அடிக்கும் காற்றில் குடை கையில் இருந்து பறந்து விடுமோ என்கிற பயத்தில் இறுக்கமாக குடையை பிடித்தபடி நடந்து கொண்டிருந்தாள் தென்றல். காற்றின் தயவால் குடை பிடித்திருந்தாலும் சாரல் அவளை முழுவதுமாய் நனைத்து விட்டிருந்தது.. ஆங்காங்கே சாலைகள் வெடித்து பள்ளமும் மேடாய் வேறு காட்சியளிக்க பள்ளத்தில் கால் வைக்கிறாளா அல்லது மேட்டில் கால் வைக்கிறாளா என்பது அவளுக்கே புரியவில்லை.
அவளின் பின்னால் மந்திரித்து விடப்பட்ட கோழியை போல அவசர அவசரமாய் தன்னுடைய வண்டியை உருட்டிக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் வந்து கொண்டிருந்தான் சசி மித்ரன்.. தயாரிப்பாளர் மீது ஏற்பட்ட மனக்கசப்பு தென்றலை கண்டதும் பூந்தென்றலாய் அவன் மனதில் இருந்து நீக்கப்பெற்றது.
“ஏங்க” மழையின் சத்தத்தினால் அவன் அழைத்தது தென்றலுக்கு கேட்கவில்லை.. ஒரு பக்க தோளில் புத்தகப் பையும் இரண்டு கரத்தையும் சேர்த்து பிடித்தார் போல குடையை வைத்திருந்தவள் மழையின் தாக்கத்தில் தள்ளாடியபடியே நடந்தாள்..
அங்குதான் விதி அவளையும் சசியையும் பேச வைக்க சதி செய்தது.. மழைநீர் பிரவாகமாக ஓட அடுத்த அடி எடுத்து வைத்தவள் கல்லில் கால் இடறி பொத்தென்று கீழே விழுந்தாள்.
“தொபீர்” அடுத்த கனமே தன்னுடைய வண்டியை கைப்பிடியில் இருந்து நழுவ விட்ட சசி தென்றலை நோக்கி ஓடினான்.
கையில் நல்ல அடி. கால் லேசாக பிசகி விட்டது. எழ முடியாமல் தென்றல் தவித்துக் கொண்டிருக்க
“ஏங்க என்ன பாத்து வர மாட்டிங்களா” அவளின் வலது கரத்தை பிடித்து எழ உதவி செய்தான்.. அந்நிய ஆண் தன்னை தொடுவதை உணர்ந்த தென்றல் அவனிடமிருந்து கரத்தை வெடுக்கென பிடுங்கிக் கொண்டாள்.
மழைத்துளிகள் அவள் முகத்தில் விழ கண்களை சுருக்கி அவனை முறைத்து பார்க்க தென்றலின் செய்கையில் மெல்ல கோபம் எட்டிப் பார்த்தது சசி மனதில்.
“ஏங்க.. கீழ விழுந்துட்டீங்கன்னு ஹெல்ப் பண்ண வந்தா.. இது ரோடுங்க.. இங்க வச்சு உங்களை ஒன்னும்.. இதுக்கு மேல எப்படி சொல்றது.. மழையில இப்படியே உட்கார்ந்து இருக்க போறீங்களா..” அவன் சொல்வதின் அர்த்தம் தென்றலுக்கு புரிந்தது.. தயங்கியபடியே அவளது வலது கரத்தை நீட்ட கோபத்தை ஓரங்கட்டிய சசி அவள் எழுந்து நிற்க உதவி செய்தான்.
“ஸ்ஸ்ஸ் ஆ” காலை நிலையாக ஊன முடியாமல் தடுமாறினாள் தென்றல்.
“என்னாச்சு..க்ரேம் ஆச்சு போல.. முடியுமா.. ஓகேவா”.. சசி அவளின் காலை பார்த்தபடி கேட்க
“ஆ ஓகேங்க..” என்றவள் வலியை பொறுத்து கீழே சிதறி கிடந்த தன்னுடைய பேக்கை எடுத்துக்கொண்டு குடையை தேடினாள். அது ஒரு ஓரமாய் கிடந்தது பறந்து போய்.. அவளின் நோக்கம் புரிந்த சசி
“இருங்க” ஓடி சென்று குடையை எடுத்து வந்து தென்றலிடம் கொடுத்தான்.
