தென்றலுக்கு அப்பொழுது பதினெட்டு வயது.. தாய் தந்தை தங்கை என்று சிறிய குடும்பத்தின் இளவரசியாக வாழ்ந்தவளுக்கு ஹாஸ்டல் வாழ்க்கை சற்று கடினமாக அமைந்தது. அதைவிட கொடுமை ஹாஸ்டல் சாப்பாடு. மாதவி எவ்வளவோ அண்ணனிடம் சொல்லி விட்டார். ஏனோ பரசுராமிற்கு வயது பெண்ணை வாலிப பையன் இருக்கும் வீட்டில் அது தங்கையாக இருந்தாலுமே தங்க வைக்க மனம் வரவில்லை.
வாசுகியும் அதையே விரும்ப பரசுராம் தங்கையிடம் உறுதியாக கூறி விட்டார் இனி இந்த பேச்சு வேண்டாம் என்று.. ஞாயிற்றுக்கிழமை வந்தாலே மாதவிடமிருந்து அழைப்பு வந்து விடும்.. பரசுராமும் அந்த ஒரு நாள் மட்டும் மாதவி வீட்டிற்கு செல்ல மகளை அனுமதிக்க மதிய உணவு நேரத்திற்கு அத்தை வீட்டிற்கு செல்வாள் தென்றல்.
என்ன வேலை இருந்தாலும் மதிய நேரம் தென்றல் வீட்டிற்கு வரும்போது அகிலன் கண்டிப்பாக வீட்டிலிருந்தாக வேண்டும். இல்லையென்றால் அன்று அவன் மாதவிடம் வாங்கி கட்டிக் கொள்வான்.. சாப்பிட்டு முடிந்ததும் சற்று நேரம் அத்தையிடம் பேசிவிட்டு மீண்டும் விடுதிக்கு கிளம்பி விடுவாள்…
பெரும்பாலான நேரம் அகிலன் அவளை தன்னுடைய பைக்கில் அழைத்துச் சென்று விடுவான்.. தென்றல் ஒன்றும் வெகுளி கிடையாது. தன்னை பார்த்து பார்த்து கவனிக்கும் அத்தையின் உள்நோக்கத்தை அவள் புரிந்து தான் வைத்திருந்தாள்.. அத்தை மகள் என்கிற குறுகுறுப்பு எப்பொழுதும் அகிலனுக்கு இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அதைத் தாண்டி தென்றல் மீது அவன் காதல் வயப்பட்டிருக்கிறானா என்று கேட்டால் அவனுக்கே பதில் தெரியாது..
படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் திரிந்து கொண்டிருந்த அகிலன் பக்கத்தில் இருந்த கால் சென்டருக்கு வேலைக்கு சென்று விட்டான். மாதம் பதினைந்தாயிரம்..
ஹரிதாஸ் வாழ்வில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்.. சிறுவயதில் அவர் பட்ட கஷ்டமும் அவர் அனுபவித்த வலிகளும் தன் பிள்ளைகளுக்கு வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பவர். அதனாலேயே ஒற்றை பெண்ணாக இருந்தாலும் பிருந்தா ஆசைப்பட்டபடி அவளை வெளியூரில் தங்க அனுமதித்து படிக்க வைத்தார்.
அதேபோல் அகிலனை எந்த விதத்திலும் அவர் நிர்பந்தப்படுத்தியது கிடையாது. படித்து முடித்துவிட்டு சசியை போல அவனும் முதலில் சினிமாவை தான் கையில் எடுத்தான். சசியின் கனவு சினிமா.. அகிலன் வேறு என்ன செய்வதென்று புரியாமல் சினிமாவை தேர்ந்தெடுத்தான். அதனாலயே என்னவோ இரண்டு மாதங்கள் முயற்சி செய்தவன் அதன் பின்னால் சினிமா மீது இருந்த மோகம் குறைந்து வேறு என்ன வாழ்வில் செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தான்.
