திருக்குறளின் பொருளைத் தேடிப் படித்த மேகனின் உதடுகளோ, புன்னகையைத் தத்தெடுத்துக் கொண்டது. “தியாழினிக்கு நம்மள புடிச்சிருக்கு,” என நினைத்தவன் உதடுகள் தானாக வளைந்தது; அத்தனை சந்தோஷம் ஆடவனுக்கு.
அதற்கு மேல் மேகன் அவளுக்கு அழைக்கவில்லை, விட்டுவிட்டான்.
“தியாழினி” – எவ்வளவு இனிமையான பெயர்! மையிட்ட நர்த்தன விழிகள், அளவான நாசி, சிறிய இதழ்கள், குடை காதுகள் என வெகு நேரம் அவளின் படத்தை ரசித்தான் என்றே சொல்லலாம். இது ஒருவகையான காதல் தான்.
இங்கே தியாழினுக்குப் பதற்றமாக இருந்தது. ‘ஒருவேளை அவர் பிடிக்கலன்னு சொல்லிடுவாரா? ப்ச், இருக்காது. அய்யோ! அந்தத் திருக்குறளுக்கு அர்த்தம் தெரியாம போய்ட்டா என்ன பண்றது?’ என்று தீவிரமாக யோசித்தவள், அந்தத் திருக்குறளின் அர்த்தத்தை அனுப்பி வைத்தாள்.
“தலைவனின் மேல் இருக்கும் அதீத பிரியத்தில் அவனைப் பார்க்கத் தயக்கம் கொள்ளும் தலைவி, அவன் பார்க்காத நேரத்தில் அவனது கண்களையும் ஆளுமையான முகத்தையும் மனதில் நிரப்பிக் கொள்வாள். தலைவன் தன்னை பார்க்கிறான் என்று தெரிந்த அடுத்த நொடி, வெட்கிச் சிவந்து தலையைத் தாழ்த்திக் கொள்வாள். அவன் மேல் இருக்கும் பிரியத்தைப் பாத விரலை நிலத்தில் தேய்த்து வெளிப்படுத்துவாள்,” என்று அனுப்பி இருந்தாள்.
அடுத்த நாள் காலை, தூங்கி விழித்ததும் தியாழினி அனுப்பிய செய்தியைப் படித்துக் கொண்டே எழுந்தான் மேகன். ‘அவ்ளோ அவசரமா? மேடம் டைரக்டா சொல்ல மாட்டாங்க, சுத்தி வளைச்சு சொல்லுவாங்களோ?’ என நினைத்தவனுக்கு உதட்டில் புன்னகை பூத்தது.
கல்லூரியில் இருந்து “மீட்டிங்” என்று செய்தி வர, தியாழினியின் நினைவுகளை அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டு அரக்கப் பறக்கக் கிளம்பிச் சென்று விட்டான் மேகன். அங்கே கல்லூரியில் செல்போன் உபயோகிக்கக் கூடாது. அந்த நாள் முழுவதும் தியா நூறு முறை வாட்ஸ்அப் செயலியைத் திறந்து பார்த்திருப்பாள்; ஒரு செய்தி வரவில்லை. மேகன் அவனது வேலையில் பிசியாகிப் போனான்.
மேகன் படத்தை ஆயிரம் முறை பார்த்திருப்பாள். ‘மழை மேகன்’… மழை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் மலர்களுக்கும், மரங்களுக்கும், மக்களுக்கும் தெரியாது—தியாழினி வீட்டில் மழை மேகனுக்கு எப்பொழுதும் பஞ்சமில்லையென! காதல் முற்றி, கிறுக்குத்தனமாகக் கவிதை தோன்றியது; எழுதி கிறுக்கினாள், வெட்கமும் வந்து போனது.
அடுத்த நாள் இரவு ஏழு மணிக்கு மெசேஜ் வந்தது: “ஹலோ!!”
“யாரது?” என மேகன் தட்டி விட்டான்.
“நான் தியாழினி.”
“ம்ம்… சொல்லுங்க..”
“என்ன சொல்லுங்க?” என்று இதயம் படபட்க்க தட்டி விட்டாள்.
தியா கோபமாக இருக்கிறாள் எனத் தெரிந்து விட்டது. அவளின் கோபம் மேகனுக்குச் சுவாரசியமாக இருக்க, “என்கிட்ட கேட்டா நான் என்ன சொல்லட்டும்?” என்று விளையாட ஆரம்பித்தான்.
சட்டென்று அழைப்பு வந்தது. ‘கால் பண்றா!’ என்று சிறு அதிர்ச்சி தோன்றினாலும் உடனே எடுத்து விட்டான்.
