அத்தியாயம் 11.

“ஒரு கல்யாணத்தை பண்ணிட்டு எனக்கு சந்தோஷமா சுபா வழிவிடுவான்னு இத்தனை வருஷமா நான் காத்திருந்தேன். ஆனா அது மட்டும் முடியவே முடியாதுன்னு ஒத்தகால்ல பிடிவாதமா நிக்குறா.”

 “சரி, அவ வாழ்க்கை, அவ இஷ்டப்படி என்ன வேணா பண்ணிட்டு போகட்டும், நாம ஒரு கல்யாணத்தைப் பண்ணிட்டு, லைஃப்ல செட்டிலாகுவோம்னு பாத்தா, அதையாவது என்னை நிம்மதியா, சந்தோஷமா பண்ணவிடுறாளா உங்க பேத்தி.”

வீட்டு ஹாலில் உட்கார்ந்திருந்த தனது பாட்டியின் பக்கத்தில் உட்கார்ந்து, கோபத்தில் கத்திக் கொண்டிருந்தான் ரஞ்சித்.

இதுநாள் வரையிலும், தானுண்டு தன்வேலையுண்டு என்றிருந்த பேரன் இப்படியெல்லாம் பேசவும், விழிமூடாமல் தன் பேரனை பார்த்துக் கொண்டிருந்த கற்பகம், “என்னப்பா? கல்யாணத்துக்கு முன்னாடியே, சத்தம் எல்லாம் உசருது?” நக்கலாகக் கேட்டார்.

“நான் எப்பவும் போலத்தான் பேசுறேன். உங்களுக்கு தான் இப்போ நான் எது செய்தாலும், பேசினாலும் வித்தியாசமாத் தெரியுது பாட்டி.” சிடுசிடுத்தான் பேரன்.

“யார் பேச்சையும் கேக்காம, அவ என்ன நினைக்கிறாளோ, அதை மட்டுமே நடத்திக்கணும்னு நினைக்குறாளே, இதெல்லாம் நல்லாவா இருக்கு? இதப்பத்தி உங்க பொண்ணுகிட்ட நீங்க எதுவும் சொல்லமாட்டீங்களா ம்மா?”

தான் பேசுவதைக் கேட்டுக் கொண்டே, எதுவும் செய்ய முடியாத கையாலாகாதனத்தோடு மௌனமாக வேலைகளை பார்த்துக் கொண்டிருந்த அம்மாவிடமும் தனது ஆதங்கத்தைக் கொட்டினான் ரஞ்சித்.

வேறொன்றுமில்லை… ரஞ்சித், ப்ரபாவதி கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில், கல்யாணத்தில் தன்னால் கலந்து கொள்ளமுடியாது என்று சொல்கிறாள் சுபத்ரா.

திருமணநாளுக்கு மறுநாள், மாவட்ட கல்வி அலுவலர் தங்கள் பள்ளிக்கு இன்ஸ்பெக்ஷன் வரப்போவதாக தகவல் கிடைத்திருப்பதால், அந்த வாரம் முழுவதுமே ஆசிரியர்கள் யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது என்று தலைமையாசிரியர் சொல்லியிருப்பதாக காரணம் வேறு சொன்னாள்.

அதனால் வந்த கோபத்தில் தான், வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்துக் கொண்டிருக்கிறான் ரஞ்சித்.

 “மதுரா கல்யாணத்தப்பவே, பெரியவளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிட்டு இந்த கல்யாணத்தை நடத்தியிருக்கலாம்லன்னு கேட்டவங்ககிட்ட எல்லாம், ஏதேதோ சொல்லி சமாளிச்சாச்சு.”

“இப்போ எங்கல்யாணத்தோட இவளை ஆளையேக் காணலைன்னா, அவளுக்கு முன்னாடி நான் கல்யாணம் பண்ணுறதுல உடன்பாடு இல்லாமத் தான் அவ கல்யாணத்துக்கு வரலைன்னு சொல்லுவாங்க.”

