சர்வாச்சார்யா யாரிடமோ பேசி கொண்டிருக்க, ஆகாஷ் போன் அழைப்பில் இருந்தவன், “சுஹா கல்யாணம் முடியவும் மாமா லண்டன்க்கே ஷிப்ட் ஆக ஏற்பாடு பண்ணிட்டு இருக்கார் இல்லை, நாமளும் அவரோட போலாமா?” என்று கேட்டான்.

சம்யுக்தா அதிர்ந்து தான் போனாள். லண்டனுக்கே போக போறாரா? உண்மையாவா?

ஒருவேளை ஆகாஷ் சும்மா சொன்னா? சந்தேகமாக அவனை பார்த்தாள் பெண்.

“ஏற்கனவே இருந்த வீட்டை வேணாம்ன்னு சொல்லிட்டு, அவர் பேருக்கே வீடு ஒன்னு வாங்கி ரெஜிஸ்டர் கூட பண்ணிட்டார். ஹெட் ஆபிஸ் அங்க ஷிப்ட் ஆக போகுது. இது கூட தெரியாம என்ன, க்கும், என்ன இதுவோ” என்றான் ஆகாஷ்.

சம்யுக்தா விழிகள் அவசரமாக சர்வாச்சார்யாவை தேடியது.

இங்கதானே இருந்தார்!

“மேம்” என்று ராகவ் உடனே அவளிடம் வர,

“ராகவ். லண்டனுக்கு போக ஏற்பாடு எல்லாம் பண்ணிட்டிங்களா?” என்று கேட்டான் ஆகாஷ்.

“முடிய போகுது சார்” என்ற ராகவ்,

“மேம். எதாவது வேணுமா?” என்று சம்யுக்தாவிடம் கேட்டான்.

“அவங்களுக்கு ஆறு அடி பொம்மை தான் வேணுமாம் ராகவ். தேடி கொடுங்க” என்றான் ஆகாஷ் கிண்டலாக.

“சார்” என்று நொடி விழித்த ராகவ், பின் புரிந்து கொண்டு,

“மேம். சார் அங்க இருக்கார்” என்று விரல் நீட்டினான்.

சுற்றிலும் ஆட்கள் இருந்ததில் சர்வாச்சார்யாவை சட்டென கண்டு பிடிக்க முடியவில்லை.

“சார்கிட்ட ஏதும் சொல்லணுமா மேம்” என்று ராகவ் கேட்க,

“க்கும். இல்லை. சும்மா தான்” என்றாள் சம்யுக்தா.

சில நிமிடங்களுக்கு பின்பே இவர்கள் இருப்பிடத்திற்கு வந்தான் சர்வாச்சார்யா.

ராகவிடம் ஏதோ சொன்னபடி, அணிந்திருந்த கோட்டை கழட்டினான் நாயகன்.

ராகவ் இயல்பு போல் கோட்டை வாங்கிக்கொள்ள, சர்வாச்சார்யா முழுக்கை சட்டையை மடித்து விட்டு, காலர் பட்டனை கழட்டினான்.

நாயகன் கழுத்தில் பளிச்சென தெரிந்த வைரச்செயின், பெண்ணின் முகத்தில் ஒளிபாய்ச்சி சென்றது.

முகத்தை திருப்பி கொண்ட சம்யுக்தாவின் கண்கள் கட்டுப்படுத்த முடியா காந்தத்தின் திசையிலே இழுப்பட்டது அவளின் மனதை போல!

“க்கும்” என்றான் ஆகாஷ். மாமாவை பார்வையாலே முடிச்சிடுவாங்க போல. என்ன இப்படி பார்க்கிறாங்க!

“என்னடா?” என்று அவனிடம் கேட்டபடி இருக்கையை சம்யுக்தாவிற்கு அருகில் இழுத்து போட்டு அமர்ந்தான் சர்வாச்சார்யா.

“மீட்டிங் ஆரம்பிச்சாச்சு” ஆகாஷ் சொல்ல,

“ஏன் நீ திரும்ப ப்ரேசெண்டேஷன் கொடுக்க போறியா என்ன?” என்று கேட்டான் நாயகன்.

“நோ மாம்ஸ் நோ” என்றான் ஆகாஷ்.

சர்வாச்சார்யா மெலிதாக புன்னகைக்க, கலந்தாய்வு கூட்டமும் ஆரம்பமானது.

இடையில் குருமூர்த்திக்கு செய்தி அனுப்பினாள் சம்யுக்தா.

இறுதி கட்டத்தை நெருங்கும் நேரம், சர்வாச்சார்யாவை மேடைக்கு அழைத்தார்கள்.

அவன் அப்படியே மேடைக்கு ஏறிவிட்டான். கோட், கலர் பட்டன்கள் ஒன்றையும் கண்டுகொள்ளவில்லை.

சம்யுக்தா மேடையில் இருப்பவனை மிகவும் சுதந்திரமாக பார்த்திருந்தாள்.