“ஹலோ தியாழினி? சொல்லுங்க,” என வெகு சாதாரணமாகக் கேட்டான் மேகன்.
“அது வந்து…” எனத் தயங்கினாள். மேகனுக்கு அனைத்தும் மிக மிக புதுமையாக இருக்க, அவள் பேசுவதற்குக் காத்திருந்தான்.
வலப்பக்கம் திரும்பினால் நிலைக்கண்ணாடி; ஏனோ அவளுடன் பேசும்போது பேரழகனாக இருப்பது போல அவனுக்கு ஒரு பிரம்மை… இல்லை, இல்லை, பிரம்மை இல்லை, நிஜமாகவே அவன் பேரழகு தான்.
“நான்… அது வந்து… உங்களுக்குக் குறள் அனுப்பினேன்,” என உள்ளார்ந்த குரலில் தியா கேட்க…
“ம்ம்… சொல்லுங்க,” என மறுபடியும் சுற்றி விட்டான்.
“மாமா! மாமா! அம்மாச்சி டீ…” எனத் தமிழின் குரல் கேட்டது.
அந்த ஏகாந்தத்தை ஒரு குட்டி குரல் கலைக்க, “அது யாரது? பின்னாடி சத்தம் கேட்குது?” என உடனே பதறினாள் தியா.
மேகனுக்குச் சொல்லப் போனால் அதிர்ச்சியாக இருந்தது, ‘இத்தனை உன்னிப்பாக கவனிக்கிறாளே!’ என்று. “ஒரு நிமிஷம் தியா,” என்றவன், தமிழினியைத் தூக்கிக் கொண்டான்.
அம்மாச்சி டீ குடிக்க அழைக்கிறார்கள் என்பதை மெல்ல படி ஏறி வந்து தமிழ் கூறினாள்.
“மேகா!!” என முல்லையின் குரல் அவ்விடத்தைக் கிழிக்க, “சொல்லு கா!!” என்றான்.
“பாப்பா வந்துட்டாளா? நீ கீழே வரும்போது அவளைத் தூக்கிட்டு வந்திடு,” என கூவினார்.
தியா போனைக் காதில் வைத்தபடி காத்திருக்க, “தமிழ், பேசு… போனைக் காதுல வச்சு…” எனப் பிடித்துக் கொண்டான்.
“யாரு?” என தமிழ் கேட்க, தியா அதற்காகவே காத்திருந்தவள் போல காதைப் பட்டை தீட்டினாள், மேகன் என்ன சொல்வான் என்று.
“அத்தை பேசுறாங்க…” எனக் கூறிவிட்டான் மேகன். தியாவின் முகத்தில் அத்தனை சந்தோஷம்; சொல்ல வார்த்தையே இல்லை!
“ஹலோ அத்தை!!” என மேகன் சொல்லிக் கொடுக்க, “ஹையோ அத்தை!” என மழலை மொழியில் பேசியது குழந்தை.
“நான் தமிழ் பேசுறேன், இது மேகன்.”
“நா தமி பேசுறேன், இது மழலை.”
“நீங்க நல்லாருக்கீங்களா?” என மேகன் சொல்லிக் கொடுக்க…
“நல்லா இருக்கா?” என மழலை பேசினாள்.
“என் தங்கப் பொண்ணு, நான் நல்லாருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்கடி மயிலு?” என கொஞ்சினாள். நேரம் போனதே தெரியவில்லை. அவர்கள் இருவர் பேசுவதையும் ரத்துப் பார்த்தான். சிறிது நேரம் ஆகிட, குழந்தையிடம் இருந்து போனை வாங்கியவன், “பதில் கிடைச்சிதா?” என குறும்புடன் கேட்டான்.
“என்ன பதில்?” என அவளும் தெரியாததைப் போலவே திரும்பி கேட்க, இருவரிடமும் கொள்ளை கொள்ளும் சிரிப்பு. தியா முந்திக் கொண்டு, “நீங்க பாருங்க, நான் அப்புறம் பேசுறேன்,” என வைத்து விட்டாள். சிறகு கட்டிப் பறக்காத குறையாக உணர்வுகள் சிறகடித்தன.
தியாழினி வீட்டில் இருந்து அழைத்திருந்தார்கள். நிச்சயம் பற்றிப் பேசிட, மைதிலி அனைத்து விஷயங்களையும் செல்வியை வைத்துப் பேசினார். இந்த மாதம் இறுதியில் வரும் வெள்ளிக்கிழமை நல்ல நாளாக இருக்கிறது, அன்றே நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம் என்று நடேசனை வைத்துப் பேசி முடித்தார்கள்.