“அது மட்டுமா சொல்லுவாங்க? எனக்கும் அப்பாவுக்கும் அவ வாழ்க்கை மேல அக்கறையே இல்லைன்னு கூட சொல்லுவாங்க.”

 “ஆனா இங்க நடக்குற விஷயம் யாருக்காவது தெரியுமா? இல்லை அவளை நினைச்சு வேதனைப்படுற எங்க மனநிலை அவங்களுக்கு புரியத் தான் செய்யுமா?”

“ம்ஹூம்… புரியவேண்டியவளுக்கே எங்க மனநிலமை புரியாதப்போ, வெளி ஆட்களுக்கா புரிஞ்சிடப் போகுது?” ஏதோ நூற்றுக்கிழவனைப் போல தன் போக்கில் ரஞ்சித் புலம்பிக் கொண்டிருந்தான்.

“இப்போ என்ன ஆகிப்போச்சுன்னு என் தலையைப் போட்டு உருட்டுற ண்ணா?” அண்ணனின் சத்தத்தில் அங்கு வந்த சுபத்ரா எரிச்சலாகக் கேட்க, அவளை நிதானமாக பார்த்தான் ரஞ்சித்.

“எனக்கு கல்யாணம்னு தான் பேரு சுபா. ஆனா எந்த நிகழ்வுலயாவது என்னை சந்தோஷமா கலந்துக்க விடுறியா நீ?”

“ஏன்? நானென்ன பண்ணுனேன்?”

“என்ன பண்ணலைன்னு கேளு சுபா. இந்த வீட்டுல உள்ள மத்த இரண்டு பிள்ளைங்களும் எங்கல்யாணத்துக்காக ட்ரெஸ், ஜ்வெல்ஸ்ஸூன்னு சந்தோசமா போட்டி போட்டு வாங்குனா, நீ எதுவும் வேண்டாங்குற. இப்பதான் நாலஞ்சு நாளுக்கு முன்னாடி ஒருவழியா உன்னை சரிகட்டி வாங்கவைச்சு முடிச்சேன். அதுக்குள்ள கல்யாணத்துக்கே வரமாட்டேன்னு அடுத்த குண்டை தூக்கிப் போடுற.”

“எப்போ, என்ன பண்ணுவியோங்குற டென்ஷனிலயே என்னை நீ வச்சிருக்க. அப்புறம் நான் எப்படி ஹேப்பியா எல்லாத்தையும் என்ஜாய் பண்ண?”

அண்ணனின் குற்றச்சாட்டில் மனம் சுருங்கிப் போன சுபத்ரா, “அப்போ நான் தான் உன் சந்தோஷத்துக்கு இடைஞ்சலா இருக்குறனா?”

உள்ளேப் போன குரலில் தங்கைக் கேட்க, “ஆமாம்…” என்றான் அண்ணன் எதையும் பூசி மெழுக முற்படாமல்.

தன்னுடைய நேரடியான பதிலில் திகைத்து போய் நின்ற தங்கையிடம், “பிளீஸ் சுபா… எங்கல்யாணத்துக்கு வந்து, ஒரு தங்கச்சியா செய்யவேண்டிய எல்லா செய்முறையும் செய்து, மத்தவங்க வாய்ல விழுந்தெழும்பாம என்னை காப்பாத்துறேன்னு சொல்லு. மீதி இருக்குற இந்த ஒரு வாரத்தையாவது நான் கொஞ்சம் சந்தோஷமா கழிச்சுக்குறேன்.”

தங்கையின் மனமெனும் குட்டையில், வார்த்தையெனும் கல்லெறிந்து, அவளறியாமலேயே கலக்கியவன், அதில் பாசவலையை வீச, அழகாக சிக்கிக் கொண்டது அந்த தங்கை மீன்.

“ஹெச் எம் கிட்ட பெர்மிஷன்…”

யோசித்தவாறே இழுத்த தங்கையிடம், “நானே வந்து இன்விடேஷனைக் குடுத்து, அன்னைக்கு மட்டும் உனக்கு லீவ் கேக்குறேன். உனக்கு சம்மதம் தான?” ரஞ்சித் மென்மையாக கேட்க,

“சரி…” என்று தலையசைத்து விட்டுப் போனாள் சுபத்ரா.

