“அவன் அப்படி சொல்லிக் கொடுக்க சொன்னப்ப கூட வேண்டாம்னு தான் மா நினைச்சேன். ஆனா அவளை விட்டுக் கொடுக்க தயாரான அப்புறம் அவளைக் குழப்ப கூடாதுல்ல? அவன் சொன்ன மாதிரி சுயநலமா தான் இருக்கோம் போல?”, என்றான் ஒரு மாதிரி குரலில்.
“நீ ஆர்த்தியை கல்யாணம் பண்ணினா எத்தனை பிள்ளை வேணும்னாலும் பெத்துக்கலாம் டா. கவலைப் படாதே”, என்று சொல்ல அவனுக்கே என்ன உணர்வு என்று புரியாமல் அன்னையிடம் எப்படி புரிய வைப்பானாம்?
“ம்ம்”, என்று மட்டும் சொன்னான்.
“அவளுக்கு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி உனக்கு முடிச்சு வைக்கணும் டா”, என்றாள் கல்யாணி.
“சரி”, என்றவன் உள்ளே சென்று விட்டான். ஏனோ அறைக்குள் சென்றதும் ஒரு வெறுமை அவனை முகத்தில் அறைந்தது. அவன் குழந்தையுடன் அதிக நேரம் செலவிட்டது இல்லை தான். ஆனால் குழந்தை அந்த அறையில் தான் இருப்பாள். அவளுடைய பொம்மைகள் எல்லாம் அங்கே சிதறிக் கிடக்கும். இன்றோ எதுவுமே இல்லாமல் இருந்தது. என்ன தான் இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று அன்னை சொன்ன போதும் எதையோ இழந்த ஒரு வலி அவனுக்குள்.
வெளியே சென்றதும் குழந்தையை தூக்கி முன்னால் உக்கார வைத்தவன். அவள் கையில் இருந்த பொம்மை அடங்கிய பையை சீட்டுக்கு பின்னால் வைத்தான்.
அது எந்த பிடிமானமும் இல்லாமல் பின்னால் இருந்தது. “போகலாமா டா குட்டி?”, என்று அவன் கேட்டதும் “சரிப்பா”, என்று சொல்ல வண்டி கிளம்பியது. அவர்கள் வீட்டு வாசலிலே அந்த பையும் கீழே விழுந்தது. ஏனோ அந்த வீட்டின் மொத்த உறவுமே அங்கேயே முடிக்க நினைத்தான்.
“அம்மா எங்க பா இருக்கா? என் அம்மா சாமி கிட்ட எல்லாம் போகலையா பா?”
“இல்லை டா அம்மு, அம்மா நம்ம கூட தான் இருக்கா. அவளுக்கு லேசா உடம்பு சரி இல்லைன்னு தான் இவங்க வீட்ல விட்டோம். அங்க உன்னை அடிச்சாங்களா டா மா?”
“இல்லை பா, டேடி அடிக்க மாட்டாங்க. ஆனா என் கிட்ட பேசவே மாட்டாங்க. போன் பாத்துட்டு தான் இருப்பாங்க. அத்தை சித்தப்பா யாருமே பேச மாட்டாங்க. தாத்தா மட்டும் தான் பேசுவாங்க”
“கவலைப் படாத பட்டு குட்டி, நம்ம இப்ப நம்ம வீட்டுக்கு போக போறோம். அங்க உனக்கு ரெண்டு தாத்தா, ரெண்டு பாட்டி, ரெண்டு அத்தை, அப்புறம் ஒரு பெரியம்மா ஒரு அக்கா அண்ணன் எல்லாரும் இருக்காங்க. இனி எல்லாரும் உன் கிட்ட நல்லா பேசுவாங்க. அது போக உன் அம்மாவும் இருக்கா. இனி அம்மா உன் கூடவே தான் இருப்பா. அப்பாவும் இருக்கேன். பிள்ளைன்னு என்ன வேணும்னாலும் வாங்கி தருவேன். சரியா டா?”
“எனக்கு டோரா பொம்மை வேணும் பா”
“வாங்கி தரேன் டா”
“கலர் பென்சில்”
“அதுவும் வாங்கி தரேன். இன்னைக்கு பாப்பாவுக்கு புது டிரஸ் வாங்குவோம். நாளைக்கு நீ நான் அம்மா எல்லாரும் போய் நீ கேட்டது எல்லாம் வாங்குவோம். சரியா டா?”
“சரிப்பா”, என்று சொன்னவள் அவள் பள்ளியில் நடந்ததை பேசிக் கொண்டு வர அதைக் கவனித்த படியே வந்தான் தாமரை.
குழந்தை பேச்சில் கவனம் இருந்தாலும் மனம் என்னவோ ஒரு மாதிரி அலைபாய்ந்தது. அவன் ஏற்கனவே பொறுப்பானவன் தான் என்றாலும் இன்று அவள் தந்தை என்று சொல்லும் போதெல்லாம் வாழ்க்கையில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்ற படபடப்பு அவனுக்குள் எழுந்தது.
ஏனோ கடவுள் தனக்காகவே மீனாவையும் குழந்தையையும் படைத்தது போலவே இருந்தது. “அடியே அழகி, எனக்கு இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு டி. சாயங்காலம் உனக்கு பெரிய சர்ப்பிரைஸ் கொடுக்க போறேன். சந்தோஷத்தை தாங்குவியா டி அழகி?”, என்று மனதுக்குள் மீனாவுடன் பேசினான்.
பின் குழந்தையை நேராக கடைக்கு அழைத்துச் சென்றவன் அவளுக்கு என இரண்டு உடைகளை எடுத்தான். ஒன்றை அங்கே இருந்த பெண்ணிடம் கொடுத்து மாற்றி விடச் சொன்னான்.
