கடந்து செல் காதலுடன்! 40

“தங்கம் அந்த பொண்ணுக்காகவா நம்ம ஆகாஷுக்கு தண்டனை கொடுக்கிற?” பெரிய அத்தை நம்ப முடியாதவராக கேட்டார்.

“நம்ம தொழில் தான் நம்ம தெய்வம், நமக்கான வாழ்க்கையை வளமா அமைச்சு கொடுக்கிறது நம்ம தொழில் தான். தொழிலுக்குள்ள எந்த சின்ன தப்பையும் அக்சப்ட் பண்ணிக்க மாட்டோம்! சரியா அத்தை?” என்று கேட்டான் சர்வாச்சார்யா.

“சரி ராஜா. தொழிலுக்குள்ள நீங்க கால் பதிக்கும் போது நாங்கதான் உங்ககிட்ட இப்படி சொன்னோம். ஆனா ஆகாஷ்?” என்று சின்ன அத்தை பேச,

“மை டியர் அத்தைஸ் அண்ட் மாமாஸ். உங்க எல்லோருக்கும் நான் ஸ்பெஷல்ன்னு எனக்கு நல்லா தெரியும். அதுக்காக எல்லா கேள்வியும் என்னையே கேட்கலாமா? ஒன்னு இரண்டு கேள்வியை ஆகாஷ்கிட்டேயும் கேளுங்க. சர்வா இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கிறளவு அப்படியென்ன பண்ணிட்ட ஆகாஷ்ன்னு கேளுங்க ” என்றான் சர்வாச்சார்யா.

“ஆகாஷ். சொல்லு. என்ன பண்ண?” என்று கேட்டார் பெரிய மாமா.

கோவமாக கொதித்து கொண்டிருந்த ஆகாஷிடம் அந்த நிமிடம் பெரிய அமைதி.

இருக்கையில் நன்றாக சாய்ந்தமர்ந்தபடி, பேனாவை டேபிளில் தட்டி கொண்டிருந்தான் சர்வாச்சார்யா.

“ஆகாஷ். நீ சொன்னாதான் எங்களுக்கு என்ன நடந்ததுன்னு தெரியும். சொல்லு?” என்று கேட்டான் கார்த்திக்.

தன் தம்பியின் பக்கம் நியாயம் இருக்கும் என்று கார்த்திக் நம்பினான். சர்வாச்சார்யாவிடம் மெலிதான புன்னகை.

“ஆகாஷ். சொல்லு” என்று அவனின் தந்தை அதட்ட,

சர்வாச்சார்யா திரும்பி ராகவ்வை பார்த்தான். அவன் உடனே அங்கிருந்த டிவி அருகே சென்றான்.

அதில் சம்யுக்தா அலுவலகத்தில் நடந்தது அத்தனையும் ஒளிபரப்பானது.

குருமூர்த்தி வைத்து பரத் பேசுவது, தீரஜ் குற்றத்தில் சம்யுக்தாவை தொடர்பு படுத்துவது, பின் சம்யுக்தாவை தவறாக பேசும் அந்த ஆண்கள், சம்யுக்தா அவர்களை தாக்கியது என்று அத்தனையும் ஓடியது.

வீட்டினரிடம் இருந்து நிமிடம் பேச்சு மூச்சே இல்லை. “ஆகாஷ்” என்று கார்த்திக் கோவமாக அழைக்க,

“நான் இவங்களோட அப்பா பத்தி மட்டும் தான் சொன்னேன். ஆனா பரத் இந்தளவு செய்வான்னு நான் நினைக்கலை” என்றான் ஆகாஷ் சின்ன குரலில்.

 “சம்யுக்தா மேடம் மேல FIR பைல் பண்ண ப்ரெஷர் கொடுத்திருக்கீங்க” என்றான் ராகவ்.

“அது, அந்த பசங்களை அடிச்சு அவங்க ரொம்ப சீரியஸா இருக்காங்கன்னு சொன்னான் பரத். அப்படியென்ன இவங்களுக்கு தைரியம்ன்னு பயம் காட்ட”

“இந்த மேடமுக்கு நீ பயம் காட்ட ட்ரை பண்ணியிருக்க. ஹாஹா” சர்வாச்சார்யா நன்றாகவே புன்னகைத்தான்.

