிக்கவில்லை. 

காலையில் ரத்னதீபன் அலைபேசி விடாது ஒலிக்கவும் இருவருமே விழித்துவிட்டனர். கண்களை கசக்கிக்கொண்டு யாரென்று அவன் அலைபேசியை எடுத்துப்பார்க்க, அபிராமி அழைத்துக்கொண்டிருந்தார். பேசிக்கொண்டே அவன் எழுவதிலேயே வீட்டிலிருந்து வந்துவிட்டார் என்று புரிந்தது. உடல் இன்னும் உறக்கத்திற்கு கெஞ்ச, அலுப்பாக இருந்தது செண்பகாவிற்கு. 

“அம்மா வந்துட்டாங்க செண்பா.” என சொல்லிக்கொண்டே வெளியே சென்றான் ரத்னதீபன்.

கட்டிலில் இப்படியும் அப்படியும் உருண்டவள் வெளியே பேச்சுக்குரல் கேட்கவும் எழுந்து அமர்ந்தாள். எப்படியோ அவனே வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான். இனி தான் இங்கேயே இருக்கப்போவதை எப்படி சொல்வது என்ற தயக்கம் இருந்தாலும் எதற்கு சொல்ல வேண்டும், என் வீட்டிற்குதானே வந்திருக்கிறேன் என நினைத்துக்கொண்டே எழுந்தவள் முகம் கழுவிவிட்டு வெளியே செல்ல, அம்மாவும் மகனும் என்னவோ வாக்குவாதத்தில் இருப்பது போல் தெரிந்தது. அருகில் நெருங்கவும்தான் வீட்டில் பால் காய்ச்சிய அன்று போட்டது போட்டபடி இருக்கிறது என கடிந்துகொண்டிருந்தார் அபிராமி. இவளை கவனித்துவிட்டு இன்பமாய் அதிர்ந்த அபிராமி,

“வந்துட்டியா செண்பா. சொல்லவே இல்லை இவன். சீக்கிரம் குளிச்சிட்டு வா. காலையிலேயே பண்ணிட்டோம்னா உனக்கும் வேலைக்கு போக வசதியா இருக்கும்.” என ஆர்வமாய் சொல்ல, கலவரமாய் பார்த்தான் ரத்னதீபன்.

‘போச்சு கிளம்புறேன்னு பையை தூக்கிட்டு நிப்பா இப்போ.’ என்று மனைவியைப் பார்க்க, நடந்த சம்பவம் அவன் எதிராபாரதது.

சரியென்று தலையசைத்து அறைக்குச் சென்று கதவடைத்தவள் சில நிமிடங்கள் கழித்து குளித்து புடவை கட்டி வந்து நின்றாள்.

‘புடவையை கையோட எடுத்துட்டு வந்திருப்பாளோ?’ என அதிர்ந்து பார்த்தான் ரத்னதீபன். ஏனெனில் அவள் உடைகள் எதுவும் இங்கில்லை. பரந்தூரில் இருக்கும் அவன் வீட்டினில் உள்ள உடைகள் அங்கேயே இருக்கட்டும், துடைத்து எடுத்துச் செல்ல வேண்டாம். அங்கு வரும்போது உடுத்திக்கொள்ளுங்கள் என்றுவிட்டார் அபிராமி. அதனால் பொருட்கள் மட்டுமே இந்த வீட்டிற்கு வந்திறங்கியது. 

“என்ன ரத்தினம் பாத்துட்டே இருக்க. குளிச்சிட்டு வா சீக்கிரம். செண்பா தண்ணிய குடிச்சிட்டு சாமி ரூம் ரெடி பண்ணு. பூஜை முடிச்சிட்டு சாப்பிட்டுக்கலாம்.” என மகனையும் மருமகளையும் ஏவியவர் பரபரவென வேலையில் இறங்கிவிட்டார். அதுவும் மருமகள் வீட்டில் இருக்கிறாள் என்றதுமே பலம் வந்தவர் போல் அத்தனையையும் இழுத்துப்போட்டு செய்தார். 