“தேங்க்ஸ்” அதற்கு மேல் அங்கே நிற்காமல் நடக்க தொடங்கினாள் தென்றல். வலி தான் இருந்தாலும் அங்கேயே நிற்க முடியாது.
அவள் தன்னை முழுதாக தவிர்ப்பது சசி மித்ரனுக்கு புரிந்தது. ” அவ என்ன மறந்துட்டா ” தென்றலின் நினைவில் தான் எதற்காக இருக்க வேண்டும் என்பது அவனுக்கு புரியவில்லை. சொல்லப்போனால் அதில் எந்தவித நியாயமும் கிடையாது.
அனைத்துமே சசியின் மூளைக்கு தெரிந்தும் அவனின் மனம் தென்றல் அவனுக்கு அநியாயம் செய்ததாக எடுத்துரைத்தது..
அவனை நினைவில் வைத்துக் கொள்ளாதது அவள் வாழ்வில் செய்த பெரும் குற்றம் என்று வாதிட்டது.. மழையில் அதுவும் தன்னுடைய வண்டியை கூட பொருட்படுத்தாமல் கீழே விழுந்து கிடந்தா அவளுக்கு உதவி செய்ய அதனை சிறிதும் மதிக்காமல் அவள் சென்றது தென்றலின் க்ரைம் ரேட்டை இன்னும் கூட்டியது.
அந்த நிமிடம் அவனது மூளை தென்றலுக்காக வக்காலத்து வாங்க தயாரானது.
” முண்டம் அந்த பொண்ணுக்கு நீ யாருன்னே தெரியல.. அவள பொறுத்த வரைக்கும் நீ ஒரு ஸ்ரேஞ்சர்.. கீழ விழுந்துட்டா தூக்கி விட்ட.. மரியாதை தெரிஞ்ச பொண்ணு நன்றி சொல்லிட்டு போகுது. இதுக்கு மேல அந்த பொண்ணு கிட்ட நீ என்ன எதிர்பார்க்கிற.. ” தென்றலுக்காக மூளை நியாயத்தை எடுத்துக் கூற அப்பொழுது தான் சசிக்கு அவள் பக்கம் இருந்த வாதம் புரிந்தது.
நொடியும் யோசிக்காதவன்”ஏங்க ஹெல்லோ” வேகமாய் அவளை அழைக்க தென்றல் திரும்பி பார்த்தாள்.. அவள் நின்று திரும்பியதும் இரண்டே எட்டில் அவளை நெருங்கியவன்
“ஏங்க.. என்னை ஞாபகம் இல்லையா”.. தென்றல் அவனை மிரட்சியாக பார்த்தாள்.. அவள் பார்த்த பார்வையிலேயே அவனுக்கு புரிந்து விட்டது சுத்தமாக அவளுக்கு நினைவில்லை என்பது.
“நான்..”எச்சில் விழுங்கி கொண்டான்..”நான் அகிலன் ஃப்ரெண்ட்ங்க.. ரெண்டு வருஷம் முன்னாடி அகிலன் புது வீட்டுக்கு கிரகப்பிரவேசத்துக்கு வந்து இருந்தீங்க.. பீச்ல கூட நாம மீட் பண்ணனும்.. நீங்க கூட ஸ்கிர்ட் போட்ருந்திங்க.. காத்துல உங்க ஸ்கிர்ட் பறந்து உங்க முட்டி தெரிஞ்சதுங்க..உங்க ரைட் கால் முட்டியில கூட ஒரு தழும்பு இருக்குமே”..
“ம்ம்ம் ஹெலோ” அவளுக்கு தன்னை ஞாபகப்படுத்தி விடும் வேதத்தில் தன் போக்கில் உளறிக் கொண்டிருந்தவன் தென்றலின் கோபக் குரலை கேட்டதும் தன்னிலைக்கு வந்தான்.. தென்றல் அதிர்ந்து விளித்தாள்.. சில நாட்களுக்கு முன்பு அவனை பேரங்காடியில் சந்தித்தது நினைவுக்கு வந்தது..
” இல்லைங்க உங்களுக்கு ஞாபகம்.. நான் அகிலனோட ஃப்ரெண்ட்டு..” கொட்டும் மழையில் தன் முன்னாள் தொப்பலாய் நனைந்தபடி நின்ற வாலிபனை பார்க்கையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்தித்தவன் இவனா என்கிற நிலைமையில் தான் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் தென்றல்..
