*10*

இரண்டு பயணப் பைகளில் தனக்குத் தேவையானதை அடைத்து வைத்திருந்தாள் செண்பகா. தங்கள் கடையிலிருந்து அவள் புழங்கத் தேவையான அனைத்தையும் ஒரு கட்டைப்பையில் எடுத்துக்கொண்டான் வளவன்.

“எதுக்குண்ணா இவ்ளோ? அங்க போய் வாங்கிக்கலாம்ல.” பையின் கொள்ளளவை மீறி அங்குமிங்கும் இறுக்கமாய் இழுத்துக் கட்டப்பட்டிருந்த பையின் மேல் நுனியை லேசாக பிரித்துப்பார்த்தவள் அதில் குளிக்கத் தேவையான பக்கெட், மக் இருப்பதைப் பார்த்துக் கேட்டாள்.

“நம்ம கடையிலேயே எல்லாம் இருக்குறப்போ எதுக்கு வெளில வாங்கணும். டிரையின்ல தான போறோம். பாத்துக்கலாம்டா.” 

“நானும் வரவா வளவா மூணு பை இருக்கே. ஒருநாள் கடையடைச்சிக்கலாம்.” என்ற வையாபுரியை ஒத்து, “எல்லாரும் போலாமே.” என்றார் அமுதா. 

“எல்லாரும் எதுக்கு? நீங்க ரெண்டு பேரும் அலைய வேண்டாம். அண்ணன் ரெண்டு பை எடுத்துக்கும். நான் ஒன்னு எடுத்துப்பேன். வெய்ட் இல்லை.” என்ற மகளை பிரியும் நேரம் நெருங்க நெருங்க பெற்றவர்கள் மனம் சோர்வாய் உணர்ந்தது. அவர்களை சமாதானப்படுத்தி அண்ணன் தங்கை இருவரும் சென்னை நோக்கி பயணப்பட்டனர். 

இரயிலில் தாம்பரம் வந்திறங்கி அங்கிருந்து பேருந்தில் அவள் தங்கும் இடம் வரவும்தான் வளவன் முன்கூட்டியே முன்பணம் கட்டிய விஷயம் செண்பகாவிற்குத் தெரிந்தது.

“ஏன் நான் கட்டிக்க மாட்டேனா?”

“ஏன் நான் கட்டக்கூடாதா?” என்று இருவரும் வாக்குவாதம் செய்து சமாதானமாகினர். 

செண்பகா தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று பைகளை வைத்துவிட்டு வந்தாள். வேறெதுவும் வேண்டுமா என கேட்டுக்கொண்டவன் அவளுடன் வெளியே சென்று உண்டுவந்தான். பெண்கள் விடுதி என்பதால் வெகு நேரம் அங்கிருக்க சங்கடப்பட்டு பின்மாலைப் பொழுதில் என்ன தேவையென்றாலும் உடனே தனக்கு அழைக்கும்படி ஆயிரம் பத்திரம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான். வெகு அருகில்தான் ரத்னதீபன் இருக்கிறான் என்று விமல் சொன்ன தகவலை தங்கையிடம் பகிரவில்லை. அவளுக்குமே கணவன் சென்னையில் வீடு பார்த்திருக்கிறான் என்றளவில்தான் தெரியுமே தவிர எங்கு என்றெல்லாம் தெரியாது.

தனித்து இருக்கப்போகும் வருத்தமும் புது ஊரை தெரிந்துகொள்ளும் ஆர்வமுமாய் இருந்தவளை இதைச் சொல்லி கலையிழக்க வைக்க விரும்பவில்லை அவன். ஆனால் ரத்னதீபனுக்கு அழைத்து இதுபோன்று தங்கையை விடுதியில் சேர்த்துவிட்டிருக்கிறேன் என்று சொல்லிவிட்டான். தங்கை வாழ்க்கைக்காக பேசிய நீ நான் இங்கிருக்கும் போதே தங்கையை விடுதியில் விட்டதை சொல்லவில்லையே என்று ரத்னதீபன் கேட்டுவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை. நீ சொன்னாய் நான் கேட்டேன் என்ற பாவனையை மட்டும் வெளிப்படுத்திய ரத்னதீபன் வேறெதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. என்ன நினைக்கிறான் என்று வெளிப்படுத்தவும் இல்லை. குழப்பமான மனநிலையில் ஊருக்கு திரும்பினான்.

