அத்தியாயம் 14 :

எல்லாம் முடிந்தது என்று அவன் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள், பாத்ரூம் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள் வெண்மொழி. சட்டென்று வருவாள் என்று எதிர்பார்க்காதவன்,அவளின் தள்ளாட்டத்தை அவர்கள் கண்டு கொள்ளும் முன்,வேகமாய் அவளை இழுத்து தன் முதுகிற்கு பின்னால் மறைத்துக் கொண்டான். அவளோ நெளிந்தபடி அவனிடமிருந்து தன்னை விடுவிக்கப் பார்க்க, தீரனின் பிடியோ சற்றும் தளாராமல் அவளை மேலும் தன்னோடு இறுக்கமாய் இறுக்கிக் கொண்டது.

“சார் சொன்ன பர்சனல் வேலை இதுதானோ?” என்று ஒருவன் நக்கலாய் கேட்க,

“எஸ் அப்கோர்ஸ்” என்றான் தீரன் சாதாரணமாய். அவனின் சட்டையை அணிந்திருந்தவளையும், உள் பனியனுடன் இருந்த அவனையும் அனுமதியின்றி சில கேமராக்கள் படம் பிடிக்க, வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு நின்றான் தீரன்.

“ஹேய் இது அந்த வீடியோல வந்த அமைச்சர் பொண்ணு தான?” என்றான் ஒருவன்.

“சார் அப்போ அந்த குஜால் வீடியோல இருந்த அந்த ஆளு நீங்க தானா?” என்றான் வேண்டுமென்றே.

மனதிற்குள் முடிவு எடுத்தவனாய்,

“ஆமா..! அது நான்தான். இன்பேக்ட் நான்தான் அந்த வீடியோவை சோசியல் மீடியால ஷேர் பண்ணேன். ரீல்ஸ்தான் போஸ்ட் பண்ணேன். ஏன் யாரும் இது மாதிரி வீடியோஸ் போடுறது இல்லையா? இதுல என்ன தப்பு? இது எங்களோட பர்சனல். இதுல தலையிட யாருக்கும் எந்த ரைட்சும் இல்லை. அண்டர்ஸ்டேண்ட்” என்றான் தெனாவெட்டாய்.

“இதே மாதிரி சாதாரன ஒரு ஆள் பதில் சொன்னா நீங்க அக்சப்ட் பண்ணிப்பிங்ளா சார்? டிப்பார்ட்மென்ட்ல இருக்கிங்கன்னு தான திமிரா பதில் சொல்றிங்க?”  என்றான் மீண்டும்.

“லுக் மிஸ்டர்..! யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. பரஸ்பர ஒப்புதலோட ஒண்ணா இருக்குற ஒரு ஆணையோ பெண்ணையோ நீங்க கேள்வி கேட்க முடியாது. தெரியாதா உங்களுக்கு? ” என்றவன்,

“நீங்க வந்த வேலை முடிஞ்சதுன்னா பிளீஸ்” என்றான் அந்த இன்ஸ்பெக்டரைப் பார்த்து.

“சாரி சார்” என்றவர் அங்கிருந்து அடுத்த அறைகளை நோக்கி செல்ல, ஒருவன் மட்டும் அங்கிருந்து விலகி கீழே சென்றான். வேகமாய் குமரனுக்கு போன் அடித்தவன்,

“குமரன் வந்துட்டிங்களா?”

“வந்துட்டேன் சார்”

“இப்போ கீழ ஒரு வயலட் கலர் ஷேர் போட்ட ஒருத்தன் வருவான். எக்காரணம் கொண்டும் அவன் தப்பிச்சிடக் கூடாது” என்றான் கண்களில் தீவிரத்துடன்.

“ஓகே சார்” என்ற குமரன்,

“சார் விவேக் இருக்குற ரூம்க்கு ரைட் போனா என்ன பண்றது? நான் வந்து அவங்களோட ஜாயின்ட் பண்ணிக்கவா” என்றான் குமரன்.

