ஹரே கிருஷ்ணா

இடம் மாறும் மனங்கள்!

சர்வேஷ், அங்கே தவமிருந்தான்.. ஏனோ வர்ஷினியிடம் பேசாமல் அவனுக்கு உறக்கம் வரவில்லை.. இவளானால்.. இன்னமும் அழைக்கவில்லை. நேரம் இந்திய நேரப்படி பத்திற்கு மேல்தான் இருக்கும் ‘என்ன பிரச்சனை.. இன்னமும் அப்பாவுடம் பேசிக் கொண்டிருக்கிறாள்’ என குமறிக் கொண்டான்.

வர்ஷினிக்கு, தந்தையின் முகம் இறுக்கமாக இருப்பதை மட்டுமே கவனித்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கும் இரவு உணவு இறங்கவில்லை. விஜயாவும் முகத்தினை பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர பேசவில்லை ஏதும்.

சர்வேஷ் வீட்டார் கிளம்பியதும்.. சிவகுமாரின் அக்கா மாமா வீடு இரவு உணவு முடித்துக் கொண்டு வீடு கிளம்பினர்.

மணி பத்தாகியும் வீட்டில் உள்ளவர்கள் உண்ணவில்லை. சிவகுமார் அமர்ந்து டிவியில் செய்திகள் பார்க்கத் தொடங்கிவிட்டார். வர்ஷினியோ போனோடு.. தந்தையின், பேச்சினையோ அவர் என்ன நினைக்கிறார் என பகிர்வதையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

விஜயா, மதுவிடம் பேசிக் கொண்டிருந்தார்.

நேரம்தான் கடந்தது.

வர்ஷினிதான் இரவு தோசை வார்த்தாள். தந்தையிடம் சென்று “சாப்பிடலாம் பா” என்றாள்.. பேச்சினை எதிர்பார்த்து.

அவரும் ஏதும் பேசவில்லை எழுந்து வந்தார் உண்பதற்கு.

விஜயா டிவியை ஆன் செய்து கொஞ்சம் சத்தமாக வைத்துக் கொண்டு பார்த்தார். என்னமோ இந்த அமைதி அவருக்கு பிடிக்கவில்லை.

சிவகுமார் உண்டு வந்து.. “ஏன் இவ்வளவு சத்தம்” என டிவி ரிமொர்ட் எடுத்து சத்தத்தின் அளவினை குறைத்தார்.

விஜயா “அப்புறம்.. ஏன் இவ்வளவு அமைதியாக இருக்கீங்க.. வீட்டில் நல்ல விஷயம்தானே பேசுகிறோம்.. கடைசி பெண்ணின் கல்யாணம்.. அதுவும் நல்ல இடம்.. முத்து அவங்க, எவ்வளவு அருமையாக பேசினாங்க.. மணிமணியாக இரண்டு பெண்கள்.. எப்படி சென்னையிலேயே வீடு வாங்கி குடி வந்திருக்காங்க.. அவங்க சொல்ல சொல்ல.. எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.. நம்ம பெண்ணையும் நல்லா பார்த்துப்பாங்கன்னு தோணுது.. உங்க அக்காவின் வீட்டோடு நல்ல பழக்கம் வேறு.. வேறு என்ன வேண்டும்.. மதுகிட்ட சொல்லணும்.. தர்ஷனை கூப்பிட்டு பேசணும் என இல்லாமல் என்னமோ மாதிரி இருக்கீங்க..” என்றார் கோவமாக.

சிவகுமார் “எல்லாம் சரிதான்..” என்றார் யோசனையோடு. அவருக்கும் இந்த குடும்ப அமைப்பினை பிடித்திருக்கிறது. ஆனாலும் பயமாக இருக்கிறது. அதனால் பேசவில்லை.

விஜயா “இப்போது என்ன உங்களிடம்தான் ஜாதகம் கொடுத்திருக்காங்கல்ல.. நாளைக்கே பார்த்திடலாம்.. உங்கள் மனசு அப்போதாவது மாறுதா பார்க்கலாம்.. கொஞ்சம் பொறுமையாகத்தான் யோசித்து பாருங்களேன்..” என்றார்.

