தியாழினியின் முகம் பார்த்த அந்த நொடி, மேகனின் மனதில் மழையே பொழிந்தது. பார்த்ததும் பிடிந்துவிட்டது அவளை… “இவள் தான் எனக்கு ஆளானவள்; என்னுடையவள்; என் துணை” என்று!
ஜில்லென்ற காற்று ஜன்னலில் இருந்து வீசியது. வானம் மின்னியது அந்த நொடி. தமிழினியுடன் முல்லை கொஞ்சம் மிரட்டியபடி, கொடியில் காயப்போட்டிருந்த உடைகளை எடுத்துக்கொண்டே அதட்ட, தமிழ் தனது அம்மாவின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தாள். இன்னொரு பக்கம் மைதிலி வந்து தமிழைத் தூக்கிச் செல்ல, அந்த இருண்ட மாலைப்பொழுதில் சிரித்தபடி பார்த்துக்கொண்டிருந்தான் மேகன்.
“ஒரு பெண் இந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறாளா? எப்படி இது?” என உதட்டில் மாறாத புன்னகையுடன் நின்றிருந்தவன், இதோ உடனே மெசேஜ் செய்தான். “தியா” என்று டைப் செய்தான்.
சட்டென ஒரு சஞ்சலம், “நான் நேரில் அவளை பார்க்கவே இல்லையே? அவளுக்கு தன்னைப் பிடித்திருக்குமா? இல்லை, வீட்டில் கேட்டதுக்காக ஒத்துக்கொள்கிறாளா?” உள்ளுக்குள் யோசனையாக இருந்தது.
இதற்கெல்லாம் பதில் தியாழினிதான் கூற வேண்டும். உடனே அழைத்துவிட்டான்.
அழைப்பு சென்று கொண்டிருக்க, மறுமுனையில் ஆண்குரல்! மேகனின் முகம் சட்டென மாறிட, “ஹலோ” என்று மீண்டும் பேசினார் நடேசன்.
நெற்றியை நீவிக்கொண்டவன், “ஹலோ, நான் மழை மேகன் பேசறேன்” என பதில் கொடுத்தான்.
“அடடே மாப்ளை…”
“ஹான், அது… நல்லா இருக்கீங்களா?” என வேறு வழியில்லாமல் கேட்டான்.
தியாழினிதான் பேசுவாள் என மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தான். ஆனால், அவளின் தந்தை பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை.
“சம்மந்தி சொன்னாங்க மாப்ளை… நீங்க வர முடியலன்னு…” என்று நடேசன் பேசிச்செல்ல, அவனும் வேறு வழியில்லாமல் பேசினான்.
நடேசன் சிறிது நொடிகள் கழித்து, “என்ன விஷயம் மாப்ளை?” என்று கேட்டுக்கொண்டிருக்க, “என்னங்க, மாப்பிள்ளைக்கு பாப்பா கிட்ட பேசணும் போல, அதுக்குத்தான் போன் பண்ணியிருக்கார்; நீங்க வேற வழவழன்னு…” என ராணியின் குரல் கேட்க, “நல்லவேளை அறிவுரை சொன்ன புண்ணியவதிக்கு நன்றி” என நினைத்துக்கொண்டான் மேகன்.
“மாப்ளை, ஒரு நிமிஷம், நான் இப்போ பாப்பாக்கிட்ட கொடுக்கிறேன்” என நடேசன் சொல்ல, அப்படியே போனை ராணியிடம் கொடுத்தார். ராணி சிரித்தபடி, “மாப்ளை, நல்லா இருக்கீங்களா? இதோ இப்போ தியா கிட்ட கொடுக்கிறேன்” எனப் போன் அப்படியே சௌந்தர்யாவிடம் சென்றது. “ப்ரோ, தியா கிட்ட பேசணுமா? இதோ தரேன்” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்க…
மேகன் அரண்டுவிட்டான். ஒவ்வொரு முறையும் ஆசையாக அவள் பேசுவாள் என நினைக்கும் நேரத்தில் வேறு ஒருவர் பேச, அவனுக்கு தியாவிடம் பேசும் ஆசையே போனது. இதோ அடுத்ததாகப் பூரணி வாங்கி அதையே கூறினாள்.
