வசந்தாவும் “வாங்க அண்ணி”, என்று வரவேற்க “நாளைக்கு பொண்ணு பாக்க போறீங்க? ஆனா எனக்கு இப்ப வரைக்கும் ஒரு விஷயமும் சொல்லலை? நான் அந்த அளவுக்கு வேண்டாதவளா ஆகிட்டேன்ல? அம்மா அப்பா இறந்த பிறகு எனக்கு ரெண்டு அண்ணன் மூணு தம்பி இருந்தும் உன் வீட்டுக்கு மட்டும் தான் உரிமையா என் பிறந்த வீடு மாதிரி வந்துகிட்டு போய்க்கிட்டு இருக்கேன். ஆனா உங்களுக்கு நான் முக்கியம் இல்லைல?”, என்று கேட்டாள் சீதா.

            “ஐயோ அப்படி இல்லை அண்ணி, இங்க உக்காருங்க. நான் எல்லா விஷயமும் சொல்றேன். உங்க மருமகன் ஒண்ணும் சாதாரண பொண்ணை பிடிச்சிருக்குன்னு சொல்லலை”, என்று ஆரம்பித்த வசந்தா மகனை ஒரு பார்வை பார்த்து விட்டு எல்லாவற்றையும் சொல்லி விட்டாள்.

            அனைத்தையும் கேட்ட சீதா திகைத்து போய் அமர்ந்திருந்தாள். “என்ன டா தம்பி இதெல்லாம் உன் பொண்டாட்டி இப்படி எல்லாம் சொல்றா?”, என்று கேட்டாள்.

            “நானும் சொன்னேன் அக்கா. ரெண்டு பேரும் கேக்கலை? அப்புறம் எனக்கும் தாமரை ஆசை பெருசா பட்டுச்சு. சரின்னு சொன்னேன்”

            “அண்ணி, நம்ம பிள்ளைக்கு பிடிச்சதை தானே நாம செய்ய முடியும்?”, என்று கேட்டாள் வசந்தா.

            “இப்ப எதுக்கு என்னமோ தப்பு செஞ்ச மாதிரி என்னை சமாதானப் படுத்திட்டு இருக்க? என் மருமகன் யோசிச்சது ரொம்ப பெரிய விஷயம். அதுக்கே நான் பாராட்டனுமாக்கும்”, என்று சொல்ல அனைவரின் முகமும் மலர்ந்தது.

            “அத்தை”, என்றான் ஆர்வமாக.

            “வாழ்க்கையை இழந்த ஒரு பொண்ணோட வேதனை என்னைத் தவிர வேற யாருக்கு நல்லா தெரியும்? கல்யாணம் முடிஞ்சு ஆறு வருஷத்துல உன் மாமா என்னை விட்டுப் போனார்? அதுவும் வேற ஒருத்தியைக் கட்டிக்கிட்டு. ஆனா எனக்காக அவரோட மொத்த குடும்பமும் அவரை ஒதுக்கி வச்சது. அந்த வீட்ல மருமகளா இருந்தாலும் என் மாமனார் மாமியார் என்னை அந்த வீட்டு பொண்ணா தான் பாத்துக்குறாங்க. சொத்து பத்து எல்லாம் என் பேர்லயும் என் பொண்ணு பேர்லயும் தான் இருக்கு. அப்படி இருந்தும் புருஷன் இல்லைன்னு நான் பட்ட கஷ்டம், பேசின பேச்சு எல்லாம் ரொம்ப பெருசு. அது எல்லாம் அந்த பொண்ணுக்கு வரக் கூடாது. நீ என் மகளை உன் முறைப் பொண்ணா பாக்கலைன்னு தெரிஞ்சும் அவளை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க கேக்கலாமானு தான் வந்தேன். ஆனா என் பொண்ணை விட  உன் கூட அந்த பொண்ணு வாழ்ந்தா நான் ரொம்ப சந்தோஷப் படுவேன்”, என்று சொல்ல சந்தோஷத்தில் அனைவரின் கண்களும் கலங்க தான் செய்தது.

            மகனுக்காகவும் மனைவிக்காகவும் மட்டும் சரி என்று சொல்லி இருந்த வேலாயுதம் கூட இப்போது சீதா பேசிய பேச்சில் முழுதாக சம்மதித்து சந்தோஷப் பட்டார்.

            “அத்தை நீங்களும் நாளைக்கு எங்க கூட வரணும்”, என்றான் தாமரை.

            “உறவுல அந்த பொண்ணுக்கு நான் தான் டா அம்மா. என் மகளுக்காக நான் வர மாட்டேனா? கண்டிப்பா வரேன்”, என்றாள். அதற்கு பின் வெகு நேரம் மீனாவைப் பற்றி பேசிவிட்டு தான் சீதா அங்கிருந்து கிளம்பிச் சென்றாள்.

            அன்று இரவு மீனாவை அழைத்தான் தாமரை. அவளுமே ஆவலாக அதை எடுத்தாள்.

“ரூம்க்கு வந்துட்டியா? வேலையா இருக்கியா?”

“இல்லை கிளாஸ் இப்ப தான் முடிஞ்சது. சும்மா தான் இருக்கேன்”

“தூக்கம் வருதா டி அழகி?”

“இல்லை, நேரம் ஆகும்?”

“சாப்பிட்டியா?”