வர்ஷினி “அம்மா, எனக்கு புரியலை.. நீங்க பொதுவாக ஜாதகம் பாருங்க. ஆனால், இப்படி அப்பாவின் தேவையில்லாத பயத்திற்கு ஜாதகம் பார்த்து.. அதை என்கரேஜ் பண்ணாதீங்க.. அப்படி மனிதரை நம்பாதீர்கள்.. அதுவும் என்விஷயத்தில் அது வேண்டாம்.. அப்பாவிற்கு எப்போது சர்வேஷ் பிடிக்குதோ.. எப்போது நான் வெளிநாடு போனாலும்.. முன்போல தனியே நிற்கமாட்டேன்.. என பயம் போகிறதோ, அப்போது நான் சர்வேஷ்ஷோடு வாழ போயிக்கிறேன் ம்..” என்றாள், குறையாத கோவத்தோடும் வருத்தத்தோடும்.

சிவகுமார் எழுந்து சென்றுவிட்டார் தனது அறைக்கு. இது நேரம் வரை எதோ மாறியிருக்கிறார் என எண்ணியிருந்தால் பெண்.. ஆனால், சர்வேஷ் வீட்டார் சென்றதும் அமைதியாகிவிட்ட தந்தையின் மேல்.. கோவம்தான் வருகிறது பெண்ணுக்கு.

தன் அறைக்கு வந்துவிட்டாள். சர்வேஷ் அப்போதே செய்தி அனுப்பியிருந்தான். ஆனால், இப்போதுதான் பார்த்தாள். ஒருமணி நேரம் முன்பாக வந்திருந்தது.. “என்ன ஆச்சு” என ஒரு எமொஜி.. கண்களை விரித்துக் கொண்டு வந்து நின்றது அவள் முன்.. அவளுக்கும் அதே விழிப்புத்தான்.. ஓய்ந்து போயிற்று. அப்படியே சாய்ந்து அமர்ந்தாள்.

வர்ஷினி, தன்செய்தியை பார்த்துவிட்டது அறிந்து.. தானே அழைத்தான் சர்வா.

அழைப்பினை ஏற்றாள் பெண்.. என்னமோ பேசவில்லை சற்று நேரம்.. சர்வா இதமாக “வர்ஷி” என இரண்டுமுறை அழைத்தும் பதிலில்லாததால்.. அவனும் அமைதியாகினான். எல்லாம் சரியாக இருக்கிறது.. ஆனால், பெரியவர்களுக்கு மனது நிறையவில்லையே என எண்ணம். அதை சர்வேஷ்ஷிடம் காட்டிடக் கூடாது என அமைதியானாள்.

சர்வேஷ் “வர்ஷி, பேசாமல் இருக்காத.. எல்லாம் சரியாகிடும்” என பேச்சினை தொடங்கினான்.

வர்ஷி “என்ன சரியாகும்.. சரியாக்கணும்” என்றாள்.

“யெஸ் பேபி.. சரியாக்குவோம்..” என்றான் ஆழமான குரலில்.

வர்ஷினிக்கு என்னமோ போலிருந்தது.. கல்யாணம் செய்து வையுங்கள் என போராடுவது அவளுக்கு இந்த நொடி.. சங்கடமாக இருந்தது, தந்தையின் அமைதியில். அந்த அமைதியை தொடர்ந்தாள்.

சர்வேஷ் “நான் சத்தியமாக கல்யாணம் செய்து கொள்வேன் என உன்னை பார்க்கும் வரை நினைக்கவில்லை வர்ஷி..” என்றான்.

பெண்ணவள் ஏதும் சொல்லவில்லை..

அவனே தொடர்ந்தான் “அந்த மணமேடை.. மாலை.. அலங்காரம்.. எல்லாம் எனக்கு பயமாகவே இருந்தது. எங்காவது என்னை பிடிக்கவில்லை என மீண்டும் கடைசி நேரத்தில் யாரேனும் சொல்லிவிடுவார்களோ என எண்ணம்தான், மாற்றிக் கொள்ள முடியவில்லை. ஆனால், உமர் கல்யாணத்தில் மீண்டும் நீ வந்த.. மனசு எல்லா ஏமாற்றத்தையும் ஏற்றுக் கொண்டுவிட்டது.. கடக்க தயாராகியது.. உன்னை தாங்கிக் கொள்ள.. ம்.. ப்ளீஸ்.. நம்பு சரியாகிடுகிறேன்” என்றான்.