ஏதேதோ பேசினான். இடையில் புன்னகைத்தான். சிலரிடம் மரியாதையாக பேசினான், சிலரிடம் சீண்டலாக பேசினான். சிலரை வம்பிழுத்தான். அந்த அழகியை கேலி செய்து அவளை முறைக்கவும் வைத்தான்.

மேடையில் அங்கும், இங்கும் நடந்தவனின் தலை முடி முதல் ஷூ வரை பளபளப்பில் மின்ன, அவன் கண்களும் சிரித்து அவன் அழகுக்கு கூடுதல் அழகை சேர்த்தன.

சர்வாச்சார்யா உரையை முடிக்க, “இன்னும் கொஞ்ச நேரம் பேசினா என்ன?” என்று சம்யுக்தா மனது ஏக்கம் கொண்டது.

அவன் என்ன பேசினான் என்று கூட தெரியாது. ஆனால் நன்றாக பேசினான், சூப்பரான ஸ்பீச் என்று புகழாரம் சூட்டியது பெண்ணின் காதல்.

“மாமா. என்ன பிளான்?” என்று ஆகாஷ் கேட்க,

“நீ வீட்டுக்கு போ ஆகாஷ்” என்றான் சர்வாச்சார்யா.

“ஓகே, பை மாமா” என்றவன் தடுமாறி சம்யுக்தா பக்கம் திரும்பி, அவளுக்கு தலையசைத்தான்.

“பை” என்றாள் சம்யுக்தா வார்த்தையாக.

ஆகாஷ் பெருமூச்சுடன் கிளம்பிவிட, சம்யுக்தாவை நகர விடாமல் பிடித்து வைத்தான் ராகவ்.

சர்வாச்சார்யா எல்லோரிடமும் விடைபெற்று கொண்டிருக்க, “என்ன சர்வா சார். மெயின் விஷயத்தையே எங்களுக்கு சொல்ல மாட்டிக்கிறீங்க?” என்று ஒருவர் தாங்கலாக கேட்டார்.

“நான் சொல்லாமலே உங்களுக்கு தெரிஞ்சிருக்க விஷயம் என்னன்னு எனக்கு தெரியலையே சார்” என்று சர்வாச்சார்யா சொல்ல,

“லண்டனுக்கே ஹெட் ஆபிஸ் ஷிப்ட் ஆக போகுது. இப்போ வரை நீங்க சொல்லலை” என்றார் அவர்.

“சார். முறையான தகவல் வரும். பார்ட்டி கட்டாயம் உண்டு. அப்போ பேசலாம். பை” என்று சர்வாச்சார்யா விடைபெற்று கொண்டான்.

சம்யுக்தாவுடன் இணைந்து நடந்தவன், அவனின் காருக்கு செல்ல, “என் கார்” என்று சம்யுக்தா சொல்ல வர,

“ராகவ்” என்றான் நல்லவன்.

“மேம். உங்க கார் வீட்டுக்கு வந்திடும்” என்றவன், கார் கதவிடம் தேங்கி நின்றான்.

சர்வாச்சார்யா அவளுக்கு திறந்து விடுவானா? ஏற்கனவே ஒரு முறை வார்னிங் வாங்கியாகிவிட்டது.

நாயகன் அவளுக்காக கார் கதவை திறந்துவிட்டு, அவள் அமர்ந்த பின்னே அவனின்  இருக்கைக்கு செல்ல, ராகவ் வேகமாக அவனுக்கான கதவை திறந்துவிட்டான்.

கார் மிதக்க ஆரம்பித்தது.

இரவு ஆகிவிட்டிருக்க, டின்னர் வீட்ல சாப்பிடுவாரா? செய்ய சொல்லிடலாம் என்று வீட்டின் மேற்பார்வையாளருக்கு செய்தி அனுப்பியவள், மெனுவையும் தேர்வு செய்து, கற்பகம் பாட்டியிடம் சொல்ல சொன்னாள்.

ராகவ்விடம் ஏதோ கேட்டு கொண்டிருந்த நாயகன், பின் வெளிப்புறத்தை பார்க்க ஆரம்பித்துவிட்டான்.

காருக்குள் பெருத்த அமைதி.

என்கிட்ட சொல்லாமலே லண்டன் போக போறாரா என்ன?

சம்யுக்தா கேட்க தான் நினைக்கிறாள். ஆனால் என்ன உரிமையில் கேட்கிறாய் என்று அவன் கேட்டால் என்ன பதிலை சொல்வது?

நினைத்தது, நினைத்தபடி, நினைத்த நேரம் நாயகனிடம் பேசிய பெண் இன்று தடுமாறுகிறாள்!

தடுப்பில் மேல் இருக்கும் அவன் கரத்துடன், தன் கரத்தை கோர்த்து கொள்ள, சம்யுக்தாவிற்கு பரபரத்தது.

அவளை உரசி கொண்டிருக்கும், நாயகனின் கோட்டை எடுத்து மார்போடு அணைத்து கொள்ள பெண்ணின் மனது துடிக்கிறது.

ஆனால் செய்ய தான் இயலவில்லை. நல்லவனின் விலகல், இவளை நெருங்க விடாமல் தடுக்கிறது.