“ஆமா, சப்பாத்தி. நீங்க சாப்ட்டாச்சா?”, என்று காதலர்கள் போலவே அவர்கள் பேச்சு இருந்தது.

“சாப்பிட்டேன், அப்பாவுக்கு லேசா இருமலா இருந்துச்சு. அதான் அம்மா கஞ்சி துவையல் வச்சிருச்சு”

“உடம்புக்கு நல்லது தான். வதனா, கலை ரெண்டு பேரும் என்ன பண்ணுறாங்க?”

“தெரியலை, அவங்க ரூம்ல இருப்பாங்க, நான் சாப்பிட்டு நம்ம ரூமுக்கு வந்துட்டேன்”, என்று சொன்னதும் ஒரு மாதிரி சிலிர்த்துப் போனாள் அழகு மீனா.

“நம்ம ரூமா?”, என்று அவள் கேள்வி வேறு எழுப்ப “ஆமா டி அழகி நம்ம ரூம் தான். வீடியோ கால் பண்ணட்டா? பாக்குறியா?”, என்று கேட்டான். அவளுக்கு ஒரு சதவீதம் கூட மறுக்க தோன்றவில்லை.

            “ம்ம் பண்ணுங்க”, என்று சொல்ல உடனே பண்ணி விட்டான்.

            வீடியோ காலை எடுத்தது தாமதம் தாமரையின் பேச்சு நிற்கவே இல்லை. “ரூம் பாத்தியா அழகி? நல்லா இருக்கா? இது தான் நம்ம கட்டில். நீ நான் பாப்பா மூணு பேருக்கும் சரியா தான் இருக்கும். அடுத்து பையன் வந்தாலும் நீங்க மூணு பேரும் மேல படுத்துக்கோங்க. நான் கீழ படுத்துக்குறேன். ரெண்டும் தூங்கின அப்புறம் நீ என் கிட்ட வந்துரு சரியா?”, என்று கேட்க அவள் கண்களில் அந்த காட்சியில் விரிந்தது.

            “பீரோ சின்னதா தான் டி இருக்கு. வேற ஒண்ணு வாங்கணும்? பாப்பா டிரஸ் உன் டிரஸ் வைக்கணும்ல? அப்புறம் இந்த இடத்துல உனக்கு தேவையான பொருள் எல்லாம் வச்சிக்கக்கோ சரியா?”, என்று சொல்ல அவளுக்கு அப்போதே அங்கு செல்ல வேண்டும் போல இருந்தது. சின்ன அறை தான், ஆனால் அங்கே இருப்பவனின் இதய அறையோ மிகப் பெரியதாயிற்றே?

            இப்போது தான் வாழவே ஆரம்பித்திருப்பதாக தோன்றியது மீனாவுக்கு. அவன் அப்படி தோன்ற வைத்தான் என்பது தான் உண்மை. அவன் வந்த பிறகு தான் ஒரு உயிர்ப்பை உணர்கிறாள்.

            “ஒண்ணு கேக்கவா?”, என்று தயக்கத்துடன் கேட்டாள் மீனா.

            “ஏய் பொண்டாட்டி, என் கிட்ட என்ன தயக்கம் கேளு டி?”

            “எனக்கு உடம்பு சரி இல்லைன்னா என்ன செய்வீங்க?”

            “லீவ் போட்டுட்டு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போவேன். லீவ் போட முடியலைனா அம்மா கூட ஆட்டோல அனுப்பி வைப்பேன். ரெஸ்ட் எடுக்க சொல்லுவேன். சாப்பாடு ஊட்டி விடுவேன். உன் துணி பிள்ளைங்க துணி எல்லாம் துவைச்சு போட்டுருவேன். அப்புறம் பசங்களையும் தூங்க வச்சிருவேன். கடைசியா உனக்கு மாத்திரை கொடுத்து இதோ இங்க என் தோள் இருக்கு பாத்தியா இதுல சாய வச்சு உன்னைத் தூங்க வைப்பேன். இது கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச நாள் மட்டும் இல்லை. நம்ம இந்த உலகத்துல இருந்து போற வரைக்கும் அப்படி தான்”, என்று சொல்ல அவள் கண்ணில் மினுக் என்று கண்ணீர் எட்டிப் பார்த்தது.

            அதை அவன் கவனித்தான் தான். அவள் கேள்விக்கு “நான் உன்னை எப்படி பாத்துக்குறேன்னு நேர்ல வந்து தெரிஞ்சிக்கோ டி”, என்று ஒரு வரியில் பதில் சொல்லி விட முடியும் தான். ஆனால் அவள் ஒரு எதிர்பார்ப்பை வைத்துக் கொண்டு தான் அந்த கேள்வியே கேட்கிறாள் என்னும் போது அதற்கு பதில் சொல்வதில் அவன் ஒன்றும் குறைந்து விடப் போவதில்லையே.

            “எனக்கு அங்க வரணும் போல இருக்கு”, என்றாள் மீனா.

            “வாங்க மேடம். சின்ன மேடத்துக்கும் உங்களுக்கும் தான் வெயிட் பன்றேன். வந்து என்ன டி பண்ணுவ? அத்தானுக்கு எதுவும் கிடைக்குமா?”, என்று கிசுகிசுப்பாக வந்தது அவன் குரல்.