14

தென்றலின் கைப்பேசி விடாமல் அடித்துக் கொண்டே இருந்தது. வாசுகி இதோடு பத்தாவது தடவை மகளுக்கு அழைக்கிறார். ஒவ்வொரு முறையும் அழைப்பு வரும்போது கைபேசியை வெறித்து பார்த்தாலே தவிர அதனை ஏற்கவில்லை.

கல்லூரிக்கும் செல்ல விருப்பமில்லாமல் அறையிலேயே முடங்கி கிடந்தாள் தென்றல்.. அவளின் அறை தோழி கேட்டதற்கு வயிற்று வலி என்று பொய் சொன்னாள்..

மீண்டும் அவளது கைபேசி அலற வேண்டா வெறுப்பாய் எடுத்து காதில் வைத்தாள்.

“ஹேய் எங்கடி இருக்க எத்தனை வாட்டி ஃபோன் பண்றேன்.. என்ன பண்ணிக்கிட்டு இருக்க” மகள் அழைப்பை ஏற்காததால் வாசுகிக்கு பதற்றம்..

“ம்மா காலையில தானே ஃபோன் பண்ணேன்.. உடம்பு சரியில்ல இன்னைக்கு நான் காலேஜ் போகலைன்னு.. தூங்கிட்டேன் அதுக்குள்ள எதுக்கு இத்தனை போன்”

” இப்போ உடம்பு எப்படி இருக்குன்னு கேட்க தான்.. நீ என்ன பண்ணு நாளைக்கு வெள்ளிக்கிழமை தானே..காலேஜ் முடிஞ்சதும் நேரா கிளம்பி ஊருக்கு வந்துரு.. ” திடீரென்று வாசுகி ஊருக்கு அழைக்க தென்றலுக்கு யோசனையோடியது.

” இப்பதானே அம்மா ஊருக்கு வந்துட்டு வந்தேன்.. திரும்ப எதுக்கு” அலுத்து கொண்டாள் தென்றல்.

” எல்லாம் உன் அப்பா பண்ண வேலை தான்.. தேவையில்லாம  எல்லாம் கூடி வர நேரத்துல அவர் தங்கச்சிக்கு போன போட்டு எல்லாத்தையும் சொல்லிட்டாரு.. அவ உடனே கிளம்பி வரேன்னு சொல்லிட்டா. நீ அங்க இருக்கிறது சரி இல்லை.. நேரா உன்ன பாக்க ஹாஸ்டல் வந்தாலும் வருவா.. அதான் சொல்றேன் கிளம்பி இங்க வந்துரு.. பிரச்சனை இவ்வளவு தூரம் வந்துருச்சு பேசி ஒரு முடிவு எடுத்து ஆகணும்… நவீன் வீட்ல உன்னை எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சு போச்சாம். எப்ப பூ வைக்க வரட்டும்னு கேக்குறாங்க.”

வாசுகி தன் போக்கில் பேசிக்கொண்டே போக  தென்றலுக்கு தலைவலி உயிர் போனது.

“ம்மா.. நான் நாளைக்கு கிளம்பி வரேன்..” மகளின் சோர்ந்த குரலில் வாசுகியின் மனம் கனிந்தது.

” டேப்லெட் சாப்டியா.. சரி நீ கொஞ்ச நேரம் படுத்து தூங்கு. இதுக்கு தான் சொன்னேன் அவ்வளவு தூரம் போய் படிக்க வேணாம்னு. கிட்டயே இருந்திருந்தா  உடம்பு சரியில்லாதப்போ யாரு பார்த்துக்குவானு  மனசு கிடந்து அடிச்சுக்காது..” எப்படியோ பேசி வாசுகியை சமாளித்தவள்  படுக்கையில் விழுந்தாள்..

மூன்று நாட்களுக்கு முன்பு சசி மித்ரன்  அவன் மனதில் இருந்ததை சொல்ல கேட்டவளுக்கு அங்கே நிற்க முடியவில்லை. எதையோ இழப்பதைப் போல மனம் பாரமாய் கிடப்பது.. தந்தையிடம் பேசிப் பார்த்தால் என்ன?