வீட்டினரைப் பிரிந்து கழித்த இரவு புதுவித அனுபவத்தை கொடுக்க, அவளுடன் அறை பகிர்ந்துகொண்ட பெண்ணிடம் அறிமுகமாய் பேசிக்கொண்டாள். அவள் வேலைக்கு செல்லப்போகும் கிளை எங்கிருக்கிறது அத்தியாவசிய பொருட்கள் எங்கு வாங்கிக் கொள்ளலாம் போன்ற தகவலை கேட்டறிந்துக் கொண்டாள்.

மறுநாள் புத்துணர்ச்சியுடன் கிளம்பிச் சென்றவள் மனதில் ஒரு ஓரமாய் ரத்னதீபன் இந்த ஊரில் இருக்கிறான் என்ற எண்ணம் வந்தது. என்னவோ அவனே அருகில் இருப்பது போன்ற உணர்வு வியாபிக்க அவ்வுணர்வே அவளின் அமைதியை குழப்பும் விதமாய் நெருடல் கொடுத்தது. கடினப்பட்டு அதனை உதறித் தள்ளியவள் புதிதாக சேர்ந்த இடத்தில் தன்னை பொருத்திக்கொள்ள முயன்றாள். புது அலுவலகக் கிளையில் எவ்வித பிரச்சனைகளும் இன்றி அந்நாள் செல்ல ஆர்வமுடன் வீட்டினருக்கு அழைத்துப் பேசினாள். மகளுக்கு பெரிதாக சிரமம் இல்லை என்று ஆசுவாசப்பட்டுக்கொண்ட வையாபுரி தம்பதியினரின் அமைதியை பந்தாடும் விதமாய் இருநாட்கள் கழித்து வந்தது அவ்வழைப்பு. 

மருதுவும் அபிராமியும் வையாபுரி அமுதாவுக்கு தனித்தனியாய் முறையாக ரத்னதீபன் பார்த்திருக்கும் வீட்டிற்கு பால் காய்ச்ச அழைப்பு விடுத்தார்கள்.

“இவ்ளோ நாள் பிரிஞ்சி இருந்துட்டாங்க இனியாச்சும் சண்டை சச்சரவு இல்லாம நல்லா இருக்கணும் ரெண்டு பேரும். நாம போய் குடி வச்சிட்டு வந்துருவோம் அதுக்கப்புறம் அடிச்சிக்குறதும் சேர்ந்துக்குறதும் அவங்க பாடு.” என்று மறுவாரத்தின் முதல் நாளான திங்களன்று வைத்துக்கொள்ளலாம் என்று சொல்ல, அயற்சியாகிவிட்டது வையாபுரி தம்பியினருக்கு.

“சேர்த்து வைக்குறதா? பாப்பா ஒத்துக்கணுமே… போகமாட்டேனுல சொல்லுவா. அவ போவாம நாம மட்டும் போறதா? அது எப்படி சரியா வரும்? முறையா கூப்புட்டாங்களே அந்த மரியாதையை உதாசீனப்படுத்துன மாதிரியும் இருக்கக்கூடாது. நாளைக்கே எல்லாம் சரியாக்கிடுச்சுன்னா நாம போவாம விட்டது கடைசி வரைக்கும் ஒரு சொல்லுக்கு இடம் கொடுத்துடும். நாமளே அவங்க ரெண்டு பேர் சேர்றதுல ஆர்வம் காட்டாத மாதிரி ஆகிடும். மொத்தமா வேண்டாம்னு இருக்கோம்னு நினைச்சிப்பாங்க.” என்று கவலைப்பட,

“மாப்பிள்ளை கூப்பிடாம பாப்பா போவான்னு நம்பிக்கை இல்லை. அவ இல்லாம நாம மட்டும் போனா பிரச்சனை பெருசாகும் அப்பா. இன்னும் மனக்கசப்புதான்.” என வளவனும் உரையாடலில் சேர்ந்துகொண்டான்.

“பாப்பாவை சமாதானப்படுத்தி கூட்டிட்டு போயிடலாம்டா.” என்றார் அமுதா.

“எப்படி ம்மா? இதுவரைக்கும் அங்க எதுவும் விசேஷம்னா போய்ட்டு உடனே வந்துருவா அதனால ஏதோ போக வரன்னு இருந்தா. இப்போ அப்படி இல்லையே. பால் காய்ச்சிட்டு இவ கிளம்பனும்னு நிப்பா. எல்லாரும் பாப்பா மேலதான் அதிருப்தி ஆவாங்க.” என்றான் வளவன்.