வர்ஷினிக்கு இந்த தூரம் கொடுமையாகத்தான் இருந்தது.. “ம்.. சரியாகிடும்..” என்றாள், அவன் மனம் வாடுவது பிடிக்காமல்.

மீண்டும் சற்று நேரம் பேசிக் கொண்டிருதுவிட்டு உறங்கினர் இருவரும்.

மறுநாள் காலையில் வர்ஷினி அலுவலகம் கிளம்பி, தன் அறையிலிருந்து வெளியே வந்தாள். மனதில் ஆயிரம் குழப்பம்தான்.. நேற்றின் குழப்பம் எல்லாம் அப்படியே நின்றது மனதில்.. ‘சர்வாவோடு அப்பா பேசவில்லை.. சர்வாவிற்கும் அது வருத்தம்.. இந்த ஜாதகம் வேறு என்ன சொல்லுமோ..’ எனதான். யோசனையோடு வெளியே வந்தாள்.

அன்னை சமையலறையில் இருந்தார்.. தந்தை நீண்டநாள் சென்று அவள் அலுவலகம் கிளம்பும் நேரத்தில் பூஜை அறையில் இருந்தார்.. மணி சத்தம் பிரமாதமாக கேட்டது. பெண்ணவள் தன் அன்னையை ஆச்சர்யமாக பார்த்தாள்.

அன்னை “காபி தரவா” என்றார்.

மகளோ அதில் ஆர்வம் காட்டாமல் “என்னம்மா ஆச்சு..” என்றாள்.

“என்னடி ஆச்சு.. பூஜை தானே, எப்போதும் செய்வது தானே” என்றார்.

மகள் “இல்ல.. கொஞ்சநாள்.. நான் ஆபீஸ் கிளம்பும் போது அப்பாவை பார்ப்பதேயில்லை.. இன்று திடீர்ன்னு சத்தம் கேட்க்குது..” என்றாள்.

அன்னை “வாயிலே ஒன்னு போட்டால் தெரியும்.. ஜாதகம் பார்க்க போகனும் இன்று.. உனக்காகத்தான் வேண்டிக் கொண்டு  இருப்பார்..  போ.. நீயும் போய் வேண்டிக்கோ.. போ.. போ..” என்றார்.

“ம்மா” என்றாள்.. அதிர்ந்து.

“போடி.. உன் அப்பாவே இப்போதுதான் மனது கொஞ்சம் மாறியிருக்கார்.. போல, போ” என்றார்.

மகள் “காபி கொடும்மா” என்றாள், ஸ்ரத்தையில்லாமல். மனது ‘ஜாதகம் என்ன சொல்லுமோ’ என்ற சிந்தனைக்குதான் சென்றது. அதை வைத்து எத்தனை நாள் அப்பாவை நம்ப வைக்க முடியும்.. அப்படி வரும் நம்பிக்கையும் சரிதானா என யோசனை அவளுள்.

காபியோடு ஹாலில் அமர்ந்தாள். 

தந்தை பூஜை முடித்து வெளியே வந்தார்.. கையில் பூ இருந்தது, மனைவியிடம்  பூ கொடுத்தார்.. மனையாளும் “வர்ஷி அங்க இருக்கா” என்றார் சின்ன குரலில்.

மீண்டும் சிவகுமார்.. பூஜையறை சென்று, விபூதி எடுத்து வந்தார்.. மகளின் எதிரில் நின்றார்.. பெண் தன்போல எழுந்து நின்றாள். தந்தை ஏதும் பேசாமல் மகளுக்கு திருநீரு பூசிவிட்டார்.

மகள் தந்தையின் கண்களை பார்த்தாள்.. சிவகுமார் புன்னகைக்க முயன்றார்.. தடுமாறினார். அவளின் எதிரில் அமர்ந்துக் கொண்டார்.

மகள் லேசான அதிர்வோடு பார்த்துக் கொண்டே இருந்தாள். 

