மழைவர பூமி மறுத்திடுமா? – 1

வெண்ணிலவு தாலாட்டிக் கொண்டிருந்த இரவு நேரம். ஜன்னல் வழியே வழிந்த நிலவொளி அருள்மித்ரனின் அறையை மென்மையாகத் தழுவிக் கொண்டிருந்தது. அவனோ இன்னமும் உறங்காமல் விழிகளை மட்டும் வெறுமனே மூடி, முகத்தை மறைக்கும்படி வலது கையை குறுக்காக வைத்து படுத்திருந்தான்.

இரவின் அமைதியையும் குளிர்ச்சியையும் அவன் அனுபவித்துப் பல நாட்கள் ஆகியிருந்தது. ஓயாத ஓட்டமும், இயந்திரத்தனமான நாட்களும் அவனிடமிருந்து இத்தகைய நிதானமான நிமிடங்களை எப்பொழுதோ பறித்துக்கொண்டிருந்தன. இன்று நடந்த கசப்பான சம்பவங்கள் அவனது உறக்கத்தையும் சேர்த்துப் பறித்துக் கொண்டு அவனை சோதிக்கிறது.

ஒரு விஷயத்தை அவன் செய்யும்போது அது கடமையாகவும், அவனுக்கு யாரேனும் திருப்பி செய்தால் அது சகாயமாகவும் பார்க்கப்படும் விந்தை மட்டும் இருபத்தொன்பது வயதாகியும், அவனுக்கு இன்னமும் புரியவில்லை. மனம் வலி தாங்கமாட்டாமல் துவண்டு கிடந்தது.

சிறிது நேரம் கடந்திருக்க, “அண்ணா…” என்றொரு குரல் மிக மெலிதாக. அழைப்பது தங்கை கவிதா என்று தெரிந்தும் உடனடியாக அவனால் பதிலளிக்க முடியவில்லை. தொண்டைக்குள் ஏதோ ஒரு பாரம் உருண்டது. கசப்பான சம்பவங்களின் மிச்சம் இன்னும் அவன் குரலை இறுக்கிக் கொண்டிருந்தது.

மூச்சை ஆழமாக இழுத்துவிட்டவன், கண்களைத் திறந்து மெதுவாகப் பக்கவாட்டில் பார்த்தான். கவிதா கைகளைப் பிசைந்தபடி அறைவாயிலில் நின்றிருந்தாள்.

அண்ணன் தன்னை திரும்பிப் பார்த்ததையே தனக்கான அனுமதியாக எடுத்துக் கொண்டு உள்ளே வந்தவள், “தீபு குட்டியை எப்பவும் போல நானே தூங்க வெச்சுக்கிறேன் ண்ணா. அம்மா சொன்னதை பெருசா எடுத்துக்காதீங்க” என்றாள் பரிதவிப்போடு.

எழுந்தமர்ந்த அருள்மித்ரனால் உடனடியாக எந்த பதிலையும் தர முடியவில்லை. மீண்டும் ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு, மெதுவாகத் திரும்பி தன்னருகில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த தன் செல்ல மகளை ஒரு பார்வை பார்த்தான். பால் மனம் மாறாத எட்டு மாத குழந்தை. அவளின் எதிர்காலத்தை நினைத்தாலே ஒருவித அச்சம் அவனுள் புகை மண்டலம் போல நிறைந்து விடுகிறது.

கவிதாவிடம் திரும்பி, “உனக்கு தூக்கம் கெடுதுன்னு அம்மா சொல்லறாங்கம்மா… அவங்க சொல்லறதும் நியாயம் தானே! இனிமே தீபுவை இராத்திரியில நான் பார்த்துக்கிறேன்” என்றான் மகளுக்குத் தொந்தரவு தந்து விடாத சன்னமான குரலில்.

“என்ன அண்ணா நீங்க? அம்மா தான் சொல்லறாங்கன்னா நீங்களும் அதை பெருசா எடுத்துக்கிட்டு? ‘குழந்தையை நான் பார்த்துக்கிட்டா வேலைக்கு நீங்களா போவீங்கன்னு’ அவங்ககிட்ட திருப்பி கேட்க வேண்டியது தானே… அதை விட்டுட்டு பாப்பாவை நானே பார்த்துக்கிறேன்னு சொல்லி அவளைத் தூக்கிட்டு வரீங்க. நீங்க அமைதியா போகப்போக அம்மா அவங்க இஷ்டத்துக்கு உங்களை ஆட்டி வெச்சுட்டே தான் இருப்பாங்கண்ணா” என்றாள் ஆற்றாமையாக.

