கீழே தலையணையைப் போட்டவன் படுத்துக் கொள்ள அவன் மார்பை தஞ்சமாக்கி அவளும் படுத்துக் கொண்டாள். அவன் கரங்கள் அவள் முதுகை வளைத்துக் கொண்டது. ஆனால் அடுத்து எந்த முன்னேற்றமும் இல்லாமல் அவர்கள் வாழ்க்கையைப் பற்றி பேசிக் கொண்டிருக்க “எதுவும் வேண்டாமா?”, என்று கேட்டாள். தனக்காக அவன் தயங்குவதாக எண்ணிக் கொண்டாள்.
“யார் சொன்னா வேண்டாம்னு? ஆனா இன்னைக்கு வேண்டாம். இயல்பா இருக்கட்டுமே?”, என்றவன் அவளை அணைத்த படியே உறங்கிப் போனான். ஆனால் அவனுடைய இதயத் துடிப்பை கேட்டுக் கொண்டிருந்த மீனாவுக்கு தான் தூக்கம் வர வில்லை.
மனித மனம் விசித்திரம் நிறைந்ததாயிற்றே. அதிக சந்தோஷம் என்றாலும் விழித்திருக்கும் அதிக தூக்கம் என்றாலும் விழித்திருக்கும். இன்று அதிக சந்தோஷத்தில் இருந்தாள் மீனா.
அவளுக்கு என்று ஒரு இதயம், அவளுக்கு என்று ஒரு வீடு, அவளுக்கு என்று ஒரு குடும்பம் எல்லாம் கிடைத்திருக்கிறதே. ஏனோ அவளுடைய எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறியது போல இருந்தது.
இந்த வாழ்க்கையை கொடுத்த கடவுளுக்கு வெகு நேரம் நன்றி சொன்னவள் அவனுடைய இதயத் துடிப்பைக் கேட்ட படி அவனுடைய வாசனையை நுகர்த்த படி உறங்கிப் போனாள்.
காலையில் எப்போதும் போல சீக்கிரம் விழிப்பு தட்டி விட்டது. குளித்து முடித்து வெளியே போகும் போது வசந்தா பாலை காய்த்துக் கொண்டிருந்தாள்.
“கூட கொஞ்ச நேரம் தூங்கிருக்கலாம்ல மீனா?”
“தூக்கம் வரலை அத்தை, காலைலைக்கு என்ன செய்யட்டும்?”, என்று கேட்டாள்.
“மணி ஆறு தான் ஆகுது. எல்லாருக்கும் இன்னைக்கு லீவ் தான். ஒன்பது மணிக்கு தான் சாப்பிடுவாங்க. மாவு இருக்கு. ஒரு எட்டறைக்கு சட்டினி வச்சிக்கலாம். நீ இந்த டீ குடிச்சிட்டு பாப்பா எழுந்துட்டாளான்னு பாரு”, என்று சொல்ல அவளும் டீ டம்பளருடன் அறைக்குச் சென்றாள்.
தரையில் படுத்திருந்தவன் எப்போது எழுந்து கட்டிலுக்கு வந்தான் என்று தெரியாது. இப்போது அவன் மார்பில் மஞ்சம் கொண்டிருந்தாள் அவர்கள் செல்ல மகள். போதாதற்கு அவள் கால்கள் அவன் மீது கிடக்க பிள்ளையை வாகாக பிடித்த படி நன்கு உறங்கிக் கொண்டிருந்தான் தாமரை.
அங்கிருந்த சேரில் அமர்ந்த படி இருவரையும் பார்த்தாள் மீனா. தன்னவன் மீது கொஞ்சம் அதிகமாக தான் அவள் பார்வை விழுந்தது. சிறு குழந்தை போல தூங்கிக் கொண்டிருந்தவனைக் கண்டு “இவன் தான் எவ்வளவு நல்லவன்? யாருக்கும் எந்த தீங்கும் செய்யாதவன்”, என்று எண்ணிக் கொண்டாள்.
பேன் காற்றில் அவனது தலைமுடி கலைந்து விளையாட அப்பட்டமாக சைட் அடித்தாள் அவள் கணவனை. அடுத்து வந்த நேரங்கள் அனைவருக்கும் இயல்பாக நகர்ந்தது.
அதுவும் தொடர்ந்து வந்த நாட்கள் எல்லாம் அவள் பட்ட பழைய கஷ்டங்களை எல்லாம் மறக்கடிக்கும் வகையில் இருந்தது.