“சான்ஸ் கம்மி தான் குமரன். அவங்க டார்கெட் ரூம் நம்பர் டூ பிப்டி மட்டும் தான். மத்த ரூம்ஸ் எல்லாத்தையும் வெறும் கண்துடைப்புக்கு பார்த்துட்டு போகத் தான் சான்ஸ் இருக்கு” என்றான். தீரன் சொன்னதைப் போல் தான் நடந்தது.

அதே சமயம் பிரைவேட் நம்பரில் இருந்து தீரனுக்கு அழைப்பு வந்தது. புருவம் நெறிபட அழைப்பை எடுத்தான் தீரன்.

“இது சரியில்லை ஏசிபி. இந்த வேண்டாத வேலையெல்லாம் உனக்கு வேண்டாம்” என்று எடுத்த எடுப்பில் வந்த மிரட்டலில் சற்று சுதாரித்தான் தீரன்.

அவன் அமைதியாக இருக்க,

“என்ன மினிஸ்டர் பொண்ணை காப்பாத்திட்டோம்ன்ற திமிரா? நான் நினைச்சிருந்தா அந்த ரூம் புல்லா கேமரா செட் பண்ணி, லைவ் டெலிகாஸ்ட் பண்ண எவ்வளவு நேரம் ஆகியிருக்கும். இது சும்மா சாம்பிள் தான். இப்படி தொடர்ந்து என் வழியில குறுக்க வந்தா அடுத்து அதையும் பண்ணத் தயங்க மாட்டேன்.  இந்த கேஸ்ல இருந்து உடனே நீ ரிலீவ் ஆகணும், ஆகுற” என்ற மிரட்டலுடன் அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

“என்னாச்சு அதி?” என்றபடி வந்த விவேக்கை யோசனையுடன் பார்த்தவன்,

“மிரட்டல் கால்” என்றான் தீரன்.

“ரூம்ல இருக்குற அந்த பையனை என்ன பண்றது அதி?” என்று விவேக் கேட்க, சுயத்திற்கு திரும்பியிருந்தான். அதே சமயம் குமரனும் அங்கு வர,

“சொன்ன விஷயம் என்னாச்சு குமரன்?” என்றான் தீரன்.

“டன் சார்..! ஆளை மடக்கியாச்சு. இப்போ அவன் இதே ஹோட்டல்ல நம்ம கஸ்ட்டடில தான் இருக்கான். ஆனா அவனை விசாரிச்சதுல அவன் பணத்துக்காக வந்தவன் தான் சார். நீங்க சந்தேகப்பட்ட மாதிரி அவனுக்கு பணத்தையும் குடுத்து, குறிப்பிட்டு இந்த ரூம் நம்பரையும் சொல்லி தான் அனுப்பியிருக்காங்க. அவங்க செய்யச் சொன்னதை இவன் செஞ்சிருக்கான் சார். இவன் வெறும் அம்பு தான்” என்றான் குமரன்.

“அங்க விமலுக்கு செக்யூரிட்டி கார்ட் போட்டுட்டிங்க தானே?” என்றான்.

“எல்லாமே பக்கா சார். விமலுக்கு எதுவும் ஆகாது” என்றான் குமரன்.

“தட்ஸ் குட்”  என்ற தீரன்,

“விவேக் இந்த பையனைத் தூக்கி கார்ல போட்டுட்டு சென்னைக்கு நம்ம இடத்துக்கு கொண்டு போய்டு.. அவன்கிட்டயும் விசாரிக்க வேண்டியது இருக்கு. தென், நான் கேட்ட சிசிடிவி புட்டேஜ்” என்றான் கேள்வியாய்.

“ஹோட்டலோட எல்லா சைட் புட்டேஜும் செக் பண்ணிட்டேன் அதி. பட் சந்தேகப்படுற மாதிரி யாரும் இல்லை. இந்த பையன் இன்னைக்கு மார்னிங்  தான் இந்த ரூமை செக்கின் பண்ணியிருக்கான். ராஜ ராஜன் சார் ரெகுலரா தங்குறதால ஹோட்டல் சைட் பெருசா கண்டுக்கலை போல. ஆனா இந்த பையன் யாருன்னு தான் கண்டுபிடிக்கணும்” என்றான் விவேக்.

