அத்தியாயம் 09

“த்த்த… ஆது… ஆது…”

உற்சாகப் பந்தாய் தன் இடுப்பிலிருந்து குதித்த அண்ணன் மகள் வைஷ்ணவியிடம், “திடீர்னு ஆடச்சொன்னா, அத்த எப்டி ஆடுவேன் செல்லக்குட்டி? அத்தைக்கு டான்ஸ் வேற வராதே.”

வீட்டு மொட்டைமாடியில், தான் வளர்த்து வரும் ரோஜாச் செடிகளை, அந்தி மயங்கும் வேளையில் அண்ணன் மகளோடு பார்வையிட்டுக் கொண்டிருந்த ப்ரபா, செடிகளிலிருந்து பார்வையை விலக்காமலேயேச் சொன்னாள்.

சப்பென்று தன் பிஞ்சுக்கரங்களால் அத்தையின் முகத்திலறைந்த வைஷூ, மறுபடியும்,”ஆது… ஆது…” என்று கையை நீட்டி தெருவைக் காட்டினாள்.

“ஓஹ்… ஆட்டுக்குட்டியைப் பாத்து சொல்லுறீங்களா செல்லம்? அத்த தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேனா?”

அண்ணன் மகளின் ரோஜா முகத்தைப் பற்றி தன் முகத்தோடு முகம் வைத்து தேய்த்தவள், கைப்பிடி சுவருக்கு பக்கத்தில் வந்து நின்று, கீழே தெருவைப் பார்த்தாள்.

வைஷூ காட்டிய ஆடு, மூன்று குட்டி ஆடுகள் புடைசூழ சுவரில் ஒட்டப்பட்டிருந்த சினிமா போஸ்டரை தின்று கொண்டிருந்தது.

 ஆடு இப்போது தெளிவாகத் தெரிய, ஆரவாரமாக கைதட்டி சிரித்து, அதன் பக்கத்தில் போய்விடவேண்டும் போல இழுத்த வைஷுவை, இறுக பிடித்துக் கொண்ட ப்ரபா, “யோவ்… நாம மொட்டமாடியில நிக்குறோம்யா…” என்றவாறே சற்றே பின்னால் நகர்ந்து நின்றுகொண்டு, “ஆடு என்ன கலர் செல்லம்?” என்று கேட்க,

“ம்ம்… ப்ப்ளாக் கலர்.” பளிச்சென்று பதில் வந்தது வைஷ்ணவியிடமிருந்து.

“வாவ்… எங்க செல்லம்மாவுக்கு கலரெல்லாம் கண்டுபிடிக்கத் தெரியுதே!” பெரிதாக அதிசயித்த ப்ரபா, தங்கள் வீட்டு தேவதையின் பட்டுக் கன்னத்தில் முத்தம் ஒன்றை வைத்து, ஆட்டின் பக்கத்தில் நின்ற வெள்ளை நிற குட்டியைக் காட்டி, “அது என்ன கலர் செல்லம்? சொல்லுங்க…” என்று கேட்க,

“வைஷூ… வா குளிக்கலாம்” என்றவாறே அங்கே வந்து நின்றாள் ரேவதி.

“வேணா… ” அவசரமாக தலையசைத்து மறுத்த குழந்தையிடம், “பட்டுக்குட்டி அம்மா கூடப்போய் குளிச்சிட்டு, வேற ட்ரெஸ் போட்டுட்டு வருவீங்களாம். அதுவரைக்கும் அத்த இங்கயேத் தான் இருப்பனாம்.”

தன் மகளுக்கு சமாதானம் சொல்லியபடியே, அவளை தன் கையில் தந்த நாத்தனாரின் முகத்தை கூர்ந்து பார்த்த ரேவதிக்கு, அந்த முகத்திலிருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மகளோடு திரும்பி நடந்தவள், சட்டென்று நின்று, “என்ன முடிவு எடுத்துருக்குற ப்ரபா?” நின்ற இடத்திலிருந்தே திரும்பி பார்த்தபடிக் கேட்டாள்.