“அந்த வீட்ல இருக்கக்கூடாதுனு தான ஹாஸ்டல்ல போய் தங்கியிருக்கா… அவ்வளவு சீக்கிரம் இந்த சண்டையெல்லாம் சரியாகாதுனு அவங்களுக்கும் தெரியும் இருந்தாலும் என்னவோ எல்லாம் சரியா இருக்குற மாதிரி இப்படி தகவல் சொன்னா பாப்பாவை சமாதானப்படுத்தி நாம கூட்டிட்டு வரணும்னு சொல்லாம சொல்றாங்கன்னுதான அர்த்தம்.” என ரத்னதீபன் பெற்றோர் பேசிய விதத்தின் இன்னொரு கோணத்தை யோசித்து சொன்னார் வையாபுரி.

“ரெண்டு வருஷ சண்டையை இந்த ஒரே வாரத்துல முடிச்சி வைக்குறது எல்லாம் நடக்காத காரியம்.” என்று கைவிரித்தான் வளவன். 

இந்த பக்கம் அந்த பக்கம் என்று எந்த பக்கமும் போக முடியாமல் தள்ளாடித் தடுமாறினார்கள். என்ன செய்வது என்று புரியவில்லை. அவர்கள் கையில் இருக்கும் ஒரே வழியாக தங்கள் வீட்டுப்பெண்ணை நாடினார்கள். இப்படி என்று அவள் காதில் விஷயத்தை போட்டு,

“எல்லாம் கைகூடி வருது. நீயும் அங்க இருக்க. உன் உரிமையை விட்டுட வேணாம். என்ன கோவம்னாலும் கூட இருந்து மாப்பிள்ளைக்கிட்ட சண்டை போடு.” என்று வையாபுரி பேசினார்.

மகள் வாயே திறக்கவில்லை. ஏற்கனவே மாமியார் தேதி அனுப்பிவிட்டார். வீட்டிலிருந்து ஏதாவது பேச்சுக்கள் வரும் என எதிர்ப்பார்த்திருந்தவளுக்கு அவர்களுக்கே அழைப்பு செல்லும் என எதிர்பார்க்கவில்லை. இனி தன்னை பேசி பேசியே பணிய வைத்துவிடுவர் என்றெண்ணியவளுக்கு அவளையும் அறியாமல் கண்கள் கலங்கி மூக்குறிஞ்சிவிட, அந்தச் சத்தம் கேட்டு முகம் கசங்க அலைபேசியை மனைவியிடம் கொடுத்தார் வையாபுரி, “அழுவுது நீயே பேசு.” 

“பாப்பா என்னடா…” அமுதாவும் கலங்கிப் பேச,

“அண்ணன்கிட்ட போன் கொடு.” 

அலைபேசி வளவனிடம் மாறியது, “என்ன பாப்பா அழற?”

“நீ சொல்லு நான் என்ன பண்ணட்டும். அவர் என்னை கண்டுக்காம இருக்குறதையும் மறந்து நான் முன்ன போய் நிக்கவா?” என அழுகுரலில் கேட்க, அதற்கு மேல் என்ன சொல்லுவான்? ஊருக்கு செல்லும் முன்னமேதான் அண்ணன் மனதில் தன் மனக்குமுறலை பதிய வைத்துச் சென்றாளே… அதை மீறி அவளை கட்டாயப்படுத்தவில்லை.

“சரிடா நீ வேணாம். கூப்பிட்ட மரியாதைக்கு நாங்க போறோம். நீ வரலைன்னு கேப்பாங்க. அதுக்கு மட்டும் பதில் ரெடி பண்ணிக்கோ.” என இவன் இறங்கி வர, இந்தளவிற்கு தன்னை நெருக்கவில்லையே என்று ஆசுவாசம் கொண்டாள் பெண். பின் பொதுவாக பேசிவிட்டு வைக்க,

“என்னடா இப்படி சொல்ற? பாப்பா வராம நாம மட்டும் போய் நின்னா எவ்ளோ பெரிய பிரச்சனை வரும் தெரியுமா?” வையாபுரி பதற,

