செந்தாமரை மற்றும் அழகுமீனாவின் திருமணத்தை பத்திரிக்கை அடித்து ஊரை அழைத்து செய்ய தான் அனைவருக்கும் ஆசை. அவனுக்கு முதல் திருமணம் என்பதாலும் வீட்டுக்கு ஒரே ஒரு ஆண்மகன் என்பதாலும் திருமணத்தை பெரியதாக நடத்த தான் எண்ணினார்கள் வசந்தாவும் வேலாயுதமும்.
ஆனால் திருமணத்திற்கு வரும் உறவுகள் என்ன பேசுவார்கள், எப்படி பேசுவார்கள் என்று எல்லாம் நமக்கே தெரியுமே? சந்தோசத்துக்காக செய்ய இருக்கும் விஷயம், நிறைய சங்கடத்தை மட்டுமே கொடுக்கும் என்னும் போது அதற்கு நாம் ஏன் வழி விட வேண்டும் என்று எண்ணினான் தாமரை.
“அடுத்து ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க மா. அவங்க கல்யாணத்தை பெருசா ஊரே பாக்குற மாதிரி செஞ்சிறலாம்? இப்ப என்னோட கல்யாணம் சிம்பிளா கோயில்ல இருக்கட்டும்”, என்று கூறினான்.
“இல்லை டா நம்ம சொந்தக்காரங்க எல்லாம்..?”, என்று வேலாயுதம் இழுக்க “அவங்களுக்காக பாத்தா நம்ம சந்தோஷம் போயிரும் பா. மீனாவையும் குழந்தையையும் யாரும் ஏதாவது சொல்லிட்டா நல்ல நாள் ஒரு மாதிரி சங்கடமா யாராவது கண்ணீர் வடிக்கிற மாதிரி ஆகிரும்”, என்றான்.
“அவன் எண்ணப் படியே பண்ணலாம்ங்க. பிள்ளைங்க சந்தோஷம் தானே நமக்கு முக்கியம்? நம்ம ஊர் கோவில்ல வச்சு கல்யாணம் பண்ணலாம். சொந்தக்காரங்களை மட்டும் கூப்பிட்டுக்கலாம். பத்திரிக்கை எல்லாம் அடிக்க வேண்டாம். பொண்ணை அழைச்சிட்டு வந்து உங்க அக்கா வீட்ல வச்சிட்டா போச்சு”, என்றாள் வசந்தா.
“சரி மா அப்படியே பண்ணிறலாம்”, என்று அவரும் சொல்லி விட்டார். வேறு வழியும் இல்லையே.
தாலி மற்றும் சேலை எடுக்கவும் அனைவரையும் எல்லாம் அழைத்துச் செல்ல வில்லை. இரண்டு வீட்டினர் மட்டுமே சென்றார்கள். ஏனோ மீனா முகத்தில் சந்தோஷம் நிரந்தரமாக குடியிருந்தது போல இருந்தது. வசுந்தராவை யாரும் அழைக்கவில்லை. வடிவும் அழைக்க வில்லை.
மீனாவின் சந்தோஷம், அவளது குழந்தையுடன் அவள் செலவழிக்கும் நேரம் எல்லாமே அழகாக இருந்தது. அனைவருக்கும் அவளைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது. மீனாவும் சரி, தாமரையும் சரி தங்களின் வேலைக்கு லீவ் சொல்லிவிட்டு தங்களுடைய திருமண தருணத்தை ரசித்தார்கள். குழந்தை வேறு “அம்மா அப்பாவுக்கு கல்யாணம்”, என்று கூவிய படியே குதூகளித்தாள்.
ஒரு வழியாக திருமண நாளும் வந்தது. காலை எட்டு மணிக்கு தாமரையின் குலதெய்வ கோவிலில் வைத்து செந்தாமரை மற்றும் மீனா திருமணம் மிக எளிமையாக நடந்து கொண்டிருந்தது. இரண்டு வீட்டுப் பக்கமும் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே வந்திருந்தார்கள். கதிர் மற்றும் ராஜன் இருவரும் அவர்கள் குடும்பத்துடன் வந்திருந்தார்கள்.
கலை மற்றும் வதனா இருவரும் சந்தோஷமாக அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருக்க ராஜனின் அன்னையின் கண்களில் விழுந்தாள் வதனா.
ஏனோ அவருக்கு வதனாவைப் பார்த்ததும் பிடித்து விட்டது. புடவை கட்டி தலை நிறைய பூ வைத்து மிதமான அலங்காரத்தில் அழகாக இருந்தாள். ஏனோ அவளைக் கண்டதும் மகனின் அருகே அவளை வைத்துப் பார்த்தது மனது. ஆனால் படித்துக் கொண்டிருக்கும் பெண்ணை எப்படி திருமணம் செய்து கொடுப்பார்கள் என்று எண்ணிக் கொண்டார்.
இன்னும் தாமரை இந்த விஷயத்தை ராஜனிடம் பேசி இருக்க வில்லை என்பதால் அவருக்கு தெரிய வில்லை.
குழந்தையும் அங்கே இங்கே ஓடியாடி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தாள். வெள்ளை வேஷ்டி சட்டையில் தாமரை கம்பீரமாக அமர்ந்திருக்க குங்குமநிற பட்டுப் புடவையும் மிதமான நகைகளும் அணிந்து வதனா மற்றும் கலையால் அழைத்து வரப் பட்டாள் மீனா.
ஏனோ எளிமையான அலங்காரத்திலும் அவள் தேவதை போல தான் தெரிந்தாள். அவளுக்கோ யாரையுமே நிமிர்ந்து பார்க்க முடிய வில்லை. நிமிர்ந்தால் அவள் கண்கள் கலங்கி இருப்பது அனைவருக்கும் தெரிந்து விடுமே?
