சென்னையில் தன் வீட்டில் தன்னுடைய அறையில் அமர்ந்திருந்தவளின் முகம் முழுவதும் வேதனை படிந்திருந்தது. கப்பலில் நடந்த விஷயங்கள் ஒரு பக்கம்,வீட்டில் நடந்து கொண்டிருந்த நிச்சயதார்த்த ஏற்பாடுகள் ஒரு பக்கம் என அவளைப் போட்டு அழுத்திக் கொண்டிருந்தது.
அவள் தந்தை அமைச்சர் ராஜராஜனை பார்க்க வரும் கூட்டத்திற்கு அளவில்லாமல், வீடு முழுவதும் ஆட்களும், வீட்டின் முன்பகுதியில் செக்யூரிட்டியும்.. எப்போதும் போல் இப்போதும் அந்த வீடு அவளுக்கு ஒரு சுதந்திரமற்ற சிறைச்சாலை போலவே தோன்றியது.
ராஜ ராஜன் பிறப்பிலேயே செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை தியாகராஜனும் அரசியலில் பெரிய பொறுப்புகளில் இருந்தவர். அவரைப் பின்பற்றி ராஜராஜனும் அரசியலுக்கு வந்துவிட்டார். அவர்களின் களம் அரசியல் என்றாலும், பாரம்பரியமாக அவர்கள் செய்து வருவது நகைத் தொழில். முக்கியமான பகுதிகளில் எல்லாம் அவர்கள் நகைக்கடையின் கிளைகள் இருந்தது. தொழிலை ராஜராஜனின் தம்பி ஆனந்த ராஜன் பார்த்துக் கொள்கிறார்.
வெண்மொழியின் அக்கா பிரகதிக்கு திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகியிருந்தது. பிரகதியின் கணவன் சஞ்சய் பெரிய குடும்பத்து பையன் என்றாலும், ராஜராஜனின் வேண்டுகோளுக்கு இணங்க, பிரகதியோடு இணைந்து மாமனாரின் தொழில்களையும் பார்த்துக் கொள்கிறான்.
அனைவரும் காலை உணவிற்காக கூடியிருக்க, வெண்மொழியை மட்டும் காணவில்லை.
“ஆமா எங்க மொழியைக் காணோம்?” என்ற மாமனாரை சற்று பயத்துடன் பார்த்திருந்தனர் சங்கரியும், வாசுகியும்.
“அவளுக்கு டயர்டா இருக்குன்னு சொல்லி ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கா தாத்தா” என்றாள் பிரகதி.
“கப்பல்ல, சுத்திப் பார்க்கத்தான போனா? என்னமோ கப்பலை கயிறு கட்டி இழுத்துட்டு வந்த மாதிரி அப்படி என்ன அசதியாம்? நேரத்துக்கு வந்து சாப்பிடனும்னு தெரியாது? இன்னும் சின்னக் குழந்தைன்னு மனசுல நினைப்பா?” என்றார் தியாகராஜன்.
அதுவரை அமைதியாய் சாப்பிட்டுக் கொண்டிருந்த ராஜராஜன் தந்தையின் குற்றச் சாட்டில் கோபம் வரப் பெற்றவராய்,
“மொழி” என்றார் சத்தமாக. அவரின் குரல் அவள் அறை வரை எதிரொலிக்க, தந்தையின் குரலைக் கேட்டு அடித்துப் பிடித்து வெளியே வந்திருந்தாள் மொழி.
“டாடி” என்று அமைதியாய் வந்து நின்றவளைப் பார்த்த சங்கரிக்கு பாவமாய் போனது.
“சாப்பிடுறதை விட அப்படி என்ன வேலை? ரெஸ்ட் எடுக்கணும்னா சாப்பிட்டு போய் ரெஸ்ட் எடு” என்றார் அதிகார தொணியில்.
“ம்ம்..! சரிங்க டாடி” என்றவள் அமைதியாய் அமர்ந்து வேண்டா வெறுப்பாய் சாப்பிட ஆரம்பித்தாள். கண்களை முட்டிய கண்ணீரை வெளியே விடாமல் தடுப்பதற்கு அவள் வெகு பிரயத்தனப்பட்டாள்.