கரடு முரடான தாடிக்கு நடுவே புகைப்பிடித்து கருத்து போன உதடுகளும், தன்னுடைய பதிலை ஆர்வமாக எதிர் நோக்கும் கண்களுமாக நின்றவன் ஏற்கனவே தனக்கு அறிமுகமானவன் என்கிற ரீதியில்
” ரொம்ப சாரிங்க நான் யாரோன்னு அன்னைக்கு.. ” சிறிது நேரத்திற்கு முன்னால் தன்னை மறந்ததை பெரும் குற்றமாக கருதிய மனம் அவள் மன்னிப்பு என்றதும் நொடியில் அனைத்தையும் துடைத்து போட்டு வெட்கம் மானம் சூடு சொரணை இன்றி அவளை பார்த்து சிரிக்க தயாரானது..
” பரவாலைங்க.. என்ன மழையில நடந்து போயிட்டு இருக்கீங்க? மழை விட்டதும் போயிருக்கலாம் இல்ல.. பாருங்க ஃபுல்லா நனஞ்சிட்டிங்க.. ” அவன் மழையில் நனைந்து கொண்டிருப்பதைப் பற்றி துளியும் உணர்ச்சி இல்லாமல் கூற மழையில் நிற்க முடியாமல் தள்ளாடியபடி அவனை அதிசயமாய் நோக்கிய தென்றல்
” நீங்களும் தான் மழையில நனைஞ்சுட்டு இருக்கீங்க..” அப்பொழுதுதான் தன்னுடைய நிலைமையை உணர்ந்தான் அவன். வேகமாக திரும்பி அவனுடைய பைக்கை பார்க்க அது அனாதையாக சாலையின் ஒரு ஓரம் கிடந்தது.
“அய்யயோ..” பைக்கை நோக்கி ஓடினான்.. அதனை நிமிர்த்தி உருட்டிக் கொண்டே தென்றலை நோக்கி வர சசியை சந்தேகமாக பார்த்தாள் தென்றல்.
” பைக் ஸ்டார்ட் ஆகலங்க.. உருட்டிட்டே மழையில வந்தேன். திடீர்னு பார்த்தா முன்னாடி நடந்து போயிட்டு இருந்த நீங்க கீழ விழுந்துட்டீங்க.. அதான் வண்டிய போட்டுட்டு.. ” பாதி உண்மையை மறைத்து கூறினான்.
அவன் வண்டியை உருட்டிக் கொண்டே வர தனக்கு ஆபத்தில் உதவியவன் என்ற நன்றி உணர்ச்சியில் அவனுக்கும் சேர்த்து குடை பிடித்தாள் தென்றல்..
மழை இன்னும் அதிகமாக பெய்தது..
“ஏங்க.. மழை இப்ப விட்ற மாதிரி இல்ல.. கொஞ்ச நேரம் அந்த டீக்கடை கிட்ட ஒதுங்கி நிற்போம் வாங்க..” சசி சுட்டிக்காட்டிய டீ கடையை பார்க்க அங்கே மழைக்குப் பதுங்கிய ஆண்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.. தென்றல் சற்று தயங்கி நிற்க
“என்ன.. வாங்க” அதற்கு மேல் மறுக்க இயலாமல் அவனோடு சென்றாள். வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியவன் அவளோடு டீ கடையின் ஒரு ஓரத்தில் நின்று கொண்டான்..
“டீ சாப்பிடலாமா..”
“ம்ஹும் வேணா”
“இல்லங்க மழைக்கு செமயா இருக்கும்..”
“ம்ஹும்”
“வேற காபி..”
“இல்லை வேணா”.. அங்கே நிற்பதற்கே அவளுக்கு சங்கடமாக இருந்தது. அவள் வளர்ந்த சூழ்நிலை அம்மாதிரி.
ஆனால் சசிக்கு மழை என்றால் கண்டிப்பாக டீ குடித்தே ஆக வேண்டும்.. தனக்கு ஒரு டீ சொல்லியவன் அவளுக்கு ஒரு வாழைக்காய் பஜ்ஜியை எடுத்து கையில் கொடுத்தான்..
“ஐயோ வேணாங்க”.. பதறினாள் தென்றல்..
