குருமூர்த்தி வீட்டுக்குள்ளே அப்படி ஒரு நடை. அவரால் அமர முடியவில்லை. அமர்ந்தாலே காதுக்குள் வந்து குடைகிறான் நல்லவன்.
“எப்போ கல்யாணம்? முடிவு பண்ணிட்டு சொல்லுங்க. அடுத்த வாரம் நாள் நல்லா இருக்கா பாருங்க, அப்போவே முடிச்சிடலாம்” என்கிறான்.
அவன் முடிவு எடுத்து எனக்கு தகவல் கொடுக்கிறானா?
அப்படி மட்டும் இருக்கட்டும், அவன் தோலை உரிச்சிடுறேன்!
ம்ப்ச். இப்போ அதுவா முக்கியம். அவன்கிட்ட இருந்து சம்யுக்தாவை எப்படி பாதுகாக்கிறது?
பிடிவாதத்தோட உச்சம் இந்த பேட்டை ரௌடி!
ஆஹ். என்கிட்ட அவன் பிடிவாதம் வேலைக்கு ஆகாது. அவன் பெரிய சூரனா கூட இருக்கட்டும். கல்யாணம் என்னை மீறி நடக்காது!
அவரின் போன் விடாமல் ஒலிக்க, “யோவ் யாருயா அது? எடுக்கலைன்னா விட மாட்டியா? திரும்ப, திரும்ப கூப்பிடுற நீ? நேர்ல வந்தேன் உப்பு கண்டம் போட்டுடுவேன்” என்று அந்த நபரை கடித்து வைத்தார் குருமூர்த்தி.
“சார். நாங்க உங்களை நேர்ல தான் மீட் பண்ணனும். இப்போ வரலாமா?” என்று எதிர்பக்கம் இருந்தவன் கேட்க,
“அடிங்க. என்ன லந்தா? நேர்ல வருவியோ? எங்க வந்து தான் பாரு நீ? முழுசா வீடு போய் சேர மாட்ட!” என்று மிரட்ட,
“சார். சார் உங்க பிளாட்டுக்கு கீழே தான் நிக்கிறோம். வரவா?” என்றான் அவன்.
“டேய். யாருடா நீ? ஏற்கனவே நான் கொலைவெறியில இருக்கேன். பேசாம போனை வைச்சிடு”
“சார். சார். ப்ளீஸ், போனை வைச்சுடாதீங்க. சர்வா சார் உங்களை மீட் பண்ண சொல்லியிருக்கார். அவர் கல்யாணத்துக்கு எங்க கம்பெனியை தான் அப்ரோச் பண்ணியிருக்கார். ரொம்ப பெரிய ஆர்டர் இது. அஞ்சு நிமிஷம் மட்டும் டைம் கொடுத்தா கூட போதும் சார், ப்ளீஸ், மனசு வைங்க சார்” என்று எதிரில் இருந்தவன் கெஞ்ச,
குருமூர்த்தியோ அவன் வேகத்தில் அதிர்ந்து போய் போனையே வைத்துவிட்டார்.
“இப்போ என்னாச்சுன்னு தெரியலையே? நல்லா இருந்த மனுஷன், வேர்த்து போய் உட்கார்ந்திருக்காரு” குணா முனகியவன்,
“முதலாளி, முதலாளி சார்” என்று குருமூர்த்தி முன் நின்று கையை ஆட்டினான்.
“முதலாளி போன் வருது பாருங்க” என்றவன் அவர் தூக்கி எறிந்திருந்த போனை எடுக்க போக,
“டேய், டேய். அதை எடுக்காத” என்று குருமூர்த்தி வேகமாக சொன்னார்.
“ஏதோ ஈவென்ட் மேனேஜ்மேண்ட் கம்பனி பேர் வருது முதலாளி” என்று குணா சொல்ல,
“தெரியும்டா. எடுத்து தொலையாத” என்று குருமூர்த்தி கடுப்படித்தார்.