“எதப்பத்தி ண்ணி?”

‘எங்கப்பா சாமி! என்ன நடிப்புடா! எதப்பத்தி கேக்கிறேன்னு இவளுக்குத் தெரியாதாக்கும்?’ உள்ளுக்குள் நொடித்துக் கொண்டாலும், “உங்கல்யாணத்தைப் பத்தி தான்” என்றாள், ஆர்வத்தை வெளிக்காட்டிக் கொள்ளாத குரலில்.

“ஓஹ்…” ஒற்றை வார்த்தையோடு அமைதியாகிப் போன ப்ரபா, ஒரு நிமிட அமைதிக்குப் பிறகு, “அது… நான் இன்னும் டிசைட் பண்ணல ண்ணி.” உண்மையையேச் சொன்னாள் தன் அண்ணன் மனைவியிடம்.

‘அதான… பெத்தவங்களும் கூடப்பொறந்தவங்களும் இப்டி உன்னை தலைக்கு மேல தூக்கி வச்சி ஆடினா, நானெல்லாம் உங்கண்ணுக்கு மனுஷியாத் தெரிவனா? இல்ல, உண்மையைத் தான் எங்கிட்ட நீ சொல்லிடுவியா?’

மனதுக்குள் அங்கலாய்த்து கொண்டு, ப்ரபாவை பார்த்து நம்பாத சிரிப்பொன்றை வீசிவிட்டு சென்றாள் ரேவதி.

உண்மையிலேயே, கல்லூரிக்கு போகாமல் மூன்றாவது நாளாக இன்றும் வீட்டிலேயே இருக்கும் ப்ரபாவின் மனநிலை, எந்த முடிவையும் எடுக்க முடியாமல் மதில் மேல் பூனையாகவே தான் இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது.

வீட்டில் யாரும் கல்லூரிக்கு போகவேண்டாமென்று தடுக்கவில்லை. ஆனால் ஏனோ ப்ரபாவுக்கே போக மனதில்லை.

‘ஒருவேளை தன்னுடைய மெசேஜ்களுக்கும் அழைப்புகளுக்கும் பதில் ஏன் தரவில்லை? என்று கேட்டு அத்தான் கல்லூரிக்கே வந்து விட்டால், நான் என்ன பதில் சொல்லுவேன்?’ என்ற பயம் அவளை கல்லூரிக்கு போகவிடாமல் தடுத்திருந்தது.

கூடவே கைபேசிக்கு சார்ஜ் போடாமல் விட்டுவிட, அதுவும் இவளைப் போலவே உயிர்ப்பில்லாமல் இருக்கிறது.

கல்லூரிக்கு போகாமல் வீட்டிலிருந்தவளை, ஒரு பார்வையோடு எதுவும் கேட்காமல் அப்பாவும் அண்ணன்மார்களும் கடந்திருந்தார்கள்.

 “பொல்லாத காதல்… எங்களுக்கெல்லாம் பெத்தவங்க பாத்து கல்யாணம் பண்ணி வச்சாங்க. நாங்கல்லாம் வாழாமல் செத்தா போயிட்டோம்?” இப்படித்தான் முணுமுணுத்துக் கொண்டு அலைந்தார் தனலட்சுமி.

போதாததற்கு வீட்டுக்கு வந்த தவமணியிடமும் விஷயத்தைச் சொல்லி ஒரு மூச்சு அழுதிருந்தார்.

அவரோ, “ஏன் தனம்? அப்பாவை மாதிரியே பிள்ளையும் இருக்கணும்னு கட்டாயமா என்ன? பையன் நல்லமாதிரியா இருந்தா, அவனுக்கே கல்யாணம் பண்ணி வைக்குறதுல உங்களுக்கு என்ன கஷ்டம்?”

“அப்டியே, இந்த கல்யாணத்தால நம்ம சத்யாவுக்கும், ஒரு நல்லது நடந்தா, நீ வேண்டாம்னு சொல்லுவியா, என்ன?” என்று கேட்டு வைத்தார்.