அக்காவின் நிலையைப் பார்த்த விஹானுக்கு பாவமாய் போனது. ஆனால் அங்கு யாரும் பெரியவர்களை எதிர்த்து பேசிவிட முடியாது.
“இந்த ட்ரிப்புக்கு போயிட்டு வந்தப்ப இருந்து ஆளே சரியில்லையே? எதுவும் பிரச்சனையா மொழி?” என்றார் தியாகராஜன். ராஜ ராஜனும் அவளையே பார்க்க,
‘இப்ப எதுக்கு தாத்தாவும் அப்பாவும் நம்மளை இப்படி பார்க்குறாங்க? பேசாம நடந்ததை சொல்லிடுவோமா? அப்படி சொன்னா இனி எப்பவும் இந்த வீட்டை விட்டு வெளிய அனுப்பவே மாட்டாங்களே’ என்று எண்ணியவள்,
“அதெல்லாம் ஒண்ணுமில்லை தாத்தா. கொஞ்சம் டயர்டா இருக்கு. வேற ஒண்ணுமில்லை” என்றாள் மெதுவாக.
“எம்பிஏ முடிச்சு ஆறு மாசமாச்சு. நம்ம நகைக்கடையில சென்னையில இருக்குற ஒரு பிரான்ச்சை உன் பொறுப்புல ஒப்படைக்கலாம்னு இருக்கேன். கல்யாணத்துக்கு அப்பறம் அக்காவை மாதிரி நீயும் தொழிலைப் பார்த்துக்கணும். அதுக்கு இப்போ இருந்தே ப்ரிப்பேர் ஆகிக்கோ மொழி. எப்போ பார்த்தாலும் கேமராவைத் தூக்கிட்டு போட்டோ புடிக்குறேன், ரசிக்கிறேன்னு கிளம்புனது எல்லாம் போதும். தலைமுறை தலைமுறைக்கும் உட்கார்ந்து சாப்பிடுற அளவுக்கு சொத்து இருக்குன்னாலும், அப்படியே உட்கார்ந்திருக்க முடியாது. நம்மளை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், அவங்க குடும்பமெல்லாம் இருக்கு. அதுக்காகவாவது நாம ஓடித்தான் ஆகணும். சித்தப்பாகிட்ட என்ன ஏதுன்னு கேட்டுக்கோ” என்றார் ராஜ ராஜன்.
“சரிங்க டாடி” என்றவள் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. அவர் பேசிய அனைத்திற்கும் ஆமாம் சாமி மட்டும் போட்டாள். அப்படி, அவள் விருப்பம் என்று எதைப் பேசினாலும் அதை காது கொடுத்து கேட்க அந்த வீட்டில் விஹான், சங்கரியைத் தவிர்த்து யாருமில்லை என்பதே உண்மை.
“பார்த்துக்கோ ஆனந்து” என்றார் தம்பியிடம்.
“இதையெல்லாம் நீங்க சொல்லனுமாண்ணா. நான் பார்த்துக்கிறேன் விடுங்க” என்றார் ஆனந்த ராஜன்.
ராஜராஜன் அமைச்சராக இருந்தாலும் நேர்மைக்கு பேர் போனவர். அவரைப் பொறுத்தவரை பதவி என்பது அவர் கௌரவம் அவ்வளவு தான். அதை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் அவருக்கு இருந்ததில்லை.
தன்னை ஏதும் கூறி விடுவார்களோ என்று விஹான் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருக்க,
“இன்னும் ஒரு வருஷம் தான் விஹான். உன்னோட படிப்பு முடிஞ்ச உடனே உனக்கும் இதே தான்” என்றார் ராஜன்.
“சரிங்க பெரியப்பா” என்றவன் வெண்மொழியின் அருகில் குனிந்தான்.
“அப்போ எனக்கும் படிப்பு முடிஞ்ச உடனே பெரியப்பா கல்யாணம் பண்ணி வச்சிடுவாரோ?” என்று சிரிக்காமல் கேட்க, அவனை முறைத்தாள் மொழி.
“நான் வேணும்னா கேட்டு சொல்லவா?” என்றாள் பல்லைக் கடித்தபடி.
