அத்தியாயம் 5 :

அங்கே நரேந்திரனோ ராஜனுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

“என்ன சொல்றிங்க நரேந்திரன்?” என்றார் கோபத்துடன்.

“தப்பா எடுத்துக்க வேண்டாம் ராஜன் சார். இதை இதோட முடிச்சுக்குவோம்” என்றார் நரேந்திரன் பொறுமையாக.

“எதை முடிச்சுக்க சொல்றிங்க. உங்க பையன் தான் மாப்பிள்ளைன்னு சொந்த பந்தம் எல்லாருக்கும் சொல்லிட்டேன். அரசியல் வட்டாரத்துலயும் விஷயம் கசிய ஆரம்பிச்சுடுச்சு. இப்போ வந்து இப்படி சொல்றிங்க?” என்றார் கொஞ்சமும் கோபம் குறையாமல்.

“இதுக்கு மேல என்னை எதுவும் கேட்காதிங்க ராஜன் சார். அதி சொல்ல சொன்னதை உங்ககிட்ட சொல்லிட்டேன்” என்றார்.

“உங்க பையனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்? என் பொண்ணை பிடிக்கலைன்னு சொல்ற அளவுக்கு?” என்றார் ராஜன்.

“ராஜன் சார், நான் பொறுமையா தான் பேசிட்டு இருக்கேன். நீங்க ஏன் தேவையில்லாம என் பையனைப் பத்தி பேசுறிங்க? அப்படி என்ன உங்க பொண்ணு உசத்தி? நாங்க எதையும் ஹார்ஷா சொல்லலை. உங்களுக்கு எப்படியோ தெரியாது, என் பையனுக்கு பொண்ணு குடுக்க அத்தனை பேர் ரெடியா இருக்காங்க. அவனுக்கு உங்க பொண்ணை பிடிச்சிருக்குன்ற ஒரு காரணமும், நீங்களும் இந்த சம்பந்தத்தை விரும்புனிங்கன்ற காரணமும் தான் இது இவ்வளவு தூரம் வந்து நின்னது” என்றார் நரேந்திரன்.

“அதைத்தான் நானும் கேட்குறேன் நரேந்திரன், என் பொண்ணை பிடிச்சிருக்குன்னு சொன்னவருக்கு இப்போ திடீர்ன்னு பிடிக்காம போகக் காரணம் என்ன? ஒருவேளை மொழி கூட நான் பேச விடலைன்னு கோபமா? இல்ல, அவளை சந்திக்க விடலைன்னு கோபமா?” என்றார் புரியாமல்.

நரேந்திரனுக்கு அவரிடம் என்ன காரணம் சொல்லுவதென்றே தெரியவில்லை. அவர் அமைதியாய் இருக்க,

“எங்களை விட வசதியானவங்க யாரும் கிடைச்சுட்டாங்களோ? அதான் இப்படி மறைமுகமா சொல்றிங்களா நரேந்திரன்?” என்றார் ராஜன்.

அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த வானதிக்கு கோபத்தை அடக்கி வைக்க முடியவில்லை. கணவரிடமிருந்து போனைப் பிடுங்கியவர்,

“இங்க பாருங்கண்ணா பணம் காசை பார்த்து மயங்குறவங்க நாங்க இல்லை. கோபத்துல பேசுற வார்த்தை எதையும் திரும்ப அள்ள முடியாது. பார்த்து பேசுங்க. நீங்க கேள்வி கேட்க வேண்டியது எங்களை இல்லை. உங்க பொண்ணைத்தான் கேட்கணும். ஏன்னா, உங்க பொண்ணு தான் வேற ஒரு பையனை விரும்புறா. அது யாரு என்னன்னு கேட்டு அவங்களை சேர்த்து வைக்கிற வழியைப் பாருங்க” என்றார் படபடவென்று.

“நீ என்னம்மா சொல்ற?” என்றார் ராஜ ராஜன் அதிர்ந்து.

உளறிவிட்டதை நினைத்து தன்னைத் தானே நொந்து கொண்ட வாசுகி,

“அது அப்படி சொல்ல வரலைண்ணா..! எதுக்கு பிடிக்காத ரெண்டு பேரை சேர்த்து வைச்சு கஷ்ட்டப் படுத்தனும். அவங்களுக்கு பிடிச்ச வாழ்க்கையை அவங்க வாழ்ந்துட்டு போகட்டுமே. அந்த அர்த்ததுல தான் சொன்னேன்” என்று எதையோ சொல்லி சமாளித்துவிட்டு வாசுகி போனை வைக்க, நரேந்திரன் மனைவியை முறைத்துக் கொண்டிருந்தார்.

