பெண் அழைப்பு முடிந்து சுஜா, ஜெய் வீடு வரும் முன், ஜெய்க்கு முதுகலை வேதியல் ஆசிரியருக்கான பணி நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்கான ஆணை வீடு தேடி தபாலில் வந்தது. இங்கே சுசிலாவும், கீதாவும் ஜெய் திரும்ப ஊருக்கு வந்து தங்களை அழைத்துக்கொண்டு சென்னை செல்லச் சொல்லி விஜயனிடம் சண்டை செய்தனர்.
சென்னை வரச்சொல்லி தபால் வந்ததை கேள்விப்பட்ட சொந்த பந்தம் எல்லாம் சுஜா வந்த ராசி உடனே கவர்மெண்ட் வேலை கிடச்சிடுச்சி என பேச மாமியாரும், மருமகளும் அந்த புகழ்ச்சியை கேட்டு பொறுக்க முடியாமல் பொறாமையில் பொசுங்கினர்.
“எங்க பையன் ஜாதகத்துல அவனுக்கு கல்யாணம் பண்ணா வேலை கிடைக்கும் அப்படிங்கிற அம்சம் இருந்தது எங்களுக்கும் தெரியும். இவளன்னு இல்ல எந்த கழுதைய கட்டி இருந்தாலும் எம்பையன் வேலைக்கு போயிருப்பான்.” என சுசிலா சுஜா ராசிதான்னு வேலை கிடைக்குது என்று சொன்னவர்களிடம் சண்டைக்கு போக,
“நல்ல ராசியான பொண்ணா இருந்து என்ன செய்ய? இந்த ராட்சசிங்ககிட்ட வந்து மாட்டி இருக்கு பாறேன் இந்த பொண்ணு! ஐயோ பாவம்” என வருத்தப்படாத ஆளே அந்த ஊரில் இல்ல எனும் படியானது சுஜாவின் நிலை.
ஜெய் சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு சுஜாவை விட்டுட்டு, தங்களை அழைத்து போடான்னு சொல்லாம் என ஜெய்க்கு போன் செய்தபடி இருந்தார் சுசிலா . ஜெய் போனோ எப்போதும் பிஸியாக உள்ளது என வந்தது.
ஜெய் சுஜாவுடன் செல்வதை பொறுக்காத கீதா கலாட்டா செய்ய துவங்கியதும், விஜயன் தன் வீட்டில் உள்ள நபர்களின் நம்பர்களை ப்ளாக் பண்ணியிருந்தான் ஜெய் போனில்.
சுஜா நம்பரோ நாட் ரீச்சபிள். வேறு யாரு நம்பரும் தெரியாமல் தலையை பிய்த்துக் கொண்டார் சுசிலா.
கீதாவோ, “எங்க கல்யாணத்துக்கு அப்புறம் எம்புருசன் உங்களுக்காக, உங்க வயல்ல வேலை செய்ய கம்ப்யூட்டர் வேலைய விட்டுட்டு வந்தாரு. ஆனா இவ வந்தவுடன் இவ புருசன் மட்டும் சீவி சிங்காரிச்சிக்கிட்டு ஜம்முனு வேலைக்கு போவானாம். நிழலுல சொகுசா இருந்துட்டு வருவானாம், எம்புருஷன் மட்டும் வேகாத வெய்யிலில விவசாயம் பாப்பாரா? எந்த ஊரு நியாயம் இது?”
“அவன் வேலைக்கு வெளியில எல்லாம் போக வேண்டாம். இங்க இருக்குற வேலையவே பாத்தா போதும்”
“அவனும் வந்து வெள்ளாமைக்கு மருந்தடிக்கட்டும், தண்ணி கட்டட்டும், சாணி வாரட்டும். அவளையே வீட்டு வேலைக்காரியா மாத்த நான் முயற்சி பண்றேன். இதுல இவனுக்கு சொகுசா நெழலுல வேலை பாக்க கேக்குதா? விட்டுருவேனா நானு?” என நடு வீட்டில் நின்னு ஆத்திரத்தில் என்ன பேசுகிறோம் என தெரியாமல் மனதினுள் உள்ளதை சத்தம் போட்டு காட்டினாள் .