அடுத்த கணமே அந்த எண்ணத்தை குழி தோண்டி புதைத்தாள். அகிலன் பிரச்சனை வேறு குடும்பத்தில் தலை தூக்கிருக்கிறது. இந்த சமயத்தில் தேவையில்லாமல் சசியை பற்றிய பேச்சு வந்தால் அதன் முடிவு அவளுக்கு சாதகமாய் அமையாது.

ஊருக்கு செல்லவும் மனம் வரவில்லை. யோசித்து படுத்து கிடந்தவள்  கடந்த மூன்று நாட்களாக சசி அனுப்பிய குறுஞ்செய்திகளை வாசித்துப் பார்த்தாள்..

ஏதேதோ அனுப்பிருந்தான்.. அந்த குறுஞ்செய்திகளை படிக்கும் போது கண்களில் வழிந்த கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஒரு கட்டத்தில் அவனின்  எண்ணை பிளாக்கில் போட்டாள்.. அன்றைய பொழுது முழுவதுமே  மனதில் பாரத்தோடு கழிய மறுநாள் கல்லூரி முடிந்ததும்  இரவு கோயம்புத்தூர் பஸ்ஸில் ஊருக்கு கிளம்பினாள். சென்றமுறை அவளோடு சசி வந்த ஞாபகம்.

பேருந்து நகரத் தொடங்க  நண்பன் ஒருவனை ஊருக்கு அனுப்ப பேருந்து நிலையம் வந்திருந்தான் சசி. இந்த மூன்று நாட்கள் அவனுக்குமே பெரும் சவாலாய் அமைந்தது. தென்றலை மறக்கவும் முடியாமல், அவளின் நிராகரிப்பை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் தவித்தான்.

அவளைப் பார்க்க முடியாமல் திணறினான். எந்த விதத்திலும் அவன் தன்னை சந்திக்காத வரை பார்த்துக் கொண்டாள் தென்றல்.. தென்றலின் பேருந்து நகர தொடங்கியது.

மதுரைக்கு நண்பனை பேருந்தில் ஏற்றிவிட்டு  திரும்பிய சசியின் கண்களில் கோயம்புத்தூர் செல்லும் பேருந்தில் சென்று கொண்டிருந்த தென்றல் கண்ணில் பட்டாள். சரியாக அதே நேரம் அவளும் அவனை பார்த்தாள்..

சசி எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. அவனின் கால்கள் ஆட்டோமேட்டிக்காக  தென்றல் சென்று கொண்டிருந்த பேருந்தின் பின்னால் ஓட தொடங்கியது.

தென்றலின் இதயம் படுவேகமாக துடிக்கத் தொடங்கியது. அதன் துடிப்பு சத்தம் அவளுக்கே கேட்டது. நெஞ்சின் மீது கையை வைத்து அழுத்தியவள்  ஜன்னலில் இருந்து எட்டி பேருந்தின் பின்னால் ஓடிவந்து கொண்டிருந்த சசியை பார்த்தாள்.

கால் இடரி சசி கீழே விழுந்தான். பேருந்து சென்று விட்டது. கண்ணீரை கட்டுப்படுத்த இயலாமல் அதன் போக்கில் விட்டு விட்டு சீட்டில் சாய்ந்து அமர்ந்து கண்ணை மூடினாள் தென்றல்.

அவள் வீட்டிற்கு செல்வதற்கு முன்பே மாதவி வந்து காத்திருந்தார். இவள் வீட்டிற்குள் நுழையும் போதே சண்டையும் சச்சரவுமாக இருந்தது. மாதவியின் குரல் ஓங்கி ஒலித்தது.

” என் அண்ணன் என் அண்ணனு உன்னை மலை மாதிரி நம்புனதுக்கு கடைசில என் தலையில இடி இறக்கிட்ட. இப்படி நம்ப வச்சு கழுத்தறுக்க எத்தனை நாள் பிளான் போட்ட.. தென்றல் பொறந்ததிலிருந்து இவதான் என் மருமகன்னு நான் நினைச்சுட்டு இருக்கிறது உனக்கு தெரியாதா..