“சத்யா தான், அன்னைக்கே தன்னோட முடிவைச் தெளிவா சொல்லிட்டானே க்கா. அப்புறம் ஏன் இந்த விஷயத்தோடு சேத்து அவனையும் முடிச்சு போடுறீங்க? அது இல்லைன்னு ஆனது, ஆனது தான்.”

என்றைக்கும் இல்லாமல் தவமணியின் வார்த்தைகளில், லேசாக கோபம் எட்டிப்பார்த்திருந்தது தனலட்சுமிக்கு.

அதற்கு மேல் அதைப்பற்றி விவாதிக்காமல் தவமணியும் விட்டுவிட, அறைக்குள்ளிருந்து அத்தனையையும் கேட்டுக்கொண்டிருந்த ப்ரபாவிற்குத் தான் தலை சுற்றிப்போனது.

‘இரு குடும்பத்திற்கிடையே இவ்வளவு பிரச்சினைகள் இருக்க, தான் எப்படி அத்தான் காதல் சொன்னதும் ஏற்றுக்கொண்டேன்?’ என்ற கேள்வி அவளுக்குள் எழாமல் இல்லை.

ஆனால் கிடைத்த பதில் தான், அவளையே கொஞ்சம் புரட்டிப் போட்டிருந்தது.

ஆம்… இது இன்று, நேற்று உண்டான காதலில்லை. பல வருடங்களாகவே உள்ளுக்குள் மறைந்திருந்த பசுமைக் காதல், என்பது தான் அந்த பதில்.

ஆமாம், பசுமைக் காதல் தான்…

ஒருவகை மூங்கிலைப் பயிரிட்டு, தண்ணீர் ஊற்றி பராமரித்தாலும், பருவங்கள் பல சென்ற பின்னும் வளரவே வளராதாம். முழுதாக நான்கு வருடங்களை பூமிக்குள் தன் வேரை முழுமூச்சாக பரப்புவதற்கு எடுத்துக்கொள்ளுமாம். சரியாக ஐந்தாவது வருடத்தில் அனைவரும் வியக்கும் வண்ணம், சடசடவென்று அசுரவளர்ச்சியை காணுமாம்.

அப்படித்தான் சிறுவயது முதலே ரஞ்சித் மீதான ஒரு பிடித்தம், பெண்ணுக்குள்ளேயே இருந்து, இருந்து, வேர்பரப்பி, அவன், தானே வந்து காதல் சொல்லவும், எதைப்பற்றியும் சிந்திக்காமல் பரிணாம வளர்ச்சி கண்டு வளர்ந்து நிற்கிறது.

ஆனால், அந்த காதல் இன்று சகோதர பாசத்திற்கு முன்னால் லேசாக ஆட்டம் கண்டிருப்பது என்னவோ நிஜம்.

மொட்டைமாடியின் கைப்பிடிச் சுவரில் கையை ஊன்றிய ப்ரபா, ஆயாசத்தோடு தன்முன்னே விரிந்து கிடந்த நகரைப் பார்த்தாள். சின்னதும் பெரியதுமாக காங்கிரீட் காடுகள் வஞ்சமின்றி வளர்ந்திருந்தது.

தலைக்கு மேலிருந்த வானத்திலோ, இவள் உள்ளத்தை சூழ்ந்திருந்த கவலையைப் போல கருமேகங்கள் சூழ்ந்திருந்தது.

திக்கு தெரியாத காட்டில் தனித்து நிற்பவளைப் போல நின்றிருந்தவளின் கண்களில், அவர்கள் தெருவிற்கு வரும் பாதையில் ஒரு பி எம் டபிள்யூ வேகமாக திரும்புவது விழுந்தது.

‘இது அத்தான் கார் மாதிரில்ல இருக்கு?’ யோசித்தவளுக்கு, மாதிரி அல்ல அதுவேதான் என்று சிறிது நேரத்திலேயே புரிந்து விட்டது.

