*11*

கார் நிறுத்தும் வசதியோடு இருந்த கீழ்தள தனிவீடைதான் வாடகைக்கு எடுத்திருந்தான் ரத்னதீபன். போகப்போக தன்னை பார்க்கவென அதிகம் பேர் வந்துவிட்டால் அவர்களை கார் நிறுத்தும் இடத்தில் அமர வைத்துக்கொள்ளலாம், கட்சியின் முக்கிய ஆலோசனையை வீட்டிலிருந்து செய்யும்படி வந்தாலும் சமாளித்துக்கொள்ளலாம் என்ற பல யோசனைகளையோடு கணிசமான தொகை வாடகை எனினும் வசதியை கருத்தில் கொண்டு எடுத்திருந்தான். 

வீட்டின் முன்னிருந்த இடத்தில்தான் கமலை வைத்துக்கொண்டு விமலும் வளவனும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“இன்னும் எவ்ளோ நாள் சிங்கிலா சிங்கமா சுத்தலாம்னு இருக்கீங்க வளா?”

“நான் இப்படி இருக்குறது உங்க கண்ணை உறுத்துது போல?”

“இல்லையா பின்ன? சிங்கமாவே இருந்தாலும் அப்பப்போ பொண்டாட்டிகிட்ட பம்முறது எல்லாம் ஒருநேரம் கடுப்பா இருந்தாலும் ஒருநேரம் கிக்கா இருக்குல்ல. அதெல்லாம் அனுபவச்சி பார்த்தா தான் புரியும்.” விமல் சிலாகித்து சொல்ல, லேசாக சிரித்த வளவன், 

“நான் என்ன வேண்டாம்னா சொல்றேன்?”

“நம்ம மச்சான் வீடு மாறுற நேரம் எல்லாம் சீக்கிரம் நடந்துடும் பாருங்க. செண்பா மனசு மாறணும்னு எல்லாம் உங்களுக்கு பொண்ணு கிடைக்க லேட்டாகுதுன்னு சொல்லல, நிஜமாவே அப்படி ஒரு பேச்சு ஓடிட்டு இருக்கு. இப்போல்லாம் மாமனார் மாமியாரோட இருக்குறதுக்கே பொண்ணுங்க அவ்வளவு யோசிக்கிறாங்க, இதுல நாத்தனார் வேறன்னா… அதுதான் லேட் ஆகுது.” என்றதும் வருத்தம் கொண்டான் வளவன்.

“அட ஏன் மூஞ்சு டல்லாகுது. ஒரு பேச்சுக்கு சொல்றேன் என்கிட்ட கோச்சிக்கிட்டு என் பொண்டாட்டி அவ அம்மா வீட்ல போய் உக்காந்துட்டா நீங்க உங்க தங்கச்சியை யோசிக்காம அங்க கட்டிக்கொடுப்பீங்களா? அப்படிதான் எல்லாரும்.” என்று சமாதானமும் செய்தான் விமல். 

“உங்க பேச்சுத் திறமைக்கு நீங்க அரசியலுக்கு போயிருக்கலாம் விமல்.”

“அட அந்த கருமத்துக்கு போனா பொண்டாட்டி புள்ளைங்களோட நிம்மதியா இருக்க முடியாது. இதோ மச்சானையே எடுத்துக்கோங்க அன்னைக்கு செண்பாவுக்கு அவசரம்னு போன் போட்டா மனுஷன் எடுக்கல. அவர்கிட்ட விஷயத்தை கொண்டு போய் சேக்குறதுக்கு என்னென்ன குட்டிக்கரணம் எல்லாம் அடிக்க வேண்டியதிருக்கு. ஏதோ அன்னைக்கு ஃபிரியா இருக்கவும் விஷயம் தெரிஞ்ச உடனே கிளம்பி வந்துட்டாரு. எப்போதும் அப்படி வர முடியுமா?” என்று எதர்ச்சையாக சொல்லவும் வளவனுக்கு சுருக்கென்றது. செண்பகாவை கட்டிக்கொடுக்கும் முன் இதையெல்லாம் ஏன் யோசியாமல் போனோம் என்று நொந்துகொண்டான்.

