13

தென்றலின் முக சோர்வு சசியை பார்த்ததும் மறைந்தது.. அவளுக்கு நேராக நடந்து வந்து கொண்டிருந்தான் சசி..

“ஹாய்”.. என்றான் அவள் புன்னகைத்தாள்.

” கோவிலுக்கு வந்தீங்களா..”

“ம்ம்ம்”

“அப்புறம்”

” அப்புறம் ஹாஸ்டல் போயிட்டு இருக்கேன்..”.. தென்றலை கண்டதும் இவ்வளவு நேரம் அவன் மனதை சுழன்று அடித்துக் கொண்டிருந்த சூறாவளி சட்டென்று அமைதி அடைவதை உணர்ந்து சசி அவளோடு இன்னும் சற்று நேரம் அளவளாவ ஆசைப்பட்டான்.

“சாப்டிங்களா”.. வார்த்தையை வளர்க்க எண்ணினான்.

” இல்ல இனிமேதான்.. “

” வாங்களேன் நானும் சாப்பிடல. சாப்பிட்டுட்டு அப்படியே உங்களை ஹாஸ்டல்ல விட்டுர்றேன்.. “

“இல்ல வேணா” திருமண பேச்சு வந்ததிலிருந்து அந்நிய ஆடவனோடு தனித்திருக்க  தென்றல் விரும்பவில்லை.. சசியின் ஆர்வம்  ததும்பும் முகம் அவள் மனதை இம்சித்தாலும்  அந்த ஆர்வத்தை மேலும் வளர்க்க விரும்பாதவள்

” இல்லைங்க பரவால்ல.. ” அவனைத் தாண்டி செல்ல முயன்றாள்..

தென்றலின் அவமதிப்பு சசியின் மனதை இன்னும் ஆழமாக பாதித்தது. அவள் அருகில் இருந்த போது அமைதியாக இருந்த சூறாவளி அவள் சற்று விலகிச் சென்றதும் தன்னுடைய வேலையை காட்ட ஆரம்பித்தது.

அவளின் அருகாமை அவனுக்கு பெரிதும் தேவைப்பட்டது. இந்த விஷயத்தில் வெட்கம் மானம் சூடு சொரணை எதையும் சசி பார்ப்பதாக இல்லை. சில அடி தூரங்கள்  சென்றுவிட்ட தென்றலை அழைத்தான்.

“ஏங்க..” தென்றல் திரும்பி பார்த்தாள்.

” எனக்கு உங்க கிட்ட பேசணும்.. இப்ப சாப்பிட போலாமா ” நேராக விஷயத்திற்கு வந்து விட்டான் சசி. தென்றலுக்கு குழப்பமாக இருந்தது தன்னிடம் பேச என்ன இருக்கிறது?

இருந்தும் அவளின் உள் மனம் அவனோடு செல்ல தூண்டியது. பதபதைத்த மனதோடு  முதன்முதலாய் சசியின் பைக்கில் ஏறியமர்ந்தாள்.. எங்கிருந்தாவது அகிலன் பார்த்து விட்டால்? மாதவியின் கண்ணில் சிக்கிவிட்டால்? ஹரிதாஸ் பார்த்துவிட்டு மாதவியிடம் போட்டு கொடுத்து விட்டால்?

நடக்காத ஒன்றை எண்ணி பயத்தோடு சசியோடு பயணித்துக் கொண்டிருந்தாள்..

” என்ன தைரியத்துல இவன் கூட நீ போயிட்டு இருக்க? உன் மேல நம்பிக்கை வச்ச உன் அப்பா அம்மாவுக்கு நீ பெரிய துரோகம் பண்ணிட்டுருக்க? நவீன் தான்  உன் லைஃப்னு அழுத்தமா முடிவு பண்ணலனாலும் ஏறக்குறைய இந்த சம்பந்தம் முடிஞ்ச மாதிரி தான்.. நாலஞ்சு நாள் பழகின ஒருத்தன் கூட எந்த தைரியத்துல  இதெல்லாம் பண்ணிட்டுருக்க.. ” வாசுகியின் நல் வளர்ப்பு தென்றலுக்கு குற்ற உணர்ச்சியை மென்மேலும் ஏற்படுத்தியது.

