தன்னை நிமிர்ந்தே பார்க்காத மகளின் செயலை தந்தை எப்படி தான் எடுத்து கொள்ள?

“சொல்ல சொல்லுங்க, அவளுக்கு என்ன கஷ்டம்ன்னு சொல்ல சொல்லுங்க” என்றார் குருமூர்த்தி.

சம்யுக்தாவின் கலங்கிய முகத்தில் தான், எத்தனை எத்தனை பரிதவிப்பு!

“சம்யுக்தா” தந்தை திரும்ப அழைத்தார்.

“ப்பா” என்றாள் மகள்.

“என்னன்னு நீ சொன்னாதான் அப்பாக்கு தெரியும். சொல்லுமா” என்றார் தந்தை.

“அவர்தான் சொல்ல சொல்றார் இல்லை. சொல்லு. உன் மனசுல இருக்குறதை சொல்லு. கேட்க நினைக்கிறதை கேளு” என்றான் குணா.

“அண்ணன் பேசிட்டு இருக்கார் இல்லை. பேசாம இருடா” என்று மாசிலாமணி கண்டிக்க,

“அவரும் மகளை பேச சொல்லித்தான் சொல்றார்” என்றான் குணா.

“பாப்பா. கேட்க நினைக்கிறதை கேட்கும். நீ கேளு பாப்பா. அண்ணா உனக்கு செய்யாம யாருக்கு செய்ய போறார்” என்றார் மணி.

குருமூர்த்தி மட்டும் முன் நிற்க, அவருக்கு எதிரில் நான்கு பேர். ம்ஹூம். சம்யுக்தா பக்கம் மூன்று பேர்.

இதை கவனிக்கும் நிலையில் குருமூர்த்தியும் இல்லை, அவரின் மகளும் இல்லை.

நாயகனை கேட்டுவிட வேண்டும் என்ற தவிப்பில் சம்யுக்தா!

நல்லவனை மகள் கேட்டு விட கூடாது என்ற கலக்கத்தில் குருமூர்த்தி!

“நான் உங்ககிட்ட எனக்கானதை கேட்கவாப்பா?” மகள் கேட்க,

“ம்ம்” என்ற குருமூர்த்தியின் குரலில் சத்தே இல்லை.

“எனக்கு அவர் வேணும்ப்பா” என்று மகள் கேட்டுவிட்டாள்.

“சம்யுக்தா”

“ப்பா. சர்வாச்சார்யா எனக்கு வேணும். என் வாழ்க்கை முழுக்க எனக்கு அவர் வேணும்ப்பா”

“அவன், அவன் நமக்கு, நமக்குள்ள நிறைய வேற்றுமை இருக்கு. ஏற்றம், இறக்கம் இருக்கு”

“அவர் அதை எல்லாம் கடந்தவர்ப்பா” என்றாள் சம்யுக்தா.

குருமூர்த்தி திகைக்க, “அவருக்கு முன்னாடி நீங்க சொன்ன எதுவும் எடுபடாதுப்பா. அவர் நம்மளை புரிஞ்சுக்கிட்டவர். கொஞ்ச நாள், கொஞ்ச நாள்லே நம்மை முழுசும் புரிஞ்சுக்கிட்டவர்ப்பா. என்னால அவரை இழக்க முடியாதுப்பா. ப்ளீஸ்” என்றாள் மகள் கண்ணீருடன்.

“அழாத” தந்தை குரல் கரகரத்தது.

பலவீனமாக்கும் மகளின் கண்ணீரில் மனைவியல்லவா தெரிகிறார்.

“ச, சரிப்பா. நான் அழலை” சம்யுக்தா வேகமாக கண்ணீரை துடைத்து கொண்டாள்.

“சம்யுக்தா. நம்மால அவனுக்கு சிக்கல் வரும்மா. உன் அப்பனுக்கு கௌரவமான கடந்த காலம் இல்லை”

“அதை சர்வா சார் பார்த்துப்பார். அவருக்கு இது தெரியாம கல்யாணத்துக்கு நாள் குறிக்கல. நீங்க உங்க பொண்ணு கேட்கிறதை மட்டும் செய்ய பாருங்க. அவரை ஏன் இழுக்கிறீங்க?” குணா படபடத்தான்.

“அப்பா எனக்கு பார்க்கிறளவு அவருக்கும் பார்ப்பார். அவரோட சந்தோஷமும் அப்பாக்கு முக்கியம்” என்றாள் சம்யுக்தா உடனே.

மகளின் புரிதலில் மனிதர் இன்னுமே அழுத்தமாக தான் உணர்ந்தார்.

“அண்ணா. தம்பியும், பாப்பாவும் நல்லா இருப்பாங்க. கண்டிப்பா நல்லா இருப்பாங்கண்ணா. யோசிங்கண்ணா” என்றார் மாசிலாமணி.

கற்பகம் பாட்டி, குணாவும் அதையே சொல்ல, குருமூர்த்தி அமர்ந்துவிட்டார்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் தன்னை பார்த்திருக்கும் மகளிடம், முடியாது என்று எப்படி மறுப்பார்?