“பிரச்சனை வரட்டும் ப்பா.” என்றான் வளவன் அழுத்தமாய், “குடும்பத்துல எல்லாரும் வருவாங்கல்ல பிரச்சனை ஆகட்டும் பேசிக்கலாம். அப்படியாவது இந்த கண்ணாம்பூச்சி ஆட்டத்துக்கு முடிவு வரட்டும். எல்லாரும் பேசிதான கல்யாணம் நடந்துச்சு. இப்போவும் எல்லாரும் பேசியே என்ன பண்றதுனு பாக்கலாம். இப்போ விட்டா அப்புறம் மாப்பிள்ளையை குடும்பத்தோட புடிக்குறது கஷ்டம். இந்த சான்ஸ் திரும்பக் கிடைக்காது. அவங்களும் என்ன ஐடியால இருக்காங்கனு தெரிஞ்சிக்கலாம். ஒருவேளை நம்ம இருக்கோம்னு பாப்பா வரலாம் அப்படியே சமாதானம் செய்ய முடியுதான்னு பாக்கலாம்.” என்று வளவன் இதுதான் சரியாக வரும் என்பது போல் தீர்மானமாய் சொல்ல, அமுதாவுக்கு ஏதோ நடக்கப்போகிறது என மனது அடித்துச் சொல்லியது.

எப்படியும் மருமகளை சரிக்கட்டி அவள் குடும்பத்தினர் அழைத்து வந்துவிடுவர், அவர்களுக்கும் அவர்களின் மகளின் வாழ்க்கை மீது அக்கறை இருக்கும் என அலட்சியமாக இருந்த ரத்னதீபன் குடும்பத்தினருக்கு பெருத்த அடியாய் மூவர் மட்டும் வந்து நின்றனர். முதல் நாளே ரத்னதீபன் கட்டளையின் பேரில் பரந்தூர் வீட்டிலிருந்த செண்பகாவின் சாமான்களையும் அவர்களின் கட்டில் மெத்தை போன்றவற்றையும் புது வீட்டில் வந்து இறக்கி விட்டுச்சென்றிருந்தனர் மருதுவும் விமலும். விடியற்காலையே கிளம்பி குடும்பத்துடன் வந்துவிட்டனர்.

“உன் அண்ணிதான் முன்ன வந்து எல்லாம் செய்யணும். இன்னும் ஆளக் காணும் பாரேன்.” என மகள் திவ்யாவிடம் முகம் தூக்கியபடி பால் காய்ச்ச தயார் செய்துகொண்டிருந்தார் அபிராமி.

“கல்யாணம் ஆகி வந்ததுலேந்து கடமைக்குதான் எல்லாம் செய்யுறாங்க. இதுக்கு அதுகூட இல்லை.” என முனகிய திவ்யாவிற்கும் அதே எண்ணம்தான். அவள் மகனை விமலிடம் விட்டுவிட்டு சுவாமி படங்களுக்கு பூ வைத்துக்கொண்டிருந்தாள்.

அரசியல் பணி குறித்த யோசனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு குளித்துக் கிளம்பி ஜம்மென்று தங்கை மகனுடன் சுற்றிக்கொண்டிருந்தான் ரத்னதீபன். 

“அந்த லாரி எல்லாம் புடிச்சி வேளச்சேரி மக்கள்கிட்ட நீங்கதான் இப்போ ட்ரெண்டிங் டாப்பிக் மச்சான். இப்படியே மெயின்டைன் பண்ணுனீங்கன்னா சீக்கிரம் அமைச்சரவைல இடம் புடிச்சிடலாம். உங்களுக்காக ஒரு ஃபேன் பேஜ் ஓபன் பண்ணி உங்க வீடியோஸ் எல்லாம் மாஸ் பீ.ஜி.எம் போட்டு எடிட் பண்ணி ட்ரெண்ட்ல விட்டிருக்கேன். பாத்தீங்களா?” என தன் வழமையை எடுத்துவிட்டுக் கொண்டிருந்தான் விமல்.

அவனிடம் பொதுவாக மேலோட்டமாக பேசிக்கொண்டிருந்த ரத்னதீபனின் பார்வை வாசலுக்கு அவ்வப்போது சென்றுவர, விமல் கண்டுகொண்டது போல் சிரித்து  வைத்து, “என்னடா இன்னும் கரை வேட்டி அரசியல் உரை நோக்கி போகலையேன்னு பாத்தேன். ‘பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க, காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க…” என லேசாக பாடவே செய்ய பட்டென பார்வைக்கு கடிவாளமிட்டு கமலை தூக்கிக்கொண்டு நகர்ந்துவிட்டான் ரத்னதீபன்.