டீ குடித்தபடி போன் நோண்டிக் கொண்டிருக்கும் மகனைப் பார்த்தவர், நிச்சய விஷயம் பற்றிப் பேச முடிவெடுத்தார்.
“மேகா!!”
“சொல்லுங்க மா?” என எப்பொழுதும் போல கேட்டான்.
மைதிலிக்கு மனம் கேட்கவில்லை. அவனருகில் வந்தவர், “பொண்ணு வீட்ல பேசியாச்சு. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை நாள் நல்லாருக்குன்னு பார்த்து அத்தை கிட்ட சொல்லிட்டாங்க. அத்தைக்கும் சரியா படுது, அதான் கண்ணு, உன்கிட்ட சொல்லலாம்னு…”
மேகன் தனது அன்னையின் குழப்பமான முகத்தைப் பார்த்து, “சரி மா, அப்படியே செஞ்சிடலாம்,” என்றான் புன்னகையுடன்.
“அது வந்து…” என்று மைதிலி தயங்கிட…
மேகன் தனது அன்னையின் தோள் மேல் கைகளைப் போட்டபடி, “இதுல என்ன மம்மி தயக்கம்? உங்க முகமே காட்டிக் கொடுத்திடுச்சு.
இல்ல, உனக்கு விருப்பமில்லாம பண்ணக் கூடாதுல? நான் அவசரப்படுறேன் ரொம்ப… அப்படித் தானே? என்ன தான் இருந்தாலும் நீ தானே வாழப் போற?” என அவர் குழப்பத்தில் மனதில் தோன்றும் அனைத்தையும் பேசிட,
“அச்சோ அம்மா,” எனத் தடுத்தவன், தனது அன்னையின் கையைப் பற்றி, “உங்களுக்காக இல்ல, எனக்கு தியாழினிய நிஜமாவே பிடிச்சிருக்கு. அதுக்குக் காரணமும் நீங்க தான். உங்க மனசுல இந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கான்னா, கண்டிப்பா நல்ல பொண்ணா தான் இருப்பா,” என்று தெளிவாகக் கூறியவன், “நீங்க இப்போவே அவளைக் கட்டிக்க சொன்னாலும் எனக்குச் சம்மதம் தான். நான் வாழ்றது எல்லாம் உங்களையும் அக்காவையும் சந்தோஷமா பார்க்கத் தான் மா! உங்க ரெண்டு பேர் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். நீங்க தைரியமா பண்ணுங்க,” என்று சொல்லி விட்டு நகர்ந்தான்.
மேகனின் ஒவ்வொரு வார்த்தையைக் கேட்கும் போதும் மைதிலிக்கு அத்தனை சந்தோஷமாக இருந்தது. ‘தனது மகனா இவ்வளவு கருத்தாகவும் சரியாகவும் பேசுகிறான்? தனக்காக யோசிக்கிறானா? இத்தனை அறிவாகப் பேசுகிறானா?’ என்று பூரித்துப் போய் நின்றிருந்தார். அதனுடைய மிகப்பெரிய பாரம் அவரது மனதில் இருந்து நீங்கியதைப் போல ஒரு உணர்வு இருந்தது. இப்பொழுதுதான் அவரால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது. அதற்குச் காரணம், என்னதான் அன்னையாகக் கண்டிப்புடன் ‘இந்தைப் பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்’ என்று கூறினாலும், மேகனுக்கு என்று ஒரு மனதும் அவனுக்கு என்று சில ஆசாபாசங்களும் இருக்கும் அல்லவா? அதை ஒரு அன்னையாக முட்டுக்கட்டை போடக் கூடாது என்று நினைத்திருந்தார். ஆனால் மலைமேகனின் பேச்சுக்கள் அத்தனை முதிர்வுடனும் புரிதலுடனும் இருந்ததில் மைதிலிக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது.
மைதிலிக்கு தனது உற்சாகத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை. அவர் உடனே முல்லையின் மாமியார் செல்விக்கு அழைத்து, “அண்ணி, மேகன் கிட்ட விஷயத்தைச் சொல்லிட்டேன். அவன் உடனே சரின்னு சொல்லிட்டான். இப்பவே நீங்க சம்பந்திகாரங்க வீட்டில் பேசுங்க அண்ணி. நீங்கதான் எல்லாத்தையும் நல்லபடியா நடத்திக் கொடுக்கணும்,” என்று பூரித்தார்.
நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று கொண்டிருந்த அதே வேளையில் தான், தியாழினிக்கு ‘மழை மேகன் அறிவொளி கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிகிறான்’ என்னும் விஷயம் தெரிய வந்தது!