சரி அவ உங்க பொண்ணு. எவனுக்கு கட்டிக் கொடுக்கிறதும் உங்க விருப்பம்.. நான் யாரு உன் கூட பிறந்த தங்கச்சி. ஒரு வார்த்தை இப்படின்னு என்கிட்ட சொல்ல தோணிச்சா உனக்கு.. அப்படியே எல்லாத்தையும் கமுக்கமா செஞ்சுட்டு கடைசியா சொன்னா இவ என்ன செஞ்சிடுவான்னு நினைப்பு..” பரசுராம் மாதவியை சமாளிக்க முடியாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவ்வப்போது அவரின் பார்வை மனைவியை தொட்டு மீண்டது. பல தடவை வாசுகியிடம் கூறினார்.

” வாசு மாதவி கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடலாம். நாள பின்ன இதையே வெச்சி பெரிய பிரச்சனை பண்ணுவா.. “

” அதெல்லாம் ஒன்னும் வேணாம் ஏன் தங்கச்சி பாசம் சுண்டி இழுக்குதா.. உங்க தங்கச்சி என்ன பிளான் போடறான்னு எனக்கு தெரியாதா.. என்ன நடந்தாலும் சரி உங்க குடும்பத்துல மாட்டி நான் சிக்கி சீரழிஞ்சது போதும். என் பொண்ணுக்கும் அந்த நிலைமை வர விடமாட்டேன். நல்லபடியா எல்லாம் நடந்து முடியுற வரைக்கும் நீங்க வாயைத் திறக்க கூடாது.. ஏதாச்சும் நான் கேள்விப்பட்டேன் அப்புறம் இருக்கு உங்களுக்கு.. ” கணவனின் வாயை அடைத்து விட்டார் வாசுகி.

கணவன் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்த வாசுகி இப்பொழுது பேச வாய் திறந்தார்.

” அண்ணி.. இப்ப என்ன நடந்து போச்சுன்னு இப்படி கிடந்து குதிக்கிறீங்க.. பார்த்திருக்கோம் மத்தபடி மேற்கொண்டு எதையும் நாங்க இன்னும் பேசி முடிவு எடுக்கல. உங்கள எல்லாம் அப்படி ஒதுக்கி வச்சுட்டு நாங்க என்னைக்கு எங்க குடும்பம்னு மட்டும் பார்த்துருக்கோம்? எதுவாயிருந்தாலும் உங்க அண்ணன் உங்க கிட்ட சொல்லாம செய்வாரா? நீங்கதான் பல தடவை எங்கள ஒதுக்கி வச்சு நிறைய விஷயம் பண்ணிருக்கீங்க.

அத பத்தி நாங்க ஒரு வார்த்தை கேட்டு இருப்போமா.. எல்லாம் நல்லபடியா முடிவாகட்டும் அப்புறம் சொன்னா என்ன.. அப்ப கூட அவர் உங்க கிட்ட சொல்றேன்னு தான் சொன்னாரு நான் தான் அதெல்லாம் ஒன்னும் வேணாம் எல்லாம் நல்லபடியா முடிவானதும்  முறையா சொல்லிக்கலாம்னு சொன்னேன்.”

உண்மையை எடுத்துக் கூறினாலும் நாத்தனாருக்கு குட்டு வைக்க தவறவில்லை வாசுகி. வாசுகி கூற்றின் உட்பொருள் மாதவிக்கு விளங்காமல் இல்லை.

” அதான் மாப்பிள்ளை வீட்ல வந்து பேசிட்டு போயிட்டாங்களே. அடுத்து பூ வைக்க வருவாங்க. எல்லாம் முடிஞ்சு பத்திரிக்கை அடிக்கும் போது தான் நீங்க என்கிட்ட சொல்லலாம்னு இருந்தீங்களா? என்ன விடுங்க என் புருஷனுக்கு மரியாதை இருந்திருந்தா இந்த மாதிரி நீங்க யாராச்சும் பண்ணியிருப்பீங்களா?

அந்தாளு சும்மாவே அந்த பேச்சு பேசுவாரு. உன் அண்ணன் வீட்டில உனக்கு கிடைச்ச மரியாதை பாருன்னு என்னை எவ்வளவு கேவலமா பாத்தாரு தெரியுமா.. என் மாமியார் மூஞ்சிலயும் நாத்தனார் மூஞ்சிலயும் இனிமே நான் எப்படி முழிப்பேன்..” மாதவி பெருங்குரலெடுத்து கத்தினார்.