‘இருக்கு இன்னைக்கு ஒரு சீன் இருக்கு.’ குதூகலமாய் நினைத்துக்கொண்டவன் ஆர்வத்தில் வளவனுக்கு அழைத்துவிட்டான்.

“என்ன வளா வர வழிய காணும்?” 

“டிரையின்லேந்து இறங்கி பஸ்க்கு வெய்ட் பண்றோம்.” என்று சொல்ல,

“கமல் நசநசன்னு இருந்தான் அதுனால வாடகை கார் புடிச்சிதான் வந்தோம். இருங்க நானே பிக் பண்ண வரேன்.” வளவன் மறுக்க மறுக்க, வீட்டினரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான் விமல். ஓரக்கண்ணால் ரத்னதீபனை பார்க்க, அவன் முகம் பளிச்சிட்டு போல் இருந்தது. 

‘பீஸ் போற பல்பு பிரகாசமா எரியுமாம் அப்படி இருக்கு மச்சான் முகம்.’ தனக்குள் சொல்லிக்கொண்டே நகர்ந்தான். எப்படியும் செண்பகா வந்திருக்க மாட்டாள் என்பதில் அத்தனை திண்ணம். செண்பகாவை விடுதியில் விட்டு வந்தபின் வளவன் பேசியதை வைத்தே இது பெரிதாக என்றோ வெடிக்கப்போகிறது என்று யூகித்தவன் அது இன்றே நடக்கப்போகிறது என்றதில் சமரசம் செய்ய ஏதுவாக தன்னை தயார்படுத்திக்கொண்டான். என்ன அதற்கு ரத்னதீபன் வாய்ப்பே கொடுக்கவில்லை.

செண்பகாவைத் தவிர்த்து அவள் குடும்பத்தினர் மூவர் மட்டும் விமலுடன் வந்து நிற்க, தாடையிறுக அழுத்தமாய் பார்த்தான் ரத்னதீபன். வையாபுரியும் அமுதாவும் அங்கு சங்கடமாக நிற்க, மருமகள் வரவில்லை என்றதும் மருதுவும் அபிராமியும் பெயருக்கு சம்மந்தியை வரவேற்று அழைத்ததோடு நிறுத்துக்கொண்டனர். பெரிதாக பேச்சுக்கள் வைத்துக்கொள்ளவில்லை. ஆளுக்கு ஓரிடத்தில் முகம் தூக்கி ஏதோ வேலை செய்வது போல் காட்டிக்கொண்டனர். 

தாங்கள் மூவரும் உள்ளே நுழைந்ததும் வாங்க என்று அழைத்த ரத்னதீபனின் பார்வை தங்களின் பின் செல்வதை கண்டுகொண்ட வளவன், மெல்ல அவனை நெருங்கி, “நீங்க ஒரு வார்த்தை கூப்பிட்டா வந்துடுவா.” என்று சொல்ல,

‘மகாராணிக்கு நான் வெத்தலை பாக்கு வச்சி கூப்பிடணுமா?’ என்று மனதிற்குள் கருவிக்கொண்டவன் எண்ணவோட்டத்தை கணித்தது போல் வந்த விமல்,

“வெளில புலியாவே இருந்தாலும் வீட்டுக்குள்ள வந்துட்டா எலியா மாறிடணும். இல்லைனா இந்த பொண்டாட்டிங்க பூனையா மாறி நம்மள அவங்களோட லன்ச் ஆக்கிடுவாங்க. மானம் ரோசம் பாக்காம பட்டுனு விழுந்துடுங்க, எங்க வாழ்க்கைலாம் அப்படிதான் போகுது. உங்க மச்சானை அப்படி முறைச்சு பாக்காதீங்க அவர் சிங்கிள் அவருக்கு இந்த சூட்சுமம் எல்லாம் தெரியாது.” என்று கிண்டல் போல் பேச, இருவரும் சேர்ந்து அவனை முறைத்தனர்.

“ஃப்ரீ அட்வைஸ் கேட்டா கேளுங்க கேட்காட்டி போங்க.” என அவன் தோள்களை குலுக்கவும் வளவனை முறைத்துப் பார்த்த ரத்னதீபன், “அட்ரஸ்?” 

வளவன் விலாசம் சொல்லவும், விருட்டென கிளம்பிவிட்டான் ரத்னதீபன். 