இத்தனை பேசும் கவிதாவே அவளின் அன்னை கல்யாணி இவளை மட்டம் தட்டும்போது முகம் வாடி, மனம் சோர்ந்து நிற்பவள் தான்! ஆனால், மொத்த குடும்பத்தையும் தாங்கி நிற்கும் அண்ணனுக்கும் அதுதான் நிலை எனும்போது அவளால் அதனை இம்மியளவும் ஏற்க முடியவில்லை.

அண்ணனின் பதிலற்ற மௌனம் உள்ளுக்குள் அவன் எவ்வளவு தவித்துக் கொண்டிருக்கிறான் என்பதைத் துல்லியமாக விளக்க, “அண்ணா, நான் நைட் தீபுவை பார்த்துக்கிட்டா பகல்ல அவ தூங்கும் போது, நானும் தூங்கி ரெஸ்ட் எடுத்துக்கிறேன், ஆனா நீங்க என்ன செய்வீங்க? வேலை செய்யற இடத்துல உங்களால தூங்க முடியுமா?” என்றாள் அவனின் நிலையை யோசித்து.

அவளின் கேள்வி நியாயமானது தான்! தீபாலியை கடந்த மூன்று மாதங்களாக பார்த்துக் கொள்வது கவிதா தான். அவள் இல்லையென்றால் அவனது நிலையும், மகளின் நிலையும் எப்படியிருந்திருக்கும் என்பதை அவனால் கற்பனை செய்யக் கூட முடியவில்லை.

ஆனால், அம்மா சொல்வதிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது. வயதுப்பெண் அவளிடம் ஒரு குழந்தையின் பொறுப்பை ஒப்படைத்தால், அவளுக்குத் திருமணம் என்று பார்த்து செய்ய வேண்டாமா?

உதவ யாருமற்ற தன் நிலையில், கவிதாவின் எதிர்காலத்தைச் சிதைக்கத் தனக்கு என்ன உரிமை இருக்கிறது என்கிற கேள்வி அவன் நெஞ்சைக் குடைந்தது. தங்கையின் வாழ்க்கைக்கு தன் மகளின் பொறுப்பு தடையாகிவிடுமோ என்ற அச்சம் அவனை உலுக்க, கண்களை இறுக மூடிக் கொண்டான். அவனது தொண்டைக்குழி ஏறி இறங்கியது.

அவனின் தாயாரும், மாமியார் வீட்டிலும் கொஞ்சம் உதவி செய்ய முன்வந்தால் கூட போதும் மகளை வளர்த்து ஆளாக்கி விடுவான். ஆனால், எல்லோரும் ஒதுங்கி நின்று அவனது கஷ்டத்தை வேடிக்கை பார்க்கிறார்கள். அதைத்தான் அவனால், தாங்கிக்கொள்ள முடியவில்லை.

தங்கையைத் தவிர இப்பொழுது அவனுக்கு வேறு நாதியில்லை. இந்த இக்கட்டான சூழலில், தனக்கு இன்னொரு திருமணம் அவசியம் என்பதை மனதார உணர்ந்து கொண்டான். ஏற்கனவே பலமாக வாங்கிய அடி அவனை இழுத்துப் பிடித்தாலும், மகளின் எதிர்காலத்திற்கு வேறு எந்த வழியும் புலப்பட மறுத்தது.

கவிதா அவனின் கலக்கத்தைப் புரிந்து, “பிளீஸ் ண்ணா, கண்டதையும் யோசிக்காதீங்க” என்றாள் மீண்டும்.

“சரிடா பாப்பாவை பார்த்துக்க… ஆனா, உன் பொறுப்புலயே தீபு குட்டியை எப்பவும் வெச்சிருக்க மாட்டேன் மா. உனக்கு ஒரு நல்லது நடக்கும் போது அவ பொறுப்பு கண்டிப்பா உனக்குத் தடையா இருக்காது. அண்ணனை நம்பும்மா” என்றான் கரகரத்த குரலில்.