“அதுக்கு அவசியமில்லை விவேக்! இவனும் மொழியோட காலேஜ் தான். ஒரு தடவை இவங்க எல்லாரையும் ஒண்ணா ஒரு ஹோட்டல்ல சாப்பிடும் போது நான் பார்த்திருக்கேன். கண்டிப்பா பெரிய இடத்துப் பையனா தான் இருக்கணும். அவனைப் பத்தின புல் டீட்டெயில் கலெக்ட் பண்ணுங்க” என்றான் தீரன். ஆம் அன்று ஹோட்டலில் அந்த பெரியவரை மரியாதையில்லாமல் பேசியவன் தான் அவன்.

“குமரன் நீங்க அந்த ரிப்போர்ட்டரை ஸ்டேஷன் கொண்டு போய்டுங்க. இனி இங்க நான் பார்த்துக்கிறேன். விவேக் கூட ரெண்டு போலீசை சேப்ட்டிக்கு அனுப்பி விடுங்க குமரன். நான் நாளைக்கு தான் கிளம்ப முடியும்” என்றவன்,

“உங்க உதவியை மறக்க மாட்டோம் குமரன்” என்றான்.

“என்ன சார் நீங்க? இது என்னோட கடமை சார். வெண்மொழி அவங்க எப்படி இருக்காங்க சார்? இஷ்யூஸ் எதுவும் இல்லையே? எப்படியும் மீடியால நீயூஸ் இந்நேரம் ஸ்ப்ரட் ஆகியிருக்கும். இதை எப்படி தாங்கிக்கப் போறாங்கன்னு தான் தெரியலை” என்றான் குமரன் கவலையாக.

“அந்த தாட் எனக்கும் இருக்கு குமரன். லெட்ஸ் சீ..என்ன நடக்குதுன்னு பார்ப்போம்”

“அதி உன்னை விட்டுட்டு நான் மட்டும் எப்படி?” என்று விவேக் தயங்க,

“நடந்த விஷயம் தெரிஞ்சா வெண்மொழி எப்படி பிகேவ் பண்ணுவாங்கன்னு தெரியாது விவேக். ஏன்? நம்மளை எப்படி பேஸ் பண்றதுன்னு கூட நினைக்கலாம். அப்படி ஒரு தர்மசங்கடத்தை நாம குடுக்க வேண்டாம். அதுக்காகத் தான் சொல்றேன் விவேக். இங்க நான் மேனேஜ் பண்ணிப்பேன். நான் சொன்னதை மட்டும் மறக்காத. இப்போதைக்கு இந்த விஷயத்தை ரெண்டு நாள் ஆறப் போடுவோம்” என்றான் தீரன். விவேக்கால் அதற்குமேல் மறுக்க முடியவில்லை.

ஆறப் போடுவோம் என்று தீரன் நினைக்க, அரைகுறையாய் கசிந்த செய்திகள், வீடியோக்கள் என்று அன்று முழுவதும் பேசுபொருள் வெண்மொழி தான். இப்போது அதி தீரன் பேரும் சேர்ந்து கொள்ள, அந்த ஒரு நிமிட வீடியோவில் இருந்தது தீரன் தான் என்று நம்பத் தொடங்கியிருந்தனர்.

தீரனுக்கு தலையெல்லாம் பாரமாய் இருக்க, தலைவலியில் தலை வின்னு வின்னென்று தெறித்துக் கொண்டிருந்தது. அறைக்குள் மொழியோ அவளின் நிலையிலேயே இல்லை. உணர்வுகளின் பிடியில் இருந்தவளுக்கு சுய நினைவும் இல்லை. தன் போக்கில் பேசிக் கொண்டும் உளறிக் கொண்டும் மெத்தையில் கிடந்தவளைப் பார்த்தவனுக்குள் அப்படி ஒரு ஆதங்கம்.