“விஜி நீ உன் மாமனாரு வீட்டுல ஒரு நாளுகூட இருந்ததில்ல. இவன பாரு, நேத்து காலையில போனவன இன்னும் காணோம். போன போட்டு கிளம்பி வரச்சொல்லு.”
“எங்க அப்பமுட்டு வளவுல, அதான் கீதாவூட்டுக்கு போயி ஒரு நாலுநாள் இருந்துட்டு வந்துட்டு அப்புறம் நாங்க சென்னை போறோம்” என சுசிலா சொன்னார்.
“சென்னைக்கு எதுக்கு அம்மா போறிங்க? அங்க உங்களுக்கு என்ன வேலை?” என விஜயன் கேட்டான்.
“ஜெய்யோட குடும்பத்த பாக்க அங்க இருக்கவங்க, அதான் வேல போட்டு குடுக்கிற மவராசன், ஆசையா இருப்பாங்க, இல்ல? அதனால நானும், கீதாவும் போயி நாங்க தான் அவனுக்கு எல்லாமுன்னு சொல்லி வேலைய வாங்கிக்கிட்டு வர்றோம்.” என சொல்ல,
“அங்க உன் மாமனும், மச்சானும் உன்ன காணோமுன்னு பொலம்பிட்டு இருக்காங்களா? உங்கள கேட்-க்கு வெளியவே நாய் மாதிரி நிப்பாட்டிடுவாங்க உன் மாமனுங்க. அதனால சுஜாவ கழட்டி விட்டுட்டு நீங்க போற கனவ விட்டு வெளிய வாங்க பக்கிங்களா” என கடுப்புடன் கத்தினான் விஜயன்.
“அவன படிக்க விடாம செய்ய ஆயிரத்தெட்டு வேலை பாத்திங்க நீங்க ரெண்டு பேரும். இப்போ உங்கள முன்னாடி வச்சி வேலை வாங்கனும்னு ஆளா பறக்கறிங்க இல்ல? இத நடக்க விடமாட்டேன் நான்” என மனதினுள் சொல்லிக்கிட்டு நகர்ந்தான் விஜயன்.
கீதா வீட்டு விருந்துக்கு இன்றே சென்றாக வேண்டும். அதனால ஜெய்யை வரச் சொல் என சுசிலா விஜயனை தொந்தரவு செய்ய ஆரம்பித்தார்.
கீதா தன் அம்மாவிடம் ஏற்கனவே ஜெய் சுஜா பிரிவினைக்கு அடித்தளம் போடச் சொல்லி திட்டம் போட்டிருக்க, “சென்னையா போறிங்க? நேரா பஞ்சாயத்துக்கு தான் போயி நிக்க போறிங்க… அழகா இல்லன்னாலும் கீதாவ போல வருமான்னு சொந்தக்காரங்க பேச போறாங்க பாருங்க” என மனதினுள் கொக்கரித்தாள்.
விஜயனோ ஏற்கனவே ஜெய் போனை சுவிட்ச் ஆப் செய்ய சொல்லியிருந்தான். இப்போது “ அம்மா பேங்க் லோன் அப்பளை பண்ணி இருந்தேன். இன்னைக்கு வரச்சொல்லி போன் பண்ணாங்க. நான் போயிட்டு சாயங்காலம்தான் வருவேன். நான் வந்ததும் ஜெய்கிட்ட பேசி வர சொல்றேன்.”
“நீங்க கீதா அப்பாகிட்ட சொல்லி நம்ம எல்லாருக்கும் விருந்து ரெடி பண்ண சொல்லுங்க. ஆறு பேரும் போலாம்.” என்று சொல்ல கீதா, சுசிலா இருவரும் ஆவென பார்த்தனர்.
நாளை மறுநாள் நடக்க போகும் சான்றிதழ் சரிபார்ப்பை பற்றி ஒன்னும் சொல்லாததால், ஜெய்யை அனுப்ப விஜயனுக்கும் விருப்பமில்லை என நினைத்து சந்தோசப்பட்டனர்.
விஜயனோ மகேஷுடன் பேங்க் போகாமல், ஜெய்யின் சான்றிதழுடன், ஜெய்யை பார்க்க சென்றான்.
