“என்னால உங்களுக்கு ஏதாவது ஆபத்து வருதுன்னா இந்த கல்யாணமே வேண்டாம்”, என்றாள்.

            “லூசு, நான் நிறுத்துறேன்னு சொன்னது உன்னை நினைசூ தான். நான் உன்னைப் பாக்குறதுக்கும் உன் கிட்ட பேசுறதுக்கும் முன்னாடி வரை நீ சந்தோஷமா இருந்த. எப்ப உன்னைத் திட்டுனேனோ அப்ப இருந்து நீ அழுதுட்டு தான் இருக்க? அதான் கல்யாணத்தை நிப்பாட்டிருவேன்னு சும்மா சொன்னேன். நீ அதுக்கும் அழத் தான் செய்ற”

            “ஆமா நான் உங்களைப் பாக்குறதுக்கு முன்னாடி சிரிச்சிக்கிட்டு இருந்தேன்? நீங்க வேற. அப்ப எல்லாம் சிரிக்கிற மாதிரி பொய்யா நடிச்சிட்டு இருந்தேன். இப்ப உண்மையான சந்தோஷத்துல இருக்கேன் தெரியுமா? அதுவும் உங்களால தான். அதனால தான் உங்களுக்கு அடி பட்டதும் என்னால தாங்க முடியலை”

            “ஏய் தெரியும் டி. ஆனா அழ மட்டும் செய்யாத.  கஷ்டமா இருக்கு. முதல் டைம் உன் கண்ணீர் தான் என்னை ரொம்ப பாதிச்சது. அதனால தான் நீ என் மனசுக்குள்ள வந்த. எப்பவும் உன்னை சிரிக்க வச்சு பாக்கணும்னு மட்டும் தான் என் மனசு நினைக்குது. இனி அழக் கூடாது சரியா?”

            “சரி”, என்று சொல்லி அவள் அவன் கையைப் பற்றிக் கொள்ள அவனும் அவள் கரங்களைப் பற்றிக் கொண்டு சாதாரணமாக உரையாடிக் கொண்டிருந்தான். அவன் பேச்சில் அவள் முகத்தில் புன்னகை மலர்ந்திருந்தது.

            அப்போது தான் உள்ளே வந்தார்கள் வடிவு மற்றும் வசுந்தரா இருவரும். அவர்கள் வரும் போது இருவரும் சிரித்துக் கொண்டிருக்கும் இந்த காட்சி தான் தெரிந்தது. அதைக் கண்டு வடிவு முகம் பதட்டத்தில் இருந்து இயல்பாக மாறியது என்றால் மீனாவின் சிரிப்பைக் கண்டு வசுந்தரா முகம் சுருங்கியது.

            “என்ன இங்கயே நின்னுட்டீங்க, வாங்க”, என்ற வேலாயுதத்தின் குரல் கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். குழந்தையை ஒரு கையிலும் உணவு பையை ஒரு கையிலும் பிடித்த படி இருந்தார்கள்.

            அவர்கள் வரவைக் கண்டதும் மீனா அவனிடம் இருந்து விலகி எழுந்து நின்று அன்னையையும் அக்காவையும்  பார்த்தாள்.

            தாமரை இயல்பாக இருந்தான். அவர்களை பெரிதாக எல்லாம் எடுத்துக் கொள்ள வில்லை. அவர்கள் மேல் இப்போதும் அவனுக்கு நல்ல அபிபிராயம் இல்லை என்றாலும் மீனாவுக்காக “வாங்க”, என்று சொன்னான்.

            “வண்டில போகும் போது பாத்து போக கூடாதா தம்பி?”, என்று கேட்டாள் வடிவு.

            “இல்லை எப்பவும் கவனமா தான் இருப்பேன். இது எப்படின்னு தெரியலை”

            “ஏன் தெரியாம? இதோ இருக்காள்ல? இவ வந்த அப்புறம் கெட்ட சகுணமும் கூட தானே வரும்?”, என்று தங்கையைப் பார்த்துச் சொன்னாள் வசுந்தரா.

            அவள் இப்படி பேசுவாள் என்று யாருமே எதிர் பார்க்க வில்லை. மற்ற நேரமாக இருந்திருந்தால் மீனா பதிலுக்கு பதில் பேசியிருப்பாள். இப்போது அவள் அவனுக்கு அடிபட்டதால் தளர்ந்து போய் இருக்க குறி பார்த்து அடித்து விட்டாள். மீனா கண்கள் கலங்கிப் போக அனைவரும் அதிர்ந்து வசுந்தராவைப் பார்த்தார்கள்.

“வசு, என்ன பேசிட்டு இருக்க? கொஞ்சமாவது அறிவு இருக்கா?”, என்று கேட்டாள் வடிவு.

            “அம்மா நான் ஒண்ணும் இல்லாததை சொல்லலை. எனக்கு என்னமோ ஜாதகம் பாத்து இவங்க கல்யாணம் பண்ணி வைங்க. இல்லைன்னா கஷ்டம் தான். ஏற்கனவே ஒரு வாழ்க்கை போச்சு. இப்ப இதும் போச்சுனா வரிசையா கல்யாணம் பண்ணிக்கிட்டே இருப்பாளா மா? கவனமா போற ஆளுக்கு திடீர்னு எதுக்கு இப்படி ஆகணும்? அதுவும் கல்யாணத்துக்கு முன்னாடி”, என்று கேட்க மீனா கண்களில் கண்ணீர் அருவியாக பொழிந்தது.