“தம்பி இப்படித்தான் ஏதாவது கிறுக்குத் தனமா பேசுவேன். அதையெல்லாமா நீ சீரியஸா எடுத்துக்குவ?” என்றான் பாவமாய்.
“ரெண்டு பேருக்கும் அங்க என்ன முணுமுணுப்பு?” என்றார் தியாகராஜன்.
அவரின் கேள்வியில் விழித்த விஹான்,” அது வந்து தாத்தா, எப்படி இந்த வயசுலயும் தாத்தா இப்படி இளமையா இருக்காருன்னு அக்காகிட்ட கேட்டுட்டு இருந்தேன்” என்றான் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு.
“அதுக்கு மொழி என்ன சொன்னா?” என்றார் கறார் குரலில்.
“நம்ம தாத்தா எல்லா விஷயத்துலையும் மிஸ்டர் பெர்பெக்ட். பங்க்ச்சுவாலிட்டில அவரை அடிச்சுக்க ஆள் கிடையாது. அதான் சுறுசுறுப்போட இப்பவும் அதே இளமையோட இருக்காருன்னு சொன்னா தாத்தா” என்றான் சிரிக்காமல்.
“சரியாத்தான சொல்லியிருக்கா” என்று மீசை முறுக்கிவிட்டபடி அவர் எழுந்து செல்ல, வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள் மொழி.
“பார்த்தியா மொழி பெருசுக்கு குசும்பை? இவரு டார்ச்சர் தாங்க முடியாமத்தான் பாட்டி சீக்கிரமே புட்டுகிட்டு போய்டுச்சு. பொண்டாட்டி போன வருத்தம் கொஞ்சமாவது இருக்கா பெருசுக்கு. இன்னும் நான் ஹீரோடான்னு சுத்திட்டு இருக்காரு” என்று முணுமுணுக்க, அவர்கள் பேசுவது ஆனந்த ராஜனின் காதுகளில் தெளிவாக விழுந்து வைத்தது.
“இப்ப நீங்க பேசுறது மட்டும் அண்ணன் காதுல விழுந்தது, என்ன நடக்கும்னு தெரியும்ல?” என்றார்.
“அப்பா தயை கூர்ந்து எங்களை மன்னித்து அருளுக. இந்த வீட்ல எங்களுக்கு இருக்குற ஒரே ஒரு ஆண் ஜீவராசின்னா அது நீங்க மட்டும் தான்” என்ற மகனின் பேச்சில் லேசாக சிரித்து வைத்தார் ஆனந்த ராஜன்.
பேச்சு பேச்சாக இருந்தாலும் தாரிக் விஷயத்தை தந்தையிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் குழம்பிப் போயிருந்தாள் மொழி. நடக்க இருக்கும் நிச்சயதார்த்தத்தை எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை. அந்த வரன் பற்றி பேசிய போதே, மறுத்திருக்க வேண்டுமோ என்று காலம் கடந்து யோசித்தாள்.
‘பேசாம அந்த பையன்கிட்டயே போன் பண்ணி எனக்கு இதுல இஷ்ட்டம் இல்லைன்னு சொல்லிடலாமா?’ என்று யோசிக்க,
“வேற வினையே வேண்டாம். அதை அப்படியே உங்க அப்பாகிட்ட சொல்லிட்டா என்ன பண்ணுவ?” என்றது இன்னொரு மனம்.
‘அப்போ இதுக்கு என்ன தான் வழி?’ என்று புரியாமல் இருந்தவளை விஹான் ஆராய்ச்சியுடன் பார்த்திருந்தான்.
சென்னையில் அந்த அழகிய பங்களா அமைப்பில் இருந்த தனி வீட்டில் கவலையுடன் அமர்ந்திருந்தார் வானதி. அவரின் கணவர் நரேந்திரன் அவரையே கவலையாய் பார்த்தபடி இருந்தார்.
வானதியின் கவலையான முகம் சட்டென்று பளிச்சென்று மாற, திரும்பிப் பார்த்தார் நரேந்திரன். களைத்து ஓய்ந்து போன தோற்றத்தில் வந்து கொண்டிருந்தான் அதிதீரன்.