ஈஸ்வரிடம் பேசி கார் ஏற்பாடு செய்து, ஜெய், சுஜாவை சென்னை அனுப்பிவிட்டு பொறுமையாக இரவு ஏழு மணிக்கு வீடு வந்தான்.
வந்தவுடன் தன்னை ஆசையாக பார்த்த கீதாவை மனம் இறுக வெற்றுப் பார்வை பார்த்த விஜயன், “ அம்மா, அப்பா கிளம்புங்க போலாம்.” என்றான்.
“என்னடா விளையாடறியா? சின்னவன் இன்னும் வரல. அவளோட அங்க கூத்தடிச்சிட்டு இருக்கான் போல. போன போட்டு வரச்சொல்லுடா. சோறுகண்ட இடம் சொர்க்கமுன்னு சொல்லுவாங்க.”
“ஜெய் அவன் பொண்டாட்டி கூட இருந்தா தப்பா? அப்புறம் எதுக்கு கல்யாணம் பண்ணி வச்சிங்க? நீங்க ரெண்டு பேருமே அவனோட குடித்தனம் பண்ணலாமுன்னு பாக்கறிங்களா?
“அவன் மாமனாரூட்டுல அவன் நைட்டு தங்க கூடாது. ஆனா யேன் மாமனாரூட்டுல அவன் வந்து தங்கலாமா? இதுதான் உங்கூரூ நாயமா சுசிலா?” என விஜயன் நக்கலாக கேக்க சுசிலா பேயை கண்டதுபோல முழித்தார்.
“இப்போ ஆறு பேருக்கு குறைவில்லாம போகனும், அதானே உங்க கவலை? நீங்க ரெண்டு பேர், எங்குடும்பத்துல வயத்துல இருக்குற குழந்தையோட நாங்க அஞ்சு பேர், ஆக மொத்த ஏழு பேர் இருக்கோம் கிளம்புங்க.”
“ அங்க புதுசா கல்யாணம் ஆனவங்கதான் நாலு நாள் இருக்கனுமா? நீங்க மாமியா, மருமவ ரெண்டு பேரும் எங்க குடும்பத்தை பிரிக்க திட்டம் போட்டுட்டு மெதுவா ஒரு வாரம், ஏன் ஒரு மாசம் கழிச்சிகூட வாங்க . நீங்க ரெண்டு பேரும் வந்துதான் செய்யனுமுன்னு இங்க எந்த காரியமும் நிக்காது.”
“ நாங்க கண்ணுக்குள்ளயே இருக்கிற மாதிரி இருந்தா சொல்லுங்க நான் வந்து பாத்துட்டு போறேன். ஒன்னும் அவசரமில்லை. பொறுமையா வந்தா போதும்.” எனவும் சொல்ல இருவரும் திகைத்தனர். எது நடந்தாலும் கண்டும் காணாமல் போகும் விஜயனா இது? என பார்த்தனர்.
இப்போ விருந்தா முக்கியம்? ஜெய், சுஜா எங்கே? இருவரும் பதைத்தனர்.
“டேய் விஜி விருந்த இன்னொரு நாள் பாத்துக்கலாம். ஆனா சென்னை போகனுமே? இந்த பையனுக்கு வேல விசயத்த சொன்னியா இல்லையா? இதபத்தி தெரியாம அவன் பாட்டுக்கு பொண்டாட்டியோட கொஞ்சிக்கிட்டு இருந்துட போறான்.” என்ற சுசிலா
“வேல கெடச்சா இதவிட நல்ல பொண்ணா பாத்துகூட கட்டி வைக்கலாம். வரமாட்டேன்னு அவ சொன்னா விட்டுட்டு வர சொல்லு” என சுசிலா ரூட் மாற,
“எங்கம்மா என்ன கேனகிறுக்கியா? நீங்க வர்றேன்னு சொன்னதும் பலகாரம் செஞ்சி சோத்த வடிச்சி வச்சிக்கிட்டு உங்கள எதிர்பார்த்து வழிய பாத்து, பாத்து கண்ணு பூத்துபோச்சின்னு பத்து தடவை போன போட்டுடிச்சி. இப்போ இன்னொரு நாளு போவாங்கலாமில்ல, அப்படி யாரும் உங்க ஊட்டு ஜனத்துக்காக ஏங்கி கிடக்கல. பெத்தவள நானு மட்டும் போயி பாத்துட்டு வந்துடறேன்.”
