“நானும் மாட்டேன்” என்றார் சுபத்ரா அவருக்கு குறையா உறுதியுடன்.
குருமூர்த்தி அவரை கோவமாக பார்க்க, சுபத்ரா கைகளை கட்டி கொண்டு அவரை உர்ரென பார்த்திருந்தார்.
“உன் புத்தி ஏன் இப்படி புல்லு மேய போகுது? படிச்சு, நல்ல பொறுப்பான வேலையில இருக்கிற பொண்ணு மாதிரியா நடத்துகிற நீ?” என்று மனிதர் கடுகடுவென பொரிய,
“சரி. நான் தான் படிச்சு கிழிச்சு பருப்பான வேலையில் இருக்கேன். காதலிக்க கூடாது? படிக்காத ரௌடி நீங்க என்னை தாராளமா காதலிக்கலாம். அப்படித்தானே?” என்று கேட்டார் சுபத்ரா.
“சுபா. பல முறை சொல்லிட்டேன். அப்படியும் நீ தப்பான முடிவை தான் எடுத்திருக்க. நமக்குள்ள சுத்தமா சரிப்பட்டு வராது. பணம், வசதி, கௌரவம், அந்தஸ்துன்னு எதுவுமே என்கிட்ட கிடையாது. நான் ஒரு ரௌடி, கட்ட பஞ்சாயத்துக்காரன் அவ்வளவு தான்” என்று பொறுமையாக சொன்னார் குருமூர்த்தி.
“ரௌடி சார். என்னை வைச்சுகிட்டே ஒன்னுமில்லைன்னு பொய் சொல்றீங்க?” என்று சுபத்ரா கேட்க,
“பணம், அதைப்பத்தி சொல்றியா? அது ஏதோ கொஞ்சம், இப்போதான்” என்று குருமூர்த்தி சொல்ல,
இடையிட்ட சுபத்ரா, “பணம் இல்லை. அதை விட பெருசு கேஸ். அது உங்கமேல எக்கச்சக்கமா இருக்கே!” என்றார் சுபத்ரா.
“லூசாடி நீ?” மனிதர் காண்டாகிவிட்டார்.
“யோவ் நீ தான் லூசு! ஊறுப்பட்ட கேஸ் இருக்கு, ஓசியில வர வக்கீலை வேணாம்னு சொல்ற?” சுபத்ரா கோவமாகிவிட்டார்.
“முழு பைத்தியமே! இதுக்காக யாரும் கல்யாணம் பண்ணிப்பாங்களா?”
“அப்போ எனக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க” என்று கேட்டுவிட்டார் சுபத்ரா.
“மொத்தமா வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன். என்னால வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது. அங்க இருந்தா என்னை கட்டாய படுத்திட்டே இருக்காங்க. சொல்ல முடியாது மயக்க மருந்து கொடுத்து கூட யாரையாவது எனக்கு தாலி கட்ட வைச்சிடுவாங்க”
“அதெல்லாம் பண்ண மாட்டாங்க”
“அவங்க கிரிமினல். எனக்கு தெரியும்” அடித்து சொன்னார் சுபத்ரா.
குருமூர்த்தி தலையை பிடித்து கொள்ள, “ரௌடி சார். சட்டு புட்டுன்னு முடிவை சொல்லுங்க. நான் ஹாஸ்டல் பார்க்க வேணாமா?” என்று கேட்டார் சுபத்ரா.
“இருடி கத்திரிக்காய் குதிக்காத” மனிதர் தடுமாறி கொண்டிருந்தார்.
“என்னை கல்யாணம் பண்ணிக்கிறது இவ்வளவு கஷ்டமா இருக்கா என்ன? அப்படி ஒன்னும் நீங்க எனக்கு வேணாம். ரொம்ப பண்றீங்க. நான் போறேன்” என்று சுபத்ரா ரோஷத்துடன் நடையை கட்ட,
சுபத்ரா மலர்ந்த முகத்துடன் நின்றுவிட, “ஆனா நீ சந்தோஷமா இருப்பியான்னு எனக்கு தெரியாது” என்றார்.