பின் குழந்தைக்கு என பிடித்த சில பொம்மைகளை மட்டும் வாங்கினான், திரும்பி போகும் போது “அப்பா பொம்மை பேக் எங்க பா?”, என்று கேட்டாள் குழந்தை.
“அச்சோ அப்பா வேகமா வரப்ப பேக் விழுந்துட்டு போல டா? அது எல்லாம் பழசு தானே போனா போகுது? நாளைக்கு அம்மா கூட வந்து வேற வாங்குவோம். இப்ப இருக்குற பொம்மை வச்சு விளையாடு சரியாடா?”
“சரிப்பா”
“சமத்து பாப்பா”, என்றவன் அவள் பின்னந்தலையில் முத்தமிட்டவன் அவனுடைய வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான்.
மீனா அந்த வீட்டுக்கு மருமகளாக வருவதற்கு முன்பே மகிஷா அந்த வீட்டின் வாரிசாக அந்த வீட்டுக்கு சென்றாள்.
குழந்தையைக் கண்டதும் அனைவருமே சந்தோஷப் பட இப்போது தான் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவர்களைப் பார்வையிட்டாள்.
அதற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடன் ஐக்கியமானவள் “அம்மா எங்க பா?”, என்று கேட்டாள்.
“அம்மாவை பாக்க போகலாம் டா? இப்ப சாப்பிட்டு எல்லாரும் போவோம் சரியா? அத்தை ரெண்டு பேர் கூட உக்காந்து சாப்பிடு. அப்பா குளிச்சிட்டு வந்து அம்மாவை பாக்க கூட்டிட்டு போறேன்”, என்றான்.
“சரிப்பா”, என்றவள் வதனாவுடன் நன்கு ஒட்டிக் கொண்டாள். ஆனால் கலை எவ்வளவு கொஞ்சியும் அவளுடன் செல்ல மறுத்தாள். ஆனால் விளையாடினாள். மூவரும் உணவு உண்டார்கள்.
தாமரைக்கு யோசனையாக இருந்தது. அன்னை தந்தையை அழைத்துச் செல்லும் போது மீனா அங்கே இருக்க மாட்டாள் தான். அவள் விடுதியில் இருப்பாள். என்ன செய்வது? குழந்தை வேறு மீனாவை கேட்பதால் என்ன செய்ய என்ற யோசனையில் இருந்தான்.
அப்போது அவனது எண்ணத்தின் நாயகியே அவனை அழைத்தாள். இப்போதெல்லாம் என்ன நடந்தாலும் தன்னிடம் சொல்லும் படி அவன் சொல்லியிருந்ததால் தான் அவனை அழைத்தாள்.
“சொல்லு டி அழகி, அத்தான் ஞாபகமா?”, என்று சிறு சிரிப்புடன் கேட்டான். குழந்தை இங்கே இருக்கிறாள் என்று சொல்ல அவனுக்கு ஒரு நொடி ஆகாது. ஆனால் அவள் சந்தோஷத்தை அவன் அருகில் இருந்து பார்க்க வேண்டுமே?
“இல்லை ஒரு விஷயம் சொல்லணும். அதான் கூப்பிட்டேன்”
“என்ன? சொல்லு மா?”
“அம்மா இப்ப கால் பண்ணுச்சு? என்னன்னு எதுவும் சொல்லலை. லீவ் போட்டுட்டு உடனே வான்னு சொல்லுது?”
“எதுக்கோ?”
“ஒண்ணும் சொல்லலை?”
“நீ கிளம்பிட்டியா?”
“ஆமா”
“சரி சாப்பிட்டியா?”
“இனி தான், நீங்க”
“இனி தான் மா, சரி போய்ட்டு எனக்கு கால் பண்ணு. நான் கிளம்பி வரேன். பயப்படாம போ, உனக்கு நான் இருக்கேன். நம்ம குடும்பம் இருக்கு. எப்பவும் மறக்காத சரியா?”
“சரிப்பா. நான் வைக்கிறேன். பஸ் ஸ்டாண்ட் போய்ட்டு இருக்கேன்”
“உன் ஊர் பஸ் இந்த நேரத்துல இருக்கும் மா. பாத்து போ”, என்று சொன்னவன் ஆயிரம் பத்திரம் சொல்லி போனை வைத்தான். அவர்கள் எதற்காக அவளை வரச் சொல்லியிருக்கிறார்கள் என்று யோசனையாக இருந்தது.
இன்னும் சற்று நேரத்தில் தான் குடும்பத்துடன் வருவதாக அவளுடைய வீட்டில் சொல்லியிருந்தான். அதற்குள் அவளை அழைத்து ஏதாவது பேசி அவள் வாயாலே தன்னை வேண்டாம் என்று சொல்ல வைப்பார்களோ என்ற யோசனை வந்ததும் கொஞ்சம் பக்கென்று இருந்தது.
அவசரமாக சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே வந்தவன் “எல்லாரும் கிளம்பிட்டீங்களா? போகலாமா?”, என்று கேட்டான்.
“உன் அத்தை மட்டும் இன்னும் வரலை டா. வந்ததும் கிளம்பிறலாம்”, என்றாள் வசந்தா.
“அத்தையை போற வழில ஏத்திக்கலாம். நான் கிளம்பி இருக்கச் சொல்லி கால் பண்ணிறேன்”, என்று சொன்னவன் அவசரமாக இரண்டு ஆட்டோவை அழைத்தான். ஏற்கனவே அவர்களுக்குச் சொல்லி இருந்ததால் அவர்களும் உடனே வந்து விட்டார்கள்.
அவர்கள் சீதாவை ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு கிளம்ப அங்கே மீனாவும் அவர்கள் வீட்டு வாசலில் சென்று நின்றாள்.