சர்வாச்சார்யா மார்பில் படர்ந்திருந்த சம்யுக்தா மனது அந்த நொடி அவ்வளவு அமைதியாக இருந்தது.
அவளுக்கான எந்த கேள்விகளும் இல்லை, அதற்கான பதிலை தேட வேண்டியதும் இல்லை.
குருமூர்த்தி சிறையில் இருந்து வந்த பிறகு பெண்ணின் மனதில் அப்படி ஒரு அமைதி தான் நிலை கொண்டிருந்தது.
என் அப்பா என்கிட்ட வந்துட்டார், போதும், எனக்கு இது போதும்! இத்தனை வருடங்கள் போல் நான் இனி தனியாக கிடந்து அல்லாட வேண்டியதில்லை. குருமூர்த்தி தன்னை நெருங்காத ஏமாற்றம் இருந்த போதும், அதான் அப்பா இனி என்கூடவே இருப்பார் இல்லை. அது போதும் என்று ஏற்று கொண்டு விட்டாள் சம்யுக்தா.
ஆனால் திரும்ப அப்படியான ஒரு மனநிலை அவளுக்கு வாய்க்கும் என்று பெண் நினைத்தது இல்லை.
அவளின் அதிகபட்ச எதிர்பார்ப்பே குருமூர்த்தி உடன் இருப்பது தான். ஆனால் அதையும் உடைத்தான் நல்லவன்!
அதெப்படி உனக்கு அவர் மட்டும் போதும்? நானும் உனக்கு வேணும் தான் என்று திரும்ப அவளின் மனதை அல்லாட வைத்துவிட்டான்.
சுயகட்டுப்பாடு பெண்ணுக்கு அதிகமே உண்டு தான். ஆனால் ஏக்கமும் அவளுக்கு உண்டே!
சரிவராது, நடக்காது, வேண்டாம்! ஜபம் போல் அவளின் உள்மனதில் எந்நேரமும் ஓடி கொண்டிருக்கும் வார்த்தைகள் இவை!
ஒருவகையில் இது எதிர்மறை எண்ணங்கள் தான்!
ஆனால் இதுவும் அவளுக்கு தேவைப்பட்டது. விசித்திரம்!
காதல் எல்லாவற்றையும் செய்யும்! அதிபயங்கரமானதும் அதுதான், அதிஅழகானதும் அதுதான்!
சம்யுக்தா அழகானதை அனுபவித்தாளோ தெரியாது. ஆனால் அதிபயங்கரமானதை கடந்து கொண்டிருக்கிறாள்.
இப்போதும் அவள் கேட்டு கொண்டிருக்கும் சர்வாச்சார்யாவின் இதய துடிப்பை காலத்துக்கும் கேட்பாளா என்றால் தெரியாது! அவனின் அருகாமை நிரந்தரமானதா என்றால் அதுவும் தெரியாது.
ஆனால் நான் ஓடிய ஓட்டத்துக்கு இது போதும்!
சில நொடிகளில் வாழும் பெண்ணவள் சம்யுக்தா!
மலர் வனத்தில் மட்டுமே அவள் வளர்ந்திருந்தால் அவளுக்கு இந்த கலை வாய்த்திருக்காதோ என்னமோ?
சொகுசும் பஞ்சு மெத்தையிலே இருந்தால் தெரியாது. கரடு முரடான தரையில் கிடந்தவளுக்கு நன்றாக அந்த சொகுசின் மகிமை தெரியும். சர்வாச்சார்யாவின் கடினமான மார்பு அவளுக்கு அப்படியான சொகுசு தான்!
சம்யுக்தா நன்றாக நெருங்கி அவன் மார்பில் முகத்தை தேய்த்தவள், சில நொடிகளில் விலகிவிட்டாள்.
சர்வாச்சார்யா அவளாக விலகும் வரை அவளை தன் நெஞ்சில் தாங்கியவன், பெண் விலகவும் காரை விட்டு இறங்கினான்.
எப்போதும் போல் சம்யுக்தாவின் கரம் பற்றி நடந்தவன், குருமூர்த்தியின் முன்பும் அவளின் கரத்தை விடவில்லை.
