“ம்ம்... இதோ வரேன் க்கா” என்றபடியே நகர்ந்தவர், “சாம்பார்ல காரத்தை அள்ளி தட்டிராத.” போகிறபோக்கில் மருமகளிடம் சொல்லிக் கொண்டு, “பிள்ளை கவனம்” என்று எச்சரித்து விட்டே சென்றார்.
அவர் சென்றதும் கதவடைத்துக் கொண்டு உள்ளே வந்த ரேவதி, முதல் வேலையாக ஃபோனில் தன் அம்மாவிற்கு அழைத்தாள்.
மறுபக்கம் அழைப்பை ஏற்ற அவள் அம்மா மேகலா, “என்னடி, இந்நேரத்துக்கு ஃபோன் பண்ணுற? உன் மாமியாக்காரி வீட்ல இல்லையா?” என்று மிகச் சரியாக கேட்டார்.
“ஹ்ம்ம்… ஆமாம் ம்மா” என்று வீட்டில் நடந்த அத்தனையையும் சொல்லியவள், “நீங்களே சொல்லுங்கம்மா, இந்த மொத்த கும்பலுக்கும், நான் ஒரு ஆளா எப்படி வடிச்சி கொட்ட முடியும்?”
“இப்போ வைஷு தூங்குறா. அவ முழிச்சிட்டான்னா, அவளையும் கவனிச்சிட்டு சமைக்கிறது கஷ்டம். இதே நாங்க தனியா இருந்தா, எனக்கு இந்த தொல்லை உண்டா சொல்லுங்க?” மனக்குமுறலோடு தன் ஆசையையும் சேர்த்து பெற்றவளிடம் கொட்டினாள் ரேவதி.
“அடியேய்… இப்போ நான் அங்க இருந்தேன்னா உம்முதுகுல நாலஞ்சு அடி நல்லா போடுவேன்… தனிக்குடித்தனமாம் தனிக்குடித்தனம்… இப்டி ஏடாகூடமா ஏதாவது சொல்லி, உன்தலையில நீயே மண்ணள்ளி வச்சுக்காத.”
“இப்போ நீங்க தனியாப் போனா உம்புருஷனுக்குத் தான் வீட்டு வாடகை, சாப்பாட்டு செலவுன்னு ஏகப்பட்ட செலவு வரும். கேஸ்ல ஜெயிச்சு அந்த இடமும் கிடைச்சதுக்கு அப்புறம், அதுல வீடு வைக்கும் போது, எனக்கு தனிவீடு வேணும்னு கேட்டு, பொதுச்செலவுல வீடு வச்சி தனியாப் போ. அதுவரைக்கும் பல்லக்கடிச்சிட்டு ஒண்ணாவே இருந்துடு.”
சூத்திரதாரியாக மாறி, மேகலா மகளுக்கு அறிவுரைகளை அள்ளி வழக்க, ரேவதி ம்ம்… கொட்டிக் கொண்டிருக்கையில் வீட்டின் அழைப்பு மணி அடித்தது.
‘யாராக இருக்கும்?’ யோசனையோடே கதவைத் திறந்தவள், அங்கு நின்றிருந்த தன் கணவனை எதிர்பார்க்கவில்லை என்பதை விரிந்த அவள் விழிகளே சொல்லியது.
“நீங்களா!?” அவளையும் மீறி வார்த்தை ஆச்சர்யமாக வந்து விழுந்தது.
“ஏன், வரக்கூடாதா?” இலகுச் சிரிப்போடு உள்ளே வந்தான் முரளி.
“இல்ல… இந்நேரத்துக்கு ஒருநாளும் நீங்க வந்ததேக் கிடையாதா அதான்…” என்று இழுத்தவள், “எதையும் எடுக்க வந்தீங்களா?” என்று கேட்டாள்.