ஒரு முடிவுக்கு வந்தவள் தன்னை பாதையில் இறக்கி விட வாய் திறக்க அதற்குள் ஒரு ஓட்டலின் முன்பு வண்டியை நிறுத்தி இருந்தான் சசி மித்ரன்..

“என்ன” தனக்குள் பேசிக் கொண்டிருந்தவள் திடுக்கிட்டு வினவ

” ஹோட்டல் வந்திருச்சு.. “

‘”ஓ” தென்றல் இறங்கி கொண்டாள். இருவரும் உள்ளே சென்று காலியாக இருந்த ஒரு மேஜையில் அமர்ந்தார்கள் எதிரும் புதிருமாக..

” என்ன சாப்பிடுறீங்க”

” இல்லை எனக்கு எதுவும் வேணாம்” சசிக்கு தென்றலின் இந்த ஒட்டும் ஒட்டாமலிருக்கும் தன்மை எரிச்சலை கிளப்பியது..

” சாப்பிட வந்திருக்கோம்.. நான் மட்டும் சாப்பிட ஒரு மாதிரி இருக்கு. ஏதாச்சும் சிம்பிளா.. ” இவ்வளவு தூரம் வந்த பிறகு மறுப்பது தென்றலுக்கும் உவப்பாக இல்லை. இருந்தாலும்?

” எனக்கு பசிக்கல” அவளின் மனம் இடம் தரவில்லை.

அவனுக்கு எழுந்த எரிச்சலையும் கோபத்தையும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு எழுந்து விட்டான்.

” என்ன ஆச்சு” திடீரென்று அவன் செய்கையை பார்த்து குழம்பியவள் கேட்க

” போலாம்” அவன் ஒரு அடி எடுத்து வைக்க உடனே தடுத்து நிறுத்தினாள் தென்றல்.

” இல்ல இருங்க..”

” ஏங்க ரெண்டு பேரும் சாப்பிட தான் வந்தோம். இங்க வந்துட்டு பசிக்கல நான் சாப்பிடலன்னு சொன்னா என்ன அர்த்தம். என்ன உங்களுக்கு ஒருவேளை சோறு வாங்கி கொடுக்க கூட எனக்கு வக்கில்லனு நெனச்சுக்கிட்டீங்களா.. இல்ல உங்க காசுல ஓசில சாப்பிட்டுருவேன்னு பயப்படுறீங்களா.. ” படபடவென்று அவன் பேச தென்றல் அதிர்ந்து அமர்ந்து இருந்தாள்.

பக்கத்து மேஜையில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தவர்கள் இவர்களைப் பார்க்க தென்றலுக்கு அவமானமாக இருந்தது.

” ப்ளீஸ் உட்காருங்க எல்லாரும் பாக்குறாங்க.. “

” எவன் பாத்தா எனக்கு என்னங்க.. கிளம்புங்க.. “

அவமானத்தில் முகம் சிவக்க
” சரி சாப்பிடுறேன் உட்காருங்க” பல்லை கடித்துக் கொண்டு கூறினாள் தென்றல். அவளின் சிவந்த முகத்தை பார்த்தவன் மேற்கொண்டு வாதிடாமல் அமர்ந்தான்.

கடை பையன் என்ன சாப்பிடுகிறார்கள் என்று விசாரித்து இருவருக்குமே மீல்ஸ் கொண்டு வந்து வைத்தான்.. சாப்பிட்டு முடிக்கும் வரை இருவரும் பேசிக் கொள்ளவில்லை.. சாப்பிட்டு முடித்த பில் வர  தென்றல் அதனை எடுக்கச் சென்றாள்.

” நான்” பில்லை சசி எடுத்துக் கொண்டான். இருவருக்கும் சேர்த்து அவனே பணம் கட்டி விட்டு வெளியே வந்தார்கள்.. பேச வந்த விஷயம் பேசாமல் இருந்தது.

” என்னமோ பேசணும்னு சொன்னீங்க”..

“ம்ம்ம்.. பீச் போலாமா” தென்றலுக்கு இப்பொழுது கோபம் வந்தது.

” உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க நாலஞ்சு தடவை பார்த்திருக்கோம்.. அன்னைக்கு எனக்கு ஹெல்ப் பண்ணீங்க. அதனால நீங்க சாப்பிட கூப்பிட்டப்ப நான் வந்தேன். அதையே காரணமா வச்சு அடுத்து பீச்னு சொல்றீங்க. அப்புறம் எங்க போகணும்னு ஆசைப்படுறீங்க.. ” அவளின் நேரடியான கேள்வியில் சசி புருவத்தை உயர்த்தினான்..

” இப்ப நான் என்ன தப்பா கேட்டுட்டேன்னு நீங்க வாய்ஸ் ரேஸ் பண்றீங்க.. “

” எனக்கு நீங்க கேட்டது தப்பா பட்டுச்சு அதனால.. “

” தப்பா பட்டுச்சுன்னா அப்போ உங்க எண்ணம் தப்பாருக்குனு அர்த்தம்.. “

” என் எண்ணத்த பத்தி அலசி ஆராய உங்களுக்கு என்ன உரிமையிருக்கு”

” எந்த உரிமையில நான் சாப்பிட கூப்பிட்டப்ப நீங்க வந்தீங்களோ அந்த உரிமை இருக்கு..” பொது இடம் என்பதையே மறந்து இருவரும் தனிந்த குரலில் ஒருவரை ஒருவர் சாடிக் கொண்டிருந்தார்கள்.

” தப்பு தாங்க.. நீங்க கூப்பிட்ட உடனே நான் வர முடியாதுன்னு உறுதியா சொல்லி இருக்கணும்.. தப்பு பண்ணிட்டேன்.. ” என்றவள் தான் சாப்பிட்ட உணவுக்கான பணத்தை எடுத்து அவன் கையில் திணிக்க ஆத்திரத்தின் உச்சிக்கு சென்றான் சசி.

” என்ன காசு கொடுத்து என்னை அசிங்கப்படுத்துறியா.. என்னமோ தப்பு பண்ண கூப்பிட்ட மாதிரி வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிற.. ரோடுனு பாக்குறேன் இல்லை எனக்கு வரும் ஆத்திரத்துக்கு.” மக்கள் அவர்களை கவனிப்பதை கண்டதும்  சசி முடியை கோதினான். தென்றல் ஆத்திரத்தில் உடல் நடுங்க நின்று கொண்டிருந்தாள்..

சிறிது நேரம் கழித்து தான் பேசியதின் உட்பொருளை உணர்ந்து கொண்டவன் தென்றலின் பக்கம் மன்னிப்பு கோரும் விதமாக பார்வையை செலுத்த அவனை உணர்ச்சியற்ற பார்வை பார்த்தவள் திரும்பி தன் போக்கில் நடக்க ஆரம்பித்தாள்..

வழியில் வந்து கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்த  பின்னால் தன் வண்டியை உருட்டி கொண்டு வந்த சசி

“அண்ணா இல்ல வேணா” ஆட்டோவை கட் பண்ண முயன்றான்.

” என்னம்மா வரியா இல்லையா.. “

“வரேன்” தென்றல் ஆட்டோவில் ஏறி அமரப் போகும்போது  சசி அவள் கரத்தை பிடித்தான்..

“ப்ளீஸ்.. கொஞ்ச நேரம் உன் கிட்ட தனியா பேசணும்..” சசியின் தொடுகையை எதிர்பார்க்காத தென்றல் தடுமாறினாள்.

” கைய விடுங்க.. “

“ப்ளீஸ்”

” கைய விடுங்க..” குரல் உயர்த்தினாள்.

“ப்ளீஸ் தென்றல்..” ஆட்டோக்காரர் வேறு ஒரு பக்கம் அவளை  ஆட்டோவில் ஏறுகிறாயா இல்லையா என்று கேட்டுக் கொண்டே இருக்க தென்றலுக்கு தலைவலி வந்தது. ஆட்டோகாரரிடம் மன்னிப்பு கேட்டவள் சசியை முறைத்தபடி நின்றாள்.

” இப்ப என்ன வேணும் உங்களுக்கு எதுக்கு என்ன டார்ச்சர் பண்றீங்க.. “

” எனக்கு உன்கிட்ட பேசணும்.. கொஞ்ச நேரம் பீச் கூட வேணாம்.. தனியா  ஐ மீண் பார்க் எங்கயாச்சும்”.. பக்கத்தில் இருந்த மாலுக்கு தென்றல் அடிக்கடி அவள் தோழிகளோடு வருவது சகஜம். அங்கே செல்ல முடிவெடுத்தாள் தென்றல்.