தந்தைக்கு, அவளின் பார்வை என்னமோ போலிருக்க.. விரிந்த புன்னகையோடு மகளை கேள்வியாக பார்த்து “என்ன வர்ஷி” என்றார்.

பெண்ணவள் அதிர்ந்தாள். இந்த குரல் கேட்டு எவ்வளவு நாலாகிற்று என யோசனையோடு ‘ஒன்றுமில்லை’ என தலையசைத்தாள்.

சிவகுமார் ஏதும் சொல்லாமல் மகளிடம் அமைதி காத்தார். ‘இது பெண்ணின் திருமணம்.. எனது நம்பிக்கைகள் எப்படி அவளை பாதிக்கும் எனவும் புரிகிறது.. பெண்ணின் பதற்றமும் புரிகிறது தந்தைக்கு.. இந்த ஜாதகத்தினை நம்பி நான் முடிவெடுத்திடுவேன் என பெண் எண்ணுவதும் புரிகிறது.’ ஆனால், ஏனோ நம்பிக்கைகளை மாற்றிக் கொள்ள அவரால் முடியவில்லை இப்போதும். 

எதோ அசரீரி தேவைபடுகிறது.. ம்.. அன்று பெண் நிர்கதியாக நின்றது இன்னமும் நினைவிலிருந்து அகலவில்லை.. தந்தைக்கு. ஒரு வார்த்தை வேண்டும்.. ‘ஒன்றும் ஆகாது.. ஆயுசு கெட்டி.. பெண் நன்றாக இருப்பாள்..’ என ஜோதிடர் சொல்ல வேண்டும் என எண்ணுகிறார், சிவகுமார்.

அஹ.. ஜோதிடர்கள் ஒன்றும் கடவுளர் அல்லவே.. அப்படி ஒரு ஜோதிடர் சொல்லி.. அப்பாவிற்கு நம்பிக்கை வந்துவிடும் என்றால்.. கடவுகளுக்கு மதிப்பே இருக்காதே.. என எண்ணிக் கொண்டிருந்தாள், மகள் அவருக்கு நேர் எதிரே அமர்ந்துக் கொண்டு.

விஜயா, தன் கணவருக்கு என கஞ்சி எடுத்து வந்தார்.. மகளின் யோசனையான முகத்தினை இருவரும் கவனித்தனர்.. ஆதனால் ஏதும் பேசாமல் இருந்தனர்.

சற்று நேரத்தில் பெண் “அப்பா.. என்னோடு ஆபீஸ் வரீங்களா” என்றாள்.

தந்தை யோசனையான பாவனையை காட்ட.. விஜயா “ஏய்.. விளையாடுறீயா.. இன்று..” என சொல்லி பெண்ணின் பார்வையில் அமைதியானார்.

சிவகுமார் “என்ன வர்ஷினி, திடீர்ன்னு ” என்றார்.

“வாங்கப்பா” என்றாள்.

சிவகுமார் “நான் காரேடுக்கிறேன்” என்றார் சட்டென முடிவு செய்து.

விஜயா “என்ன இது.. இன்னிக்கு பனிரெண்டு மணிக்கு போகனும் அப்பாயின்மென்ட் இருக்கு..” என்றார்.

வர்ஷினி “எங்க போகணும்” என்றாள்.

தந்தை மகளை புருவம் சுருக்கி பார்த்தார்.. ‘நேற்றே தெரியுமே இவளுக்கு நான் ஜாதகம் பார்த்துதான் முடுவெடுப்பேன் என.. இப்போது என்ன புதிதாக’ என யோசனை.

அன்னை “என்ன டி விளையாடுறே.. உனக்கும் சர்வேஷ் இருவருக்கும் ஜாதக பொருத்தம் பார்க்கத்தான் போறோம்..” என்றார்.

பெண்ணவள் “இரு ம்மா.. இரு.. நான் அப்பாகிட்ட பேசிட்டு வரேன்” என்றவள்.. “அப்பா வரீங்களா” என்றாள்.

பெண் கார் சாவி எடுத்துக் கொண்டு முன்னே நடந்தாள்.. பெரிய கேட்டினை திறந்து.. காரினை வெளியே எடுத்து நிறுத்தினாள்.