தங்கையின் சம்மதத்தில் மூச்சை உள்ளிழுத்து, “ஊஃப்ப்…” என்று வெளியே விட்டவனின் முகத்தில், அவனையும் மீறி சந்தோஷ இழைகள் ஓட, சோஃபாவில் சாய்ந்தமர்ந்து கண்களை மூடிக்கொண்டான்.

 மூடிய விழிக்குள் அவன் கருவிழிகள் இரண்டும் அங்குமிங்கும் வேகமாக நகர்ந்து, அவன் சாய்ந்து அமர்ந்திருக்கிறானேயொழிய, ஓய்ந்து அமர்ந்திருக்கவில்லை என்பதைச் சொல்லியது.

ஒரு நிமிடம் போல கண்களை மூடி அமைதியாக இருந்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன், பக்கத்திலிருந்த பாட்டியின் பக்கமாகத் திரும்பி அவரின் கைகளைப் பற்றிக்கொண்டு, “என்ன ப்யூட்டி! இந்த பேரனோட கல்யாணத்துக்கு நீங்க வருவீங்க தானே?” கண்ணைச் சிமிட்டியபடிக் கேட்டான்.

பேரனின் இந்த புது அவதாரத்தில், அப்படியேக் கொஞ்சம் தடுமாறித்தான் போனார் கற்பகம். அவரறிந்த பேரன் இவனில்லையே.

எல்லாவற்றிலும் ஒரு நாசூக்கு, நாகரீகம் பார்ப்பவன் அவரின் பேரன். சந்தோஷமோ, துக்கமோ எதுவென்றாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தனக்குள்ளேயே வைத்துக் கொள்பவன்.

தன் மாமன் மகளைக் காதலிப்பதாக அவன் சொல்லும்போதே, ‘இது எப்படி சாத்தியமாகியது?’ என்று அதிர்ச்சியுற்ற கற்பகத்திற்கு, இப்போது அவனின் இந்த இலகுவான நடவடிக்கைகளும் ஆச்சர்யமாகவே இருந்தது.

  பேரனின் கேள்விக்கு பதிலேதும் சொல்லமுடியாமல், தன் வாரிசுகளின் கல்யாண விஷயத்தில் தன்னுடைய தொடர் ஏமாற்றமே மேலெழுந்து நிற்க, அவனையே பார்த்திருந்தார் கற்பகம். ஆனாலும் பேரனின் இந்த கொஞ்சல் மொழியும் பிடித்திருக்கவே செய்தது அந்த மூதாட்டிக்கு.

“கேள்வி கேட்டா பதில் சொல்லணும் ப்யூட்டி. இப்டி என் முகத்தையே பாத்துட்டு இருக்கக் கூடாது.”

 கைகளை விடுத்து லேசாக தன் கன்னத்தைப் பற்றி ஆட்டிய பேரனிடம், “நடக்கப்போறது என் ஒரேப்பேரனோட கல்யாணம். அது யார் கூட நடந்தாலும், எனக்கு பிடிச்சாலும் பிடிக்காட்டாலும், நான் வந்து நின்னு தானே ஆகணும்.”

 பட்டும் படாமலும் பதில் சொல்லியவரை, லேசாக தோளோடணைத்து, “தட்ஸ் மை பாட்டி” என்றவனின் செயலில், உள்ளுக்குள் ஏதோ கரைவது போலிருக்க, அதற்கு மேலும் அங்கிருக்க முடியாமல் எழுந்து சென்றார் கற்பகம்.

மகனின் கேள்விக்கு மாமியாரிடமிருந்து ஒருமூட்டை வசவுகளை எதிர்பார்த்த சௌந்தர்யாவுக்கு, அவரின் அமைதியான பதில் வியப்பாக இருந்தது.