“உடனே பீல் பண்ணாதீங்க. யாருக்கு யாருன்னு இருக்கோ அவங்ககூடதான் சேருவாங்க. அரசியல்ல இல்லைனாலும் அரசியல் தொடர்புல இருக்குற ஆளோட நெருக்கமா இருக்குறது நம்ம பொழப்புக்கு நல்லது பாருங்க. அதான் மச்சானுக்கு போஸ்டர் அடிச்சிட்டு இருக்கேன். நமக்கும் அதிகார பலம் வேணும். அப்போதான் சொந்த தொழில் பண்ற நம்மள மாதிரி ஆளுங்களுக்கு எப்போவாச்சும் யூஸ் ஆகும்.”

அவன் பேச்சை கேட்ட வளவனுக்கு ‘விவரமான ஆளுதான். விவகாரமா ஆகாம இருந்தா சரி.’ எனதான் அந்நொடி தோன்றியது. இப்படி பேசிக்கொண்டே கமலின் பின்னே ஓடி அவனைப் பிடித்துத் தூக்கி அவனுடன் விளையாட என்று இருக்க, ரத்னதீபனின் வண்டி வாசலில் நின்று ஹார்ன் அடித்தது.

வீட்டின் முன்பகுதியை மறைக்கும் அளவுக்கு உயர்ந்து நிற்கும் அந்த இரும்புக்கதவினை வளவன் சென்று திறக்க, அங்கு முகம் தூக்கி வண்டியிலிருந்து கீழிறங்கி நின்றாள் செண்பகா.

“வீட்டுக்குள்ள வர்றதுக்கு அவ்வளவு ஆர்வம் உங்க தங்கச்சிக்கு, கதவை திறக்குற வரைகூட பொறுமையில்லாம இறங்கி நிக்குறா.” என கேலியாக சொல்லிக்கொண்டே வண்டியை உள்ளே விட்டான் ரத்னதீபன். 

வளவன் தங்கையை நிமிர்ந்து பார்க்க அவனை முறைத்துக்கொண்டே விறுவிறுவென உள்ளே சென்றாள் செண்பகா. இவளைக் கண்டு கமல் வேக வேகமாக ஓடி வர, நடை தடைபட்டு இறுக்கம் குறைந்தது செண்பகாவிடம். தன் கால்களை பிடித்துக்கொண்டு சிரிப்புடன் அவளை ஏறிட்டு தூக்கும்படி அவன் மழலையில் மிழற்ற, புன்னகையுடன் அவனைத் தூக்கி கொஞ்சினாள்.

“உள்ள போ செண்பா. உனக்குதான் எல்லாரும் வெயிட்டிங்.” என்றான் விமல்.

“உன்கிட்டதான பேசுறாங்க. விசாரி செண்பா.” வளவன் அருகே வந்து யார் கவனத்திலும் விழாதவாறு தங்கையின் காதில் முணுமுணுக்க, அச்சோ என்று நினைத்துக்கொண்டே விமலிடம் சம்பிரதாயத்திற்கு விசாரித்தாள் செண்பகா.

“உள்ள போ.” என மீண்டும் வளவன் சொல்லவும்தான் செருப்பை ஓரமாக கழட்டிவிட்டு உள்ளே நுழையப் போனாள்.

‘கீ அவ அண்ணகிட்ட இருக்கு.’ என அதுவரை ஓரமாக நின்று இவர்களை பார்த்துக்கொண்டிருந்த ரத்னதீபன் இரண்டே எட்டில் அவளை நெருங்கி அவள் கைவிரல்களை தன்வசமாக்கி தன் விரல்களுடன் கோர்த்துக்கொண்டு உள்ளே நுழைந்தான்.

சட்டென தோள் உரச அருகில் வந்து தன் கையை பற்றிக்கொண்டு உள்ளே அழைத்துச் செல்வான் என்று எதிர்பார்க்காத செண்பகா அதிர்ந்து நொடிநேரம் தன்னை ஒப்புக்கொடுத்தது போல் அவன் இழுப்புக்கு சென்றாள். பின் சித்தம் தெளிந்து கைகளை உருவ முயற்சி செய்ய, இவர்களையே ஒருவித திருப்தியுடன் பார்த்துக்கொண்டிருந்த குடும்பத்தினரை காணவும் ரத்னதீபனே பிடியை தளர்த்திவிட்டான்.

‘இனி எல்லாம் சரியாகும்.’ என குடும்பத்தினர் நினைத்துக்கொள்ள, ‘இனிதான் ஆரம்பமே.’ என்றது விதி. 