அந்த நேரம் தந்தையின் அறிவுரைப்படி வீட்டு அருகிலேயே அவனுக்கு கால் சென்டரில் வேலை கிடைக்க அகிலனுக்கு வாழ்வில் எந்த குறையும் இல்லை. அவனது சம்பளத்தை ஒரு பைசா கூட ஹரிதாஸ் வாங்க மாட்டார்.
அதேபோல் மகனுக்காக ஒரு ரூபாயை கூட அவரும் செலவு செய்ய மாட்டார். அகிலன் அவனுடைய தேவைகளை அவனே பார்த்துக் கொள்ள ஆரம்பித்திருந்தான்.. நடுவில் அவனுக்கு இரண்டு காதல் முறிவுகள் ஏற்பட்டிருந்தன.
அந்த சோகத்தில் இருந்தவனுக்கு அத்தை மகள் கண்ணுக்கு குளிர்ச்சியாக கண்டதும் லேசாக தென்றலின் மீது அவனின் கண்கள் பாய ஆரம்பித்தது.. அவள் சிரித்து பேசும் போதும், கல்லூரியில் நடக்கும் சில சம்பவங்களை நகைச்சுவையோடு கூறும் போதும் அகிலனின் மனதில் மின்னலடிக்க ஆரம்பித்தது..
தன் அம்மாவின் மனநிலை அகிலனும் உணர்ந்தே இருந்தான். இருந்தாலும் அத்தை மகளிடம் சற்று உரிமையாக தன் மனதில் இருப்பதை வெளிப்படுத்த நினைத்து அன்று ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்து அவளை ஹாஸ்டலில் விடும் போது அவனின் சித்து விளையாட்டை ஆரம்பித்தான்.
” தென்றல்”
“ம்ம்”
” என்ன எதுவும் பேசாம வர? ” பின்னால் பார்க்கும் கண்ணாடி வழியாக அவளை பார்த்துக் கொண்டே கேட்க
” வண்டி ஓட்டும் போது என்ன பேசுறது? நீ ஒழுங்கா ரோட்டை பார்த்து ஓட்டு.. ” அவனின் மூக்கை உடைத்தாள் தென்றல்..
இருந்தும் மனம் தளராமல் ” ரோட்ட பாக்காம உன்னையா பாத்துக்கிட்டு இருக்க முடியும்.. பேசாம வரியே போர் அடிக்குது.. சும்மா ஏதாவது பேசிட்டு வரலாம்ல..” தென்றல் அமைதியாக வந்தாள்.
” போர் அடிச்சா நீ என்ன மாதிரி படம் எல்லாம் பார்ப்ப” நைசாக தன் மனதில் இருப்பதை அவளிடம் வெளிப்படுத்த ஆரம்பித்தான் அகிலன்.
” நான் போர் அடிச்சா படம் பார்க்க மாட்டேன்”
“அப்புறம்”
“புக் படிப்பேன்” மீண்டும் அவனது மூக்கில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டது.
“பைத்தியக்காரி.. என்ன சொன்னாலும் மடக்குறா”..
“புக்கா.. என்ன மாறி புக்? லவ் ரொமாண்டிக் புக்கா”..
“ச்சே.. அதெல்லாம் எவன் படிப்பான்.. ஹாரர் திரில்லர் தான் பிடிக்கும்..” மீண்டும் மீண்டும் மண்ணை கவ்வினான் அகிலன்..
” சரி உனக்கு எத்தனை பாய் ஃபிரண்ட் இருக்கானுங்க.. ” இப்பொழுது சற்று நேரடியாகவே கேட்ட தொடங்கினான். அவனின் கேள்வியில் தென்றலுக்கு எரிச்சல் மண்டியது.
” எதுக்கு இப்ப நீ தேவை இல்லாம பேசிட்டு இருக்க”
” ஏய் நான் சும்மாதான் கேட்டேன்.. இருக்குன்னா இருக்குன்னு சொல்லு இல்லன்னா இல்லன்னு சொல்லு.. ” அகிலன் சற்று பணிந்து போனான்.
