மீனாவின் ஊருக்கு சென்றதும் ராஜனுக்கு தான் அழைத்தான் தாமரை. அன்னை தந்தையை அழைத்துச் செல்வதற்கு முன் தான் சென்று பேசி விட வேண்டும் என்று முடிவு எடுத்து தான் கிளம்பிச் சென்றான். ராஜனிடம் விஷயத்தை ஏற்கனவே சொல்லி இருந்ததால் அவனும் தயாராக இருக்க இருவரும் மீனாவின் வீட்டுக் கதவைத் தட்டினார்கள்.
“கண்டிப்பா பேசனுமா டா? இதுக எல்லாம் ஒரு மார்கமா பேசுங்க டா”, என்றான் ராஜன்.
“மீனாவோட குடும்பம் ஆச்சே? முயற்சி பண்ணாம இருக்க கூடாதே? பேசிப் பாப்போம். இல்லைன்னா பொண்ணை தூக்கிறலாம்?”, என்று சொன்ன தாமரை நண்பனைப் பார்த்து சிரிக்க ராஜனுக்கு இனி அவன் பார்த்துக் கொள்வான் என்று நம்பிக்கை வந்தது.
அங்கே தான் அவளது அக்கா வசுந்தராவும் இருக்க அவள் தான் வந்து கதவை திறந்தாள். வெளியே நின்ற இருவரையும் கண்டு அவள் குழப்பமாக பார்த்தாள். “அம்மா அப்பாவை பாக்கணும்”, என்று ராஜன் சொல்ல “உள்ள வாங்க”, என்று சொன்னவள் அவர்களை அமர வைத்தாள்.
“என்ன ராஜா? எதுக்கு இந்த தம்பியை கூட்டிட்டு வந்துருக்க?”, என்று கேட்டார் அவளுடைய தந்தை. வடிவும் குழப்பத்துடனே அவர்களைப் பார்த்தாள்.
“அப்பா இவன் பேர் செந்தாமரை. என் கூட ஸ்கூல்ல ஒண்ணா தான் படிச்சோம். இப்ப கவர்ன்மெண்ட் பஸ் டிரைவரா வேலை பாக்குறான். இவனுக்கு நம்ம மீனாவை ரொம்ப பிடிச்சிருக்காம். அவளைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறான்”, என்று ராஜன் சொன்னதும் அனைவருக்கும் திகைப்பு தான்.
அவர்கள் பதில் சொல்லும் முன் “எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு. குழந்தையையும் அவங்க கிட்ட இருந்து வாங்கலாம்னு இருக்கோம். நீங்க நல்லவங்களா கெட்டவங்களான்னு எல்லாம் எனக்கு தெரியாது. நீங்க எப்படி வேணும்னாலும் இருங்க. மனுசங்களா பிறந்தா கொஞ்சம் ஈரம் இருக்கணும்னு நினைக்கிறேன். அன்னைக்கு கீழே விழுந்த பொண்ணை தான் நானும் என் தங்கச்சியும் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய்ட்டு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தோம். அதுக்கு இவ்வளவு தப்பா பேசுவீங்கன்னு நான் எதிர் பாக்கலை. வீட்டை விட்டும் துரத்தி விட்டுட்டீங்க?அந்த பொண்ணை உங்களுக்கு எதுக்கு பிடிக்கலைன்னு தெரியலை. இனியும் பிடிக்க வேண்டாம். இனி அவளுக்கு நான் இருக்கேன். நீங்க எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கச் சம்மதிச்சாலும் சரி சம்மதிக்கலைனாலும் சரி. உங்க ஆசீர்வாதம் இருக்கும்ன்னு நினைச்சு நாங்களா முடிச்சிக்குவோம்”, என்று சொல்ல ராஜனே அவன் பேச்சைக் கேட்டுத் திணறி தான் போனான்.
“இவன் பொண்ணு கேக்க வந்த மாறி இல்லையே. மிரட்ட எல்லாம் செய்யுறான்?”, என்று எண்ணிக் கொண்டான்.
தாமரையும் முதலில் அவர்களிடம் பண்பாக பேச வேண்டும் என்று தான் எதிர் பார்த்தான். ஆனால் அவர்கள் அனைவரின் குணமும் அவனுக்குத் தெரியுமே? அவன் கெஞ்சினால் அவர்கள் மிஞ்சுவார்கள் என்பதால் தான் அவன் மிஞ்சி விட்டான். இந்த இடத்தில் அவர்களை பேச விட்டால் நிச்சயம் மரியாதை இல்லாமல் தவறாக தான் பேசுவார்கள் என்று தெரியுமே?
