சிவகுமார் காரோடு வெளியே நின்றார் “இன்றும் நானே ட்ரோப் செய்கிறேன்.. வா” என்றார்.
முகம் உர் என இருந்தது. அதை பார்க்க, தந்தையின் கண்களுக்கு சிறுபிள்ளை போல்தான் தெரிந்தாள் பெண். அதனால் “வளர வளர நீ குழ்ந்தையாகுற டா. முன்பெல்லாம்.. என்மேல கோவமென்றாலும் அதை காட்டிக்கொள்ளாமல் அமைதியாக உன் வேலையை பார்ப்ப.. இப்போது, முகம் வாடி போகுது.. சாப்பிடுவதில்லை.. எங்களிடம் சரியாக பேசுவதில்லை.. என்னமோ போ.. சிறுபிள்ளைதனம் இப்போதான் வருது” என சொல்லிக் கொண்டே வண்டியை செலுத்தினார்.
நேற்று ஜாதகம் பார்த்து வந்தது பற்றி சொன்னார்.. ‘இன்று மாலையில் சர்வேஷ்ஷோடு பேசுகிறேன்.. நீ சீக்கிரமாக வந்துவிடு’ என நல்லவிதமாக பேசினார் தந்தை.
வர்ஷினி தந்தைக்கு காட்டாத புன்னகையோடு அலுவலகம் சென்றாள்.
பெண்ணின் ஆனந்தமுகம் தந்தையின் எல்லா பிடிவாதங்களையும் தளர்த்தியது.
மதியமாக தானே சர்வேஷ்ஷின் மாமா கார்த்திக்கு அழைத்து பேசினார். “மாப்பிள்ளையோடு.. மாலையில் வீடு வாருங்கள்..” என அழைப்பு விடுத்தார்.
மாலையில் சர்வேஷ் வீட்டார்.. வர்ஷினி வீடு வந்திருந்தனர். துர்க்கா ஊருக்கு செல்லவில்லையே.. மறுநாளே தம்பி கொடுத்த அதிர்ச்சியில்.. எங்கே ஊருக்கு செல்லுவது. அதனால் துர்காவின் கணவர் பிள்ளைகள் என எல்லோரும் வந்திருந்தனர்.
சிவகுமார் இந்தமுறை வீட்டில் இருந்தார். எல்லோரையும் வரவேற்றார். சர்வேஷ், வரும்வரை.. வர்ஷினியின் நினைவில் வந்தவன்.. இப்போது மாமனாரை பார்க்கவும் சங்கோஜமாகிவிட்டான்.. லேசாக நெற்றி வியர்த்தது. தன் மாமாவின் பின் நின்றுக் கொண்டான்.
சிவகுமார் விஜயா என எல்லோரும் வந்தவர்களிடம் பேசத் தொடங்கிவிட்டனர்.
சிவகுமார், இப்போதுதான் சர்வேஷ்ஷினை நேரில் பார்த்தார்.. மாப்பிள்ளை என்ற கண்ணோட்டத்தில். பிரிட்ஜ்ஜில் வைத்த ஆப்பிள் போல பளீச்சென இருந்தான் சர்வேஷ். வெளிநாட்டு வாசனை அவனின் ஒவ்வொரு அசைவிலும் பிரதிபலித்து.. க்ளீன்ஷேவ்.. ஜீன் டி-ஷர்ட்.. பர்ப்யூம் வாசம்.. பாந்தமான பார்வை என.. புன்னகையோடும் டென்ஷனோடும் நிற்பவனை பார்க்க.. மாமனாருக்கு மனது திருப்தியானது.. “எப்படி இருக்கீங்க..” என்றார் தானாகவே முதல் வார்த்தை பேசினார்.
“ம்.. நல்லா இருக்கேங்க.. அது, வர்ஷினி.. நிறைய அப்சட்டாக இருந்ததால்.. அப்புறம் எல்லோரிடமும் அவள் மட்டுமே பேசிக் கொண்டிருப்பதாக எண்ணம்.. அவளை தனியே விட்டு வந்திட்டனோன்னு ஒரு கில்ட்.. அதான், வந்து பார்த்துட்டு போலாம்ன்னு கிளம்பிட்டேன்.” என தலையை கோதிக் கொண்டு.. சின்ன டென்ஷனோடு என்றாலும் தெளிவாக விளக்கினான்.
சிவகுமாருக்கு, மாப்பிள்ளை கொடுத்த விளக்கத்தில் பரமதிருப்தி “சந்தோஷம்ங்க.. வேலையெல்லாம் பரவாயில்லையா.. எத்தனைநாள் லீவ்..” என்றார்.
