அத்தியாயம் 20

“ம்ம்… இங்க தானே வச்சேன்… எங்க போச்சு?”

தனக்குத்தானே பேசிக்கொண்டே தங்கள் பீரோவை கலைத்து போட்டுக்கொண்டிருந்தாள் ரேவதி.

“நானும் அப்ப இருந்தே பாத்துட்டு தான் இருக்குறேன், அப்பிடி எதைத்தான் இவ்வளவு காலையிலே தேடுற ரேவதி?”

படுக்கையிலிருந்து எழும்பாமல், தூங்கும் மகளை தன் மார்பில் போட்டு தட்டிக் கொடுத்தபடியே கேட்டான் முரளி.

“ம்ம்… இப்போ அதை தெரிஞ்சு, நீங்க என்ன செய்ய போறீங்க?”

“முதல்ல நீ சொல்லும்மா… அப்புறம் செய்யுறதைப் பாத்துக்கலாம்.”

“என் மார்க்ஷீட்டைத் தான் தேடுறேன்.”

“என்ன?”

“எதுக்கு இப்பிடி வாயப்புளக்குறீங்க? நான் என் டிகிரி மார்க்ஷீட்டை தேடுறது, அவ்வளவு பெரிய குற்றமா?” பீரோவிலிருந்த பார்வையை கணவன் மீது திருப்பி, முறைத்தபடி கேட்டாள் ரேவதி.

“நான் அப்பிடி சொல்லுவனா?”

“சொல்லிட்டு தப்பிச்சிட தான் முடியுமா என்ன?” முணுமுணுத்துக் கொண்டவன், “இப்போ எதுக்கு அதை தேடுறன்னு தெரிஞ்சிக்கலாமா ரேவதி?”

கணவனின் கேள்விக்கு ஒரு வெட்டும் பார்வையை பதிலாக தந்தவள், “வேற எதுக்கு? என்னோட டிகிரி அரியர்ஸ்ஸை கம்ப்ளீட் பண்ணலாம்னு தான்.” வெகு சாதாரணமாக சொன்னாள்.

“என்னது?”

“எதுக்கு மறுபடியும் கத்துறீங்க? பிள்ளை முழிச்சிக்கப்போறா.”

“என்ன சொன்ன ரேவதி? அரியர்ஸ் கம்ப்ளீட் பண்ணப்போறியா?”

 ‘தான் கேட்டது உண்மைதானா?’ என்று உறுதிப்படுத்திக்கொள்ள மறுபடியும் கேட்டான் முரளி.

“எதுக்கு திரும்பத் திரும்ப கேக்கிறீங்க? நாங்கெல்லாம் படிக்கக் கூடாதா, என்ன?”

எரிச்சலாக கேட்ட ரேவதியை, திருமணம் முடிந்த புதிதில் எத்தனையோ முறை முரளி, அரியர்ஸ்ஸை எழுதி டிகிரியை முடித்து விட சொல்லியிருக்கிறான்.

ஆனால் அப்போதெல்லாம், “எனக்கு விருப்பம் இல்லை முரளி. என்னை கம்பல் பண்ணாதீங்க” என்று சொல்லிவிட்டு, இப்போது ஏன்?

தன் மனதில் ஓடிய எண்ணத்தை முரளி மனைவியிடம் கேட்க, “எல்லாம் காரணமாகத் தான்” என்றாள், அவன் அருகில் வந்து அமர்ந்து கொண்டு அமர்த்தலாக.

“எம்பொண்டாட்டி மனசு மாறுற அளவுக்கு, அப்பிடி என்ன மேஜிக் நடந்தது? அதை எனக்கும் கொஞ்சம் சொல்லுங்க மேடம்!”

மனைவியின் முடிவில் உண்மையாகவே மகிழ்ந்து போன முரளி கொஞ்சம் விளையாட்டாக கேட்டான்.

“மேஜிக் இல்ல… இந்த வீட்டுல நடக்குற பார்ஷியாலிட்டி தான் காரணம்” என்றாள் ரேவதி தீவிரமான குரலில்.

“பார்ஷியாலிட்டியா? என்ன சொல்லுற ரேவதி?” குழம்பிப்போய் கேட்டான் முரளி.