“ம்ப்ச்… என்னண்ணா ஏதேதோ பேசிட்டு, இப்ப என்ன எனக்கு உடனேயேவா கல்யாணம் செய்யப்போறோம்? அதோட என்னை கட்டிக்க எந்த மாப்பிள்ளை வந்து வரிசையில நிக்கிறான்னு இதெல்லாம் பேசிட்டு இருக்கீங்க. அதெல்லாம் நடக்கும்போது பார்த்துக்கலாம். அமைதியா தூங்குங்க, நாளைக்கு வேலைக்கு போகணுமே” என்று அவனிடம் சொல்லிவிட்டு, தீபாலியை தன் மார்போடு சேர்த்து வாரியணைத்தபடி தன் அறையை நோக்கி நடந்தாள்.

தன் இக்கட்டான நிலையை நொந்தபடி அருளும் கட்டிலில் சரிந்து கொண்டான்.

அருள்மித்ரன் செஞ்சேரிமலை டவுனில் டூ வீலர் மெக்கானிக் ஷாப் வைத்திருக்கிறான். படிப்பென்று பார்த்தால், பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே தந்தைக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாகப் படிப்பை நிறுத்தும் நிலை! ஆனால், படிப்பில்லா விட்டாலும், தொழிலில் தன் திறமையாலும் உழைப்பாலும் காலூன்றி இருந்தான்.

அருளுடைய மனைவியின் பெயர் பிரீத்தி. அவள் இப்பொழுது உயிரோடு இல்லை. அவனுடைய சொந்த தாய்மாமன் மகளைத்தான் அவன் மணம் முடித்தது. இருவருக்கும் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்.

அவன் வாழ்வில் திருமண வாழ்வு அப்பொழுது தான் தொடங்கியே இருந்தது. என்னவோ ஆரம்பத்திலிருந்தே பிரீத்திக்கு அருளோடும், அவன் குடும்பத்தோடும் கொஞ்சம் கூட ஒத்துப் போகவில்லை. சதா சண்டை, சச்சரவு என்று போய்க்கொண்டிருக்க, வாழ்க்கையை எப்படி சீராக எடுத்துச் செல்வது என்று தெரியாமல் அவன் விழி பிதுங்கிக் கொண்டிருந்தான். அதற்குள், திருமணமான முதல் வருடத்திலேயே மகளை பெற்றெடுத்துவிட்டு பிரீத்தி பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கலில் இறந்து போனாள்.

அருளிற்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலானது.

அன்னை வாசம் அறியாத மழலை அவன் கையில்! பதினேழு வயதிலிருந்து பதினோரு ஆண்டுகளாக மொத்த குடும்ப பொறுப்பையும் தன் தோளில் சுமப்பவனுக்கு, கைக்குழந்தையை வைத்துக் கொண்டு இனி என்ன செய்வது என்று யோசிக்கவே அச்சமாக இருந்தது! மகளை எப்படி வளர்த்து ஆளாக்கப் போகிறோம் என்று எண்ணியவனின் மனதில் அத்தனை கலக்கம். இனி என்ன செய்வது என்று செய்வதறியாமல் திக்கற்று அநாதரவாக நின்றது அன்று தான்!

மாமனார் வீட்டில் சில மாதங்கள் மகளை பார்த்துக் கொண்டார்கள். குழந்தைக்கு ஐந்து மாதங்கள் ஆனபோது, வயதான எங்களால் இனியும் பேத்தியைப் பார்த்துக்கொள்ள முடியாது. எங்களால் முடிந்தது மகளுக்குப் போட்ட நகைகளைப் பேத்திக்கென்றே தந்து விடுகிறோம். குழந்தையை வளர்க்கும் பொறுப்பை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. எங்களுக்கும் சின்ன மகள் வேறு திருமணத்திற்கு நிற்கிறாள், பேத்தியை இனியும் எங்கள் வீட்டில் பார்த்துக் கொள்வது சிரமம் என்று சொல்லி இவன் வீட்டிற்கு முன்னறிவிப்பு கூட தராமல் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்துவிட்டார்கள்.