 மகனின் சிரித்த முகத்தையே ஆசைதீர பார்த்துக் கொண்டிருந்தவரின் மனது, ‘இப்படியே என்மகன் வாழ்நாள் முழுமைக்கும் இருந்துவிட்டால் எப்படி இருக்கும்!’ என்று ஏங்கியது.

அதையே மகனிடமும் மறைக்காமல் சௌந்தர்யா சொல்ல, பதிலுக்கு சிறு புன்னகை ஒன்றை சிதறவிட்டவனின் ஃபோன் அலறியது.

அதை உயிர்ப்பித்து, “சொல்லு முரளி” என்றபடியே வீட்டுக்கு வெளியே வந்தவன், எதிர்முனையில் இருந்தவனின் பேச்சில் வெடித்துச் சிரித்தான்.

ஆம்… இந்த இடைப்பட்ட நாட்களில், கல்யாணம் சம்மந்தமான சின்னச்சின்ன விஷயங்களுக்காக யாருக்கும் சிறு சங்கடத்தையும் கொடுக்காமல் மாமன் வீட்டுக்கு தானே நேரடியாக சென்று வந்தான் ரஞ்சித்.

அப்படி சென்று வந்த நாட்களில் ரஞ்சித்துக்கு முரளியோடு ஒரு நல்ல நட்பு உண்டாயிற்று. ஏன், தன்னுடைய அணுகுமுறையால், தனலட்சுமியின் மனதில் கூட தன்னைப் பற்றி ஒரு நல்ல அபிப்பிராயத்தையே உண்டாக்க ஆரம்பித்து விட்டான் என்றே சொல்ல வேண்டும்.

ஆனால் சத்யா மட்டும் தன்னைச் சுற்றி ஒரு வட்டத்தைப் போட்டு அதற்குள் நின்று கொண்டு, ரஞ்சித்தை தன்னருகிலேயே நெருங்க விடவில்லை.

“ஹாங்… முரளி, எங்க கல்யாணத்துக்கு உங்க அண்ணன் வருவானா? இல்ல, இது ரஞ்சித்தோட கல்யாணம், அதுக்கெதுக்கு நான் வரணும்னு வீட்லயே இருந்துடுவானா?” பேச்சுவாக்கில் முரளியிடம் கிண்டலாகக் கேட்டான்.

“அதெப்படி ரஞ்சித், உனக்கு மட்டும் இப்டி டிசைன் டிசைனா சந்தேகமெல்லாம் தோணுது.”

மாமன் மகன், அத்தை மகன் என்ற உறவுமுறையைத் தாண்டி, அடுத்த கட்டத்திற்குள் அவர்கள் சொந்தம் காலடி எடுத்து வைத்தபின்பும், சட்டென்று மரியாதைப் பன்மையில் பேச இருவருக்குமே வரவில்லை. வராததை அவர்கள் முயற்சி செய்து பார்க்கவுமில்லை.

 “அப்படியெல்லாம் உங்க அண்ணனுக்கு தோனுனாலும் தோனு

ம்பா.” மெல்லிய சிரிப்போடு முரளிக்கு பதில் சொல்லிய ரஞ்சித் பெருமூச்சொன்றை விட்டபடியே விளையாட்டாக,

“ம்ஹூம்… எப்டியோ… உன்னத்தான் மலை போல நம்பியிருக்கேன் சின்னமச்சான். எங்காரமொளகா… பெரிய மச்சானையும் கையோடு கூட்டிட்டு நீயும் கல்யாணத்துக்கு வந்து சேரு.”

ரஞ்சித்தின் கிண்டல் வார்த்தைகளில் இப்போது வெடித்துச் சிரிப்பது முரளியின் முறையாயிற்று.

மேலும் கல்யாண ஏற்பாடுகளைப் பற்றி ஒருவருக்கொருவர் பேசிமுடித்து, கைப்பேசிக்கு ஓய்வு கொடுக்கும் நேரம் ரஞ்சித்தின் முகத்தில் புன்னகைப்பூ பெரிதாக பூத்திருந்தது.