“அதி” என்றவர் வேகமாய் சென்று மகனைக் கட்டிக் கொள்ள,
“ம்மா! இது உங்களுக்கே ஓவரா தெரியலை. ஜஸ்ட் ஒரு பதினஞ்சு நாள் பார்க்கலை. அதுக்கு இப்படியா?” என்றான் சலிப்பாய்.
“பதினஞ்சு நாள் போன சரி. ஒரு போன் பண்றதுக்கு என்ன அதி? இங்க நாங்க என்னன்னு நினைக்கிறது?” என்றார் நரேந்திரன்.
“சாரி டாட். போன் பண்ண முடியாத சிச்சுவேஷன்” என்றவன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.
“என்ன அதி? முகம் டல்லா இருக்கு? வேற எதுவும் பிரச்சனை இல்லையே?” என்றார் வானதி.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை ம்மா..! உங்க கையாள ஸ்ட்ராங்கா ஒரு காபி குடுங்களேன். ரொம்ப ஹெட் ஏக்கா இருக்கு” என்றான்.
“இதோ ரெண்டு நிமிஷம் அதி” என்றவர் வேகமாய் அவனுக்கு காபி கலந்து கொண்டு வர, ஆசுவாசமாய் சோபாவில் அமர்ந்திருந்தவனின் தோற்றம் கண்டு நரேந்திரன் மனதிற்குள் துணுக்குற்றார்.
அவன் இருக்கும் இடத்தில் பரபரப்பிற்கும் சுறுசுறுப்பிற்கும் பஞ்சம் இருக்காது. ஒரு நாளும் அவன் இப்படி சோர்வாய் இருந்ததில்லை.
“உடம்புக்கு எதுவும் இல்லையே அதி?” என்றார் மகனிடம்.
“என்கேஜ்மென்ட்டுக்கு யார் யாருக்கு சொல்லணும் அதி? எதுவும் சொல்லாம நீ பேசாம கிளம்பி போய்ட்ட. ராஜன் குடும்பத்துல இருந்து போன் மேல போன். பதில் சொல்ல முடியலை என்னால. அதனால இந்த வாரத்துலையே வச்சுக்கலாம்னு சொல்லிட்டேன்” என்ற நரேனை அதிர்ச்சியுடன் பார்த்தான் அதிதீரன்.
“என்னாச்சு அதி?” என்றார் புரியாமல்.
ஒரு நொடி ஆழ்ந்து நிதானித்தவன்,
“இந்த என்கேஜ்மென்ட் நடக்காது டாட், நிறுத்திடுங்க” என்றவன் எழுந்து தன் அறைக்கு செல்ல முற்பட,
“விளையாடாத அதி? எல்லா ஏற்பாட்டையும் பண்ணியாச்சு. இப்போ போய் எப்படி சொல்ல முடியும்? அதுவும் என்ன காரணம் சொல்ல முடியும்? பொண்ணை உனக்கு பிடிக்கப் போய் தான சரின்னு சொன்னோம். இப்போ எப்படி மாத்தி பேச முடியும். அது மட்டுமில்லாம ராஜனைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். அவர் கௌரவத்துக்கு ஒரு பாதிப்புன்னா என்னமும் செய்யத் தயங்க மாட்டார்” என்றார் நரேந்திரன்.
“நீங்க கொஞ்சம் பொறுங்க. அதி வேண்டாம்னு சொல்றான்னா அதுல வேற ஏதோ விஷயம் இருக்கு” என்ற வானதி,
“உண்மையை சொல்லு அதி! எதுக்காக வேண்டாம்னு சொல்ற? என் பையன் மனசுல என்ன இருக்குன்னு எனக்குத் தெரியும்” என்றார் வானதி.
ஒரு நெடிய பெருமூச்சை விட்டவன்,”அந்த பொண்ணு மனசுல உங்க பையன் இல்லம்மா. இன்பேக்ட் அவளுக்கு நான் யாருன்னே தெரியலை. அன்ட் ஆல்ரெடி அவ கமிட்டேட். சோ, பெட்டர் இதை ஸ்டாப் பண்ணிடுறது தான். ராஜன் அங்கிள் கேட்டா என்னை மட்டும் சொல்லுங்க. நான் சொன்ன ரீசனை அவர்கிட்ட சொல்ல வேண்டாம். அவங்க லவ்வை ரிவியல் பண்றது அந்த பொண்ணோட வேலை. அதை நாம செய்ய வேண்டாம்” என்றவன் வேகமாய் அறைக்குள் சென்று விட்டான்.