“செண்பாவை கூப்பிட மச்சானே போயிருக்காரு. அப்புறம் எதுக்கு எல்லாம் மூஞ்சை தூக்கிட்டு இருக்கணும். ஆக வேண்டியதை பாக்கலாம்.” என விமல் சொல்லவும்தான் இலகுவானார்கள்.

அதுவரை எதுவும் சொல்ல முடியாமல் தவித்துத் தயங்கி மகளுக்காக அமைதியாக நின்ற அமுதா அபிராமியுடன் பேசிக்கொண்டு ஆக வேண்டிய வேலைகளில் இறங்கிவிட்டார். வையாபுரி மருதுவிடம் பேச, இறுக்கம் குறைந்தது. எப்படியோ சரியானால் சரி என்று ஆசுவாச மூச்சுவிட்டான் வளவன்.

“அவ்ளோதான் ப்ராப்லம் சால்வ்ட். நாந்தான் சொன்னேன்ல செண்பா பக்கத்துல இருந்தா சேர்க்கிறது ஈஸின்னு.” விமல் வளவனுடன் ஒன்றிவிட்டான். 

நெரிசலில்லாத அந்தக் காலை வேளையில் பத்தே நிமிடங்களில் இருசக்கர வாகனத்தில் அவள் தங்கியிருக்கும் விடுதிக்கு சென்றுவிட்டான் ரத்னதீபன். உள்ளே நுழைந்து பார்வையை சுற்றி ஓட்ட, சுத்தம் செய்து கொண்டிருந்த பெண் வந்து யாரென்று விசாரித்தார். அங்கு தங்கியிருக்கும் செண்பகாவின் பெயரைச் சொல்லி அவளுடைய கணவன் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். அவனை வெளியே காத்திருக்க சொல்லிவிட்டு செண்பகா இருந்த அறையை தட்டியெழுப்பி அவளைப் பார்க்க ஆள் வந்திருப்பதாக மட்டும் சொல்ல, தன் வீட்டினர்தான் இங்கு வந்துவிட்டு பின்னர் செல்கிறார்கள் என்று நினைத்து தலையை மட்டும் ஒதுக்கிக்கொண்டு ஆர்வமாக கீழிறங்கி வந்து நின்று பார்க்க, அங்கு ரத்னதீபனை சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை.

இரவுடையில் உறக்கம் மிச்சமிருக்கும் விழிகளுடன் வந்து நின்றவளை முறைத்தவன், “கிளம்பு.” என்றான் மொட்டையாக.

அதிர்விலிருந்து வெளிவந்தவள் அவனின் அலட்சியப் போக்கில் சினம் கொண்டவளாய் முகம் திருப்பினாள்.

“வெத்தலை பாக்கு எல்லாம் வாங்க நேரமில்லை கடையுமில்லை. மணியாகுது கிளம்பு.” இவன் நக்கல் பேச, இவள் வீம்பு கூடியது. நீ என்னவும் பேசிக்கொள் என்று நின்றாள். 

“என்னடி பிரச்சனை உனக்கு? வந்தா குறைஞ்சி போயிடுவியா?”

“எதுக்கு வரணும் நான்?” நேருக்கு நேராய் அவள் கேட்க, ஓரடி அவளை நோக்கி முன்னெடுத்தவன் நிமிர்ந்து அவ்விடுதியின் பார்த்துவிட்டு, “இங்க வந்து ஒருவாரம் ஆகப்போகுது, நான் இங்கதான் இருக்கேன்னு தெரிஞ்சும் இன்னைக்கு வரைக்கும் உனக்கு டிரான்ஸ்பர் கிடைச்ச விஷயத்தை என்கிட்ட சொல்லணும்னு தோணல. தனியா வந்து ஹாஸ்டல்ல தங்கியிருக்க. அதைக்கூட பெருசு பண்ணாம வந்து நின்னா என் கோபத்தை கிளறிட்டு இருக்க நீ. அங்க எல்லாரும் வெய்ட் பண்றாங்க.”

“நீங்க சொன்னீங்களா?”

“என்ன?”

“நான் சொல்லலைனு சொல்றீங்களே. நீங்க ஜெயிச்சதை என்கிட்ட சொன்னீங்களா?”

“அதுதான் டீவில, இன்டெர்ன்ட்ல எல்லாம் வந்துச்சே. நான் வேற தனியா சொல்லணுமா?” வேண்டுமென்றேதான் அவளை உசுப்பிவிடும்படி கேட்டான். இலகுவாக பேசிக்கொள்ளுமளவுக்கா அவர்கள் உறவு இருக்கிறது.