“என்ன முதலாளி? ஏன் இவ்வளவு டென்சன்?” என்று குணா கேட்க,
“டேய் கேள்வியா கேட்டுட்டு இருக்காம ஊருக்கு கிளம்புறதுக்கு ஏற்பாடு பண்ணு போ” என்று அவனை விரட்டிய மனிதர், வசுந்தராவிற்கு அழைத்துவிட்டார்.
சர்வாச்சார்யா சும்மா எல்லாம் பேசும் ஆள் இல்லை. அவனை எந்த கணக்கிலும் சேர்க்க முடியாது. ஏடாகூடமாக அவன் எதுவும் செய்து வைக்குமுன், குருமூர்த்தி இதை தடுத்தாக வேண்டும்.
“நான் ஊருக்கு கிளம்பணும். என் பொண்ணை உடனே கூட்டிட்டு வந்து விட சொல்லுங்க” என்றார் குருமூர்த்தி விறைப்பாய்.
“நான், நான் சொல்றேன். ஆனா அதுக்கு முன்னாடி சர்வா உங்ககிட்ட ஏதும் பேசினானா?” என்று வசுந்தரா கேட்க,
“அவர் எதாவது பேசிட்டு இருப்பார். நீங்க நான் சொன்னதை”
“உங்ககிட்ட பேசினதால தான் அவசரப்படுறீங்க. சரியா”
“நாந்தான் சொல்லிட்டேனே. அவர் பேசுறதை எல்லாம் நான் கேட்டுக்க முடியாது. எனக்கு என் பொண்ணு வரணும். இப்போவே”
“நாம மீட் பண்ணி பேச வேண்டியிருக்கு” வசுந்தரா சொல்ல,
“ஒஹ். நீங்க அவருக்கு சப்போர்ட்டா? அவர் என்ன பண்ணாலும் இப்படித்தான் சப்போர்ட் பண்ணுவீங்களா?” குருமூர்த்திக்கு கோவம் வந்துவிட்டது.
“அவன் என்ன வேணா பண்ற ஆள் இல்லை. என் மகன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. அவன் சரியானதை தான் செய்வான்” வசுந்தரா மிகவும் ஆணித்தரமாக சொன்னார்.
“இதனால, இதனால தான் அவன் ஆட்டமா ஆடிட்டு இருக்கான். என்கிட்ட இது நடக்காது. சொல்லிடுங்க உங்க ராஜா மகன்கிட்ட”
“கோவப்பட்டா எப்படி பேச? முதல்ல நீங்க நிதானத்துக்கு வாங்க”
“என் பொண்ணு என்கிட்ட வந்தா நான் நிதானம் ஆகிடுவேன்”
“சம்யுக்தா உங்ககிட்ட வராம எங்க போயிடுவா? வருவா”
“இல்லை எனக்கு உடனே வந்தாகணும்”
“ஸப்பா. நீங்களும் அவனை மாதிரிதான் பிடிவாதம் பிடிக்கிறீங்க? நான் என்ன பண்ணட்டும்?” வசுந்த்ரா சலித்து கொண்டார்.
இவ்வளவு நேரம் மகனுடன் மல்லு கட்டியிருந்தார். இப்போது இவர்!
இருவரும் ஆளுக்கொரு பக்கம் இழுக்க, நீதிபதிக்கு தலைவலித்தது.
“உங்க மகன் அளவுக்கா நான் பிடிவாதம் பிடிக்கிறேன்? அவன் ஒரு அராஜக குதிரை. கடிவாளம் போட கூட முடியாம ஆட்டாமா ஆடிட்டு இருக்கான்! அவனோட போய் என்னை சேர்த்து பேசுறீங்க? அதெப்படி நீங்க இப்படி சொல்லலாம்?” குருமூர்த்தி மரம் ஏறி கொண்டே இருந்தார்.