“ஆமா… வேலை பாத்து மாசம் பிறந்தா சம்பளம் வாங்குற மருமகளை ஒரு மாதிரியும், வெட்டியா வீட்டுல இருக்குற மருமகளை இன்னொரு மாதிரியும் நடத்துறாங்கல்ல இந்த வீட்டுல, அதைத்தான் சொல்லுறேன்.

மனைவியின் பேச்சில், ‘இது என்ன புதுக்குழப்பம்?’ என்று ஆடிப்போன முரளி, “நீயா எதையும் கற்பனை பண்ணிக்காத ரேவதி” என்றான் கண்டிப்பான குரலில்.

“தெரியும்… இப்பிடித்தான் நீங்க சொல்லுவீங்கன்னு தெரியும். நீங்க இப்பிடி எதையும் கண்டுக்காம இருக்கிறதாலத் தான் எல்லாருக்கும் நான் தொக்கா போனேன்.”

“எதுபேசுறதா இருந்தாலும் நேரடியா பேசு ரேவதி ‌. சுத்திவளைச்சி பேசுனா எனக்கு புரியாது.”

“நேரடியாவேச் சொல்லுறனே… எனக்கென்ன பயமா?” சிலிர்த்துக் கொண்டவள், “இந்த வீட்டுல உங்க அத்தை மக சுபாவுக்கு இருக்கிற மரியாதை எனக்கு கிடையாது, அது தெரியுமா உங்களுக்கு?” என்றாள் ஒருமாதிரி குரலில்.

“என்ன ரேவதி இப்பிடி சொல்லுற? பாவம் சுபா, கல்யாணம் ஆகி இவ்வளவு நாளாகியும், அம்மா இன்னும் ஏதாவது சொல்லி அவளை அப்பப்போ திட்டத்தான் செய்யுறாங்க. ஆனா நீ என்னவோ சுபாவுக்கு பூர்ணகும்ப மரியாதை அம்மா செய்யுற மாதிரி பேசுற?”

“அதுமட்டும் தான் இன்னும் இந்த வீட்டுல அவங்களுக்கு செய்யலை. கொஞ்ச நாள்ல அதையும் செய்து, என்னை முழுநேர வேலக்காரி ஆக்கிடுவாங்க உங்க அம்மா.”

“ஷ்ஷ்… நீ அம்மாவைப் பத்தி தப்பா புரிஞ்சு வச்சிருக்க ரேவதி. அம்மா கோபப்படுவாங்க, ஆனா பிள்ளைங்களுக்குள்ள பாகுபாடு பாக்குறதெல்லாம்… நோ சான்ஸ்.”

“நானுங்கூட உங்கம்மாவை அப்பிடித்தான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனா இப்போ கண்கூடா பாக்கிறனே…”

தான் சொல்லச்சொல்ல தன்கருத்திலேயே பிடிவாதமாக நின்ற மனைவியை முரளி ஆயாசமாக பார்க்க, அவளோ சுபத்ராவின் அன்றாட நடவடிக்கைகளை பட்டியலிட ஆரம்பித்தாள்.

“சுபா க்கா காலையில எழும்புறாங்க, அவங்களுக்கு மட்டும் மத்தியான சமையலுக்கு ஏதோ செய்யுறாங்க, டப்பால அடைக்குறாங்க, டிப் டாப்பா கிளம்பி, ஒரு பேகையும் தூக்கி தோள்ல போட்டுட்டு போயிடுறாங்க.”

“இதுல, அந்த மத்தியான சமையலையும், சமைக்க சொல்லிக்குடுக்கிறேன் பேர்வழின்னு, உங்க அப்பா தான் அவங்களுக்கு செய்து குடுக்குறாங்க.”

“அதேபோலத்தான் சாயங்காலம் வர்றாங்க. மகாராணி மாதிரி, உங்க அம்மா போட்டு வச்சிருக்கிற டீயை ஊத்தி குடிக்கிறாங்க. நம்ம வைஷு கூட கொஞ்ச நேரம் விளையாடுறாங்க, அப்புறம் பேப்பர் திருத்துறதுக்கு பேப்பர் கட்டை தூக்கி வச்சிட்டு உக்காந்துக்குறாங்க.”

