16

என்னதான் சசி மித்ரன் நெஞ்சை நிமிர்த்து கொண்டு பேசினாலும், இளந்தென்றல் கண்ணீர் மல்க  வாசலில் நின்று தன் பெற்றவர்களை பார்த்தாலும், அவர்கள் இருவரையும் ஏற்கும் மனநிலையில் பரசுராம் வாசுகி இருவருமே இல்லை.

மாதவி ஒரு பக்கம் கேட்டின் பக்கவாட்டில் இருந்த மண்ணை அள்ளிக் கொண்டு வந்து சசி தென்றல் இருவரின் மீதும் வீசி சாபம் கொடுத்தார்.. அனைத்தையும் பார்த்துக் கொண்டு வாசுகி கதறி அழுதாறே தவிர  ஒரு வார்த்தை மகளிடம் பேசவில்லை. பரசுராம் அதற்கும் ஒரு படி மேல். கண்கள் கலங்கி நின்றது ஆனால் கண்ணீர் துளி  தரையை தொடவில்லை.

அவ்வளவு அழுத்தம் அவருக்குள்.

“ப்பா ப்ளீஸ் பா தயவு செஞ்சு என்னை தப்பா நினைக்காதீங்க. நாங்க ஒன்னும் லவ் பண்ணி ஊற சுத்தி  இந்த கல்யாணத்தை பண்ணிக்கல. இவர் என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணப்ப கூட வீட்டில எனக்கு அரேஞ்ச் பார்த்துட்டாங்க. இது சரி வராதுன்னு சொல்லிட்டேன்.. நீங்க நவீன்னு சொல்லும் போது  உங்களுக்காக கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சேன். ஆனா நீங்க உங்க இஷ்டத்துக்கு மாப்பிள்ளய மாத்துறீங்க. ஒரு வார்த்தை எனக்கு பிடிச்சிருக்கா? பிடிக்கலையானு கேட்டீங்களா.. அந்த உரிமை கூட இல்லனா  அப்ப எனக்கு எந்த உரிமை இருக்குன்னு நீங்க நினைக்கிறீங்க?

எல்லாத்துலயும் உங்க விருப்பம் மட்டும் தானா? எனக்குன்னு தனிப்பட்ட விருப்பம் ஒன்னு கிடையாதா? மொத நவீன், அப்புறம் அகிலன், அதுவும் இல்லன்னா வேற எவனையாச்சும் கொண்டு வந்து நிப்பாட்டுவீங்க. அப்ப கூட ஒரு வார்த்தை என்னிடம் உனக்கு விருப்பம் இருக்கான்னு கேக்க மாட்டீங்க. ஆனா நான் நீங்க என்ன சொன்னாலும் பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டனும். கேட்டா நீங்க என்ன பெத்தீங்க கஷ்டப்பட்டு வளர்த்தீங்க.. உங்களுக்கு தெரியாததா.. உங்களுக்கு தெரியாதுப்பா..

உங்களுக்கு எப்படி சொந்த விருப்பு வெறுப்பு இருக்கோ அதே மாதிரி தான் எல்லாருக்கும் இருக்கும். பெத்திங்க கஷ்டப்பட்டு வளர்த்தீங்கன்னா கல்யாணம் ஒன்னு பண்ணா பிள்ளை பிறக்கும்னு தெரிஞ்சு தானே பெத்தீங்க.. அப்போ அந்த பிள்ளையை வளர்க்கறதும் உங்க கடமை தான. எத்தனை காலத்துக்கு இது ஒன்னு சொல்லி சொல்லியே பிள்ளைங்கள கார்னர் பண்ணுவீங்க..

இதெல்லாம் நான் உங்கள கஷ்டப்படுத்தணும்னு சொல்லல. ஒன்னே ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கோங்க. நான் ஆசைப்பட்டு சந்தோஷமா இந்த கல்யாணத்தை பண்ணிக்கல. எனக்கு வேற வழியே இல்லாம நிற்கதிலதான் இப்படி பண்ணிட்டேன்..” தென்றல் பேச பேச மாதவிக்கு வந்த ஆத்திரத்தை அடக்கவே முடியவில்லை.