அனைவரும் வாயடைத்துப் போய் இருக்க “என்ன நீ ரொம்ப பேசிட்டு இருக்க? அதுவும் எங்க வீட்ல இருந்துகிட்டு. எங்க தங்கச்சிக்கு கல்யாணம் பண்ண எங்களுக்கு விருப்பம் இல்லை. நீ போகலாம்”, என்றாள் வசுந்தரா.
“உன் கிட்ட யாரும் இங்க விருப்பம் இருக்கா இல்லையான்னு கேக்கலை. உனக்கு எல்லாம் பேசக் கூடத் தகுதி இல்லை”, என்றான் பட்டென்று.
“ஏய்?”, என்று அவள் கத்த “இந்த கத்துற வேலை எல்லாம் என் கிட்ட வச்சிக்காத. உலகத்துலயே ரொம்ப கேவலமான பொண்ணு நீ. பெத்த அம்மா அப்பாவை பாக்க துப்பு இல்லை. கூட பிறந்த தங்கச்சி அன்பைக் கூட புரிஞ்சிக்காம அவ ரத்தத்தை உறிஞ்சு குடிக்கிற? இப்ப கூட எதுக்கு அவளுக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்லுறேன்னு நான் சொல்லவா? அவளுக்குன்னு ஒரு குடும்பம் வந்தா உன் பிள்ளைகளுக்கு யார் செய்வான்னு தானே?”, என்று சொன்னவன் வடிவைப் பார்த்து “உங்க ரெண்டு பேரையும் உங்க சின்ன பொண்ணு தான் பாத்துக்கும். இவளை எல்லாம் நம்புனா நீங்க தெருவுல தான் நிக்கணும். இனியாவது கவனமா இருங்க”, என்றான்.
அடுத்து வசுந்தரா எதுவுமே பேச வில்லை. பேசினாலும் அவன் நிச்சயம் பதிலடி கொடுத்து விடுவான் என்று தெரியுமே?
அனைவரும் அமைதியாக இருக்க “நாளைக்கு எங்க வீட்ல இருந்து அம்மா அப்பாவை கூட்டிட்டு வருவேன். ஒழுங்கா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லணும். அதை விட்டுட்டு அவ மேல ஏதாவது தப்பான பட்டம் கட்டுனிங்க நான் சும்மா இருக்க மாட்டேன். வாழ்க்கைல அவளை ரொம்ப படுத்தி எடுத்துட்டீங்க? இனி அவளுக்காக நான் இருக்கேன். இனி அவளை ஏதாவது சொன்னா, இல்லை அழ வச்சா உங்க எல்லாரையும் கொலை செஞ்சிட்டு ஜெயிலுக்கு போகவும் தயங்க மாட்டேன்”, என்று அவர்களை மிரட்டியவன் நண்பனிடம் “வா டா போகலாம்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.
அனைவரும் அவன் பேச்சில் திகைத்துப் போய் தான் நின்றிருந்தார்கள். வந்தான் பேசினான் போயே விட்டான். ராஜனுக்கு கூட திகைப்பு தான் அவன் பேச்சைக் கேட்டு. ஏனோ இந்த வார்த்தைகளைக் கேட்க மீனா இங்கு இல்லையே என்று கவலையாக இருந்தது அவனுக்கு. அவளுக்காக இவன் பேசியாதைக் கேட்டால் நிச்சயம் அவள் சந்தோஷப் பட்டிருப்பாள் என்று அவனுக்கு தெரியும்.
வெளியே வந்ததும் “என்ன டா இப்படி பண்ணிட்ட?”, என்று கேட்டான் ராஜன்.
“இவங்க கிட்ட வேற எப்படி பேச சொல்ற? நாய் வாலை நிமித்த முடியாதுன்னு தெரிஞ்சவங்க கிட்ட போய் கெஞ்சிட்டு இருக்க முடியுமா?”
“ஏது? கஷ்டப் படுவான்னு நினைச்சியா? அவ்வளவு மோசமானவனா நான்? நீ ஒருத்தன் போதும் மச்சான் எனக்கு சர்ட்டிபிகேட் கொடுக்க?”
“அது இல்லை டா, மீனா உங்க வீட்டுக்கு கல்யாணம் பண்ணி வந்தா உன் சொந்தக்காரங்க எல்லாம் என்ன பேசுவாங்களோ? அவ கஷ்டப் படுவாளேன்னு நினைச்சேன். ஆனா உன் வாய் அவளைக் காப்பாத்தும்னு இப்ப நம்புறேன்”, என்று சொல்லி சிரிக்க அவனை முறைத்த தாமரையும் சிரித்து விட்டான்.