” ஏங்க சூடா தாங்க போட்டுருக்காங்க.. மழைக்கு சூப்பரா இருக்கும்.. சும்மா சாப்பிடுங்க.. ” அவனும் ஒரு பஜ்ஜியை எடுத்து கடித்தான். ஒரு கையில் பஜ்ஜி இன்னொரு கையில் டீ.. உடன் அவனை அறியாமல் மெல்ல அவனுக்குள் ஊடுருவிக் கொண்டிருக்கும் பெண்..
கவிதை எழுத பரபரத்த கரங்களை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டான் சசி..
“ஏன் அகிலன் வீட்லயே தங்கிருக்களாமே” தன்னை மீறி அவளது சொந்த விஷயத்தில் மூக்கை நுழைப்பது அவனுக்கே தெரிந்து தான் இருந்தது..
சொந்த விஷயத்தை அவனிடம் பகிர்வது தென்றலுக்கு பிடிக்கவில்லை. அதனால் பதில் பேசாமல் மௌனமாக பஜ்ஜியை மென்று கொண்டிருந்தாள்.. அவள் தன்னை தவிர்ப்பது அவனுக்கு புரிந்தாலுமே அதனை தாங்க முடியாமல் விசித்திர மன போக்கில் சிக்கிக் கொண்டான் சசி.
சசிக்கு டீ குடித்த கையோடு புகைப்பிடித்தாக வேண்டும்.. டீக்கடையிலேயே ஒரு சிகரெட்டை வாங்கி பற்ற வைத்தவன் புகையை ரசித்து உள்ளிழுத்து வெளியே விட்டான்..
சிறிது நேரம் அவர்களிடையே பேச்சு வார்த்தை இல்லாமல் மௌனமாய் கழிந்தது. மழை மெல்ல நின்றது. சசி டீக்கும் பஜ்ஜிக்கும் பணம் கொடுத்துவிட்டு வண்டியை உருட்டிக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். தென்றலும் அவனோடு நடக்க சற்று தொலைவில் தென்றல் செல்ல வேண்டிய பேருந்து ஸ்டாப்பில் நின்றது..
” ஏங்க பஸ் வந்துருச்சுங்க.. நான் கிளம்புறேன் பை.. ” தென்றல் அவனின் பதிலை எதிர்பார்க்காமல் ஓடிச் சென்று நின்று கொண்டிருந்த பஸ்ஸில் ஏறினாள்..
பஸ் நகர ஆரம்பித்ததும் இறுதியாக ஒரு முறை தன்னுடைய வண்டியை ஸ்டார்ட் செய்ய முயற்சிக்க இம்முறை அவனது பைக்ஸ் ஸ்டார்ட் எடுத்தது. சசிக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.. சற்று தொலைவில் புள்ளியாய் மறைந்து கொண்டிருந்த பேருந்தை பார்த்தபடியே பைக்கில் ஏறி வீட்டை நோக்கி பறந்தான்.
” என்னடி உன் நல்லதுக்கு தானே சொல்றேன்? செவ்வாய்க்கிழமை ராகு காலத்துல துர்காவுக்கு விளக்கு போட்டா ராகு கேது தோஷம் போகும்னு பூசாரி சொல்றாரு.. ஏற்கனவே உன் ஜாதகத்துல ராகு கேது தோஷம் இருக்கு. இதனால கண்டிப்பா கல்யாணத்துல சிக்கல் வரும்..
உனக்கு பதிலா நானா போட முடியும்.. காலேஜ் முடிஞ்சு நேரா கோயிலுக்கு போய் துர்காவுக்கு விளக்கு போட்டுரு” வாசுகி விடுவதாய் இல்லை..
பெரும்பாலான விஷயங்களில் பிள்ளைகளுக்கு விட்டுக்கொடுக்கும் வாசுகி சில விஷயங்களில் மிகவும் கடுமையாக நடந்து கொள்வார். அதிலும் தெய்வ காரியம் என்றால் அவர் சொல்வது தான் அங்கே இறுதி முடிவாகும்.. தாயைப் போல இரு மகள்களுக்கும் பெரிதாக கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் தெய்வத்தின் மீது பக்தி கலந்த பயம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.
” உனக்கு தனியா போக முடியலன்னா சொல்லு அத்தைக்கு போன் பண்ணி சொல்லிடுறேன். அவங்க கூட போ”.. அத்தை என்றதுமே
” வேணாம் வேணாம் அதுக்கு நான் தனியாவே போய்டுவேன்.. ” இறுதியில் வாசுகியின் பேச்சுக்கு அடிபணிவதானது.