மகள் விரும்பி இந்த செயலை செய்யவில்லை என்பதே அவர் மனதிற்கு சற்று ஆறுதலாக இருந்தது. கணவன் கொடுத்த நெருக்கடியால் மகள் தவறான வழியை தேர்ந்தெடுத்ததை பொறுக்க முடியாத வாசுகி ஒட்டுமொத்த கோபத்தையும் கணவன் மேல் கொட்டினார்.

” இப்ப சந்தோஷமா.. தங்கச்சி தங்கச்சின்னு தூக்கி வச்சு ஆடுனிங்களே எத்தனை தடவை தலப்பாடா அடிச்சிகிட்டேன். அந்த நவீன முடிச்சிருந்தா கூட இன்னிக்கு இந்த நிலைமைக்கு நம்ம குடும்பம் சந்தி சிரிச்சி இருக்காது.. பெரிய அண்ணன் தங்கச்சி பாசம் ஊர் உலகத்துல இல்லாத தங்கச்சி உங்க தங்கச்சி.. இன்னிக்கு எல்லாம் கை மீறி போயிருச்சே அந்த தங்கச்சி வந்து திரும்ப கொடுப்பாளா..

நான் தெரியாம தான் கேட்கிறேன்.. கட்டுன பொண்டாட்டி பெத்த பிள்ளை எங்களை விட உங்களுக்கு அப்படி என்ன தங்கச்சி ஒசத்தியா போயிருச்சு.. இதுவே நான் என் கூட பொறந்த அண்ணன் தம்பி தான் உங்களுக்கும் மேலனு ஆடிருந்தா பாத்துட்டு சும்மாவா இருந்திருப்பீங்க.. ஆனா நான் எல்லாத்தையும் பாத்துட்டு வாய மூடிக்கிட்டு இருக்கணும்..

என் பொண்ணோட வாழ்க்கை இப்படி தெருவுல நிக்கறதுக்கு காரணமே நீங்கதான். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உங்களை நான் மன்னிக்கவே மாட்டேன்.. இப்பவே உங்களை வேணானு டிவோர்ஸ் கொடுத்துட்டு போக என்னால முடியும்.. ஆனா இன்னொரு பொம்பள பிள்ளையை பெத்து வச்சிருக்கேன்.

அவளுக்கு ஒரு வழி வர வரைக்கும்  உங்க கூட இருந்து தான் ஆகணும்.. ஒரு மக வாழ்க்கைய உங்க வறட்டு  பிடிவாதத்துக்காக வீணாக்கிட்டேன். வானதி வாழ்க்கையில இனிமே நீங்க தலையிடக்கூடாது. என்கிட்ட எந்த பேச்சு வார்த்தையும் வச்சுக்க கூடாது. குறிப்பா உங்க தங்கச்சி இந்த வீட்டு வாசப்படிய மிதிக்கக்கூடாது. இதுல ஒன்னு நடந்தா கூட நீங்க கட்டுன தாலிய கழட்டி உங்க கைல கொடுத்துட்டு நான் போய்க்கிட்டே இருப்பேன்.”

வாசுகியின் இந்த ஆவேசத்தை கண்டு பரசுராம் ஆடிப் போனார்.. என்ன பேசுவது என்று வார்த்தைகளை தேடினார். தென்றலின் வார்த்தையும் வாசுகியின் கோபமும் தன் மீது தான் தவறு உள்ளதோ என்கிற நிலையில் அவரை யோசிக்க வைத்தது. மனம் உடைந்து அப்படியே தரையில் அமர்ந்து விட்டார் மனிதர்..

வாசுகியின் கோபம் மாதவிக்கு புதிதல்ல. ஆனால் இந்த அழுத்தம் அவருக்கு புதிய வாசுகியை அறிமுகப்படுத்தியது..

” அது எப்படி இந்த ஓடுகாலி பண்ண வேலைக்கு நான் என் அண்ணன் வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொல்ல நீங்க யாரு..” அண்ணியிடம் எகுறி கொண்டு சென்றார் மாதிரி.

“தோ பாரு அவ்வளவுதான் உனக்கு மரியாதை.. ஒழுங்கா பொட்டிய கட்டிட்டு ஊரு போய் சேரு.. இன்னிக்கு குடும்பம் தெருவுல நிக்கிறதுக்கு மூல காரணம் நீதான். அண்ணன் அண்ணன்னு அட்டையா உறிஞ்சி அண்ணன் குடும்பத்தை இந்த நிலைமைக்கு ஆளாகிட்ட.. உண்மையாவே உனக்கு இந்த குடும்பத்து மேல அக்கறை இருந்தா.. நீ ஒரு நல்ல பொம்பளையா இருந்தா  இந்த வீட்டு வாசப்படிய மிதிக்காத..” மாதவி வாயடைத்து போனார்.