அந்த நேரத்தில் சரியாக தென்றல் வீட்டிற்குள் நுழைய நடக்கும் சண்டையை ஒரு ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவளின் தங்கை  வான்மதி ஓடி வந்தாள்.

“அக்கா”.. வான்மதியின் அழைப்பை தொடர்ந்து அனைவரின் பார்வையும் தென்றலை தொட்டது.

“வாடிம்மா.. நீயும் ஒரு வார்த்தை சொல்லல.. கூட பொறந்த தங்கச்சின்னு  உங்கப்பனுக்கு  அக்கறை இல்ல. நாத்தனார்னு உங்க அம்மாவுக்கு மரியாதை இல்லை. அவங்க பொண்ணு நீ மட்டும் எப்படி இருப்ப? அத்தை இதுதான் விஷயம் அப்படின்னு ஒரு வார்த்தை என்கிட்ட சொல்ல உனக்கு வாய் வந்துச்சா?” மாதவியின் வசவுகளை வாங்கிக் கொண்டே வீட்டிற்குள் வந்த தென்றல் எதுவும் பேசாமல் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள் தங்கையோடு..

அதுவரை நடந்த பிரச்சனைகளைப் பற்றி அக்காவிடம் விவரித்து கொண்டிருந்தாள் வான்மதி. தங்கை சொல்வதைக் கேட்டுக் கொண்டே  காலை கடன்களை முடித்தவள்  வெளியே இன்னும் பேச்சு வார்த்தை கேட்க  அதனை உன்னிப்பாக கவனிக்க தொடங்கினாள்.

வாசுகி மகளுக்கு காபி போட செல்ல, தங்கையை சமாளிக்கும் பொறுப்பு இப்பொழுது முழுதும் பரசுராமிற்கு. அவரும் என்னென்னமோ சொல்லி மாதவியை சமாளிக்க முயன்றாலும் மாதவியின் கண்ணீர் குரல் அவர் மனதை அசைத்து தான் பார்த்தது.

” முடிவான என்னதான் சொல்ற அகிலனுக்கு தென்றல்னு என் புருஷன் பக்கம் எல்லார்கிட்டயும் நான் சொல்லிட்டுருக்கேன். இப்ப போய் இல்லன்னு சொன்னா அவங்க எல்லாம் என்ன பத்தி என்ன நினைப்பாங்க? உன் அண்ணன் பொண்ணு இருக்க எதுக்கு வெளியே பொண்ணு எடுக்குறன்னு கேட்க மாட்டாங்க?

யாரு எக்கேடு கெட்டா என்ன.. அகிலன பத்தி ஒரு நிமிஷம் நீ நினைச்சு பார்த்தியா.. தென்றல் மேல ஆசைய வச்சிட்டு  அது இல்லன்னா  அவன் எப்படி துடிச்சு போவானு யோசிச்சியா நீ? நீ எல்லாம் ஒரு தாய் மாமனா.. எல்லாம் உன் பொண்டாட்டி செய்ற வேலை.. எங்க அகிலனுக்கு உன் பொண்ண கட்டி கொடுக்க கேட்டுருவானு தானே படிக்கிற பொண்ண அவசர அவசரமா கல்யாணம் பண்ணி கொடுக்க பாக்குற.. என் வயித்தெரிச்சல கொட்டிக்கிட்டு இந்த கல்யாணம் நல்லபடியா நடந்துருமா என்ன” இறுதியில் மாதவி சாபத்தில் முடிக்க கை தவறி காபி கப் கீழே விழுந்து சிதறியது.

மாதவியின் வார்த்தையும் கப் கீழே விழும் நேரமும் ஒன்றாக அமைய வாசுகியின் மனதில் எதுவோ தவறாகப்பட்டது.

பரசுராமிற்கும் தங்கையின் பேச்சு உவப்பாக இல்லை.