‘இப்போதான் மனசுக்கு நிம்மதியா இருக்கு. இதே மாதிரி சீக்கிரம் ஒரு குழந்தையை பெத்துக்கிட்டு சந்தோஷமா இருக்கனும்.’ தன் மகள்வழிப் பேரனை மருமகள் கையில் ஏந்தி மகன் கைப்பிடித்து வீட்டினுள் அடியெடுத்து வைத்த கணம் அகக்கண்ணில் தோன்றி மறைந்த மகனின் நிறைவான குடும்ப பிம்பத்தை மனதில் பதித்து கடவுளிடம் அவசர வேண்டுதல் வைத்தார் அபிராமி.

“நேரமாகலையா சீக்கிரம் ரெடி பண்ணுங்க.” இவர்களைப் பார்த்ததும் எழுந்த அமைதியை ரத்னதீபனே கலைத்தான்.

“ஆமாமா நேரமாகுது. செண்பா நீ வந்து முதல்ல விளக்கேத்து. அப்புறம் பால் காய்ச்சலாம்.” என மருமகளை அழைத்த அபிராமி, “அண்ணிக்கு பூஜை ரூமை காட்டு.” என்றார் மகளிடமும்.

அண்ணனுடன் இல்லாமல் வீம்பு பிடிக்கிறாள் என செண்பகா மீது வருத்தத்தில் ஓரிரு வார்த்தை கடினமாய் பேசியிருந்தாலும் செண்பகா வந்துவிட்டால் முகம் காட்டமாட்டாள் திவ்யா. இன்றும் அண்ணி என்று பேசிக்கொண்டு வீட்டின் அறைகள் எங்கிருக்கிறது என்று சொல்லிக்கொண்டே அவள் கைபிடித்து அழைத்துச் சென்றாள். அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டவள் இயந்திரத்தனமாய் சொன்னதை செய்தாள். அமுதா வந்து மகளுக்கு பூ வைத்துவிட்டார். அவரை ஒரு பார்வை பார்த்தவள் ஒன்றும் சொல்லவில்லை. அமுதாவுக்குமே அவள் விருப்பப்பட்டு வரவில்லை என்று புரிந்தது. இருப்பினும் எல்லாம் சரியாகிடுவிடும் என தன்னைத் தானே தேற்றிக்கொண்டார்.

முன்னரே விளக்கில் எண்ணெய் ஊற்றி திரிபோட்டு திரித்து வைத்திருந்தாள் திவ்யா. பால் காய்ச்ச ஏதுவாக அபிராமியும் சமையலறையில் அனைத்தையும் தயாராக வைத்திருந்தார். அதனால் மேல் வேலைகள் மட்டுமே இருந்தது செண்பகாவிற்கு.

“அவசரமா தேவைப்படுற சாமானை மட்டும் பெட்டியிலிருந்து நான் எடுத்து வச்சிருக்கேன். மத்தது எல்லாம் உனக்கு எப்படி வேணுமா அம்மாகிட்ட கேட்டு அப்படி வச்சிக்கோ செண்பா.” மருமகள் வாழ வந்தால் மட்டும் போதும் என்ற எண்ணத்தில் ஏனைய விஷயங்களில் பெரிதாக மூக்கை நுழைக்கவில்லை அபிராமி. இது உன் வீடு இனி நீதான் உனக்கு ஏற்றது போல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று செயல்களிலும் வார்த்தைகளிலும் காண்பித்தார். 

அமைதியாக கேட்டுக்கொண்ட செண்பகா எதுவும் பேசவில்லை. பேசினாலும் தன் பக்கத்தை யாரும் நினைக்கப் போவதில்லை என்று விரக்தியாக நினைத்துக்கொண்டாள். பால் பொங்கியதும் மகிழ்ந்த குடும்பம் இருவரையும் தம்பதி சகிதமாக நின்று சுவாமி கும்பிட்டு நைவேத்தியம் செய்யச் சொல்லி ஆசிர்வாதமும் வாங்கிக்கொள்ள சொல்ல,

‘இது ஒன்னுதான் இப்போ குறைச்சல்.’ என்று கணவனைப் பார்த்தாள் செண்பகா. ஒருவித இறுக்கத்தில் அவள் அனைத்தையும் செய்வதை பார்த்துக்கொண்டிருந்த ரத்னதீபனுக்கும் போகப் போக சரியாகிவிடும் என்ற எண்ணமே. அவள் கைப்பிடித்து பெற்றவர்கள் காலில் ஒன்றாக விழுந்து எழுந்தான். 