“ஹலோ, என்னங்க ஒரு நிமிஷம்… எனக்கு முக்கியமா வேலை இருக்கு. நான் அப்புறம் பேசறேன்” என வேகமாக போனை கட் செய்தான். “என்ன கொடுமை சரவணன் இது!” என்னும் நிலைதான்! தியாவின் படத்தை பார்ப்பதும், அங்கும் இங்கும் நடப்பதுமாக இருந்தான்.
சிறிது நேரத்தில் மேகனின் போன் அலற, யாரென பார்த்தான். அதே எண்! “ப்ச், இந்த முறை யாருன்னு தெரியலையே” என ஒருவித தயக்கத்துடன் பதில் ஏற்றவன், “ஹலோ, சொல்லுங்க” என கம்பீர குரலில் கேட்டான்.
ஒரு சில நொடிகள் கழித்து, “நான் தியாழினி பேசுறேன்” என பதில் வர… மேகனின் உதட்டில் ஒரு நொடி சிரிப்பு தோன்ற, உடலெங்கும் பரவசம் பரவியது. மின்சாரம் தாக்கியது. அவனது மின்சார பெண் இவள் தான்!
தியாழினி கூட அதே நிலையில் தான் இருந்தாள். இதயம் படபடவென அடித்துக்கொண்டது. கைகள் வியர்க்க, ஒருவித பதட்டத்துடன் “ஹலோ” என மீண்டும் அழைத்தாள்.
“ம்ம், லைன்ல இருக்கேன்” என மேகன் அவனது தன்மையில் இருந்து பதில் கொடுத்தான்.
“இன்னும் உங்க வீட்ல அம்மாச்சி, தாத்தா, அண்ணா யாரும் பெண்டிங் இருக்காங்களா?”
“ஏன், என்ன சொல்றீங்க?”
“இல்லை, தியாழினி கிட்ட பேசுறதுக்கு முன்னாடி… காவலாளி, சிப்பாய், மந்திரி, ராஜகுரு, ராஜா, ராணி அப்படின்னு ஆர்டர் எதுவும் இருக்கா என்ன?” என கேட்டான்.
தியாழினிக்கு ஒருவித நடுக்கம் பரவிட, “உங்களுக்கு என்னை பிடிக்கலைன்னு தெரியுது மழை மேகன்… என்னை வேணாம்னு சொல்லத்தானே சுத்தி வளைச்சு பேசுறீங்க? நான் வீட்ல சொல்லிக்கிறேன்” என அவள் வைக்கப்போக…
“ஹே, ஹே தியாழினி! நான் எப்போ உங்களை பிடிக்கலன்னு சொன்னேன்?” என்று பதறினான் மேகன். அவன் தன்னை மாதவன் சூர்யா ரேஞ்சுக்கு பில்ட் செய்து கெத்து காட்டி பேச நினைத்தால், பெண்ணவள் சிறுத்தை போல சீறிவிட்டாள்.
மறுமுனையில் அமைதி நிலவியது. “லைன்ல இருக்கீங்களா?” என மேகன் கேட்க…
தியா மெல்லிய குரலில், “ம்ம்” என்றாள்.
“அங்கே நைட்ஆ இல்ல பகலா?” என்று மேகன் வேண்டுமென்றே கேட்க, தியாவின் உதட்டில் புன்னகை மிளிர்ந்தது. அதை மேகன் கூட உணர்ந்துகொண்டான். தலையை கோதியபடி மீசையை நீவிக்கொண்டு, “சிரிச்சீங்களா?” என கேட்டான்.
“இ… இல்லையே!!” என வேகமாக பொய் கூறினாள், உதட்டைக் கடித்துக்கொண்டு.
“சரி, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலையே?” என மேகனின் குரல்…
“என்ன கேள்வி?”
“பகலா ராத்திரியான்னு கேட்டேன்.”
“இரவு 7 மணி” என்றாள் மெல்லிய குரலில்.
“என்னை இதுக்கு முன்னாடி பார்த்திருக்கீங்களா? என்னை பிடிச்சிருக்கா?” என நேராக விஷயத்துக்கு வந்துவிட்டான் மழைமேகன்.