‘ஹையோ… அத்தான் எங்க, இங்க?’ அதிர்ந்து போய் பார்த்தவளுக்கு, கார் தங்கள் வீட்டருகே நிற்கும் முயற்சியில் இறங்குவது தெரியவும், அடித்து பிடித்துக் கொண்டு மாடியிலிருந்து கீழே இறங்கினாள்.

‘வீட்டுக்கு வருபவனை, அம்மா ஏதாவது ஏடாகூடமாக பேசிவிடக்கூடாதே’ என்ற எண்ணத்தில் வேகமாக இறங்கி வந்தவள், அதே வேகத்தில் கதவைத் திறக்க, அவள் முன்னால் நின்று கொண்டிருந்தான் ரஞ்சித் திருவேங்கடம்.

‘அசம்பாவிதமாக எதுவும் நடந்து விடக்கூடாது’ என்று அவசரமாக ஓடிவந்து கதவைத் திறந்தவள், இப்போது ‘என்ன செய்வது?’ என்று தெரியாமல் திருதிருக்க, உச்சி முதல் உள்ளங்கால் வரை பெண்ணவளை ஆராய்ந்தவனின் கண்களில் உஷ்ணமிருந்தது.

“சோ… நல்லா பிடுங்கி வச்ச கிழங்காட்டம் இருந்துட்டு தான், எனக்கு நீ ரெஸ்பான்ஸ் பண்ணலை, ரைட் … நான் கூட உன் வீட்டாளுங்க காட்டுமிராண்டித்தனமா கையைக் காலை உடச்சி, உன்னை வீட்ல போட்டுட்டாங்களோன்னு பயந்து போய் ஓடி வந்தேன்.” சூடாக வந்து விழுந்தது வார்த்தைகள்.

“அது… ஃபோன்… சார்ஜ்…” பதில் சொல்லமுடியாமல் பெண் தடுமாறினாள்.

அவளை விழித்துப் பார்த்த ரஞ்சித்‌, “நான் உங்கூட கொஞ்சம் பேசணும், வா…” இயல்பாக அவள் கையைப் பற்றி அழைத்தான்.

“இல்ல… வேண்டாம்…”

“என்ன வேண்டாம்? நானா?” சுள்ளென்று கேட்டவனின் கேள்வியில் அமைதியாகிப் போனவள், அவன் பின்னோடு நடக்க, அவனோ பிடித்த பிடியை விடவேயில்லை.

“ஏய்… எம்பொண்ண எங்கடா கூட்டிட்டு போற?” கையில் காய்கறி கூடையோடு வெளியே இருந்து வந்த தனலட்சுமி, பதட்டத்தில் காய்கறி கூடையை தவறவிட்டவராய், ரஞ்சித்தைப் பார்த்து சத்தமிட்டார்.

“இங்க பாருங்க அத்த! எனக்கு உங்க பொண்ணு கூட பேசணும். சத்தம் போடாம அனுப்பி வச்சீங்கன்னா திரும்ப கொண்டு வந்து விடுவேன். இல்லையோ, அப்டியே அவ கழுத்துல ஒரு தாலியைக் கட்டி, எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுவேன். எப்டி வசதி?”

சொல்லியவனின் வார்த்தைகளில் இருந்த உறுதி தனத்தின் கைகளைக் கட்டிப்போட்டது. எதுவுமே நடக்காதது போல காரின் முன் கதவைத் திறந்து ப்ரபாவை உட்கார வைத்தான் ரஞ்சித்.

அந்நேரம் யதேச்சையாக வீட்டுக்கு வந்த முரளி, “ரஞ்சித்! பிரச்சினையை பெருசாக்காத?” என்று தன்மையாகச் சொல்ல,

“எனக்கு உன்தங்கச்சி கூட பேசணும் முரளி. ஒரு அரைமணி நேரத்தில கொண்டு வந்து விட்டுருவேன். புரிஞ்சிக்கோ” என்றவன் ட்ரைவர் சீட்டில் அமர்ந்து காரை கிளப்பிக் கொண்டு சென்றே விட்டான்.