மகள் வரும் வரை படாதபாடுபட்ட மனிதர், அவள் தன் கண் முன் வந்து நிற்கவும், “விடுடா என் மகளை” என்று அவனிடம் இருந்து மகளை வலுவாக பிரித்து தன்னுடன் வைத்து கொண்டவர் நம் நாயகனை முறைக்க,
அவனோ “செம டையார்ட். காபி வேணும்” என்றபடி அங்கிருந்த திவானில் படுத்துவிட்டான்.
“எப்போ பார்த்தாலும் இதே வேலை தானா உனக்கு? எழுந்து உட்காருடா” என்று குருமூர்த்தி அதட்ட,
“ம்ப்ச். காபி சொன்னீங்களா?” என்று படுத்தபடியே கேட்டான் நல்லவன்.
சம்யுக்தாவிற்கு அப்போது தான் தாங்கள் மதிய உணவு உண்ணாததே நினைவிற்கு வந்தது.
வேகமாக கிட்சன் சென்று உணவை ஆராய்ந்தவள், எல்லாம் அப்படியே இருந்ததில், “ப்பா. நீங்க லன்ச் சாப்பிடலையா?” என்று கேட்டாள்.
“நாங்க சாப்பிட்டோம். நீ சாப்பிட்டியா?” என்று குருமூர்த்தி மகளை கேட்க,
“ப்பா. சாப்பிட நேரம் கிடைக்கலை” என்றாள் மகள்.
“என்ன சாப்பிடலையா நீ? சாப்பாட்டு நேரமே முடிஞ்சு போச்சு. காலையில் கூட இரண்டு இட்லி தானே சாப்பிட்ட? நேரத்துக்கு சாப்பிடணும்ன்னு தெரியாதா உனக்கு? அப்படியென்ன வேலை?” என்ற குருமூர்த்தி கடுப்பாகி,
“என் பொண்ணை சாப்பிட கூட விடாம அவளை கூட்டிட்டு அலைஞ்சிருக்க நீ?” என்று நல்லவனை சத்தமிட்டார்.
“நான் காலையில இருந்து காபி கூட குடிக்கலை” என்றான் நாயகன்.
டெல்லி வீட்டில் வைத்து காலை வசுந்தராவிடம் காபி கேட்டான். ஆனால் சம்யுக்தா பற்றி தெரியவும் அப்படியே பெங்களூர் பறந்து வந்துவிட்டான்.
இடையில் உணவை பற்றி எங்கு நினைவு இருந்தது. ஆகாஷ் வரவைத்த ஜுஸை குடித்தேனோ? சர்வாச்சார்யாவின் வாடிய முகத்தில் சட்டென ஓர் குறுஞ்சிரிப்பு.
உதட்டை உள்ளிழுத்து கடித்து கொண்ட கள்ளனுக்கு முத்தம் கொடுப்பதில் இருந்த தீவிரம் தன்னை கவனித்து கொள்வதில் இல்லை.
ம்ஹூம். இவதான் எப்போவும் போல என்னை டைவர்ட் பண்றா?
“நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று சம்யுக்தா உடனே டேபிளுக்கு போக, நாயகன் ஜம்மென எழுந்து உணவுண்ண சென்றுவிட்டான்.
குருமூர்த்திக்கு தான் அடுத்து என்ன செய்ய என்று தெரியவில்லை.
சம்யுக்தா அவனுக்கு பரிமாற, “நீயும் உட்கார்ந்து சாப்பிடு முதல்ல” என்று குருமூர்த்தி மகளை அதட்டினார்.
“இதோப்பா” என்ற மகள் உண்பது போல் தெரியவில்லை.
ஊட்டியில் கூட என் பொண்ணை இப்படித்தான் பண்ணான்? தந்தைக்கு சுறுசுறுவென வர,
“நானே வைக்கிறேன். நீ சாப்பிடு” என்று குருமூர்த்தி டேபிளுக்கு வந்துவிட்டார்.
“வறுவல்” என்று சர்வாச்சார்யா கேட்டவன், குருமூர்த்தி பரிமாறவும்,
“ம்ப்ச். இப்படி தான் வைப்பீங்களா?” என்று முகத்தை சுருக்கினான்.