“ஏன்? அதுக்காக மட்டும் தான் வீட்டுக்கு வருவாங்களா?” மனைவியின் தலையை பிடித்து சிரிப்போடு லேசாக ஆட்டியவன்,
“தவம் பெரியம்மா கூட போறதா அம்மா ஃபோன் பண்ணி சொன்னாங்க. கூடவே இன்னைக்கு ரேவதி சமையல் ன்னும் சொன்னாங்களா, வைஷூவை வச்சிட்டு நீ எப்டி தனியா சமைக்க முடியும்னு எனக்கு தோணிச்சு. அதான் உனக்கு ஹெல்ப் பண்ணலாம்ன்னு அப்பாவை கடையில உக்கார வச்சிட்டு வந்துருக்கேன். வைஷு எங்க? இன்னும் தூங்குறாளா?” தான் வந்த காரணத்தை, முரளி சொல்ல, மயக்கம் வராத குறை தான் ரேவதிக்கு.
சிறிது நாட்களாக, தன்மீது கணவனுக்கு பாசம் குறைந்தே விட்டது என்ற எண்ணம் மேலோங்கியிருக்கும் வேளையில், தனக்கு உதவி செய்வதற்காக வந்து நிற்கும் கணவனை பார்க்கும் போது நெஞ்செல்லாம் பூரித்துப் போனது ரேவதிக்கு.
“பாப்பு நல்ல தூக்கம். வா… வா… அவ முழிக்கிறதுக்கு முன்னாடி வேலையை பாத்துடலாம்.” தங்கள் அறையை எட்டிப் பார்த்துச் சொன்ன முரளி, மனைவியின் கையைப் பற்றி இழுத்தபடி சமையலறைக்குச் சென்றான்.
“நான் பொரியலுக்கு காய் நறுக்கித் தரேன், நீ பருப்பை அடுப்புல வச்சிட்டு, சாம்பாருக்கு காயை நறுக்கு” என்றபடியே கிட்சன் திண்டில் இருந்த முட்டகோஸை எடுத்து லாவகமாக நறுக்க ஆரம்பித்தான்.
அதை பார்த்துக் கொண்டிருந்த ரேவதி, மூச்சு விட மறந்தவளாய் கணவனைப் பார்த்தது பார்த்தபடி சிலையென சமைந்து போய் நின்றாள்.
“ஓய்… என்னை சைட்டடிக்கவா உங்கிட்ட சொன்னேன்?” பக்கத்தில் பாத்திரத்தில் இருந்த தண்ணீரில் கையை நனைத்து மனைவியின் முகத்தில் முரளி தெளிக்க,
சட்டென்று தெளிந்தவள், “இல்ல… எனக்கு கூட இவ்வளவு அழகா காய் நறுக்க தெரியாது. நீங்க எப்டி இவ்வளவு அழகா நறுக்குறீங்க?”
“இது பெரிய கம்ப சூத்திரம் பாரு. நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி, நான் அடிக்கடி அம்மாவுக்கு காய் கட் பண்ணி குடுப்பேன்.”
வாய் பேசினாலும் கை அதன் பாட்டுக்கு வேலை செய்து கொண்டிருந்தது முரளிக்கு.
“ஓஹ்…அப்போ அம்மாவுக்கு மட்டும் தான் உதவி செய்வீங்க? பொண்டாட்டிக்கெல்லாம் செய்யமாட்டீங்க?”
“செய்யலாமே… நீ போய் கடையைப் பாரு. நான் இந்த வேலையைப் பாக்கிறேன்.”
சட்டென்று பதில் சொல்லியவன், லேசாக அதிர்ந்து போய் தன்னைப் பார்த்த மனைவியிடம், “ம்ப்ச்… ஏதாவது ஏடாகூடமா பேசி என்னை மூட் அவுட் பண்ணாத ரேவதி” என்று சொன்னான்.
அவனையே ஒரு நிமிடம் பார்த்து நின்றவள், “நீங்க முன்ன மாதிரி இல்லைங்க.” தைரியமாகச் சொல்ல,
“நீயும் தான் முன்னமாதிரி இல்ல ரேவதி” என்றான் கணவன் பளீரென்று.
பின் என்ன நினைத்தானோ தெரியவில்லை, குரலை தாழ்த்தி, “புரிஞ்சுக்கோ ரேவதி. இங்க வீட்ல நாம மட்டும் இல்ல. கல்யாண வயசுல தங்கச்சி இருக்குறா. அந்த வயசத் தாண்டியும் கல்யாணம் செய்துக்காம என்னோட அண்ணா இருக்கிறான்.”