இதுவரை என் மகள் என்னிடம் என்ன கேட்டிருக்கிறாள்?

“ப்பா என்னை விட்டு போகாத. அம்மாவும் இல்லை. எனக்கு பயமா இருக்குப்பா” ஆறு வயது மகள் அழுகையுடன் கேட்டது தான் நினைவிற்கு வந்தது.

திரும்ப இப்போது தான் கேட்கிறாள். சர்வாச்சார்யாவை கேட்கிறாள்!

இதையுமா மறுக்க முடியும்?

சம்யுக்தா தந்தை முன் மண்டியிட்டு அமர்ந்தவள், குருமூர்த்தியின் கையை பற்றி கொண்டாள்.

மெல்லிய நடுக்கம் அவளின் கரத்தில்! யாசிப்பு அவள் கண்களில்! மறுத்துவிடுவாரோ என்ற தவிப்பு முகம் முழுதும்!

இந்தளவா அவன் மீது அன்பு வைத்திருந்தாள் மகள்! குருமூர்த்திக்குள் அதிர்வு.

“எனக்கு தெரியும் நான் உங்களை கஷ்டப்படுத்துறேன். ஆனா என்னால சமாளிக்க முடியலைபா” என்றாள் மகள்.

தந்தைக்கு கண்கள் சிவந்துவிட்டது.

நொடிகள், மணி நேரங்களாக கனத்தது.

“சர்வாச்சார்யா உனக்கு தான்” என்றார் குருமூர்த்தி.

“ப்பா” என்று கூவிய மகள் முட்டியிட்டபடி தந்தையை அணைத்து விட்டாள். அவர் தோளில் முகம் வைத்து, அப்படி ஒரு அழுகை!

இப்போதும் குருமூர்த்தியின் பின் அவரின் பிம்பம் ஒன்று தனித்து நின்றுவிட்டது!

இந்த பிம்பம் எதை உணர்த்துகிறது?

அது என்னவாக இருந்தாலும் பரவாயில்லை!

இந்த நொடி அவனின் முகத்திலும், என் மகளின் முகத்திலும் தெரியும் சந்தோஷத்துக்கு முன் எதுவும் ஈடு இணை கிடையாது! குருமூர்த்தியின் நெஞ்சம் சந்தோஷத்தில் உயர உயர பறந்தது.

மணமேடையில் அவரின் அடங்காத, அராஜக குதிரை சர்வாச்சார்யா பக்கத்தில், அவரின் ராணி மகள் சம்யுக்தா!

ஆம்! இன்று அவர்களுக்கு திருமணம்!

குருமூர்த்தி சம்மதம் சொல்லி ஒரு வாரம் தான் ஆகியிருந்தது. ஆனால் இந்த பிரம்மாண்டத்தை பார்க்கும் போது, சில மாதங்களுக்கான முன்னேற்பாடு தான் தெரிந்தது.

“என்னவோ பிராடு வேலை பண்ணியிருக்கான். இதை எல்லாம் ஒரு வாரத்தில செய்ய முடியாது” குருமூர்த்தி உதடு தொடர்ந்தே முணுமுணுத்து கொண்டே தான் இருக்கிறது.

பதில் தர வேண்டியவனோ, “யார் நீங்க?” என்று வெட்டி கொண்டல்லவா செல்கிறான்.

சர்வாச்சார்யா  குடும்பம் மொத்தமும் அங்கும், இங்கும் பரபரப்பாக ஓடி கொண்டிருக்கிறது.

சிறு குறையும் இருக்க கூடாது என்று அவ்வளவு ஜோராக வேலை நடந்து கொண்டிருக்கிறது.

“ராஜா, தங்கம்” என்று அத்தைகள் மருமகனை நொடிக்கொரு முறை தேடி சென்று பேசி வந்தனர்.

சிவப்பிரகாசத்திற்கு நிற்க நேரமில்லை. முக்கிய விருந்தாளிகளை வாசலுக்கு சென்று, முன்னின்று வரவேற்க வேண்டும். மகனை அடிக்கடி சென்று பார்த்து வர வேண்டும், எல்லாம் சரியாக நடக்கிறதா என்று மேற்பார்வை பார்க்க வேண்டும். ஓட்டம், ஓட்டம் தான்!

“செய்ங்க. செய்ங்க. இன்னைக்கு ஒரு நாள் தானே எனக்காக ஓட போறீங்க. ஓடுங்க” என்று அதிகாரம் செய்தான் சேட்டை மாப்பிள்ளை.

நொடிக்கொரு முறை மொபைலை வேறு பார்த்து கொண்டான்.

“டேய். இன்னும் கொஞ்ச நேரத்துல நேர்ல பார்க்க தானே போற? மொபைலை வைடா” என்று கார்த்திக் சொல்ல, கேட்க வேண்டுமே பிடிவாதக்காரன்.

மணமகள் அறையில், அலங்கார தேவதை படபடப்புடன் அமர்ந்திருப்பதை எப்படி பார்க்காமல் இருக்க?