“டேய்… நீயெல்லாம் என்னடா அண்ணன்? உங்கண்ணு முன்னாடி அவன் உன்தங்கச்சியை கூட்டிட்டு போறான். நீ அவனை ஒண்ணும் பண்ணாம கம்முன்னு நின்னுட்டு இருக்குற?”

தன் ஆற்றாமையை அத்தனையையும் தனம் மகன் மீது கொட்ட, “ம்மா… நிக்குற இடம் தெரியாமல் கத்தாதீங்கம்மா. பிளீஸ்… வீட்டுக்குள்ள போய் பேசிக்கலாம்.”

மகனின் வார்த்தையில் சூழ்நிலை உறைக்க, சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தார் தனலட்சுமி. திறக்கப்பட்ட அக்கம்பக்கத்து வீட்டு கதவுகளில், ஆர்வத்தோடு இங்கேயேப் பார்த்தபடி மனிதத் தலைகள் தெரிந்தன.

“போச்சு… மானம், மரியாதை, எல்லாம் போச்சு…” முணுமுணுத்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தவரிடம், “நம்ம ப்ரபா சம்மதம் இல்லாமல் ரஞ்சித் அவளை கூட்டிட்டு போகலை. அதை முதல்ல கவனிச்சீங்களா ம்மா?” என்று முரளி கேட்க,

முகம் சுருங்கிப்போனவர்,”முதல்ல அப்பாவுக்கும் அண்ணனுக்கும் ஃபோனப் போட்டு வீட்டுக்கு வரச்சொல்லுடா” என்றபடியே சோர்ந்து போய் நாற்காலியில் அமர்ந்தார்.

இங்கோ, ரஞ்சித்தின் கைகளில் பறந்த கார், அதிக பரபரப்பில்லாத ஒரு புறவழிச் சாலையில் போய் நின்றது.

கார் சென்ற வேகத்திலேயே காளையவன் கோபத்தை அறிந்து கொண்ட ப்ரபா, எதுவும் பேச முயற்சி செய்யாமல் கண்களை மூடி சீட்டில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

காரை நிறுத்தியவனும் பேசமுற்படாமல், தன்னருகில் இருந்தவளையே அளவிட்டபடி இருக்க, அங்கு கனத்த மௌனமே ஆட்சி செய்தது.

 சிறிது நேரத்தில், தன் மௌனம் கலைத்த ரஞ்சித், “சொல்லு… எதுக்காக என்னை அவாய்ட் பண்ணுற?” நேரடியாக கேள்விக்கணையை ப்ரபாவிடம் வீசினான்.

அவளோ, பதிலேதும் சொல்லாமல், எப்படி இருந்தாளோ அப்படியே பதுமையென இருந்தாள். சட்டென்று மூண்ட கோபத்தோடு, அவள் கன்னத்தை இறுகப் பற்றி தன்னை நோக்கி திருப்பியவன்,

“நான் கேட்டுட்டே இருக்கிறேன்… நீ பதில் சொல்லாம உக்காந்திருக்குற. ஏன்? என்னப் பாத்தா கேணப்பயலா தெரியுதா உனக்கு?” அடிக்குரலில் சீறினான்.

அதற்கும் பதிலில்லை பெண்ணிடம். ஆனால் மூடிய விழிகளிலிருந்து கண்ணீர் துளிகள் வழிய ஆரம்பித்தது.

அவள் கண்ணீரைக் காணவும் ரஞ்சித்திடமிருந்து கோபம் சொல்லாமல் கொள்ளாமல் விடைபெற, பெண்ணவளின் கன்னத்தைப் பற்றி உலுக்கி, “ப்ச்ச் ப்ரபா… அழுகை எல்லா பிரச்சினைக்கும் தீர்வு இல்லை. வீட்ல என்ன நடந்திச்சு? நீ ஏன் காலேஜ்க்குப் போகல? அத மொதல்ல சொல்லு” என்று பொறுமையாக கேட்டான்.