அண்ணனே அண்ணி இவ்வளவு பேசியும் எதிர்த்து ஒரு வார்த்தை பேசாமல் இருக்க தன்னுடைய பேச்சு சபை ஏறாது என்பது மாதவிக்கு விளங்கியது..

தென்றல் அம்மா தன்னை புரிந்து கொள்ள மாட்டாளா என்கிற ஏக்கத்தோடு வாசுகியை பார்க்க அவரின் பார்வை இப்பொழுது மகள் பக்கம் திரும்பியது.

” மத்தவங்க மேல பழியை போட்டுட்டு நீ தப்பிச்சுக்கலாம்னு பார்க்காத. சொல்லாம கொள்ளாம நீ பண்ணிட்டு வந்து நிக்கிற காரியத்துக்கு பேரு என்ன தெரியுமா.. முன்ன பின்ன தெரியாதவனை நீ கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கல. அப்போ படிக்கப் போன இடத்துல உனக்கு இவன் கூட பழக்கம் இருந்திருக்கு. தும்முனா துப்புனா எல்லாத்தையும் அம்மாகிட்ட சொல்லுவியே. இதையும் சொல்லியிருந்தா இவ்வளவு தூரம் வந்திருக்காதே.”

“ம்மா”தவித்தாள் தென்றல்.

” நம்ப வச்சு கழுத்த அறுத்துட்டால.. இந்த ஆளுக்கு பொறந்தா ரத்தம் எங்க போகும்.. உங்க அப்பனும் அகிலனுக்கு உன்னை கொடுக்க மாட்டேன்னு சொன்ன வாக்கை காப்பாத்தல.. படிப்ப மட்டும் தான் பார்ப்பேன்னு சொன்ன நீயும் உன் வாக்கை காப்பாத்தல. நம்பி ஏமாந்து போறது  என் தலைவிதி போல. இன்னிக்கு ஒன்ன நான் ஏத்துக்கிட்டா நாளைக்கு உன் தங்கச்சியும் இதையே தான் செய்வா..

அவளோட வாழ்க்கை எனக்கு ரொம்ப முக்கியம். எல்லாத்துக்கும் துணிஞ்சு தானே இந்த முடிவை எடுத்துருப்ப. உன் வாழ்க்கையை நீ பாரு.. “

“ம்மா”

” அக்கம் பக்கம் சிரிக்க பண்ணிட்டியேடி.. இனிமே நாங்க எப்படி இங்க தலை நிமிர்ந்து வாழ முடியும்.. உன் வாழ்க்கை மட்டும் தான் முக்கியம்னு சுயநலமான முடிவு எடுத்துட்டல.. போ.. போயிரு.. செருப்படி வாங்குறதுக்குள்ள இங்கருந்து போயிரு.. ” அம்மா பேசியதை கேட்டு இடையில் பேச வந்த மகளின் வார்த்தைகளை ஒன்று கூட கேட்காமல் தன் மன ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார் வாசுகி.

அவரின் பேச்சைக் கேட்டு கதறி அழுதாள் தென்றல். செய்த தப்பு அவளுக்கு பாறாங்கல்லை தூக்கி தலையில் வைத்ததைப் போல கனத்தது.

தென்றல் கதறி அழுவதை கண்ட சசி ” இங்க பாருங்க.. அவர்கிட்ட சொன்னது தான் நான் உங்ககிட்டயும் சொல்றேன். உங்க பொண்ண உங்கள விட நான் நல்லா பாத்துக்குவேன். நீங்க நம்புனாலும் இல்லனாலும் அது தான் உண்மை..” வாசுகி உணர்ச்சியற்ற முகத்தோடு மருமகனை நோக்கினார்.

” ரொம்ப நல்லதுப்பா.. இப்ப நீ சொன்ன வார்த்தையை கடைசி வரைக்கும் காப்பாத்து அது போதும்.. ” என்றவர் அங்கே நின்று அக்காவை பார்த்து அழுது கொண்டிருந்த வானதி கையை பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று விட்டார். அப்பாவை ஏக்கத்தோடு பார்த்து நின்று கொண்டிருந்த தென்றலை வேறு வழியில்லாமல் அழைத்துக் கொண்டு சசியும் அங்கிருந்து கிளம்பினான்.