“ம்.. நெக்ஸ்ட் வெட்நஸ்டே கிளம்பனும்..” என்றான்.
லக்ஷ்மி “ம்.. வர்ஷினி தனியா இருக்காளா.. சொல்லுவ டா.. ஏன் எங்களையெல்லாம் பார்த்தால் எப்படி தெரியுது” என்றாள்.
மாமனாரின் எதிரில் சட்டென சர்வேஷ்க்கு பேச வரவில்லை.. கண்களால் எரித்தான் அக்காவை.
எல்லோரும் சிரித்தனர்.. சர்வேஷ் அமைதியாக நிற்கவேண்டி இருந்தது.
விஜயா எல்லோருக்கும் குடிக்க கொடுத்தார்.. துர்கா லக்ஷ்மி இருவரும் உதவினர் விஜயாவிற்கு.
சிவகுமார் ஜாதக பொருத்தம் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார் முத்துநாயகியிடம். குடும்பத்தார் எல்லோருக்கும் ஆனந்தம்.
சிவகுமார் “திருமணத்திற்கு ஒருவருடம் ஆகட்டும்ன்னு சொல்லியிருக்காங்க” என சொல்லி.. சர்வேஷ்ஷினை பார்த்தார்.
சர்வேஷ் அதிர்ந்தான்.. சட்டென “எங்களுக்கும் அந்த பிளான்தான் மாமா.. வர்ஷினிக்கு அங்கே வேலை தேடனும்.. இங்கே ரிலீவ் ஆகணும்.. அவசரமில்லை” என்றான் திடமான குரலில்.
எல்லோரிடமும் புன்னகை..
விஜயா “இப்போதிக்கு யாரிடமும் ஏதும் நீங்க வந்து போனது பற்றி சொல்லபோவதில்லைங்க..” என்றார் எல்லோரிடமும்.
துர்காவின் கணவரும் “அதுதாங்க சரி, அப்படியே செய்துக்கலாம். பொண்ணுக்கு வேலை கிடைக்கட்டும்.. அப்புறம் நாள் பார்த்து குறித்துக் கொள்ளலாம்.. எங்களுக்கும் அதுதான் விருப்பம்” என்றார். ஆக பெரியவர்கள் பேசிக் கொண்டனர்.
பிள்ளைகள் வெளியே விளையாடிக் கொண்டிருந்தவர்கள் “ஆன்ட்டி.. வர்ஷி..” என சத்தம் கேட்டது.. அத்தோடு கேட் திறந்து அவள் உள்ளே வரும் சத்தமும் கேட்டது.
வர்ஷினிக்கு, இங்கே பிள்ளைகளை பார்த்ததே அதிர்ச்சி.. என்னமோ ஜீபூம்பா மாதிரி கதவு திறப்பது அதிர்ச்சி.. நிமிர்ந்து பார்த்தாள்.. இன்னமும் அதிர்ச்சி.. மூச்சுகாற்று உடலில் ஆனந்தமாக அவனின் வாசனையை நிரப்ப.. கண்கள் தன்னவனை கண்டது.. நெஞ்சுகுழியில் எதோ அழுத்தம்.. திறந்த கண்கள் இமைக்க மறந்தது.. சுவாசம் ஸ்தம்பித்தது.. உதடுகள் வரண்டது இந்த நொடி நேரத்தில்.. அவனை கண்ட இந்த நொடியில். உடலெல்லாம் நடுங்கி போகிற்று.. சத்தமே வரவில்லை “ஹேய்..” என குதூகலத்தோடும்.. அழுகையோடும்.. குரல் கரகரக்க சொல்லியவள்.. உள்ளே வரமுடியாமல்.. கால்கள் நகர மறுக்க.. பெண்ணவள் சமைந்து நின்றாள்.
சர்வேஷ்க்கும் பேச்சு வரவில்லை.. மாமனாரின் எதிரில்.. அவளை கட்டிக் கொள்ளவோ.. கை கோர்க்கவோ முடியாமல்.. பேசவும் முடியாமல் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.
பெரியவர்கள் எல்லோரும் என்ன சொல்வதென தெரியவில்லை.. பிள்ளைகள் “ஆன்ட்டி..” என கைபற்றதான்.. மீண்டேழுந்தாள் பெண்.