“ஏன்? ஏன் சந்தோஷமா இருக்க மாட்டேன், அதெல்லாம் இருப்பேன்” என்று வேகமாக இவரிடம் வந்தார் சுபத்ரா.
தன் நெஞ்சளவு நின்ற பெண்ணை, வேதனையுடன் பார்த்த குருமூர்த்தி, “பாதுகாப்பான வாழ்க்கையை நான் வாழலை” என்றார்.
“எனக்கு தான் நீங்க இருக்கீங்களே?” சுபத்ரா பட்டென சொன்னார்.
“நான் இல்லாம போயிட்டா என்ன பண்ணுவ?”
“ஒருவேளை நான் கூடத்தான் இல்லாம போலாம்”
“ஏய் அறிவில்லை என்ன பேசுற நீ?”
“இருக்கிறதை தான் சொல்றேன். என் விதி எப்படி இருக்குன்னு எனக்கெப்படி தெரியும். இருக்கிற வரை நான் சந்தோஷமா இருக்கணும்ன்னா எனக்கு நீங்க வேணும். நாம கல்யாணம் பண்ணிக்கலாம், ப்ளீஸ்” என்றார் சுபத்ரா கலங்கிவிட்ட விழிகளுடன்.
குருமூர்த்தி அவர் தலையை இழுத்து தன் நெஞ்சில் சாய்த்து கொண்டார்.
பேச்சுக்கு கூட சுபத்ராவின் வார்த்தைகளை அவரால் தாங்க முடியவில்லை.
வடிந்துவிட்ட கண்ணீரை சட்டையில் துடைத்து கொண்டவர், அதன் பின் யோசிக்கவில்லை. மறுநாளே சுபத்ராவை திருமணம் செய்து கொண்டார்.
அன்றய நாள் குருமூர்த்தியின் பின் நின்றுவிட்டது அவரின் ஒரு பிம்பமே!
அந்த பிம்பம் அவரின் உள்ளுணர்வாக இருந்திருக்கலாம்!
இன்றும் இப்போதும் அதுபோல் தான் குருமூர்த்தி கண்களில் கண்ணீர் கரை கட்டி நிற்கிறது.
அவரின் மகள் அவர் முன் கண்கள் கலங்கி கொண்டிருக்கிறாள்.
“எனக்கு அவர் வேணும்ப்பா” என்கிறாள்.
‘எந்த காலத்திலும் என் மகள் என் முன் நின்றுவிட கூடாது. சர்வாச்சார்யா வேண்டும் என்று அவள் என்னிடம் கேட்டு விட கூடாது!’ இத்தனை வருடங்களாக மனதுக்குள் உறுப்போட்டு கொண்டே இருந்தது, இன்று உடைந்துவிட்டது.
சம்யுக்தா நாயகனை கேட்டு, குருமூர்த்தியின் முன் நின்று தான் விட்டாள்.
குருமூர்த்தி ஊட்டியில் இருந்து காலையில் தான் வந்தார்.
“ரெஸ்ட் எடுத்துட்டு பொறுமையா வந்திருக்கலாம் இல்லபா. நைட் எல்லாம் காரோட்டிகிட்டு வந்திருக்கீங்க?” என்று கற்பகம் பாட்டி கேட்டபடி காபியை கொடுக்க,
“பிளைட் டிக்கெட் கிடைக்கல. இரண்டு மிதி மதிச்சோம் வந்துட்டோம்” என்றார் மாசிலாமணி.
“உடம்பு முடியாதப்பவும் நீ அடங்கிடாத” என்று கற்பகம் பாட்டி கடிந்து கொள்ள,
“நான் நல்லா இருக்கேன். ஜுரம் எல்லாம் ஒரு விஷயமா?” என்றார் மாசிலாமணி.
குருமூர்த்தி கண்கள் மூடியிருந்த மகள் அறை பக்கம் சென்று வர, “பாப்பா நைட் எல்லாம் தூங்கலை” என்றார் பாட்டி.