” நான் இங்க படிக்க வந்திருக்கேன்.. லவ் பண்ண வரல.. அந்த சூப்பர் மார்க்கெட் கிட்ட ஸ்டாப் பண்ணிடு..நா இறங்கிக்கிறேன்..”
” ஹேய் உன் ஹாஸ்டல்லயே ட்ரோப் பண்றேன்”..
” இல்ல வேணாம் நான் சொன்னா இடத்திலேயே ட்ரோப் பண்ணு.. ” தென்றல் விடாப்பிடியாக சூப்பர் மார்க்கெட் அருகில் இறங்கிக் கொண்டாள்.. அகிலனின் பேச்சு அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை..
வேண்டா வெறுப்பாக சூப்பர் மார்க்கெட் அருகில் இறங்கி கொண்டவள் அகிலனுக்கு சொல்லி விட்டதால் வேறு வழி இல்லாமல் அதனுள் சென்றாள்..
உண்மையிலேயே அவளுக்கு வாங்க வேண்டிய சில பொருட்கள் இருந்ததால் மனதை மாற்றிக் கொண்டு தன் வேலையில் கவனமாக இருந்தாள்.. ஹெட் அண்ட் ஷோல்டர் ஷாம்புவை கையில் எடுத்து அவள் பார்த்துக் கொண்டிருக்க ஒரு ஆணின் கரமும் அவள் பக்கத்தில் வந்து அதே பிரண்ட் ஷாம்புவை கையில் எடுத்தது..
அவளை அறியாமலேயே தென்றலின் பார்வை அந்த கைக்கு சொந்தக்காரன் முகத்திற்கு சென்றது. அவனும் என்ன நினைத்தானோ அவளை தான் பார்த்தான்.l
மறு வினாடி பார்வையை விலக்கியபடி தென்றல் சென்று விட்டாள். ஆனால் அந்த ஆடவன் ஏதோ சிந்தனை வகைப்பட்டவனாக அங்கேயே நின்று கொண்டிருந்தான்.
அவனது மூளைக்குள் நண்டு ஓடியது. சில வினாடிக்கு முன் நேருக்கு நேர் விழியோடு விழி சந்தித்த அந்த பெண் யார்? அவளை இதற்கு முன்னால் பார்த்த ஞாபகம் அவன் நினைவிடுக்குகளில் பதுங்கி கிடந்தது.
என்ன யோசித்தும் கண்டுபிடிக்க முடியாமல் மீண்டும் அந்தப் பெண்ணின் பின்னால் சென்றான். தென்றல் அனைத்து பொருட்களையும் கூடையில் அள்ளிப்போட்டு கேஷ் கவுண்டரில் நின்று கொண்டிருந்தாள். இவனோ தான் வாங்க வேண்டிய எந்த பொருளையும் வாங்காமல் அவளுக்கு முன்னால் கடைக்கு வெளியே சென்று நின்று விட்டான். பணம் கட்டி விட்ட தென்றல் வெளியே வர இப்பொழுது அவள் முகத்தை நன்றாக பார்த்தபடி நின்றவன் கூர்ந்து தென்றலின் முகத்தை நோக்க தென்றலும் அவன் முகத்தை ஏறிட்டாள்.
யாரோ ஒருவன் தன்னை சீண்டுவதாக நினைத்த தென்றல் வேகமாக தெருவில் இறங்கி நடக்க தொடங்கினாள். ஆனால் இன்னுமும் சசிக்கு தென்றல் யார் என்பது நினைவுக்கு வரவில்லை. அதேசமயம் தொலையுது என்று அவனால் செல்லவும் இயலாமல் பைக்கை மெதுவாக ஓட்டியபடி தென்றல் பின்னால் சென்றாள்.
இந்த இரண்டு வருடத்தில் அவன் வாழ்வில் சந்தித்த ஆட்கள் ஏராளம். ஒவ்வொரு ஆளாக அவன் நினைவில் கொண்டு வந்து பார்க்க அதற்குள் தென்றல் தங்கி இருந்த ஹாஸ்டல் வந்து விட்டது. மின்னல் வேகத்தில் நடந்திருந்தாள் தென்றல். தன்னை யாரோ பின் தொடர்ந்து வருவதாக அவள் எண்ண வியர்வை வழிந்தது பயத்தில்.