வசுந்தரா  மருமகளை விட்டு அசையவில்லை. சர்வாச்சார்யா வீட்டின் இளைய பெண்களும் அங்குதான் குடி கொண்டிருந்தார்கள்.

சுற்றி இருந்தவர்கள் எல்லாம் சத்தமாக சிரிக்க, சம்யுக்தாவிடம் மென் புன்னகை!

ஆமா சம்யுக்தா சத்தமா சிரிச்சு எப்போ பார்த்தோம்? நல்லவனுக்கு கண்கள் சுருங்கியது.

“ரெடியா?” என்று குருமூர்த்தி அவன் அறைக்குள் வர,

“போய்ட்டு, போய்ட்டு வரத்துக்கு இங்கேயே இருந்துக்கோங்க சித்தப்பா” என்றான் கார்த்திக்.

“இல், இல்லை. நேரம் ஆச்சு. அதான்” குருமூர்த்தி சொல்ல,

“இவர் என்ன மாப்பிள்ளை மாதிரி ரெடியாகி இருக்கார்? நான்தானே மாப்பிள்ளை” என்று குருமூர்த்தியின் கழுத்தை சுற்றியிருந்த பட்டு துண்டை எடுத்து தன் கழுத்தில் சுற்றி கொண்டான் சர்வாச்சார்யா.

“டேய். முன்ன கேட்டதுக்கு வேணாம்ன்னு சொல்லிட்டு, அவரோடதை ஏண்டா எடுக்கிற? இந்தா உன்னது போட்டுக்கோ?” என்று கார்த்திக் எடுக்க வர,

“இல்லை, இல்லை இருக்கட்டும் தம்பி. எனக்கு வேணாம்” என்று குருமூர்த்தி வேகமாக மறுத்து, சர்வாச்சார்யா கழுத்தில் இருந்த துண்டை சரி செய்தார்.

முகூர்த்த நேரம் வந்துவிட, சர்வாச்சார்யா மேடைக்கு அழைத்து வரப்பட்டான்.

சம்யுக்தா மணமேடைக்கு வந்த நேரம் மண்டபத்தில் இருந்த அத்தனை கண்களும் அவள் மேலே நிலைத்துவிட்டது.

என் பொண்ணு இவ்வளவு அழகா? அவ அம்மாவை போலத்தான் இருக்கா? குருமூர்த்திக்கு நெஞ்சம் விம்மியது.

சர்வாச்சார்யா தேடி, தேடி தேர்வு செய்திருந்த பட்டு புடவை, நகைகள், மேக் அப் எல்லாம் அமோகம்!

அவளுக்கான தலை அலங்காரம் முதல் பாதத்தில் வைக்கும் மருதாணி வரை  நாயகன் தேர்வு தான்!

சம்யுக்தா அவன் சொன்னதை அப்படியே ஏற்று கொண்டாள்.

சும்மா சொல்ல கூடாது,  சம்யுக்தாவை பார்த்து, பார்த்து செதுக்கிவிட்டான்.

சர்வாச்சார்யா பக்கத்தில் அமர்ந்தாள் சம்யுக்தா.

சடங்குகள் முடிந்து, நாயகன் கைக்கு மாங்கல்யம் வந்தது.

குருமூர்த்தி, பெற்றவர்கள் பக்கம் பார்த்தான் சர்வாச்சார்யா. பின் தன் உறவுகள் அத்தனை பேருக்கும் மாங்கல்யத்தை தூக்கி காட்டினான்.

சம்யுக்தாவிற்குள் பதற்றம், ஆர்ப்பரிப்பு, ஆனந்தம், அச்சம் எல்லாம் நிறைந்திருந்தது.

அவளின் கண்கள் உயர்ந்து தந்தையை பார்த்து கொண்டது. சுபத்ரா அவரின் பக்கத்தில் நிற்பார்! மகள் நம்பினாள்.

சர்வாச்சார்யா அவளின் கழுத்துக்கு அருகில் மாங்கல்யத்தை கொண்டு வந்தான்.

மணமக்களை விட்டு ஒன்றிரண்டு அடி இடைவெளியில் தானே எல்லாம் நின்றனர்.

சம்யுக்தா, சர்வாச்சார்யா மட்டுமே!

சர்வாச்சார்யா நிதானமாக சம்யுக்தா கழுத்தை சுற்றி மாங்கல்யத்தை எடுத்து செல்ல, சம்யுக்தா கண்கள் நாயகனிடம் நிலைத்தது.

எத்தனை வருடங்கள் கழித்து என்னை நேருக்கு நேர் பார்க்கிறான்!

முன்பை விட அவன் கண்களில் அதிக கதிர்வீச்சு. பெண்ணை அவன் கடலுக்குள் முழுவதுமாக, மொத்தமாக இழுத்து கொண்டான்.

“மிஸஸ் சர்வாச்சார்யா. சம்யுக்தா ராஜ்யத்துக்கான ராஜா வந்தாச்சு” என்றான் நாயகன்!