முதல் நாள் அவளை விட்டு வைத்தவன் அடுத்த நாள் அப்படி இருக்க வில்லை. அவளுடைய காயத்துக்கு அருமருந்தாக அவளுடைய காதலுக்கு மரியாதை தரும் வகையில் இருந்தது அவர்கள் தாம்பத்தியம். அவன் ஆசைக்கும் தேடலுக்கும் அவள் ஒரு நொடி கூட தடை சொல்லவே இல்லை. அவன் அருகாமையை அவளே ரசிக்கும் போது எப்படி மறுப்பாளாம்?
இருவரும் இயல்பாக தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்திருந்தனர். அதுவும் அத்தனை பேர் வீட்டில் இருக்க தனி அறைக்குள் அவள் மட்டும் சிக்கி விட்டால் போதும், அப்படியே அள்ளிக் கொள்வான். அவளுக்கு ஒரு பழைய கருப்பு பக்கம் இருக்கலாம். ஆனால் அவனுக்கு அப்படி இல்லையே. அவனுடைய முதல் காதல், முதல் தேடல் அவள் தான் எண்ணும் போது அவன் அடாவடி தாங்க முடியாததாக தான் இருக்கும்.
மீனா முகத்தில் துளி கூட வருத்தமோ சோகமோ நாளை என்ன ஆகும் என்ற பயமோ எதுவுமே இல்லை. சந்தோஷம் மட்டுமே இருந்தது. அதற்கு அவர்கள் இல்லற வாழ்க்கை அழகாக சென்றது ஒரு காரணம் என்றால் அவர்கள் குழந்தை அனைவரின் கவலையையும் அள்ளிக் கொண்டு போனாள் என்பதும் ஒரு காரணமாக இருந்தது. குழந்தையுமே இது வரை தாய் தந்தையுடன் ஒன்றாக இருந்ததில்லை, எங்கும் வெளியே சென்றதில்லை என்பதால் தாமரை மற்றும் மீனாவுடன் ஒன்றாக இருக்க அவ்வளவு ஆசைப் படுவாள். மற்ற நேரம் அனைவரிடமும் ஒட்டிக் கொள்வாள்.
மீனாவும் அப்படி தான். அவளிடம் இருந்த தயக்கங்கள் எல்லாம் விடை பெற்று சென்றிருந்தது. எந்த கவலையும் இல்லாமல் வசந்தா கையால் உணவு உண்டாள் என்று சொல்ல வேண்டும். ஊரில் அவளைப் பற்றி என்ன வேண்டும் என்றாலும் பேசிக் கொள்ளட்டும். ஆனால் இவர்கள் வீட்டில் மீனாவும் ஒருத்தி. வசந்தா அவளை அந்த அளவுக்கு பார்த்துக் கொண்டாள். சமையல் வேலையை வசந்தா தான் செய்வாள்.
கஷ்டமான வேலை எதையும் அவளை செய்ய விட மாட்டாள். எப்போதாவது டீ போடும் வேலை மட்டுமே மீனாவுக்கு வரும். அதை விட கலை மற்றும் வதனாவுக்கு என ஒரு பூ வாங்கும் போது கூட மீனாவுக்கு பிடித்த முல்லைப் பூ நிச்சயம் அதில் இருக்கும்.
அவளுக்கு ஆட்டுக் கறி பிடிக்காது என்பதால் மற்றவர்களுக்கு அதை எடுத்தாலும் அவளுக்கு என்று இன்னொரு ஐட்டம் அது மீனாகவோ இல்லை நண்டு, இறால், இல்லை கோழி கறி என ஏதாவது ஒன்று தனியாக இருக்கும்.
மொத்தத்தில் அவளது வீட்டில் மீனா அவளாக இருந்தாள் என்று சொல்ல வேண்டும். அந்த வீட்டை அவள் வீடாக அவளை உணர வைத்தார்கள். அவள் அந்த வீட்டில் மகாராணி போல இருந்தாள் என்றால் அவள் மகளோ குட்டி இளவரசி தான்.
திருமணம் முடிந்து ஐந்து நாட்கள் கழித்து வசந்தாவே மீனாவை வேலைக்கு கிளம்பச் சொன்னாள். அவளுக்கு ஆச்சர்யமாக தான் இருந்தது.