தெருவே அவர்களை வேடிக்கை பார்த்தது. யாரையும் நிமிர்ந்து பார்க்கும் சக்தியற்று கூனி குறுகி சசியின் கரத்தை பிடித்தபடி காரில் ஏறிக் கொண்டாள் தென்றல்.

சந்துருவுக்கு கா  வல் நிலையம் செல்லாமல் தப்பித்தே பெரிதாக இருந்தது.. நேராக அவர்களை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அவனின் பெற்றோர் ஊரில் இருக்கிறார்கள். அவனும் அவனது நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து ஒரு வீட்டை வாடகை எடுத்து இருக்கிறார்கள்.

தென்றல் அழுது கொண்டே இருந்தாள். சந்துரு வாங்கி வந்த எந்த உணவையும் அவள் சாப்பிடவில்லை. சமாதானம் செய்து ஒரு கட்டத்திற்கு மேல் அவளே அழுது அடங்கட்டும் என்று வெளியே வந்து விட்டான்.

தனியாக நின்ற புகைப்பிடித்துக் கொண்டிருந்தவனை பார்த்து
” பொண்ணு வீடே இந்த நிலமைனா உன் வீட்டு யோசிச்சு பாரு.. அவங்க உன்னை ஏத்துப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லை.. அவசரப்பட்டு இந்த முடிவ எடுத்துட்டேன்னு தோணுது மச்சான்.. ” சந்துரு மனம் பொறுக்க முடியாமல் கூறினான்.

” எனக்கு வேற வழி தெரியலடா.. பாத்துக்கலாம்” தைரியமாக கூறியவனுக்கு உண்மையில் எப்படி வாழ்க்கையை பார்த்துக் கொள்வது என்று தான் தெரியவில்லை.

அன்று இரவே இருவரும் சென்னைக்கு கிளம்பி விட்டார்கள்.. காலையில் ஒரு பெண்ணுடன் வீட்டு வாசலில் வந்து நின்ற மகனை கண்டதும் சோமசுந்தரத்தின் ரத்த அழுத்தம் கண்டபடி உயர்ந்தது. விசாலாட்சியை பற்றி சொல்லவே தேவையில்லை. அவர்கள் இருந்த தெருவில் இருந்தவர்கள் அனைவருமே மேல் தட்டு மக்கள் என்பதால் வீட்டு முன்பு கூட்டம் போடவில்லை. தவிர அவரவர் வீட்டில் இருந்தே எட்டிப் பார்த்துக் கொண்டார்கள்.

” படுபாவி விளங்குவியா நீ.. படம் எடுக்கப் போறேன்னு தானடா சொன்ன.. எவளோ ஒரு பிச்சைக்காரிய கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கிறியே பெத்தவ நான் என்ன செத்தா போயிட்டேன்.. இதுக்கு தான் நீ என்ன பண்ணாலும் வாயை மூடிக்கிட்டு உனக்கு ஜால்ரா அடிச்சனா.. எவடா இவ.. ராணி மாதிரி உனக்கு பார்த்து வச்ச பொண்ண விட்டுட்டு இப்படி ஒரு பஞ்சு பரதேசிய பார்த்து கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கியே..

யாருடி நீ எந்த தெருவுல பொறுக்கிட்டு இருந்த.. உன் அப்பா ஆத்தா சொல்லிக் கொடுத்து மேய விட்டாங்களா.. பணக்கார பையனா பார்த்து புடிச்சு அப்படியே செட்டில் ஆகிடுன்னு.. வெக்கமா இல்ல உங்களுக்கெல்லாம்.. நல்ல குடும்பத்துல பொறந்த பொண்ணு செய்ற வேலையா இது..த்தூ..” விசாலாட்சி வார்த்தைகளால் தென்றலை விலாச இம்மாதிரி வசவுகளை கேட்டு பழக்கமில்லாத தென்றல் ஆடிப் போய் நின்றாள்..

சோமசுந்தரம் எதுவும் பேசவில்லை..