“ஜஸ்ட் மிஸ் நீ? இவளோட அப்பா உனக்கு படம் காட்டியிருப்பார். நம்ம பணம், பதவி, அதிகாரம் எல்லாம் அவரோட தைரியத்துக்கு முன்னாடி ஒன்னுமே இல்லை” என்றான் சர்வாச்சார்யா.

“இவங்களோட இடத்தை தான் இவங்களுக்கு காட்ட நினைச்சேன்” என்றான் ஆகாஷ்.

“எது என்னோட இடம்?” மின்னலென சம்யுக்தா கேட்டாள். அவளின் பார்வை ஆகாஷை நேரடியாக எதிர்கொண்டது.

“நிச்சயம் நீங்க இப்போ இருக்கிற இடம் உங்களோடது இல்லை” ஆகாஷ் சொல்ல,

“அதை நாந்தான் முடிவு பண்ணுவேன். நீ இல்லை” என்றாள் சம்யுக்தா.

“ஆகாஷ்” என்று அவனின் தந்தை மகனை அதட்டி திசை திருப்பியவர்,

“சர்வா. இப்போ நீ என்ன சொல்ல வர? என் மகன் தொழிலுக்குள்ள பெர்சனலை கொண்டு வந்ததால தான், அவனுக்கு இந்த தண்டனைன்னு சொல்றியா?” என்று கேட்டார் சின்ன மாமா.

“நிச்சயமா” என்றான் நாயகன்.

“இல்லை. அவன் பண்ணதுக்கு அவனை பழி வாங்கத்தான் நீ இப்படி பண்ற?” சின்ன மாமா சொல்ல,

“ஆகாஷோட முதல் தப்பு இதுதான் சர்வா. வார்னிங் கொடுக்கலாம்” என்றார் பெரிய மாமா.

“ஓஹ்” என்றான் சர்வாச்சார்யா.

அத்தைகள் இருவரும் கூட, “ஆகாஷ் செய்தது அவ்வளவு பெரிய தப்பு இல்லை. ஆனால் அவனுக்கு கொடுக்கும் தண்டனை பெருசு” என்று வாதிட்டார்கள்.

“இந்த ஒரு முறை ஆகாஷுக்கு எக்ஸ்கியூஸ் கொடுக்கலாம்” என்று இளையவர்களும் சொல்ல,

“அப்போ நான் எடுத்த முடிவு தப்புன்னு எல்லாம் நினைக்கிறீங்க? அப்படி தானே?” என்று நிதானமாக கேட்டான் சர்வாச்சார்யா.

“இது அதிகம்ன்னு சொல்றோம்” என்றார் பெரிய மாமா.

“ஓகே. நான் என்னோட முடிவை வாபஸ் வாங்கிக்கிறேன்” என்றான் சர்வாச்சார்யா.

அவன் சட்டென ஒத்துகொண்டதில் வீட்டினருக்கு மகிழ்ச்சி இல்லை. மாறாக அவனின் இறுகிய முகபாவனை அவர்களை உறுத்தியது.

“ராகவ்” என்றான் சர்வாச்சார்யா.

அடுத்த நிமிடமே ஆகாஷ் மீதான நடவடிக்கையை திரும்ப பெற்று கொண்டதாக மெயில் வந்தது.

“தங்கம். எங்கமேல உனக்கு கோவம் எதுவும் இல்லையே?” என்று சின்ன அத்தை கேட்க,

“ச்சே. இல்லை அத்தை. முதல் தப்புக்கு வார்னிங் கொடுக்கிறது நடைமுறை தானே” என்றான் வில்லன்.

“சர்வா” என்று கார்த்திக் அழைக்க,

“உங்க தம்பி மேல எந்த நடவடிக்கையும் எடுக்கலை கார்த்திக்” என்றான் நாயகன்.

“கோவப்படாத சர்வா. சின்ன பையன் தெரியாம”

“இவனை விட சம்யுக்தா ஒரு வயசு சின்ன பொண்ணு” என்றான் சர்வாச்சார்யா.

“சர்வா”

“உங்க எல்லோருக்கும் என்மேல பாசம் அதிகம் இல்லை?” என்று கேட்டான் நாயகன்.

“ராஜா”

“என்னை காப்பாத்தின அப்பா, பொண்ணு மேல இவ்வளவு வஞ்சம் வைச்சிருக்கீங்களே? எப்படி?”