“எங்க பொண்ணுக்கு முழு சம்மதம்னு நம்ம கிட்ட சொன்னாங்களே. அதி என்னடான்னா அவனை யாருன்னே அவளுக்குத் தெரியலைன்னு சொல்றான்? என்னதான் நடக்குதுங்க?” என்றார் வானதி.
“என்னைக் கேட்டா எனக்கு எப்படி தெரியும் வானதி. அன்னைக்கு நீயும் நானும் கேட்டப்பக் கூட அந்த பொண்ணு சரின்னு தான சொல்லுச்சு” என்றார் நரேந்திரன்.
“ஆமா இப்ப வந்து இப்படி பேசுங்க. பொண்ணுப் பார்க்க போகும் போதே வாடான்னா, வேலை அது இதுன்னு சாக்கு சொல்லிட்டு இப்போ இப்படின்னா என்ன பண்றது? அப்போ அந்த பொண்ணு போட்டோல கூட நம்ம அதியைப் பார்க்கலையாங்க?” என்ற வானதிக்கு ஆற்றாமையாய் வந்தது.
அறைக்குள் சென்ற அதிதீரனுக்கோ ஆற்றாமையாய் வந்தது. இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த கோபமெல்லாம் வெளியேற, நிதானம் அவனிடமிருந்து விடை பெற்று சென்றிருந்தது. அவன் அறையில் ஒட்டப் பட்டிருந்த வெண்மொழியின் புகைப்படமெல்லாம் அவனைப் பார்த்து சிரிப்பதைப் போன்று தோன்றியது.
ஆவேசம் வந்தவனாய் அனைத்தையும் பிடுங்கி எடுத்தவன், அதை சுக்கு நூறாய் கிழித்து எறிந்திருந்தான். அதை அப்படியே அள்ளி குப்பைக் கூடையில் கொட்டியவன், குளியல் அறைக்குள் நுழைந்து ஷவருக்கு அடியில் நின்று கொண்டான். அவனின் ஏமாற்றத்தையும், வலியையும் தண்ணீர் கரைத்துக் கொண்டிருந்தது.
“அங்கிள் மொழிகிட்ட பேசணும். அவங்க நம்பர் தர முடியுமா?”
“நிச்சயம் முடியட்டும் தீரன். அப்பறம் உங்களை யார் தடுக்க முடியும்?”
“இல்ல மொழிக்கு இந்த ப்ரப்போசலுக்கு சம்மதமான்னு கேட்கணும்?”
“என்மேல நம்பிக்கை இல்லையா தீரன்? என் பொண்ணுக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. இதை அவளே சொன்னா?”
“அங்கிள் நான் முக்கியமான வேலையா வெளிய போறேன். வர பிப்டீன் டேய்ஸ் ஆகும். மொழியை ஒரு தடவை பார்த்து பேசிட்டு போறேனே?”
“மொழி இப்போதான் அவ பிரண்ட்ஸ்சோட ட்ரிப் கிளம்பி போறா தீரன். நீங்க கொஞ்சம் முன்னமே சொல்லியிருக்கக் கூடாதா? இப்போ என்ன வேலையை முடிச்சுட்டு வாங்க. நிச்சயதார்த்தத்தை தடபுடலா பண்ணிடலாம்”
ராஜனுக்கும் அவனுக்கும் இடையே நடந்த உரையாடல்கள் எல்லாம் அவன் தலைக்குள் எதிரொலியாய் மாறி மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்க, தலையே வெடிக்கும் அளவிற்கு வலித்தது அதிதீரனுக்கு. வாழ்வில் அவன் கண்ட முதல் ஏமாற்றம். வெளியே சொல்லவும் முடியவில்லை. உள்ளுக்குள் வைத்துக் கொள்ளவும் முடியவில்லை. மருகி உருகி தண்ணீரில் கரைந்து கொண்டிருந்தான்.