“திரும்பத் திரும்ப உங்க பேர் ஏன் அந்த ஹீரோயினோட வந்துட்டே இருக்கு. அதுவும் ஹோட்டல்ல, மால்ல இருக்குற மாதிரி போட்டோஸ் எல்லாம் வருது? எப்போ பாத்தீங்க அவங்களை? ஏன் எங்கிட்ட சொல்லல?” என வரிசையாக கேள்விகள் எழுப்பினாள் செண்பகா.
நடுஇரவு தாண்டி அப்போதுதான் வீடு வந்திருந்த ரத்னதீபன் பயங்கர சோர்வாய் இருந்தான். அன்றைக்கு என பார்த்து உணவும் இன்னும் உண்ணாமல் இருக்க, படுத்தால் தேவலாம் போல் இருந்தது. அதை வெளிப்படையாக சொல்லியிருக்கலாம் ஆனால் முகம் காண்பித்தான்.
“நிம்மதியா தூங்கக் கூட விடமாட்டியாடி? வந்தவன் சாப்பிட்டானா என்னனு கேட்கல. தலை தெரிஞ்சதும் நிக்க வச்சு கேள்வியா கேட்டு குடஞ்சிடுறது. கேள்வி கேக்க வேற நேரமே இல்லை பாரு.”
“நீங்க வர்றப்போதான் கேக்க முடியும். குடும்பம் இருக்குனு நியாபகம் இல்லாம பொழுது விடிஞ்சா அரசியல் பொழுது சாய்ஞ்சா கட்சி ஆபீஸ்னு இருந்தா நான் எப்போ உங்களோட பேசுறது?” இவனுக்காக காத்திருந்து காத்திருந்து ஏமாந்த தருணங்களின் ஏக்கங்கள் வார்த்தைகளாய் வெடித்தது.
“அரசியல்ல இன்ட்ரஸ்ட் அதிகம்னு கல்யாணத்துக்கு முன்னாடியே சொன்னேன்தான. அப்போ மண்டையை மண்டையை ஆட்டுன.” உடல் அலுப்பும் இவளது கேள்விகளும் எரிச்சல் கொடுக்க, அதை கட்டுப்படுத்தாமல் அப்படியே வெளிப்படுத்தினான்.
“இன்ட்ரஸ்ட் மட்டும் இருந்தா பரவாயில்லை மொத்தமா அங்கேயே இருக்குறதுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணீங்க? இப்போ உங்க பேர் யாரோடவோ எல்லாம் அடிபடுது.” என முகம் சுழித்தாள் செண்பகா.
“இந்தாடி என்ன பிரச்சனை உனக்கு? படுக்கணும் போல இருக்கு படுக்க வுடரியா என்ன இப்போ?” அந்த சோர்விலும் கூட அதட்டலாய் அவன் குரல் வர, ஏனோ அதில் தூண்டப்பட்டுவிட்டது பெண்.
“இன்னைக்குத்தான் நான் தூங்குற முன்னாடி வந்திருக்கீங்க. காலையில பேசலாம்னா பல் விலக்குறதே போனோடதான். இவளுக்கு எதுக்கு பதில் சொல்லணும்னு முகம் திருப்புறீங்களா இல்லை இவளே வேண்டாம்னு வேணும்னு பண்றீங்களா?”
“என்ன வேணும்னு பண்றாங்க. உளராத.” கண்களை தேய்த்துக்கொண்டு அவளை உறுத்து விழிக்க, உரையாடல் செல்லக்கூடாத பாதை நோக்கி சென்றது.
“மினிக்கிகிட்டு ஒருத்தி கூட சுத்துறீங்களே அதுக்கு மட்டும் நேரமிருக்கு. எனக்கு பதில் சொல்ல நேரமில்லையா?”
“சந்தேகப்படுறியாடி?” பாய்ந்து வந்தான் ரத்னதீபன். அயர்விலும் கோபத்திலும் கண்கள் சிவந்து உடல் அலைச்சலில் அழன்றது வார்த்தைகள்.