“சரிரி. நீங்க அவன் அளவுக்கு இல்லை. நாம பேச வேண்டியதை பேசலாமா?” வசுந்தரா கேட்க,
“என் பொண்ணு இன்னும் வரலை” என்றார் குருமூர்த்தி.
“நான் உங்ககிட்ட பேசி முடிச்சா தானே அவன்கிட்ட பேச முடியும்”
“நாம பேசி முடிச்சுட்டோம். நீங்க அவர்கிட்ட சொல்லி என் மகளை”
“இதுக்கு மேல என்னால முடியாது. உங்க பொண்ணை பத்தி நீங்க அவன்கிட்டேயே கேட்டுக்கோங்க போங்க” என்று வசுந்தரா வைத்துவிட்டார்.
அவரும் எவ்வளவு தான் பொறுமையாக இருப்பது!
அவரின் ராஜா மகன் சில நிமிடங்களுக்கு முன்பு தான் போனில் அழைத்து, “மாம். எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க” என்றான்.
“கல்யாணமா? என், என்ன சர்வா, என்ன திடீர்ன்னு” வசுந்தரா அதிர,
“மாம். எனக்கு மேரேஜ் பண்ணிக்கிற வயசு தானே?” என்று மகன் அவரையே கேட்டான்.
“ஆ. ஆமா, ஆமாதான் சர்வா. ஆனா, சடனா சொல்றியே அதான்”
“அடுத்த வாரம் கூட ஏதோ முகூர்த்த நாள்ன்னு சொல்லிட்டு இருந்தீங்க இல்லை. அதையே பாருங்க”
“சர்வா, கொஞ்சம் இரு. நாம முதல்ல டீடைலா பேசணும். பொண்ணு யாருன்னு”
“ம்ப்ச் என்ன கேள்வி இது? இவதான்”
“எவதான்?”
“மாம். இவளோட அப்பாகிட்ட ஏற்பாடு பத்தி பேசுங்க. எப்படியும் அவரே உங்களுக்கு கூப்பிடுவார். தெளிவா பேசிடுங்க. இந்த மாசம் சரியா இருக்கும். தள்ளி போட வேண்டாம்”
“சம்யுக்தா. அவளை தானே சொல்ற”
“மாம்” மறுபக்கம் மகன் சத்தமிட்டான்.
“என்ன சர்வா?” வசுந்தரா கொஞ்சம் கிலியுடனே கேட்டார்.
வேற யாரையாவது? ம்ஹூம். இருக்காது.
“நீங்க இவ்வளவு ஸ்லோவா இருந்தா வேலைக்கு ஆகாது. நான் அப்பாகிட்ட பேசிக்கிறேன்”
“நோ, நோ சர்வா. நானே அப்பாகிட்ட பேசுறேன். அவர் ஏற்கனவே கொஞ்சம் டென்க்ஷனா தான் இருக்கார்”
“மாம். நீங்க ஸ்லோன்னு இதுக்கு தான் சொல்றேன். அவர் ஆபிஸ் பிரச்சனை முடிஞ்சு பத்து நிமிஷம் ஆகிடுச்சு. அவர் வீட்டுக்குள்ள தான் வந்துட்டு இருக்கார். நீங்க ஸ்பீக்கர் ஆன் பண்ணுங்க” என்றான் மகன்.
“என்ன வசு? ஏன் இப்படி இருக்க?” என்று சிவப்பிரகாசம் கேட்க, வசுந்தரா கணவரிடம் விஷயத்தை சொல்லவும்,
“சர்வா. ஏன் திடீர்ன்னு இப்படி ஒரு முடிவு?” என்று கேட்டார் தந்தை.
சம்யுக்தா தான் மருமகள் என்பதில் சிவபிரகாசத்திற்கு அதிர்ச்சி எல்லாம் இல்லை. அவருக்கு முன்பே தெரியும்.