மீண்டும் மீண்டும் அவன் வெளிப்படுத்தும் மெத்தனப்போக்கில் எரிச்சல் கொண்டவளாய், “மத்தவங்க மாதிரி நானும் டீவில பாத்து தெரிஞ்சிக்கணும்னா அவங்களும் நானும் ஒன்னா?”

“ஒன்னில்லைனு தெரிஞ்சிருந்தா உன் வீட்டுக்கு வர்றதுக்கு இப்படி வீம்பு காட்டிட்டு இருக்க மாட்ட.” இம்முறை அவன் பேச்சு அவளை சற்று மட்டுப்படுத்தியது. உன் வீடு என்றதில் கொஞ்சம் இளகித்தான் போனாள். அதற்காக உடனே இறங்கிச் செல்லவில்லை. 

“உங்க இஷ்டத்துக்கு அரசியல்ல நாக்கை சுழட்டுற மாதிரி என்கிட்ட பேசலாம்னு நினைக்காதீங்க. அதுக்கு நான் ஆள் இல்லை.” என அழுத்தமாகவே நின்றாள் செண்பகா.

“வீம்புக்கு உன்கிட்ட பேசிட்டு இருக்க எனக்கும் நேரமில்லை.” என்றவனை அதற்குள் அடையாளம் கண்டுகொண்டு விடுதியில் சமையல் வேலை செய்யும் சிலர் விடுதியின் பாதுகாவலருடன் வந்து தங்களை அறிமுகப்படுத்தி பேசிச்செல்ல, சட்டென எச்சரிக்கை உணர்வு வந்து அமர்ந்துகொண்டது ரத்னதீபனிடம். அலட்சியம் விடுத்து தீவிரமானவன், 

“ரொம்ப நேரம் என்னால இப்படி கேர்ள்ஸ் ஹாஸ்டல் முன்னாடி நிக்க முடியாது. யாராவது பாத்து எதையாச்சு போட்டோ புடிச்சி போட்டு எழுதுனா நல்லாயிருக்காது. சீன் கிரியேட் பண்ண வேண்டாம்.” 

“இதுக்கு மேல எழுத என்ன இருக்கு? அவங்கவுங்களுக்கு என்ன தோணுதோ எழுதிட்டு போகட்டும்.” என இவள் இம்முறை அலட்சியம் காட்டினாள்.

பல்லைக் கடித்தவன் காரியம் பெரிதா வீரியம் பெரிதா என்று யோசித்து கணநேரத்தில் இறங்கி வந்தான்.      

“செண்பா ரொம்ப பண்றடி நீ. இப்போவே ரோட்டுல ஒன்னு ரெண்டு பேர் நின்னு எட்டி எட்டி பார்த்துட்டு போறாங்க. என்னை இன்னும் முழுசா அடையாளம் தெரிஞ்சா பிரச்சனையாகும். உன்னையும் இழுத்து விட்டுருவாங்க, நம்ம வாழ்க்கையை திரிச்சிடுவாங்க. சொன்னா கேளு. போய் ஒருபுடவை கட்டிட்டு வா. நீ வந்துதான் பால் காய்ச்சணும்.”

“முடியாதுன்னா?”

“நீ வர்ற வரை இங்கேயே இப்படியே நிப்பேன். இந்த கூட்டம், சலசலப்பு, சச்சரவு எல்லாம் எனக்கொன்னும் புதுசில்லை. உனக்கு எப்படினு பார்த்துக்கோ.” 

“மிரட்டுறீங்களா?”

“உண்மையை சொல்றேன். அப்புறம் உன் விருப்பம்.” என்றவன் கைகளை கட்டிக்கொண்டு ஒரு ஓரமாய் நின்றுகொள்ள, கடுப்புடன் உள்ளே சென்றாள் செண்பகா.

சிறிது நேரம் சென்றால் கூட்டம் சேர்கிறது என்று அவனே கிளம்பிவிடுவான் என நினைத்துக்கொண்டு இவள் படுத்திருக்க, வேகமாக வந்து அவள் அறைக்கதவை தட்டினார் விடுதியின் பாதுகாவலர்.