“இ… இல்லை… அப்ப அண்ணாங்க ரெண்டு பேரும் எனக்கு நல்லதுதான் செய்வாங்க. அதனால எனக்கு ஓகே” என்றாள்.
மேகனுக்கு இந்த பதிலிலேயே தியாவின் குணநலன் என்ன என்பது மதிப்பீடு செய்ய போதுமானதாக இருந்தது.
“ஹலோ, என்னாச்சு?” என அவள் திரும்ப பேசினாள்.
“உங்க அப்பாவும் அண்ணாவும் என் கூட வந்து வாழப்போறதில்லை. நீங்க வரப்போறீங்க. உங்களுக்கு என்னை பிடிக்கணும்; எனக்கு உங்களை பிடிக்கணும். இது ரெண்டும் ஜாதக பொருத்தத்தை விட முக்கியம். இது பொருந்தினா தான் இந்த கல்யாணம் நடக்கும். எங்க அம்மா பார்க்கிற பொண்ணை தான் நான் கட்டிப்பேன். ஆனால், என் அம்மா பார்க்கிற பொண்ணுக்கு என்னையும் பிடிக்கணும் இல்லையா?” என ஒவ்வொரு வார்த்தையையும் திருத்தமாக பேசினான்.
மூச்சடைத்து நின்றாள் தியாழினி. இதை அவள் அவனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. அவனது பெயரில் மயங்கி இருந்தவள், அதைவிட அவனது பேச்சைக்கேட்டு விழுந்தே விட்டாள் என்று சொல்லலாம்.
“இருக்கீங்களா?” என மேகனின் குரல் உயர்ந்தது.
“ம்ம், இருக்கேன், சொல்லுங்க.”
“என்னோட போட்டோ பார்த்தீங்களா?”
“இ… இல்லை…” என்று தயக்கமாக வந்தது குரல்.
“ம்ம் ஓகே, நான் இப்போவே என்னோட போட்டோ சென்ட் பண்றேன். பார்த்திட்டு என்னை பிடிச்சிருந்தா கால் பண்ணுங்க, நான் வைக்கிறேன்” என மேகன் வைக்கப்போக..
“ஒரு நிமிஷம்… என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?” என தியா கேட்டாள்.
“லேடீஸ் ஃபர்ஸ்ட். நான் உங்களுக்கு கேள்வியா என்னோட போட்டோ அனுப்பியிருக்கேன். நீங்க எனக்கு பதில் சொல்ல போன் பண்ணுங்க” என கூறிவிட்டு கட் செய்தான்.
தியா ஒருவித பதட்டத்துடன் இருக்க, ‘டிங்’ என மெசேஜ் வந்தது. படம் அழகாக ஒளிர்ந்தது. ஒயிட் சர்ட், கிரே பாட்டம், திருத்திய மீசை தாடி, அழகான கண்கள், அகன்ற மார்பு, நீளமான விரல்கள் என புராணத்தில் இருக்கும் காதல் நாயகன் போல இருந்தான் மழை மேகன். வேறு எங்கோ பார்த்தபடி ஜன்னலில் சாய்ந்து இருந்தான்.
தியா இன்னும் உற்சாகமாகி போனாள். அவனை மனதில் நிரப்பிக்கொள்ள இரு கண்கள் போதாது. அவள் எப்படி இருந்தாலும் பிடித்திருக்கிறது என்றுதான் கூறியிருப்பாள். காரணம், அவளது அண்ணன்கள் மற்றும் அப்பா பார்த்த மாப்பிள்ளை அவன். ஆனால், அவனை பார்க்கும் போது நிஜமாகவே பிடித்திருந்தது. மழை மேகனை நினைத்ததும் தோன்றிய விஷயத்தை உடனே அனுப்பினாள்.
“யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்தான்நோக்கி மெல்ல நகும்.”
என்று அனுப்பியிருந்தாள் தியா.
மேகனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் அடுத்து கேட்க வருவதற்குள், “பொருள் என்னன்னு கண்டுபிடிங்க… என்னோட பதிலும் கிடைக்கும்” என்று ஆஃப்-லைன் சென்றுவிட்டாள் தியாழினி.