“அதி என்ன சொல்லிட்டு போனான்? நீ என்ன பண்ணி வச்சிருக்க வாசுகி? ராஜ ராஜன் இதை சும்மா விடுவார்னு நினைக்கிறியா? அந்த குடும்பத்தைப் பத்தி தெரிஞ்சும் இப்படி உளறி வச்சுட்டியே?” என்றார்.

“நான் சொல்லனும்னு சொல்லைங்க. ஆதங்கத்துல பேசிட்டேன்னு  நினைக்கிறேன்” என்றார் பரிதவிப்புடன்.

“சரி விடு..! என்னைக்கா இருந்தாலும் தெரியப் போறது தான? அது நம்ம மூலமா தெரிஞ்சதுன்னு நினைச்சுக்குவோம்” என்ற நரேந்திரனுக்கு மனம் முழுவதும் மகனைப் பற்றிய கவலை தான் அரித்துக் கொண்டிருந்தது.

இவர்களிடம் பேசி விட்டு வைத்த ராஜன்,

“மொழி” என்று கத்திய கத்தலில் வீட்டில் இருந்த அனைவரும் என்னவோ ஏதோவென்று வெளியே வர, மொழியும் எதுவும் புரியாமல் வந்து நின்றாள்.

தந்தையின் கோபத்தைக் கண்டவளுக்கு எதுவோ சரியில்லை என்று தோன்றியது மனதிற்குள்.

“டாடி” என்று வந்து நின்றவளை ஓங்கி அறைவதற்காக கையை நீட்டியவர் அவளின் மிரண்ட முகம் கண்டு அப்படியே கையை இறக்கி விட்டார்.

“ஏங்க” என்ற சங்கரி அதிர்ந்து நிற்க,

“வீட்டுப் பிள்ளையை கை நீட்டுறது என்ன பழக்கம் ராஜா?” என்றார் தியாகராஜன் கோபமாக.

“இவ பண்ணி வச்சிருக்குற வேலைக்கு வேற என்னப்பா செய்ய சொல்றிங்க? பையன் வீட்ல இருந்து தான் போன் பண்ணாங்க. இந்த நிச்சயத்தை நிறுத்திடுங்கன்னு” என்றவரின் பேச்சில் அதிர்ந்து பார்த்தவளுக்கு உள்ளுக்குள் ஆசுவாசமாய் இருந்தது.

‘ஹப்பாடி ஒரு வழியா அவங்களே நிறுத்த சொல்லிட்டாங்களா?’ என்றவளுக்கு அப்படி ஒரு நிம்மதி. ஆனால் அந்த நிம்மதி இரண்டு நிமிடம் கூட நீடிக்கவில்லை அவளுக்கு.

“என்ன காரணமாம்? திடீர்ன்னு ஏன் இப்படி சொல்லணும்?” என்றார் தியாகராஜன்.

“உங்க பேத்தி யாரையோ லவ் பண்றாளாம் ப்பா. அவங்க சொல்லி இதைக் கேட்ட எனக்கு எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சு பாருங்க” என்றவர் கோபமாய் மகளைப் பார்க்க, அவளின் நெஞ்சாங்கூடே காலியாகிப் போன உணர்வு அவளுக்கு. பயத்தில் சர்வாங்கமும் நடுங்கிப் போனது.

‘இந்த விஷயம் அவங்களுக்கு எப்படி தெரியும்’ என்று எண்ணியவளுக்கு எதுவும் புரியவில்லை.

“அவங்க சொன்னது நிஜமா மொழி” என்றவரித்திடத்தில் இதற்கு மேல் மறைக்க வேண்டாம் என்று எண்ணியவள்,

“உண்மை தான் டாடி” என்று சொல்லி முடிக்கும் முன் சங்கரி வந்து அவளை அறைந்திருந்தார்.

“அம்மா” என்றவள் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு நிற்க,

“உனக்கென்ன பைத்தியம் பிடிச்சிருக்காடி. இதை முன்னமே சொல்றதுக்கு என்ன? எத்தனை தடவை கேட்டோம். அப்பல்லாம் பையனை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு இப்போ இப்படி சொல்ற. அருமையான குடும்பம். தங்கமான பையன். நம்ம பொண்ணு போற இடத்துல சந்தோஷமா இருப்பான்னு நான் நிம்மதியா இருந்தா, என் நிம்மதியை குழி தோண்டி புதைச்சுட்டியே?” என்றார் ஆதங்கமாய்.