“அப்படிதான் நடந்துக்குறீங்க. என்ன இருந்தாலும் வெள்ளைத் தோலு, மேக்கப் போட்டு நுனி நாக்குல இங்கிலீஷ் பேசி நடிக்குறவங்க மயக்குற அளவுக்கு எனக்கு விவரம் போதலை…” கோபத்தில் இவளும் பேச, பாய்ந்து வந்து அவள் இருகைகளையும் பிடித்து உலுக்கியவன், “லூசுத்தனமா எதையாச்சு கற்பனை பண்ணித் தொலையாத. பொண்டாட்டி உன்னையே நெருங்காம கண்ணியமா நிக்குறவன் வேற ஒருத்தியை தேடிப் போவேனா?”
“அதுதான் ஏன் நிக்குறீங்க? என்னைவிட அழகா வேற ஒருத்தி வரவும் நான்… நான்…” கோபத்தில் பேசிச் சென்றவளின் மொழிப்பாதை அவனால் அடைக்கப்பட, வன்மையாக தன் இதழில் படிந்த அவன் முரட்டு இதழ்களை ஏற்க முடியாமல் தள்ளி விட்டாள் பெண்.
ஆவேசமாய் தன்னிதழ்களை புறங்கை கொண்டு துடைத்துவிட்ட செண்பகா அவனை கொன்றுவிடும் ஆத்திரத்துடன் பார்க்க, அவளுக்கு சற்றும் குறையாத பதில் பார்வை பார்த்தவன், “என்னை புடிச்சிருந்தாலும் நான் இப்போ பண்ணது புடிக்கலைதான உனக்கு… எல்லாத்துக்கும் நேரம் வரும், சும்மா அவசரப்படணும்னா அதை எப்போவோ பண்ணியிருப்பேன் நான். என்னைப் போய் சந்தேகப்படுறீல நீ.”
“குரல் உசத்துனா நீங்க பண்றது எல்லாம் சரியாகிடுமா? சந்தேகப்படுற மாதிரி நீங்க நடந்துட்டு என்னை பேசி ஈஸியா அடக்கிடலாம்னு நினைக்காதீங்க.”
“என்னடி பேசிட்டே போற… ரெண்டு மூணு தடவைதான் மந்த்ராவை பாத்தேன். வேற யாரோ அவங்களோட வஞ்சத்தை தீர்த்துக்க இப்படி பரப்பிவிட்டுட்டாங்க.” விளக்கமாய் அல்லாது மேலோட்டமாய் அவன் சொல்ல,
“அதெப்படி நீங்க அவங்களை பாக்க போகாமதான் வாரத்துக்கு ஒரு போட்டோன்னு அவங்களா பரப்பிவிடுவாங்களா?” என சரியாகக் கேட்டாள் செண்பகா.
“ஆமாடி நாந்தான் போய் அந்த ஹீரோயினைப் பாத்தேன். போட்டோ எடுத்தோம். வேணும்னே பரவ விட்டோம். அதெல்லாம் அரசியல் தந்திரம். சும்மா எல்லாத்தையும் கேட்டுட்டு இருக்காத…” என்று அசட்டையாக சொல்ல அத்தனை அதிர்ச்சியானது செண்பகாவிற்கு.
வேலையற்ற சிலரால் தேவையின்றி பரப்பப்படுகிறது என்று நினைத்தால் வேண்டுமென்றே தேவைக்கு பரப்பப்பட்டது என்ற கணவனின் கூற்றை ஏற்கவே நேரம் பிடித்தது அவளுக்கு.
“ஏன்?” அதிர்வில் இதுமட்டும்தான் வந்தது அவளிடமிருந்து.
“என்ன ஏன்? இங்க மேல வரணும்னா நேர்மை பத்தாது தந்திரம் வேணும். இந்த போட்டோக்கு அப்புறம் என் கட்சியில என்னை தெரியாதவங்க மத்தியில கூட பிரபலமாகிட்டேன். எப்படியும் கட்சியில சீட் வாங்கிடுவேன்.” செண்பகா அதிர்வில் வேகம் குறைத்து பேசவும் இவனும் கொஞ்சம் இலகுவானான். உறக்கம் எப்போதோ விடைபெற்று சென்றிருக்க, முகத்தை தேய்த்துக்கொண்டு உடை மாற்றினான்.
“இவ்ளோ பெரிய விஷயம் முடிவு பண்ணியிருக்கீங்க என்கிட்ட சொல்லணும்னு தோணவே இல்லையா?” அதிர்வு நீங்கி அடிபட்டு போன உணர்வு இப்போது.