சிவகுமார் உடைமாற்றிக் கொண்டு வந்து அமர்ந்தார்.. முன் சீட்டில். மகள் மெதுவாகவே காரினை நகர்த்தினாள். பெண் லாவகமாக வண்டியை முன்னாள் செலுத்திக் கொண்டே.. “அப்பா,  சர்வேஷ் மீது நம்பிக்கை இல்லை அப்படிதானே அப்பா.. அவன் என்னை சரியாக பார்த்துக்க மாட்டானா” என்றாள் குதற்கமாக.

தந்தை புன்னகையோடு “இரு ம்மா.. ஏன் இப்படி எல்லாம் பேசுற.. திருமணத்திற்கு முன் பொருத்தம் பார்ப்பது வழக்கம்தானே” என்றார் சாதாரணக் குரலில்.

“அப்பா, உங்களுக்கு எங்களை மீறி வெளிநாட்டு பயம் இன்னமும் இருக்கா.. அது, அப்படி அந்த ஜோதிடர் சொல்லிவிட்டால் தீர்ந்திடுமா..” என்றாள் கோவமாக.

தந்தை “வேறு என்ன செய்ய சொல்ற ம்மா.. நீ என் கண்ணெதிரே இருக்க மாட்டேன் என்கிற.. அந்த பையனும் இந்தியா வரமாட்டேன் என்கிறார்.. எதுவும் நடக்காது என நான் எப்படி இருப்பது” என்பவர் அமைதியானார்.

பெண்ணவள் “அப்பா..” என்றாள்.

“நீ சொல்வது போல எதுவும் தீராதுதான்.. ஆனால், உன் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்கவாகினும்.. அந்த ஜோதிடம் வழிவிடாதாடா ம்மா..” என்றார்.

பெண்ணவளுக்கு பேசமுடியவில்லை.

பெண் “அப்பா, ஜோதிடர் பார்க்கும் முன் நீங்க சர்வேஷ்ஷிடம் கண்டிப்பா பேசுங்க.. அதுதான் முக்கியம்.. இப்போது கூப்பிடவா.. பேசுறீங்களா” என்றாள்.

“வர்ஷி, மதியம் பார்த்துட்டு வந்து.. நிம்மதியான மனதோடு பேசுகிறேன் ம்மா” என்றார்.

“அப்பா, ஜோதிடார் இல்ல.. கல்யாணம் செய்யாதீங்கன்னு சொல்லிட்டா என்ன பண்ணுவீங்க” என்றாள்.

“விதண்டாவாதமாக பேசாத டா.. இவ்வளவு தூரம்.. ஒரு விஷயம் நடக்கிறது  என்றால்.. கண்டிப்பாக அதற்கு எதோ பலம் இருக்கு எனதானே அர்த்தம்.. ம்..” என்றார்.

“அப்பா, நீங்க சர்வேஷ்ஷினை பார்த்து பேசியிருக்கலாம்.. பிடிக்கலையாப்பா அவரை.. உண்மையை சொல்லுங்களேன்..  அவர்கள் வீட்டில் வந்து பார்த்துவிட்டார்கள் என நீங்கள் ஏதும் குழப்பிக்க வேண்டாம் ப்பா.. நானும் எதோ பேசிவிட்டேன்.. சாரி ப்பா.. இப்போது ஜாதகமும் பார்த்து.. என்னமோ, நீங்க அவரை நம்பவில்லை என தோன்றுகிறது. எனக்கு குழப்பமாகத்தான் இருக்கு.. நான் உங்களை கஷ்ட்டபடுத்துகிறேனா ப்பா..” என்றாள்.

தந்தை நேராக அமர்ந்திருந்தவர் லேசாக புன்னகைத்துக் கொண்டார்.. பெண்ணுக்கு கண்டிப்பாக தெரிய வாய்ப்பில்லை.. “எனக்கு இருக்கும் குழப்பம் எனக்கானது.. அஹ.. என் பெண்ணின் தேர்வில் எந்த வருத்தமும் குழப்பமும் எனக்கில்லை ம்மா.. இதை நீ புரிந்துக் கொள்ள வேண்டும்.. இது முழுக்க முழுக்க பெரியவர்கள் விஷயம்.. நீ அலட்டிக்காத.. நான் பார்த்துகிறேன்” என்றார்.