“வேலையில சேர விருப்பமிருந்தா வரப்போறான். அவங்கண்ணனே வேலைக்கு போகல. இவன் மட்டும் எப்படி போவான்? காடு, கழனிய யாரு பாத்துக்குவா?”
“யேம் புருஷன் இளிச்சவாயனா? கண்டவங்க காட்டை பாத்துக்க? ஒன்னு அவனும் காட்டை பாக்கட்டும், இல்லன்னா சொத்த பிரிச்சி குடுங்க நாங்க தனியா போறோம்.” என அடுத்த ஆட்டத்தை துவக்கினாள் கீதா.
விருந்துக்கு வராமல் தப்பித்தாலும், தனிகுடித்தன பிரச்சனை புது பொண்ணாலதான் வந்ததுன்னு விசயத்தை திருப்பி போட கீதா நினைத்தாள்.
“அவ என்னை மதிச்சிருந்தா நானு ஒன்னா இருந்திருப்பேன்”னு மத்தவங்களை சமாளிக்கலாம் என நினைக்க, “கீதா சொல்றது சரி. நீங்க கீதா வீட்டு சீதனத்தை எடுத்து வெளிய வைங்க. நானு லாரி கொண்டு வந்து, அள்ளிக்கிட்டு போய் அவங்கப்பன் வாங்கிதந்த பேலஸ்ல இறக்கி வச்சிட்டு அவள வந்து ஏரோப்ளானுல கூட்டிட்டு போறேன். சரியா கீதா.” என்ற விஜயன்,
“ஆனா வீட்டு வேலை, சமையல் வேலை செய்ய உங்கத்தைய விட சூப்பரான அடிமைய உங்கப்பன் சேர்த்து விடுவாரா கீதா? சொல்லு இப்பவே சொத்த பிரிக்கிறேன்.”
“அப்பா சொத்த மூணா பிரிப்போம், ஒரு பங்கு உங்களுக்கு, ஒரு பங்கு எனக்கு, மீதி ஒரு பங்கு ஜெய்க்கு சரியாம்மா? உங்க கடைசி காலம் வரை அது உங்க பேருல இருந்து மாத்த முடியாதபடி எழுதி வச்சிடலாம். நல்ல நாளு பாருங்கப்பா” என விஜயன் சொல்ல, சுசிலா தலையை பிடித்தபடி மடங்கி உட்கார, கீதா தன் கணவனை கொலை வெறியுடன் முறைத்துக் கொண்டிருந்தாள்.
“ஜெய், சுஜா வாழ ஆரம்பித்து இருப்பார்களோ? என்ன இன்னும் ஒன்னும் வெடிக்கக் காணோம்” என மனதுக்குள் கணக்கிட்டபடி, “இதை எப்படி தெரிந்து கொள்ள? ச்சே அந்த கழுதைகூட கொஞ்சம் ஒழுங்கா பேசி நடிச்சிருந்தா இப்போ அவகிட்டயே கேட்டிருக்கலாம்” என புலம்பியபடி இருந்த கீதாவால் அதை தெரிந்து கொள்ளாமல் அமைதியாக இருக்கவும் முடியவில்லை.
தான் பேசியதை நினைத்து பார்த்தாள். சுஜா கிளம்பும் முன் தான் பேச நினைத்ததை அவளிடம் சொல்லிவிட தன் அம்மாவையும் துணைக்கு சேர்த்தவள், சுஜாவை கவனித்தபடி இருந்தாள். சுஜாவும், காயுவும் மண்டபத்தில் மணமகள் அறைக்கு செல்வதை பார்த்த கீதா வேகமாக தொடர்ந்து வந்து காயுவிடம்,
“ஒரே வேல.. அதான் சுஜாதாகூட என்னால நாலு வார்த்தை நின்னுகூட பேச முடியல. நீயி எங்க ஜெய் மாமா ப்ரெண்டு ஒய்ப்பா இருந்தாலும் டக்குனு சுஜாதாகூட நல்லா ஒட்டிக்கிட்ட. உங்கூட பேசிக்கிட்டு இருந்ததுல சுஜாதாவுக்கும் போரடிக்காம பொழுது போயிருக்கும் கண்ணு” என வரிக்கு வரி சுஜாதாவை ஏலமிட்டவள்,
“கண்ணு அங்க பூ இருக்கு. நான் சொல்ல மறந்திட்டேன். போய் எடுத்துக்கிட்டு வந்து நீயும், சுஜாதாவும் பழைய பூவ எடுத்துட்டு புது பூவா வைங்க. வெளிய இல்லன்னா ஜெய் மாமாவுக்கு குடுத்த எங்க ரூம்ல இருக்கும் எடுத்துக்கிட்டு வாம்மா” என அன்பொழுக பேச காயு காதில்
“வேதாளம் வந்திருக்குது
அது தேவாரம் பாடி நிக்குது” என்ற வரிகள் தான் கேட்டது . அவள் ஏதோ உள்நோக்கத்தோடு வந்திருப்பது போலவே தெரிந்தது. சுஜாவை பார்க்க, அவள் அங்கிருந்த அந்த அறையிலிருந்த பாத்ரூம் கதவை கண்காட்டினாள்.