நான் விலகி போனப்போ அவர் என் கையை பிடிச்சுட்டு நடந்தாரே! என்னால ஏன் செய்ய முடியலை.

இதே கார்ல தானே என்னை இழுத்து அவர் மடியிலே வைச்சுகிட்டார். என்னால அவர் கையை கூட பிடிக்க முடியலையே!

அருகிலே இருக்கிறான் ஆனால் சொந்தம் கொண்டாட முடியாமல் சம்யுக்தா கண்கள் கலங்கி போனது.

இவர் கண்டிப்பா கடல் தான். என்னால இவரை கையில அள்ளிக்க முடியலை!

வீடு நெருங்கவும், “ராகவ்” என்றான் சர்வாச்சார்யா.

கார் வாசலிலே நின்றுவிட்டது.

வீட்டுக்குள்ள வர மாட்டாரா? அந்தளவா விலகல்! சம்யுக்தா நெஞ்சம் விம்மியே விட்டது.

பெண் காரை விட்டு இறங்காமல் போக, ஓட்டுனரும், ராகவும் இறங்கிவிட்டார்கள்.

சம்யுக்தா விரல்கள் லேசான நடுக்கத்துடன், சர்வாச்சார்யாவின் விரல்களை தீண்டியது.

எங்கே என்னை விட்டு சென்று விடுவானோ? திரும்ப எனக்கு கிடைக்க மாட்டானோ என்ற பயம், சம்யுக்தாவை பெரிதும் ஆட்டி படைத்தது.

பெண்ணின் விரல்கள் சர்வாச்சார்யா விரல்களை தீண்டவும், நாயகனிடம் ஒரு அதிர்வு!

“உன் கைவிரல்

என் கைவிரல் கேட்கின்றதே!”

சம்யுக்தா அவன் ஐந்து விரல்களுடன் தன் ஐந்து விரல்களை உள்ளங்கை இறுக்க, கோர்த்து கொண்டாள்.

போதவில்லை. பெண்ணுக்கு போதவில்லை. கோர்த்த கைகளை எடுத்து தன் நெஞ்சோடு அணைத்து கொண்டாள் சம்யுக்தா.

“உன் சுவாசங்கள்

எனை தீண்டினால்

என் நாணங்கள் ஏன் தோற்குதோ?”

சம்யுக்தா அந்த நொடி முழுவதுமாக அவள் வசமிழக்க ஆரம்பித்தாள்.

அடக்கி வைத்த இத்தனை வருட ஏக்கங்கள் என்று வெடித்து கொண்டு வந்துவிடுமோ என்று அஞ்சிவிட்ட பெண்ணவள், தாங்க முடியாமல் சர்வாச்சார்யா தோளில், தன் தலையை சாய்ந்து கொண்டாள்.

சர்வாச்சார்யா மார்பு வேக, வேகமாக ஏறி இறங்க ஆரம்பித்தது.

நாயகனின் கழுத்தை உரசிய பெண்ணின் முடியும், அவளின் வாசமும் சர்வாச்சார்யாவை வெகுவாக சோதித்தது.

“உன் வாசனை வரும் வேளையில்

என் யோசனை ஏன் மாறுதோ?”

ஏன் என்னை அவர் மடிக்கு இழுக்கலை? சம்யுக்தா அவனின் கழுத்தை கட்டி கொண்டு அவன் மடியில் அமர ஏக்கம் கொண்டாள்.

“என் பெண்மையும் இளைப்பாறவே

உன் மார்பிலே இடம் போதுமே!”

சம்யுக்தா கேட்காமலே கிடைத்த அவனின் நெருக்கம், இப்போது வேண்டி கேட்டாலும் கிடைக்காதோ?

பெண்ணின் விழியோரம் கண்ணீர் கசிந்தேவிட்டது.

சம்யுக்தா கோவம் கொண்டு, அவன் நெஞ்சில் குத்த ஆரம்பித்தாள்.

தடுக்கவில்லையே சர்வாச்சார்யா.

சம்யுக்தா தானே நிறுத்தி கொண்டவள், அவனை ஏமாற்றத்துடனும், ஏக்கத்துடன் பார்த்தாள்.

வார்த்தைகள் தொண்டை குழியிலே அடைத்து நிற்க, சம்யுக்தா நெஞ்சம் பலமாக ஏற்றம் இறக்கம் கண்டது.

முதலில் என்னவென அவனிடம் சண்டையிட?

நீ வேண்டாம் என்று மறுத்தது இவர்கள்தானே?

சம்யுக்தா விசும்பிவிட, சர்வாச்சார்யா கரம் உயர்ந்து பெண்ணின் உச்சி தலையை வருடியது.

மென்மையான அவன் வருடல், அவளுக்கு சுகத்தை கொடுக்காமல் வலியை தான் கொடுத்தது.

சுமக்க முடியா அவன் விரல்களை தட்டி விட்டு, காரை விட்டு இறங்கினாள் பெண்.

சம்யுக்தாவின் முந்தானை மெல்ல, மெல்ல சர்வாச்சார்யாவின் கரத்தில் இருந்து நழுவியது.