“சர்வா. அவங்க மேல நாங்க ஏன் வஞ்சம் வைக்க போறோம்?” பெரிய மாமா கேட்க,

“ஆகாஷ் பண்ணதுக்கு பேர் என்ன? அவனுக்கு சப்போர்ட் பண்ற உங்களுக்கான நியாயம் தான் என்ன?” என்று கேட்டான் சர்வாச்சார்யா.

“அவனொட அக்காக்காக”

“அத்தை. அவனோட அக்காக்காக அவன் என்கிட்ட தானே சண்டை போட்டிருக்கணும்? இவகிட்ட ஏன் போனான்? இவளை ஏன் கீழிறக்க நினைச்சான்? இவளை ஏன் ஜெயிலுக்கு அனுப்ப நினைச்சான்?”

“அது தங்கம்”

“என் உயிரை காப்பாத்தினவங்களுக்கு நீங்க கொடுக்கிற பரிசு இதுதான் இல்லை. இப்போ மட்டுமில்லை கோயம்பத்தூர் ஹாஸ்பிடல்ல வைச்சும் நீங்க இவங்களை சிறப்பா கவனிச்சிருக்கீங்க. ரொம்ப நல்ல விஷயம் மாமா. சூப்பர்” என்று கைதட்டினான் சர்வாச்சார்யா.

“ராஜா அது”

“அத்தை. நமக்கு ஒரு நாய் குட்டியை ரொம்ப பிடிக்கும். அந்த நாய்க்குட்டியை லாரிக்காரன் இடிக்க வரும் போது, தன் உயிரை பத்தி நினைக்காம பாய்ஞ்சு, அந்த நாய் குட்டியை ஒருத்தர் காப்பாத்துறார். நியாயமா நன்றி தானே சொல்லணும். ஆனா இல்லை. அவரை காயப்படுத்தணும், பழி வாங்கணும். ஏன்னா அந்த நாய்குட்டிக்கு காப்பாத்தினவங்களை பிடிச்சு போச்சு. அவங்கிட்ட அந்த நாய் குட்டி ஒட்டுறது  இவங்களுக்கு பிடிக்கலை. இந்த நாய் நமக்கு மட்டும் தான் சொந்தம், நம்மளை மட்டும் சார்ந்திருக்கணும், நம்ம வீட்டோட மட்டும் தான் இருக்கணும்ன்னு, காப்பாத்தி கொடுத்தவங்களை வெறிகொண்டு விரட்டி விட முயற்சி நடக்குது. ஆனா அவங்களுக்கு தெரியலை நாய்க்கு நன்றி உணர்வு ரொம்ப அதிகம்ன்னு”

“ராஜா”

“தங்கம்”

“சர்வா என்ன பேசுற நீ?” வீட்டினர் அதிருப்தி குரல் எழுப்பினார்கள்.

“அண்ணா ப்ளீஸ். எனக்கு ஹர்ட் ஆகுது” என்றாள் சுஹாசினி.

சம்யுக்தாவிற்கு நெருப்பின் மீது அமர்ந்திருக்கும் நிலை. இவன் நிச்சயம் என்னை கொல்லத்தான் பார்க்கிறான்!

“என்ன தங்கம் பேச்சு இது?” பெரிய அத்தை கலங்கிவிட,

“இருக்கிறதை தான் சொல்றேன் அத்தை. பாச சங்கிலி போட்டு என்னை கட்டி போட நினைக்கிறீங்க”

“மாமா. நான் பண்ணது தப்பு. ப்ளீஸ். நான் மன்னிப்பு கேட்டுடுறேன். இந்த தொழிலை விட்டு கூட போயிடுறேன். ஆனா இப்படி பேசாதீங்க ப்ளீஸ்” என்று கைகளை கூப்பிவிட்டான் ஆகாஷ்.

“மன்னிப்பு! வேணாம் ஆகாஷ். தெரிஞ்சே பண்ணதுக்கு எதுக்கு மன்னிப்பு? உன் பிளான் சரி தான். ஆனா இவ ஒடைஞ்சு போறவ இல்லை. ஆறு வயசுல இருந்து இந்த உலகத்தோட போராடிட்டு தான் இருக்கா. இனியும் போராடுவா. ஆக்சுவலி ஸாரி உனக்கு தான் சொல்லணும். உன் திட்டம் தோத்து போக இந்த மேடத்தோட தைரியம் காரணம் ஆகிடுச்சு. பூஞ்சை மனசுள்ள பொண்ணா இருந்திருந்தா மே பி எதாவது பண்ணிக்கிட்டு, உன்னை ஜெயிக்க வைச்சிருக்கலாம்” என்றுவிட்டான் சர்வாச்சார்யா.