வேலைக்கு பத்து நாட்கள் லீவ் தான் சொல்லி இருந்தாள். இன்னும் இரண்டு நாட்கள் லீவ் இருக்க அடுத்து என்ன செய்ய என்ற யோசனையில் தான் இருந்தாள். யாரும் அது பற்றி பேசாமல் இருக்க அவளுக்கும் கேட்க தயக்கமாக இருந்தது.
இப்போது வசந்தாவே அது பற்றி கேட்கவும் “அத்தை நிஜமா தான் சொல்றீங்களா? பாப்பாவை வேற பாத்துக்கணும்”, என்றாள்.
“குழந்தையை நான் பாத்துக்குறேன். அவ ஸ்கூல்க்கும் போயிருவா. நீ பகல்ல சும்மா தான் இருக்க? வேலைக்கு போய்ட்டு வா டா. பணத்துக்காக சொல்லலை. உனக்கும் மனசுக்கு நல்லா இருக்கும். வீட்டுக்குள்ளே இருந்தா நல்லா இருக்காது மீனா”, என்று சொல்ல இப்படி ஒரு மாமியார் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.
அவள் தாமரையிடம் இதைச் சொல்ல “வேலைக்கு போ அழகி. வயித்துக்குள்ள ஜூனியர் வந்த பிறகு வேலையை விட்டுறலாம்?”, என்று சொல்லி கண்ணடிக்க அழகாக வெட்கப் பட்டாள். குழந்தை பிறப்பை வதனாவின் திருமணத்திற்கு பிறகு தான் என்று முடிவு எடுத்திருந்தார்கள்.
அவள் வேலைக்கும் செல்ல ஆரம்பித்தாள். சில நேரம் மனைவி பிள்ளையை வெளியே அழைத்துச் செல்வான். வீட்டில் திருமணம் ஆகாமல் இரண்டு பெண்கள் இருக்க சில நேரம் மீனாவுக்கு அவனுடன் ஜோடி போட்டு செல்ல தயகிக்கமாக இருக்கும். ஆனால் அந்த வீட்டில் அவளை யாரும் தவறாக நினைத்தது இல்லை. ஆனால் அவளுக்கு ஒரு மாதிரி இருக்கும்.
அதை ஒரு முறை அவனிடம் சொல்ல “பைத்தியம், நாம தனியா போறது ஊர் சுத்த இல்லை. பாப்பாவுக்கு ஆதார்கார்ட் எல்லாம் வாங்க? அப்ப ஊரையா கூட்டிட்டு போக முடியும்? சுத்திப் பாக்க போகும் போது தங்கச்சிகளை கூட்டிட்டுப் போகலாம்”, என்று சமாதானப் படுத்தினான்.
அடுத்து வந்த நாட்களில் அந்த வீட்டின் அங்கமாக தான் மீனா இருந்தாள். வசந்தா மற்றும் வேலாயுதம் இருவருமே அவளை மற்ற பிள்ளைகள் போல தான் நடத்தினார்கள். வதனா மற்றும் கலை இருவருமே அவளை அண்ணி என்று அழைத்தாலும் சொந்த அக்கா போல தான் பார்த்தார்கள்.
அவளிடமே இப்படி என்றால் குழந்தையிடம் அவர்கள் காட்டிய பேரன்பு அவளை அவ்வபோது சிலிர்க்க வைக்கும். வேலாயுதம் ஏதாவது கடைக்கு கிளம்பினாலே தாத்தா என்று அவருடன் ஒட்டிக் கொள்வாள் மகி. வசந்தா சமைக்கும் போது அவளது இடுப்பில் ஏறி அமர்ந்து தோளில் சாய்ந்து கொண்டு அது என்ன ஆச்சி, இது என்ன ஆச்சி என்று கேள்வி எழுப்புவாள்.
மாலை கலையும் வதனாவும் வந்ததும் அத்தை அத்தை என்று அவர்கள் இருவரின் பின்னே தான் உறங்குவது வரை சுற்றிக் கொண்டிருப்பாள்.
ஆனால் அவளது அப்பா மட்டும் வீட்டில் இருந்தால் போதும் அவளுக்கு வேறு யாரையும் கண்ணுக்கு தெரியாது. தாமரை வீட்டில் இருக்கும் போது அவன் உடனே தான் இருப்பாள். அவர்கள் வாழ்க்கை அவர்கள் எதிர்பார்த்ததை விட அழகாகச் சென்றது.