“வேலைக்கு போறதுனால அவங்க வீட்டுல இருக்குற நேரம் கம்மி தான். அப்போ வீட்டுல இருக்குற நேரமாவது வேலை செய்யணும்ல. அப்பிடி அவங்க செய்யலைன்னா, என்னை வேலை ஏவுறமாதிரி உங்கம்மா அவங்களையும் செய்யச் சொல்லணுமா, இல்லையா? ஆனா உங்கம்மா அவங்களைச் சொல்லவே மாட்டாங்க.”

“என்னை மட்டும், ஏய் ரேவதி! அதைச் செய், இதைச் செய்யுன்னு ரொம்ப ஈசியா வேலை ஏவுறாங்க. அப்படின்னா கற்பகம் சில்க்ஸ் ஓனர் பொண்ணுன்னா உசத்தி, இந்த பாவப்பட்ட, அதுவும் உங்க கடையில வேலைப்பாக்குற ராசப்பன் பொண்ணுன்னா அவங்களுக்கு மட்டமா?” ஆவேசமாக கேட்ட மனைவியின் கேள்வியில் வாயடைத்து போனான் முரளி.

சுபத்ரா திருமணம் முடிந்து இங்கே வரும் முன்பே, தனலட்சுமி, ரேவதியை அதட்டி வேலைவாங்குவார் தான். ஏன் ப்ரபாவதியைக் கூட அப்படி தான் அதட்டுவார்.

ஆனால் அப்போதெல்லாம் வித்தியாசமாக உணரப்படாத தாயின் நடவடிக்கை, இப்போது சுபத்ராவின் வருகைக்கு பின் உணரப்படுகிறதென்றால், மனைவி தன்னை சுபத்ராவோடு ஒப்பிட்டு ஒருவித தாழ்வு மனப்பான்மையில் உழன்று கொண்டிருக்கிறாள் என்று தெளிவாக புரிந்தது முரளிக்கு.

இதை இப்படியே வளரவிடுவது தங்கள் குடும்ப அமைதிக்கு நல்லதல்ல என்று உணர்ந்தவன், “உனக்கு தானே நம்ம வீட்டு டெய்லி ரொட்டீன் தெரியும் ரேவதி. அதனாலக்கூட அம்மா உன்னை வேலை செய்ய சொல்லலாம்ல?” என்றான்.

“அதெல்லாம் எங்களுக்கு சின்ன பிள்ளையா இருக்கும் போதே காது குத்திட்டாங்க பாஸ். நீங்க புதுசா குத்தவேண்டாம்.” நக்கலாகச் சிரித்தவள்,

“சும்மா பிடிக்காத மாதிரி நடிச்சாலும் அந்த டீச்சர் மருமகளைத்தான் உங்கம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும்.”

நிச்சயமாகச் சொல்லியவள், கணவனின் முகத்தை உற்றுப்பார்த்துக் கொண்டே, “அதான் நானும் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்” என்றாள் தீர்மானமான குரலில்.

“என்ன முடிவு ரேவதி?”

“இந்த வீட்டுல கொஞ்சமாவது எனக்கு மரியாதை கிடைக்கணும்னா நானும் வேலைக்கு போயே ஆகணும். அதான் என்னோட அரியர்ஸைக் கிளீயர் பண்ணி, கவர்மென்ட் எக்ஸாம் எழுதி வேலைக்கு போகலாம்னு டிசைட் பண்ணிட்டேன்.”

இந்த முடிவை சுபத்ராவோடு தன்னை ஒப்பீடு செய்யாமல் ரேவதி எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் புலியைப் பார்த்து பூனை சூடு போட்டு கொண்டது போன்ற ரேவதியின் செயலில் முரளிக்கு ஒருவித சலிப்பு வந்தாலும்,

“உன்னோட முயற்சியில் நீ வெற்றி பெற வாழ்த்துகள் ரேவதி. இது சம்மந்தமா உனக்கு என்ன உதவி வேணும்னாலும் எங்கிட்ட தயங்காமல் கேளு, செய்து தரேன்” என்று வாழ்த்தினான். இல்லையில்லை வார்த்தைகளை தவறவிட்டான்.