***********************

 சின்னதுமல்லாமல் பெரியதுமல்லாமல் இருந்த அந்த திருமண மண்டபம், கல்யாணத்துக்குரிய அத்தனை அம்சங்களையும் தன்னகத்தே சுமந்து கொண்டு பூரிப்போடு நின்றது.

‘ப்ரபாவதி வெட்ஸ் ரஞ்சித் திருவேங்கடம்.’

மண்டபத்தின் நுழைவு வாயிலில் வளைத்து போடப்பட்டிருந்த அலங்கார வளைவில் அழகாக ஜொலித்துக் கொண்டிருந்தது மணமக்களின் பெயர்கள்.

முகூர்த்த நேரம் காலை பத்து மணியிலிருந்து பதினோரு மணிக்குள் என்பதால், காலையிலேயே பெண் வீட்டிலுள்ளவர்கள் மண்டபத்திற்கு வந்திருந்தார்கள்.

நேரம் ஆக ஆக பெண்வீட்டைச் சேர்ந்த சொந்தங்களும் ஒவ்வொருவராக வரத்தொடங்கினர்.

மண்டபத்தின் வாசலில் நின்று அவர்களை வரவேற்றபடியே, சத்யாவும் முரளியும் தந்தையோடு சேர்ந்து மாப்பிள்ளை அழைப்பிற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

தவமணியும் அவரது கணவரும் விருந்தினருக்கு காலை உணவு பரிமாறும் பணியில் மும்முரமாக இருந்தார்கள்.

 ஏதோ ஒரு வேலையாக மண்டபத்துக்குள் வந்த முரளி, காலை உணவை பாத்திரங்களில் எடுத்துக் கொண்டு அம்மா செல்வதைப் பார்த்தான்.

“ம்மா… எல்லாரையும் டைனிங் ஹாலுக்கு வந்து சாப்பிட சொல்லவேண்டியது தான? நீங்க எதுக்கு சுமக்குறீங்க?” லேசாக கடிந்து கொண்டு, அம்மா கையிலிருந்த பாத்திரங்களை தன் கைகளுக்கு மாற்றினான்.

“ப்ரபா மேக்கப் போட்டுட்டேன்னு கீழ வரமாட்டேங்குறா. கீதாவும் அங்க தான் உக்காந்திருக்கா. அதான் இரண்டு பேருக்குமா சேர்த்து எடுத்துட்டு போறேன்.” சொல்லியபடியே, மகனோடு மகள் இருக்கும் அறையை நோக்கி நடந்தார் தனலட்சுமி.

 சென்னையிலேயே இருக்கும் தவமணியின் மகள் தான் கீதா. அன்னையைப் போல குணத்தில் தங்கங்கள் தான் தவமணியின் பெண்கள் இருவரும்.

கீதா தற்போது தன் இரண்டாவது மகவை கர்ப்பத்தில் சுமந்து கொண்டிருக்கிறாள். இது எட்டாவது மாதம்.

 அப்படியிருந்தும் இவர்களோடு சேர்ந்து நகைக்கடைக்குச் சென்று ப்ரபாவுக்கு நகைகள் தேர்வு செய்வதில் உதவி செய்வதிலிருந்து, ப்ரபாவின் முக அமைப்பிற்கு எந்த வகையான மேக்கப் பொருந்தும் என்று முடிவு செய்வது வரை உதவியாக இருந்தாள்.

பெங்களூரில் இருக்கும் தவமணியின் மற்றொரு மகள், கணவருக்கு விடுமுறை இல்லாததால் அடுத்த மாதம் வருகிறேன் என்று சொல்லியிருக்கிறாள்.

மணமகள் அறை என்று எழுதியிருந்த அறைக்கு முன் வந்து நின்று கதவைத்திறந்த அன்னையோடு உள்ளே சென்று, அங்கிருந்த டேபிளில் கையிலிருந்த பாத்திரங்களை வைத்து விட்டு கண்களால் அறையை தூழாவினான் முரளி.