“மாமா. நான், நான் அப், அப்படி எல்லாம் நினைக்கலை. உங், உங்களை விட்டு தள்ளி வைக்க மட்டும் தான் நினைச்சேன்” ஆகாஷ் கலங்கிவிட்டான்.

“நான் அவளை தேடி போறேனா? இல்லை அவ என்னை தேடி வராளா?” சர்வாச்சார்யா கூர்மையாக கேட்டான்.

“மாமா. ப்ளீஸ். என் அக்காக்காக”

“உன் அக்காக்காக, தப்பே செய்யாத பொண்ணை காயப்படுத்தி ஓட வைக்கிறது தான் சரியான வழியா?”

“மாமா”

“உன் அக்கா மேல ரொம்ப மதிப்பு வைச்சிருக்க போல. அவளோட இடத்துக்காக ரொம்ப கீழிறங்கி வேலை பார்க்கிற? ஏன் ஆகாஷ். வைஷ்ணவிக்கான மரியாதை ஒன்னும் கிடையாதா?”

படபடவென கைதட்டும் சத்தம். எல்லார் பார்வையும் திரையை நோக்கி திரும்ப, வைஷ்ணவி தான் கைதட்டி கொண்டிருந்தாள்.

“எப்போவும் போல, மாமா மட்டும் என்னை புரிஞ்சுக்கிட்டார்” என்றாள் வைஷ்ணவி.

“எங்களுக்குள்ள பெர்சனல் எங்களுக்குள்ள மட்டும்ன்னு நான் சொல்லிட்டேன் மாமா. நோ யூஸ். எனக்கு தெரியலை. உங்களை விட்டா எனக்கு மாப்பிள்ளையே கிடைக்க மாட்டான்னு நினைக்கிறாங்க போல” என்றாள் வைஷ்ணவி.

“அக்கா. ப்ளீஸ். உன் கமிட்மென்டுக்கு நீ உண்மையா இருந்த? எனக்கு தெரியும்” என்றான் ஆகாஷ்.

“எஸ் உண்மை தான். ஆனா அது எனக்கும், மாமாக்கும் உள்ளது. இனி மேலாவது நீங்க எல்லாம் இதுல இருந்து தள்ளியே இருங்க” என்று முடித்துவிட்டாள் வைஷ்ணவி.

சில நொடி அமைதிக்கு பின், “அடுத்த வாரம் போர்ட் மீட்டிங் அரேஞ் பண்ண போறேன். நம்ம குரூப் ஆப் கம்பெனிஸ்ல சில மாற்றம் இருக்கும், எல்லாம் தயாராகிங்க” என்றான் சர்வாச்சார்யா.

“என்ன? என்ன சர்வா திடீர்ன்னு?” என்று பெரிய மாமா கேட்க,

“பெர்சனல் வேற, தொழில் வேறன்னு நான் நினைச்சுட்டு இருந்தேன். ஆனா இல்லைன்னு இன்னைக்கு புரிஞ்சுக்கிட்டேன். சோ பார்க்கலாம். பை” என்று சர்வாச்சார்யா முடித்துவிட, திரையின் தொடர்பு துண்டிக்க பட்டது.

“மாமா” என்ற ஆகாஷை,

“சார். ப்ளீஸ்” என்று ராகவ் அழைத்து சென்றுவிட்டான்.

ஹாலில் சர்வாச்சார்யா, சம்யுக்தா மட்டும்!

கண்களை மூடி இருக்கையில் தளர்த்திருந்தான் நாயகன்.

“ராஜா. உன் கோவம் நியாயம். ஆனா என்னால அவங்ககிட்ட கோவப்பட்டு பேச முடியாது. நம்மளோட எத்தனையோ கஷ்டநஷ்டத்துல அவங்க நம்ம கூட இருந்திருக்காங்க. நீ பேசிக்கோ” என்று சிவப்பிரகாசம்  சொல்லிவிட்டார்.

அவர் உடன் பிறப்புகள் நல்லவர்கள் தான். ஆனால் அது அவர்கள் குடும்பத்துக்கு மட்டுமே!

மூன்றாவதாக  வீட்டுக்குள் வரும் ஆட்களை அவர்கள் அவ்வளவு எளிதில் ஏற்று கொள்வதில்லை.