இறுதியாக ஒரு முறை சசியை மிரண்ட கண்களால் திரும்பிப் பார்க்க சசியின் மூளையில் மின்னல் வெட்டியது. இவ்வளவு நேரம் அவன் யோசித்தும் கண்டுபிடிக்க முடியாத விஷயம், கண நேரத்தில் தென்றலின் மிரண்ட விழிகள் தான் யார் என்பதை அவனுக்கு எடுத்துரைத்தன.
அன்று போனிட்டேல் போட்ட சிறுமியாக பார்த்தவள் இன்று கற்றை கூந்தல் காற்றில் பறக்க ஜீன்ஸ் குர்த்தியில் அவன் மனதை நொடியில் கொள்ளை அடித்துச் சென்றாள்..
கண்டதும் காதல் என்பதில் சசிக்கு துளியும் நம்பிக்கை இருந்தது கிடையாது. அவனுக்கும் காதலின் மீது ஆசைகள் ஏராளம். அவனுடைய நண்பனான அகிலன் இரண்டு காதலிகள் வைத்திருந்த போது சசிக்கும் மெல்ல ஆசைகள் எட்டிப் பார்த்திருக்கிறது.
டேட்டிங் வரை கூட சென்று இருக்கிறான். ஆனால் என்னமோ யாரிடமும் அவனால் நெருங்கி பேச இயலவில்லை. ஒரு வாரம் அவனோடு தாக்குப்பிடிப்பவர்கள் எட்டாவது நாள் சொல்லி வைத்த படி மாயமாய் மறைந்து விடுவார்கள்.
சில நேரங்களில் “பிளாக்” செய்யப்பட்டு நிரந்தரமாக மறுக்கப்பட்டு விடுவான் சசி. பல நேரங்களில் ” நமக்கு செட்டாகாது” நாசுக்காக அந்த உறவை வெட்டி விடுவார்கள்..
ஏனோ தன் மனதிற்கு நெருக்கமான பெண்ணை இன்னும் சந்திக்கவில்லை என்பது சசியின் மனதில் ஆழமாக பதிந்திருந்த விஷயம்.. எந்தப் பெண்ணை பார்த்தாலும் அவனது வயது அவர்கள் கழுத்துக்கு கீழ் பார்க்க தோன்றியது. ஆனால் வாழ்வில் இரண்டாவது முறை ஒரு பெண்ணை அவள் கண்களை மட்டுமே பார்க்கச் சொல்லி மனம் தூண்டியது. இரண்டு முறையும் ஒரே பெண்.
அவனது வாழ்நாளில் ஸ்பெஷலான பிறந்த நாளாக அன்று அமைந்தது. கண்டேன் சீதையை என்பது போல கண்டேன் தென்றலை என்று கத்தி தன் உற்சாகத்தை வெளிப்படுத்த வேண்டும் போல இருந்தது.
இத்தனைக்கும் கண்டதும் அவள் மீது காதல் கொள்ளவில்லை அவன். ஏதோ ஒரு பிடித்தம். அவனுடைய உள்ளுணர்வு சொல்லியது. தென்றல் சசியின் வாழ்க்கை முழுவதும் அவனோடு பயணிப்பாள் என.