” மாதவி எல்லாம் ஒரு அளவு தான் என்ன பேசிட்டு இருக்க நீ.. உன் பையனுக்கு கட்டிக் கொடுக்கலைன்னா என் பொண்ணுக்கு சாபம் விடுற அளவுக்கு உனக்கு மனசு வந்துருச்சா”.. பரசுராம் குரல் உயர்த்தியதும் மாதவியின் கண்ணீர் பெருகியது. கூடவே ஆங்காரத்தில்  கத்திக் கொண்டே போனார்.

ஒரு கட்டத்தில் ரத்த அழுத்தம் அதிகமாகி மாதவி மயங்கி விழ  பதறி தங்கையை தாங்கி பிடித்தார் பரசுராம்.. சத்தம் கேட்டு அறையில் இருந்த தென்றலும் வான்மதி ஓடிவர  வாசுகியும் அடித்து பிடித்து வந்தார்.

முகத்தில் தண்ணீர் தெளித்து, நன்றாக காற்று படும்படி செய்த பிறகே மெல்ல கண் திறந்தார் மாதவி.

கலங்கிய முகத்தோடு பரசுராம்
” பிபி மாத்திரை போட்டியா இல்லையா.. “

அசூசையாக முகத்தை திருப்பினார் மாதவி. அண்ணனின் பரிவும் கரிசனமும் அவருக்கு கசப்பாக இருந்தது. தென்றல் தன் வீட்டு மருமகள் என்று பல வருடமாக கனவு கண்டவருக்கு அது இல்லை என்றதும் தாங்க முடியவில்லை.

” நடிக்காத.. இப்படியே நான் செத்தா கூட உனக்கு சந்தோஷமா தான் இருக்கும். அதான் என் உறவே வேணாம்னு ஒரேடியா தலைமுழுகிட்டியே.. நான் மாத்திரை போட்டா என்ன போடலைன்னா உனக்கு என்ன.. முடிவா தென்றலை என் பையனுக்கு கட்டிக் கொடுக்க முடியுமா முடியாதா..” குரல் தளர்ந்திருந்தாலும் பிடிவாதத்தோடு  ஒரு முடிவை எதிர்நோக்கி காத்திருந்தார் மாதவி.

பரசுராமிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எப்படியாவது மாதவியை சமாளித்து விடலாம் என்று தான் எண்ணியிருந்தார். ஆனால் மாதவியின் இந்த பிடிவாதமும் கோபமும் பரசுராமை நிலைகுலைய செய்தது. வாசுகிக்கு கணவனை நினைத்து நெஞ்சம் பதறியது.

தங்கை மேல் இருக்கும் பாசத்தில்  வினையாக ஏதாவது கூறி விடுவாரோ என்கிற பதற்றம்  அவர் முகத்தில் நன்றாக தெரிந்தது.

” முடிவ சொல்றதுக்கு முன்னாடி இன்னொன்னும் சொல்றேன். ஒருவேளை உன் மகளை என் பையனுக்கு கட்டிக் கொடுக்கலைன்னா உனக்கும் எனக்கும் இருக்கிற உறவை இதோட முடிஞ்சு போயிரும். நான் செத்தா கூட பொறந்த வீட்டு கோடி துணியை நீ போடக்கூடாது. நீ செத்தாலும் நான் வரமாட்டேன். இதோட நம்ம உறவு அவ்வளவுதான்.. ” தளர்ந்து அமர்ந்தார் பரசுராம்.

“மாதவி”

” நீ எதுவும் பேச வேணாம் நான் கேட்ட கேள்விக்கு ஆமா இல்லைன்னு மட்டும் பதில் சொல்லு..” தன்னுடைய பிடிவாதத்தில் உறுதியாக இருந்தார் மாதவி.

“ஏங்க” வாசுகி நடுவில் ஏதோ பேச வர அவரை கைநீட்டி தடுத்தார்.

ஒரு நிமிடத்தில் முடிவெடுத்தார் பரசுராம்.. தெளிவாக வாசுகி முகத்தை பார்க்காமல் மாதவியின் கரத்தை பிடித்துக் கொண்டு வாக்களித்தார்.