எனவே இந்த பேச்சை முடிக்க எண்ணிய தென்றல் சசியோடு அந்த மாலுக்குள் நுழைந்தாள்.

சில்லென்ற ஏசி காற்று முகத்தில் மோத  சசியின் இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தது. தென்றலின் பதற்றமும் அதனோடு கூடிய கடுப்பும் அவள் முகத்தில் நன்றாக தெரிந்தது.

” உங்களுக்கு கொஞ்சம் கூட மேனர்ஸே இல்லையா.. நான் யாரு உங்களுக்கு? இது ஒன்னும் 1930 இல்லை.. கைய புடிச்சா கற்பு போயிடும்னு பயப்பட.. ஆனா  கையப் பிடிக்கிறதுக்கும் உரிமை இருக்கணும். எப்போ எந்த உரிமையை உங்களுக்கு கொடுத்தன்னு கொஞ்சம் சொல்றீங்களா..” மிகக் கடுமையாக வெளிவந்தது தென்றலின் குரல்.

இவ்வளவு கடுமையாக அவளால் பேச முடியுமா? சசி மித்ரன் ஆச்சரியமாக அவளை பார்த்தான்.. தான் நடந்து கொண்டது அநாகரிகம் என்று அவன் புத்திக்கு உரைத்தது.

” சாரி.. நான் கூப்பிட கூப்பிட நீ போய்கிட்டே இருக்க.. எனக்கு வேற வழி தெரியல.. ஆட்டோ முன்னாடி வழி மறைச்சு உன்னை இறங்குன்னு சொல்லி இருந்தா நீ என்ன பண்ணிருப்ப.. “

” என்ன பைத்தியக்காரத்தனம்.. எதுக்கு இந்த டிராமா.. ” ஒரு நிமிடம் அந்த மால்லை சுற்றிலும் சசியின் கண்கள் ஓடியது. மறு நிமிடம் தென்றலை நோக்கியது அவனின் கண்கள்.

பட்டென்று விஷயத்தை போட்டு உடைத்து விட்டான்..

” எனக்கு உன்ன பிடிச்சிருக்கு.. உனக்கும் என்ன பிடிச்சிருந்தா  கல்யாணம் பண்ணிக்கலாமா.. ” எந்த தைரியத்தில் அவன் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறான் என்பது அவனுக்கே தெரியவில்லை. எந்த தருணத்தில் அவன் காதலை உணர்ந்தான் என்றும் தெரியவில்லை. ஆனால் திருமணம் என்று சோமசுந்தரமும் விசாலாட்சியும் அவனுக்கு நெருக்கடி கொடுக்க  சசியின் மனதில் வந்த ஒரே உருவம் தென்றல் மட்டுமே.

சசி மித்ரனின் கேள்வியில்  மூச்செடுக்க மறந்து போனாள் பூந்தென்றல்..

விழித்தட்டி  தன்னுடைய மூச்சு சீரானதும் அவனை புரியாத பாவனையில் நோக்கியவள்  இன்னதென்று சொல்ல முடியாத படபடப்பின் உச்சியில் கால்கள் தடுமாற  அவளால் நிலையாய் நிற்க முடியவில்லை.

அவளின் நிலை புரிந்து தென்றலின் கரத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டவன்,

” தண்ணி வச்சிருக்கியா” அவன் கேட்ட கேள்வி புரியாமல் அவள் முழித்துக் கொண்டிருக்க அவளது தோளை மெல்லத் தொட்டு  மீண்டும் அதே கேள்வியை கேட்டான். ஆம் என்று தலை அசைக்க  அவள் பேக்கில் இருந்து தண்ணீர் பாட்டிலை அவனே எடுத்து கொடுத்து குடிக்க சொன்னான்.

அவளுக்கு தண்ணீர் மிகவும் அவசியமாக இருந்தது..