செண்பகாவை விட்டே அனைவருக்கும் பால் கொடுக்கச் சொல்ல, பல்லை கடித்துக்கொண்டு செய்தாள். எப்போது இந்த சம்பிரதாயம் எல்லாம் முடியும் என்று தனித்துச் சென்று நினைக்கையில் அவளை உரசிக்கொண்டு வந்து நின்றான் ரத்னதீபன்.

“வீடு புடிச்சிருக்கா?” என்னவோ அவன் குரல் இறங்கி வந்தது போல் இருந்தது. 

“எனக்கு புடிச்சா என்ன புடிக்கலைனா என்ன?” பட்டென்று எதிர்கேள்வி வந்தது பெண்ணிடமிருந்து.

“புடிச்சா சின்ன சந்தோஷம் புடிக்கலைனா புடிக்க வைக்க என்ன பண்ணலாம்னு பாப்பேன். ஏன்னா இந்த வீடுதான் எனக்கு வசதிப்படும்.” என்றான் அவன் அமர்த்தலாய். 

“அதானே எது செஞ்சாலும் அதுல உங்களுக்கு உங்க காரியமாகணும். அது மத்தவங்களை எப்படி பாதிக்குதுனு எல்லாம் கவலையில்லை.” என்று காரம் குறையாமல் எள்ளலாய் திருப்பிக் கொடுத்தாள் செண்பகா.

“இங்கபாரு. நான் ஏன் செய்யுறேன் எதுக்கு செய்யுறேன்னு எல்லாம் உன்கிட்ட சொல்லிட்டேன். அதை உன்னால ஏத்துக்க முடியலைன்னா அதுக்காக நான் ஒன்னும் பண்ண முடியாது. அரசியல்ல இருக்கணும்னா நரியோட தந்திரமும் சிங்கத்தோட வேட்டையும் தெரியணும்.”

“அப்போ நான் என்ன நினைச்சாலும் நான் எப்படி பீல் பண்ணாலும் உங்களுக்கு கவலை இல்லை அப்படித்தானே?” சீறிக்கொண்டு முன்னேறியவளின் இடை வழியே கை நுழைத்து தன் கைவளைவுக்குள் அவன் கொண்டுவர முனைய, சுதாரித்து பின்னகர்ந்தவள் கணவனை நன்றாக முறைத்தாள்.

சலித்துக்கொண்டவன் இடுப்பில் கைவைத்து பெருமூச்சுடன் மனைவியைப் பார்த்து, “என்னடி?”

“நமக்குள்ள எதுவுமே சரியாகாதப்போ எப்படி இப்படியெல்லாம் நடக்க முடியுது உங்களால?”       

“வேற எப்படி நடக்கணும்னு நினைக்குற? எட்டி நின்னது எல்லாம் போதாதா?” என்றவனுக்கு அலைபேசி அழைப்பு வர, சட்டைப் பையிலிருந்து எடுத்து யாரென்று கூட பாராமல் வேகமாக அதை அமைதிப்படுத்திவிட்டு மனைவியிடம் கவனம் வைத்தான்.

“அப்போ இதுக்கு மட்டும் நான் வேணுமா? போக வேண்டியதுதான அங்கேயே.” என்று கோவத்தில் வார்த்தை விட, சீண்டப்பட்டவனாய் சீறிவிட்டான்.

“என்ன விட்டா பேசிட்டே போற? என்னடி நினைப்பு உன் மனசுல. என்னை பார்த்தா எப்படி தெரியுது ஹான்? கல்யாணமான இந்த ரெண்டு வருஷத்துல உன்கூட நல்லா இருந்தப்போ கூட உனக்கான டைம் கொடுத்து ஒதுங்கி இருந்தவன்டி நான். என் பொண்டாட்டினு உரிமையெடுத்து உன்னை எதுக்கும் கட்டாயப்படுத்தி இருக்கேனா?” என்று கோபமாய் முன்னேற, சற்று தணிந்தது பெண்.