“உன்கிட்ட சொல்ல நேரமில்லடி. நேரமிருக்கும் போது கட்சில என்ன பண்றேன்னு முன்னாடி உன்கிட்ட சொல்லவும் செஞ்சிருக்கேன். இப்போ கொஞ்சம் டைட்டா இருக்கு அவ்ளோதான். மறைக்கவெல்லாம் இதுல ஒன்னுமே இல்லை.” அவள் உணர்வுகள் புரியாது இவன் இலகுவாக கட்டிலில் அமர்ந்து கைநீட்டி அவளை அருகில் அழைக்க, அழுத்தமாக அவனைப் பார்த்தவள்,
“உங்களோட ஒரு பொண்ணை சேர்த்து வச்சி பேசுறது அவ்ளோ பெரிய விஷயம் இல்லையா?”
“அது ரூமர்னு அன்னைக்கே சொன்னேன்ல செண்பா. அர்த்தமே இல்லாத விஷயத்துக்கு எதுக்கு இவ்ளோ மதிப்பு கொடுக்கணும்?”
“அர்த்தமே இல்லாததா? அதை பாக்கும் போது எனக்கு கஷ்டமா இருக்கே. அதுக்கு மதிப்பு இல்லையா அப்போ? என்னோட உணர்வுகளுக்கான பதில் ரூமரா? உங்களோட வேற ஒருத்தியை சேர்த்து வச்சி பேசுறப்போ உங்க பொண்டாட்டின்னு நான் ஒருத்தி தாலி வாங்கிட்டு இங்க இருக்கேனே அதுக்கான மரியாதை என்ன?”
சுற்றி சுற்றி இதையே பேசுகிறாளே என சலித்துக்கொண்டவன், “எதுக்கு இவ்ளோ எமோஷனல் ஆகுற? எல்லாம் கொஞ்ச நாள்தான். இதையெல்லாம் கண்டுக்காத.”
“அப்படியெல்லாம் இருக்க முடியாது. அந்த பொண்ணுகிட்டயிருந்து ஒதுங்கி வாங்க. இதுவரைக்கும் போட்ட போட்டோஸ் எல்லாம் அழிச்சிடுங்க. ட்ரெண்ட் பண்ணாதீங்க.” செண்பகா கட்டளை போல் சொல்ல,
எதிர்த்து குரல் உயர்த்தினான் ரத்னதீபன், “என்ன விளையாடுறியா… இதை செய்யணும்னு நானும் ஒன்னும் ஆசைப்பட்டு செய்யல. அரசியல்ல நிலைக்க அரசியல் மட்டுமில்லை இதுமாதிரி சில சில்லறைத்தனம் பண்ண வேண்டியதிருக்கு.”
“அப்படிப்பட்ட அரசியலே உங்களுக்கு வேண்டாம்.”
“லூசாடி நீ… எவ்ளோ அவமானப்பட்டு நின்னுருக்கேன் தெரியுமா. இப்போதான் ஏதோ மதிக்குறானுங்கா ஈஸியா விட்டு வான்னு சொல்ற.”
“என்னைவிட அரசியல் முக்கியமா அப்போ?” எகிறிச் சென்றாள் மனைவி. என்னைவிட, மனைவியான எனக்கான மரியாதையை விட இவனுக்கு இவன் அரசியல் முக்கியமா என்று வீறுகொண்டு எகிற,
“ஆமாம்னா என்ன பண்ணுவ? அந்த பொண்ணுக்கிட்டேயிருந்து ஒதுங்கிதான் இருக்கேன். போட்டோகூட சிலது எடிட் பண்ணதுதான். என் லிமிட் எனக்குத் தெரியும் செண்பா. இப்படி பேசி என்னை கோவப்படுத்தாத.” என்றதையும் கோவமாகத்தான் சொன்னான் ரத்னதீபன்.
சளைக்காதவள், “உங்களை பாக்குற எல்லாரும் முறையா வந்த என்னையும் அவளையும் ஒரே தராசுல வச்சிப் பாப்பாங்க. அது எனக்கு புடிக்கல. உங்க பொண்டாட்டியா, அந்த இடத்தை, அதுக்கான மரியாதையை என்னால விட்டுத்தர முடியாது.” அவன் வாழ்க்கையை அலங்கரிக்கும் ஒரே துணையாக தான் இருக்க வேண்டும் என்ற அவளின் எண்ணத்தை புரிந்துகொள்ளவே இல்லை அவன்.