“சரிங்க” என்ற காயு அந்த பாத்ரூம் கதவை நோக்கி சென்றாள். கதவு பூட்டியிருக்க என்ன செய்வதென தெரியாமல் அப்படியே சற்று திரை மறைவில் நகர்ந்து நின்றாள்.
சுஜாவை பார்த்தபடி நின்ற கீதா அதை கவனிக்கவில்லை.
“சுஜாதா இத அத்தைதான் சத்தமா புலம்பிக்கிட்டிருந்தாங்க. யாரோ இங்க சொன்னாங்களாம். வேலைக்கு போற புள்ள, அப்படி இப்படி இருந்து புள்ள கிள்ள வந்திருக்கப் போகுது. ஒரு முறை வீட்டுக்கு விலக்காகும் வரை புருசனோட பேச்சு வார்த்தை வச்சிக்க விடாத சுசிலான்னு…. இத எப்படி காதலிச்சவள விட்டு இவளதான் கட்டுவேன்னு ஆசையா கட்டியிருக்க எம்மவங்கிட்ட சொல்லுவேன்னு அத்தை அழுது புலம்பிக்கிட்டு இருக்காங்க”
“அத புரிஞ்சிக்கிட்டு கொஞ்சம் ஜெய் மாமா ஆசையா நெருங்கி வந்தாலும், பதமா வேணாம்… கொஞ்சம் நாள் போகட்டும் ன்னு சொல்லிடு. மாமா நான் சொன்னாலே கேப்பாங்க. ஆனா பொண்டாட்டிய தொடாதிங்கன்னு நான் சொன்னா பொறாமை படறதுபோல தோணாதா?”
“நீயே பார்த்து பத்திரமா இருந்துக்க. காதலிச்சவள விட்டதுபோல உன்னையும் விட்டுட்டு எங்ககூடவே இருந்துக்கிறேன்னு சொன்னா நாங்க வேணாமுன்னா சொல்ல முடியும்?” என்க, அதற்குள் காயு விட்ட மிஸ்டு கால் பார்த்து அவளை தேடிக்கொண்டு விஜயன் வந்தான்.
“இங்க என்ன கீதா பண்ற? ஓ…தங்கச்சி கூட பாச பயிர் வளர்க்கிறயா?” என்றவன்
“சுஜா இந்த காயு பொண்ண பாத்தியா? கண்ணன் தேடிக்கிட்டு இருக்கான்.” என்க
“இப்போதான் உள்ள பூ எடுக்க போச்சு. அது வர்ற வரைக்கும் சுஜாதா கூட நம்ம வீடு புடிக்குதா? அப்படின்னு கேட்டுக்கிட்டு இருந்தேன்.” என்று விஜயனிடம் சொல்லிட்டு
“வாம்மா நாமளும் வெளிய மேடைக்கு போலாம். தனியா நின்னா போரடிக்கும்” என சுஜாவை வெளியே இழுக்க முயற்சிக்க,
“ஸ்கூல் எத்தனை நாள் லீவு போட்டிருக்க? என்னைக்கு போய் ஜாயின் பண்ணனும்?” என விஜயன் சுஜாவிடம் கேட்க ஆரம்பிக்க, வேறு வழியில்லாமல் கீதா வெளியே சென்றாள்.