” அகிலனுக்கே தென்றலே முடிச்சிடலாம்.. மாப்பிள்ளை கிட்ட சொல்லி வர சொல்லு.. “

“ஏங்க என்ன பேசிட்டு இருக்கீங்க” வாசுகி பதற

” போதும் வாசுகி எனக்கு இருக்கிற உறவே என் தங்கச்சி மட்டும் தான். அவளும் இந்த வீட்டு பொண்ணு தான். அவ மனசு கஷ்டப்படுத்திட்டு நம்ம பொண்ணு மட்டும் நல்லா வாழ்ந்துட்டுவானு நீ எப்படி நெனைக்குற.. இதுவரைக்கும் மாதவி உன் கிட்ட எப்படி வேணாலும் நடந்து இருக்கலாம்.

ஆனா நம்ம பசங்க கிட்ட அவ ஒரு நல்ல அத்தையா தான் நடந்திருக்கா. கண்டிப்பா தென்றல ஒரு மாமியாரா அவ நல்லா பாத்துக்குவான்னு நம்பிக்கை எனக்கு இருக்கு.. என் வார்த்தை மேல மரியாத இருந்தா தயவு செஞ்சு வாய மூடிட்டு உள்ள போ” வாசுகி மேற்கொண்டு பேச முடியாத அளவிற்கு அவர் வாயை அடைத்து விட்டார் பரசுராம்.

” ரொம்ப சந்தோஷம் ண்ணே.. எனக்கு தெரியும்.. அவ்ளோ சீக்கிரம் நீ என்ன விட்டுட மாட்டனு.. இப்பவே அவர் கிட்ட சொல்றேன்.. நீ கவலையே படாத தென்றல் யாரு அவளும் என் பொண்ணு தானே.. என்னை நம்பி அகிலனுக்கு கட்டி கொடு.. இதுவே உனக்கு ஒரு பையன் இருந்தா என் பொண்ணு அவனுக்கு தான் கட்டி வச்சிருப்பேன்.. எனக்கு என்ன உன் உறவு கடைசி வரைக்கும் இருக்கணும்..” சந்தோஷத்தின் உச்சியில் துள்ளி குதிக்காத குறையாக மாதவி உடனே இந்த விஷயத்தை கணவரிடம் சொல்ல ஓடினார்.

அங்கே பேயறைந்ததை போல் நின்று கொண்டிருந்த  தென்றலை பார்க்கவே சங்கடப்பட்டார் பரசுராம்.. தென்றல் மனதில் அடித்துக் கொண்டிருந்த சூறாவளி பற்றி அவருக்கு தெரியாது..

மெல்ல எழுந்தவர் தென்றலை நெருங்கி ” நவீன் ரொம்ப நல்ல பையன். அதுல மாற்றுக் கருத்தே கிடையாது. ஆனா எனக்கு வேற வழி தெரியல தென்றல். அப்பாவுக்காக” தென்றலின் கண்களைப் பார்க்க முடியாமல் வேறு எங்கோ பார்த்தபடி பேசி முடித்து சென்றார் பரசுராம்.

நவீன் என்ற போது கூட தந்தைக்காக மனதை தேற்றிக்கொண்ட தென்றலுக்கு அகிலன் என்றதும் தாங்கவே முடியவில்லை அவளால். பெற்றோர்களே அவளுக்கு சதி செய்வதை போல தோன்றியது. பெற்று வளர்த்த ஒரே காரணத்திற்காக அவளை பந்தாடுவதை பொறுக்க முடியவில்லை. முதலில் நவீன் என்றார்கள் இப்பொழுது மாதவி குறுக்கீடு வந்ததும் அகிலன் என்கிறார்கள். நாளை ஏதாவது பிரச்சனை வந்தால் வேறு ஒருவனை கை காட்ட மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்..

இவர்களுக்காக ஏன் கடவுள் எனக்கு கொடுத்த ஒரே வாழ்க்கையை நான் வீணாக்க வேண்டும்.. எனக்கு பிடித்த மாதிரி என் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் என்ன.. இப்படியான எண்ணம் தென்றல் மனதில் தோன்றியது. அந்த எண்ணமே அவளை அமைதியாக அறைக்குள் சென்று தாளிட சொல்லி, சசி மித்ரனின் எண்ணை அன் பிளாக் செய்ய வைத்து  அவனோட பேச வைத்தது..