“அப்பிடியா? என்ன ஹெல்ப் வேணும்னாலும் பண்ணுவீங்களா?”

“ம்ம்…”

“அப்பிடின்னா, முதல்ல உங்கம்மாகிட்ட எம்பொண்டாட்டியை வேலை ஏவாதீங்க, அவ படிக்க போறான்னு சொல்லுங்க.” வரம் கொடுத்தவனின் தலையிலேயே கைவைத்தாள்‌ மனைவி.

 எங்கே சுற்றி வந்தாலும், கடைசியில் வீட்டு வேலை செய்வதிலேயே வந்து நின்ற மனைவியின் செயலில் சுர்ரென்று முரளிக்கு கோபம் ஏறியது.

“கூட்டு குடும்பத்துல நீ சொல்லுற மாதிரி எல்லாம் எடுத்தேன் கவிழ்த்தேன்னு பேசிட முடியாது ரேவதி. அதுவுமில்லாமல், சுபத்ரா ஒரு ஆள் வீட்டுல அதிகப்பட்டதால, உனக்கு வேலை கூடிப் போச்சா என்ன?” என்றும் கேட்க,

“கூட்டு குடும்பத்துல, அந்த அதிகப்பட்ட ஒரு ஆள் வாங்குற சம்பளம் பொதுவுல வராமல், தனியா, அவங்களோட அக்கவுண்ட்க்கு போகும் போது, அவங்களுக்கும் சேர்த்து செய்யுற சின்ன வேலைக் கூட எனக்கு அதிகப்படியான வேலை தான் ங்க.”

மனைவியின் பதிலில் உண்மையிலேயே வாயடைத்துப் போனான் முரளி.

“ம்ஹூம்… அவங்க சம்பளத்தை வாங்கி தனியா சேர்த்து வைப்பாங்க, நான் வீட்டுலயே இருந்து அவங்களுக்கு சேவகம் செய்யணுமோ?” ஒருமாதிரியான குரலில் நொடித்துக் கொண்டாள் ரேவதி.

 “இதுல, இப்போ அவங்க ராசியான மருமகள்னு புரளியை வேற ஒருசிலர் கிளப்பி விட்டுட்டு திரியிறாங்க. ராசியானவங்களை, சொல்லுறவங்க அவங்க வீட்டுக்கே கூட்டிட்டு போய் பூ போட்டு கும்பிடட்டுமே.”

மனைவியின் பேச்சில் இது என்ன புதுக்கதை என்பது போல பார்த்தவனிடம், “கேஸ்ல ஜெயிச்சு நம்ம இடம் நம்மகிட்டயே வந்திடிச்சில்ல, அன்னைக்கு உங்க தவமணி பெரியம்மா, சுபா வந்த ராசிதான், எல்லாம் நல்லபடியா சீக்கிரமே முடிஞ்சிட்டுன்னு சொல்லுறாங்க.”

“அந்த மருமக தான் ராசியானவன்னா, அப்போ நாங்கல்லாம் யாரு? எனக்கு வந்த கோபத்துக்கு ஏதாவது அவங்களை சொல்லியிருப்பேன்… ஆனா அவங்களை ஏதாவது சொன்னா, நீங்க எல்லாரும் துள்ளி குதிச்சு சண்டைக்கு வருவீங்கன்னு தெரிஞ்சு தான், பேசாம இருந்தேன்.”

 “பரவாயில்லையே… எம்பொண்டாட்டிக்கும் அப்பப்ப மூளை நல்லா வேலை செய்யுதே!” கிண்டலடித்த முரளி,

“உனக்கு உறவுகளோட சேர்ந்து வாழுறதோட பலம் தெரியலை ரேவதி. எப்பவும் எல்லாரையும் குற்றம் சொல்லி, எதிர்மறையா சிந்திக்கிறதை விட்டுட்டு நேர்மறையா சிந்திச்சி பாரு, உங்கண்ணுக்கு எல்லாருமே நல்லவங்களா தெரிவாங்க.”