“உன்னை விட்டுத்தர சொல்லி யாரும் இங்க சொல்லல. நான் சாவுற வரை நீதான் என் பொண்டாட்டி, அது உனக்கும் தெரியும். அரசியலுக்காக சிலது பண்ணாலும் சொந்த வாழ்க்கையில நெறி தவறிப்போறவன் இல்லைடி நானு. நம்பிக்கை இருந்தா இரு இல்லையா…” என ஒரு வேகத்தில் வார்த்தையை விட வந்தவன் சுதாரித்து நிறுத்த, அந்த வார்த்தையை இவள் நிரப்பிக்கொண்டு விடிந்ததும் பிறந்தகம் சென்றுவிட்டாள்.
அவன் மீது சந்தேகம் துளியும் இல்லை. அவன் வார்த்தைகளை முழுமையாக நம்பியவள், என்றைக்கு எனக்கான மரியாதை கிடைக்கிறதோ, நான் முக்கியம், என் உணர்வுகள் முக்கியம் என்று வருகிறானோ அப்போது அவனுடன் செல்வேன் என்று வீம்புடன் சொல்லிவிட்டாள். இரு குடும்பத்தினரும் இவனைப் பிடித்து வைத்து கேள்வி கேட்க,
‘நடிகையுடன் வந்த தேவையற்ற வதந்தியை பெரிதுபடுத்தி கோபித்துக்கொள்கிறாள். என் மனதில் அழுக்கில்லை.’ என புரியவைக்க முயன்றான்.
‘அழுக்கில்லை என்று வார்த்தையால் சொல்லிவிட்டால் போதுமா செயலில் இருக்க வேண்டும். நம்பி வந்தவளின் மரியாதை காக்க வேண்டும்.’ என்றாள் செண்பகா.
‘அரசியல் சூதாட்டத்தில் தான் மட்டும் நெறியை பின்பற்றி முன்னேற நினைத்தால் தந்தையை போல் பின்னேயே தங்கிவிட வேண்டியதுதான்.’ என்றான் பதிலுக்கு.
‘நேர்மையாக இருக்க முடியாதவன் ஊருக்கு எப்படி நல்லது செய்வான்.’ என செண்பகாவும் விடாது வாதிட,
‘நல்லது செய்வதற்கு கூட இதுபோன்ற செயல்கள் செய்து அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றினால்தான் செய்ய முடியும்.’ என்றெல்லாம் இவன் முட்டுக்கொடுக்க, பிரிவு நீண்டு போனது. குடும்பத்தினர் இருவரிடமும் பேசி பேசி ஓய்ந்துவிட்டனர். அதுவும் ரத்னதீபன் இவள் சென்றபின் இன்னும் தீவிரமாய் அரசியலில் இறங்கிவிட, அவனை பார்ப்பதே அரிதாகிப்போனது.
தேவையான பிரபலம் கிடைத்தவுடன் ரத்னதீபன் அரசியலிலும் மந்த்ரா படங்களிலும் ஊன்றிவிட, எப்போதாவது நட்பு நிமித்தமாய் சந்தித்துக்கொள்வது உண்டு. அது சில நேரம் புகைப்படமாய் கசிந்து செண்பகாவின் கோபத்தை குறையவிடாமல் பார்த்துக்கொண்டது. இவனும் துவக்கத்தில் பேசிப்பார்த்தவன் அவளின் முகத்திருப்பலில் அப்படி என்ன தவறு செய்துவிட்டேன், அவளை எங்கும் விட்டுக்கொடுக்கவில்லை, அவள்தான் தனக்கு என்பதில் அத்தனை திண்ணம். இருந்தும் புரிந்துகொள்ளாமல் இருக்கிறாளே என இறுக்கம் கொண்டான்.
அன்றைய இரவு இன்னும் தன்மையாய் தன்னை எடுத்துச் சொல்லியிருந்தால் இந்தப் பிரிவு நேர்ந்திருக்காதோ என்று இப்போது அமர்ந்து நினைத்துக்கொண்டிருந்தான் ரத்னதீபன்.