வசுந்தராவே அதற்க்கு சாட்சி! சிவபிரகாசத்தின் காதல் குடும்பத்தில் ஒரு புயலை கிளப்பி, பெரியவர் தான் மகனுக்கு துணை நின்று கல்யாணத்தை முடித்தார்.

முதலில் வசுந்தராவை தள்ளி வைத்தார்கள். பின்னாளில் வசுந்தரா இவர்களை தள்ளி வைத்துவிட்டார்.

அதனாலே என்னமோ, சர்வாச்சார்யாவை அத்தைகள் விட்டு கொடுப்பதில்லை.

உணர்வுகளின் சிக்கல், உரிமை போராட்டம் இவர்கள் வீட்டிலும் உண்டு.

சர்வாச்சார்யா இதை எல்லாம் தானே தான் புரிந்து கொண்டான், இனியும் புரிந்து கொள்வான்.

அத்தைகள் பாசத்தில் குறைவில்லை. ஆனால் பாசம் கழுத்தை இறுக்கும் போது நாயகன் சிரமப்படுகிறான்.

இப்போதும் காலர் பட்டனை வேகமாக கழட்டி விட்டவன், காலரை இழுத்து விட்டு கொண்டான்.

“சோ நீ இந்தளவு சுயநலவாதி?” சம்யுக்தா குரல் கேட்டது.

நல்லவன் கண்களை திறக்கவில்லை.

“ஆகாஷ் கேட்டது அத்தனையும் சரி. உன் கமிட்மென்ட்டுக்கு நீ உண்மையா இல்லை” பெண் தொடர்ந்து பேசினாள்.

“நாளைக்கு வேற யாராவது உங்களை காப்பாத்தினா அவங்க பின்னாடியும் சார் போயிடுவார் இல்லை”

“பிறந்ததுல இருந்து ஒண்ணுமண்ணா கூட வளர்த்தவங்களை ஏமாத்த எப்படி உனக்கு மனசு வருது?”

“அவங்க உனக்கு எதையும் செய்யலையா என்ன? நன்றியுணர்வு கூட ஒருத்தர்கிட்ட மட்டும் தான் வெளிப்படுமா?”

“ராஜான்னு தலையில் தூக்கி வைச்சு ஆடும் போது நல்லா இருந்த கீரிடம் இப்போ உறுத்துது. காரணம் சுயநலம்!”

நிறுத்தாமல் பேசிவிட்டாள் சம்யுக்தா.

நல்லவனிடம் இருந்து அசைவில்லை.

பின் நிமிர்ந்து அமர்ந்தவன் போன் எடுத்தான்.

“எங்கடா இருக்க? என் பொண்ணு எங்க?” குருமூர்த்தி குரல் அந்த ஹாலை நிறைத்தது.

“அடுத்த வாரம் வைச்சுக்கலாமா?” என்று கேட்டான் சர்வாச்சார்யா.

“என்ன? என்ன கேட்கிற நீ?” குருமூர்த்தி புரியாமல் கேட்க,

“கல்யாணத்தை தான்” என்றான் நாயகன்.

சம்யுக்தா வேகமாக போனை எடுக்க போக, அதை விட வேகமாக அவளின் கையை பிடித்தான் சர்வாச்சார்யா.

அழுத்தி பிடித்ததில், “ஸ்ஸ்” என்று வலியில் உதட்டை கடித்தாள் சம்யுக்தா.

காருக்குள் வைத்து அவள் ‘ஸ்ஸ்’ என்றதற்கும், இதற்கும் எவ்வளவு வித்தியாசம்!

நாயகன் ஒருவனே! ஆனால் அவனை இயக்குபவள் சம்யுக்தாவாகி போனாள்!

“கல், கல்யாணம்” குருமூர்த்தி அந்த பக்கம் வார்த்தைகள் வராமல் திக்கினார்.

“எனக்கும், உங்க பொண்ணுக்கும் கல்யாணம். எப்போ வைச்சுக்கலாம்ன்னு சொல்லுங்க” சர்வாச்சார்யா அழுத்தம், திருத்தமாக கேட்டான்.

“டேய், ஏய். டேய்” குருமூர்த்தி திகிலடைந்திருக்க வேண்டும்.

“சுயநலமா வாழலாம்ன்னு முடிவெடுத்துட்டேன். கல்யாணம் நடந்தே தீரும்” என்றான் சர்வாச்சார்யா.