            அன்னை அழுவதைக் கண்ட குழந்தை வேலாயுதத்திடம்  மேலும் ஒண்ட குழந்தையை இறுக்கிப் பிடித்துக் கொண்டவர் “கொஞ்சம் சின்ன பொண்ணு மாதிரி பேசு மா? விபத்து எதிர் பாரமா நடக்குறது தான். இதுல ராசி எங்க இருந்து வந்தது? இப்ப நீ போற வழில லாரில அடி பட்டா கூட உன் தங்கச்சி ராசின்னு தான் சொல்லுவியா?”, என்று பட்டென்று கேட்க அதிர்ந்து அவரைப் பார்த்தாள் வசுந்தரா. ஏனோ லாரியில் அடி படுவதைப் போல ஒரு காட்சி தெரிய அவள் முகம் பேய் அறைந்தது போல ஆனது.

“இங்க பாரு நீ மீனாவுக்கு அக்கா அப்படிங்குறதுனால தான் அமைதியா இருக்கேன்? உன் தங்கச்சிக்கு முதல் கல்யாணம் ஜாதகம் பாத்து தானே பண்ணி வச்சீங்க? அது நல்லா தான் போச்சா? அதை கூட விடு. நீ எப்படி ஜாதகம் பாத்தா முறைப்படி கல்யாணம் பண்ணின? பாசமா உன்னை மட்டும் வளத்த உன் அப்பா அம்மாவை ஏமாத்திட்டு ஓடிப் போய் தானே கல்யாணம் பண்ணின? சும்மா அவளை குறை சொல்லணும்னு சொன்னா நான் மனுசனா இருக்க மாட்டேன்? உன்னை எல்லாம் எவன் என்னைப் பாக்க வரச் சொன்னா? தயவு செஞ்சு எங்க கல்யாணத்துக்கு எல்லாம் வந்துறாத? நீ வந்தா எங்க வாழ்க்கையே நல்லா இருக்காது”, என்று கோபத்துடன் சொன்னான் தாமரை.

            அப்படி பேசினாலும் சாதாரணமாக வாயை மூடிக் கொள்ள அவள் ஒன்றும் மீனா இல்லையே? அதனால் “என் வாயை வேணும்னா நீங்க மூடலாம். ஆனா ஊர் வாயை உங்களால மூட முடியாது. ஊரே இவளைப் பத்தி பேச தான் செய்யும்? இவளுக்கு நீங்க ரெண்டாவது புருஷன் தான். இதோ இந்த பிள்ளைக்கு நீங்க சித்தப்பா தான்”, என்று சொல்ல அனைவரும் மேலும் திகைத்து போனார்கள். வசுந்தரா இந்த அளவுக்கு விஷத்தை கக்குவாள் என்று எதிர் பார்க்க வில்லை.

            “சீ நீயெல்லாம் ஒரு பொண்ணு. கூட பிறந்தவன்னு கூட பாக்காம இப்படி பேசுற? உன் வாயைப் பத்தியே நாங்க கவலைப் பட மாட்டோம். ஊர் வாயைப் பாத்தா கவலைப் பட போறோம்? அப்புறம் ஒரு விஷயம் நல்லா கேட்டுக்கோ. உன் பிள்ளைகளுக்கு மீனா தான் பீஸ் கட்டுறாளாமே? இன்னும் அவ கிட்ட இருந்து ஒரு பைசா வராது. உன் பிள்ளைகளை நீ செலவு பண்ணி படிக்க வை. இல்லைன்னா கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல சேரு. அப்ப தான் அவ அருமை உனக்கு தெரியும். உனக்கு கொடுக்குறதுக்கு வீடு வாசல் இல்லாத நாலு பேருக்கு கொடுத்துட்டுப் போயிறலாம். இன்னும் ஒரு நிமிஷம் நீ இங்க இருந்தா உன்னை கொன்னுட்டு ஜெயிலுக்கு போக கூட தயங்க மாட்டேன்”, என்று சொன்ன தாமரை வடிவு புறம் திரும்பி “இப்ப இவ இங்க இருந்து போகலைனா இனி மீனா உங்க வீட்டுக்கு கூட வர மாட்டா. அவளையும் என் மகளையும் உங்க கண்ணுல கூட காட்ட மாட்டேன்”, என்றான்.

            “வசு வெளிய போ. இன்னும் ஒரு வார்த்தை பேசினா அறைஞ்சிறுவேன். இதுக்கு தான் கூட வாறேன்னு சொல்லி வந்தியா?”, என்று கேட்டாள் வடிவு.

            “நான் ஏன் போகணும்? அவளுக்காக நீ என்னை திட்டுவியா? இனி இந்த ராசி கெட்டவ நம்ம வீட்டுக்கு வரக் கூடாது. அப்படியே இவளை தலைமுழுகிட்டு வா போகலாம்”, என்று சொல்ல அடுத்த நொடி அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் வடிவு.

            “என்னையே அடிச்சிட்டல்ல? அதுவும் இவளுக்காக. இனி உன் மூஞ்சிலே முழிக்க மாட்டேன்”, என்று சொன்ன வசுந்தரா கோபத்துடன் அங்கிருந்து சென்று விட்டாள்.