“உன் ஹஸ்பண்ட்டை பாக்க வாசல்ல கூட்டம் கூடுது செண்பகா. கேர்ள்ஸ் ஹாஸ்டல் முன்னாடி இப்படி கூட்டம் சேர்ந்தா மத்த பொண்ணுங்களுக்கு டிஸ்டர்ப் ஆகும். எங்களால பாதுகாப்புல காம்ப்ரமைஸ் பண்ணிக்க முடியாது. உன் ஹஸ்பண்ட்கிட்ட சொன்னா நீ கிளம்பி வர்றதுக்கு வெயிட் பண்றேன்னு சொல்றாரு. ஒன்னு அவரை வேற எங்கயாச்சும் வெயிட் பண்ண சொல்லு இல்லை நீ சீக்கிரம் கிளம்பிப் போ.” என அவசரப்படுத்தி அறிவுறுத்துவிட்டுச் செல்ல, தலையில் கைவைத்து ஜன்னல் வழியே கீழே எட்டிப்பார்த்தாள்.

விடுதியின் சுற்றுச்சுவருக்குள் இவன் இருப்பது தெரிந்து வெளியிலிருந்து சிலர் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு உள்ளே வந்து இவனிடம் என்னவோ பேசி புகைப்படம் எடுத்துச் செல்வது புரிந்தது. 

‘என் உயிரை எடுக்கனே என் கழுத்துல தாலியை கட்டியிருக்கான்.’ கடுகடுத்தவள் கீழே சென்று அவனை கிளம்பச் சொல்லலாம் என்ற எண்ணத்தில் கதவைத் திறந்தவள் பின் தன் உடையை கவனித்து தலையிலடித்துக்கொண்டாள். இரவுடையில் இருப்பவள் உடை மாற்றி சென்றாலும் இத்தனை பேர் முன்னிலையில் தான் வரவில்லை என்று சொன்னால் அதற்கு அவன் எதிர்வினை எப்படி இருக்குமோ. அதற்கு தான் பதில் பேசி, அவன் முறைத்து என இத்தனை பேர் முன்னிலையில் காட்சிப்பொருள் ஆகிவிடுவோமே என பயந்து அவ்வெண்ணத்தை கைவிட்டாள். 

வேறு வழியே இன்றி அவனை திட்டிக்கொண்டே அவசர அவசரமாக குளித்து ஒரு புடவையை சுற்றிக்கொண்டு அலைபேசியுடன் ஓட்டமும் நடையுமாக இறங்கி வந்தாள். தூரத்திலேயே மனைவியை பார்த்துவிட்ட ரத்னதீபனின் விழிகள் தீபச்சுடர் போல் ஒளிர்ந்து தேய்ந்தது. இது பெண்கள் விடுதி இதுபோன்று இங்கு கூட்டம் கூடி அவர்களுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என கூட்டத்தினரிடம் நைச்சியமாக பேசி அவர்களை நகர்த்தியவன் தன் வண்டியை எடுத்து வந்து செண்பகாவின் முன் நிறுத்த, எரிச்சலுடன் அவன் பின் ஏறிக்கொண்டாள் செண்பகா.  

“உன்னோட மத்த திங்க்ஸ் எல்லாம் அப்புறம் வந்து எடுத்துடலாம். எல்லாத்தையும் நம்ம வீட்ல செட் பண்ணிக்கோ.” என்னவோ அவர்களுக்குள் எல்லாம் சரியானது போல் இயல்பாக பேசி அவன் வண்டியை லாவகமாக ஓட்ட, பின்னிருந்த கம்பியை பிடித்துக்கொண்டு அவன் முதுகை வெறித்தவளுக்கு தன் மீதே கோபம் கோபமாய் வந்தது.

இப்படி ஏதாவது ஒன்று நடந்து இறுதியில் தானே இறங்கிச் செல்வது போல் ஆகிவிடுகிறதே. எனக்கு மட்டும் ஏன் இப்படி? என் உணர்வுகளை ஒதுக்கிவைத்து மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து கொடுத்து என் வாழ்வு முழுதும் இப்படியே கழிந்துவிடுமோ? இதற்கு தீர்வே கிடையாதா? இவன் மாறவே மாட்டானா? என ஆயாசமாக அவனைப் பார்த்தாள். 

மனையாளின் நுட்பமான உணர்வுகளை அறிந்துகொள்ள எந்த முயற்சியும் எடுக்காத ரத்னதீபன் மனைவியை தன்னோடு வரவழைத்துவிட்ட மகிழ்வில் இருந்தான். என்ன அதில் லாரி மண்ணள்ளிக் கொட்ட ஒருவள் வந்துகொண்டிருக்கிறாள் என்பதை அக்கணம் அறியவில்லை அவன்.