சில நேரங்களில் நாமே அறியாமல் நம்முடைய மனம் நமக்கு சரியானதை எடுத்துச் சொல்லும். அதை அலட்சியப்படுத்துவதும் ஏற்றுக் கொள்வதும் நம்முடைய கையில் இருக்கிறது. சசிக்கு இருக்கும் பிரச்சனையில் அவன் உண்மையில் இந்த நேரத்தில் காதலை நினைத்துக் கூட பார்க்க கூடாது. இருந்தாலும் அவன் மனம் எனக்கு ஒரு கேர்ள் ஃபிரண்ட் வேண்டுமடா என்று அடம் பிடிக்க தென்றலைக் கண்டவனுக்கு கண்ணுக்குத் தெரியாத சிவப்பு கயிற்றால் தன்னுடைய சுண்டு விரலும் அவளுடைய சுண்டு விரலும் பின்னப்பட்டிருப்பதை போன்ற உணர்வுகள் தோன்றியது…
தென்றலைப் பொறுத்தவரை அம்மாதிரி பைத்தியக்காரத்தனமான எந்தவித உணர்வுகளும் அவளுக்கு தோன்றவில்லை. மாறாக அகிலன் மீது எரிச்சலும் யார் என்றே தெரியாத ஒருவன் தன்னுடைய ஹாஸ்டல் வரை வந்து கிளப்பிவிட்ட பீதியும் அவள் மனதை விட்டு அகலமால் இருந்தது.
வேகமாக வாசுகிக்கு அழைத்து நடந்த விஷயத்தை கூறிவிட்டாள். என்ன நினைத்தாளோ முகம் அறியாதவன் பின் தொடர்ந்ததை மட்டும் தவிர்த்து விட்டாள். தாயும் தந்தையும் பதற்றப்படுவார்கள் என்பதே அதற்கு முக்கிய காரணம். அகிலனை பற்றி மகள் சொல்லியதை கேட்ட வாசுகி நெஞ்சில் கை வைத்தார்.
” உங்க தங்கச்சி மகன் செஞ்ச வேலைய பாத்தீங்களா? சின்ன பிள்ளை கிட்ட என்ன பேசணும்னு அறிவு வேணாம்? அது என்ன வயசு பொண்ண வண்டியில கொண்டு போய் விட சொல்றது உங்க தங்கச்சிக்கு..” பரசுராமிடம் சண்டைக்கு சென்றார் வாசுகி.
” எதுக்கு அவளுக்கு அலைச்சல்.. அகிலன் வீட்டில இருந்திருப்பான் அவனை போய் விட சொல்லி இருப்பா இதெல்லாம் ஒரு பிரச்சனையா.” மனைவிக் கூறிய விஷயத்தை அசால்டாக எடுத்துக் கொண்டார் பரசுராம்.
வாசுகிக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை.
” அதுக்காக என்ன புக் படிப்ப என்ன மாதிரி படம் பார்ப்ப.. பாய் ஃப்ரெண்ட் இருக்கா இதெல்லாம் அவனுக்கு தேவையா.. ஒழுங்கா இருக்கிற பொண்ணையும் இந்த மாதிரி பேசி கெடுத்துருவாங்க போல. இனிமே என் பொண்ணு உங்க தங்கச்சி வீட்டுக்கு போக கூடாது. அவ அங்க படிக்க தானே போனா படிக்கிற வேலையை மட்டும் பார்த்தா போதும். உறவு வளர்க்கணும்னா அத உங்களோட வச்சுக்கோங்க. நான் எப்பவும் சொல்றது தான். உங்க தங்கச்சி மனசுல என்ன ஓடிட்டு இருக்குனு உங்களுக்கு நல்லா தெரியும். தப்பி தவறி கூட அந்த மாதிரி ஒரு எண்ணம் உங்க மனசுல வரக்கூடாது.
நான் உங்க தங்கச்சி கிட்ட சிக்கி பட்டது போதும். என்னோட பொண்ணு அந்த குடும்பத்துல வாக்கப்பட்டு சீரழிய வேண்டா.. ஒழுங்கா அடுத்த வாரம் உங்க தங்கச்சிக்கு போன் போட்டு சொல்லுங்க.. ” கணவனிடம் ஒரு மூச்சுக் கொட்டி தீர்த்த வாசுகி மகளுக்கு அழைத்து இனிமேல் மாதவி அழைத்தால் கூட அந்த வீட்டு பக்கம் செல்லக்கூடாது என்று கண்டிப்பாக கூறி விட்டார்.
ஆனால் வாசுகிக்கு தெரியாது பிரச்சனை அகிலன் மூலமாக அல்ல வேறு ஒருவன் மூலமாக அவரின் செல்ல மகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது என.