அந்த குரலில் மெதுவாக கண்களைத் திறந்து தன் அத்தானைப் பார்த்தவள், “எனக்கு பயமா இருக்கு த்தான்” என்றாள் மொட்டையாக.

“நம்ம கல்யாணம் நடக்குமான்னு நினைச்சு பயமா இருக்கா பேபி? அதெல்லாம் நான் கண்டிப்பா நடத்திப்பேன், நீ பயப்படாத.” சொல்லியவனின் கண்களில் மிதமிஞ்சிய உறுதி மின்னியது.

ஆனால் பெண்ணவளின் தலையோ, “அந்த பயம் எனக்கில்லை” என்பது போல இடவலமாக அசைந்தது.

“அப்போ, வேற எத நினச்சு பயமாயிருக்கு?” மாமன் மகளின் கூந்தலை மென்மையாக தடவியபடி கேட்டான் அந்த காதலன்.

“இல்ல… கல்யாணத்துக்கு அப்புறம்…”

“ம்ம்… அப்புறம்?”

“நீ… நீங்களும்… உங்க அப்பா, எங்க அத்தகிட்ட சொன்ன மாதிரி, எங்க வீட்டோட தொடர்பு வச்சிக்க கூடாதுன்னு எங்கிட்ட சொல்லிடுவீங்களோன்னு, எனக்கு பயமா இருக்கு த்தான்.” திக்கித் திணறி என்றாலும் சொல்ல வந்ததை சொல்லியிருந்தாள் ப்ரபா.

“இது பயம் இல்ல… சந்தேகம்… எம்மேல உனக்கு சந்தேகம் வந்துருக்கு பேபி…” ஒருமாதிரியான குரலில், வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்து பேசினான் ரஞ்சித்.

“இல்லத் தான்…”

ஏதோ மறுத்து சொல்ல வந்தவளை தன் வலது கையை உயர்த்தி, “நிறுத்து” என்பது போலச் சொல்லியவன்,

“அப்போ… இந்த சந்தேகத்தால தான், மூனு நாளா எங்கிட்ட இருந்து ஓடி ஒளிஞ்சிருக்க. அப்படித்தான?” வார்த்தைகளை கூரிய அம்பென வீசினான், அந்த மெல்லினத்தைப் பார்த்து.

உண்மையில் இந்த பயம் தானே அவளை அலைக்கழிக்கிறது. அப்படி இருக்கும் போது இல்லை என்று அவளால் எப்படி மறுத்து பேச முடியும். எனவே எதுவும் பேசாமல் பேந்தப் பேந்த முழித்தபடி இருந்தாள்.

“சோ… அப்படியெல்லாம் எதுவும் நடக்காதுன்னு, நான் உங்கிட்ட ப்ராமிஸ் பண்ணனும்னு, நீ நினைக்கிற. அப்டிதான?”

 பதிலேதும் சொல்லாமல், இப்போதும் அமைதியாக இருந்தாள் ப்ரபாவதி.

அவளின் அமைதி அவனை பாதிக்க, “ஓஹ்… விஷயம் அந்த அளவுக்கு போயாச்சா? நீங்க எல்லாம் காரியமாத் தான் இருக்கீங்க. நான் தான் இனா வானா மாதிரி கத்திட்டு இருக்குறேன். ம்ம்…”

காரின் ஸ்டீரிங்கை இருகைகளாலும் பற்றிப் பிடித்து நிமிர்ந்து உட்கார்ந்தவன், “நான் எங்கப்பா மாதிரி செய்யமாட்டேன், என்னை நம்புன்னு உங்கால்ல விழுந்தாத் தான், நம்ம கல்யாணம் நடக்கும்னா…”

வார்த்தைகளை நிறுத்தி, லேசாக இடைவெளி விட்டு, “போடி… நீ எனக்கு வேண்டாம். ” முடிவாகச் சொல்லியவன், சடுதியில் அங்கிருந்து காரைக் கிளப்பினான்.