“ம்மா.. இப்ப எதுக்கு கத்துற.. எனக்கு புடிச்ச பொண்ணு இவ. என்ன நம்பி எல்லாத்தையும் விட்டுட்டு வந்துட்டா. தெருவுல போற பொண்ண கூட்டிட்டு வந்து நான் வரல. உங்களால எங்களை ஏத்துக்க முடிஞ்சா உள்ள கூப்பிடுங்க.. இல்லனா எங்க வாழ்க்கையை பார்த்துக்க எங்களுக்கு தெரியும்..” அங்கேயும் கெத்தாகவே பதில் சொன்னான் சசிமித்ரன்.

செய்வதையெல்லாம் செய்துவிட்டு நெஞ்சை நிமிர்த்து பேசிய மகனை  விளக்கமாற்றை எடுத்து விலாசுவதற்கு முனைந்தார் விசாலாட்சி.

“விஷாலம்.. என்ன பண்ணிட்டுருக்க நீ.. தோளுக்கு மேல வளர்ந்த பையனை..”

” நீங்க சும்மா இருங்க.. இவன் போக்குல இவன விட்டு விட்டு தான் இன்னைக்கு இந்த நிலைமையில வந்து நிக்குது.. இவன் பண்ணிட்டு வந்த காரியத்தால இனிமே நம்ம சொந்த பந்தத்துக்கு முன்னாடி தலை நிமிர்ந்து நிக்க முடியுமா.. போறவன் வரவன் எல்லாம் என்ன உங்க மவன் கல்யாணத்துக்கு எங்களை கூப்பிடவே இல்லையேன்னு கேட்பானே அப்ப எந்த மூஞ்ச வச்சுட்டு பதில் சொல்லுவீங்க.. அந்த நாய் எங்களையே கூப்பிடலன்னு எப்படி சொல்லுவீங்க..

ஐயோ என் குடும்பம் மானம் இப்படி சந்தி சிரிக்குதே.. இதுக்கெல்லாம் காரணம் நீதான்டி. பணக்காரன வளச்சி போட்டா பணக்கார வாழ்க்கை கெடைக்கும்னு திட்டம் போட்டு இப்படி பண்ணியிருக்க..

டேய் சசி முடிவா சொல்றேன் உனக்கு அம்மா வேணும்னு நினைச்சா இவள இப்பவே துரத்தி விட்டுட்டு வீட்டுக்குள்ள வா.. இல்லனா இவ கூடயே எங்கேயாச்சும் ஒளிஞ்சு போயிரு.. இனிமே என் மூஞ்சில முழிக்காத” ஆவேசம் வந்தவராய் கத்திக் கூப்பாடு போட்டார் விசாலாட்சி.

ஆனால் சோமசுந்தரம் அமைதியாகவே இருந்தார். அவரின் நண்பன் ஜோதிடம் பார்த்து கூறியது  சோமசுந்தரத்துக்கு நினைவு வந்தது. இன்னாருக்கு இன்னார் என்று இறைவன் போட்ட முடிச்சை அவிழ்க்க நாம் யார்?

மகனின் வாழ்க்கை மட்டுமே ஒரு தகப்பனாக அவர் கண்ணுக்கு தெரிய, அவனை நம்பி வந்த பெண்ணைப் பற்றியோ  அவளின் வாழ்வை பற்றியோ அவர் பெரிதாக கவலைப்படவில்லை.. இனி மகன் வாழ்வில் கண்டிப்பாக மாற்றம் வரும் என்பதை மட்டுமே அவர் மனம் எடுத்துரைத்தது.

எனவே கத்தி கதறிக் கொண்டிருந்த விசாலாட்சியை முதலில் சத்தமிட்டு அதட்டி அடக்கியவர்,

” சசி அந்த பொண்ண கூட்டிட்டு உள்ள வா.. “என்றார்..

“என்னங்க நான்” விசாலாட்சி ஆங்காரமாய் வாய் திறக்க

” நான் சொன்னது தான் கடைசி. மீறி பேசினா இந்த வீட்ல நீ மட்டும் இரு நான் வெளியே போறேன்.” சோமசுந்தரம் தடாலடியாக கூற விஷாலாட்சி அந்த நேரம் எதுவும் பேச முடியாமல் வாயை மூடிக்கொண்டார்.

சசியின் கரத்தை பிடித்துக் கொண்டு நடுக்கத்தோடு அந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தாள் தென்றல்.