“அதிலும், அண்ணனுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணி, ஒரு குழந்தையும் பெத்து வச்சிருக்கேனேன்னு எனக்கே கொஞ்சம் கில்டியா ஃபீலாகுது. இதுல நீ வேற இப்டி சொல்லி என்னைக் கஷ்டப்படுத்தாத ரேவதி” என்று தன் மனநிலையை தெளிவாகச் சொன்னான் முரளி.
“அதுக்கு தான் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் நாம தனிக்குடித்தனம் போய்டலாம்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க ப்பா?”
தாயின் போதனையையும் மீறி கூட்டுக்குடும்பம் என்னும் தளையை அறுத்தெறிந்து விட்டு, கணவன், குழந்தையோடு சுதந்திர வானத்தில் பறக்கும் ஆவலில் ரேவதி வாயை விட்டுவிட்டாள்.
“அப்படி ஒன்னு நடந்திரும்னு நீ கனவு கூட காணாத ரேவதி. நீ தலையால நின்னு தண்ணி குடிச்சாலும் அது மட்டும் இந்த ஜென்மத்துல நடக்காது.”
உறுதியான குரலில் சொல்லியவன், குழந்தையின் சிணுங்கலில், கைகளை அவசரமாக கழுவிக் கொண்டு தங்கள் அறைக்குள் சென்றான்.
போகும் கணவனையே விழிகள் தெறித்துவிடும்படி பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் ரேவதி.
************************
“இந்த இடத்தில தான் சிவகாமி அம்மா டான்ஸ் பண்ணியிருப்பாங்களோ? தோ… அந்த பாறையை மகேந்திரவர்ம பல்லரின் கை தொட்டிருக்குமா? இந்த கடல் மணல்ல கால் புதையப் புதைய நரசிம்மவர்ம பல்லவர் நடந்திருப்பாருல்ல?”
கண்கள் விரிய, ரசனையோடு சொல்லிக்கொண்டிருந்த ப்ரபா, தன் அத்தானோடு கடல் மல்லையில் கால் நனைத்துக் கொண்டிருந்தாள்.
ம்ம்… வழக்கம் போல ஞாயிற்றுக்கிழமையில் ப்ரபா களப்பணிக்காக மாமல்லபுரத்திற்கு பக்கத்தில் வந்திருக்க, “உங்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்” என்று சொல்லி ப்ரபாவை, மாலை வேளையில் மாமல்லபுரத்திற்கு அழைத்து வந்திருந்தான் ரஞ்சித்.
“மகேந்திரவர்மரும், நரசிம்மவர்மரும், பல்லவ சாம்ராஜ்யத்தின் மன்னர்கள். நாம நிக்குற இந்த கடற்கரை கோயில் அமைய காரணமா இருந்தவங்க. ஆனா நீ சொன்ன சிவகாமி அம்மா யாரு? எனக்குத் தெரியாதே.”
“அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம், நீங்க வாசிச்சது இல்லையா த்தான் ?” சிறு புன்னகையோடு கேட்ட ரஞ்சித்தின் கேள்விக்கு, படபபடவென்ற குரலில் பதில் கேள்வி கேட்டாள் ப்ரபா.
“அதே போல என்னை கல்யாணம் பண்ணனும்னா, நீங்க சிவகாமியின் சபதம் படிக்கணும்னு நான் சொல்லப்போறேன் த்தான்.” என்றாள் ப்ரபா.
“ஓஹ்… அவ்வளவு பெரிய அப்பாடக்கரா நீங்க?”
“இல்லையா பின்ன… இளம் தொழிலதிபர் ரஞ்சித் அவர்கள் என்னை சுத்தி சுத்தி வரும்போதே அது தெரியலையா உங்களுக்கு?”