“எனக்கு எல்லாமே நாலு..நாலா தெரியுது. எங்க போன நீ” என்று அவனை அவள் இழுக்க, அசையாமல் அப்படியே நின்றான் தீரன். நடக்க இருந்த விஷயத்தை எண்ணிப் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் ஒரு நடுக்கம் ஓடி மறைந்தது. எவ்வளவு தான் வெளியே திடமாகக் காட்டிக் கொண்டாலும், அவனும் உள்ளுக்குள் பதறித்தான் போயிருந்தான். இதெல்லாம் தன்னுடைய அஜாக்கிரதையால் தான் என்று பழியைத் தன் மீதே போட்டுக் கொண்டவனுக்கு, எவ்வளவு முயன்றும் மனதை சமன் படுத்த முடியவில்லை.

அவளின் நிலைமையை எப்படி கையாள்வது என்று புரியாமல் அகனை அழைத்திருந்தான் தீரன்.

“சொல்லுங்க தீரன்”

“டாக்டர் MDMA ட்ரக்ஸ் எடுத்தவங்களை எப்படி கண்ட்ரோல் பண்றது?” என்றான்.

“யாருக்குன்னு சொன்னாதான் சொல்ல முடியும் தீரன். ஆணா,பெண்ணா?” என்றான் அகன்.

“மொழி தான் டாக்டர்” என்றவனுக்கு எவ்வளவு முயன்றும் குரல் கமறியது.

“மை காட்! என்ன சொல்றிங்க தீரன்?” என்ற அகனுக்கு  அவனின் நிலை புரிந்தது. குமரன் மூலமாக மொழி கடத்தப்பட்டதை அறிந்திருந்தானே.

“தீரன் லிசன்..! பர்ஸ்ட் நீங்க பண்ண வேண்டியது டீ எஸ்கலேஷன் தான். ரூம்ல இருக்குற லைட்ஸ் எல்லாத்தையும் ஆப் பண்ணிடுங்க. லைட்டான வெளிச்சம் இருந்தா போதும். எந்த சத்தமும் இருக்கக் கூடாது. லைக் டிவி, மொபைல் இப்படி. ரொம்ப சத்தமா பேசாதிங்க. அவங்ககிட்ட பேசும் போது நிதானமா பேசுங்க. அன்பா பேசுங்க. நீங்க இருக்கிங்கன்னு ஒரு சப்போர்ட் குடுங்க. அவங்க ஏதாவது பேசினா மறுத்துப் பேசாதிங்க. அப்போதான் அவங்க வயலன்ஸ்டா பிகேவ் பண்ண மாட்டாங்க.

MDMA பாடி ஹீட்டை இன்க்ரீஸ் பண்ணிட்டே இருக்கும். மாக்சிமம் பாடியை கூலிங்கா வச்சிருக்கணும். குடிக்கிறதுக்கு அப்பப்போ வாட்டர் குடுங்க.அதையும் மீறி ஏதாவது இஷ்யூஸ்னா யோசிக்காம ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வந்துடுங்க தீரன்” என்றான் அகன்.

“ஓகே டாக்டர்! தேங்க் யு” என்றான் தீரன்.

தீரனின் குரலில் இருந்து அகன் என்ன உணர்ந்தானோ,” மிஸ்டர் தீரன்! எல்லா இடத்துலையும் விட்டுக் குடுத்து போகணும்னு இல்லை. நமக்குத் தேவையான சில விஷயங்களை நாம அடம் பிடிச்சும் தக்க வச்சுக்கலாம். இதை நான் சொல்லலை. யுகா தான் உங்ககிட்ட சொல்ல சொன்னா” என்றான் அகன்.

“டாக்டர்” என்றவனுக்கு வார்த்தைகள் இல்லை.

“எஸ்! யோசிங்க தீரன். உங்களுக்கு நான் சொல்ல வேண்டியது இல்லை” என்ற அகன் அழைப்பைத் துண்டித்திருந்தான்.