அவளும் அதை வாங்கி பிள்ளைக்கு ஊட்டினாலும் அவள் கண்கள் ஆனந்த கண்ணீரை சொறிந்து கொண்டே இருந்தது. எத்தனை வருட ஏக்கம் அது?
அதற்கு பின் அனைவருக்குமே அங்கு சாதாரண பேச்சு வார்த்தை தான் ஆரம்பித்தது. இனிமையான தருணமாக தான் இருந்தது. மீனா கண்கள் அடிக்கடி தாமரையைத் திருட்டுத்தனமாக தழுவியது. அது அவனுக்கு தெரியாமல் போகுமா என்ன? தன்னவளை வெளிப்படையாகவே ரசித்தான்.
மீனாவுக்கு நடந்தது எல்லாம் கனவாகவே தெரிந்தது. ஏனோ நடந்தது எல்லாம் எப்படி சாத்தியம் என்ற கேள்வி தான் எழுந்தது. கூடவே இப்போது சந்தோஷமாக இருந்தாலும் மகளை இப்போது அழைத்து சென்று விடுவானோ என்று பயமும் இருந்தது. அவளுக்குள் ஆயிரம் கேள்விகள் படை எடுத்தது. அனைவரின் முன்னிலையில் அவளால் கேட்க முடிய வில்லை.
ஆனால் வடிவு கேட்டு விட்டாள். “அவங்க வீட்ல எப்படி தம்பி பிள்ளையை கொடுத்தாங்க? இப்ப கூட்டிட்டு போயிருவீங்களா என் பேத்தியை?”, என்று கேட்டாள். அந்த கேள்விகளுக்கு பதிலை மீனாவும் ஆவலாக எதிர்பார்க்க அவளுக்காக நடந்த அனைத்தையும் சொன்னான் தாமரை. அதைக் கேட்டு தன்னவனை இறுக்கி அணைத்துக் கொள்ள அவ்வளவு ஆர்வமாக இருந்தது. இத்தனைக்கும் அவன் மகேஷை மிரட்டியதை எல்லாம் சொல்ல வில்லை. ஏனோ தனக்காக ஒருவன் இருக்கிறான் என்று அவள் மனது நம்ப ஆரம்பித்தது.
மீனா அவனையே பார்த்த படி இருக்க அவனுக்கு தான் அவள் பார்வையில் மூச்சடைத்தது. “அடப்பாவி, இவ்வளவு நாள் இப்படி எல்லாம் பாத்தது இல்லை. இன்னைக்கு என்ன இந்த லுக் விடுறா? அதுவும் சுத்தி இத்தனை பேர வச்சிக்கிட்டு. மேடம் கட்டி வேற பிடிச்சா”, என்று எண்ணியவனுக்கு காதலிக்க படுவதில் இருக்கும் சுகம் அதிகமாகவே பிடித்தது.
இருவரும் வேறு உலகத்தில் இருக்க சீதா குரலில தான் நடப்புக்கு வந்தார்கள். “வாழ்க்கைல நீ பட்ட கஷ்டம் எல்லாம் முடிஞ்சு போச்சு மா. இனி நீ சந்தோஷமா இருப்ப. எங்க வீட்டுக்கு வா. உன்னை நல்லா பாத்துக்குவோம். அதுவும் தாமரை உன்னை நல்லா பாத்துக்குவான். உன்னையும் பிள்ளையையும் கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குறானா இல்லையான்னு பாரு. இனி எந்த கவலையும் இல்லாம இருக்கணும் சரியா? நானும் உனக்கு அம்மா தான். என்னன்னாலும் என் கிட்ட சொல்லு மா”, என்று சீதா சொல்ல நெகிழ்வுடன் தலையசைத்தாள் மீனா.
தனக்கென்று யாருமே இல்லாமல் இருந்த காலங்களும் உண்டு. அன்னை, தந்தை, அக்கா என உறவுகள் இருந்தாலும் தனக்கென்று யாரும் இல்லாமல் இருந்த நாட்களும் உண்டு. ஆனால் இப்போது தனக்கென்று அனைத்து உறவுகளும் தனக்காக இருப்பது போல ஒரு உணர்வு.
இது எல்லாமே தாமரை என்ற ஒருவனால் மட்டுமே சாத்தியமானது என்னும் போது நெஞ்சம் நிறைந்த காதலும் நன்றி உணர்வும் அவன் மேல் அதிகமானது.