அறையில் இருந்த ப்ரபாவின் தோழியர் உட்பட, அங்கிருந்த ஏனைய பெண்களும், பட்டும் நகைகளுமாக, ஜொலிஜொலித்தார்கள்.

இலவச இணைப்பாக, பெண்ணுக்கு மேக்கப் போட்டு விட வந்த ப்யூட்டீஷியனின் கைவண்ணத்தில் அவர்களின் முகங்களிலும் கூடுதல் பௌடரும், உதட்டுச்சாயமும் ஏறியிருந்தது. அதில் அவன் காதல் மனைவியும் ஆசை மகளும் அடக்கம்.

தன்னைக் கண்டதும் எடுக்கச்சொல்லி துள்ளிக்குதித்த மகளை அள்ளிக்கொண்டு முத்தமழை பொழிந்தவன், “உன் அத்தையை எங்க பட்டுக்குட்டி?” என்றான் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு.

தன் கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக அத்தையை நோக்கி கையை நீட்டிய மகளின் பட்டுக்கையைப் பற்றி முத்தமிட்டவன், மேக்கப்பில் இருந்த தங்கையிடம், “இந்த ரூம்ல என்தங்கச்சி இருந்தாளே, பெயர் கூட ப்ரபாவதி, நீ பாத்தியா ம்மா” என்று சிரிப்பை உள்ளடக்கிய குரலில் கேட்க, கூடவே சேர்ந்து சிரித்தது அவள் தோழியர் பட்டாளம்.

“போதும்… ரொம்பவும் தான் எங்க பிள்ளையை ஓட்டாத முரளி.” கீதா ப்ரபாவிற்கு பரிந்து கொண்டு வந்தாள்.

“வெறுப்பேத்தாத அண்ண்ணா… நான் தான் உன் தங்கச்சி.” சிணுங்கியபடியே அண்ணனின் மார்பில் சாய்ந்த ப்ரபா, “அப்பிடியா அடையாளம் தெரியாத அளவுக்கு மேக்கப் போட்டுருக்கேன்?” என்று நிமிர்ந்து பார்த்து தமையனை முறைத்தாள்.

“பாத்து ம்மா… இது என்னோட ப்ரபா இல்லை, வேற யாரோன்னு சொல்லி, தாலி கட்ட மறுத்துடப் போறாரு உன்னோட அத்தான்.”

“டேய் … அச்சாணியமாப் பேசாதடா… நானே இந்த கல்யாணம் நல்லபடியா முடியணும்மேன்னு வயித்துல நெருப்பை கட்டிட்டு இருக்குறேன்… நீ வேற நேரம் தெரியாம பேசிகிட்டு.”

மகனின் விளையாட்டு பேச்சைக் கூட ஒத்துக்கொள்ள முடியாமல் தனம் சட்டென்று மகனைக் கண்டித்திருந்தார்.

பல்வேறு காரணங்களுக்காக இந்த திருமணத்திற்கு தனம் சம்மதித்திருந்தாலும், மனப்பூர்வமான சம்மதம் என்பது இன்னும் இல்லை தான்.

‘இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தங்களைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டாளே’ என்று மகள் மீது கோபம் கூட வந்தது அவருக்கு.

“முரளி, மாப்பிள்ளை வர்ற நேரமாச்சு. நீ இங்க நின்னுட்டு இருக்குற! வாசலுக்கு போ.”

தவமணியின் சத்தத்தில் சூழ்நிலையின் இறுக்கம் அங்கு சட்டென்று கலைந்தது. அன்னையின் கைகளை லேசாக பற்றி விடுவித்த முரளி, “இதோ போறேன் பெரியம்மா” என்றவன்,

“ப்ரபா மணமேடைக்கு வரும் போது நீயும் கூடவே வா ரேவதி” என்று சொல்லி மகளை மனைவியிடம் கொடுத்து விட்டு நிமிடத்தில் அங்கிருந்து சென்றிருந்தான்.