“ம்மா”

“பேசாத மொழி! அமைதியா இருந்தே எங்க கழுத்தை அறுத்துட்ட இல்ல” என்றவருக்கு மனமே ஆறவில்லை.”

வீட்டில் இருந்த அனைவரும் அவளை ஏதோ தேசத் துரோகி போல் பார்க்க, அவளால் யார் முகத்தையும் பார்க்கவே முடியவில்லை.

அவளை யோசனையுடன் பார்த்த ராஜன்,”தீரன்கிட்ட நீ பேசுனியா?” என்றார்.

அவரைப் புரியாமல் பார்த்தவள்,”தீரன் யாரு டாடி? நான் யார்கிட்டயும் பேசலையே?” என்றாள் உள்ளே போன குரலில். அவள் அப்போது இருந்த பதட்டத்தில் எங்கே இதையெல்லாம் கவனித்தாள்.

‘தீரன் யாரா?’ என்றவருக்கு வந்த கோபத்திற்கு அளவில்லை.

அவளிடம் கொடுத்த போட்டோ எதையும் அவள் பார்க்கவில்லை என்பது அவருக்கு தெளிவாக தெரிந்து போனது.

“பையன் போட்டோவை பார்த்தியான்னு அன்னைக்கு கேட்டப்போ எல்லாத்துக்கும் தலையை தலையை ஆட்டுனியே? அதுக்கு என்ன அர்த்தம்?” என்றவரால் அவளிடம் பொறுமையாக பேச முடியவில்லை.

“சரி அந்த பையன் யாரு?” என்றார் வரவழைத்துக் கொண்ட நிதானத்துடன்.

“அ..அது வந்து டாடி..தா..தாரிக் தான்” என்றவளை இப்போது அடக்கவே முடியாமல் அடித்திருந்தார் ராஜன்.

அவளோ கண்ணீர் வடிய அப்படியே நிற்க,

“அண்ணா வேண்டாம்னா” என்று தடுத்தார் ஆனந்தன்.

“பின்ன என்ன ஆனந்தா? இத்தனை நாள் பிரண்டு பிரண்டுன்னு நம்ம கிட்ட சொல்லிட்டு இப்படி ஒரு வேலையை பார்த்து வச்சிருக்கா. இவ சொன்னதை நம்ம எல்லாரும் நம்பினோமே? அப்போ நம்மளை எல்லாம் ஏமாத்திட்டு அவன் கூட ட்ரிப்க்கு போயிருக்கா? பிரண்ட்ஸா போறாங்கன்னு நம்பித்தான அனுப்பி வச்சோம்? என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்கா பாரு? இவ செஞ்ச காரியத்துக்கு நம்ம  மானம் மரியாதையை அடகு வைக்கணுமா?” என்றார்.

“டாடி பிளீஸ்! நான் உங்க பொண்ணு. இப்படி எல்லாம் பேசாதிங்க. நான் நிஜமாவே பிரண்ட்ஸ் ட்ரிப் தான் போனேன். தாரிக் என்னை உண்மையா லவ் பண்றான். எனக்கும் பிடிச்சிருந்தது. நானே உங்ககிட்ட பேசலாம்னு தான் இருந்தேன்” என்றாள் வரவழைத்துக் கொண்ட தைரியத்துடன்.

“எப்போ, நிச்சயம் முடிஞ்சு கல்யாண மேடையில சொல்லியிருப்பியா? இல்லை அங்க இருந்து ஓடிப் போயிருப்பியா?” என்றார்.

“உங்ககிட்ட சொல்லாம விட்டது தப்புத்தான். கண்டிப்பா நிச்சயத்துக்கு முன்னமே சொல்லியிருப்பேன். பிளீஸ் டாடி, என்னை தப்பா மட்டும் நினைக்காதிங்க” என்றாள் பரிதவிப்புடன்.

“நான் தப்பா நினைக்கக் கூடாது, இந்த அப்பனோட மானம் மரியாதை போகக் கூடாதுன்னு நீ நினைச்சா  நான் பார்த்த பையனுக்குத் தான் நீ கழுத்தை நீட்டனும்” என்றார் உறுதியான குரலில்.

“ஒருத்தருக்கு நம்பிக்கை குடுத்துட்டு அதை கெடுக்குற மாதிரி நடந்துக்கிறது தப்பில்லையா டாடி?” என்றாள்.