பெண், தந்தையை திரும்பி பார்த்தாள்.. முகம் தகதகவென மின்ன.. தந்தைக்கு தன்மேல் நம்பிக்கை இருக்கிறது என சொல்லியதும் அந்த மினுமினுப்பு.

தந்தை “ம்.. நேர பார்த்து ஓட்டுடா” என்றார், பெண்ணின் பார்வை உணர்ந்து.

மகள் புன்னகை முகமாகவே இருந்தாள்.

“நான் சர்வேஷ்ஷிடம் பேசிவிடுகிறேன் இன்று.. நீ குழப்பிக்காத.. நிம்மதியாக வேலை பாரு” என்றார்.

வர்ஷினி அலுவகத்தில் வண்டியை நிறுத்தினாள்.. தந்தையும் அவளோடு கீழே இறங்கினார் “என் பெண் ஆசைபாட்டதை எந்த மன சஞ்சலமும் இல்லாமல் நான் கொடுக்கணும்ன்னு நினைக்கிறேன்.. எந்த தவறு மீண்டும் நடந்திட கூடாது.. இது என்னுடைய கடமை ம்.. நீ குழப்பிக்காத.. வேலையில் கவனமாக இரு.. போ” என்றார்.

இதுவரை கோவத்தில் நிமிர்ந்து.. பரந்து.. அகங்காரமாக நின்ற பெண்.. தந்தையின் அன்பில்.. குழந்தையாகினால்.. கண்ணில் நீருடன்.. அவரின் அருகில் வந்தாள். 

தந்தை அவளின் கண்ணீரை துடைத்தார்.. “இதென்ன அழுகை.. இவ்வளவுநாள் தைரியமாக என்னிடம் அவன்தான் வேணுமென சண்டை போட்டு.. பேசாமல் இருந்துவிட்டு.. இப்போது என்ன டா அழுகை குழந்தை மாதிரி.. எல்லோரும் சிரிக்க போறாங்க போ” என அவர் பேசிக் கொண்டே இருக்க.. வர்ஷினியோ தந்தையின் தோளில் சாய்ந்தாள். “அப்பா.. உங்களுக்கு சர்வேஷ்ஷினை பிடிக்கும் தானே” என்றாள்.

தந்தை “ரொம்ப பிடிக்கும்.. எங்கள் அறுபதாவது திருமணத்திற்கு கையில் கட்டோடு வந்தவன்தானே.. தெரியும் அந்த பையனை. உன் அண்ணன் வேறு சொல்லியிருக்கான்.. உங்கள் பிரெண்ட்ஷிப் பத்தி.. சின்ன வயதில், நம்ம வீட்டிற்கு வந்திருக்கான் போல.. எனக்கு சரியாக நியாபகம் இல்லை டா.. அதனால், எல்லோருக்கும் இதில் விருப்பம்தான். நீ நிம்மதியாக இரு” என்றார்.. பெண்ணின் முதுகில் தட்டி.

இதெல்லாம் கார் பார்க்கிங் முன் நடந்துக் கொண்டிருக்கிறது.. போவோர் வருவார் கண்களுக்கு தப்பவில்லைதான். ஆனால், அதையெல்லாம் யோசிக்கும் நிலையில் வர்ஷினி இல்லை. எங்கே எந்த இடத்தில்.. குழப்பங்கள் தீரும்.. குழம்பிய மனங்கள் இலகுவாகும் என தெரியாதே. ஓடிவரும் நதி சட்டென வீழ்ந்து அருவியாகும் போதுதானே அழகு.. அன்பில் வீ(வி)ழாமல்.. அதில் ஆர்பரிக்காமல்.. மனிதர்கள் வாழ்ந்தென்ன லாபம்.

தந்தை காரெடுத்து கிளம்பினார்.

வர்ஷினி, சந்தோஷமாக சர்வேஷ்ஷூக்கு அழைத்தாள். அவனோ அழைப்பினை ஏற்கவில்லை.