“அப்டி இல்லத்தான்…” வேகமாக ஏதோ சொல்ல வந்த ப்ரபாவதியை, தன் பார்வையாலேயே நிறுத்தி, காற்றெனப் பறந்தவனின் கோபத்தில், கொஞ்சம் பயம் தான் வந்தது ப்ரபாவுக்கு.

‘அப்படி நான் என்ன சொல்லிவிட்டேன், இவ்வளவு கோபம் வருவதற்கு? என் பயத்தை சொன்னால், அதை போக்குவதை விட்டு விட்டு, இப்படி வேண்டாத அர்த்தம் கற்பித்துக்கொள்வதா? என் எண்ணங்களை இவரன்றி, வேறு யாரிடம் நான் பகிர்ந்து கொள்ள முடியும்?’

மனதிற்குள் புலம்பிக் கொண்டே வந்தவளை, அடுத்த பதினைந்தாவது நிமிடம் அவளுடைய வீட்டு வாசலில் இறக்கி விட்டிருந்தான் ரஞ்சித்.

வழிமேல் விழிவைத்து அனைவரும் வீட்டு வாசலில் தங்கள் பெண்ணிற்காக தவிப்போடும், ரஞ்சித் மீது கோபத்தோடும் காத்திருக்க, சாவகாசமாக காரிலிருந்து இறங்கி, ப்ரபா பக்கத்து கதவைத் திறந்தவனை, அப்படியே கடித்து தின்றுவிடும் ஆத்திரத்தோடு பார்த்துக் கொண்டு நின்றான் சத்யா.

ஆம்… வெறுமனே பார்த்துக் கொண்டு மட்டும் தான் நிற்க முடிந்தது சத்யாவால். தங்கையின் பொருட்டு, வீட்டு வாசலில் வைத்து வீண் ரசாபாசங்கள் எதுவும் வேண்டாமென்று சிறுபிள்ளைக்கு சொல்லுவது போலச் சொல்லி, தனது அண்ணனை இலட்சுமணக் கோட்டுக்குள் நிறுத்தியிருந்தான் அவனின் இளவல்.

ஆனால் அப்படி எந்த கட்டுப்பாடும் இல்லை ரஞ்சித்துக்கு.

எள்ளல் நிறைந்த பார்வையை தாராளமாக சத்யா மீது வழியவிட்டபடியே, “நான் சொன்னமாதிரியே உன் தங்கச்சியை கொண்டு ஒப்படைச்சிட்டேன் முரளி” என்றவன்,

காரிலிருந்து இறங்கி தன்னையே பார்த்துக் கொண்டு நின்றிருந்த மாமன் மகளிடம், எந்த ஒரு வார்த்தையும் சொல்லாமல் வந்த வழியே திரும்பி சென்றிருந்தான்.

 அதை பார்க்கும் போதே, ‘இருவருக்குமிடையே எதுவோ சரியில்லை’ என்று முரளிக்கு தோன்றியது.

 ஆனால் அவன் தங்கையோ வீட்டுக்குள் நுழைந்து, யார் பேசுவதற்கும் இடம் கொடாமல், கல்யாணம் என்று ஒன்று செய்துகொண்டால, அத்தானை மட்டும் தான் செய்து கொள்வேன். இல்லையென்றால் தனக்கு கல்யாணமே வேண்டாம் என்றாள் உறுதியாக.

“போடி… நீ எனக்கு வேண்டாம்” என்றவனோ, ஒரே வாரத்தில் பெற்றோருடன் பெண்கேட்டு மாமன் வீட்டில் வந்து நின்றான்.

ஆமாம்… தான் அமெரிக்கா போகப் போவதாகவும். அப்படிப் போனால் இங்கு திரும்பி வரவேப் போவதில்லை என்றும் மகன் சொன்ன வார்த்தைகளில் மனைவியோடு தம்பதி சமேதராக, தன் மைத்துனன் வீட்டுக்குப் பெண் கேட்டு வந்திருந்தார் இராஜசேகரன்…