“ஏன் என்னாச்சு?” என்று குருமூர்த்தி வேகமாக கேட்க,
“தெரியலை” என்றவர் தயங்கி பின் அமைதியாகிவிட்டார்.
“சம்யுக்தா பங்கேற்ற மீட்டிங்கில் எதாவது நடந்திருக்குமா?” என்று மணி கேட்டு, பின் அவரே, “பாப்பா கூட தம்பி இருக்கும் போது அதுக்கெல்லாம் வாய்ப்பில்லையே” என்றார்.
குருமூர்த்திக்குள் மெலிதான ஊசி இறங்க தொடங்கியது.
சம்யுக்தா அறையை விட்டு வெளியே வரும் வரை குருமூர்த்தி மகளுக்காக ஹாலிலே காத்திருந்தார்.
“எப்போ வந்தீங்கப்பா” என்று மகள் வர,
அழுதிருக்கிறாள்! குருமூர்த்தி மகளை கண்டு கொண்டார்.
“என் பொண்ணுக்கு காபி எடுத்துட்டு வாங்க” என்று குரல் கொடுத்தார் குருமூர்த்தி.
“ப்பா. டிபன் சாப்பிடுற நேரம் ஆகிடுச்சு. நீங்க வாங்க சாப்பிடலாம்” என்று சம்யுக்தா அழைக்க,
“நீ காபி குடிச்சுட்டு போய் குளிச்சுட்டு வா” என்றார் தந்தை.
சம்யுக்தா மறுக்காமல் காபியை குடித்தவள், அறைக்குள் சென்று கதவடைத்தாள்.
“விசாரிச்சுட்டேன். சர்வா சார் லண்டனுக்கு ஷிப்ட் ஆக போறது உண்மை தான்” என்றான் குணா.
நிமிடம் அப்படியே நின்ற பெண்ணுக்குள், குணாவின் வார்த்தைகள் தான் சுழட்டி அடித்து கொண்டிருந்தது.
தந்தையை நினைத்து சமாளித்து கொண்டவள், குளித்து வந்தாள்.
குருமூர்த்தி, மணியும் அதற்குள் தயாராகி வந்திருக்க, மணியிடம் நலம் விசாரித்த சம்யுக்தா இருவருக்கும் பரிமாறிவிட்டு, தானும் உணவுடன் அமர்ந்தாள்.
இரண்டு வாய் தோசைக்கு மூன்று முறை தண்ணீர் குடித்துவிட்டாள் சம்யுக்தா.
“சம்யுக்தா” என்றார் குருமூர்த்தி.
மகள் அதிலே கலங்கிவிட்டாள். அவளால் நிமிர முடியவில்லை.
“எழுந்து வா” என்றார் தந்தை.
“என்னாச்சுண்ணா” என்று மணியும் உணவை வைத்துவிட,
“ப். ப்பா. ப்ளீ, ப்ளீஸ். நீங்க சாப்பிடுங்க” என்றாள் பெண் கமறிய குரலில்.
“மணி. சாப்பிடு” என்றார் குருமூர்த்தி.
மணி வேகமாக தட்டில் இருந்ததை காலி செய்ய, அப்பாவும் மகளும் ஒரு வாய் கூட உண்ணவில்லை.
குணா வீட்டுக்குள் வேகமாக வரவும், “நீ எங்கடா இங்க? உன்னை அப்படியே ஊட்டி தானே போக சொன்னோம்?” என்று மணி கேட்க,
“நைட் கிளம்பிடுவேன்” என்ற குணா, சம்யுக்தாவிற்கு பின் சென்றுவிட்டான்.
தன் முன் நின்றிருந்த மகளிடம், “எதாவது பிரச்சனையா?” என்று கேட்டார் குருமூர்த்தி.
“இல்லை” என்று தலையசைத்தாள் மகள்.
“அப்புறம் ஏன் இப்படி இருக்க?” குருமூர்த்தியின் அச்சம் அவரை கோவபட வைத்தது.
“நா, நான், நான் நல்லா இருக்கேன்ப்பா” என்ற மகள் தந்தை முகத்தை எங்கு பார்த்தாள்?