அவனுடன் தனித்திருந்து தன்னுடைய மனதை அவனிடம் சொல்ல ஆசையாக இருந்தது. ஆனால் இப்போது தனிமை கிடைக்காதே.
அவள் அவனை ஏக்கமாக பார்க்க அவனுக்கும் அது புரிய தான் செய்தது. அவள் கண்களில் இருந்த ஏக்கம் அவனுக்கு புரியாமல் போகுமா என்ன?
அவளுடன் தனியே நேரம் செலவிட அவனுக்கும் ஆசை தான். ஆனால் இப்போது நேரம் சரியாக இல்லையே? ஆனாலும் அவள் சந்தோஷமாக இருப்பதே போதுமானதாக இருந்தது.
இருவரும் கண்களால் தங்களின் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டிருக்க “அம்மா, அப்பா நாளைக்கு நம்மளை வெளிய கூட்டிட்டு போகுதாம்”, என்று அவர்களை கலைத்தாள் மகிஷா.
“அப்படியா?”, என்று அவள் கண்களால் கேட்க மீண்டும் கண்ணடித்து அவளை சிவக்க வைத்தான் தாமரை.
இப்போது வடிவு அனைவருக்கும் டீ போட்டுக் கொண்டு வர எல்லாரும் குடித்தார்கள். சிறிது நேரத்தில் அனைவரும் கிளம்ப தாமரையும் அவர்களுடன் செல்வான் என்று குழந்தை எதிர் பார்க்க வில்லை.
அதனால் “அப்பா எங்க போற? நீ போக கூடாது”, என்றாள். விட்டால் அழுது விடுபவள் போல இருந்தது.
“குட்டிமா, அப்பா உன்னை விட்டுட்டு எங்கயும் போக மாட்டேன் டா. ஆச்சி, தாத்தா, அத்தை எல்லாரையும் வீட்ல விட்டுட்டு வரேன் டா பட்டு. நான் அம்மா நீ எல்லாரும் நாளைக்கு கடைக்கு போய் உனக்கு பொம்மை டிரெஸ் எல்லாம் எடுக்க போறோம் சரியா?”, என்று கேட்க அன்னையின் கையில் ஒய்யாரமாக அமர்ந்திருந்தவள் சரி என்னும் விதமாய் தலையசைத்தாள்.
ஆனாலும் பிள்ளையும் சரி அன்னையும் சரி அவனை ஏக்கமாக பார்த்தார்கள். இருவரையும் விட்டுச் செல்வது அவனுக்கு மட்டும் எப்படி இருக்குமாம்? ஆனால் திருமணம் என்ற ஒன்று இல்லாமல் அவர்களை அவனுடன் அழைத்துச் செல்வது சாத்தியம் இல்லையே.
அதனால் அவர்களை எப்படி சமாதானப் படுத்த என்று தெரியாமல் தடுமாறினான். குழந்தை கூட நாளை வருவேன் என்று சொன்னதும் சமாதானமாகிவிட்டாள். ஆனால் மீனா கண்களில் இருந்த ஏக்கம் லேசாக துளிர்த்த கண்ணீர் அவனை அங்கிருந்து கிளம்ப விட வில்லை.
எப்படிச் செல்வானாம் இரண்டு பிள்ளைகளையும் விட்டுவிட்டு? “அம்மா நீங்க எல்லாரும் கிளம்புங்க. நான் இவங்களை கடைக்கு கூட்டிட்டு போய்ட்டு வரேன்”, என்று சொன்னாலும் கண்களால் அன்னையிடம் அனுமதி கேட்டான்.
அவன் அப்படிக் கேட்டதும் இருவரின் முகமும் மலர வசந்தாவுக்கு மறுக்க தோன்ற வில்லை. “ரெண்டு பேரையும் கூட்டிட்டு போய்ட்டு வா தாமரை. நாங்க கிளம்புறோம்”, என்று வசந்தா சொன்னதும் அவனுடைய குடும்பம் கல்யாண நாள் பார்த்து சொல்கிறோம் என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டார்கள். இவன் பிள்ளையையும் அவளையும் வண்டியில் அழைத்துச் சென்றான் டவுன் நோக்கி.
குழந்தை சந்தோஷமாக குதூகளித்தாள் என்றால் மீனாவோ எதுவும் பேசாமல் அவனை நெருங்கி அமர்ந்து அவன் முதுகில் சாய்ந்து விட்டாள்.