“எல்லாம் என் நேரம் டி…”
அவளின் விளையாட்டு பேச்சில் ஏதோ சொல்ல வாயைத் திறந்தவன், வாயை மூடிக்கொள்ள, கலகலத்துச் சிரித்த ப்ரபா,
“ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொல்லி என்னை இங்க கடத்திட்டு வந்துட்டு, எதுவுமே சொல்லாம இருந்தா எப்படி த்தான். சீக்கிரம் சொல்லுங்க, வீட்டுக்கு போகணும்.”
சலுகையாக சொல்லியவளை ஆழ்ந்து பார்த்தவன், “நம்ம விஷயத்தை நான் வீட்ல சொல்லிட்டேன் ப்ரபா” என்று சொல்ல,
“என்னது? சொல்லிட்டீங்களா? ஏன் இப்படி அவசரப்பட்டீங்க த்தான்.” அழுது விடுபவளைப் போல் கேட்டவளை, ஒரு மாதிரியாக பார்த்த ரஞ்சித், “ஏன் ப்ரபா? உனக்கு என்னை கழட்டி விட்டுரணும்னு ஏதாவது ஐடியா இருக்கா, என்ன?” என்று கேலியாக கேட்டான்.
அவன் கேள்வியில் சட்டென்று கடல் மணலில் அமர்ந்த ப்ரபா, “என்ன கேள்வி கேட்டுட்டீங்க த்தான்? அந்த மாதிரி எண்ணத்திலயா நான் உங்க கூட பழகுறேன்னு நீங்க நினைக்கிறீங்க?” புன்னகையைத் தொலைத்திருந்தவளின் முகம் நொடியில் தன் சோபையை இழந்திருந்தது.
அவள் கையைப்பற்றி எழுப்பியவன், உரிமையாக பெண்ணவளின் இடையணைத்து நடந்தபடியே, “அப்போ நான் வீட்ல சொல்லிட்டேன்னு சொன்னதும் நீ ஏன் ஷாக் ஆன?”
“நீங்க தெரிஞ்சு இந்த கேள்வியை கேக்கிறீங்களா? இல்லை தெரியாமத்தான் கேக்குறீங்களான்னு எனக்கு தெரியலை த்தான். சத்யா ண்ணா சுபா அண்ணி பிரச்சினை…”
“அப்போ நம்ம விஷயம் வீட்டுக்கு தெரிஞ்சு, உங்கண்ணன் என்னை விட்டுருன்னு சொன்னா, நீ என்னை உதறிட்டு போய்டுவியா?” பேச வந்தவளை பேசவிடாமல் இடைமறித்தவனின் குரலில், கோபம் சற்றே தனது சுருதியை கூட்டியிருந்தது.
“அதெப்படி நான் உங்களை விட்டு கொடுக்க முடியும் த்தான்?”
இடையிலிருந்த தன் கையை விலக்க முயன்றவளின் முயற்சியை இலகுவாக முறியடித்தவன், இன்னும் நெருக்கமாக அவளை தன்னோடு இழுத்தான்.
“ச்சு… விடுங்கத்தான்… பப்ளிக்ல வச்சு என்ன பண்ணுறதுன்னு இல்லாம…” சிணுங்கியவளிடம்,
“இப்டியே இரண்டு பேரும் உங்க வீட்டுக்கு போய் நம்ம விஷயத்தை ஓப்பன் பண்ணிடுவமா பேபி?”
காரியத்திலேயே கண்ணாக நின்றவன், சட்டென்று மெல்லியக்குரலில் சிரித்தபடியே, “அந்த வேலையைக் கூட நமக்கு கடவுள் குடுக்கல பேபி.” அவள் காதருகில் சரிந்து சொன்னான். முகமோ சிரிப்பில் மலர்ந்திருந்தது.
“நீங்க இவ்ளோ சந்தோஷப்படுற அளவுக்கு, நமக்கு கடவுள் அப்படி என்ன ஹெல்ப் செய்துட்டார்?”
“அங்க பாரு பேபி. நம்ம விஷயம் உன் வீட்டுக்கு தெரிஞ்சாச்சுன்னு வச்சுக்கோ.” இளநகையோடு சொல்லியவனின் பார்வையை தொடர்ந்த பாவையவளின் காலுக்கடியில் பூமி நழுவியது.
அங்கே அவளுடைய அண்ணன் சத்யநாதன் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்…