ஏனென்றால் சற்று நேரம் முன்பு திருமணத்திற்கு வந்திருந்த தாமரையின் சித்தி அவனது இன்னொரு சித்தியிடம் பேசுவது கேட்டது.
“எப்படிக்கா கல்யாணம் முடிஞ்சு ஒரு குழந்தை இருக்குற பொண்ணை தள்ளிக்கிட்டு வந்தான் இவன்? நம்ம சொந்தத்துல எவளையும் திரும்பிப் பாக்க மாட்டானே?”
“பொண்ணு அழகா இருக்கா. பஸ்ல பல்லை காட்டி வந்து போய்ட்டு இருந்துருப்பா. பய மயங்கிட்டான். பிள்ளை இருக்குறதே அப்புறம் தான் தெரியுமோ என்னவோ? என்ன பண்ணுறது? முன்னாடி காலத்துல கணவனை பிரிஞ்சா பிள்ளைக்காக தனியாவே வாழுவாங்க. இப்ப அப்படியா? இவன் கூடயாவது ஒழுங்கா வாழ்ந்தா சரி”, என்றாள்.
இந்த பேச்சு காதில் விழுந்து ஒரு மாதிரி கஷ்டமாக இருந்தது மீனாவுக்கு. அவளுக்கு தெரியும் தான். அவளைப் பற்றி இப்படி தான் பேசுவார்கள் என்று. ஆனாலும் நேரடியாக காதில் அந்த பேச்சு விழும் போது தன்னாலே ஒரு வலி எழ தான் செய்தது.
மீனாவை தாமரையின் அருகே அமர வைக்கும் போது முயன்று முகத்தை சரியாக வைத்துக் கொண்டாள். அப்படியும் அவள் கண்களில் இருந்த சிவப்பை அவன் கண்டு கொண்டான்.
அதற்கு ஏன் அழுத? என்ன ஆச்சு? யார் என்ன சொன்னா? என்று எந்த கேள்வியுமே அவன் கேட்க வில்லை. “அழகி இங்க பாரு டி”, என்றான்.
அவள் அவனை நிமிர்ந்து பார்க்க “நைட் உன் உதட்டுல கடிச்சு வச்சா கோபப் படுவியா என்ன?”, என்று கேட்டான்.
சத்தியமாக அந்த நேரம் அவள் அந்த கேள்வியை எதிர் பார்க்கவே இல்லை. அவள் நே என்று பார்க்க “நீ அழுதா கண்டிப்பா நான் கடிச்சு தான் வைப்பேன். அப்புறம் உனக்கு தான் கஷ்டம்”, என்று சொல்ல அவள் முகம் கவலை எல்லாம் மறைந்து சிவப்பு நிறம் பூசிக் கொண்டது.
வெட்கத்துடன் அவனைப் பார்த்து சிரித்தவள் தலை குனிந்து கொண்டாள். அவனுக்கு அதுவே போதுமானதாக இருந்தது.
என்ன நடந்திருக்கும் என்று அவனுக்கு தெரியும். அவன் காது படவே குழந்தையுடன் இருக்கும் பெண்ணை திருமணம் செய்கிறான் என்று பேசினார்கள் தான். ஆனால் அவனைக் கண்டதும் “அழகான பொண்ணைப் பாத்ததும் மயங்கிட்ட போல?”, என்றும் கேலி பேசிக் கொண்டார்கள்.
இதையெல்லாம் அவர்கள் கடந்து தான் வர வேண்டும். தேங்கி நின்றால் மன பாரம் தான் மிஞ்சும். சில நாட்கள் அவர்கள் பேசிக் கொண்டு தான் இருப்பார்கள். காலம் செல்ல செல்ல எல்லாருடைய மனதில் இருந்தும் தேவையில்லாத விஷயங்கள் மறைந்து தான் போகும் அதை நினைவு படுத்தாத வரை.
நல்ல நேரம் வந்ததும் வேலாயுதமும் வசந்தாவும் தாலி எடுத்துக் கொடுக்க அவளுடைய சங்கு கழுத்தில் தாலி கட்டினான் தாமரை.
மாங்கல்யம் அணிவிக்கும் போது இருவருக்குமே மனதில் ஒரு நிம்மதி வந்திருந்தது. மீனாவுக்கு போன திருமணம் கூட பிறந்த வீட்டில் இருந்து தப்பிக்க போகிறோம் என்ற ஆசையை மட்டும் தான் கொடுத்தது. இப்போதோ அவளுக்கே அவளுக்கு என்று நடக்கும் திருமணமாக தான் இது இருந்தது.
அவள் நெற்றியில் அவள் கண்களைப் பார்த்து குங்குமம் வைக்க அவள் கண்கள் காதலாக அவனைத் தழுவியது. காலில் இரண்டு விரலிலும் மெட்டி அணிவித்தான்.
திருமண சடங்குகள் முடிந்ததும் அனைவரும் வீட்டுக்கு வந்து விட்டார்கள். அங்கேயே உணவு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அனைத்தையும் தாமரை ஆர்டர் கொடுத்திருந்தான்.
மணமக்களுக்கு வதனா ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றாள். சாமி அறையில் விளக்கேற்ற வைத்தார்கள். குழந்தையின் பொறுப்பை கலை பார்த்துக் கொண்டாள்.
பின் மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுக்கப் பட்டு உணவு உண்டார்கள். உணவு உண்டு முடிந்ததும் சொந்தங்கள் கிளம்பிச் செல்ல ராஜன் மற்றும் கதிர் குடும்பம் கிளம்பிச் சென்றது.
இறுதியில் வீட்டினர் மட்டும் இருக்க “சம்பந்தி.. மறுவீடு…”, என்று ஆரம்பித்தாள் வடிவு.