மகன் வெளிநாட்டில் இருந்த சமயம், சம்யுக்தா பயிற்சியில் இருக்கும் வீடியோ, கல்லூரியில் இருக்கும் வீடியோ, அலுவலகத்திற்கு செல்லும் வீடியோ என்று எல்லாம் அவன் அறை தொலைக்காட்சியில் ஓடி கொண்டிருக்கும்.
குடும்பத்தினர் அடிக்கடி அவனை பார்த்து வர செல்லும் போதெல்லாம், இதை கண்டிருக்கிறார்கள்.
கிட்டதட்ட எல்லோருக்கும் இது தெரியும். ஆனால் தெரியாதது போல் அத்தைகள் ஒதுங்க, சிவப்பிரகாசம் தம்பதி அப்படி இருக்க முடியாதே!
“யோசிக்க என்ன இருக்கு டாட்? ஒன்னுமில்லை. நான் பிக்ஸ்ட். நீங்களும் பெட்டர் பிக்ஸ் ஆகிக்கோங்க” என்று முடித்துவிட்டான்.
ஒருமுறையோடு இது முடியவில்லை. சிவப்பிரகாசம் பல சூழ்நிலையில் மகனிடம் பேசியிருக்கிறார்.
பார்ட்டியில் வைத்து, “உன்னோட மனைவியா வர சம்யுக்தாவிற்கு நிச்சம் தகுதி இருக்கு, ஆனா அவளோட கடந்தகாலம் சொல்லிக்கிறபடி இல்லை. நீயே பாரு இங்க இருக்க எல்லாருக்கும் ஒரு மதிப்பு இருக்கு. ஆனா? நாம இதை கண்டுக்காம போக நினைச்சாலும் உலகம் அப்படி போகாது. நிச்சயம் சம்யுக்தாவோட பேமிலி பத்தி பெரிய விவாதமே நடக்கும். கட்டாயம் நம்ம பிஸ்னஸ்லையும் அதோட பாதிப்பு இருக்கும். பார்ட்னர்ஸ் கேள்விகளை நாம சமாளிக்கிறது கடினமா இருக்கும். லாஸ் ஆகும் சர்வா” என்று மகனுக்கு தெளிவாகவே சொல்ல,
“டாட் எல்லோரோட கடந்த காலத்திலும் ஏதோ ஒரு பிளாக் மார்க் நிச்சயம் இருக்கும். ஏன் என்னையே எடுத்துக்கோங்க. உயிர்க்கு பயந்து பதுங்கி இருந்தேன் தானே நான்”
“சர்வா. ட்ரை டூ அண்டர்ஸ்டெண்ட். உன்னோட விஷயம் வேற. குருமூர்த்தி விஷயம் வேற”
“டாட். நிச்சயம் வேற தான்! அவர் வாழ்க்கை முழுக்க அவர் பைட் பேக் பண்ணியிருக்கார். எங்கேயும் பணிஞ்சு போகலை, ஓடி போகல. பணம், அதிகாரம் எல்லாம் எதுவுமில்லாம நிமிர்ந்து நின்ன அவரோட தைரியம் எல்லோருக்கும் வந்திடாது”
“எஸ். அவருக்கு தைரியம் அதிகம் தான். ஆனா அவர் செஞ்ச தொழில் தப்பு தானே சர்வா?”
“தப்பு சரி எல்லாம் பசி வர வரைக்கும் தான் டாட். அவரோட பேட் லக் அவருக்கு பேமிலி இல்லை”
“பேமிலி இல்லாத எல்லோருமே இப்படியான தொழிலுக்கு போறதில்லை தானே சர்வா?”
“பேமிலி இருந்தும், அதை விட மோசமான தொழில் செய்றவங்களும் இருக்காங்க தானே டாட்?”
“சர்வா. உனக்கு எப்படி புரிய வைக்க நான்?” சிவப்பிரகாசம் அங்கலாய்த்து கொள்ள,
“ப்பா. என்னை புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. போதும்” என்றான் மகன்.