“வேறெப்படி வைக்க? சரியாத்தான் வைச்சிருக்கேன்” என்று குருமூர்த்தி சொல்ல,
“இல்லை. நீங்க சரியா வைக்கலை. எனக்கு இந்த பக்கம் தான் வைக்கணும்” என்றான் இவன்.
“டேய் இந்த பக்கம் இருந்தா என்ன இப்போ?”
“எனக்கு பிடிக்காது”
“அப்போ தட்டை திருப்பிக்கோ”
“முடியாது”
“சரி இப்போ என்னதான்டா பண்ணனும்?”
“எனக்கு சாப்பிடுற மூடே போச்சு. எப்படி பரிமாறணும்ன்னு தெரியாதா உங்களுக்கு?”
ஆனால் அவளுக்கு தெரியாதது, அந்த டென்க்ஷனில் தான் இருவரும் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று!
கரண்ட் கம்பத்தில் கை வைப்பது உறுதி! தூக்கி அடிக்காமல் இருக்க என்ன செய்வது? இருவருக்குள்ளும் ஓடி கொண்டிருக்கும் கேள்வியை சம்யுக்தா எப்படி அறிவாள்?
அவங்களை கேட்கிற நீ மட்டும் காருல வைச்சு என்ன செஞ்ச? இந்த டெங்ஷனில் தான் அவரோட அப்படி ஒட்டிகிட்டியா என்ன? சம்யுக்தா மனது பாய்ந்துவந்து கேள்வி கேட்டது.
சர்வாச்சார்யாவின் அழுத்தமான முத்தமும், அவன் கை தடங்களும் நினைவிற்கு வந்த நொடி, சம்யுக்தாவின் முகம் குப்பென்று சிவந்து போனது. தலை குனிந்து கொண்ட பெண்ணின் முகபளபளப்பபை கவனிக்க வேண்டியவன் கவனித்து விட்டான் போல.
“க்கும்” என்றான்.
சம்யுக்தா எழுந்து கிச்சனுக்கு ஓடிவிட்டாள்.
விசிலடித்த சர்வாச்சார்யாவை கடுப்பாக பார்த்து வைத்தார் குருமூர்த்தி.
சர்வாச்சார்யா, “ஏன் அவரை மீட் பண்ணலை?” என்று குருமூர்த்தியிடம் கேட்டான்.
“யாரை?”
“ஈவென்ட் மேனேஜர்” என்றான் நாயகன்.
“நானா வர சொன்னேன்?”
“நாந்தான் வர சொன்னேன். கூப்பிட்டு பேசுங்க”
“நீயே பேசி அனுப்பு”
“நீங்க பேசி அனுப்பாத வரை, அவர் அங்கேதான் இருப்பார்” என்றான் நாயகன்.
“ராஸ்கல். ஒழுங்கா அவரை அனுப்பு. நான் கண்டிப்பா மீட் பண்ண மாட்டேன்”
“ஏன்? ஏன் மீட் பண்ண மாட்டீங்க? அப்போ கல்யாண வேலையெல்லாம் நீங்களே பார்க்க போறீங்களா என்ன?”
“நடக்காத கல்யாணத்துக்கு வேலை பார்க்கணுமா நான்” என்று கேட்டார் குருமூர்த்தி.
நடக்காத கல்யாணம் என்ற குருமூர்த்தியின் வார்த்தை அவனை வெகுவாக தாக்கிவிட்டது.
“ஏன் நடக்காது?” என்று அவர் முன் கைகட்டி நின்றுவிட்டான் பிடிவாதக்காரன்.
“நடக்காது. அவ்வளவு தான்” என்றார் குருமூர்த்தியும்.
“அதான் ஏன்னு நானும் கேட்கிறேன்? ஏன் நடக்காது சொல்றீங்க? உங்க பொண்ணை கட்டிக்கிற அளவு எனக்கு தகுதி இல்லையா?”
“அதிமான தகுதி இருக்கிறது தான் பிரச்சனை” என்றார் மனிதர்.
“சரி என்ன பண்ணலாம்? எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு வந்திடவா?” என்று தீவிரமாக கேட்டான் சர்வாச்சார்யா.
“நீ எங்களை தூக்கி போட்டுட்டு போய் வேலையை பாரு போ” என்றார் குருமூர்த்தி.