“அதே கேள்வியை நானும் கேட்கலாம் இல்லையா? நீ சொன்னதை நம்பி எங்க பொண்ணுக்கும் விருப்பம் தான்னு சொல்லி அந்த பையனுக்கு நம்பிக்கை வார்த்தை குடுத்துட்டு இப்போ அதை நானே மீறலாமா? பையனையே பார்க்காம சரின்னு தலையாட்டுனியே அது சரியா? திரும்ப திரும்ப உன்கிட்ட சொன்னேனே? இது நடந்தாகனும்னு. அது எதுக்கு? இப்படி லவ்வுன்னு எதையும் சொல்லிட்டு வரக் கூடாதுன்னு தான்” என்றார் அவரும் விடாமல்.

“டாடி பிளீஸ்! நான் வேணும்னா அவங்க கிட்ட சாரி கேட்குறேன்” என்றாள்.

“ஹோ..! அந்த அளவுக்கு உனக்கு தைரியம். இந்த லவ்வெல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரிப்பட்டு வராதுன்னு சொல்லி சொல்லித் தான வளர்த்தோம். அப்போ கொஞ்சம் கூட பெத்தவங்க மேல மரியாதையும் இல்ல, பயமும் இல்ல” என்றார் தியாகராஜன்.

“தாத்தா”

“என்ன தாத்தா? நீ புத்திசாலி பொண்ணுன்னு நினச்சேன். ஆனா வடிகட்டுன முட்டாள்னு இப்போத்தான் தெரியுது” என்றார் முகத்தில் வெறுப்புடன்.

“என் வாழ்க்கையை தேர்ந்தெடுக்குற உரிமை எனக்கு இருக்கு. நீங்க என்னை அடிச்சே கொன்னாலும் சரி நான் தாரிக்கை தான் விரும்புறேன். அவனைத் தான் மேரேஜ் பண்ணிப்பேன்” என்று குரல் உயர்த்திப் பேசியவளைக் கண்டு குடும்பமே அதிர்ந்து போய் நின்றது. ஒரு நாளும் அவள் இப்படி எதிர்த்து பேசியதில்லை.

“நான் உயிரோட இருக்குற வரைக்கும் அது நடக்காது. அதுலயும் அந்த தாரிக். அவன் உயிரோட இருந்தாத் தான  நீ இப்படி பேசுவ. இதுவரைக்கும் நல்லவனா இருந்துட்டேன். இனியும் அப்படி இருந்தா பொண்ணோட வாழ்க்கை கேள்விக் குறி ஆகிடுமே” என்ற தந்தையை மிரண்டு போய் பார்த்தாள் வெண்மொழி.

“டாடி பிளீஸ்..! அவனை ஒன்னும் பண்ணிடாதிங்க”

“அது நீ சொல்ற பதில்ல தான் இருக்கு” என்றவர் மனைவியிடம் அவளைப் பார்த்துக் கொள்ளுமாறு ஜாடை காட்டிவிட்டு கிளம்பி சென்று விட்டார்.

“உள்ள கூட்டிட்டு போய் நல்ல புத்தி சொல்லுமா. வீட்ல பொம்பளைப் பிள்ளைங்க என்ன செய்றாங்க? ஏது செய்றாங்கன்னு கவனிக்கிறதை விட உங்களுக்கு என்ன வேலை?” என்று மருமகள்கள் இருவரையும் கடிந்து விட்டு சென்றார் தியாகராஜன்.

“இதை நான் உன்கிட்ட எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல மொழி” என்ற விஹான் மேற்கொண்டு அவளிடம் எதுவும் பேசவில்லை. ஒரே நாளில் மொத்தக் குடும்பத்திடமிருந்தும் அந்நியப்பட்டு போனாள் வெண்மொழி.

சென்னை கமிஷனர் அலுவலகம்…அந்த மதிய நேரத்திலும் பரபரப்புடன் காணப்பட்டது.

தாரிக்குடன் சேர்ந்து உள்ளே இருந்த பதட்டத்தை மறைத்துக் கொண்டு முதன் முறையாக கமிஷனர் அலுவலகத்தில் காலடி எடுத்து வைத்தாள்.

“தாரிக் ஒரு நிமிஷம்” என்று அவனை நிறுத்தியவள்,

“இதெல்லாம் வேண்டாம்..! எங்க வீட்ல சம்மதிக்கிற வரைக்கும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணலாம்” என்றாள் மொழி.