” இத பாரு தென்றல் எனக்கு தெரியும் இந்த விஷயம் உனக்கு எவ்வளவு ஷாக்கா இருக்கும்னு.. சத்தியமா நான் கனவுல கூட நினைச்சு பாக்கல உன்ன லவ் பண்ணிட்டுருக்கேன்னு. திடீர்னு ரெண்டு நாள் முன்னாடி என் அப்பா அம்மா நான் உடனே கல்யாணம் பண்ணனும்னு  பொண்ணெல்லாம் பாத்துட்டாங்க.. என்னால வீட்டுல எதுவும் பேச முடியல. அம்மா மேல எனக்கு பாசம் ஜாஸ்தி. அத வச்சு என்ன கார்னர் பண்றாங்க.

அப்ப கூட எனக்கு தெரியல. இன்னிக்கு உன்ன பார்த்தேன் இல்ல  அந்த செகண்ட் என் மனசுல சொன்னுச்சு உன்ன தவிர வேற யாரையும் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது.. அவ்ளோ ஏன் என்னால அந்த இடத்துல வேற யாரையும் வச்சு யோசிக்கக்கூட முடியல.. பேசி பழகி அதுக்கு பின்னால லவ் வந்து யோசிச்சு கல்யாணம் பண்ணி இதுக்கெல்லாம் எனக்கு டைம் கிடையாது தென்றல்.. உன் கூட இருந்தா என் வாழ்க்கை சந்தோஷமா இருக்குனு தோணுது.. நீ என்ன நல்லா பாத்துக்குவன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அதே மாதிரி நானும் உன்ன  நல்லா பாத்துக்குவேன் தென்றல். நான் சொன்னது எல்லாமே கரெக்டான எனக்கு தெரியல. ஆனா மேட்டர் இதான்” ஏசி காற்றிலும் வியர்வை லேசாக முகத்தில் துளிர்த்திருக்க அதனை கையால் துடைத்தபடி பேசி முடித்தான் சசி மித்ரன்.

அமைதியாக அவன் பேசுவதை கேட்டுக் கொண்டு நின்று தென்றல் இதயம் சுக்கு நூறாக உடைந்து சிதறியது.. அந்த கணம் சசி மீது அவளுக்கிருந்த ஈர்ப்பு காதலாக மாறியது..

கசந்த புன்னகை ஒன்று வலியோடு தென்றல் முகத்தில் தோன்றியது.. கரித்துக் கொண்டு வந்த கண்களை சிமிட்டி

” அன்னைக்கு உங்க கூட கோயம்புத்தூர் வந்தேன்ல.. அப்போதான் எனக்கும் வீட்டில மாப்பிள்ளை பார்த்து கிட்டத்தட்ட எல்லாமே ஓகே ஆயிடுச்சு..” சொன்னவள் திரும்பிப் பார்க்காமல் நடக்க தொடங்கினாள். அவள் கூறிய வார்த்தைகளின் தாக்கம் சிறிது தூரம் அவள் சென்ற பிறகுதான் அவனை விட்டு நீங்கியது.

எதிரே அவள் இல்லாமல் போக அவள் சென்ற திசை நோக்கி ஓடினான்.. “தென்றல்.. ஹேய் தென்றல்.. நில்லு.. வீட்ல பாக்குறது இருக்கட்டும் நீ என்ன சொன்ன..” அவள் மேற்கொண்டு செல்ல முடியாமல் வழிமறித்து நின்றான் சசி.

” இதுவரைக்கும் என் அப்பா அம்மா பேச்ச நான் மீறுனது கிடையாது..” அவனை சுற்றிக்கொண்டு நடக்க தொடங்கினாள்.

மீண்டும் அவள் பின்னால் ஓடியவன்” நான் கேக்குறது உனக்கு புரியுதா நீ என்ன சொன்ன.. உனக்கு.. உனக்கு இதுல சம்மதமா” ஒரு நிமிடம் அவன் கண்களை ஆழமாக பார்த்தவள் புன்னகையோடு கூடிய தலையாட்டலை அவனுக்கு பதிலாக கொடுத்தாள். என்ன முயன்றும் கட்டுப்படுத்த முடியாமல் ஒரு சொட்டு கண்ணீர் அவள் கன்னங்களில் உருண்டோடி கீழே விழுந்தது..

தென்றல் சென்று விட்டாள். சசி மித்ரன் அவள் போகும் பாதையை பார்த்துக் கொண்டே நின்றான்..