சில சண்டைகள் அது நிகழும் நாழிகை பொறுத்து நீட்சியோ சுருக்கமா பெறுகிறது. இலகுவான மனநிலையில் தங்களை புரியவைக்க வார்த்தைகள் தேடித்தேடி பொறுமையாக கையாள்வர். அதுவே மனச்சோர்வு இருக்கையில் எதிராளி கொஞ்சம் எதிர்த்து பேசிவிட்டாலும் எரிச்சல் மண்டிவிடும். விளைவு வார்த்தைகள் தடித்து, பேச வந்ததிலிருந்து திரிந்துவிடும். அன்றும் அப்படித்தான் ஆகியிருக்கும் என்று எண்ணியவனுக்கு இன்னுமே மனைவியின் நுண்ணுணர்வுகள் புரியவில்லை.
தேர்தல், கட்சிப்பணி என்று ஓடியவனுக்கு ஓய்வு நேரங்கள் எல்லாம் அசதியில் உறக்கத்திற்கு அழைத்துச் சென்றுவிடும் உடல். இப்போதும் அலைச்சலில் அசதி இருந்தாலும் வென்றுவிட்ட திருப்திக்கு பின் தன் சோர்வை நீக்கிக்கொள்ள துணை தேடுகிறது மனது. தனிமையை விரட்டி உறக்கம் வரும்வரை பேச மனையாளின் அருகாமை வேணும் என ஏங்குகிறது. மனைவியின் மடியும் அவளது வாசமும் வேண்டுமென்கிறது உடல்.
திருமணமான புதிதில் இதைத்தானே அவளும் எதிர்பார்த்திருப்பாள். அவனின் நேரங்கள் எல்லாம் தனக்கானதாக இல்லையென்றாலும் பொய்மையாயினும் தன்னுடையதை வேறு எவரும் பங்குபோடுவதை ஏற்கமுடியாத பாவையாய் அவள் நின்றது கண்கள் கட்டப்பட்ட இவனுக்கு தெரியாது போனது பாவமே.
பெருமூச்சுடன் மெத்தையில் விழுந்தவன் மனைவியை எப்படி மீண்டும் தன்னுடன் அழைத்துக் கொள்வது என்ற யோசனையுடன் உறங்கிப்போனான். மறுநாள் மருதுவும் அபிராமியும் சொல்லிக்கொண்டு கிளம்ப, இவனுக்கு முந்தைய தினம் போல் மனைவியின் விடுதிக்கு சென்று நின்றால் என்ன என்று தோன்றியது.
தலையை வேகமாக உலுக்கிக்கொண்டவன், ‘வேண்டாம். நேத்திக்கே அது பிரச்சனையாகி இருக்க வேண்டியது. ஏதோ தப்பிச்சாச்சு. தினம் அங்க போய் நின்னா தப்பாகிடும்.’
‘அவ வேலை பாக்குற இடத்துக்கு போனாலும் இதே பிரச்சனை வரும். இப்போ வேற நம்ம முகம் மக்கள் மனசுல பதிய ஆரம்பிச்சிடுச்சு, நிறைய பேருக்கு அடையாளம் தெரிய வாய்ப்பிருக்கு.’ என வேறு வழிகள் என்ன இருக்கிறது என யோசித்து அவளது அலைபேசிக்கு அழைத்தான். கிட்டதட்ட ஒருவருடம் கழித்து மனைவியின் அலைபேசிக்கு அவனிடமிருந்து அழைப்பு செல்கிறது. உடனே எடுத்துவிடுவாளா என்ன? துண்டித்தாள். இவன் தொடர்ந்து முயற்சிக்க பிளாக் லிஸ்ட்டுக்குள் சென்றுவிட்டது இவன் எண்.
‘இவளை எப்படி சரிபண்றது. இவளே என்னை புரிஞ்சிக்கலைனா எப்படி…’ என அவன் தலையை பிடிக்க,
‘இப்போ மட்டும் எதுக்கு கூப்பிடுறானா இருக்கும். எம்.எல்.ஏ குடும்பம் யாரு என்னனு நோண்ட ஆரம்பிச்சிருப்பாங்க. அதுல நல்ல பேர் எடுக்க என்னை கூப்பிட்டு இருத்திக்க பாக்குறானா இருக்கும். அரசியல்வாதி புத்தி வேற எப்படி போகும்.’ விரக்தியாக நினைத்துக்கொண்டு அன்றைய நாளுக்கு தயாரானாள் செண்பகா.