“என்ன பேசிட்டு இருக்க மொழி? நேத்தே உங்கப்பா என்னைப் போட்டுத் தள்ள ஆளுங்களை அனுப்பிட்டார். அவங்ககிட்ட இருந்து தப்பிக்க நான் பட்ட பாடு எனக்குத் தான் தெரியும். லோக்கல் ஸ்டேஷன்ல பாதுகாப்பு கேட்டுப் போனா எதுவும் நடக்காது. விஷயத்தை முதல்ல உங்கப்பா கிட்ட தான் சொல்லுவாங்க. இது கமிஷனர் ஆபீஸ். இங்க பாதுகாப்பு கேட்டு இவங்க முன்னாடி மேரேஜ் பண்றது தான் சேப்டி” என்றான் தாரிக்.

“சொன்னா புரிஞ்சுக்கோ தாரிக். நான் எந்த விஷயத்துலையும் பொய் சொன்னதே இல்லை. எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு. என் குடும்பத்தையே இங்க நிக்க வச்சிடுவாங்களோன்னு பயமா இருக்கு. அப்பா சாதாரண ஆள் கிடையாது. இப்பவே என்னை யாருக்கும் அடையாளம் தெரிஞ்சுடுமோன்னு வதக்கு வதக்கு இருக்கு” என்றாள்.

“அப்போ நான் செத்தா உனக்கு பரவாயில்லையா பேபி. அப்படின்னா சொல்லு இப்பவே ரிட்டன் போய்டலாம். உன்னைய உண்மையா லவ் பண்ணதுக்காக நான் உயிரைக் குடுக்கக் கூடத்  தயாரா இருக்கேன். உன்னோட கனவுகளுக்கு நான் வெளிச்சமா இருக்கணும்னு நினைச்சேன். நீ மறுபடியும் அந்த இருட்டுக்குத் தான் போவேன்னு சொல்ற. அதுக்கு மேல உன்னோட விருப்பம்” என்றான் வெறுமையான குரலில்.

இருதலைக் கொள்ளி எறும்பு போல் ஆனது அவள் நிலைமை. தாரிக்குடன் செல்வதைத் தவிர அவளுக்கும் வேறு வழியிருக்கவில்லை.

“ஏசிபி சாரை பார்க்கணும்” என்றவனை மேலும் கீழும் பார்த்தார் அந்த காவலர்.

“வெயிட் பண்ணுங்க, சார் இப்போ வந்திடுவார்” என்றார்.

வெண்மொழியோ தலையைக் குனிந்து கொள்ள, அவளுக்கு மனதிற்குள் ஏதோ தப்பு செய்வதைப் போன்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருந்தது. யாரும் தன்னை அடையாளம் கண்டு கொள்வார்களோ என்ற அச்சம் வேறு.

“நம்ம பிரண்ட்ஸ் எல்லாரும் வந்துடுவாங்கல்ல?” என்றாள்.

“வந்துட்டு இருக்காங்க. நந்தி மெசேஜ் போட்ருக்கா” என்றான். இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே,

உடன் வந்த இன்ஸ்பெக்டரை கோபத்தில் திட்டியபடி வந்தவன், அங்கிருந்த இருவரையும் கவனிக்கவில்லை.  நிறைய பேர் யூனிபார்மில் வந்து போய் கொண்டிருக்க, அவர்களும் அவனை கவனிக்கவில்லை. அவன் அறைக்குள் சென்ற சில நிமிடங்களில்,

“சார் உங்களை வர சொன்னார்” என்று அந்த காவலர் கூற, தாரிக் அவளின் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே சென்றான். மொழிக்கோ எட்டு வைக்கவே முடியவில்லை.

“சொல்லுங்க என்ன பிரச்சனை?” என்றபடி நிமிர்ந்தவன், எதிரே இருந்த இருவரையும் கண்டு திகைத்து, அதை அப்படியே உள்ளுக்குள் மறைத்துக் கொண்டான்.

“நீயா?” என்ற தாரிக், நிமிடத்தில் சுதாரித்து,”நீங்களா?” என்று மாற்றியிருந்தான்.

தாரிக்கின் வார்த்தைகளில் மெல்ல தலையை நிமிர்த்தியவள் அங்கே கண்டது அதி தீரனைத்தான். அவள் விழிகளில் அதிர்ச்சி குடியேற, அவளால் நம்பவே முடியவில்லை. வேகமாய் அங்கிருந்த பெயர் பலகையை பார்க்க, “அதிதீரன் IPS.. அசிஸ்டன்ட்  கமிஷனர் ஆப் போலீஸ்” என்று இருந்தது. அவனும் கைகளை கட்டியபடி அவளைத் தான் பார்த்திருந்தான்.

அவன் பார்வையின் தீட்சண்யத்தின் பொருள் புரியாமல் நின்றவளுக்கு உள்ளுக்குள் நெஞ்சம் அடித்துக் கொண்டது.