எந்த சச்சரவும் இல்லாது சாமி கும்பிட்டு காலை உணவு உண்ணும் வரை நம்பவே இயலாமல்தான் மனைவியை பார்த்துக்கொண்டிருந்தான் ரத்னதீபன். வாய் வரை மருமகளுக்கு அறிவுரை சொல்ல வார்த்தைகள் வந்துவிட்டாலும் அடக்கிக்கொண்டு இயல்பாக காட்டிக்கொண்டார் அபிராமி. நன்றாக இருப்பவளை எதுவும் பேசி வைத்து பிரச்சனையை இழுத்துவிட வேண்டாம் என்று இருந்துகொண்டவர் உடனே கிளம்புகிறேன் என்று நிற்க,

“அதுக்குள்ள கிளம்பிட்டிங்க? ரெஸ்ட் எடுங்க அத்தை.” என்று செண்பகாவே சொல்ல, அதிலேயே மனம் நிறைந்துவிட்டது அபிராமிக்கு. 

“உன் மாமாவை விட்டுட்டு வந்திருக்கேன். இங்கிருந்தா சரியா வராது. இப்போ படுத்தேன்னா எழும்ப முடியாது. நான் அப்புறம் வரேன்.” என்று மகனைப் பார்க்க, 

“தனியா வராதன்னு சொன்னா கேக்கல. நான் வந்து ட்ரையின் ஏத்தி விடுறேன்.” என்றான் அவன்.

“உன் அப்பா கட்சி மீட்டிங் போகனும் வரமாட்டேன்னு நிக்குறாரு. என்ன பண்ண சொல்ற என்னை?” என பேசிக்கொண்டே பையை எடுத்துக்கொண்டு கிளம்ப, அம்மாவை விட்டுவருகிறேன் என சொல்லிக்கொண்டு கிளம்பினான் ரத்னதீபன். 

அவர்கள் கிளம்பியதும் வீட்டை பூட்டிக்கொண்டவள் வீட்டை முழுமையாக சுற்றிப் பார்த்தாள். முதல் முறை வந்தபோது இருந்த கோபத்தில் திவ்யா சுற்றிக்காட்டியதெல்லாம் மங்கலாக நினைவில் வர, இன்று நன்றாக பார்த்தாள். தனக்கு ஏற்றது போல் எப்படி மாற்றிக்கொள்ள வேண்டும் என யோசனைகளும் படங்களாய் மனதில் விரிந்தது. சமையலறையும் ஒழுங்காக அடுக்கப்படாமல் பாத்திரங்கள் ஒரே பக்கமாகவும் மசாலாக்கள் ஒரு கப்போடிலும் இருக்க அனைத்தையும் விடுமுறை அன்று அடுக்கி வைக்க வேண்டுமென நினைத்துக்கொண்டே மணியைப் பார்க்க, அலுவலகத்திற்கு செல்லும் நேரமானது. உடனே பரபரப்பானவள் உடை மாற்றவென அறைக்குள் சென்றபின் தலையிலடித்துக்கொண்டாள். அவளது உடைமைகள் எல்லாம் விடுதியில் இருக்கிறதே. இன்று புடவையோடு சென்றுவிடுவோம் என்று தலையை ஒழுங்கிபடுத்திவிட்டு பையை எடுத்துக்கொண்டு வெளியே வரவும் ரத்னதீபன் வரவும் சரியாக இருந்தது.

“மணியாகிடுச்சா நானே டிராப் பண்றேன்.” வண்டியிலிருந்து இறங்காமல் அவன் கேட்கவும் அவசரமாக அவள் வெளியே வர, “வீட்டை பூட்டு செண்பா.” 

பரபரப்பாக மீண்டும் அவள் வீட்டினுள் சென்று கூடத்தில் இருந்த பூட்டை எடுத்து வந்து வீட்டை பூட்டிவிட்டு வண்டியின் பின்னால் ஏறிக்கொண்டாள். சாவியை தன்னிடம் கொடுக்க மறந்துவிட்டாள் அதை வாங்கப்போகும் சாக்கில் அவளை கொஞ்சம் சமாதானம் செய்யலாம் என்று நினைத்துக்கொண்ட ரத்னதீபன் அமைதியாக அவளை அலுவலகக் கிளையில் இறக்கிவிட்டுக் கிளம்பினான்.

‘சாவியை நாமளே எடுத்துட்டு வந்துட்டோம். இதை வச்சே பொத்துனாப்புல சாயந்தரம் வீட்டுக்கு போயிடனும்.’ என இவளும் ஒரு கணக்கு போட்டாள்.

இருவருமே வாய்விட்டு பேசிக்கொள்ளாமல் தங்களின் நிலை விட்டு கீழிறங்காதபடி பார்த்துக்கொண்டனர், அதே சமயம் உடன் இருக்கவும் காரணம் தேடிக்கொண்டனர்.