சரியாக பத்து மணியளவில், தன் சுற்றமும் நட்பும் சூழ மாப்பிள்ளை கோலத்தில் வந்திறங்கினான் ரஞ்சித் திருவேங்கடம்.

அவனை எதிர்கொண்டழைத்து, செய்ய வேண்டிய அத்தனை மாப்பிள்ளை மரியாதைகளையும் பெரியவர்கள் சொல்லச்சொல்ல தன் தம்பியோடு இணைந்து செய்த சத்யா, கடைசியாக பெரியவர்களின் சொற்களின்படி ரஞ்சித்தின் வலது கையைப்பற்றி மண்டபத்துக்குள் அழைத்துச் சென்றான்.

“மச்சான் துணையிருந்தா மலை ஏறி பொழைக்கலாமாம் மச்சான். ஒருவழியா எங்கையை நீ பிடிச்சிட்ட. இனி உன் வாழ்க்கையில் எல்லாமே சுபிட்சம் தான்.”

அருள்வாக்கு சொல்லும் குடுகுடுப்பைக்காரனைப் போல தன் காதருகே குனிந்து கிசுகிசுத்த ரஞ்சித்தின் முகத்தை நிமிர்ந்து பார்த்த சத்யா, “எனக்கு இருக்கிற சுபிட்சமே போதும். கூடுதலா எதுவும் வேண்டாம். அதுவும் உன்னால வரவே வேண்டாம்.” அழுத்திச் சொன்னான்.

பதிலுக்கு புரிந்து கொள்ள முடியாத சிரிப்பொன்றை சிந்திய ரஞ்சித், மணமகன் அறை வந்ததும் தன் கைகளை விலக்கிக் கொள்ள முயன்ற சத்யாவின் கைகளை இறுக பற்றியபடியே,

“எப்போப் பாரு, அரைகுறையில விட்டுட்டு போறதே உன் வேலையாப் போச்சு. கல்யாணம் முடியுற வரைக்கும் எங்கூடவே இரு மச்சான்” என்று மெதுவாகச் சொன்னான்.

அவனை முறைத்துப் பார்த்த சத்யா, “அது என்னோட வேலை இல்ல. உன் தங்கை ஹஸ்பென்டோட வேலை.” என்றான்.

“நீயும் என் தங்கை மாப்பிள்…”

ரஞ்சித்தின் வார்த்தைகளை முடிக்க விடாமல் குறுக்கிட்ட சத்யா, “வீணா கனவு காணாத ரஞ்சித், இந்த ஜென்மத்துல அது நடக்காது” என்றான் அழுத்தம் திருத்தமாக.

மண்டபம் முழுவதும் நிரம்பி வழிந்த மங்கல இசையின் தயவால் இருவரின் அடக்கப்பட்ட பேச்சு யாரையும் சென்றடையவில்லை. அவர்களைப் பார்த்தவர்களுக்கும் மச்சான்கள் இருவரும் ஏதோ பேசிக்கொள்கிறார்கள் என்று தோன்றியதே தவிர வேறொன்றும் எண்ணத் தோன்றவில்லை.

“கூல் ய்யா… எதுக்கு இவ்ளோ டென்ஷனாகுற?” டென்ஷன் ஆகாதே என்று சொல்லியே சத்யாவை டென்ஷனாக்கினான் ரஞ்சித். உள்ளம் உலைகலனாக கொதித்தாலும் எதையுமே வெளிக்காட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்திருந்தான் சத்யா.

சற்று நேரத்திற்கெல்லாம் ரேவதி அழைத்துவர சபைக்கு வந்த ப்ரபா, மணவறையில் உட்கார்ந்து ஐயர் சொல்லியபடி சில சடங்குகளை முடித்து, சபையை வணங்கி, ரஞ்சித்தின் கையால் முகூர்த்த பட்டை வாங்கிக் கொண்டு மணமகள் அறைக்குள் சென்றாள்.