மனைவியாய் அவள் தயங்கிய சமயங்களில் அழகாக அவளை புரிந்துகொண்டு நன்றாக புரிதல் வரும்வரை காத்திருக்கிறேன் என அவன்  கண்ணியம் காத்ததில்தான் அவள் மனதில் பசையிட்டது போல் ஒட்டிக்கொண்டான் ரத்னதீபன். மனதில் அவனை ஓரிடத்தில் வைத்திருக்க அந்த பிம்பத்திலிருந்து அவன் கீழிறங்கியதை ஏற்றுக்கொள்ள முடியாமல்தான் தடுமாறி நிற்கிறது பெண். அதில் அவனை விலக்கவும் முடியவில்லை ஏற்கவும் முடியவில்லை.

“இப்போ பேசுடி.” அவள் அமைதியாகவும் இவன் கொஞ்சம் குரல் உயர்த்தினான். சிலிர்த்துக்கொண்டது பெண்.

“குரல் உசத்துனா நீங்க செஞ்சது எல்லாம் சரியாகிடுமா? எல்லாத்துக்கும் சேர்த்துதான் மொத்தமா முடிச்சி விட்டீங்களே…” மூச்சு வாங்கினாள் செண்பகா. 

“என்ன முடிச்சாங்க? என்னைக்காவது நீ வேணாம்னு சொல்லியிருக்கேனா?”

“வேணும்னு சொல்லியிருக்கீங்களா?”

“எல்லா இடத்துலயும் என் பொண்டாட்டின்னு உன்னைத்தான் பதிய வச்சிருக்கேன். இன்னும் என்ன பண்ணனும் உனக்கு? நீயா தான் விட்டு போன.” அவன் குற்றம்சாட்ட, பதிலுக்கு அவளும் செய்தாள்.

“விட்டு போனவளை உங்க வீம்புக்கு அப்படியே விட்டுட்டு இன்னைக்கு வந்து இந்த டைலாக் எல்லாம் பேசுனா செஞ்சது எல்லாம் சரின்னு ஆகிடுமா?” 

“ஆமா எனக்குத்தான் வீம்பு, இவளுக்கு இல்லை.” என வம்பாக நின்றான் ரத்னதீபன்.

“அதை நீங்க சொல்லாதீங்க.” என்று இவளும் பதிலுக்கு பதில் என்று நின்றாள்.

விட்டால் இன்னும் சண்டை போட்டிருப்பார்கள் திவ்யா இடையிட்டு காரில் யாரோ வந்திருக்கிறார்கள் என்று சொல்லவும் மனைவியை முறைத்துவிட்டு உள்ளே சென்றான் ரத்னதீபன். செண்பகாவும் முகம் திருப்ப,

“காலையில சாப்பாட்டுக்கு என்ன செய்யலாம்னு பேசிட்டு இருக்காங்க. வாங்க அண்ணி போய் பாக்கலாம்.” என அவளை கூட்டிக்கொண்டு உள்ளே சென்றாள் திவ்யா. 

கொல்லைப்புறத்திலிருந்து இவர்கள் கூடத்திற்கு செல்ல, காரிலிருந்து இறங்கி நடுக்கூடத்திற்கு ஆர்ப்பாட்டமாக வந்து நின்றாள் அவள்.

“தீபன்…” என்ற அழைப்பில் குடும்பத்தினர் மொத்தமும் அதிர்ந்து போய் நிற்க, வெந்தணலில் குளித்தெழுந்தவள் போல் சிவந்து போனாள் செண்பகா.

‘இப்போ எல்லாருக்கும் சந்தோஷமா?’ என்று அவள் பார்வை அனைவரையும் குற்றம் சாட்டியது. 

ரத்னதீபனுமே அதிர்ந்துதான் நின்றான். இந்த நேரத்தில் தன் வீட்டினில் அவளை சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை. பார்வை உடனே மனைவியிடம் சென்றது. அவள் உடல் வெளிப்படுத்திய கடினத்தன்மையில் அவனுக்கும் குளிர் பிறந்தது. இதென்னடா சோதனை , மனைவி உடன் வந்துவிட்டாள் இனி எல்லாம் சரியாகிவிடும் என சற்றுமுன் தானே நினைத்தோம் அதற்குள் இவளா என அவன் மனதில் அலறும் சமயம் அவனை வந்து அணைத்துவிட்டாள் அவள்.

மந்த்ரா. தமிழ் சினிமாவில் காணாமல் போக இருந்த பட்டியலிலிருந்து நீங்கி தற்சமயம் பரவலாக பல மொழிகளில் கணிசமான அளவு படங்களை தன்வசம் வைத்திருக்கும் திரைப்பிரபலம். கோடிகளில் புரளும் கனவுக்கன்னி.