இதுவரை சர்வேஷ் அழைக்கவில்லையே என சோர்ந்து போய்தான் வீடு வந்தாள்.. ஐம்புலனும் அவனை உணர்ந்தது.. ஆனந்த அதிர்ச்சி.. பாதி திறந்த கதவில் சர்வேஷ் நிற்க அவனை தாண்டி செல்ல முடியாமல்.. வர்ஷினிக்கு அவஸ்த்தை.. தடுமாற்றம்.. என அவனையே இமைக்காமல் பார்த்து நின்றாள்.
துர்க்காதான் “தம்பி, கொஞ்சம் தள்ளு.. வர்ஷினி உள்ளே வரட்டும்” என்றாள்.
சர்வேஷ் கதவினை நன்றாக திறந்து நின்றான்.
வர்ஷினி இன்னமும் அதிர்ச்சிக் குறையாமல் கண்களில் நீர் தளும்ப.. தன் தந்தையை நோக்கி சென்று.. அவரின் அருகில் நின்றுக் கொண்டாள்.
தந்தை, பெண்ணின் கைபற்றி தன்னருகே அமர வைத்தார். ஏதும் பேசாமல் அவளும் அமர்ந்துக் கொண்டு.. தந்தையின் கைபற்றிக் கொண்டு.. அவரின் தோளில் சாய்ந்துக் கொண்டாள் பெண். தந்தையும் பெண்ணின் கைபற்றி தட்டிக் கொடுத்து.. “உன்னை பார்க்கத்தான் வந்திருக்கார் மாப்பிள்ளை..” என்றார்.
வர்ஷினிக்கு இந்த வார்த்தையில் இதயம்.. நின்றுவிடும் போல அதிர்ந்தது.
தந்தை “கூல்.. ஏன் இவ்வளவு டென்ஷன்..” என மகளின் கையை தட்டிக் கொடுத்தார். மனைவியிடம் “குடிக்க ஏதாவது கொடு” என்றார்.
பெண்ணவளின் அதிர்ச்சி குறையட்டும் என எல்லோரும் வர்ஷினியை கண்டும் காணாமல் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.
விஜயா காபி கலந்து எடுத்து வந்தார்..
சிவகுமார் “வர்ஷிம்மா, காபி குடி..” என சொல்லி பெண்ணின் முதுகு வருடினார்.
விஜயா “என்ன டி இது.. எழுந்திரு.. வா.. மாமியார் வந்திருக்காங்க பாரு” என்றார்.
தந்தையின் ஆறுதலில் பெண்ணவள் நிமிர்ந்து அமர்ந்தாள்.. “சாரி.. எப்படி இருக்கீங்க.. ஆன்ட்டி” என்றாள் முத்துநாயகியிடம்.
அவரும் புன்னகையோடு.. இரு கைகளையும் நீட்டி அழைத்தார்.. “இங்க வாடா..” என்றார்.
பெண்ணவள் எழுந்து அவரின் அருகே சென்று அமர்ந்தாள் “என்ன பயந்துட்டியா.. எங்களையும் இப்படிதான் பயப்படுத்திட்டான் இந்த ராஸ்கல்.. நேற்றிலிருந்து நானும் உன் அம்மாவும் பயந்து பயந்து BP வந்திருக்கும்.. அப்படி ஒரு டென்ஷன்.” என்றார். வர்ஷினி அதிர்ந்து பார்த்தாள்.
“கிளம்பியதும் சொல்லிவிட்டான், எங்களுக்கு. உனக்குத்தான் சர்ப்ரைஸ்.. எங்களுக்கு டென்ஷன்.. அங்க பாரு.. ஒண்ணுமே பண்ணாதவன் மாதிரி நிற்கிறான்.. நீ டென்ஷனாக இருந்தியாம்.. தனியாக இருக்கியாம்.. சொல்றான். எப்படியோ, உன் அப்பாவும் என் பையனோடு பேசிவிட்டார்.. எல்லாம் நல்லபடியாக நடந்தது.. சந்தோஷமா” என்றார்.
வர்ஷினி அவரின் பேச்சினை முழுதாக உள்வாங்க முயன்றாள். இன்னமும் அதிர்ச்சி குறையவில்லை.
விஜயா “வர்ஷினி, துர்கா வீட்டுகாரர் இவங்க” என சொல்லி அறிமுகம் செய்தார்.
வர்ஷினி எழுந்து நின்று புன்னகைத்தாள். எல்லோரிடமும் வர்ஷினி இயல்பாக பேசத் தொடங்கினாள்.
சர்வேஷ் பிள்ளைகளோடு பேசிக் கொண்டே.. ‘எப்போதுதான் என்னை பார்ப்பாய்’ என தகிக்கும் பார்வையை தன்னவள் மீது வீசி.. அமர்ந்திருந்தான்.