அடர்மெரூன் கலர் பட்டில் உடலெங்கும் தங்கநிறக் கொடிகள் படர்ந்திருக்க, அகலகரை பார்டரோடு பாந்தமாக இருந்த அந்த முகூர்த்தப் பட்டு, கற்பகம் சில்க்ஸ்ஸின் பட்டுப் பாராம்பரியத்தைச் சொல்லாமல் சொல்லியது.

சிறிது நேரம் கழித்து, முகூர்த்த பட்டுடுத்தி, தலைநிறைய தலைவன் வாங்கி வந்திருந்த மலர்களைச் சூடி, கழுத்தில் மலர்மாலை அணிந்து, பெண்கள் சூழ அன்னமென நடைபயின்று மணமேடைக்கு வந்தாள் ப்ரபா.

மறுபடியும் சபையை வணங்கி மணவறையில் ஏற முயன்றவள் லேசாகத் தடுமாறினாள். அவளுக்கு சற்றே இடைவெளி விட்டு வந்து கொண்டிருந்த உடன்பிறந்தவர்கள் இருவரும், “பாத்து ப்ரபா” என்றவாறே தங்கையை தாங்கிபிடித்து விடும் நோக்கத்தில் வேகமாக முன்னோக்கி நகர்ந்தார்கள்.

ஆனால் அவர்களுக்கு அந்த வாய்ப்பை தராமல், அங்கு ஏற்கனவே தன் தங்கைகள் சூழ உட்கார்ந்திருந்த ரஞ்சித், சட்டென்று கைக்கொடுத்து பெண்ணவளைத் தாங்கிக் கொண்டதோடு, அவள் கைப்பற்றி தனக்கு இடப்புறமாக மனையில் அமரவும் வைத்திருந்தான். எல்லாம் கண்சிமிட்டும் நேரத்தில் நடந்துவிட்டது.

 “பிள்ளையாண்டான் செம ஸ்பீடு தான் போங்கோ” என்ற கமெண்டோடு, இருவரையும் திருமண பந்தத்தில் இணைக்கும் மந்திரங்களை ஐயர் சொல்ல ஆரம்பிக்க, அவரை பின்பற்ற ஆரம்பித்தனர் மணமக்கள்.

 அம்மையப்பரை திருமாங்கல்யமாக்கி, அதன் இருபக்கமும் லக்ஷ்மி காசுகளும், சிவப்பு பவளங்களும் கோர்க்கப்பட்ட பதிமூன்று பவுன் தாலிக்கொடி, திருமணமண்டபம் முழுவதும் சுற்றி வந்து, அங்கிருந்த அத்துணை பெரியவர்களின் ஒட்டுமொத்த ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டு தகப்பனின் கைகளின் மூலம் மகனிடம் வந்து சேர்ந்தது.

ஒரு புன்னகையோடு அதை கைகளிரண்டாலும் பெற்றுக் கொண்ட ரஞ்சித், “இப்போ மாங்கல்ய தாரணம் பண்ணுங்கோ மாப்பிள்ளை” என்ற ஐயரின் குரலுக்கு எதிர்பதமாக,

அந்த மங்கலச்சரடை வலதுகையால் மட்டும் பற்றி, தன் முகத்துக்கு நேராக லேசாக உயர்த்தி பிடித்து பார்த்தவன், பூப்போல உள்ளங்கைக்குள் அதை பொதிய, மணவறையை சுற்றி நின்ற சொந்தங்கள் பதறிப்போனார்கள்.

“தாலியை ப்ரபா கழுத்துல கட்டாம என்ன பண்ணற ரஞ்சித்?” அடுத்த வினாடியே சௌந்தர்யாவிடமிருந்து அதட்டல், ஒளியின் வேகத்தைப் போல பறந்து வந்தது.

அன்னையின் அதட்டலை சட்டை செய்யாமல், கைக்குள் இருந்த மங்கலநாணைத் தன் சட்டைப்பைக்குள் போட்டவன், அதை லேசாகத் தடவிக்கொடுத்தபடியே மணவறையிலிருந்து நிதானமாக எழுந்து நின்றான்…