லேசாக வியர்வையுடன் கூடிய அவன் வாசனை அவளைத் தீண்ட ஏனோ அந்த வாசனை அவளுக்கு பிடித்திருந்தது. அவள் முகம் அவன் முதுகில் அங்கே இங்கே அசைத்து கோலமிட அவனுக்கு எப்படி இருக்குமாம்?
முதல் முறை உணர்ந்த ஒரு பெண்ணின் நெருக்கம் அவனை ஏதோ செய்தது. அதுவும் அவள் செய்கை அவனை சாதாரணமாக இருக்க விட வில்லை. காதல் கொண்ட பெண்ணின் அருகாமை அவனை எங்கோ அழைத்துச் சென்றது.
அவன் வலது கை லேசாக உயர்ந்து அவள் தலையை வருட அவனின் அந்த சிறிய தொடுகை அவள் உயிர் வரை நனைத்தது.
கடைவீதிக்கு சென்று ஒரு சின்ன டீ ஷாப் முன்பு தன்னுடைய வண்டியை நிறுத்தினான். வண்டி நிறுத்தியது கூட தெரியாமல் அவள் அவன் முதுகில் சாய்ந்திருக்க “ஏய் அழகி எந்திரி டி இறங்கணும்”, என்றான். அதற்கு மகிஷா களுக்கென்று சிரிக்க சிறிது வெட்கத்துடன் தான் இறங்கி நின்றாள்.
அவனை கள்ளப் பார்வையாக ரசித்த படி மகியை தூக்க போக “நான் அப்பா கூட தான் வருவேன்”, என்றாள் அவளும்.
“நீ இரு, நான் பாப்பாவை தூக்கிக்கிறேன்”, என்றவன் வண்டியை ஸ்டாண்ட் போட்டு விட்டு பிள்ளையை தூக்கி கொண்டான். என்ன நினைத்தாளோ மீனவும் அவன் கையைப் பற்றிக் கொண்டாள்.
சிறு சிரிப்புடன் மூவரையும் உள்ளே அழைத்துச் சென்றவன் அவர்களுக்கு தேவையானதை வாங்கிக் கொடுக்க ஏனோ மூவருமே தனி உலகில் இருப்பது போல தான் இருந்தது.
வாழ்நாளில் மீனா இந்த அளவுக்கு சந்தோஷமாக இருந்ததே இல்லை. உண்டு முடித்ததும் “கடைக்கு போய்ட்டு போகலாமா? பாப்பாவுக்கு ரெண்டு செட் டிரஸ் தான் எடுத்தேன். எனக்கு வேற செலக்ட் பண்ண தெரியலை டி. இப்பவே வாங்கிறலாம். நாளைக்கு வண்டி ஏறனும் டி. லீவ் போடலாம்னு தான் நினைச்சேன். இன்னைக்கே வாங்கிட்டா நாளைக்கு வண்டி ஏறிருவேன்”, என்றான்.
அதைக் கேட்டு அவள் அவனை முறைக்க “என்ன டி முறைக்கிற?”, என்றான் குழப்பமாக.
“எங்களைக் கடைக்கு கூட்டிட்டு போறதை விட உங்க வேலை தான் முக்கியமா?”, என்று உரிமை கோபம் எழுப்பியவளை காதலாக பார்த்தான்.
இருவரும் அவனைப் பார்க்க “எனக்கு வேலையும் முக்கியம் டி. ஏன்னா நீ என்னோட மகாராணி. இவ என்னோட இளவரசி. உங்க ரெண்டு பேரையும் பாத்துக்க வேலை முக்கியம் டி அழகி”, என்றவன் ஒன்று போல இருவர் கன்னத்தையும் வலிக்காமல் கிள்ளி வைக்க மகள் சிரித்தாள் என்றால் அவனவளோ கன்னம் சிவந்து காதலாக அவனைப் பார்த்தாள்.
“நீ என்னை ஒரு வழியாக்காம விட மாட்ட டி. வாங்க கடைக்கு போகலாம்”, என்று சொல்லி அழைத்துச் சென்றவன் குழந்தைக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்தான்.
அவளுக்கும் ஒரு புடவை எடுத்துக் கொடுக்க சந்தோஷமாக வாங்கிக் கொண்டாள். அவனை கணவனாக எண்ணிய பிறகு அவள் ஏன் மறுக்க போகிறாளாம்?